/

அகழ் : வாசக எதிர்வினைகள்

அலைதலும் அலைகளும் – ஏ.வி.மணிகண்டன்

அகழ் ஆசிரியர் குழுவுக்கு,

கென்னத் கிளார்க்கின் புகழ்பெற்ற 1969 பி.பி.சி. தொடரான ‘Civilization’ பார்த்து வருகிறேன். அதில் நடுக்கால கலைகள் (art of the Middle Ages) குறித்த அத்தியாயத்தில் கென்னத் இவ்வாறு கூறுகிறார்,

“தூய அழகை, அதாவது இறைவனை, அழகிய அரிய பொருட்கள் புலன்கள் மீது செலுத்தும் தாக்கம் கொண்டு மட்டுமே நம்மால் அறிய இயலும் என்பதை சுகர் (பதினோராம் நூற்றாண்டு பிரெஞ்சு தூயர்/வரலாற்றாசிரியர்) நம்பினார். சுகர் சொல்கிறார், “ஒரு மந்த மனம் பொருட்களின் ஊடே உண்மையை உய்த்தறிகிறது” 

நடுக்காலக்கட்டங்களில் இது ஒரு புரட்சிகரமான கருத்தே. அடுத்து வந்த  நூற்றாண்டின் அனைத்து உன்னத கலைப்படைப்புகளின் அறிவுசார் பின்னணியாக அமைந்ததும் இக்கருத்தே. உண்மையில், இதுவே இன்றுவரையில் கலையின் மதிப்பின் மீதான நமது நம்பிக்கையின் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது”

“ஒரு மந்த மனம் பொருட்களின் ஊடே உண்மையை உய்த்தறிகிறது” 

இந்த வாக்கியத்தில் இடம்பெறும் “உண்மை” காலம் மாற மாற வெவ்வேறு பொருள் கொள்கிறது. சுகர் இவ்வுண்மையை இறைவன் என்கிறார். 

ஏ.வி. மணிகண்டன் “அலைதலும் அலைகளும்” கட்டுரையில் இவ்வுண்மை எங்ஙனம் எவ்வெவரால் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் தொட்டுச் சென்றிருக்கிறார். 

சாதாரண உபயோகப்பொருளிலிருந்து கலையின் பேசுபொருளாக ஆகி, அன்றாட தளத்திலிருந்து அறிதலின் தளத்திற்கு உயரும் வான்காவின் காலணிகள் ஓர் உதாரணம். மேனேவிற்கு கட்புலன் அனுபவம் சார்ந்ததாக  இருந்த அவ்வுண்மை வான்காவிற்கு உணர்வார்ந்ததாக தோன்றுவதும் அது போலவே. பின்னர் ‘தற்செயலைத் தியானிக்கும் தன்மை’ கொண்ட புகைப்படம் மொழியாலான பிரஞ்ஞையைக் கடந்து புறப்பொருளில் ஆழுள்ளத்தை வெளிப்படுத்துவதில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றோ படைப்புமே பின்னேகி நான் அதைக் கண்டேன் என்பது முதன்மையாகி விட்டதை ஏ.வி. மணிகண்டன் சுட்டுவதும் இவ்வாறான மாற்றத்தையே என்று தோன்றுகிறது.

மாறும் பேசுபொருட்கள் புகைப்படத்திற்கும்  ஓவியத்திற்குமான தரிசன வேறுபாடுகள் குறித்துப் பேசும் கட்டுரை உணர்ச்சிகர தருணத்தில் முடிவடைவது வாசிப்பு நிறைவை அளிக்கிறது. ஓர் ஓவியத்தை, புகைப்படத்தை வரலாற்று வரிசையில் அமர்த்திக் கலை நோக்கோடு அணுகுவதை இலகுவாக்கும் ஏ.வி.எம்மின் தொடர் கட்டுரைகள் தமிழில் முக்கியமானவை, தனித்துவமானவை.

