அலெக்சாண்டர் நெஹாமஸ் (Alexander Nehamas) (பிறப்பு: மார்ச் 22, 1946) தத்துவ அறிஞர், எழுத்தாளர். ப்ரின்சிடன்(Princeton) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தத்துவம், மானுடவியல், இலக்கியம் ஆகியவற்றைக் கற்பிக்கிறார். கிரேக்க தத்துவம், அழகியல், இலக்கியக் கோட்பாடுகள் இவரின் முதன்மையான ஈடுபாடுகள். “நீட்ஷே: இலக்கியமென ஒரு வாழ்வு(Nietzsche: Life as Literature)” மற்றும் “வாழும் கலை: பிளாட்டோ முதல் பூக்கோ வரையான சாக்ரடீய பிரதிபலிப்புகள்(The Art of Living: Socratic Reflections from Plato to Foucault)” இவருடைய முக்கியமான நூல்கள்.
கலை சார்ந்த அழகியல் மதிப்பீடு என்பது ஒரு அறுதியான முடிவு இல்லையென்றும், அதிலுள்ளது உரையாடலை முன்னெடுக்கும் தன்மையும் ஊகமும் தானென நெஹாமஸ் இக்கட்டுரையில் முதன்மையாக வாதிடுகிறார். அத்துடன் சமூகவியல் தளத்தில் நாம் மேற்கொள்ளும் அழகியல் மதிப்பீடுகளை சுவாரஸ்யமான உதாரணங்களின் வழியாக கலை மதிப்பீட்டுடன் ஒப்பிட்டு ஒரு புதுமையான பார்வையை முன்வைக்கிறார். கலைப்படைப்பிற்கு நிகராக அதன் விமர்சனமும் மதிப்பீடும் எவ்வளவு விரிவான தளத்தில் இயங்குகிறது என்று விளக்கி, அதன் தொடர்ச்சியாக நம் அழகியல் மதிப்பீடுகளின் பின்னனியில் இருப்பதும் ஒருவகை கலையுருவாக்கம் தான் என்று அவதானிக்கிறார். அழகியல் மதிப்பீடுகள் எவ்வாறு ஒரு ரசனைப்பாணியை கட்டமைக்கிறதென விவரிப்பதோடு, நமக்கென தனித்துவமான ஒரு பாணியின் தேவையையும் இந்தக் கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
– ஜனார்த்தனன் இளங்கோ
நம் அழகுணர்ச்சியைப் பற்றியே என்னுடைய ஆர்வம் இருக்கிறது. நாம் எதை அழகாகக் கருதுகிறோம் என்பது இங்கு முக்கியமில்லை. மாறாக நாம் ஒன்றை அழகாகக் கருதும் போது – அதாவது நம்மை நிலைகுலையச் செய்து, காலத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் போது- அங்கு என்ன நிகழ்கிறது என்பதே என் பிரதான அக்கறை. ஷோப்பனவரின்(Schopenhauer) வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால்,
“நாம் எப்போதும் தேடியபடி இருக்கும் அமைதியோ, ஆசைகளின் வழியாக நம்மை விட்டு அகன்றபடி இருக்கிறது. ஆனால் அழகான ஒன்றை எதிர்கொண்ட கணத்தில் அதே அமைதி தானாகவே நம்மை வந்தடைகிறது. அத்தகைய ஒரு துன்பமில்லா தெய்வீக நிலையை எபிகியூரஸ்(Epicurus) பெரும் பொக்கிஷமாக கருதினார். அக்கணத்தில் நம் ஆன்மா அதன் அல்லல்களில் இருந்து விடுதலை பெறுகிறது. நாம் மகிழ்ச்சியால் ஆட்கொள்ளப் படுகிறோம். இக்சைனால்(Ixion) கட்டுண்டு முடிவில்லாமல் சுழல்கிற தீச்சக்கரம் அக்கணம் நிலைகுத்தி நிற்கிறது.”
நாம் சமீபமாக கலை சார்ந்த விஷயங்களில் ஏன் அழகைக் கைவிட்டுவிடுகிறோம் என்பதை ஷோப்பவனரின் இக்குறிப்பு ஒருவாறு விளக்குகிறது எனலாம். நாம் அழகைக் கைவிட்டுவிட இது ஒன்று மட்டுமே காரணமில்லை. வெளிப்படையான அரசியல் நிலைபாடுகள் நிச்சயம் இன்னொரு காரணம். இவையெல்லம் தாண்டி அழகு என்பது ஒருவகையில் உடனடியானது, எதிர்கொண்ட மாத்திரத்தில் நம்மை அது அடித்து வீழ்த்துகிறது என்று நினைக்கிறோம். ஒரு கலைப் படைப்பிற்கும் நமக்கும் இடையிலான உரையாடலின் முடிவில் நிகழ்வது தான் மதிப்பீடு என்றும் நினைத்துக் கொள்கிறோம். அத்துடன் அழகியல் மதிப்பீட்டை ஒரு இலக்காக, கலை விமர்சனத்தின் முடிவாகக் கருதுகிறோம். அர்னால்ட் ஐசன்பெர்கில்(Arnold Isenberg) இருந்து மேரி மதர்சில்(Mary Mothersill) வரை பல புகழ்பெற்ற தத்துவ அறிஞர்கள் இவ்வாறான பார்வையையே கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கலைப்படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் அறுதியான ஒரு மதிப்பீட்டிற்கு வர இயலாது என்பது உண்மை. ஆகையால் கலை விமர்சகர்கள் ஒரு படைப்பின் முழுமுற்றான மதிப்பீட்டிற்கு முனைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ‘ரசனைசார் மதிப்பீடு’ என்று இம்மானுவேல் கண்ட்(Immanuel Kant) குறிப்பிடுவதை நமக்கும் கலைப் படைப்பிற்கும் இடையிலான அழகியல் உரையாடலின் உச்சமாக, ஒரு தீர்ப்பாகக் கருதுகிறோம். இது ஏற்றுக்கொள்ளத் தக்கது போலத் தெரிந்தாலும் தவறு என்றே நினைக்கிறேன்.
இந்த நிலைபாடு அழகியல் சார்ந்த உரையாடல்களில் இடம்பெறும் சொல்லாட்சிகளுக்கு(aesthetic vocabulary) வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். உதாரணமாக ஓவியர் ஹான்ஸ் ஹொஃப்மனின்(Hans Hofmann) நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனத்தில் மைக்கேல் ப்ராய்ட்(Michael Fried) இம்மாதிரியான விவரனைகளை உபயோகிக்கிறார்: ‘ஆச்சரியமான கதகதப்பான சாம்பல்நிறப் பழுப்பு’, ‘ஆற்றல் நிரம்பிய நீல நிறக் கீற்று’, ‘துடிப்பான வலிமை மிக்க’, ‘அழகான’, ‘கதகதப்பான தனித்துவமான வண்ணங்கள்’, ‘ஆற்றல் மிக்க, நளினமான, நுட்பமான அறிவு’ மற்றும் ‘ஆராயும், விடுதலையளிக்கும் தன்மை’. மொத்தத்தில் நியூயார்க் நகரில் அம்மாதத்தில் நடைபெற்ற மிகச் சிறந்த, தவறவிடக்கூடாத நிகழ்ச்சி இதுவென்று ப்ராய்ட் தன் விமர்சனத்தில் அறிவிக்கிறார்.
