/

“ஒழுக்கம் சார்ந்த நன்மை மட்டுமே முழுமையான மானுட நன்மையல்ல” : அலெக்சாண்டர் நெஹாமஸ் நேர்காணல்

தமிழில்: ஜனார்த்தனன் இளங்கோ

அலெக்சாண்டர் நெஹாமஸ்(Alexander Nehamas) ஒரு கிரேக்க-அமேரிக்க தத்துவ அறிஞர் மற்றும் எழுத்தாளர். ப்ரின்சிடன்(Princeton) பல்கலைக்கழகத்தில் தத்துவம், மானுடவியல் மற்றும் இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியர். அவருடைய நூல்களில் முதன்மையாக தத்துவ அறிஞர்களின் எழுத்துகள் எவ்வாறு வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை மாதிரியை உருவாக்குகிறது என்று ஆராய்கிறார். “நீட்ஷே: இலக்கியமென ஒரு வாழ்வு” மற்றும் “வாழும் கலை: சாக்ரடீசின் பிரதிபலிப்புகள் பிளாட்டோ முதல் ஃபௌகல்ட் வரை” ஆகியவை இவரின் முக்கியமான நூல்கள். கிரேக்க தத்துவம், அழகியல் மற்றும் இலக்கிய கோட்பாடுகள் இவரின் முதன்மையான ஈடுபாடுகள்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறை மாணவர்களால் நடத்தப்படும்  “The Harvard Review of Philosophy” என்னும் வருடாந்திர தத்துவ இதழில் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கு மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது.

ஜனார்த்தனன் இளங்கோ

கேள்வி: உங்களுடைய ‘The Art of Living’ புத்தகத்தில் நீங்கள் முன்வைக்கும் தத்துவ மரபு என்பது தத்துவம் பயில்பவர்கள் கோட்பாட்டளவில் முன்னகர்வதோடு மட்டும் அல்லாமல் செயல் மூலம் ஒருங்கினைந்த, தனித்துவமான சுயத்தை அடைவது குறித்தும் விவரித்திருக்கிறீர்கள். “வாழும் கலையின் நோக்கம் என்பது வாழ்வதுதான். ஆனால் அது கோரும் வாழ்க்கை என்பது பெருமளவில் எழுத்துச் செயல்பாட்டை உள்ளடக்கியது. ஏன் என்றால் இவ்வுலகில் ஒருவர் விட்டுச் செல்லும் அழியாத நினைவுச்சின்னம் என்பது ஒருவரின் கலைப்படைப்புகள் தான் அன்றி அவர் வாழ்ந்த வாழ்க்கை அல்ல.” என்று அந்த நூலில் குறிப்பிடுகிறீர்கள். இந்த மரபில் சுட்டப்படும் தத்துவவாதிகளில் சாக்ரடீஸ் ஒருவரே தன் வாழ்நாளில் எதையும் எழுதவில்லை. எனவே அவர் தாம் வாழ்ந்த வாழ்க்கையை மட்டும் விட்டுச் சென்றார் எனலாம். என்னுடைய கேள்வி, இந்த ‘வாழ்வின் கலை‘ எனப்படும் தத்துவ மரபு எவ்விதம் எழுத்துச் செயல்பாடோடு நெருக்கமாக பிணைந்திருக்கிறது? அதுபோல எதுவும் எழுதாவிடினும் சாக்ரடீஸ் எவ்வாறு இந்த தத்துவ மரபின் கீழ் வருகிறார்?

நெஹாமஸ்: சாக்ரடீஸைப் பொருத்தவரை அவர் எதுவும் எழுதவில்லை எனினும் பிளாட்டோ அவருக்காக எல்லவற்றையும் எழுதினார். அந்தவகையில் அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி. சீரிய முறையில் பார்த்தால் சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை, குறிப்பாக அவர்களின் ஆரம்ப கால உரையாடல்களில். அந்த வகையில் சாக்ரடீஸே எழுதினார் எனலாம். சாக்ரடீஸ் எழுதுவது குறித்து எதுவும் செய்யத் தேவையில்லாமல் இருந்தது பற்றி நீட்ஷே ஐயம் கொண்டிருந்தார். (அல்லது பொறாமை என்று கூட சொல்லலாம்). என்னுடைய நீட்ஷே குறித்த புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். நீட்ஷே தன்னளவில் சாக்ரடீஸுக்கு ஒரு பிளாட்டோவாக -அந்த பிளாட்டோவிற்கு சாக்ரடீஸாக -என இவ்விரு கதாப்பாத்திரமாகவும் இருக்க முனைகிறார். சாக்ரடீஸ் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு முக்கியமானது அல்ல. அதைப்பற்றி நமக்கு குறைவாகவே தெரியும். மக்கள் சாக்ரடீஸை அதீத ஆர்வமூட்டும் ஒருவராகக் கருதினர். இறுதியில் அவருக்கு மரண தண்டனை கிடைத்தது. இந்த விஷயங்கள் அவரை மாபெரும் மனிதராக்கவில்லை.

