ரவி அழுதுகொண்டிருந்தான். மழை தூறத் தொடங்கியது. அவனுக்கு
அழுதுகொண்டே மழையில் நிற்கவேண்டும் என்று தோன்றியது. அவன்
படியிறங்கி வாசலுக்கு வந்ததும் மழை பெய்தது. செல்போனை ஹாலில் உள்ள மேஜையில் வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. மழையில் செல்போன்
நனைந்தால், புதிது வாங்கவேண்டியிருக்குமே.
செடிகள் மழையில் நனைந்துகொண்டிருந்தன. பழுத்த இலை ஒன்று செடிகளின்
கீழே கிடந்தது. மழை வலுத்ததால் தண்ணீர் ஓடியது. அந்த பழுத்த இலையைப்
பற்றிக்கொண்டு ஒரு புழு ஊர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தான். பழுத்த இலை
செடிகளின் கீழ்ப்புறத்தில் கிடந்ததாலும் தண்ணீர் செல்லும் வழியில் செடியின்
கிளைகள், கற்கள் மறித்திருந்ததாலும் தண்ணீரால் அடித்துச் செல்லப்படாமல்
கிடந்தது. மழைநீரில் இலை அடித்துச் செல்லப்பட்டால் புழு இறந்துபோக நேரிடும்
என்று ரவி நினைத்தான்.
வீட்டு வாசலுக்கு வந்த ராணி அக்கா, அவன் மழையில் நனைந்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனைத் தன் வீட்டிற்கு அவள் அழைத்து வந்தாள். அவன் திண்ணையில் உட்கார்ந்தான். ராணி அக்கா உள்ளே போய் துண்டை எடுத்துவந்து ரவியிடம் கொடுத்தாள். அவன் துண்டை வாங்கி மடியில் வைத்துக்கொண்டான். ராணி அக்கா துண்டை எடுத்து ரவியின் தலையைத் துவட்டினாள். அவன் தலை ஆடியது. அவளின் அண்மையை அவன் உணர்ந்தான்.
“என்னடா அப்பா திட்னாரா” என்று கேட்டாள் ராணி.
“ஆமா. நான் என்ன வேலை தேடாமலா இருக்கேன். பரீட்சை எழுதறேன். ரெண்டு
எழுதி கிடைக்காமப் போச்சு. ரெண்டு பரீட்சை ரிசல்ட் வரவேண்டியிருக்கு. எப்பப்
பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்காரு.”
“அம்மா எதும் அப்பாகிட்டே சொல்லமாட்டாங்களா.”
“வாயையே திறக்கமாட்டாள். அவ்வளவு பயம். அவரை எதிர்த்தோ மீறியோ பேசி
நான் பாத்ததில்லை. ஏதாவது சின்ன விசயத்துக்கு அவருக்கு மாறுபட்ட கருத்தை
மென்னு முழுங்கி அம்மா சொன்னாலும் அவர் கடுமையா திட்டுவார். பொம்மை
மாதிரிதான்.”
“அதுக்கு ஏன் மழையிலே நின்னே.”
“என்னை நானே தண்டிச்சுக்கிறேன். என் அப்பாவுக்கு என்மேலே பரிதாபம்
ஏற்படணும்னு நெனைச்சேன். அவர் ஈசிசேரிலே படுத்து பேப்பர் படிச்சிட்டு
இருக்காரு. அம்மா வெளியே வரப்பாக்கறா. உள்ளே போன்னு அவர் மெரட்றாரு.
அதுக்குள்ளே நீ வந்து இழுத்துட்டு வந்துட்டே. அவரு என்னன்னு எட்டிப் பாத்தாரா.
கல்லு மாதிரி ஈசிசேரிலே படுத்துருக்காரு. இரக்கமில்லா மனுஷன். ஒரு
காலத்துலே உடம்பு சரியில்லாமப் போகுமே. அப்ப மகன் நான்தானே
காப்பாத்தணும்னு சிந்தனைகூட இல்லை.”
“நீ என்ன பதிலுக்குக் கொடுமைப்படுத்தப் போறியா.”
“இவர் அளவுக்கு நான் இரக்கமில்லாதவன் இல்லை.”
“உங்க அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு, அந்தக் குடும்பத்துக்குக்
குழந்தைகள் இல்லை”
“ஆமா. குழந்தைகள் இல்லை. அந்த வீடும் இந்த வீடுமாத்தான் வந்து
போய்க்கிட்டிருக்காரு. என்மேலேதான் வெறுப்பைக் கொட்றாரு.”