பொதுவாக விமர்சனம் நாம் ஒரு படைப்பை அனுகுவதா வேண்டமா என்று தெரிவிக்க முயல்கிறது. விமர்சனத்தில் இடம்பெறும் சொற்கள் மட்டுமல்லாது அந்த விமர்சகரின் மேல் நாம் கொண்டிருக்கும் அபிப்பிராயமும் நம்முடைய தெரிவில் பங்களிப்பாற்றுகிறது. ப்ராய்டின் ரசனைகளில், பார்வைகளில் உங்களுக்கு உவப்பில்லை என்றால் அவர் பாராட்டியதன் பொருட்டே நீங்கள் அந்த நிகழ்வைத் தவிர்த்துவிடுவீர்கள். ஒரு படைப்பைப் புரிந்து கொள்ள படைப்பாளியின் பாணியை(style) நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பது போல ஒரு விமர்சகரின் பரிந்துரைகளை கணக்கில் கொள்வதற்கு அவரைப்பற்றிய பரிச்சயம் நமக்குத் தேவையாக இருக்கிறது.
ரசனைசார் மதிப்பீடுகள் கருத்துக்களால் வழிநடத்தப் படுவதில்லை என்று கண்ட் கருதினார். இதை மறுபரிசீலனை செய்து ஐசென்பெர்க் இப்படிக் குறிப்பிட்டார்: “ஒரு கலைப் படைப்பை அனுகும் முன்பு ‘இந்த விவரனை உண்மையென்றால் அப்படைப்பை இன்னும் நன்றாக ரசிப்பேன்’ என்று ஒருவரை நினைக்கச் செய்யும் ஒரு ‘தூய’ விவரனை விமர்சன உலகில் இல்லை.” ஒரு ‘தூய’ விவரனையின் வழியாக எந்த ஒரு படைப்பும் அழகாக இருப்பதாகக் கருதப்படுவதில்லை. அதுபோல் நேர்மறையான அழகியல் விவரனைகள் அடங்கிய ஒரு விமர்சனத்தாலும் ஒரு படைப்பு அழகாக இருப்பதாகக் கருதப்படுவதில்லை. அந்த விமர்சகரின் கூற்று தவறாக இருக்கலாம் என்பதால் இல்லை. ஏனென்றால் ப்ராய்டின் ரசனையில் உங்களுக்கு உவப்பில்லை என்றால் “ஆற்றல் நிரம்பிய நீல நிறக் கீற்று” என்று அவர் சரியாகக் குறிப்பிட்டாலும் அந்த விவரனை உங்களுக்கு வெறுப்பூட்டவே செய்யும். ஒரு மலரின் ஓவியத்தைக் குறித்த விவரனையே இவ்வளவு பலவீனமாக இருக்கும்போது, ஒரு கொடூரமான மரண தண்டனையைப் பற்றிய விவரனையால் நிச்சயம் நம்முடைய ஒப்புதலைப் பெற முடியாது.
மதிப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட வகை அழகியல் அம்சங்களைச் சார்ந்தே இருக்கிறது என்னும் கருத்து ஒரு பொது உண்மையாகவே இப்போது நிலைபெற்று விட்டது. உதாரணமாக அழகியல் கலைக்களஞ்சியத்தில்(Encyclopedia of Aesthetics) “அழகியல் அம்சங்கள்” என்பதற்கான வரையரையில் இப்படி ஒரு தீர்மானமான கருத்து இடம் பெற்றிருக்கிறது: “ஒரு குறிப்பிட்ட ஓவியத்தின் வலது மேல் ஓரத்தில் ஒரு நீலப் புள்ளி இருக்கிறது என்ற விவரனைக்கும், அந்த ஓவியத்தின் மதிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ஓவியம் நன்றாகவோ அல்லது மோசமாகவோ இருக்கிறது என்று மதிப்பிடுவதற்கு இம்மாதிரியான விவரனை உதவாது.” முதல் பார்வைக்கு இந்தக் கருத்து சரியானது போலத் தோன்றலாம். ஆனால் எட்வர்ட் மானே(Edouard Manet) வின் “மேக்சிமில்யனின் மரண தண்டனை(Execution of Maximilian)” என்னும் ஓவியத்தில் ரானுவ வீரர்களின் கால்களுக்கிடையே உள்ள ஒரு சிகப்பு வண்ணக் கீற்று, அந்த ஓவியத்தைப் பற்றிய ப்ராய்டின் வரையரைக்கும் மதிப்பீட்டிற்கும் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதென்று அறியும் போது அக்கருத்து எவ்வ்ளவு தவறானது என்பது விளங்கும். ப்ராய்டின் இந்தக் குறிப்பிலிருந்து அதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
“நாம் கூர்ந்து நோக்கினால் அது ஒரு சிகப்பு நிறக் கீற்று, அவ்வளவு தான். ஆனால் அதுதான் அந்த ஓவியம் பிரதிநிதித்துவம் அடைவதற்கெதிராக முழு எதிர்ப்புடன் திகழ்கிறது. அதாவது அந்த ஓவியத்தை ‘முற்றுபெற்றது’ அல்லது ‘முற்றுபெறாதது’ என்னும் இரு சட்டகத்திற்குள்ளும் பொருந்தவிடாமல் தடுக்கிறது. இவ்விரு சட்டகங்களும் தான் மானேவின் ஓவியங்களின் தற்கால எதிர்வினைகளை பெரிதும் வரையறுக்கிறது. இந்தக் கீற்றை ஒருவகை எச்சம் என்று அடையாளப்படுத்துவது சரியாக இருக்கும். மானேவின் ஒட்டுமொத்த கலையாக்கத்திலும் முடிவுறாமல் விடாப்பிடியாக நிற்கும் தன்மைக்கு சான்றாக அக்கீற்று ஒரு எச்சமாய் இருப்பது போல இருக்கிறது. மானேவின் ஓவியங்களுக்கு ஒரு வரலாற்று சட்டகத்தைக் கொடுத்து எளிதாக தாண்டிச் சென்றுவிட எத்தனிக்கும் நம் முயற்சியை அக்கீற்று தொடர்ந்து தோற்கடித்த வண்ணம் இருக்கிறது…”
அழகியல் கலைக்களஞ்சியத்தில் உள்ள சில அழகியல் அம்சங்களுக்குள் மட்டுமே கலை விமர்சனம் அடங்கிவிடுவதில்லை. மாறாக ஒரு விமர்சனம் எவ்வளவு விரிவானது என்பதை இந்த சிகப்பு வண்ண கீற்று ஏற்படுத்தும் விளைவில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஒரு படைப்பில் இடம்பெற்றுள்ள எந்த ஒன்றும் அதன் அழகியல் காரணியாகச் செயல்படலாம்.