சக்ரடீஸ் குறித்த பிளாட்டோவின் சித்திரமே ‘வாழும் கலை’ தத்துவ மரபினை துவக்கி வைக்கிறது. நமக்குத் தெரியாத சாக்ரடீஸின் வாழ்க்கை நிகழ்வுகளே அந்த மரபை உருவாக்க பிளாட்டோவிற்கு தூண்டுகோலாக அமைகிறது. பிளாட்டோ மட்டும் இந்த  செயலில் ஈடுபடவில்லை. இன்னும் நிறைய பேர் அவ்வாறு சாக்ரடீசைப் பற்றி பல்வேறு கோணங்களில் உரையாடலை முன்னெடுத்தனர். சாக்ரடீஸிடம் ஒரு வியத்தகு அம்சம் இருந்திருக்கிறது என்று இதில் தெளிவாகிறது. அவரைச் சுற்றி இருந்த அனைவராலும் புரிந்துகொள்ள முடியாத ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்-அப்போதும் சரி இன்றளவும் சரி. அவர் பேரறிஞர் என பிரகடனம் ஆனவுடன் இந்த மரபு துவக்கம் பெறுகிறது.

கேள்வி: “சாக்ரடீஸ் அவருடைய ஆரம்ப கால படைப்புகளில் ஒரு விளக்கமுடியாத மர்மமாக, எளியதொரு தத்துவ வாழ்வை மேற்கொள்பவராக ஒரு மாறுபட்ட தத்துவ மரபின் துவக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறார்.” என்று குறிப்பிடுகிறீர்கள். அதாவது பிளாட்டோவின் காலத்தில் தூய கோட்பாட்டு செயல்பாடாக தத்துவம் மாறியதில் இருந்து வேறுபட்ட ஒரு மரபு. ‘வாழும் கலை’ தத்துவ மரபு தொடர்ந்து சாக்ரடீஸின் முரண்நகையை(Socratic irony) எதிர்கொண்டு அவரை மறுவரையரை செய்தாக வேண்டும் என்று தோன்றுகிறது. ‘வாழும் கலை’ ஒருவகையில் சாக்ரடீஸின் முரண்நகையை புரிந்து கொள்ள முயலும் தத்துவ மரபு என்று நினைக்கிறீர்களா?

நெஹாமஸ்: இந்த மரபைச் சார்ந்த தத்துவவாதிகள் அனைவரும் சாக்ரடீஸை நோக்கித் திரும்புகிறார்களா என்று தெரியாது. ஆனால் ஆர்வமூட்டும் வகையில் அவர்கள் அனைவருமே சாக்ரடீஸின் அம்சங்களை-குறிப்பாக பொருள்மயக்கத்தை(ambiguity) – வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் சொற்களை எப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், எப்போது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்டுபிடிப்பது சிரமம். இது மான்டைன்(Montaigne) ,நீட்ஷே, பாஸ்கல், பூக்கோ(Foucault) மற்றும் விட்கென்ஸ்டைன்(Wittgenstein) ஆகியோருக்கும் பொருந்தும். இவர்களில் பெரும்பாலானவர்கள் முரண்நகைக்கு பெயர் போனவர்கள். இவர்களை வெளிப்படையாக சாக்ரடீய அறிஞர்கள்(Socratic scholars) என்று அடையாளப் படுத்தவில்லை என்றாலும் சாக்ரடீஸில் நாம் காணும் குணநலங்கள் இவர்களிடம் தொடர்ந்து வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

கேள்வி: வாழும் கலை தத்துவ மரபில் வரும் அறிஞர்களில் யார் வெளிப்படையாக சாக்ரடீஸை பற்றி விவாதிப்பதில்லை என்று நினைகிறீர்கள்?

நெஹாமஸ்: தோரோ(Thoreau), எமர்சன்(Emerson), விட்கென்ஸ்டைன் (Wittgenstein) போன்றவர்களைச் சொல்லலாம். தோரோ வெளிப்படையாக எதுவும் பேசவில்லை எனினும்     சாக்ரடீஸைப் போலவே சமூக ஒழுங்கீனத்தை பெரிய விஷயமாகக் கருதுகிறார். எமர்சன் பிளாட்டோவைப் பற்றி நிறைய பேசி இருக்கிறார், ஆனால் சாக்ரடீஸை நினைவில் கொண்டு தான் அதைச் செய்திருக்கிறார். விட்கென்ஸ்டைன்-இன் “Philosophical Investigations” மற்றும் “Tractatus”  ஆகிய நூல்களில் பிளாட்டோவை விட சிக்கலான விஷயங்களை பேசி இருப்பதாகக் கொள்ளலாம்.