“நீ அந்தக் குடும்பம் பத்தி உங்க அப்பாகிட்டே பேசினியா. அதனாலே கோபமா
இருக்காரா,”
“நான் எதுவும் பேசலை. பேசவும் முடியாது. அப்பாவோட வாக்குவாதம் வர்றப்ப
அம்மாவும் அந்தக் குடும்பத்தைப் பத்தி பேசி நான் கேட்டதில்லை.”
ராணி அக்கா நெருக்கத்தில் இருந்தாள். அக்கா என்றுதான் அழைக்கிறான்.
அதற்காக அவள் கூந்தலின் நுறுமணத்தை உணரக்கூடாதா. நறுமணம் வீசியது.
மழை தூறலாக மாறியது. திடீரென்று மஞ்சள் வெயில் தூறலுடன்
இணைந்துகொண்டது. அழகான காட்சியாக இருந்தது. எதிர்வீட்டிலிருந்து பரிபூரணி
வெளியே வந்து வாசலில் நின்றாள். ராணி அக்கா அவனுடைய அண்மையை
விட்டு விலகி எதிர்த்திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.
பரிபூரணிக்கு அளவெடுத்து அமைந்தது போன்ற உடலமைப்பு. அடர்ந்த கூந்தல்.
அவள் இந்த மழைத்தூறல், மஞ்சள் வெயில் இருக்கும் நிலையில் பொன்னிறமாக
இருந்தாள். ரவிக்கு உறவுக்காரப் பெண். முறையும் சரியாக வருகிறது. எல்லாம்
கூடி வரவேண்டுமே. அவன் பொதுவாகவே அதிர்ஷ்டம் இல்லாதவன். அவனது
அப்பாவிற்கும் தெருவில் நல்ல பெயர் இல்லை.
மழை நின்றது. அப்பா வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதைப் பார்த்தான்.
“டேய் அப்பா வெளியே போறார். நீ வீட்டுக்குப் போறதுன்னா போ.”
“டிரஸ் நனைஞ்சி போச்சு. மாத்தணும்” என்று சொன்னானே தவிர, அவன்
பரிபூரணியை அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறான். ராணி அக்கா, அவன்
பரிபூரணியைப் பார்ப்பதைக் கவனித்தாள்.
“பூரணி அழகி” என்றாள் ராணி அக்கா.
“அழகிதான். எங்கம்மாவும் ஒரு காலத்துலே அழகியாத்தான் இருந்தாள்.”
“அசட்டுத்தனமா பேசாதே. வயசானா அழகு பழைய இடத்துலே அப்படியே
நிக்குமாக்கும். எனக்கு கால்வாசி அழகு குறைஞ்சாச்சு.”
வெயிலில் மழை தூறும்போது செம்பொன் நிறமாக மாறிய பரிபூரணியை அவன்
பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவள் செம்பொன்
சிலைதான். சற்றுநேரத்தில் அந்தச் செம்பொன் சிலை வீட்டிற்குள் சென்றது. அவன், ராணி அக்காவிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
“ஏண்டா அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாதா. அவர் திட்டுனா இப்படித்தான்
மழையிலே நின்னு நனையிறதா. காச்சல் வந்தா துயரந்தானே. அவர் நீ
நனையிறதை ஒரு தடவை பார்த்தார். அப்பறம் பேப்பர் படிக்கறார். படிச்சதையே
படிக்கறார். பிடிவாதக்காரர். அன்பு இல்லைன்னு சொல்லமாட்டேன்.
வெளிக்காட்டமாட்டார். போயி டிரஸ் மாத்திக்க” என்றாள் அம்மா.
ரவி அம்மாவைப் பார்த்தான். துயரத்தின் ரேகை உள்ளே ஓடும் முகம். அவள்
சிரிப்பெல்லாம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. பழைய தோழிகள்
யாராவது அப்பா இல்லாத சமயம் வந்தால் அம்மா மகிழ்ச்சியாக, உற்சாகமாக
இருப்பாள். அவள் அப்போது ஒரு இயல்பான பெண். பிற சமயங்களில்
இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண். கணவர் என்னும் மன
அழுத்தத்தைச் சுமந்துகொண்டே வாழ்நாட்களைக் கழித்துவிட்டாள். எஞ்சிய
நாட்களையும் கடக்கவேண்டிய நிலை அவளுக்கு.
உள்ளே சென்று ஆடைகளை மாற்றி வந்தான். “அப்பா எப்ப வருவாரு” என்று
கேட்டான்.
