/

வெளிச்சத்தை அறிவிக்காத குயில் : விஷால் ராஜா

1.

நவீன தமிழ் இலக்கியத்தில் நெடுங்கவிதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. வெவ்வேறு காரணங்களை பின்னனியில் சொல்லலாம். கவிதை, நுட்பங்களுக்கான வடிவம். சிறிய விஷயத்துள் பிரம்மாண்டத்தை அடையாளம் காட்டுவது. ஒரு காட்டு மலரில் வானுலகை பார்ப்பது போல.  மலர் கூட தேவை இல்லை; தேன் துளியிலிருந்தே வானுலகின் இனிமையை கவிதை கைப்பற்றிவிடுகிறது.  தேவதச்சனின் ஒரு கவிதையில், வண்ணத்துப்பூச்சிகள் தம் சின்னஞ்சிறு கால்களில் காட்டை தூக்கி செல்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள் வழியே காடுகளை தோற்றுவிப்பதே கவிதை செயல். மந்திரம் போல் சொல் வேண்டும் என்பதே கவிதைக்கான பிரார்த்தனை. கரைசலை எல்லாம் வடிகட்டி ஒளி ஊடுருவும் படிகமாகவே கவிதை எஞ்சுகிறது. 

நவீன கவிதை, செறிவையும் அடர்த்தியையும் லட்சியமாக கொண்டிருப்பதனால் நீண்ட கதையாடல்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால்- காவியமாக முயற்சிப்பதில்லை.நவீன காலகட்டத்தில் நாவலே காவியத்துக்கான (Epic) வடிவமாக நிலைபெற்றுவிட்ட சூழலில், நெடுங்கவிதை அதை தன்னளவில் மறுவரையறை செய்ய முயற்சிக்கிறது. காவியம் எனும் சொல்லுக்கே கவியால் பாடப்படுவது என்றுதானே பொருள். எனவே அந்த தொடர்பை எளிதில் முறித்துவிட முடியாது. 

டி.எஸ்.எலியட்டின் “பாழ்நிலம்” காவியத்திற்கான ஒரு புகழ்பெற்ற முன்மாதிரி. ஐரோப்பிய நாகரீகத்தின் ஒட்டுமொத்த வீழ்ச்சி அதில் மொழியப்பட்டிருந்தது. தமிழில் பிரமிளின் “தெற்குவாசல்”, கலாப்ரியாவின் “எட்டயபுரம்”, விக்கிரமாதித்யனின் “நவபாஷாணம்” போன்ற நெடுங்கவிதைகள் காவியத்துக்கான நவீன முயற்சிகள்.  ஷங்கர் ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை”யினையும் அவ்வரிசையில் நிறுத்தலாம். ஷங்கர் இந்த நூலுக்கு குறுங்காவியம் என்று அடைமொழி வைத்திருப்பதும் பொருத்தமானதே. இந்நூல், வெவ்வேறு இடங்களையும் பிராயங்களையும் கடந்து செல்கிறது. நதி போல அத்தனை சுழிப்புகளுடன் ஓடுகிறது.

ஷங்கருடைய நெடுங்கவிதை தன் மரபு தொடர்ச்சியை தானே தெரிவிக்கிறது- அவ்வளவு வெளிப்படையாக இல்லாமலும் அவ்வளவு ரகசியமாக இல்லாமலும். விக்கிரமாதித்யன் மற்றும் கலாப்ரியாவின் ஆக்கங்களோடு, வடிவமாக மட்டுமில்லாமல், உள்ளடக்கமாகவும் பிணைந்திருக்கிறது. மூவருமே திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். மூன்று கவிதைகளுமே திருநெல்வேலியில் வேர் கொண்டிருக்கின்றன. மனிதர்களாக, கோயில் சிலைகளாக, நதிக்கரையாக, மொழியாக, ருசியாக திருநெல்வேலி அவர்கள் நெஞ்சில் புடம் போட்டிருக்கிறது. இந்த மூன்று கவிதைகளையும் ஒப்பிடும்போது ஒவ்வொன்றும் துலங்குகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்கிறது. “எட்டயபுரம்” திருநெல்வேலியில் தங்கியிருக்கிறது. “நவபாஷாணம்” திருநெல்வேலியை தூக்கி சுமக்கிறது. “இகவடை பரவடை” வெட்டி வெளியேறுகிறது.

வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவன் கதைகள் போல ஊர் மனிதர்களையும் அவர்தம் வாழ்க்கையும் சித்தரிக்கும் கலாப்ரியாவின் எட்டயபுரம், சுதந்திர இந்தியாவின் சமூகக் கனவு வெளிரி போன ஒரு காலத்தை பிரதிபலிக்கிறது. வறுமையின் ஏக்கத்தின் சித்திரங்கள் வந்தபடியுள்ளன. “இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கப் போகிற எம் இளைஞர்களுக்கு – வெற்றி; வெற்றி” என்று பரிகாசத்துடன் நிறைவு பெறுகிறது.  துடியாட்டத்துடன் ஒரு பாணனாய் கவி பாடும் விக்கிரமாதித்யனின் நவபாஷாணமோ, சமூகப் பொருளாதார கனவோடு கலாச்சாரக் கனவும் வெளிரி போனதன் சாட்சியாகிறது. “[குற்றாலநாதரே] அருவிக்கரையிலிருந்து காலி பண்ணினாலென்ன” என்றுதான் பேசவே ஆரம்பிக்கிறது. அடுத்த தலைமுறை கவிஞரான ஷங்கரினிடத்தே, கலாப்ரியாவிடமும் விக்கிரமாதித்யனிடமும் தென்படும் பஞ்சம் பசி விசனமோ, பெருமிதத்தின் எடையோ இல்லை. ஆனால் ஆன்மீகக் கனவின் சிதைவு இருக்கிறது.  அது திருநெல்வேலி குற்றாலநாதரின், காந்திமதியின், சைவப் பாடல்களின், விபூதிக் கோடுகளின், சரணாகதியின் ஆன்மீகம் அல்ல. திருநெல்வேலியைவிட்டு முழுமையாக வெளியேறிய ஒரு நவீன மனிதனின் ஆன்மீகம். தன்னை ஒரு தனிமனிதனாக, ஓர் அனாதையாக உணர்ந்தவனின் ஆன்மீகம். இடம்பெயர்தலும் நிலையழிதலுமே அதன் மையங்கள்.