இந்த மரபின் முதல் அம்சம் சாக்ரடீஸின் தத்துவங்களை நேரடியாக விசாரிப்பது. இரண்டாவது சாக்ரடீஸின் அம்சங்களைக் தன்னுள் கொண்டிருப்பது. மூன்றாவது இலக்கிய நடைக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இங்கு இலக்கிய நடை என்று நான் சுட்டுவது ஒருவரின் தனித்துவமான மொழி நடையை. அதாவது தன் மொழி வெளிபாட்டின் மீது அக்கறை கொண்டிருப்பது. அத்தகைய ஒரு அக்கறையை நான் ஸ்டான்லி காவலிடம்(Stanley Cavell) காண்கிறேன். மிகச் சரியாக இந்த அம்சம் தான் அவரை பிற தத்துவவாதிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது. இதனால் தான் அவரின் சிந்தனைப் பள்ளி என ஒன்றைச் சுட்டுவதும் கடினம். சாக்ரடீஸ் சிந்தனைப் பள்ளி என்று நிறைய உண்டு தான். எனினும் அவர்களில் எவ்வளவு பேர் எந்த அளவு சாக்ரடீஸுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்று நமக்குத் தெரியாது. அத்துடன் எவருக்கும் சாக்ரடீஸைப் பற்றி முழுமுற்றாக எதுவும் தெரிந்திருக்கவில்லை.

கேள்வி: வாழும் கலை தத்துவ மரபில் இருந்து உரையாடலை சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோவை நோக்கி நகர்த்தலாம் என்று நினைக்கிறேன். இவர்களின் சில தத்துவச் சிக்கல்கள் சமகால விவாதங்களோடு தொடர்புடையவை என்று குறிப்பிடுகிறீர்கள். சிலசமயம் பொதுப் புரிதலுக்கு நேர் எதிராகச் சென்று இவ்வாறு சொல்கிறீர்கள். உதாரணமாக உங்களுடைய “Virtues of Authenticity” நூலில் உள்ள இரண்டு கட்டுரைகள். சாக்ரடீஸின் சுய உருவாக்க(self-creation) திட்டத்தின் மூலம் வேறொரு காலகட்டத்தை சேர்ந்த ஒருவரால் எந்த அளவு தன் வாழ்க்கையை வடிவமைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் இந்த சுய உருவாக்கத் திட்டம் எந்த அளவு அவர் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்ஸுடன் தொடர்புடையது?

நெஹாமஸ்: சாக்ரடீஸின் சுய உருவாக்கத் திட்டம் பொதுவானது. அதற்கும் அவர் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்ஸுக்கும் பெரிய தொடர்பில்லை. அந்த திட்டத்தில் பங்கேற்பதால் ஒருவர் என்னவாக முடியும் என்பது அவரின் வரலாற்றுப்புலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்தது. ஆனால் ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் குவித்து அதன்மூலம் பொருட்படுத்தும் படியான விஷயங்களைச் செய்வது என்னும் செயல்திட்டம் அடிப்படையான எந்த மனித செய்ல்பாட்டுக்கும் பொருந்துவது. அதற்காக சாக்ரடீஸ் செய்ததை அப்படியே நீங்கள் பிரதியெடுப்பது உதவாது. வேறுவகை வழிமுறைகள் தேவைப்படும்.

கேள்வி: ஒரு வேளை சாக்ரடீசுக்கு பிறகு ‘வாழும் கலை’ தத்துவ முறையை எழுத்துச் செயல்பாடு வழியாக மேற்கொள்ள வேண்டும் என்பது இதற்கு காரணமா?

நெஹாமஸ்: இன்றைக்கு தத்துவம் என்பது அச்சு வடிவிலான துறையாக இருகிறது. சக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் நாம் இன்று சொல்லும் ‘துறை’ என்னும் வடிவத்தில் கூட தத்துவம் இருந்திருக்க வில்லை. வாய்வழி வழக்கத்தில் இருந்து வெளியேறிய ஒரு சமூகத்திற்கு இத்தகைய கேள்விகளை அதன் ஆதார வடிவிலேயே கையாள்வது கடினம். எழுத்துச் செயல்பாடு மூலம் கையாள்வது தான் சுலபம். வாழும் கலை மரபு எழுத்துச் செயல்பாடு மூலம் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று நான் சொல்லும் போது, வெறுமே அதைப்பற்றி எழுதுவதை மட்டும் குறிக்க வில்லை. நீங்கள் மேற்கொள்ளும்  எழுத்துச் செயல்பாடு உங்கள் வாழ்க்கையிலும் ஆளுமையிலும் பாதிப்பைச் செலுத்த வேண்டும். சுவாரஸ்யமாக திரிபுவாதங்கள்(ad hominem arguments) கூட இந்த தத்துவ மரபில் முக்கியமான ஒன்றாகிறது. இந்த மரபில் உள்ள தத்துவவாதிகளின் வாழ்க்கை அவர்களின் சிந்தனையை ஒட்டி இல்லையென்றால் அவர்களை விமர்சிக்க இடமிருக்கிறது. அதே சமயம், இவ்வகை திரிபுவாதங்கள் கோட்பாட்டு(theoretical) தத்துவ விவாதங்களில் பிழையானவை, சம்பந்தம் இல்லாதவை.