“இன்னைக்கு வரமாட்டாரு. நாளைக்கி சாயந்திரம்தான் வருவாரு.”
அவனுக்குப் புரிந்துவிட்டது. அப்பா இன்னொரு மனைவியின் வீட்டுக்குச்
செல்கிறார் என்று பொருள். அமிர்தாஞ்சனம் வாசனை அடித்தது. அம்மா நெற்றிப்
பொட்டில் தடவியிருக்கிறாள். எங்கு சென்றாலும், காய்கறி வாங்கச் சென்றாலும்,
அமிர்தாஞ்சனத்தைக் கொண்டுசெல்வாள். பர்சுக்குள் வைத்துக்கொள்வாள். ஒரு
நாளில் பலதடவை தடவிக்கொள்வாள். அம்மாவுடன் இருக்கும்போது அமிர்தாஞ்சனம் வாசனையை நுகர்ந்துகொண்டுதான் இருக்கவேண்டும். அவளுக்கும் பழகிப்போய்விட்டது. அமிர்தாஞ்சனம் வாசனை இல்லாவிட்டால் அவளுக்கு இயல்பாக இருக்கமுடியாது.
“அம்மா ரெண்டு பரீட்சை எழுதியிருக்கேன். ஒண்ணு இன்டர்வியூ போஸ்ட். இது
உயர்ந்த போஸ்ட். சிபாரிசுக்கெல்லாம் இடம் இருக்கும். இன்னொண்ணு இன்டர்வியூ இல்லாத போஸ்ட். இது கீழ்நிலை போஸ்ட். இது எனக்கு உறுதியா கிடைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலை சரியா அமைஞ்சா அந்த உயர்ந்த போஸ்டுக்குக்கூட செலக்ட் ஆகலாம். பிரிலிமினரி, மெயின் பாஸ் ஆகியிருக்கேன்.
இன்டர்வியூலே செலக்ட் ஆகிட்டேன்னா டெபுடி கலெக்டர் அல்லது டி.எஸ்.பி.
நான் இந்த மாதிரி உத்தியோகத்துக்குப் போயிட்டா அப்பா திட்டுவாரா.
அப்பாவைத்தான் நான் திட்டுவேன்.”
“அப்பாவை ஏன்டா திட்டணும். அது அவரு சுபாவம். நான் என்னென்னவோ
நினைச்சி வந்தேன். எல்லாம் தலைகீழாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. நல்ல
கற்பனைங்கிறது நல்ல கனவுதான் போலிருக்கு. நீ எப்படியும் பெரிய, உயர்ந்த
வேலைக்குப் போயிருவே. என் உள்மனசு சொல்லுது. ஆனா அப்ப இவரு இங்கேயே இருப்பாரா அல்லது அந்தக் குடும்பத்தோட போயி இருக்கப் போறாரான்னு தெரியலை. நீ இப்ப வேலையில்லாம இருக்கே. நான் வீட்டைக் கவனிச்சுக்கற மனைவி. உனக்கு வேலை கிடைச்சுருச்சுன்னா, நீ என்னைப் பொருளாதார ரீதியா பாத்துக்குவேன்னு அவருக்குத் தெரியும். அந்தப் பொண்ணு தனி ஆள். அதனாலே அங்கேயே போயிருவாருன்னு தோணுது.”
அம்மா அமிர்தாஞ்சனத்தை விரல்களில் எடுத்து நெற்றிப் பொட்டில்
தடவிக்கொண்டாள். ரவி அப்பா அமரும் ஈஸிசேரில் அமர்ந்தான். அப்பாவின் குணம் தன்னைத் தொற்றிக்கொள்வது போன்ற பிரமை ஏற்பட்டது.
“நீ அப்பாவோட சண்டை போட்டுத் தடுத்துருக்கணும். உனக்குத் தாழ்வு
மனப்பான்மை. அதுனாலே பேசாம இருந்துட்டே.”
“நீ எனக்குச் சின்னப் பையன்தான். இப்ப சொல்றேன். சண்டைன்னா அப்படி ஒரு
சண்டை. சண்டை முத்தி விறகுக் கட்டையை எடுத்துட்டேன். சொன்னா நம்பமாட்டே. நெடுஞ்சாண்கிடையா என் கால்லே விழுந்து காலைப் பிடிச்சுக்கிட்டாரு. ‘என்னாலே விட முடியாது. என்னை நம்பி வந்த பொண்ணு’ங்கிறார். நான் என்ன செய்யமுடியும், சொல்லு. நான் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரோட வாக்குவாதம் பண்றதில்லை. அவரோட தாவா வரும்னு தெரிஞ்சா பேச்சை நிறுத்திக்குவேன்.”