சம்பந்தப்பட்ட படைப்பைப் பற்றி மிகக்குறைவாகவே ஒரு விமர்சனம் எடுத்துரைக்கிறது. உண்மையில் விமர்சனம் என்பது ஒரு படைப்பை அனுகும்படி நம்மை அழைக்கும் ஒரு வரவேற்பு மடல். அந்த படைப்போடு செலவிடும் நேரம் மதிப்புள்ளதாக இருக்கும் என்னும் உறுதிமொழியையும் கூடுதலாக அது அளிக்கிறது. இந்த உறுதிமொழியின் நம்பகத்தன்மை அவ்விமர்சகரின் சாதனையைப் பொறுத்தது.
லட்சிய விமர்சகர் ஒரு வகையில் நம் நண்பர். எதையும் ஆர்வமாக நமக்கு அறிமுகம் செய்து வைப்பவர். ஆகையால் அவரின் மதிப்பீடுகளை, பரிந்துரைகளை நாம் நம்புகிறோம். அப்படி நாம் அவருடைய உறுதிமொழியை ஏற்கிறோம் எனக் கொள்வோம். மேற்கொண்டு நாம் பரிந்துரைக்கப்பட்ட அந்த புத்தகத்தைப் படிக்கிறோம்; திரைப்படத்தை அல்லது நாடகத்தைப் பார்க்கிறோம். அப்படிச் செய்யும் போது நாமும் அந்த படைப்பு நன்றாக இருக்கிறதா இல்லையா என்று ஒரு முடிவிற்கு வர முயல்கிறோமா என்ன? அப்படி ஏதோவொரு ஒரு முடிவுக்கு நாம் வருவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படைப்புடனான நம் உரையாடலின் முதன்மையான நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மேலும் அந்த உரையாடலும் அத்தோடு முடிவடைவதில்லலை.
உதாரணமாக, உங்கள் பரிந்துரையின் பேரில் புதிதாக ஒருவரைச் சந்திக்கிறேன் என்று கொள்வோம். அந்த சந்திப்பை விரும்புவேன் என்னும் நம்பிக்கையில் தான் அதைச் செய்வேன். மாறாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரைச் சந்திக்க மாட்டேன். அதுபோல் அந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்குமா இல்லையா என்று முடிவு செய்வதற்காக நிச்சயம் அவரைச் சந்திக்க மாட்டேன். அந்த சந்திப்பில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருக்காது. மாறாக அது சந்திக்கவிருக்கும் நபரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அந்தச் சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமையும் பட்சத்தில், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆகையால் நேர்மறையான மதிப்பீடு அந்த உரையாடலை அத்துடன் முடிவுறச் செய்யாது. மாறாக அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள எனக்கு இன்னும் இருப்பதாகக் கருதி, அவரை என் வாழ்வில் இன்னும் பெரிய அளவில் இனைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவில் அந்த உரையாடலை நீடிக்கச் செய்வதாகவே இருக்கும். மொத்தத்தில் நேர்மறையான எதிர்வினை உறவின் முறிவைக் குறிப்பதில்லை, உறவின் தொடர்ச்சியையே குறிக்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால் அங்கு ‘முடிவு’ என்ற ஒன்றிற்கு நான் வந்தடையவே இல்லை.
இன்னும் ஒரு உதாரணம். அழகில் சிறந்த வசீகரிக்கும் ஒருவரைக் காண்கிறேன் என்று கொள்வோம். என்னுடைய முதல் எதிர்வினை அவரை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்து, அவருடன் நேரத்தை செலவிட்டு, அவரைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத் தொடங்குவேன். நடைமுறையில் நான் இதுபோல செயல்படாது போகலாம், எனினும் இந்த எண்ணம் கண்டிப்பாகத் தோன்றும். ஒருவேளை எண்ணியதுபோல் நான் செயல்படுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு நுண்மையான நிலைக்கு நகர்ந்து விடுகிறேன். இங்கு நான் சொல்ல முயற்சிப்பது இது தான்: அழகான, வசீகரமான ஒருவரைக் காண நேரிட்டால் அவர் என் வாழ்வின் அங்கமாகும் பட்சத்தில், வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக, மேம்பட்டதாக மாறும் என்று நம்புகிறேன். ஒருவரை அழகுடையவராகக் கருதுவது என்பது ஒரு தீர்ப்பு அல்ல. அது அவருடன் உறவில் நுழைவதற்கான ஒரு ஒப்பந்தம். அவருடன் உறவாடி, அவரை மேலும் தெரிந்து கொள்ள, நம் வாழ்வின் அங்கமாக்க நினைக்கும் ஒரு விழைவு.
மறுபுறம் நம்முடைய விழைவு எந்தவகையிலும் ஒருவரை உடைமை கொள்வதாகவோ, ஆதிக்கம் செலுத்துவதாகவோ இருக்கக் கூடாது. இவையெல்லாம் தவறு என்று கருதும் இடத்திற்கு இன்று வந்தடைந்துவிட்டோம். அத்துடன் காதல், நட்பு போன்ற அசலான ஈர்ப்புகளைக் கொண்டு நமக்கும் கலைப் படைப்புகளுக்கும் இடையிலான தொடர்பை மேலதிகமாகப் புரிந்து கொள்ளவே இவற்றை உத்தேசிக்கிறேன். ஒருவரை நம்முடைய வாழ்வின் அங்கமாக்க நினைப்பதும், அவருடைய வாழ்வில் நாம் அங்கமாக நினைப்பதும் வேறு வேறு இல்லை. நம்மை மாற்றிக் கொள்வதற்கான விருப்பம் அவர்களுடனான உறவில் இருந்தே பிறக்கிறது. அந்த விருப்பம் அவர்களிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்றும், அவர்களிடத்தில் நமக்கு கொடுக்க என்ன இருக்கிறது என்றும் முன்னரே உணர்ந்த ஒரு திட்டவட்டமான நிலையில் இருந்து வருவதில்லை. மாறாக நம்மால் ஊகிக்க முடியாத ஒன்று அவர்களிடத்தில் கொடுப்பதற்கு இருக்கிறது என்னும் ஐயத்திலிருந்து பிறப்பது. அவர்கள் அவர்களாக இருப்பதனால் நம்முடைய நண்பர்களை விரும்புகிறோம். மேலும் நாம் நாமாக இருப்பதற்காகவும் கூட நம் நண்பர்களை விரும்புகிறோம். நட்பின் பொருட்டு நாம் அவர்களை முழுமையாக நம்பி நம்மை அவர்களின் கைகளில் ஒப்படைக்கிறோம். இதன் விளைவாக நாம் தவறான நபரை நம்பும்படியும் ஆகிவிடலாம். அழகின் ஆபத்துகளில் இதுவும் ஒன்று.