ஸ்வேதா மயூரி

000

டிராகுலாவின் சிரிப்பு : சபரிநாதன்

சபரியின் ‘டிராகுலாவின் சிரிப்பு’ என்னும் கட்டுரை அறிவியலை, குறிப்பாக பரிணாமத்தை கவிதையுடன் சுவாரஸ்யமான அவதானங்களின் வழியாக பினைக்கிறது. ஒருபுறம் சிரிப்பானது எப்படி நம்மை விலங்கியல் குகைக்குள் நுழைவதற்கு ஒரு அடி முன்னால் மனிதன் என்ற அளவில் நிறுத்துகிறது என்று கண்டுகொள்கிறோம். மறுபுறம் அதே விலங்கியல் குகைக்குள் இருந்து மனித அச்சத்தின் முகமான – காட்டேரியான – ஒரு டிராகுலா வெளியே வந்து நம்மை நோக்கிப் புன்னகைக்கும் போது சிரிப்பென்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்களும் பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்கொண்டு மொத்தமும் அர்த்தமிழந்து திகைப்பதைக் காண்கிறோம்.

கட்டுரையானது சிரிப்பின் பின்னனியில் இருந்து துவங்கி “பேய்கள் இல்லையென்றாலும் அச்சம் இருக்கும், கடவுள் இல்லையெனினும் பிரார்த்தனை இருக்கும்” என்று மனிதனின் ஆதார குணங்களை நோக்கிச் குவியும் இடத்தில் கவித்துவமான ஒரு உச்சத்தை அடைகிறது. சிரிப்பைப் போல கண்ணீரையும் இந்த வழியில் பொருத்தி ஆராய்ந்த்து பார்ப்பது நிச்சயம் சுவாரசியமான அவதானங்களுக்கு இட்டுச் செல்லும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருத்துறை ஈஸ்வர்

000

Euphemistically written. இன்னும் எத்தனையோ முன்னோடிகளின் படைப்புகளை இன்றைய காலகட்டத்தில் நோக்குகையில் எரிச்சல்தான் வருகிறது.எது எதுக்கெல்லாம் துதிபாடிக்களித்தனரோ அவையெல்லாம் மிதிபடும் காலமிது .நீண்ட இடைவெளிக்குப்பிறகு சபரியின் எழுத்தைப் படிப்பது மகிழ்ச்சி.

தாமரை பாரதி

000

மலையாளியின் இரவு : கே.சி.நாராயணன்

தங்களது தளத்தில் கதகளி பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை வாசித்தேன். நன்றாக இருந்தது. அழகிய மணவாளன் அவர்களின் மொழிநடை எளிமையாக இருந்தது. பொதுவாக மொழிபெயர்ப்புகளில் எனக்கு படிக்கும்போது இருக்கும் அந்நியத்தன்மை ஏதும் அற்று எளிமையாய் இருந்தது.கதகளி பற்றி எந்த அறிமுகமும் இல்லாததால் முன்பு அவ்வளவு ஏற்பாய் தோன்றியதில்லை..ஏதோ பொம்மை விளையாட்டு போன்றே நினைத்திருந்தேன். இப்போது அந்த வண்ணங்கள் அசைவுகள் முக பாவனைகள் அனைத்தும் ஒரு வகை மாயையாய் மனதில் விரிகின்றன. கதகளி பார்க்க ஆர்வம் எழுகிறது.

ஸ்டாலின்

000

கடவுச்சொல் : அரவிந்தன்

இந்தியா டுடே (தமிழ்) காலச்சுவடு, என அச்சிதழ்களோடும் சில இணைய இதழ்களிலும் ஆசிரியப்பொறுப்பில் இருந்ததால் இதழாளராக அறியப்படுபவர் அரவிந்தன். அவற்றில் விவாதிக்கத்தக்க கட்டுரைகளை அதிகம் எழுதியவர். அதனால் அவரது அடையாளம் இதழாளர் என்பதாக ஆகியிருக்கிறது. கட்டுரைகளோடு சமகால நிகழ்வுகளை விவாதப்படுத்தும் புனைகதைகளை – நாவலாகவும் சிறுகதையாகவும் எழுதிக் கொண்டிருப்பவர்.