இன்னொரு புறம், முழுக்க முழுக்க தத்துவார்த்தமாக வாழ்ந்த ஒருவர் எதுவுமே எழுத வில்லை என்று கொள்வோம். அவரால் தனக்கு பின் வருபவர்கள் மேற்கொள்ளும் அளவில் ஒரு மாதிரி மரபை விட்டுச் செல்ல முடியுமா? முடியாது என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எவ்வளவுதான் செல்வாக்கு செலுத்தி இருந்தாலும், நீங்களோ, வேறு ஒருவரோ அதைப் பற்றி எழுதவில்லை என்றால், பிறர் வாழ்வில் நீங்கள் செலுத்திய பாதிப்புகள், ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லாம் நாளடைவில் மறக்கப்படும். ஒரு குளத்தில் எறிந்த கல்லால் ஏற்படும் சலனம் போல காலப் போக்கில் மறைந்து அடங்கும். ஆனால் எழுத்து என்றைக்கும் நீடித்து இருக்கும். மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு மறுவரையறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கும். அது ஏற்படுத்தும் சலனம் அடங்குவதே இல்லை. ஒரு வேளை நீங்கள் இப்படிச் சொல்லலாம். ‘நான் பிறர் வாழ்வில் எந்த பாதிப்பையும் செலுத்த விரும்பவில்லை. மாறாக என்னுடைய வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காகவும், என்னளவில் ஒரு நல்ல மனிதராக இருப்பதற்கு மட்டுமே விரும்புகிறேன்.’ இதுவும் ஒரு விரும்பத்தக்க விழைவே. ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் உங்களைப் பற்றியோ நீங்கள் மேற்கொண்ட வாழ்க்கையை பற்றியோ என்னால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அதைப் பற்றிய எந்த தடையமும் இருக்காது. உங்கள் வேலையை முடித்து விட்டு நீங்கள் மறைந்து விடுகிறீர்கள். அது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால்  உங்களுக்குப் பின் நீடிக்கும் மரபென்று ஒன்று இருக்காது.

கேள்வி: “ஒருவர் தான் முன்வைத்த தத்துவ மாதிரியை தன் தனிவாழ்வில் வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்திருக்கலாம். இல்லாமல் போயிருக்கலாம். வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கும் பட்சத்தில் அது சுயசரிதை ஆகி அதன் மீது தொடர்ச்சியான விவாதங்கள் நிகழ்கிறது. கூடுதலாக அவர்கள் படைப்புகளில் வெளிப்படும் ஆளுமை என்பதும் ஒரு தத்துவ விவாதத்திற்கு உட்படும் விஷயமே. எனினும் வெளிப்படும் அந்த ஆளுமை நேர்த்தியுடையதா, விரும்பத்தக்கதா என்னும் அளவில் அந்த விவாதம் முடிந்துவிடுகிறது.” என்று உங்கள் நூலில் குறிப்பிடுகிறீர்கள். பூக்கோ(Foucault)  தன்னுடைய ‘எழுத்தாளர் என்பவர் யார்’ என்னும் கட்டுரையில் “ஒரு எழுத்தாளர் தனக்கும் தான் எழுதுவதற்கும் இடையில் நுட்பமாக மறைத்துக் கொள்வதன் மூலம் அவரின் தனிபட்ட ஆளுமை வெளித்தெரியாதவாறு செய்கிறார்.” என்று கூறுகிறார். நீங்களும் ஃபௌகல்ட்டும் குறிப்பிடுவதற்கு மாறாக எவ்வாறு தத்துவவாதிகளின் வாழ்க்கை அவர்களின் படைப்பை புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது?

நெஹாமஸ்: சாக்ரடீசைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும். நீட்ஷேவைப் பற்றி நிறைய சுயசரிதைகள் இருந்தாலும், அவற்றில் நாம் கானும் ஆளுமை அவரின் படைப்புகளைப் புரிந்துகொள்ள உதவாது. அதுபோல் நீட்ஷே கடவுள் இறந்துவிட்டார் என்று சொன்னதற்கு காரணம் சிறுவயதில் அவரின் தந்தை இறந்த துயரத்தினால் தான் என்பது போன்ற அபத்தமான சுயசரிதை ஆராய்ச்சிகளும் உபயோகமற்றது.

தத்துவ விவாதத்தில் எதை கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்பது முக்கியம். சாக்ரடீஸ், மான்டைன், நீட்ஷே, பாஸ்கல், பூக்கோ போன்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் போது ‘அவர்கள் வாழ்ந்த விதம் சரியா?’ அல்லது ‘அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொன்னவாறு அவர்கள் வாழ்ந்தார்களா’ என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொள்ளக் கூடாது. மாறாக அவர்களின் சிந்தனை என்னை எப்படி பாதிக்கிறது, அவர்களை வாசித்தப் பின் நான் என்ன செய்ய வெண்டும் என்பது போன்ற கேள்விகளே சரியாக இருக்கும். இங்கு முதன்மையான தத்துவப் பிரச்சனை நீங்களும் உங்கள் வாழ்க்கையும் தான். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதே உங்கள் எதிர்வினை. அந்த கேள்விகளுக்கு நீங்கள்  தன்னளவில் பதில் தேட முயலலாம்; உங்கள் நண்பர்களிடம் நன்றாக நடந்து கொள்ளலாம்; சகமனிதர்களிடம் பெருந்தன்மையாக இருக்க முயலலாம்; இதுபோல் அந்த தத்துவத்தில்  உங்களை வசீகரிக்கும்  ஏதேனும் ஒன்றைச் செய்ய முயல்கிறீர்கள். எனவே ‘நீட்ஷே போற்றுதலுக்கு உரிய ஒரு வாழ்க்கை மாதிரியை உருவாக்கி இருக்கிறாரா இல்லையா’ போன்ற கேள்விகள் இங்கு முக்கியமில்லதவை. தனக்கு ஆர்வமூட்டும் விஷயத்தை ஒழுங்கோடும் நேர்த்தியோடும் செய்து அடைவதே ஒருவருடைய இலக்காக இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செயல்களை செய்வதோ, முரண்பாடான பார்வைகளைக் கொண்டிருப்பதோ இதற்கு உதவாது. நமது செயல்பாடுகளும், வாழ்க்கைமுறையும் சீரான ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருப்பது அவசியம்.