ஆனால் அழகிற்கும் நட்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? நம் நண்பராவதற்கு ஒருவர் அழகாயிருக்கத் தேவைவில்லை என நினைக்கலாம். ஆனால் அழகாக இல்லையென்று நாம் கருதும் ஒருவரோடு நம்மால் நட்பாக இருக்க முடியாது என்பதே என் நிலைபாடு. டேவிட் லின்ச்சின்(David Lynch) ‘யானை மனிதன்’ திரைப்படத்தின் சாதனையாக நான் கருதுவது உருவில் அருவருப்பூட்டும் ஜான் மெர்ரிக்கை நெருங்கி அறியும் தோறும் அவர் ஒரு மனிதர் தான் என்பதை மருத்துவர்களும் அதன் வழியாக பார்வையாளர்களும் எங்கனம் உணர்ந்து கொள்கிறார்கள் என்பது தான். ‘Paula’ நாவலில் இசபெல் தன் அன்னையுடன் நீண்ட காலம் வாழ்ந்த மனிதரைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“முதன்முதலாக அவரைப் பார்த்த போது என் அன்னை வேடிக்கை செய்கிறார் என்று தான் நினைத்தேன். இவரா என் அம்மா கண்டடைந்த இளவரசர்? அவ்வளவு அவலட்சனமான மனிதரை நான் அதுவரைக் கண்டதே இல்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு ஒருவழியாக அவரை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. என் அன்னைக்கு உறுதியளித்தபடி அவர் குழந்தைகளான எங்கள் எல்லோரையும் நன்றாக பார்த்துக் கொண்டார். கண்டிப்போடும், அதே நேரம் நல்ல நகைச்சுவையோடும் எங்களை வளர்த்தார். தெளிவான வழியில், உணர்ச்சிவசப்படாமல், எந்த வித சமரசமும் இல்லாமல் அதைச் செய்தார். என்னுடைய பிடிவாதங்களை சீரிய முறையில் அவர் சகித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தந்தை என்னும் ஸ்தானத்திலிருந்து ஒரு அடி கூட கீழிறங்காமல் என்னை வளர்த்தெடுத்தார் என்பதை இப்போது நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்த உதாரணத் தந்தை என்றால் அவர் ஒருவர் தான். அவர் எவ்வளவு வசீகரமானவர் என்று இப்போது உணர்கிறேன். ”
நெருக்கம் அழகை வெளிக்கொணர்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்புகிறது.
காதல் அழகிற்கு இன்னும் நெருக்கமானது. நம்முடைய கண்களுக்கு அழகில்லாதவராகத் தெரியும் ஒருவரை நாம் காதலிப்பது என்பது அசாதாரணமான விஷயம். அதாவது ஷேக்ஸ்பியரின் கரிய பெண்ணின் பாடல்களைப்(Dark Lady sonnets) போல. இங்கு முக்கியமான விஷயம் காதலும் அழகின்மையும் அவ்வளவு எளிதில் ஒன்றிணைய முடியாது என்பது தான்.
நாம் ஒருவரை அழகானவராகக் கருதும் வரை நம்முடைய வாழ்வில் அவர் அங்கமாக இருக்க வேண்டுமென்றும் அவருடைய வாழ்வில் நாம் அங்கமாக இருக்க வேண்டுமென்றும் உறுதியாக நினைக்கிறோம். இந்த முன்னோக்கிய அம்சமும் அதன் ஆபத்துகளும் இல்லலாமலாகும் போது காதலும் கவர்ச்சியும் காணாமல் போகிறது. ‘கவலையின் வலியிலும் எதிர்பார்ப்பின் சுகத்திலும் காதல் எதிர்பார்ப்பது ஒரு முழுமையை; முழுமையாக கைக்கொள்ளாத ஒன்றையே நாம் காதலிக்கிறோம்’ என்று ப்ரௌஸ்ட்(Proust) கூறுகிறார். காதலைப் போலவே அழகும் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாத போது வெளிறிப்போய் மறைகிறது.
நாம் அழகாகக் கருதும் ஒருவரோடு ஒன்றிணைய வேண்டும் என்னும் உந்துதல் ஏற்படுவது; ஒட்டுமொத்தமாக அவர்களிடம் சரணாகதி அடையத் தயாராக இருப்பது; அவரை நம் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள ஆசைப்படுவது – இம்மாதிரியான உணர்வுகள் நமக்கும் ஒரு கலைப்படைப்புக்கும் இடையிலான உரையாடலிலும் இருக்கிறது. கூடுதலாக சில வேற்றுமைகளும் உள்ளது. நம்மில் தாராள மனமுடையவர்களுக்குக் கூட தங்கள் காதலர்களை- ஏன் நண்பர்களைக் கூட – பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் உந்துதல் ஏற்படுவதில்லை. நம்முடைய காதலர் பிறரால் விரும்பி போற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதே சமயம் அவரை வேறு ஒருவர் காதலிக்கும் போது அசௌகர்யமடைகிறோம். அதுவே நம் காதலர் வேறு ஒருவரை விரும்பும் போது நாம் மனமுடைந்து போகிறோம். இவையெல்லாம் கலைப்படைப்பை பொறுத்தவரை அப்படியே தலைகீழாக இருக்கிறது. வெகு ஆர்வமாக நாம் விரும்பும் படைப்பை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நினைக்கிறோம். இன்னொருவர் அந்த படைப்பை விரும்புவது சில வேளைகளில் நமக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒன்றிணைய வேண்டும் என்னும் உந்துதல் இங்கு இன்னும் சிக்கலானது. அழகான ஒருவர் என்றால் அவர் நமக்கு மட்டுமேயென இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதுவே ஒரு அழகிய நாவல் என்றால் அதை எல்லோரும் விரும்பி வாசித்து அதைப் பற்றி நம்முடன் உரையாட வேண்டும் என்று விரும்புகிறோம். படைப்பென்று வரும் போது, அது அழகாயிருக்கிறது என்று நாம் நினைத்தால், மற்றவர்களும் அவ்வாறு நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதுபோல அந்தப் படைப்பு நம்முடைய வாழ்வின் அங்கமாகி நம் வாழ்க்கை மேண்மையடைய வேண்டும் என நினைப்பது போல, மற்றவர் வாழ்விலும் அங்கமாகி, அவர்கள் வாழ்க்கையும் மேண்மையடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மொத்தத்தில் கலை சார்ந்த உணர்ச்சிகளில் நாம் எவ்வித ஒழுக்கம் சார் கட்டுப்பாடுகளும் அற்றவர்களாக இருக்கிறோம்.
ஷோப்பனவர் கூறியது போல் அழகானது ஆசைகளில் இருந்து நம்மை விடுவிப்பதில்லை. மாறாக ஆசையைத் தூண்டி தீவிரப்படுத்தவே செய்கிறது. அழகான ஒன்றைக் கண்டவுடன் தன்னளவில் அதன் இயல்பை, ஒட்டுமொத்தத்தை நாம் புரிந்து கொள்கிறோம் என்று ஷோப்பனவர் நினைத்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நாம் முழுவதும் புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்கொண்டிருப்பதாகவே நினைக்கிறோம். அதனிடன் கொடுப்பதற்கு இன்னும் இருக்கிறது என்றும், நாம் நேரடியாக அதனுடன் உரையாடி அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறோம். இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால் அதில் மூன்று சமூகக் காரணிகள் இடம்பெறுகிறது. முதலாவதாக நம்மைப் போலவே மற்றவர்களும் அந்த அழகான விஷயத்துடன் உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இரண்டாவதாக, உரையாடலின் வாயிலாக மற்றவர் அந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று கண்டறிந்து, அதன் மூலம் நம்முடைய புரிதலை மாற்றியமைத்துக் கொள்ளவும் நினைக்கிறோம். மூன்றாவதாக, அவர்களுடன் மேற்கொண்டு நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ அந்த உரையாடலைத் தொடரவும் விரும்புகிறோம்.