 2.

இலக்கியமே ஒருவிதமான தனிமொழியெனில், கவிதை அதனுள் இன்னொரு தனிமொழியாக இயங்குகிறது. இலக்கியம் ஒரு சங்கேத மொழி என்றால் கவிதை அந்த சங்கேத மொழியில் பரிமாறப்படும் ரகசியம். அல்லது சங்கேத மொழியின் ஆதார நோக்கம். சிறுகதையிலோ நாவலிலோ எழுத்தாளனாலேயே தன் ஆக்கத்திற்கான சட்டகத்தை உருவாக்கிட முடியும். ஆனால் கவிதையில் கவிதைக்கு வெளியேதான் அது உருவாக்கப்படுகிறது. அதனாலேயே, வாசிக்கும்போது ஏற்படும் பரவசத்துக்கு நிகராகவே எதிர்பாராத சமயத்தில், கவிதை வரிகள் ஞாபகம் வரும்போதும் பரவசம் எழுகிறது. வாழ்க்கையில் ஒரு கவிதை திறப்பதற்கு கவிதையல்லாத வேறொன்றும் தேவை என்றே நம்பத் தோன்றுகிறது.  

இசை மற்றும் ஓவியம் போன்ற நுண்கலைகளுக்கு நெருக்கமானது கவிதை. மிக எளிதாக மொழியை கடக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. மொழியின் தீவிரத்தை மிக அதிகம் சார்ந்திருப்பதும், மொழியை உடனடியாக உதறிவிடுவதும் கவிதையே. அதனால்தான், அதிகம் பேசப்பட வேண்டியதாகவும் அதிகம் பேசிவிட முடியாததாகவும் கவிதை இருக்கிறது. 

புறச்சட்டகம் என்பது கவிதைக்கு கவிதை வேறுபடக்கூடியது. நகுலனுடைய கவிதை வரிகள், நகுலனால் எழுத்தப்பட்டதனாலேயே கவிதையாகின்றன என்று சொல்வார்கள். நகுலனுடைய மொத்த கவிதை உலகத்திலிருந்தும் அதன் வழியே நகுலன் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் ஆளுமையிலிருந்தும் அவ்வரிகளை பிரித்து பொருள் கொண்டால் சல்லிசாகவே தோன்றும். நகுலனுடைய போதாமைகளை பேசும்போதும் இந்த அடிப்படையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். நகுலன் ஒரு பூடகமான கவிஞர் என்பதால் இது துலக்கமாக தெரிகிறது. ஆனால் பிற கவிஞர்களுக்கும் இது பொருந்தும். ஆத்மநாம் முதல் பிரான்சிஸ் கிருபா வரை கவிஞர்களின் துர்மரணம் அவர்கள் கவிதைக்கு என்னென்ன வகையான அர்த்தங்களை கொடுக்கிறது என்று யோசித்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 

மறுபுறம், எந்தவொரு கவிதைத் தொகுப்பும் தன்னியல்பாகவே நெடுங்கவிதை போன்ற மயக்கத்தை தர வல்லது.கவிதையை சுற்றி நாம் ஒரு வாழ்க்கையை அல்லது பல வாழ்க்கைத் தருணங்களை கற்பிதம் செய்வதனால்,எந்த கவிஞனும் தன் வாழ்நாள் முழுக்க ஒரே கவிதையையே எழுதிக் கொண்டிருப்பதாகக்கூட சில நேரங்களில் தோன்றும். ஒரு கவிஞனோடு சுலபமாக சில அடையாள வரிகள் பொருந்திவிடுவதற்கும் , ஒரு கவிஞன் சீக்கிரமாகவே தேய்மொழியாவதற்கும் தன்வரையிலேயே அவன் ஒரு குழூஉக்குறி என்பதும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். பொதுமொழிக்குள் இயங்கும் உரைநடையில் இது அதிகம் நிகழ்வதில்லை.

கவிதையின் மேற்சொன்ன பொது குணங்களிலிருந்து, நெடுங்கவிதையை சற்றேனும் வேறுபடுத்தி அறிய காவியத்துடன் இணை வைக்க வேண்டியுள்ளது. அதை கவிதையாகவும் கவிதையல்லாததாகவும் வாசிக்க வேண்டியுள்ளது. நெடுங்கவிதை தன் சட்டகத்தை தானும் உருவாக்குகிறது. ஒரு கதைப் பரப்பை கட்டமைக்கிறது. நீடிக்கும் காலத்தை கணக்கில் எடுக்கிறது. ஷங்கருடைய “இகவடை பரவடை” சுயசரிதை அம்சத்துடன் ஒரு நீண்ட கதையாடலை முன்வைக்கிறது. நெல்லையப்பர் கோயில் மண்டபம், சென்னை பறக்கும் ரயில் என்று ஒவ்வொரு பிரதேசமாக தோன்றி மறையும் அந்த கவிதைசொல்லியை நாம் பின்தொடர்ந்தபடியுள்ளோம். தடயங்களை அடியொற்றி பாதையை உருவாக்க வேண்டியதில்லை. தன் பிரக்ஞையின் பட்டுநூலினால் ஒரு வலைப் பின்னலை அவனே உருவாக்குகிறான். கவிதைசொல்லி கதைசொல்லியாகவும் இருக்கிறான்.    

3.