கேள்வி: ஒருவர் தன்னைப் பற்றிய விவரனைகள் இல்லாமலேயே எழுத்தில் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று நீங்கள் குறிப்பிடுவது சுவாரஸ்யமாக உள்ளது. நீட்ஷே பிற தத்துவவாதிகளை இந்த அடிப்படையில் வாசித்தார் என்று தோன்றுகிறது.

நெஹாமஸ்: ஆமாம், நீட்ஷே அந்த வகையில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். உதாரணமாக எந்த தத்துவமும் அந்த ஆசிரியரின் தன்னுணர்வில்லாத சுயசரிதை(unconscious memoir) என்று அவர் குறிப்பிட்டதை ‘தத்துவ ஆசிரியரின் உளநிலையின் வெளிப்பாடுகள் தான் தத்துவ படைப்புகள்’ என்று தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் அவர் சொல்ல வந்தது ‘பெரும்பாலான தத்துவ சிந்தனைகளில் அந்த ஆசிரியர் போற்றவோ, வெறுக்கவோ, வலியுறுத்தவோ விரும்பிய ஒரு வாழ்க்கைச் சித்த்திரம் உள்ளது என்றும் அது அந்த தத்துவத்தை மதிப்பிட, விளங்கிக் கொள்ள இன்றியமையாதது’ என்பதும் தான்.  தன்னுணர்வில்லாத சுயசரிதை என்று சொல்லும் போது அவர் தத்துவ ஆசிரியரின் சொந்த வாழ்க்கையை குறிப்பிடவில்லை. ப்ருஷ்யாவில் வாழ்ந்ததாலோ, கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்ததாலோ கன்ட்(Kant) இந்தந்த விஷயங்களை நம்பினார், வலியுறுத்தினார் என்று நீட்ஷே சொல்லவில்லை. மாறாக கன்ட்-இன் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்வோம் என்று கற்பனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

கேள்வி: பிளாட்டோவின் உரையாடல்களை அவர் உபயோகிக்கும் இலக்கிய வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் சாக்ரடீஸ் மற்றும் பிளட்டோவின் ஆக்கங்களில் கையாளப்படும் தொன்மங்களைக்(myth) குறித்து நீங்கள் அரிதாகவே விவாதிக்கிறீர்கள். தொன்மங்களுக்கு தத்துவப் புலத்தில் இடம் உண்டு என்று நினைகிறீர்களா?

 நெஹாமஸ்: தொன்மங்களின் செயல்முறை குறித்த புரிதல் எனக்கு குறைவே. எனவே அது பற்றி அதிகம் பேசுவது இல்லை. பிளாட்டோவின் ஆக்கங்களில் தொன்மம் எவ்வாறு செயலாற்றுகிறது என்று தெள்ளாத் தெளிவாக எனக்கு தெரியவில்லை. தொன்மங்கள் என்பவை உரையாடல்களில் மிகுந்த தன்னுணர்வோடு பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியக் கருவி. தொன்மங்கள் ஒரு இலக்கியக் கருவி என நாம் நினைக்கிறோம், ஆனால் பிளாட்டோ வேறு வகையில் அதைப் பயன்படுத்தினார் என்று நினைக்கிறேன். அத்துடன் உரையாடல்களில் தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக வரையறுக்கப் பட்ட ஒன்றல்ல. கவிதைக்கும் தத்துவத்திற்கும் கூட அப்படி தான்.

கேள்வி: நீட்ஷே: இலக்கியமென ஒரு வாழ்வுநூலில் நீங்கள் நீட்ஷே பயன்படுத்தும் பல்வேறு வகை இலக்கிய நடைகளையும்(literary styles) அதன் நோக்கங்களையும் விவரிக்கிறீர்கள். குறிப்பாக இந்த உரையாடலுக்கு தொடர்புடைய இரண்டு வகைகள் பொன்மொழி(aphorism) மற்றும் மிகைக்கூற்று(hyperbole). இவ்வகைகளின் செயல்பாட்டில் ஒரு வகை தன்முனைப்பு(aristocratic)  உள்ளது என்று கருதலாமா? தத்துவத்தில் மிகைகூற்றின் தேவை என்பது ஒரு கருத்தை வலுவாக முன்வைப்பதன் மூலம் வாசகர்கள் அப்பட்டமாக அது நீட்ஷேவினுடையது என்று அறியும் பொருட்டு என்றும் குறிப்பிடுகிறீர்கள். எனில் மாற்றுத் தரப்புகளை கருத்தில் கொள்பவர்களால் மட்டுமே நீட்ஷேவின் மிகைகூற்றை புரிந்து கொள்ள முடியும் இல்லையா?

