/

அல் கிஸா : அஜிதன்

அத்தியாயம்: ஒன்று 'ஹைதர்'

அளவற்ற அருளாளனும், பெருங்கருணையாளனுமான அல்லாவின் பெயரால்! இப்போது நான் சொல்லப்போகும் இந்த கதை பலருக்கும் நம்பமுடியாதபடி இருக்கலாம். ஆனால் இதை அல்லாவின் கருணை என்றல்லாது வேறு எப்படியும் சொல்லிவிடமுடியாது என்பதால் இப்போது சொல்கிறேன். இது நடந்தது அறுபதுகளின் துவக்கத்தில். மொஹர்ரம் மாதம் பத்தாம் பிறைநாள் ஷியாக்களுக்கு முக்கியமான நாள். இமாம் ஹுசைன் மானுட நன்மைக்காகவும் சத்தியத்திற்காகவும் கர்பலா படுகளத்தில் தன் இன்னுயிரை ஈந்த நாள். அஜ்மீரில் அன்று நாள் முழுவதும் தாய்மரத்தில் கூடணையும் பறவைக் கூட்டங்களை போல எல்லாத் திசைகளில் இருந்தும் மக்கள் பெருகி வந்துகொண்டே இருந்தனர். பல வண்ணங்களிலும் பல வேஷங்களிலும் வந்தணைந்த அவர்கள் அனைவரும் எளியோரின் காவலன் குவாஜா மொயினுத்தீன் சிஷ்டியின் புனித தர்காவை மையமாக கொண்டே சுழன்றனர். பத்தொன்பது வயதான ஹைதர் அலி தர்காவில் இருந்து சற்று தள்ளி அவர்கள் தங்கியிருந்த ஹவேலியை விட்டிறங்கி குறுகிய சந்துத் தெருவில் நின்றபடி மாமாவுக்காக பொறுமையின்றி காத்திருந்தான்.
அஜ்மீரின் தெருக்கள் எல்லாம் பின்னால் பச்சைப்பட்டு போர்த்திய மாபெரும் புனித கபரைப் போல எழுந்து நிற்கும் தாராகர்ஹ் மலையில் இருந்து சரிந்திறங்குபவை. மலையுச்சியின் ஊற்றுகளில் தோன்றிப் பெருக்கெடுக்கும் நீர் சிற்றோடைகளாக மாறி எல்லாத் தெருக்களின் வழியாகவும், வீடுவாசல்களை இணைத்து குதிரை நடையில் தாவிச் சுழித்து பாய்ந்திறங்கும். அவற்றில் எழும் ஓயாத சலசலக்கும் சப்தம் தனித்த தெருக்களை அந்த இரவு வேளையிலும் உயிருள்ளவை ஆக்கியது. ரத்த நாளங்களைப் போல அவை பின்னிப்பின்னி அந்நகரை இணைத்தன. சூஃபியின் திக்ரை போல மீண்டும் மீண்டும் ஒன்றையே முணுமுணுத்தன.