இந்த நெடுங்கவிதையில் உடனடியாக கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் சில உள்ளன. அதில் முதன்மையானது ஊடுபிரதித்தன்மை. பல குறிப்புகள் வந்தபடியுள்ளன. பல எழுத்தாளர்கள் தென்பட்டபடியிருக்கிறார்கள். முக்கியமாக நூலின் ஆரம்ப பகுதிகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் உலவுகிறார்கள். நவபாஷாணம், எட்டயபுரம் ஆகியவற்றை போலவே இகவடை பரவடையிலும் இன்னொரு திருநெல்வேலிக்காரனான புதுமைப்பித்தன் தவறாமல் இடம்பெற்றிருக்கிறார். ஒருவகையில் அனைத்து நவீன எழுத்தாளர்களின் நனவிலியிலும், புதுமைபித்தன் ஒரு பகுதியாகவே இருக்கிறார். எல்லைக் கடவுள் போல. ஆலமரப் பேய் போல. 

“சென்றான்/புதுமைப்பித்தன்/வந்து நிற்கிறான்/விக்ரமாதித்யன்” என்கிறது நவபாஷாணம். “சிற்பியின் நகரங்களில்/ அலைந்து/ மனக்குகை ஓவியங்களில்/ மனிதர்களுக்காக ஒரு உலகந்தேடி/ ஒரு வீடு நீங்கி” என்று புதுமைபித்தன் கதைகளூடே நகர்கிறது எட்டயபுரம். ஷங்கரின் நெடுங்கவிதையில் சொ.விருதாச்சலம் காவல் துறை ஏட்டாக வந்து எல்லோரையும் ஏளனம் செய்கிறார். பிறகு புதுமைப்பித்தனாகி கபாடபுரத்தில் தொலைந்து போகிறார். “எதுவுமே விழுங்காது என்று பகபகவென்று சிரிக்கிறார் புதுமைப்பித்தன்/ஆனால் புதுமைப்பித்தனை கபாடபுரம் விழுங்கிவிட்டது”. 

ஷங்கரின் இக்குறுங்காவியம் தனிமனித அகத்தின் நீண்ட வரைபடமாகவே உருப்பெற்றுள்ளது. ஆனால் புறத்தே வெவ்வேறு நிகழ்வுகளுடனும், வெவ்வேறு ஆசிரியர்களிடமும் தன்னை பிணைத்துக் கொள்வதிலும், துண்டித்து வெளியேறுவதிலும் அந்த அகம் வெளிப்படுத்தும் தீவிரம் அதை பல தளங்களுடனான உரையாடலாக மாற்றுகிறது. ஒரு நூலகம் தன்னளவில் ஒரு சமூகமாகவும் இருப்பது போல.

எழுத்தும் வாசிப்பும் வெவ்வேறு மனங்களுடனான உரையாடலாக இருப்பது மாதிரியே வெவ்வேறு பிரதிகளுடனான உரையாடலாகவும் இருக்கிறது. எட்டயபுரம், நவபாஷாணம், இகவடை பகவடை-  மூன்றையும் ஒரே ஆக்கமாக மாற்றுவது போல பல நூல்களையும் ஒரே சரடில் கோர்ப்பது மூலமாகவே இலக்கிய வாசிப்பு நிகழ்கிறது. ஆழ்மனதில் உடனடியாக நேரும் இத்தகைய இணைப்புகள் வழியாகவே நமக்குரிய பிரத்யேக அர்த்தங்களை உருவாக்கிக் கொள்கிறோம். உணர்ச்சிகரத்தை அடைகிறோம். 

“நகுலன்” எனும் கவி அடையாளம் இல்லாமல் “நகுலன் கவிதைகள்” இல்லை என்றால், “நவீன தமிழ் இலக்கியம்” எனும் இன்னொரு பெரிய அர்த்தப் பரப்பில்லாமல் “நகுலன்” எனும் கவி அடையாளம் இல்லை என்பதை நாம் அறிவோம். அப்படியாக ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகத்துக்கும் ஒரு கதாபாத்திரத்திலிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு படிமத்திலிருந்து இன்னொரு படிமத்துக்குமாய் அலைந்து எண்ணங்களின், ஆவிகளின் உலகமான ஒரு மாபெரும் மொழியமைப்பினுள், உருமாறிக்கொண்டேயிருக்கும் அர்த்த கோளத்தினுள் மனிதர்கள் விழுந்தபடியுள்ளோம் – பிரபஞ்சம் ஒரு முடிவற்ற நூலகம் என்று போர்ஹெ சொன்னதற்கேற்ப.   

ஷங்கருடைய கதைசொல்லிக்கு ஆகப் பெரும் சவாலாக இருப்பது – தூலமாக இல்லாத இந்த கற்பனை பிராந்தியம்தான். மொழியின் கனவு வெளிதான். அவன் ஆசைகள் கனவில் திரண்டவை. அவன் துயரங்கள் கனவில் முளைத்தவை. அவன் காதலிகள் கனவில் பிறந்தவர்கள். “பிரபஞ்சனின் சுமதி, ஜானகிராமனின் யமுனா, வண்ணதாசனின் தனு என என்னுடைய காதலிகளை எல்லாம் பறித்துக் கொண்டு கோபுர உச்சிக்குச் சென்றது இந்தக் குரங்குதான்” என்று சொல்வதன் வழியே தன் இழப்பை காலத்தாலும் இடத்தாலும் பிணைக்கப்பட்டிருக்கும் உலகுக்கு அப்பால் கொண்டு செல்கிறான். உடனே அவன் இழப்பு நிரந்தரமாகிவிடுகிறது. இழப்பு நிரந்தரமாகுந்தோறும் வலியும் நிரந்தரமாவதை அவன் கையறு நிலையில் கவனித்தபடியிருக்கிறான். 

