/

தேவதச்சன் கவிதைகள்

தாய்மொழி

என்னைவிட
இளைஞர்களிடம் நான்
பேசுவதில்லை
எனது முதுமையின்
பாடல்கள்
அவர்களுக்கு எதுக்கு?
என்னைவிட
முதியவர்களிடமும்
பேசுவதில்லை
நேற்றைய உலகம்
எப்பவோ
காணாமல் போய்விட்டதே
பூனைகளிடமும் பூச்சிகளிடமும்
மரங்களோடும்
பேசுவதில்லை
அவைகளுக்குப்
பதிலுக்குப் பேசத் தெரிவதில்லை
என்னோடும் பேசுவதில்லை
இரண்டு நான்களை
என்னால்
தாங்க முடியாது
நான் பேசுவதெல்லாம்
நீர்க்குமிழிகளோடுதான்
அவைகளுக்கும் எனக்கும்
ஒரே‌ தாய்மொழி என்பதால்

000

அரசமரம்

அரசமரத்திற்குக்
கீழ்
நின்றுகொண்டிருந்தேன்
ஒவ்வொரு
இலை விழும்போதும்
ஒரு அரசமரம்
வீழ்ந்து சரிந்தது
சாலையில்
வேகமாய்
விரையும்
வாகனங்களின் சக்கரத்தை
ஒட்டிப்
பறக்கும் ,
அரசிலைகள்
வாகனத்தில்
ஏறவும் இல்லை
சக்கரங்களை
நிறுத்தவு மில்லை

000

குரல்

வீட்டு மாடியில்
ஆன்டனாவில் அமர்ந்தபடி
தனது வால்
மேலும் கீழும் அசைய
அடிவயிற்றிலிருந்து
கரைந்து கொண்டிருக்கிறது காகம்.
வீட்டின் வாய் காகங்கள் தான் போலும்
வீடுகளின் அழைப்புக்கு
யார் வருவார்கள் என்று
காத்திருக்கிறேன்
யாரும் வரவில்லை
எங்கு பார்த்தாலும்
கம்பி கமபியாய்
கம்பி கம்பியாய் மறித்தபடி,
யாரும் வாராத
நூற்றாண்டு இது
யாருமே வரமுடியாத
நூற்றாண்டு இது

000

ஒருநாள்

வெயில் கொளுத்துகிறது
பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்
தொலைவுப்
பால்கனியில்
நீளமான கொடியில்
காய்ந்து கொண்டிருக்கின்றன துணிகள்
அசைந்தபடியும் அசையாமலும்
வெயிலை ஏற்றுக்கொண்டபடியும்
ஏற்றுக்கொள்ளாமலும்
இப்பேருலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும்
அப்படி ஒரு ஆசுவாசம்
அப்படி ஒரு அமைதி….
நிழலுக்கு நகர்கிறேன்
ஒரு நாள் என்பது
ஒரு
சூரிய உதயத்திலும் அஸ்தமனத்திலும்
முடிவதில்லை போலும்

000

கடைசி மனிதன்

பூக்காரி பேசுவதை
நடுவிலிருந்த
பூக்கள் கேட்டுக் கொண்டிருந்தன
“ஆஸ்பத்திரி சென்று
பார்த்துவிட்டு வந்தேன்.
மாரிமுத்து பிழைப்பது கஷ்டம்” என்றாள்
வழக்கமாக வரும் வாடிக்கையாளர்
தலையசைத்தபடி
ஏதோ சொல்ல வாயெடுத்தார்
நீர் தெளித்திருந்த பூக்கள் மேல்
மெல்ல வந்து
படிந்து கொண்டிருந்தது
சாலைத் தூசிகள்
திகைத்தபடி திரியும்
ஒரு நாய்க்குட்டியின் மழலை
மற்றும்
கடைசி மனிதனின்
மௌனம்

000

தம்பி

சாலையில்
போய்க்கொண்டிருந்தவன்
ஓரத்தில்
நின்றிருந்த
ஸ்கூட்டரை நெருங்கினான்
அதன்
பின்பார்வைக் கண்ணாடியில்
முகத்தைப் பார்த்தபடி
தலைமுடியை
சீர் செய்தான்.
நன்றியறிதலோடு முகம் மலர்ந்து
விடை பெற்றான்
அவன்
போவதைப் பார்த்து
கண்ணாடி முணுமுணுத்தது:
“வயதையும் சாலையையும்தானே காட்டிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கெதற்கு தம்பி நன்றி.”

000

ஒரு சைக்கிளை விற்றல்

அப்பாவின் வலிகள் அவரது டைரியில் இருக்கிறது
அவரது அலமாரியில் சட்டைத்துணிகளுக்கு
மறைவில் இருக்கிறது
யார் வந்தாலும் உடனே மறைக்கும்
தலையணைக்கடியில் இருக்கிறது
அவர் எரிந்து முடிந்த சிதையின்
சாம்பலில் இருக்கிறது
அவரது பழைய சைக்கிளை விற்ற இன்றைய தினத்தில் எங்கிருந்தோ
பறவை ஒன்றின் ஒலி விட்டுவிட்டுக் கேட்கிறது
அப்பாவின் வலிகளும்
கூடவே கேட்கின்றன

000

தேவதச்சன்

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவர்.  1970களில் 'கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். ஏறத்தாழ அரை நூற்றாண்டாக கவிதைகள் எழுதி வருகிறார். "அவரவர் கை மணல்", "அத்துவான வேளை", "மர்மநபர்" உள்ளிட்ட எட்டு கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

உரையாடலுக்கு

Your email address will not be published.