நெஹாமஸ்: நான் இவற்றை தன்முனைப்பு என்று சொல்ல மாட்டேன். நீட்ஷே ஒரு கருத்தை மிகையாகக் கூறுகிறார் என்று நீங்கள் உணர்ந்ததும் அது அவரின் கருத்து என்னும் எண்ணம் உங்களிடம் வலுவாக பதிந்து விடுகிறது. அதற்கு பின் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் உங்கள் முன் திறந்தே இருக்கிறது. அது நகைப்புக்குறிய வகையில் நீட்ஷேவின் கருத்து என்று நினைத்து ஒதுக்கலாம். அல்லது அது துல்லியமாக நீட்ஷேவின் கருத்து என்று தெரிவதால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது இது நீட்ஷேவின் கருத்து என்று எனக்கு தெரிகிறது, அந்த கருத்தோடு நான் உடன்படுகிறேனா, அதற்கு நான் எவ்வாறு எதிர்வினையாற்றுவது, அது சரியா என்னும் முறையில் சிந்திக்கலாம். இவை அனைத்திற்கும் பிறகு நீங்கள் அந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏற்பது ‘நீட்ஷேவின்’ கருத்தை, அவரின் வாழ்க்கைப் பார்வையை என்று தெளிவாக உணர்கிறீர்கள். வாழ்க்கை சார் பின்விளைவுகள் இல்லாத ஒரு அருவமான உண்மையை அல்ல. இது தான் மிகைக்கூற்றின் செயல்முறைப் பயன் என்று நினைகிறேன்.

 கேள்வி: பொன்மொழிகளைப் பற்றி என்ன நினைகிறீர்கள்? பொன்மொழிகளை புரிந்து கொள்ள எப்போதும் மேலதிக விளக்கம் தேவை என்று நீட்ஷே குறிப்பிடுகிறார். அதுபோல அவரின் சொந்தத் தரப்பை வெளித்தெரியாது மறைத்து வைப்பதற்காக மிகைகூற்றை பயன்படுத்துவதாகப் படுகிறது.

நெஹாமஸ்: ஒரு மிகைக்கூற்றை எதிர்கொண்ட கணத்தில் அது அற்பத்தனமாக என்ன சொல்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களின் முதல் எதிர்வினையாக இருக்கும். ஏன் இப்படிக் கத்துகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் முதலில் தெளிவு படுத்திக் கொண்ட பிறகே நீங்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும். பொன்மொழிகளுக்கும் இது பொருந்தும். பொன்மொழிகள் அதன் பொருளை முகத்தில் மாட்டி வைத்திருப்பதில்லை. அதைத் தான் ‘புரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் பங்கு வேலையைச் செய்ய வேண்டும்’ என்று நீட்ஷே சொல்கிறார். அத்துடன் உங்கள் பங்கு வேலையைச் செய்வதன் வழியாக நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள். நான் முன்னரே சொன்னது போல பொன்மொழி அல்லது மிகைக்கூறு உங்களிடம் ஏற்படுத்த வேண்டிய கேள்வி நீட்ஷே சொல்வதைப் புரிந்து கொள்ள முயல்வதன் மூலம் நீங்கள் என்னவாக ஆகிறீர்கள் என்பது தான். அவர் அதைச் சரியாகச் சொல்கிறாரா என்பது முக்கியமில்லை.

கேள்வி: மிகைக்கூற்றயும் பொன்மொழிகளையும் இலக்கியக் கருவிகளாக நீட்ஷே பயன்படுத்தும் விதத்திற்கும் சாக்ரடீய நகைமுரனுக்கு எதும் தொடர்பு உண்டு என்று நினைக்கிறீர்களா?

நெஹாமஸ்: ஆம், இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது. நீட்ஷேவும் சாக்ரடீஸும் பல வகையில் ஒன்றை ஒன்று பிரதிபலித்துக் கொள்ளும்  உருவகங்களாக இருக்கிறார்கள். நீட்ஷேவுக்கு மிகைகூற்று என்றால் சாக்ரடீசுக்கு குறைத்துக் கூறல். ஒருபுறம் சாக்ரடீஸ் தன் அறியாமையை ஒப்புக்கொண்டு ‘எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லுங்கள்’ என்பார் என்றால், மறுபுறம் நீட்ஷே எந்த ஒன்றையும் நம் முகத்தில் அறையும் வண்ணம் சொல்வார். தன்னை முன்னிலைப்படுத்தி அவர் சொல்லும் விதத்தில் எல்லாரைக் காட்டிலும் தனக்கு கூடுதலாகத் தெரியும் என்ற தொனி உள்ளது. அதே நேரம், பொன்மொழிகளின் வழியாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். அது போல நகைமுரனை கைக்கொள்ளும் தத்துவவாதிகள் அனைவரிடமும்  அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது சிரமம். பொன்மொழி மற்றும் மிகைக்கூறல் ஆகிய இரண்டு வகைகளிலும் நகைமுரனின் இந்த ஒரு அம்சம் உள்ளது.