“யுகத்தனிமைகள்
கல்மதிலின் மேல் அமர்ந்து
வெறித்துப் பார்த்திருக்க
நீச்சலடித்துத் திளைக்கிறார் [மௌனி].
குபராவும் பிச்சமூர்த்தியும்
காலையில் குளித்துக் கொண்டிருந்த
பெண்களை பார்த்து
ஓரக்கண்ணிலேயே விலக்கி
அங்கிருந்து கிளம்பிவிட்டனர்
கூந்தலின் ஈரத்தைத் துவட்டியவளின்
ஒரு துளிபட்டு
மதியத்தில் மண்டபத்தில் மயங்கிச்சரிந்த
லா ச ராமாமிருதம்
அதன்பின்னர் எழுந்திருக்கவேயில்லை”

4.

ஷங்கருடைய நெடுங்கவிதையில் இடம்பெற்றுள்ள ஆளுமைகளை கவனிப்பது ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை வரைந்தெடுக்க உதவி புரியலாம். குறைந்தபட்சம், கதைசொல்லி யார் என்பதை வரையறுக்க உதவலாம். எழுத்தாளர்கள் போலவே வ.வே.சு ஐயர், பெரியார் என்று சமூக ஆளுமைகளும் இடம்பெற்றிருக்கிறார்கள். இத்தகையோர் இயல்பாகவே காலம் மற்றும் இடத்தின் அடையாளச் சின்னங்களாய் நிலைத்துவிடுகிறார்கள். சாராம்சத்தின் வெளிப்பாடாகிறார்கள். ஷங்கருடைய ஓரு பழைய கவிதை வரியையே நினைவில் எடுத்து சொன்னால், “[மெதுவாய்] ஒரு செவ்வியல் பிரதியாய்” உருமாறிவிடுகிறார்கள். ஒரு செவ்வியல் பிரதிக்கு நேர்வது மாதிரியே வெவ்வேறு வாசிப்புகளுக்கு ஆளாகிறார்கள். புதிய புதிய அர்த்தங்களை பிறப்பிக்கிறார்கள். அவ்வரிசையிலேயே ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இந்நெடுங்கவிதையில் ஒரு முக்கியமாக பாத்திரமாய் வருகிறார்.  

“வசந்த விஹாரில்
ஜே. கிருஷ்ணமூர்த்தி
ஒரு டெசர்ட் ரோஸ் செடியாகப் பூத்திருக்கிறார்“

தனிமனித விடுதலையை முன்வைத்த நவீன ஆன்மீக பேச்சாளர்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். மதத்தின்,சடங்குகளின் அழுத்தம் இல்லாமல் ஒரு மனிதன் தன்னை அறிவதன் வழியாக விடுதலை அடைய முடியும் என்பது அப்போதைய பொது நம்பிக்கை. ஓஷோவும் அந்த நம்பிக்கையை பேசியவரே. அக்காலத்தில்தான் “மனம்” (Mind) , “தன்னுணர்வு” (Consciousness) முதலிய சொற்கள் புதுவகையான கதையாடல்களை பிறப்பித்தன. அவையே வெற்று விளம்பரங்களாக மாறியது இன்னொரு கதை. சமீபம் வரையில்கூட “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” போன்ற தலைப்புகள் தமிழிலேயே பிரபலமாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளலாம். 

விழிப்புநிலையே (Awareness) அந்த அலையின் ஆப்த வார்த்தை. அபத்த நகைச்சுவை வாயிலாக முல்லா நஸ்ரூதினை விழிப்பின் நாயகனாகவும், சமயங்களில் எதிர்-நாயகனாகவும் ஓஷோ கட்டமைக்கிறார். (இகவடை பரவடையிலும் முல்லா வருகிறார்). விழிப்புநிலையை லட்சியமாக முன்வைத்த மதச்சார்பில்லாத ஆன்மீகம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. நிறுவனமயமாகி பல்வேறு நிழல் காரியங்களின் முகமாகக்கூட மாறியது. எனினும் அதுவொரு அழகிய கனவு என்பதில் சந்தேகம் இல்லை.  மதம், கலாச்சாரம், அரசியல் முதலியவற்றோடு தொடர்பில்லாமல் மனிதனை ஒரு தனித்த இருப்பாக நிலைநிறுத்த முயன்றது.  கீழைத்தேய நாடுகளிலிருந்து ஆன்மீக ஆசிரியர்கள் தோன்றினாலும் அதற்கு மேற்கத்திய அறிவு மரபோடு மிக நெருக்கமான தொடர்புண்டு. அதன் மொழியே பிராய்டியத்திற்கு அணுக்கமானது போல தோற்றம் காட்டுவதுதான். உளவியல், ஆன்மீகம் இரண்டின் கலவை எனலாம். 

இன்னும் சற்று பின்னோக்கி பார்த்தால், சிந்திக்கும் தனிமனிதன் எனும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால உருவகம் இல்லாமல், ஓஷோ போன்றோர் தம் பரப்புரைகளை மேற்கொண்டிருக்கவே முடியாது. கீழை மரபின் துறவின் விடுதலையின் ஓர் அம்சத்தை நவீன வாழ்க்கைக்குள் செலுத்த முயன்றார்கள். எனில், வரலாற்றின் மிக முக்கியமான சந்திப்புகளில் ஒன்று அது. நவீன ஆன்மீகம் பல்வேறு காரணங்களால் உத்தேச நோக்கத்தை முழுமையாக அடையவில்லை. நிறுவனமயமாதல் ஒரு காரணம். மனித மனத்தினை தனித்த இருப்பாக கருதும் போக்கு சிந்தனையில் பின்னுக்கு போனது இன்னொரு காரணம்.

ஷங்கருடைய நெடுங்கவிதையில், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கடைசி உரை குறிப்பிடப்படுகிறது. அவர் மரணம் இந்த ஆக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகியிருக்கிறது. அதிலிருந்து நாம் ஒரு துணைக் கதையை பிண்ண முடிகிறது. 