இதுவரை விவரித்தவற்றை சுருக்கமாக இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம். அழகியல் சார்ந்த மதிப்பீடு என்பது எந்த வகையிலும் ஒரு தீர்ப்பு இல்லை. மாறாக நம் வாழ்க்கையை இன்னும் மதிப்புமிக்கதாக மாற்றும் என்னும் எண்ணமே அழகியல் மதிப்பீடாகிறது. இந்த எண்ணம் தவறான வழியில் இட்டுச் சென்று நமக்கு தீங்கிழைக்கவும் செய்யலாம். ஒரு கலைப்படைப்பின் மதிப்பிற்கும் நாம் மரபார்ந்த முறையில் புரிந்துகொண்டிருக்கும் குறிப்பிட்ட சில அழகியல் அம்சங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால் ஒரு கலைப்படைப்பின் எந்த ஒரு அம்சமும் அதன் அழகியல் கூறாக செயலாற்றலாம். அப்படைப்பை புரிந்து கொள்ள, மதிப்பிட துணை புரியலாம். ஒரு அழகிய படைப்பையும் சரி, ஒரு அழகிய நபரையும் சரி, நாம் ஒன்று போலவே அனுகுகிறோம். அதேசமயம் நம் அனுகுமுறையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் தான் நம் ரசனைசார் மதிபீடுகளில் உள்ள முக்கியமான சமூகப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. மதர்சில் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்த மதிப்பீட்டில் ஒரு வகை தொற்றிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. அதனாலேயே நாம் அழகாகக் கருதும் ஒன்றை இன்னொருவர் அழகற்றது என்று கருதினால் அவர் அறிவில் குறைபட்டவர் என்றும் அவரிடம் ஏதோ கோளாறு இருப்பதாகவும் நினைக்கிறோம்.’
புகழ்பெற்ற ஓவியர் ஜேம்ஸ் விஸ்லர்(James Whistler) தன்னுடைய கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த டைம்ஸ் இதழின் கலை விமர்சகர் ஹம்ப்ரி வார்டை(Humpry Ward) வரவேற்று இவ்வாறு கூறினார். “என் இனிய நண்பரே, நீங்கள் எந்தப் படைப்பையும் நன்றாக இருக்கிறது என்றோ, மோசமாக இருக்கிறது என்றோ கூறக்கூடாது. நன்று, மோசம் போன்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்க கூடாது. மாறாக எனக்கு இது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று கூறுவது தான் பொருத்தமுடையதாக இருக்கும். இப்போது வந்து இந்த வையினை அருந்துங்கள். இது நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ”
மொத்தத்தில் ஒன்று ‘அழகாக இருக்கிறது’ என்று நாம் கூறும் போது அது நமக்குப் பிடித்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பதில்லை. பிறரைப் பற்றிய அபிப்பிராயமும் இந்தக் கூற்றில் கலந்துள்ளது. நம்மை மட்டும் உத்தேசித்து அவ்வாறு சொன்னாலும், உள்ளூர மற்றவர்களும் நம் கருத்தோடு உடன்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
நம் கருத்தோடு அனைவரும் உடன்பட வேண்டும் என்று நினைப்பதும், அப்படி நினைக்காதவர்களை எல்லாம் அறிவில் குறைந்தவர்கள் என்று கருதுவதும் சரியா? தவறு என்பதே என் எண்ணம். ஒரு பொது உண்மையை ஒருவர் அங்கீகரிக்காதபோது, ஒப்புக்கொள்ளாதபோது அவரை அறிவில் குறைபாடு உடையவர் என்று கருதலாம். ஆனால் என்னுடைய கலை/இலக்கிய/திரை ரசனையை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்டிப்பாக அறிவுக் குறைபாடு உடையவர்கள் என்று கருத மாட்டேன்.
அழகியல் மதிப்பீடு என்பது அகவயமான ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இல்லை. அதே சமயம் அது எல்லோருக்கும் பொதுவான ஒன்றும் இல்லை. ‘ஒன்றை கலைப்படைப்பென கருதுவதென்பது அந்த படைப்பு ஒரு குழுவுக்கு உரியது என்றும், நாம் அந்த குழுவில் ஒரு அங்கம் என்றும் உணர்ந்து கொள்வது தான்’ என்கிறார் டெட் கொஹன்(Ted Cohen). இது அழகியலுக்கும் பொருந்தும். இத்துடன் கூடுதலாக மூன்று விஷயங்களை அழகியலுக்காக சேர்த்துக் கொள்ளலாம். முதலாவதாக, அந்தப் படைப்பை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அப்படி ஒரு குழுவுக்கு உரியதாக்கவும் நாம் முயல்கிறோம். இரண்டாவதாக, அந்த குழுவின் எல்லை என்பது தொடர்ச்சியாக மாற்றமடைவது. இறுதியாக, அதன் எல்லை மாற்றமடைவதென்பது அழகியலுக்கு ஒரு பொருட்டே அல்ல.
ஏனென்றால் நாம் அழகாகக் கருதும் ஒன்றைச் சுற்றி உருவாக்க நினைக்கும் குழு என்பது உலகளாவியது இல்லை. ‘நாம் அழகாகக் கருதும் ஒன்றை இன்னொருவர் அழகற்றது என்று கருதினால் அவர் அறிவில் குறைபட்டவர்’ என்னும் மதர்சில்லின் நிலைபாட்டை சரியென்று கொண்டால், அதே மாதிரியான மதிப்பீடை மற்றவர்களும் செய்வார்கள். இறுதியில் எவ்வித மாற்றுக் கருத்துகளையும் ஏற்படுத்தாத அழகியல் மதிபீடுகளுடைய ஒரு உலகமே எஞ்சும். அங்கு எல்லரும் ஒரே விஷயங்களை ஒரே மதிரியான காரணங்களுக்காக விரும்புவார்கள். அப்படி ஒரு உலகிலா நாம் வாழ விரும்புவோம்? நிச்சயம் இல்லை. ஷேக்ஸ்பியரையோ, டிஷனையோ(Titian), பாக்கையோ(Bach) ஒரே காரணங்களுக்காக விரும்பும் ஒரு உலகம், எல்லோரும் பேவாட்ச்(Baywatch) தொடரை விரும்பும் ஒரு உலகத்தை விட எந்த வகையிலும் மேலானது இல்லை. ஒட்டு மொத்தத்தில், நான் அழகாகக் கருதும் ஒன்றை பலரும் ஆமோதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், மொத்த உலகமும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது.