பல்வேறு எண்ணங்கள் அலையடிக்க ஹைதர் அன்று வானை நிமிர்ந்து பார்த்தான். சந்துக்குழிக்குள் எட்டிப்பார்த்த பத்தாம் நாள் நிலவு பாலை மணலில் பாதி புதைந்த வெள்ளிக்காசைப் போல ஒளிகொண்டு மின்னியது. சற்றே அசௌகரியம் கொள்ளச்செய்யும் நிறைவின்மை. அன்று பகல் முழுவதும் அவர்கள் குடும்பமாக தர்காவில் தொழுகையும், துஆவும் முடித்து, குவாஜா கரீப் நவாஸுக்கு ரோஜா மலர் தூவி, பட்டுச்சரிகை சத்தரும் போர்த்தி, உம்மாவின் அளவான அழுகையும், பெரியும்மாவின் மாரில் அடித்து தரையில் விழுந்து புரளும் சடங்கும் நிறைவுற்று, பின் பஜார் தெருக்களில் இறங்கி சோன் ஹல்வாவும் வாப்பாவுக்கு பிடித்தமான ஷீர்மாலும் வாங்கிக்கொண்டு ஹவேலிக்கு வந்து சேர்ந்திருந்தனர். மறுநாள் காலை எட்டு மணிக்கு லக்னோ நோக்கி புறப்படும் தொடர்வண்டிக்கு எல்லாரும் தயாராகி கொண்டிருக்க, ஹைதர் மட்டும் மாமாவிடம் சொன்னான் “சாச்சா, எனக்கு இன்னொரு முறை தர்காவை கண்டு வர வேண்டும் போலிருக்கிறது.” மாமா ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கும் அதுவே உள்ளே தோன்றியிருந்தது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்திருந்த புகழ்பெற்ற உஸ்தாத் ஒருவர் இமாம் ஹுசைனின் துக்க தினமான அன்று இரவு மக்டால் ஒன்றைப் பாடப்போவதாக பகலில் தர்காவில் பேசிக்கொண்டார்கள். மாமாவுக்கும் அந்த உஸ்தாதுக்கும் ஒரே பெயர் என்றதால் அவர்கள் பேசிக்கொண்டது நன்றாகவே நினைவில் இருந்தது. இரவு வேளை தொழுகைக்கு அக்பரீ மஸ்ஜித் சென்றுவிட்டு பின் உஸ்தாதின் நோஹா காணியையும் கேட்டுவிட்டு வரலாம் என அவர்கள் தீர்மானித்தனர். ஆனால் இவ்விஷயம் வாப்பாவுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் எல்லா விஷயங்களிலும் தேவையில்லாமலே கருத்து சொல்லுபவர். அதுவுமல்லாது அவர் லக்னோவின் ஹுசைன்கஞ்சில் தன் தெருவை தவிர வேறு எங்கு சென்றாலும் ஒருவித பதற்றத்துடனே இருப்பார். ஷியாவின் புத்தியை மாற்றமுடியாது என்பார் வாப்பாவின் உம்மா. எனவே மாமா அவரின் பிரியத்திற்குரிய ஆப்பா, அதாவது ஹைதரின் உம்மாவிடம் மட்டும் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டு வருகிறேன் என்று உள்ளே சென்றிருந்தார்.

அவர்கள் அந்த ஹவேலிக்கு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன. தர்காவிற்கு பின் பகுதியில் மலைச்சரிவின் ஏற்றத்தில் இருந்தது அது. நூறு வருடங்களுக்கு மேல் பழக்கமுள்ள அதை இப்போது லக்னவி ஷியாக்கள் குத்தகைக்கு எடுத்திருந்தனர். ஹைதர் அதன் தோரண வாயிலில் நீல நிறச்சாயத்தில் வரையப்பட்டிருந்த பெண் உருவங்களைப் பார்த்தான். ராஜஸ்தானி உடையில் பூக்களின் எடை கொண்டு தாழ்ந்து வளைந்த கிளைகளை பற்றியபடி ஏதோ கேளா சங்கீதத்தில் மயங்கி ஒசிந்து அவர்கள் நின்றனர். பின்னால் மயிலும் அல்லிகள் பூத்த தடாகமும் எல்லாம் அந்த மங்கிய நிலவொளியில் ஒரு கனவைப்போல தெரிந்தன. மாமா வரும் சத்தம் கேட்டது.
ஹவேலியின் செங்குத்தான படிகள் இறங்கி வந்த மாமா நிலவில் நின்ற ஹைதரின் முகத்தைக் கண்டு ஒரு கணம் நின்றுவிட்டார். அவனை அன்றைப்போல அழகாக என்றுமே கண்டதில்லை என அவருக்குத் தோன்றியது, வெள்ளியில் சரிகை ஓடிய கருப்புத் தொப்பியும், அடர்ந்த கரிய புருவங்களுடன் கூடிய அகலமான கண்களும் மெல்லிய மீசையும் என தூய வெண்ணிற அங்கியில் ஒரு மலக்கைப் போல நின்ற அவனை கண்டபோது அவரை அறியாமல் ‘யா அலி’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

ஹைதர் அவர் நினைப்பதை தெரிந்து கொண்டது போல சற்று வெட்கத்துடன் புன்னகைத்தான். அவனுக்கு அவன் உம்மா ஃபாத்திமா ஆப்பாவின் அதே புன்னகை. குலாம் அலி பதில் புன்னகையுடன் ‘எல்லாம் பேசி சரிசெய்து விட்டேன்’ என்ற அர்த்தத்தில் தலையசைத்தபடி ஹைதரின் தோள்களில் கைபோட்டு அதே வேகத்தில் நடக்க துவங்கினார். அவரது முகத்தில் உச்ச நெகிழ்ச்சிக் கணங்களில் தோன்றும் ஒரு முகபாவம் உறைந்திருந்தது. அஜ்மீரோ அல்லது எந்த ஆன்மீக தலத்திற்கு வந்தாலும் அவர் அந்த முகபாவத்திற்குச் சென்றுவிடுவார். லேசான ஒரு புன்னகை மட்டும் முகத்தில் அவ்வப்போது தோன்றி மறையும். மாமா நிக்காஹ் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவரை முழு ஆன்மீகவாதியாக சொல்லிவிடமுடியாது. ஹைதரின் உம்மாவுக்கு அவர் மேல் பெரும் அன்பு இருந்தது. ‘என் மூத்த மகன் அவன்’ என்று அடிக்கடி சொல்லி கண்ணீர் சிந்துவார். மற்றபடி குடும்பத்தில் அனைவரும் அவரை ஒரு சின்ன சூஃபியாகத் தான் கண்டார்கள்.