தன்னை தனிமனிதனாக உணர்ந்த கதைசொல்லி ஆசைகளோடும் துயரங்களோடும் போராடினான். வாசித்த நூல்களோடு போராடினான். விழிப்பு பற்றிய லட்சியத்தில் தீரா தனிமையோடு போராடினான். இருப்புடன் போராடினான். இழப்புகளுடன் போராடினான். தன்னை காப்பாற்ற முடியாமல் தவித்தான். ஒவ்வொரு மார்கழியிலும் அனாதையாக இறக்கும் நாய்க்குட்டிகளிடம் “நான் உங்களைக் காப்பாற்ற இயலாதவன்/ சின்னஞ்சிறு ஈரமூக்கால்/ இந்த இடத்தை உபாசனை செய்பவர்களே/நான் உங்களைக் காப்பாற்ற இயலாதவன்” என்று அவன் சொல்வது தனக்குத் தானே சொல்வது போலவே கேட்கிறது. ஆம். இன்னொரு மனிதரே இல்லாதது போல, அவன் ஓயாமல் தனக்கு தானே பேசிக் கொண்டிருக்கிறான். பதில் தெரியாத கேள்விகளை ஏதோவோர் நம்பிக்கையில் தன்னிடமே கேட்கிறான். அதனால்தான் அம்மா சொல்கிறாள். “மணி, நீ எல்லாவற்றையும் மனசாலேயே தொடங்கி மனசாலேயே முடித்துவிடுவாய்.”. மனம் மட்டுமே மிச்சமிருக்கிறது என்பதும் அதுவும் தனக்கு நண்பன் இல்லை என்பதும் அவனுக்கு உள்ளூர தெரியாமல் இல்லை. வளர்ப்பு மிருகத்தை அதட்டுவது மாதிரி மனதை அதட்டிக் கொண்டேயிருக்கிறான். மனம் மீட்பின் வழி இல்லையோ எனும் சந்தேகமும் அவனுக்கு இருக்கிறது. அப்படியாக ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு ஓர் இரங்கற் பாடல் எழுதுகிறான் – ஏக்கமான விடைபெறலாய்; துர்சகுனத்தின் அறிவிப்பாய்; இன்மையின் பெருமூச்சாய்.

ஜே கிருஷ்ணமூர்த்தி தன் கடைசிப் பேச்சு
இதுதான்
என்று அறிவித்தபோது
பறவைகள் கரைந்திரைந்தன
காகங்களின் கரும்படங்களானது
அடையாற்று வானம்
நாகலிங்கப் பூக்கள் அனைத்தும்
சட்டென தன் தைலப்புட்டியை உடைத்து
அபூர்வமான நறுமணத்தை
நகரெங்கும் பரப்பியது
ஒரு முக்குளிப்பான்
சட்டென்று தண்ணீருக்குள் மூழ்கி
அங்கிருந்து வெளியேறியது.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் முகம்
கண்ணாடியானது
கண்கள் கபாலத்தின் துளைகளாகின

5.

ஷங்கருடைய பிற ஆக்கங்களைப் போல, இந்நெடுங்கவிதையும் இருத்தல் சார்ந்த குழப்பங்களாலும் துயரங்களாலுமே நிறைந்துள்ளது. தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்தவனாகவும், ஆனால் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி தெரியாதவனாகவுமே ஷங்கர் மனிதனை கற்பனை செய்கிறார். இருத்தலியத்தின் மொழியில் சொன்னால் அன்னியமாதலும் தனிமையும் ஷங்கரின் கவிதையில் காணக் கிடைப்பவை. கவிதை நெடுக தனிமை வெவ்வேறு விதங்களில் சுட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மனிதன் சார்ந்ததாக இல்லாமல் மானுட இருப்பின் தவிர்க்க முடியாத அம்சமாக தனிமை உருமாறியிருக்கிறது. “சத்தத்தை அரவம் என்று சொன்னவன்தான்/ முதல்முதலாய் தனிமையை உணர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும்” என்று இயல்பாக உள்ளத்திலிருந்து சொல்லுக்கும் சொல்லிலிருந்து முடிவின்மைக்கும் தனிமையை கடத்துகிறது. 

“நான் என் அம்மாவிடமிருந்து
பிரிந்துவிட்டதை
நீ தனி
நீ தனி
நீ தனி
என்று தண்ணீர் போதிக்கிறது”

தனிமையே மனிதனின் முதல் அறிதல் என்பது போல பிறப்பிலிருந்தே தனிமையை அடையாளம் காட்டுகின்றன ஷங்கரின் வரிகள். இந்த மொத்த கவிதையும் –கதைசொல்லியின் நீண்ட வாழ்க்கையும்- தனிமையிலிருந்து விடுபடுவதற்கான எத்தனம் மற்றும் தோல்வி என்றே சொல்லிவிடலாம். 

மரம் பொதுவாய் தனியாய் இருக்கிறது
பூ பொதுவாய் தனியாய் இருக்கிறது
நிலவு பொதுவாய் தனியாய் இருக்கிறது
” 

நமக்கு நன்கு பழக்கமான இரண்டு வழிகளில் தனிமையை தொலைப்பதற்கான முயற்சிகள் இக்கவிதையில் நடக்கின்றன. முதல் வழி, ஆதி காலம் தொட்டே இருப்பது. இன்னொரு உள்ளத்துடனும் உடலுடனும் பிணைத்துக் கொள்ளுதல். காதலின் ஏக்கத்தின் முறையீடுகள் கவிதை முழுக்க இருக்கின்றன. பல பெண்கள் வந்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பகுதி முழுக்க வெறும் பெயர்களாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதான நேசமும் மோகமும் பெரும் பித்துடன் முன்வைக்கப்படுகின்றன. 