மதர்சில்லின் கூற்றை சரி என்று கொண்டால், தினசரி மதிப்பீடுகளில் நம்மோடு வேறுபடும் எல்லோரையும் குறைபட்டவர்களாகக் கருத நேரிடும். இன்று பலரும் அப்படி நினைக்கிறார்கள் என்பது வேறு விஷயம். எல்லோரும் இப்படிக் கருதுவது எனபது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. நம் ரசனையின் வழி வரும் மதிப்பீடை ஒரு மேன்மையான நிலையாக எடுத்துக்கொண்டு அதன்மூலம் பிறரை இழிவாக நினைக்கலாம் என்பது நிச்சயமாக ஒரு மோசமான நிலைபாடு தான். குறிப்பிட்ட சில தருங்களில் ஒருவரின் மதிப்பீட்டை குறைபட்டதாக ஒருவர் கருதலாம், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. மேலும் இரு தரப்பினரின் அழகியல் மதிப்பீட்டில் முரண்பாடு இருந்தால், அதில் ஒரு தரப்பை குறைபட்டதாகக் கருத வேண்டுமா என்ன? இங்கு பண்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.
நாம் எதை அழகாகக் கருதுகிறோம் என்பது நம்முடைய ரசனையை, சுவையை வெளிப்படுத்துவது. சூசன் சொன்டக்(Susan Sontag) குறிப்பிடுவது போல ‘நம் ரசனைக்கென்று செயல்முறையோ, நிரூபணங்களோ கிடையாது. எனினும் சீராக வெளிப்படுத்தப்படும் போது ஒரு குறிப்பிட்ட வகை ரசனை மேன்மையடைகிறது. ஆகையால் ரசனைக்கென்று ஒரு தர்க்க ஒழுங்கு உண்டு.’ சீரான வெளிப்பாடு என்பது ஒருவரின் ஆளுமைக்கு இன்றியமையாதது. அது நம் பாணியைத் தெரிவிக்கிறது. மேலும் அதுதான் ஒருவரை உலகிலுள்ள பிற அனைவரிடமிருந்தும் நம்மை வேறுபடுத்திக் காட்டுவது. ஒருவரின் ரசனை நமக்கு ஏற்புடையாதாக இல்லையென்றாலும், அது சீராக வெளிப்படும் போது அதற்கு இயல்பாகவே ஒரு மதிப்பு உருவாகிவிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட பாணியில் ஒருவருடைய ரசனை இருக்கும் போது, அவரின் ரசனை பிடிக்கவில்லையென்றாலும் எனக்கு அவர் ஆர்வமூட்டுபவரே. எது அவரின் ரசனைகளை பினைக்கிறது என்றும், அவருடைய அந்தத் தெரிவுகள் எம்மாதிரியான ஆளுமையை வெளிப்படுத்துகிறது என்றும் அறிய விரும்புவேன். நான் ரசிக்காத ஒன்றை எதன் அடிப்படையில் அவர் ரசிக்கிறார் என்றும், அது எவ்வாறு அவரின் ஒட்டுமொத்த ரசனைப் பாணியுடன் பொருந்திப் போகிறது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புவேன். ஏனெனில் ஒருவர் தன் ரசனையில் சீரான பாணியைப் பின்பற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
ஆனால் இந்த சீரான பாணி என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையில் ஒரு பகுதி மட்டுமே. குறிப்பிட்ட ஒரு நபரோ அல்லது குழுவோ அவரின் ரசனைப் பாணியில் அதிகாரம் செலுத்துகிறதென்றால் அவரிடம் தனித்துவமான ரசனை இல்லை என்றே அர்த்தம். உங்கள் தெரிவுகளையெல்லாம் மார்த்தா ஸ்டீவர்ட்டோ(Martha Stewart), லியோ காஸ்டலியோ(Leo Castelli), ஆஸ்கர் வைல்டோ(Oscar Wilde) முடிவு செய்கிறார்கள் என்றால் உங்களின் ரசனை என்பது உண்மையில் அவர்களுடையது தான். ரசனைப்பாணி அசலானது. அதற்குத் தேவை தனித்துவம். கலைக்கும் இது பொருந்தும். ஒருவரின் ஆளுமையும் ரசனையும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடும் போதே மதிப்படைகிறது. அதுபோல ஒரு கலைப்படைப்பும் மற்ற படைப்புகளில் இருந்து தனித்து நிற்கும் போதே அதன் மதிப்பைப் பெறுகிறது. இந்த மதிப்பு எவ்வகையிலும் ஒழுக்கத்துள் சாராதது. தனிச்சையானது.
அப்படியென்றால் ஒன்றை அழகாகக் கருதுவது என்பது யாரும் இதுவரைக் கண்டிராத வழியில் ஒன்றைப் பார்ப்பது; போற்றத்தக்க வகையில் சுவாரசியமான ஒருவராக நம்மை மாற்ற உதவுவது. ஒருவகையில் அழகை மதிப்பிடுவது என்பது விழுமியங்களை மதிப்பிடுவது தான். இதன் தேவை சமூகத்தன்மை உடையதாக இருந்தாலும் இறுதியில் தனித்துவமானதாகவே இருக்கிறது.
ஒரு பொருளில் இருந்து பிரித்தறியமுடியாதவை மட்டுமே அதன் அழகியல் அம்சமாகிறது. இந்தக் கூறு தான் ஒரு பொருளின் எந்த ஒன்றும் அதன் அழகியல் காரணியாக இயங்க வழிவகை செய்கிறது. அது நம் பாடபுத்தக பட்டியலைத் தாண்டி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சிகப்பு வண்ண கீற்றைப் போல. இதன்மூலம் நம் புலனுணர்ச்சியும் அழகுணர்ச்சியும் ஒன்றில்லை என்று தெரிந்து கொள்கிறோம். இலக்கியத்தின் அழகியல் அம்சங்கள் பெரும்பாலும் புலணுனர்ச்சி சார்ந்தவை கிடையாது. அழகுணர்ச்சியும் புலன் சார்ந்த்தில்லை என்றாலும், ஒரு பொருளில் இருந்து எதையும் பிரித்தறிய முடியாது என்பதால் அதனுடன் நேரடியாகவே ஒருவர் உரையாட வேண்டியுள்ளது. இதனால் அர்த்தப்படுத்துதலும்(Interpretation) நேரடியாக நடைபெற வேண்டியிருக்கிறது. நான் ரசிக்கும் விஷயங்களை உங்களிடம் எவ்வளவு விளக்கினாலும் என்னுடைய அர்த்தப்படுத்துதல் உங்களுடையதாக மாறாது. நேரடியாக உங்கள் வழியில் அந்த விஷயத்துடன் உரையாடினால் ஒழிய நீங்கள் அதை அடைய முடியாது. அறிவைப் போல அர்த்தப்படுத்துதலை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கடத்த முடியாது. அழகிய விஷயங்களை வாழ்க்கையின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கூற்றில் எந்த உருவகமும் இல்லை. உண்மையாகவே நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை நாம் அந்த அழகிய விஷயத்தோடு செலவிட வேண்டும்.