ஹைதரும் குலாமும் ஆள் நடமாட்டமற்று நிலவொளியில் அமைதியில் மூழ்கியிருந்த அந்த சிறிய சந்துத்தெருவில் மெல்ல இறங்கியிறங்கி சென்றனர். கடைசியாக ஒரு சின்ன தோரண வளைவைக் கொண்ட குறுகிய படிக்கட்டில் இறங்கியதும் சட்டென்று நெருக்கமாகப் பிதுங்கி வழியும் பஜார் தெருவின் ஜனத்திரளில் இணைந்து கொண்டனர்.

ஒவ்வொரு முறையும் அது ஒரு வினோதமான உணர்வை தருவது. கவ்வாலின் தனித்த ஆலாப் ஒன்று சட்டென்று அந்தராவில் இணைந்து கொண்டது போல. கூட்டத்தில் இணைந்ததும் மனம் தனித்ததல்ல, அது ஒவ்வொரு பொருட்களிலும் முகங்களிலும் காட்சிகளிலும் பட்டுச் சிதறி அர்த்தமில்லாமல் மீண்டு வரும். அதை அள்ளித் தொகுத்தபடி ஒரு பொதுத் திசையில் நகர்ந்தபடி இருப்பதே செய்ய இயல்வது. அதுவும் ஒரு வகை முராக்கபா. மெல்ல மெல்ல கூட்டத்தை ஊடுருவி அவர்கள் தர்காவின் பிரதான நுழைவாயிலான நிஜாம் தர்வாசா நோக்கிச் சென்றபடி இருந்தனர். வருவோருக்கும் போவோருக்கும் நடுவே வழிதோறும் பிச்சையெடுக்கும் ஃபகீர்களும், தொழுநோயாளிகளும், ஊனமுற்றவர்களும். பஜாரின் இருபுறமும் நெருக்கிக்கொண்டு அதீத வெளிச்சத்தில் காஸ் லைட்டுகள் எரியும் துணிக்கடைகளும் இனிப்புக்கடைகளும். நெருங்கிய பஜார் தெருவின் வழியே தொலைவில் தர்வாசாவின் மாபெரும் விளக்கிட்ட மினாரங்கள் தெரிந்தபோது கூட்டத்தின் சலசலப்பின் மீது ஒரு பேரலைபோல இரவுத் தொழுகைக்கான பாங்கு ஒலி திசையெங்கும் எதிரொலித்தபடி எழுந்து வந்தது. “அல்லாஹு அக்பரல்லாஹ் ஹு அக்பர்…” குலாம் மனதுக்குள் தக்பீரை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டார் ‘இறைவனே அனைத்திலும் வலியோன்.’