நினைக்கும்தோறும் கொட்டும் விஷமே/மரகதமே மையிருட்டே/தீயவளே தீஞ்சுவையே/அழலே /அழலை/அருளாய் தந்துவிட்டுப் போன அமிழ்தே” போன்ற வரிகள் இதை ஒரு காதல் காவியமாகவும் மாற்றுகின்றன. தன்னையே அழிப்பது போன்ற மாளா வேட்கையுடனே இன்னொரு உடலுனான உறவு சுட்டப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு உறவும் நாயகனுக்கு கசந்தபடியும் உள்ளது. எல்லோருமே ஞாபகங்களாக மாறுகிறார்கள். எண்ணுந்தோறும் ஞாபகங்கள் மனதில் காயங்களாய் திறக்கின்றன. கடைசிவரை அவனோடு தனிமை மட்டும் மிச்சமிருக்கிறது. “மறதி என்பது / உன்னை நினைத்து / தலையணையின் மூலையை உறக்கத்தில் கசக்கும் / எனது மலட்டுத் தனிமை” என்கிறான் அவன்.

தனிமையிலிருந்து விடுபடுவதற்கான இரண்டாவது மார்க்கமாக தன்னிலையழித்தல் தோன்றுகிறது. பெயர்களையும் அடையாளங்களையும் தன்னிலிருந்து மட்டுமில்லாமல் வரலாற்றிலிருந்தே ரத்து செய்வதற்கான விருப்பம் இந்த ஆக்கத்தில் தென்படுகிறது. ஒருவகையில் தனிமனிதனை வரலாற்றிலிருந்தும் வரலாற்றை கட்டமைத்துள்ள நாயகர்களிடமிருந்தும் விடுதலை செய்வதற்கான முனைப்பு என்றும் அதை சொல்லலாம். “நான்” எனும் சுய உணர்வை மட்டுமில்லாமல் அந்த சுயஉணர்வை உருவாக்கும் அனைத்தையும் ரத்து செய்யவே ஷங்கர் விரும்புகிறார். வரலாறு தோறும் நாயக பிம்பங்கள் வழியாக “நான்” எனும் அடையாளமும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. விளக்கின் அடியே தோன்றும் இருள் போல் தவிர்க்க முடியாத ஓர் உபவிளைவு இது.

பாரதியின் தனிப்பாடல்களில் ஒன்றான “மது”வின் பாதிப்பை வெளிப்படுத்தும் ஒரு பகுதி இக்குறுங்காவியத்தில் இருக்கிறது – மறு உருவாக்கமாய். தன்னிலையழிக்கும் மந்திர வாசல். மதுவன்றி வேறென்ன? படைப்பூக்கம் மிளிரும் மிக அழகிய பகுதிகளில் ஒன்று. உச்சாடனம் போன்ற வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. “இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையில் மது பாதாளத்தில் நுரைத்துக் கொண்டிருக்கிறது” என அறிவிக்கிறது.

தமிழில் மது பற்றி பல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இளங்கோ கிருஷ்ணனின் “ஒரேயொரு மது போத்தல்” கவிதை வரை பல உதாரணங்கள் சொல்லலாம். மகிழ்ச்சியான சாவுக்கான பட்டியலில் நகுலன் “ஒரு புட்டி பிராந்தி”யையும் இணைக்கத் தவறவில்லை. தியானம், களியாட்டம், தன்னிரக்கம், மறதி, அத்துமீறல் இவை எல்லாவற்றுக்குமான பாலமாக மதுவை நவீன கவிஞர்கள் மாற்றியிருக்கிறார்கள். மது “நான்” எனும் அடையாளத்தை அழிக்கிறது. மது, ஒரு குட்டி மரணமாகவே பொருள்படுகிறது. மரணத்துக்கான தவிப்பை வாழ்வே தன்னுள் கொண்டிருக்கிறது. நிறைவின்மையும் மனிதனின் ஆதார இயல்பாகவே இருக்க வேண்டும் – தனிமைப் போன்றே. 

மதுவின் பாதை பாரதியிலிருந்து துவங்குகிறது. பாரதியின் கவிதையில் போகி, யோகி, ஞானி மூவரும் மதுவை பாடுகிறார்கள். இலக்கியவாதியை இம்மூவரில் யாருடன் அடையாளப்படுத்துவது என்பது எப்போதுமே தீராத குழப்பம் தான். 

பாகுபாட்டின் வரலாறு மது” என்கிறது ஷங்கரின் கவிதை. வரலாற்றினை ஒரு திட்டம் போல பார்ப்பதற்கே நாம் பழகியிருக்கிறோம். காலத்தை ஒழுங்கு செய்யும்போது நோக்கத்தை கற்பிக்காமல் இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு வரலாற்று நாயகரும் அந்த நோக்கத்தை நிறைவு செய்பவராகவோ அல்லது புதிய நோக்கத்தை பிறப்பிப்பவராகவோதான் இருக்கிறார். நம்முடைய வரைபடம் தெளிவான கோடுகளில் அவர்களை வரையறுக்க, மது அனைத்து திட்டங்களையும் கலைத்து போடுகிறது. மதுவின் ஒழுங்கற்ற வெளியில் வரலாற்று நாயகர்கள் பிடிமானம் இல்லாமல் நழுவுகிறார்கள். அவர்கள் தரிப்பது மதுவின் இடைவெளியிலேயே. எனில், வரலாறு என்பது இணைப்பா அல்லது இடைவெளியா ? நாயகன் என்பவன் நியதியா அல்லது விலகலா? தெரியவில்லை. எனவே அவ்வப்போதேனும் வேண்டும் மது நமக்கு – வரலாற்றின் அடையாளத்தின் எடையை உதற; நாயகர்களின் சிலைகள் இல்லாத பிரதேசத்தில் வசிக்க.  