அண்மையில் அம்ருதாவில் எழுதிய முகங்களைத் தொடர்ந்து அகழ் இணைய இதழில் ‘ கடவுச்சொல்’ என்றொரு கதையை வாசிக்கத்தந்துள்ளார். நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் கணினியின் வரவும் பயன்பாடும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள சூழலைப் பின்னணியாகக் கொண்ட கதை. பருண்மையான வெளியாக இல்லாமல், அரூபமான – ஆறாம் திணையாக இருக்கும் கணினித்திரையைக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த முடியும். ஆனால் அவரவர்க்கான அந்தரங்கத்தைப் பேண வேண்டுமென்றால் அதற்கெனத் தனித்தனிக் கடவுச்சொற்களை உருவாக்கிப் பூட்டிக்கொள்ளவும் வேண்டும். அந்தக் கவனம் பிசகினால் என்ன நேரிடும்?

இந்தக் கேள்விக்கான விடையை விவாதிப்படுத்தியிருக்கும் கதையின் முன்பகுதியில் அறம்போதிக்கும் தொனியை நோக்கி நகர்த்தியிருக்கிறார் அரவிந்தன். ஆனால் அந்தப் பிரச்சினையைத் தனது படிப்பு மற்றும் அறிதல் வழியாக எளிதாகக் கடந்து சென்று தீர்வைத் தரும் மகளைக் கதைக்குள் உருவாக்கியதின் வழி நிகழ்காலத்திற்கான கதையாகவும் மாற்றியிருக்கிறார்.

பதின் வயதுகளின் தொடக்கத்திலிருக்கும் பிள்ளைகள் – மகள் அல்லது மகனோடு – பழகும் பெற்றோர்களின் உலகம் கதைப்பொருளாகியிருக்கிறது.

வாசித்துப் பாருங்கள்.

[பின்குறிப்பு: கதாசிரியர் அனுப்பும் கதையில் இருக்கும் தட்டச்சுப்பிழைகளைச் சரிசெய்ய வேண்டியது இதழாசிரியர்களின் பொறுப்பு என நினைக்கிறேன். அகழ் இதழின் ஆசிரியர் குழு அதனைத் தவறு விடுகிறார்கள்]

அ.ராமசாமி (முகநூல் பக்கத்திலிருந்து)

000

கடவுச் சொல் கதை படித்தேன். வாரமலர் கதையையே நீட்டி எழுதிய மாதிரி இருக்கிறது. அமெச்சூரான பேசுபொருள். அமெச்சூரான நடை. நவீன வாழ்க்கையின் பிரச்சனையை எடுத்து கொள்வதனாலேயே ஒரு கதை நவீனமாகிவிடாது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

துரைரத்தினம்

000

செம்பொன் சிலை : சுரேஷ்குமார இந்திரஜித்

‘செம்பொன் சிலை’ சிறு கதையிலுள்ள காட்சி, உரையாடல் என எல்லாம் மிகையில்லாதது. இந்த கதையின் எழுத்து நடை செறிவானது. கதாபாத்திரங்களின் செயல் மற்றும் உணர்வுகள் எளிமையாக கடந்து போனாலும், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏ.கருணாகரன்

000

சுரேஷ்குமார் இந்திரஜித் கதைகளில் சின்னதாய் ஒரு படிமம் எப்போதும் இருக்கிறது. அது இல்லையென்றால் ரொம்ப சாதாரணமாக தோன்றிவிடும். இந்த கதையில் அப்பெண்ணை “செம்பொன் சிலை” என்று சொல்லும் இடம் தான் அவருடைய டச் வெளிப்படும் இடம். மற்ற எல்லா நிகழ்வுகளும் நேரடியாக சொல்லப்படும்போது ஒரு சின்ன மிகை கவிதை போல் மாறிவிடுகிறது. ஆனால் இது மட்டுமே ஒரு நல்ல கதைக்கு போதுமா என்றும் தெரியவில்லை.

ரவிமூர்த்தி

உரையாடலுக்கு

Your email address will not be published.