/

தத்துவத்தின் மதிப்பு : பெர்ட்ரன்ட் ரஸ்ஸல்

தமிழில் : ஜனார்த்தனன் இளங்கோ

ஓவியம் : எட்வர்ட் மூனிச்

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்(Bertrand Arthur William Russell) நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கணிதவியலாளரும் தத்துவவாதியும் ஆவார். கணிதவியலை முதன்மையான ஆர்வமாகக் கொண்டிருந்த போதிலும், ‘Analytical philosophy’ தத்துவத் துறையில் அவர் செய்த முதன்மையான பங்களிப்புகளினால் புகழ்பெற்ற தத்துவவாதியாக அறியப்படுகிறார். தத்துவவாதி விட்ஜென்ஸ்டைன்(Wittgenstein) அவருடைய நேரடி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஸ்ஸலின் ‘The problems of philosophy’ என்னும் நூலின் கடைசி அத்தியாயம் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஒரு நடைமுறை மனிதருக்கு தோன்றும் ‘தத்துவத்தின் மதிப்பு என்ன’ என்ற கேள்விக்கு பதிலளிப்பதில் இருந்து இக்கட்டுரையை துவங்குகிறார் ரஸ்ஸல். எப்படி தத்துவத்திற்கு அது எழுப்பும் கேள்விகளே முக்கியமாக இருக்கிறது என்று விளக்கும் அதே சமயம், அக் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன் எப்படி அவை தத்துவத்தில் இருந்து நழுவி தனித்தனி அறிவியல் துறைகளாக மாறிவிடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். தத்துவம் எவ்வாறு நம்மை சுயநலத்தில் இருந்து விடுவித்து சிந்தனையை விசாலமாக்குகிறது என்று இக்கட்டுரையில் மிக விரிவாக விளக்குகிறார். இங்கு தத்துவ விசாரணைக்கு பழகும் மனதில் தோன்றும் உணர்ச்சி உலகளாவிய அன்பாக மாறுவதாக ரஸ்ஸல் கூறுவதைத்தான் கவிஞனும் வேறு வார்த்தைகளில் ‘ஓர் அன்னை போல தத்துவம் உதவி செய்யும்’ என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்.

***

இந்த நூலின் முந்தைய பகுதிகளில் விவரிக்கப்பட்ட முக்கியமான தத்துவ சிக்கல்களைத் தொடர்ந்து இறுதியாக தத்துவத்தினால் என்ன பயன் என்றும், அதை எதற்காக பயில வேண்டும் என்றும் யோசிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தக்கேள்வியை எழுப்பிக்கொள்வது ஏன் அவசியமாகிறதென்றால், நடைமுறையாலும் அறிவியலாலும் தாக்கமுற்ற பெரும்பாலானவர்கள் தத்துவத்திற்கு உண்மையில் ஏதேனும் மதிப்புள்ளதா என்று ஐயம் கொள்கின்றனர். அவர்கள் எல்லோரும் தத்துவத்தை வீன் வேலையாக, ஒருவகை மயிர் பிளக்கும் விவாதமாகத் தான் பார்க்கின்றனர். தத்துவம் என்பதே எந்தவித உபயோகமான அறிதலுக்கும் சாத்தியமில்லாத வீண் சச்சரவு என்று நினைக்கிறார்கள்.

மனித வாழ்க்கையின் எல்லைகளைப் பற்றியும், தத்துவம் அடைய முனையும் நன்மைகளைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களே இப்படியான மதிப்பீடுகளுக்கு முக்கியக் காரணம். ஒருபக்கம் அறிவியல் கல்வியானது அதன் கண்டுபிடிப்புகளின் மூலமாக எண்ணற்ற மக்களுக்கு உபயோகமானதாக இருக்கிறது.  அறிவியலைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் இத்தகைய கண்டுபிடிப்புகளால் பயன்பெறுகிறார்கள். இதனால் அறிவியல் கல்வியானது அதைக் கற்பவர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பயனுடையதாக பார்க்கப்படுகிறது. ஆகையால் பொதுக்கல்வியாக அது சுலமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. தத்துவத்திற்கு இம்மாதிரியான ஒரு பயன்மதிப்போ பொது-ஏற்போ இல்லை. பயில்பவரைத் தவிர்த்து, பிற எவருக்கும் தத்துவத்தால் நேரடியான எந்த பயனும் இல்லை. எனவே அதைப் பயில்பவரின் வாழ்க்கை  உருவாக்கும் மறைமுகமான விளைவுகளின் வழியாகத்தான் நாம் தத்துவத்தின் மதிப்பைக் கண்டடைய முயலவேண்டும்.