கூட்டத்தின் நெரிசலைக் கடந்து அவர்கள் மெல்ல முன்னேற ஒரு சிறு இடைவேளை விட்டு மறு அலை கிளம்பியது “அஷ்ஷது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்.” குலாம் மீண்டும் கண்கள் மூடி தவ்ஹீதை உறுதியேற்றார் ‘ஓரிறையன்றி வேறிறையில்லை.’ ஹைதர் அவரது கையை இறுக பற்றிக்கொண்டு கொந்தளித்த கூட்டத்தை திகைப்புடன் பார்த்தபடி பின்னால் வந்தான். தொலைவில் தெரிந்த தர்வாசாவுக்கும் அவர்களுக்கும் இடையே அந்தக் குறுகிய தெருவில் மட்டும் ஐயாயிரம் தலைகளுக்கு மேல் தெரிந்தன. அவ்வாறு மேலும் இரண்டு பெரிய பஜார் தெருக்கள் தர்காவின் வாசல் முன் சந்தித்துச் சுழித்தன. அதில் ஒரு சிறு பகுதியென நூற்றுக்கணக்கானோர் படியேறி தர்காவுக்குள் பொழிந்தபடி இருந்தனர். அந்த பெரும் கூட்டத்தை கடந்து வாசலை சென்றடைவது சாத்தியம் என்றே தோன்றவில்லை. ஆனால் குலாம் அதுவொன்றையும் அறியாதவர் போல நெரிசலை பிளந்து பிளந்து சென்றுகொண்டிருந்தார். அவரது மெலிந்த சிற்றுடல் பாதையற்ற பாதையை உண்டாக்கி முன்னேறியது. பாங்கு அழைப்பு தொடர்ந்தது. “அஷ்ஷது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.” குலாமுக்கு சட்டென்று கண்களில் நீர் பெருகியது, நாளை விடைபெறப் போகிறோம் என்ற உணர்வு அது. எம்மக்கள், என் உலகு என தொண்டை அடைத்து விக்க அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார் ‘முஹம்மதே இறையின் தூதர்.’ பின் ஷியாக்களின் முறையில் “அலியுன் வலியுல்லா” என்று அதனுடன் இணைத்துக் கொண்டார். ‘அலியே இறைவனின் கட்டளையாகிறார்.’

பாங்கு அழைப்பு முடிவதற்குள் அவர்கள் அந்த மாபெரும் தர்வாசாவின் முன் நின்றனர். அந்தப் பெரும் சுழிப்பின் மத்தியிலும் ஒரு காலி இடமிருந்தது. குலாமும் ஹைதரும் அங்கு நின்றபடி உயர்ந்த நிஜாம் பெருவாசலை நிமிர்ந்து பார்த்தனர். ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று அவர்களுள் எழுந்தது. உச்சியில் அப்போதும் நிலவு அதே தனிமையுடன் மின்னியது. ஒருவரையொருவர் அரைக்கணம் பார்த்துவிட்டு தர்காவின் உள்ளே பொழியும் அந்த சிறுநதியில் இணைந்து கொண்டனர்.

நிஜாம் தர்வாசாவினுள் நுழைந்ததுமே வலதுபுறமாக தர்காவுக்கு உள்ளேயே அக்பரீ மஸ்ஜித் செல்வதற்கான உயர்ந்த படிகள் தெரியும். ஆனால் ஹைதர் நேராக உள்ளே அமைந்திருந்த அல் அப்பாஸ் பளிங்குக் கல் மண்டபத்தை நோக்கி நடந்தான். தர்காவின் உள்ளேயே சுரந்த புனித ஊற்றில் இருந்து அந்த வஸூ மண்டபம் அடியோர்களால் தோல்பைகளில் நீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ரோஜாப் பூக்கள் மிதக்கும் அந்த குளிர்ந்த நீரில் ஒளு செய்து கொள்வதையே ஹைதர் ஒவ்வொரு முறையும் சீராகக் கடைப்பிடித்தான். குலாம் நமாஸில் இணைந்துகொள்ள வேகவேகமாக ஒளு செய்துவிட்டு காத்திருக்க. அவன் குளிர் நீரில் பொறுமையாக முகமும் காதுகளும் கழுத்தும் நனைத்து மீண்டும் மீண்டும் கழுவினான். இனிய நீரை மூன்று முறை சுவைத்து உமிழ்ந்தான். கால்களில் நீரையள்ளி அள்ளி ஒழுக்கினான். கண்கள் மூடி அங்கு அமர்கையில் அரேபியப் பாலையில் எங்கோ ஒரு ஊற்றின் கரையில் அமர்ந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. இஸ்லாமியர்கள் அனைவரும் நபியின் புனித பாலையையே கனவு காண்கின்றனர் சகோதரர்களே.

முகத்திலும் கைகளிலும் ரோஜாவின் இன்மணம் கமழ ஹைதர் புன்னகையுடன் வஸு மண்டபத்திலிருந்து எழுந்து வந்தான். அவர்கள் விரைவாக உயர்ந்த படிகள் ஏறிக்கடந்து மஸ்ஜித் செல்வதற்குள் நமாஸ் துவங்கிவிட்டிருந்தது. இருபது முப்பது வரிசைகளாக பல நூறு பேர் ருகூ செய்துகொண்டிருக்க குலாமும் ஹைதரும் வேறு சிலரும் ஓடிச்சென்று இணைந்து கொண்டனர். இரு கைகளையும் காதுவரை உயர்த்தி தக்பீர் சொல்லி துஆ செய்து விட்டு ஹைதர் திரும்பிப் பார்த்தான், அவர்களுடன் இணைந்து கொண்டவர்கள் வயிற்றருகே இடக்கை மேல் வலக்கை வைத்து ஃபாத்திஹா சொல்ல அவனும் அதே போல செய்தான். குலாம் மட்டும் ஷியா முறையில் கையை தொடைகளோடு சேர்த்தே வைத்திருப்பதை கவனித்தான், அதை அருகில் சிலர் கவனிப்பதையும்.

