/

வேணு தயாநிதி கவிதைகள்

November 01

ஜேசுதாஸின் தத்துவப்பாடல்கள்

உயரமான மர மேசையின்
கல்லாவில் அமர்ந்திருக்கும் முதலாளி
தன் முன்பல்லின் இடைவெளியில்
அகழ்ந்தெடுத்த ஊக்கை
மேல் துண்டால் துடைத்து

பாட்டை
இன்னும் கொஞ்சம்
சத்தமாக வைக்கிறார்.
‘பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சு வெகுமானம்
ஆறுமுடிச்சு அவமானம்’-
இதைபாடும்போது
ஜேசுதாஸ் என்ன நினைத்திருப்பார்?
கண்ணாடி கோப்பைகளை
கழுவும் தியானத்தில் இருக்கும்
டீ மாஸ்டரின் தலையசைப்புக்கு
என்ன பொருள்?
இந்தப்பாட்டு எந்த ராகம்?

தலைவலிக்கு
மாத்திரையுடன்
தேநீர் அருந்த
வந்தமர்ந்து
இந்த பாடலை கேட்டதில்
சற்று கூடுதலாக வலி.

காமதேனு தேநீர் நிலையம்
என்றேனும் ஒருநாள்
தனி நாடாக மாறும்போது
அதன் தேசியகீதமாய் ஆகிவிடும்
வல்லமை கொண்டது
இப்பாடல்

எதற்கும் இருக்கட்டுமென
தேநீரை பருகியபடி
ஆட்டோக்களின்
வரிசைக்கு அருகில் இடம்பிடித்து
அடுத்த பாடலுக்கு
ஆயத்தமாகிறேன்

தலைவலிக்கு
ஒரு தத்துவப்பாடல்
மருந்தில்லை என

எவரும்
அறுதியிட்டு
கூறத்தான்
முடியுமா என்ன?

000

செகுவேராவின் சுருட்டு

பற்பசை இரவல் கேட்டு
விடுதி அறையின்
கதவு தட்டி உள்ளே வந்து,
தெரிதாவை தெரியுமா?
அவர் சொல்வதாவது
என சொல்லாடிச் செல்வார்
நண்பர்.
சென்றபின் –
தயவு செய்து என்னை திறந்து விடு
என கழிவறை உள்ளே
கதறுகிறார், பூக்கோ.

என்னைத் தெரிகிறதா?
தெரியாதது போலவே போய்விடு
என அலறுகிறார்
உத்தரத்தின் கம்பியில்
குறும்புக்கார சிறுவனைப்போல
தொங்கிக்கொண்டிருக்கும்
தெரிதா.

பற்பசை நண்பர்
இன்னொரு அறையில்
பலர் காதுபட
வான்காவின் காதுகள் பற்றி
கதைத்துக்கொண்டிருக்கிறார்.

அடுத்து
மொஸார்த்தின் ஆறாம் சிம்பனி
பற்றி பேசுவார், பேசட்டும்.

சற்று நேரத்தில்
பொலிவியாவின் புரட்சி பற்றி
பேசும்போது

எப்படியும்
செகுவேரா வந்து
தன் சுருட்டுப்புகையால்
அவரை மீட்டு விடுவார்
இல்லையா?

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்

உரையாடலுக்கு

Your email address will not be published.