வாசலில் பரிபூரணியின் அம்மா காமாட்சி வருவது தெரிந்தது. கையில் சிறு
பாத்திரத்துடன் வந்தாள்.
“கேசரி செஞ்சேன். கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றாள் காமாட்சி.
ரவி தன் அறைக்குள் சென்றான். ரவியின் அம்மா அறைக்குள் வந்து கேசரி உள்ள
சிறு கிண்ணத்தை ரவியிடம் கொடுத்தாள். ஆரஞ்சு நிறத்தில் கேசரி மின்னயது.
அதில் வெளியே தெரியுமாறு இரண்டு முழு முந்திரிப்பருப்பு புதைந்திருந்தது.
உள்ளே ஒன்றிரண்டு முந்திரிப்பருப்பு இருக்கலாம். ஸ்பூனில் எடுத்து வாயில்
போட்டான். கேசரி இனிப்பாக வாயில் கரைந்தது. முந்திரிப்பருப்பைக் கடித்துத் தின்றான். பரிபூரணியை நினைத்துக்கொண்டான். பரிபூரணியின் அம்மா
காமாட்சியும் அவனுடைய அம்மாவும் பேசுவதை ஒட்டுக்கேட்டான். அரைகுறையாகக் காதில் விழுந்தது. பரிபூரணியின் கல்யாணம் தொடர்பாக ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்தது. ரவிக்குத் திகைப்பு ஏற்பட்டது. தனக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அதுவரை பரிபூரணியின் கல்யாணப் பேச்சு தாமதப்படவேண்டும் என்று விரும்பினான்.
காமாட்சி சென்றுவிட்டாள். அறையை விட்டு வெளியே வந்த ரவி, கேசரி தயார்
பண்ணி காமாட்சி கொடுத்ததற்கு ஏதாவது விசேஷம் காரணமா என்று கேட்டான்.
“இல்லை. காரணம் ஒன்றுமில்லை. கேசரி தயார் பண்ணணும்னு தோணி
பண்ணியிருக்காங்க. அப்படியே நமக்கும் கொடுத்திருக்காங்க” என்றாள்.
ரவி வாசலுக்கு வந்தான். பூக்காரியிடம் பரிபூரணி பேசி மல்லிகைப்பூ
வாங்கிக்கொண்டிருந்தாள். செம்பொன் சிலைதான். அவள் ரவியைப் பார்த்தாள்.
பிறகு பூச்சரத்துடன் உள்ளே சென்றுவிட்டாள். ரவி வீட்டிற்குள் வந்தான்.
“உனக்கு சீக்கிரமா வேலை கிடைச்சிருமாடா. பரிபூரணிக்கு வரன் வந்தது, ஜாதகம்
அமையலைன்னு காமாட்சி சொன்னாள்” என்றாள் அம்மா.
“சர்வீஸ் கமிஷன் எப்ப இன்டர்வியூ வைக்கிறாங்கன்னு தெரியலை.
இன்டர்வியூக்கு அப்புறம் எப்ப ரிசல்ட் போடுவாங்கன்னும் தெரியலை. நான்
செலக்ட் ஆவேனாங்கிறதும் தெரியலை.”
“பரிபூரணி பூரணமான அழகுள்ள பெண்” என்றாள் அம்மா. ரவி ஒன்றும்
பேசவில்லை. ‘ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எப்படி எப்படியோ நிர்ணயிக்கப்படுது’
என்று நினைத்தான்.
“உனக்கு எப்போ வேலை கிடைச்சு அப்புறம் வேலைக்குச் சேந்து, உடனேயேவா
கல்யாணப் பேச்சு எடுக்க முடியும். எவ்வளவு காலம் பிடிக்கும்னு தெரியலையே”
என்றாள்.
பழுத்த இலைமீது, அதைப் பற்றிக்கொண்டு ஊர்ந்த புழுவை ரவி நினைத்துக்கொண்டான். அமிர்தாஞ்சனம் வாசனை அடித்தது. செம்பொன் சிலை
மின்னலைப்போல வாசலைக் கடந்து செல்வதைப் பார்த்தான்.
சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.
‘செம்பொன் சிலை’ சிறு கதையிலுள்ள காட்சி, உரையாடல் என எல்லாம் மிகையில்லாதது. இந்த கதையின் எழுத்து நடை செறிவானது. கதாபாத்திரங்களின் செயல் மற்றும் உணர்வுகள் எளிமையாக கடந்து போனாலும், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.