ஒருபுறம் அனைத்தும் அவ்வளவு அழுத்தமான குரலில்  தீர்மானமாக ஒலிக்கிறது. மறுபுரம் அந்த குரலை சற்று கூர்ந்து கேட்டோமானால் அவ்வளவு தன்னம்பிக்கையும் அது வெளிப்படும் விதத்தாலேயே கீழிறக்குகிறது. நீட்ஷே ஒன்றும் அவர் காட்டிகொள்வது போல் அவ்வளவு உறுதிபாடு உடைய தத்துவவாதி அல்ல என்று தோன்றுகிறது. இதைப்போல் நீட்ஷேவின் செயல்முறைகளில் சாக்ரடீஸின் கூறுகளான தன்னை மறைத்துக் கொள்ளுதல், நிச்சயமின்மை, முரன்நகை போன்றவற்றை நாம்  காணலாம். இவ்விருவரின் கருத்துகளும் ஒருவரிடம் அகவயமான மறுமொழியைக் கோருகிறது என்பது இன்னொரு முக்கியமான பொது அம்சம். வாழ்க்கையின் அங்கமாக இருப்பதனால் தான் சிந்தனைகளால் நம் வாழ்வை வடிவமைக்க முடிகிறது. எனவே இதை தங்களின் மையப் புள்ளியாக நீட்ஷேவும் சாக்ரடீஸும் ஆக்குகின்றனர்.

கேள்வி: நீட்ஷேவைப்பற்றிய புத்தகத்தில் நீங்கள் அவர் இவ்வுலகை ஒரு கலைப்படைப்பாக, குறிப்பாக ஒரு இலக்கியப் பிரதியாகப் பார்க்கிறார் என்று வாதிடுகிறீர்கள். மறுபுரம்  ஹெய்டெக்கெர்(Heidegger) நீட்ஷேவைப் பற்றி தன் உரையில் இப்படி குறிப்பிடுகிறார்: “கலை தான் நீட்ஷே வரையறுக்கும் மனத்திட்பத்தின்(will to power) தெளிவான, பரிச்சயமான வெளிப்பாடு. ஆனால் கலை உருவாக்கம் கலைஞரின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் இருந்து தான் பிறக்கிறது.” நீட்ஷேவைப் புரிந்து கொள்ளும் உங்கள் பார்வைக்கும் ஹெய்டெக்கெரின் இந்த பார்வைக்கும் உள்ள சுவாரஸ்யமான முரண்பாட்டைப் பற்றி என்ன நினைகிறீர்கள்? உங்கள் பார்வையில் ஒரு பார்வையாளர் தன்மை(spectatorship) இருப்பதாகப் படுகிறது.

நெஹாமஸ்: நீட்ஷேவைப் பொருத்த வரை ஒன்றை உருவாக்குவது என்பது ஏற்கனவே இருக்கும் ஒன்றிற்கு புத்தம்புதிய வழியில் அர்த்தம்(interpret) கொடுப்பது. ஒன்றுமில்லாததில்(ex nihilo) இருந்து எதுவும் உருவாகுவதில்லை. ஒருவகையில் வரலாற்றுவாதிகள் செய்வது அதைத்தான். நீட்ஷேவும் ஹெய்டெக்கெரும் வரலாற்றுவாதிகளே. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையிலான நிகழ்வுகளை, உண்மைகளை, பொருட்களை எதிர்கொள்கிறீர்கள். அவற்றை புது வழிகளில் அர்த்தப்படுத்துவதே இங்கு படைப்பூக்கச் செயல்பாடு. அதாவது புது வழிகளை உபயோகிப்பது என்பது, முன்பில்லாத வகையில் அதன் எல்லா சாத்தியக்கூறுகளையும் காண்பது. இப்போது இந்த செயல்பாட்டிற்கு ஒரு பார்வையாளர் தன்மை வந்து விடுவதைக் காணலாம். இவ்வாறு காண்பதும் ஒரு படைப்பாக்கச் செயல்பாடே. என்னை பொறுத்தவறை நீங்கள் நீட்ஷேவைக் கேட்டால் பார்வையாளர் தன்மைக்கும் படைபூக்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே சொல்வார்.