மது மதுவின்மை
இடைவெளியில் பிறந்தவன் காந்தி
மது மதுவின்மை
இடைவெளியில் பிறந்தவன் ராமானுஜன்
மது மதுவின்மை
இடைவெளியில் பிறந்தவன் நாராயணகுரு
மது வள்ளலார் சொன்ன ஏழுதிரை
மது வள்ளலார் வசித்த ஏழுகிணறு
மது கபாடபுரத்தில் நாம் வாசித்த ஆழ்நதி
மதுவின்மைக்கும்
மதுவுக்கும் உள்ள இடைவெளி
மதுதான்
சுரக்கும் பாழின் சூட்சுமம் மது
யாரும்வேண்டாத நேசத்தின் கசப்பு மது
தீண்டப்படாத முலைகள் எல்லாம்
தேக்கி வைத்திருக்கும்
கதகதப்பு மது

6.

இதுவரை வரலாற்றில் எப்போதேனும் “கவனத்தை தக்க வைப்பது” இவ்வளவு பெரிய சவாலாக இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பிரவுசரில் எண்ணற்ற இணைய பக்கங்கள் திறந்திருப்பது போலவே நம்முடைய மூளையும் எல்லா திசையிலும் திறந்து கிடக்கிறது. கலை இலக்கியம் தீவிரமான ஈடுபாட்டை கோருவது. பிளவுபட்ட கவனத்தில் தரிக்க முடியாதது. ஒருவகையில் தீவிர உறவினாலேயே அதன் இருப்புக்கு அர்த்தமே வருகிறது. அதனால்தான் மதத்தின் இடத்தை இலக்கியம் எடுத்துக் கொள்வதாக மார்க்சியர்கள் விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள். மதம், இலக்கியம் இரண்டிலுமே நம்பிக்கைக்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது. தீவிரத்தன்மை நம் காலத்தின் பற்றாக்குறை என்றால் இலக்கியம் அதை முழுமையாக தன்னில் தேக்கவே முயலும். எதுவெல்லாம் யதார்தத்தில் குறைகிறதோ அதுவெல்லாம் இலக்கியத்தில் மிகும் என்பார்கள். ஏனெனில் தன் காலத்தின் பொது போக்குக்கு எதிராக இருக்க வேண்டியது இலக்கியத்தின் பிடிவாதம் அல்ல; அடிப்படை செயல்பாடு.   

நெடுங்கவிதை எனும் வடிவமும் தன்னளவில் ஒரு செய்தியை சொல்கிறது. முகநூலிலும் வாட்சாப்பிலும் ஒரே தொடுகைக்குள் கடந்துவிடும்படியாக -வாழ்த்து அட்டைப் போல- கவிதைகள் பெருகும் காலத்தில், கவிஞன் அதற்கு நேரெதிர் திசையில் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் தன்னை காவிய ஆசிரியனாக கற்பனை செய்வதும் அதன் தொடர்ச்சியே.  தன் வடிவத்தின் மேல் வெளியேயிருந்தும் படிகிற சாயைகளை கவிஞன் உதற வேண்டியது அழகியல் தேர்வே. ஆனால் எல்லா அழகியல் தேர்வுகளும் வாழ்க்கை சார்ந்தவையே.

மறுகண்டுபிடிப்பு போல ஷங்கர் தன் வழக்கமான கவிதை மொழியிலிருந்து வேறுபட்டிருக்கும் இடங்கள் இந்நெடுங்கவிதையில் உள்ளன. கடந்த இருபது வருடங்களில், ஷங்கர் இதுவரை எட்டு கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். அவர் கவிதை உலகோடு அறிமுகம் கொண்டவர்கள் “இகவடை பரவடை”யில் பரிச்சயத்தையும் வித்தியாசத்தையும் ஒரே சமயத்தில் உணரக் கூடும். அவருடைய ஆதாரமான அக்கறைகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால் வெளிப்பாட்டில் விஸ்தீரணுக்கான எத்தனம் தெரிகிறது. காட்சி சித்திரங்களையே அதிகம் உருவாக்கும் ஷங்கர், இந்த நூலில் ஒலியமைப்பு சார்ந்தும் கவனம் கொண்டிருக்கிறார். சில பகுதிகள் பாடல்களுக்கு நெருக்கமாக அமைந்திருக்கின்றன. “தீ அறியும்/ தீ ஆடும்/ தீ விழுங்கும்/ அதனால் தீ வாழ்க/அதனால் தீ வாழ்க” என்று  துதிகள் போலவும் ஒலிக்கின்றன. வெளியே இருந்து மட்டுமில்லாமல் உள்ளேயிருந்து படியும் சாயைகளையும் ஷங்கர் கலைய முயன்றிருப்பது இன்னொரு அழகியல் தேர்வு. வாழ்க்கைத் தேர்வு.

7. 

இந்த நெடுங்கவிதையில் ஒரு முக்கியமான விடுபடல் அல்லது இடைவெளி வாசகர்களை உறுத்தாமல் இருக்காது. மற்றமைக்கான இடம் குறைவாகவே இருக்கிறது. வெவ்வேறு நபர்கள் வருகிறார்கள். மிருகங்கள் வருகின்றன. சூழல்கள் வருகின்றன. காலமாற்றம் இருக்கிறது. கதைசொல்லியும் தன்னை சிதறியடிக்க முயற்சிக்காமல் இல்லை. தன்மைய நோக்கை அகற்ற பல முயற்சிகள் நடக்கின்றன. எனினும் மற்றமையின் குரல் அழுத்தமாக எங்குமே பதிவாகவில்லை. தன் இருப்பு பற்றிய விசாரனையே இந்த நெடுங்கவிதையின் பலம். அதே நேரம், இருப்பின் மீதான பிடிமானமே எல்லையாகவும் படுகிறது. எதை மறக்க விரும்புகிறோமோ அதுவே சதா நம் பேச்சை ஆக்கிரமிப்பது போல. வலுவாக எழுதப்பட்டிருக்கும் அம்மாக்கூட கதைசொல்லியுடனான உறவின் வழியாகவே நிலைநிற்கிறார்; தனித்த உயிராக அல்ல. 