‘அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன்’. எல்லாப்புகழும் உலகங்களின் அதிபதியான இறைவனுக்கே.

‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்,
அர்’ரஹ்மானிர் ‘ரஹீம்,
மாலிகி யவ்மித் தீன்,
இய்யாக்க நஃபுது வ’ இய்யாக்க நஸ்த ஈன்,
இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தஹீம்,
ஸிராத்தல்ல தீன அன்’அம்த்த அலைஹிம்
கைரில் மஹ்தூபி அலைஹிம் வலள்ளால்லீன்’

சூரா ஃபாத்திஹா சொல்லி அவர்கள் ருகூவில் இணைந்துகொண்டனர். மஸ்ஜிதின் இமாம் கணீரென்ற குரலில் சூராக்களும் துஆக்களும் சொல்ல, அன்றைய நமாஸ் பன்னிரெண்டு ரக்அத்கள் வரை சென்றது. இறுதியாக வலமும் இடமும் நோக்கி ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லா’ என்று முடிவின்மைக்கும் சமாதானமும் இறையருளும் தஸ்லிம் சொல்லி எழுந்தபோது குலாமின் மனம் எடைகொண்டு கால்கள் சற்று இடறின. காற்றில் நன்றாகவே குளிர் ஏறியிருந்தது.

ஹைதர் குலாமின் தோள்களைப் பற்றிக்கொண்டு “வேண்டுமென்றால் நாம் ஹவேலிக்கு திரும்பிவிடலாம் சாச்சா” என்றான்.

அவர் “எனக்கு இனி ஒன்றுமில்லை ஹைது, எவ்வளவு நேரம் வரை வேண்டுமானாலும் இங்கு இருந்துவிட்டு போகலாம். இந்த உயிர் அதன் முழுமையை கண்டுவிட்டது. நான் இங்கு இருக்கிறேன் அவ்வளவுதான்” என்றார் நெகிழ்ச்சி அடைந்தவராக.

அது பலமுறை அவர் சொல்லிக் கேட்டதுதான் என்றபோதும் ஒவ்வொருமுறையும் அவர் உண்மையாக உணர்ந்தே சொல்கிறார் என்றும் தோன்றும். ஹைதர் அழகிய வெண்பற்கள் தெரிய சிரித்து “அப்படியென்றால் தர்காவுக்குள் செல்லலாம், நான் உஸ்தாதை கேட்க வேண்டும்” என்றபடி நடக்க துவங்கினான்.


சில சொல் விளக்கங்கள்

ஹவேலி – வட இந்தியாவில் பெரிய குடும்பமாக அல்லது சமூகமாக நூறு பேர் வரை வசிக்கும் பெரிய கதவுகள் கொண்ட வீடு அல்லது வீட்டுத்தொகை.
கபர் – சமாதி
திக்ர் – இறைவனின் பெயர்களையோ, புகழ் மொழிகளையோ மந்திரம் போல உச்சரித்தல்
துஆ – பிரார்த்தனை
மக்டால் –இரங்கற்பா
நோஹா காணி – இமாம் ஹுசைன் மற்றும் அவர் கூட்டாளிகளின் இறப்பை குறித்து பாடப்படும் சிறிய உணர்ச்சிகரமான கவிதை வடிவம்
ஆப்பா – உருது மொழியில் ’அக்கா’
கவ்வால் – சூஃபி இசை வடிவம். இதை பாடுபவரை கவ்வாலி என்பர்.
அந்தரா – பல்லவி
முராக்கபா – தியானம்
தர்வாசா – வாசல்
ஃபகீர் – உடைமைகளை துறந்து அலையும் இஸ்லாமிய துறவிகள்
மினார் – உச்சியில் சிறு அறை கொண்ட மாபெரும் தூண்கள்.
தக்பீர் – ”அல்லாஹு அகபர்”. இறைவனே அனைத்திலும் வலியோன்.
தவ்ஹீத் – “லாயில்லாஹ இல்லல்லா”. ஓரிறையின்றி வேறிறையில்லை.
வஸூ – ஒளு (ஐவேளை தொழுகைக்கு முன் உடலை தூய்மை செய்து கொள்ளல்)
ருகூ – தொழுகையின் பகுதியாக கைகளை முட்டிக்கு மேல் வைத்தபடி குனிந்து நிற்றல்
ஃபாத்திஹா – திருக்குரானின் முதல் அத்தியாயம். துவக்கம்/திறப்பு என்பது இதன் அர்த்தம்
சூரா – அத்தியாயம்
ரக்அத் – தொழுகையில் நின்ற நிலையில் துவங்கி அமர்ந்த நிலையில் முடியும் ஒரு சுழற்சி
தஸ்லிம் – தொழுகையின் கடைசி கட்டமாக இரு புறமும் நோக்கி “சமாதானமும் இறையருளும்” என்று சொல்வது.