தத்துவத்தின் மதிப்பைக் கண்டறியும் முயற்சியில் வெற்றியடைய வேண்டுமானால், யார் ‘நடைமுறை’ மனிதர் என்பதைப்பற்றிய தவறான கற்பிதங்களை முதலில் களைய வேண்டும். ‘நடைமுறை’ மனிதர் என்பவர் பொதுவாக உடலியல், பொருளியல் சார்ந்த தேவைகளை அங்கீகரிப்பவர்; ஆனால் சிந்திக்கும் மனதிற்கான தேவைகளைப் புறந்தள்ளி அறியாமையில் வாழ்பவர் எனலாம். இங்கு ஒரு நடைமுறை மனிதர் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் பசியும் பட்டினியும் மறைந்து, எல்லா மனிதர்களும் ஆரோக்கியமான நிலையை அடைந்துவிட்டாலும் கூட ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கவேண்டிய தேவை எஞ்சவே செய்கிறது. தற்போதைய நிலையிலேயே கூட ஆரோகியமான உடல்நலத்திற்கு ஈடாக மனநலமும் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. தத்துவத்தின் மதிப்பு மனித மனதின் இந்த நன்மையை ஒட்டியே இருக்கிறது. குறைந்தபட்சமாக இந்த நன்மையை அங்கீகரிப்பவர்களிடம் தான் தத்துவத்தை கற்பது வீண்வேலை இல்லையென்று புரியவைக்க முடியும்.

மற்ற துறைகளைப் போல தத்துவத்திற்கும் அறிவை ஈட்டிக்கொள்வதே முதன்மையான இலக்கு. அது அடைய உத்தேசிக்கும் அறிவானது எல்லா அறிவியலின் துறைகளுக்கும் இடையே ஒரு ஒத்திசைவை அளிக்கிறது. நம்முடைய முன்முடிவுகளை, நம்பிக்கைகளின் அடிப்படைகளை மிகத்தீவிரமாக பரிசீலிப்பதன் விளைவாக இந்த அறிவு உருவாகிறது. தத்துவம் அது எழுப்பும் எந்தக் கேள்விக்கும் திட்டவட்டமான பதிலை அளிப்பதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு கணிதவியலாளரையோ, வரலாற்று ஆய்வாளரையோ அவருடைய துறையில் இருந்து எவ்வளவு திட்டவட்டமான உண்மைகள் கிடைத்துள்ளதென்று கேட்டால், நாம் கேட்க விரும்பும் வரை அவரால் பதிலகளை அடுக்க இயலும். மாறாக அதே கேள்வியை ஒரு தத்துவவாதியிடம் முன்வைத்தால் -அவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில்- தம்முடைய ஆய்விலிருந்து அம்மாதிரி உறுதியான, உபயோகமான முடிவுகள் எதுவும் பெறப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்வார். இதற்கு முக்கியக்காரணம் எந்தவொரு தத்துவத் துறையில் இருந்தும் திட்டவட்டமான முடிவுகள் வர ஆரம்பித்தவுடன் அது தத்துவத்தில் இருந்து நழுவி தனித்த அறிவியல் துறையாக மாறிவிடுவது தான். இப்போது வானியல் துறையாக இருக்கும் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியானது ஒரு காலத்தில் தத்துவத்தின் பகுதியாகவே இருந்தது; நியூட்டனின் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் ‘இயற்கைத் தத்துவத்தினுடைய கணிதவியல் கோட்பாடுகள்’ என்று அப்போது அழைக்கப்பட்டது. அதுபோல மனித மனதைப் பற்றிய ஆய்வும் முன்னர் தத்துவத்தின் பகுதியாகவே இருந்து, பின்னர் ‘உளவியலாக’ அறிவியலின் தனிப்பகுதியானது. அதனால் வெளித்தோற்றத்திற்கு புலப்படும் தத்துவத்தின் நிச்சயமற்ற தன்மை எனபது உண்மையில் இல்லை. இப்படிச் சொல்லலாம்: முளைவிடும் கேள்விகளில் திட்டவட்டமான பதில்களை அடையச் சாத்தியமானவை எல்லாம் அறிவியலின் கீழ் வைக்கப்படுகிறது; திட்டவட்டமான பதில்களைப் பெறமுடியாமல் எஞ்சும் கேள்விகள் எல்லாம் தத்துவமாகத் திரள்கிறது.