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி, இன்னொரு மனிதரே இல்லாதது போலவே அவன் பேசுகிறான். தன் இருப்பையும் அலைக்கழிப்புகளையும் விசாரிக்க முடிகிறவனால் தன் இன்மையை -தான் இல்லாத உலகை- நினைத்தே பார்க்க முடியவில்லையோ என்று சந்தேகம் வருகிறது. தன்னை சாராத மற்றமையை அவனால் உருவகிக்க முடியவில்லை. எல்லாமே அவன் மனதின் நிழல்களாகவே இருக்கின்றன. மனதின் குரலே எல்லா பக்கமும் கேட்கிறது.  மற்றமை வழியாகவே, காவியத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றான, உணர்வு சமநிலை தோன்ற முடியும். இந்த நெடுங்கவிதை இழந்திருப்பது அதையே.

இவ்வளவு ஆர்வமான ஒரு முயற்சியில், விஸ்தரீனத்தில் இன்னமும் கூட நிறவேறுபாடுகள் இருந்திருக்கலாம்.  தன் தலைப்பிலிருக்கும் விளையாட்டுத்தனத்தை முழுமையாக தக்கவைக்க அது போராடுவதாகவே படுகிறது. “Size matters” போன்ற பொருத்தமில்லாத நகைச்சுவைக்கு வேறு காரணத்தை யோசிக்க முடியவில்லை. “நவபாஷாணம்” கவிதையில் காண முடிகிற பாரமில்லாத விளையாட்டுத்தனம் இந்த ஆக்கத்திலும் இருந்திருக்கலாம். 

சுவாரஸ்யமான விஷயம் – மேற்சொன்ன விமர்சனத்தை நகுலன் பேரிலும் சொல்ல முடியும். நகுலனை நினைவூட்டும் வெவ்வேறு பகுதிகள் இதில் இருக்கின்றன. “இருப்பு உண்டா/இருப்பு இல்லையா” என்று ஒரு வரி வருகிறது – நகுலன் புத்தகத்திலிருந்து தாவி வந்தது போல.  வெவ்வேறு தமிழ் எழுத்தாளர்கள் உலவும் ஷங்கரின் இவ்வுலகில் நகுலனின் பெயர் இல்லாமல் இருப்பது பெரிய வியப்பு. இன்னொருவகையில் அது பொருத்தமானதுக் கூட. இந்நெடுங்கவிதையையே நகுலனுக்கான பாடல் என்று நம்மால் சொல்ல முடிகிறது. 

8.

“இகவடை பரவடை”யின் கடைசி பகுதி ஆச்சர்யகரமானது. ஒருவிதத்தில் இருத்தல் சார்ந்த தன்மைய நோக்கிலிருந்து கதைசொல்லி தன்னை விடுவிக்கும் இன்னொரு முயற்சி எனலாம்.  எந்த பிறப்பின் கதையையும் போல நதிக் கரையிலேயே துவங்கும் இக்கவிதை கடைசியில் நீரெல்லாம் சாம்பல் கலந்து கருப்பாக மாறும் சித்திரத்தை அளிக்கிறது.  திருநெல்வேலியை உதறி நகரத்துக்கு வந்த நவீன தனி மனிதன், மனதின் மீட்பின் வழியை கைவிட்டு அல்லது தன் நம்பிக்கையால் தானே கைவிடப்பட்டு, இறுதியில் அரசியல்மயப்பட்டவனாக மாறுகிறான். இந்தியாவில் ஒரு பாதை வட்டமாய் சுற்றி முடிகிறது. “சிவந்து தொடங்கிய பானையின்/தொழில்நுட்பம்/கருப்பில் முடிந்தது நாகரிகம்” என்று நாகரீகத்தின் மாற்றுவதை சுட்டுவதுடன் தொடர்ந்து அதன் சரிவுகளும் குறிப்பிடப்படுகின்றன. 

இந்து மதத்தின் பழமைவாத மற்றும் அடிப்படைவாத குரல்கள் அதிகாரத்தில் இருக்கும் சூழல் இது. நவீன லட்சியங்கள் வெளிப்படையாகவே தாக்குதலுக்கு உள்ளாகிற நேரத்தில் ஷங்கருடைய கதைசொல்லி, தனிமனித தோல்வியை பாடுவதிலிருந்து ஒரு நாகரீகத்தின் தோல்வியை உரத்த குரலில் பாடுகிறவனாக மாறுகிறான். அவன் விடுபட விரும்பிய வரலாறு, மேலும் திருபுற்று ஓர் இரும்புச் சங்கிலியாக எல்லோர் கழுத்திலும் அணிவிக்கப்படுகிறது. அப்படியாக இந்த நீண்ட கதை ஓர் அபய ஒலியோடு முடிவை நோக்கி செல்கிறது. நம் காதுகளிலும் குயிலின் குரல் கேட்கிறது. ஆனால் அது வெளிச்சத்தை அறிவிக்க வரவில்லை.

வறுமைக்கும் வெப்பத் தாக்குதல் மரணங்களுக்கும்
ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் பால்யவயது திருமணங்களுக்கும்
ஒரு இட்லியை விட மலிவாக இணையத்தரவு கிடைப்பதற்கும்
அதிகரிக்கும் மதக்கலவரங்களுக்கும் உள்ள தொடர்பை
புரிந்து மொழிபெயர்த்து விளக்குவதற்கு
என் கவிதை சிரமப்படும்போது
குயிலின் குரல் உரக்கக் கேட்கத் துவங்கியுள்ளது

பழைய செங்கோல் ஒன்றுடன் மடாதிபதிகள்
எமது நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது
குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது

O

இகவடை பரவடை

குறுங்காவியம்

விலை : ரூ. 140

வேரல் புக்ஸ் வெளியீடு

டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.

தொலைபேசி எண் : 087545 07070, 9578764322

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.