கன்ட்(Kant) வழியில் வரும் நவீன அழகியலின் படி, ஒரு கலைப் படைப்புக்கும் நமக்கும் இடையான உரையாடல் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது. முதலில் நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள். அதன் பின் மதிப்பிடுகிறீர்கள். உதாரணமாக ஒரு கவிதையை வாசிக்கும் போது அதில் என்ன இருக்கிறது என்று முதலில் புரிந்து கொள்கிறீர்கள். பின் அது நன்றாக இருக்கிறதா இல்லயா என்று மதிப்பிடுகிறீர்கள். அவ்வளவு தான். இரண்டிலும் படைபூக்கமாக எதுவும் இல்லை. மறுபுறம் என்னைப் பொறுத்த வரை அழகியல் மதிப்பீடு என்பது அந்த கலைப் படைப்புடனான உரையாடலின் தொடக்க நிலையிலேயே வந்து விடுகிறது. மதிப்பீட்டை நான் ஒரு முடிவாகக் கருதவில்லை. மாறாக அதை உரையாடலின் தோற்றுவாயாக பார்க்கிறேன். அழகியல் மதிப்பீட்டை “மகிழ்சிக்கான வாக்குறுதி” என்னும் ஸ்டெந்தலின்(Stendhal) மேற்கோளை நீட்ஷே தன் நூலில் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு விஷயம் அழகாக இருப்பதாக நாம் நினைப்பதன் பொருள் நாம் இதுவரை பெற்றுக்கொண்டதைவிடவும் கூடுதலாக கொடுப்பதற்கு அதனிடம் ஏதோ இருப்பதாக நாம் சந்தேகிப்பதும், ஊகிப்பதும் மற்றும் உணர்வதும் தான்.

ரசனையின் மதிபீட்டில் இருப்பது எதிர்காலத் தன்மை தானே ஒழிய கடந்தகாலம் அல்ல. அந்த மதிப்பீட்டில் இருப்பது ஒரு ஊகம், அனுமானம். அது அனுமானமாக இருக்கும் பட்சத்தில் அது ஆதாரத்திற்கு பின்னால் போகிறது. அது ஆதாரத்தையும் தாண்டிப் போகும் பட்சத்தில் நமக்கு முன்னரே தெரிந்த பொருட்களின் பண்புகளை அதனால் தொடர முடியாது. அதனால் தான் நீங்கள் தீர்ந்துபோய்விட்டதாகக் கருதும் வரை எந்த ஒன்றும் உங்களுக்கு அழகாக இருக்கிறது.

கேள்வி: நீங்கள் தற்சமயம் மேற்கொண்டிருக்கும் பணி குறித்து சொல்லுங்கள்.

நெஹாமஸ்: நான் அழகியல் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில வருடங்களாக அழகும் அழகியலும் எவ்வாறு அறிவுசார் விவாதங்களின் மையமாக வந்தது என்று வியப்புற்று இருக்கிறேன். எதனால் என்று நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாக சொல்வேன். சிலர் அழகுணர்ச்சி நம்மை நீதியை, அறத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று வாதிடுவதன் வழியாக அழகியல் சார் பிரச்சனைகளுக்கு தத்துவார்த்தமான ஒரு மதிப்பை உண்டாக்க முயல்கிறனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அழகியலின் முக்கியத்துவம் தனிச்சையான வழியில் நிறுவப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மானுடவியலுக்கும் இது பொருந்தும். மானுடவியலைக் கற்பது ஒருவரை மேலும் ஒழுக்கமுடையவராக்கும் என்றோ, ஒரு நல்ல வேலையை ஈட்டித் தரும் என்றோ நாம் மாணவர்களிடம் சொல்வது சரியாக இருக்காது. ஒழுக்கமுடையராக, செல்வந்தராக இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அவை மட்டுமே நல்ல விஷயங்கள் இல்லை. மானுடவியலை கற்பது என்பது அழகை ரசிப்பதைப் போல உங்களை மேம்பட்ட மனிதராக ஆக்கும்.  ஆனால் மேம்பட்ட மனிதர் ஆவதற்கு நீங்கள் மேலும் ஒழுக்க உணர்ச்சியை  அடைவது மட்டுமே வழி அல்ல. ஒழுக்கம் சார்ந்த நன்மை மட்டுமே முழுமையான மானுட நன்மையல்ல. ஒழுக்கத்துகுள் வராத நன்மைகளை நாம் உதாசீனப் படுத்தி விடுகிறோம்.

அழகியல் மதிப்புகளுக்கு தன்னளவில் ஒரு மதிப்பு உண்டு என்று நினைக்கிறேன். அழகு, நடை, நேர்த்தி போன்ற அழகியல் அம்சங்கள் மனித வாழ்வின் முக்கியமான கூறுகள் என்றும் அவை அதன் இயல்பான நிலையில் விரும்பப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன். இத்தகைய விழுமியங்களை   கலை, இலக்கியம், மானுடவியல் ஆகியவற்றின் வழியே நம் வாழ்வின் அங்கங்கள் ஆக்குகிறோம். நம்மை நாமே இன்னும் செறிவான, ஆர்வமுடையவர்களாக மாற்றுகிறோம். இதன் மூலம் நாம் கூடுதல் ஒழுக்கம் உடையவர்களாக ஆவதில்லை. அதே சமயம், குறைவான ஒழுக்கம் உடையவர்களாகவும் ஆவதில்லை. நம் வாழ்க்கையில் குறைக்கவியலா அழகியல் அம்சமொன்று உள்ளது என்றும், நாம் அதற்கு முன்னைக் காட்டிலும் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். ஒழுக்க மதிப்பீடுகளின் சாயலில் அவை இல்லை என்பதாலோ அல்லது அவற்றில்  உலகியல் வெற்றிகள் இல்லை என்பதாலோ அந்த அம்சத்தை நாம் கைவிட்டுவிட வேண்டியதில்லை.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.