சமீபமாக, மானேவின் ஒலிம்பியா(Olympia) உலகின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றென நினைக்கிறேன். அந்த ஓவியத்தால் பெரிதும் கவரப்பட்டு அதை நெடுநேரம் வியந்து ரசித்திருக்கிறேன். அதைப்பற்றி என் நண்பர்களிடமும் நிறைய உரையாடினேன். மேலும் தெரிந்து கொள்ள அதைப் பற்றி நிறைய வாசிக்கவும் செய்தேன். விளைவாக அதைப் போன்ற வேறு பல ஓவிங்களையும் நான் தேடிப் பார்க்கும்படி ஆனது. மானேவைப் பற்றி, அவரின் பிற சமகால கலைஞர்களைப் பற்றி, 19ம் நூற்றாண்டை சேர்ந்த பாரீசின் கலை விமர்சனப் போக்குகளைப் பற்றி, கீழைஉலக ஓவியங்களைப் பற்றி, நிர்வாண ஓவிங்களைப் பற்றி என இது சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை நான் கற்கும்படி ஆனது. இந்த ஒவ்வொரு விஷயத்தோடும் தொடர்புடைய பிற கலைப்படைப்புகளை ஓவியங்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல், என் நண்பர்களோடு நான் நேரிலும் எழுத்திலும் உரையாடும் படியும் ஆனது.
இருப்பினும் ஒலிம்பியாவின் மந்திரசக்தி இன்னும் என்னைவிட்டு அகலவில்லை. அதனுடைய ரகசியத்தை நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒலிம்பியா ஓவியத்துடனான தொடர்பு என் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது. அழகு நம்மை அன்றாடத்தில் இருந்து நீக்கும் என்ற ஷோப்பனவர் கூறினார். ஆனால் அப்படி இல்லை என்றே சொல்வேன். நான் ஒலிம்பியாவினால் அதுவரை சந்தித்திராத மனிதர்களை சந்தித்தேன். புதிய இலக்கியங்களை வாசித்தேன், வேறு பல ஓவிங்களைப் பார்த்தேன். அந்த ஓவியத்தை பார்த்திராவிடில் இவையெல்லம் என் வாழ்வில் நடந்திருக்காது. மேலும் இவையெல்லாம் என்னை எந்த விதத்தில் பாதித்தது என்றும், ஒழுக்க அளவுகோலில் இவை விளைவித்தது நன்மையா தீமையா என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது.
எந்த அளவு ஒலிம்பியாவை அதன் இயல்பிலேயே புரிந்து கொள்ள விரும்புகிறேனோ அந்த அளவு வேறுபல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேன்டும் என்றும் உணர்கிறேன். அழகுணர்ச்சியானது மேலும் மேலும் அம்மாதிரியான அழகியல் அம்சங்களை நம்மைச் சுற்றிலும் காணத் தூண்டுகிறது – வேறு எவரும் இதுவரை கண்டிராத வகையில். அவ்வாறு அசலான தனித்துவமான விஷயங்களை நாம் ரசிக்கும் ஒன்றில் காண வேண்டுமென்றால் அந்தப் பொருளை நம்மால் இயன்றளவு பிற அத்தனை விஷயங்களோடும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். அர்த்தப்படுத்திக் கொள்வது என்பது அப்பொருளின் தோற்றத்தை, வெளிப்பாட்டை தவிர்த்துவிட்டு செய்வது இல்லை. மாறாக இயன்ற அளவு அந்தப் பொருளை வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தி, அது பிறவற்றில் இருந்து எப்படி வேறுபடுகிறது, எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறிவது தான். அர்த்தப்படுத்துதல் வெறுமே ஒரு பொருள் எவ்வாறு இருந்தது எனபதில் துவங்கி உண்மையில் எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்வதில் முடிவதில்லை. மாறாக நாம் முதலில் அதைப் பார்த்தபோது எப்படி இருந்தது என்பதில் துவங்கி அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டபின் அது எவ்வாறு இருக்கிறது என்று அறிந்துகொள்வதில் வளர்வது. இங்கு நன்றாகத் தெரிந்து கொள்வதென்பது நம்மால் தொடர்பு படுத்த முடிந்த அனைத்தோடும் அது எவ்வளவு வேற்றுமையும் ஒற்றுமையும் கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வது தான். இந்தத் தொடர்பு வட்டம் மிகப்பெரிது என்பதால் அழகுணர்ச்சியை போலவே அர்த்தப்படுத்துதலும் முடிவுறாது நீடிப்பது.
மொத்தத்தில் அழகுணர்ச்சியும் அதன் சமூகக் காரணிகளும் அழகுக்கான தேடலில் நமது ஒழுக்க குணநலன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை அறுதியாகக் கூறமுடியதபடி செய்கிறது. ஒழுக்கம் சார் நன்மைகளுக்காக கலை கவனிக்கப்பட வேண்டும் என்று ரிச்சர்ட் ரோர்டி(Richard Rorty), மார்த்தா நுஸ்பாம்(Martha Nussbaum), எலைன் ஸ்காரி(Elaine Scarry) போன்றோர் வலியுறுத்துகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அழகிய வில்லன்கள், கருனைமிக்க குற்றங்கள், ரசனையான குற்றவாளிகள், நேர்த்தியான சித்திரவதையாளர்கள் என்று உலகெங்கிலும் நம்மையொத்த வகைமாதிரிகள் ஏராளமாக இருக்கிறார்கள். சாத்தான்களும் அசுரர்களும் புனைவுகளில் மட்டும் இல்லை.
அத்துடன் ஒழுக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கூறுகள் நுண்கலைகளில் மிகக்குறைவு. மறுபுறம் திரைப்படம், பாப் இசை, தொலைக்காட்சித் தொடர் போன்ற வெகுஜனக் கலை வடிவங்கள் ஒழுக்க ரீதியாக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சரிவரத் தெரியாமல் நாம் சுலபமாக அவையெல்லாம் தீங்கு விளைவிப்பவை என்று முடிவு கட்டிவிடுகிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போது பிரபலமடையும் ஊடகத்தின் மீது சுமத்தப்பட்டது. இதன் மூலம் தொலைக்காட்சி நம் ஒழுக்கத்திற்கு எவ்வித கேடும் விளைவிக்காது என்று நான் சொல்ல வரவில்லை. அத்துடன் கலைப்படைப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் ஒழுக்கம் மற்றும் அரசியல் சார் விளைவுகளை ஏற்படுத்துவதே. எனினும் அவ்விளைவுகள் நேர்மறையானவையா அல்லது எதிர்மறையானவையா என்பது ஆழமான விவாததிற்குரியது. ஒரு ரசனைசார் மதிப்பீடு எவ்வளவு நுட்பமானதாக இருந்தாலும், அதனோடு தொடர்புடைய பெரும் எண்ணிக்கையிலான படைப்புகளை அணுகவும் உரையாடவும் நம்மைக் கோருவது. எனவே நம் முழுவாழ்க்கையின் ஒரு பிரதியை அதற்கு ஒப்புக் கொடுத்தே வேண்டும். அந்த வாழ்க்கை மாதிரி உங்களுக்கு எதை அளிக்கப்போகிறது என்று முன்னரே ஊகிக்கவும் முடியாது. அதனால் நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக மாறுவீர்கள் என்று கண்டுபிடிக்கவும் முடியது. நீங்களே உணரமுடியாத அளவு ஒரு மோசமான நிலைக்குக் கூட உங்கள் வாழ்க்கை சென்றிருக்கலாம்.