தத்துவத்தின் தெளிவின்மையைப் பற்றிய  பாதி உண்மையைத் தான் இது நமக்கு வெளிப்படுத்துகிறது. ஏனெனில் மறுபக்கம் நம் ஆன்மீக வாழ்க்கைக்கு ஆர்வமூட்டும் தீவிரமான கேள்விகள் பலவும் தற்போதுவரை மனித அறிவினால் தீர்க்க முடியாதாகவே இருக்கிறது. ஒருவேளை மனித அறிவின் சக்தியானது தற்போதைய நிலையில் இருந்து மாற்றமடைந்து நாம் கற்பனை செய்யமுடியாத வேறொரு நிலையை எட்டினால் அத்தகைய சிக்கலான கேள்விகளுக்கு தீர்வு கிட்டலாம். உதாரணமாக, பிரபஞ்சத்திற்கென்று ஏதேனும் ஒருங்கிணைந்த திட்டமோ, நோக்கமோ இருக்கிறதா? அல்லது அது வெறும் அணுக்களின் தற்செயலான சேர்க்கையின் விளைவு மட்டும்தானா? தன்னுணர்வு(consciousness) என்பது இந்த பிரபஞ்சத்தின் நிரந்தரமான ஒரு அங்கமா? ஞானம்(wisdom) முடிவில்லாமல் வளர்வதற்கு அது துணைபுரியுமா?  இல்லை தன்னுணர்வு என்பது குறைந்த காலம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு தற்செயலான விபத்துதானா?  பூமி என்னும் இச்சிறிய கோளில் ஒருகட்டத்தில் வாழ்க்கைக்கான சாத்தியமே இல்லாமல் போய்விடுமா? இப்பிரபஞ்சத்தில் உண்மையிலேயே நன்மைக்கும் தீமைக்கும் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? அல்லது இவை மனிதர்களுக்கு மட்டும்தான் முக்கியமானவையா?.. 

தத்துவம் இப்படியான பல அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பல தத்துவவாதிகள் வெவ்வேறு வகைகளில் பதிலும் அளித்து வந்திருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு தத்துவத்தைத் தவிர்த்து வேறுவகையில் பதில் கிடைத்தாலும் கூட, தத்துவம் முன்வைத்த பதில்களை சரியென்று துல்லியமாக நிறுவுவது இயலாத விஷயம். அதுபோல தீர்க்கமான பதில்களுக்கான வாய்ப்பு எவ்வளவு குறைவாக இருந்தாலும், இம்மாதிரியான கேள்விகளை எடுத்துக் கொண்டு ஆராய்வது தத்துவத்தின் முதன்மையான குறிக்கோள். அத்துடன் இத்தகைய கேள்விகளுக்கான எல்லா வழிமுறைகளையும் பரிசீலிப்பதும், அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் கூட தத்துவத்தின் முக்கியமான பணியே. நம்மை நாமே திட்டவட்டமான நிரூபன அறிவினால் குறுக்கிக் கொள்வதில் இருந்து ஊகித்தறிவதின் ஆர்வத்தை மீட்டு, அதை உயிர்ப்புடன் தக்கவைப்பதும் தத்துவம் தான்.

இதற்கு நேர்மாறாக சில தத்துவவாதிகள் இம்மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களைப் பெறமுடியும் என்று கருதினார்கள். அவர்களில் சிலர் மத நம்பிக்கைகளில் மிக முக்கியமானவற்றை கூட கறாரான நிரூபணம் மூலம் சரியென நிறுவ முடியும் என்று நம்பினர். நாம் இத்தகைய முயற்சிகளை மதிப்பிட முனைவதற்கு முன், மனித அறிவு செயல்படும் எல்லா வழிமுறைகளையும் அதன் எல்லைகளோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தத்துவத்தின் மதிப்பு தொடர்பான விவாதத்திலும் கூட எத்தகைய திட்டவட்டமான பதில்களையும் நம்மால் சேர்க்க முடியாதபடி ஆகிறது. எனவே தத்துவத்தைப் பயில்பவருக்கு கிடைக்கப்பெறுவதைப் போலத் தெரியும் திட்டவட்டமான அறிவைக் கொண்டு அதனுடைய மதிப்பைக் கணக்கிட முடியாது.