பதிப்பகத்தார் அறிவிப்பு: ‘அல் கிஸா’ நாவல் வரும் ஜூலை மாதம் கோவை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பாக தனி நூலாக அச்சிலும் இணையவழியிலும் வெளியிடப்படும். நன்றி.

அஜிதன்

அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

8 Comments

  1. நாவலின் முதல் அத்யாயமே மிகவும் சிறப்பாக வந்துள்ளதுவந்துள்ளது. இது போன்ற மறைஞான விஷயங்களை தொட்டு எழுதவும் பேசவும் நீண்ட பயணம் முக்கியமானது. அந்தவகையில் அஜிதன் எனும் பயணிக்கு வாழ்த்துக்கள்.

  2. முஸ்லிம் பண்பாட்டு மொழிக்கு தத்துவச் செறிவு ஏற்றப்பட்டிருக்கிறது. ஆன்மீக நம்பிக்கை சார்ந்து முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் இரு துருவ சிந்தனைகள்-நம்பிக்கைகள் வஹாபிசமும், ஷியாவும். அஜிதன் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த ஷியாக்களால் என்றென்றும் நினைவுகூரப்படும் கர்பலா நிகழ்வை ஆழப்படுத்தி கதையை நகர்த்துகிறார். இது ஆர்வத்தை த் தூண்டுகிறது. இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தௌஹீத் இயக்கங்களும் அவற்றின் செல்வாக்கும் மிகைத்தவிட்ட்ட இன்றைய சூழலில் இது போன்ற கதையை என்னைப் போன்றவர்கள் முயற்சித்துப் பார்ப்பது கூட ஆபத்தானது. அஜிதனின் இந்தக் கதையை என் பங்கிக்கு பரவலடையச் செய்ய முயற்சிப்பேன்.
    ஜிஃப்ரி ஹாசன்

  3. அஜிதன் உங்கள் எழுத்துக்களில் உங்கள் பிரிய பாடமான தத்துவம் கூட வருவது மிக அழகாக அர்த்த முள்ளதாக உள்ளது. உங்கள் சல சல பிரயாகை மறக்க முடியுமா?
    வாழ்த்துக்கள்

  4. மூர்த்தி சோமம்பட்டி விஸ்வநாதன் சோம்பட்டி says:

    அஜித்துக்கு முதல்‌ அத்தியாயமே ஈர்க்கும் வகையில் உள்ளது ‌.சிறந்த எழுத்தாளராகவர எல்லா சாத்தியக்கூறுகளும் தெரிகிறது .மேலும்‌ வெள்ளிமலையில் தங்கள் உரையை முதன்முறையாக கேட்டேன்‌ எனக்கு அந்த‌தளத்தில்‌ அறிமுகமே இல்லையென்றாலும் உங்கள் புனைவு மற்றும் தத்துவம் மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்

  5. Congrats Ajithan beginning more about religion of
    Muslim , how to possible to study without your dictionary? OKAY Thanks .
    I want to read this book try to buy ?

  6. அஜிதனுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த
    வாழ்த்துகள்.மைத்ரிக்குப் பிறகு அல்
    கிஸா போன்றொரு நாவலை எழுதுவீர்க
    ளென்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
    முதல் அத்தியாயத்தைப் படித்ததும் என்
    மனதில் உங்களைக்குறித்த நம்பிக்கை
    வலுவாகியிருக்கிறது.

  7. மேற்கண்ட அஜிதனுக்கான வாழ்த்து
    கீரனூர் ஜாகிர்ராஜா வுடையது.

உரையாடலுக்கு

Your email address will not be published.