அழகு என்பது மகிழ்ச்சிக்கான வாக்குறுதி என்னும் ஸ்டெந்தலின்(Stendhal) பார்வையின்படி வாழ்வதென்பது அந்த அழகினால் வரும் தவிர்க்க முடியாத நிச்சயமின்மையோடும் வாழ முனைவது. ஏனெனில் அந்த வாக்குறுதி எவ்வகையிலும் தெளிவானது இல்லை. மேலும் அது நிறைவேறுமா என்றும் தெரியாது. அப்படியே அது நிறைவேறினாலும் நாம் விரும்பியதாக அது இருக்குமா என்பதும் சந்தேகமே. இந்த ஊகிக்கமுடியாத தன்மை வாழ்க்கைக்கு அவசியமானது. இந்த ஊகிக்கமுடியாத தன்மையின் வெளித் தோற்றமே அழகு என்றாகிறது. அதன் மதிப்பு என்னவென்று எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்படுவதே அழகின் மதிப்பு. நாம் அழகைத் தேடும் காரணம் அதைக் கண்டறிய முற்படும் செயல்பாட்டில் நாமும் அழகை உருவாக்கலாம் என்பது தான்.
குணநலன் மற்றும் பாணியைப் பற்றிய கருத்துடன் நிறைவு செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு ஒத்திசைவான, அசலான, விரும்பத்தக்க வகையிலான ஆளுமையை உருவாக்க வழி வகுக்கும் போது தான் நம் அழகியல் தேர்வுகள் நியாயப்படுத்தப் படுகிறது. நம் மேற்கொள்ளும் அழகியல் தேர்வுகள் தன்னளவில் நேர்த்தியான ஒரு முழுமையை அடைய வேண்டும். அதே நேரம் அது பிறரிடம் இருந்து வேறுபடுத்தக் கூடிய அளவில் தனித்தன்மையோடும், பிறர் அதை ஆர்வத்தோடு அனுகும் அளவில் சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும். இது ஒருவகையில் நாமே அழகாக ஆவது தான் என்று நினைக்கிறேன்.
கலை வாழ்க்கையைப் பின் தொடர்வது. நாம் கலையை மதிப்பிடும் போது வாழ்க்கையின் பரிமாணங்களையும் அதன் வழியாக மதிப்பிடுகிறோம். நம் ஆளுமையின் சில அம்சங்கள் தனித்துவமானது, ஒழுக்கம் சாராதது. அவைதான் நம் வாழ்க்கைக்கு தனித்துவமான ஒரு மதிப்பை அளிக்கிறது. அதே அம்சங்கள்தான் மாபெரும் கலைப்படைப்புகளுக்கும் அதன் மதிப்பை அளிக்கிறது. இத்தகைய அம்சங்கள் நம்மைவிட கலை விமர்சன மேதைகளின் ஆளுமையில் பெருமளவில் இருப்பது. அதனாலேயே அவர்களின் விமர்சனங்கள் கலைப்படைப்பிற்கு நிகராக தனித்துவமான மதிப்போடு இருக்கிறது. இதனால் தான் நாம் அத்தகைய விமர்சனங்களையும் கலைப்படைப்பாகக் கருதி அனுகுகிறோம்.
கணிக்கமுடியாமை என்பது ஓரு முக்கியமான கூறு. ஒரு ரசனையை நாம் அடையளம் காணும் வரை அதற்கு ஒரு மதிப்பு இருப்பதாகக் கருதுகிறோம். அழகின் மாபெரும் எதிரி அழகின்மை இல்லை. மாறாக நம் அலட்சியத்தாலும் அசிரத்தையினாலும் அழகை உதாசீனப்படுத்துவது தான். ஆனால் நம்மால் கவனிக்கப்படாது போனாலும் என்றோ ஒருநாள் வேறு ஒருவர் அதைக் கவனித்து அடையாளப்படுத்தி நம் பங்கிற்கும் சேர்த்து அந்த அழகின் மதிப்பை மீட்டுவிடுவார்.
வாழ்வின் ஒரு பரிமாணத்தில் தனித்துவமும் வேறுபாடும் மதிப்புமிக்கதாக மாறுகிறது. அதே சமயம் இந்த தனித்துவம் வேண்டுவது ஒருமையையும் ஒத்திசைவையும். என் அழகியல் தேர்வுகளில் ஒருவர் இந்த ஒத்திசைவை அடையாளம் காண முடிந்தால் நான் என்னளவில் அழகியல் தேர்வுகளின் மூலம் தனித்து நிற்கக்கூடிய ஒருங்கினைந்த ஒன்றை உருவாக்கி இருக்கிறேன் என்று பொருள். நான் விரும்பும் விஷயங்களின் வழியாக உலகை புதுமையான வழியில் காண முடியும் என்றும் நான் கண்டடைந்தை விட மேலான நிலையில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன் என்றும் இதன் மூலம் நான் நிறுவியதாக ஆகிறது.
“சமூகவியலில் தனிமனிதனின் ஆன்மா” என்னும் கட்டுரையில் ஆஸ்கர் வைல்ட் இவ்வாறு எழுதுகிறார்:
“ஒருவர் தாம் விரும்பிய வண்ணம் வாழ்வதில் எந்த சுயநலமும் இல்லை. மற்றவர்களையும் தாம் விரும்பும்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் சுயநலம். ஒவ்வொருவரையும் அவரவர் விரும்பும் வாழ்க்கையை வாழ விடுவதும் அதில் குறுக்கிடாமல் இருப்பதும் தான் சுயநலமின்மை. சுயநலம் ஒருமுகத் தன்மையை பிற அனைவரிலும் எதிர்பார்க்கும். சுயநலமின்மை நம்மைச் சுற்றி முடிவிலா அளவில் காணப்படும் வேறுபாடுகளை அங்கீகரித்து அவற்றை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும்.”
ரசனையைப் போல ஆளுமையிலும் நிறைய வகைமாதிரிகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஆளுமையில் முடிவிலா அளவில் வேறுபாடுகள் உள்ளதாக நான் கருதவில்லை. அதுபோல ரசனையில் மிகச் சிறந்த வகைமாதிரி என ஒன்று இல்லை. அதற்காக எல்லா வகைமாதிரிகளும் ஒரே அளவிலான சிறப்புடையவை என்று சொல்ல வரவில்லை. ஏனெனில் இந்த வகைமாதிரிகளை வரிசைப்படுத்துவது இங்கு பிரதான நோக்கம் இல்லை. மாறாக அவ்வாறான வகைமாதிரிகளை நாம் எப்படி அனுகுகிறோம், புரிந்துகொள்கிறோம் என்பதும், அவற்றைக்கொண்டு இயன்ற அளவில் நம்முடைய சொந்த மாதிரியை உருவாக்குவதும் தான் இங்கு முக்கியம். அதைவிடுத்து கலையில் வாழ்வில் இவ்வாறான ரசனையில் உள்ள வகைமாதிரிகளை மதிப்பிடுவதும், தரம் பிரித்து வரிசைப்படுத்துவதும், தீர்ப்பு எழுதுவதும் தான் இன்று பிரதானமாக நிகழ்கிறது. இவையெல்லாம் தான் ஒரு வகையான சுயநலம் என நினைக்கிறேன்.
ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.