மொத்தத்தில் தத்துவத்தின் மதிப்பானது அதன் ஸ்திரமற்ற தன்மையில் இருந்தே கண்டடையப் பட வேண்டும். சலவை செய்யப்பட்ட தூய்மையான ஆடையை ஒத்த ஒரு மனிதனின் சிந்தனைப் பரப்பில், தத்துவ உபயோகத்தினால் உருவாகும் சுருக்கங்கள் எதுவும் விழாதபோது அவன் பகுத்தறிவின் மூலம் உண்டாகும் முன்முடிவுகளாலும், தன் வயது, இனம் சார்ந்த நம்பிக்கைகளாலும் பீடிக்கப்பட்ட ஒரு வாழ்வையே மேற்கொள்கிறான். காரண அறிவின் துணையில்லாமல் அவனுள் தனிச்சையாய் உண்டாகிற முன்தீர்மானங்களால் அந்த வாழ்க்கை அடித்துச் செல்லப்படுகிறது. அப்படியான ஒரு மனிதனுக்கு இந்த உலகம் திட்டவட்டமானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. புறவுலகில் இயல்பாக இருக்கும் எதுவும் அவனுள் எந்தவித கேள்விகளையும் உண்டுபன்னுவதில்லை. அவனுக்கு அறிமுகமில்லாதவற்றின் சாத்தியக்கூறுகளை எல்லாம் அவன் பொருட்படுத்தாமல் வெறுத்து ஒதுக்குகிறான். இதற்கு நேர்மாறாக ஒருவர் தத்துவப்படுத்தப்படும் போது, அன்றாட விஷயங்களாக இருப்பவை கூட அவருக்கு பெரும் பிரச்சனைகளாக உருவெடுத்துவிடுகிறது; எவ்வளவுதான் சிந்தித்தாலும் அவற்றிற்கு எந்தவித திட்டவட்டமான பதிலும் அவருக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறான சந்தேகங்களுக்கு தத்துவம் சரியான, துல்லியமான பதிலைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதைக் கைக்கொள்பவருக்கு எண்ணிலடங்கா சாத்தியக்கூறுகளை அளிக்கிறது. நம்முள் இறுகியிருக்கும் திட்டவட்டமான அபிப்பிராயங்களை அகற்றி, ஒரு விஷயம் என்னவாகவெல்லாம் இருக்கக்கூடும் என்று சிந்திக்கவைக்கும் ஊக அறிவை அதிகரிக்கிறது. சந்தேகப் பிரதேசத்தை நோக்கிய சிந்தனையின் இந்தப் பயணம் ஒருவருக்கு கட்டற்ற விடுதலையுணர்வை வழங்குகிறது. இவ்வாறு பயணப்படாத ஒருவரின் சிந்தனையில் எஞ்சுவது வெறும் மூர்க்கத்தனமான நம்பிக்கைகளே. பழக்கப்பட்ட விஷயங்களை இப்படி புத்தம்புதிய வகையில் காட்டுவதன் வழியாக தத்துவம் நம்முடைய வியப்புணர்ச்சியை  உயிர்ப்புடன் தக்கவைக்கிறது.

பெர்ட்ரன்ட் ரஸ்ஸல்

நாம் அடையும் ஊக அறிவிற்கு வெளியேயுள்ள சாத்தியங்களைத் தாண்டி, தத்துவத்தின் முக்கியமான மதிப்பு என்பது நம்முடைய சுயநலமான குறுகிய லட்சியங்களில் இருந்து கிடைக்கும் விடுதலை தான். இந்த மதிப்பு மேலான விஷயங்களை தத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவதன் வழியாக உருவாகிறது. தன்னுணர்வுடைய ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுடைய சுயலாபத்தினால் உண்டாகிற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே அடைபட்டுவிடுகிறது. தன் சொந்தக் குடும்பத்தையும் நண்பர்களையும் மட்டும் கொண்ட இந்த வட்டத்திற்கு வெளியே, இவ்வுலகிலுள்ள பிற எந்தவொன்றையும் அவன் பொருட்படுத்துவதில்லை. கூண்டுக்குள் சிக்குண்ட இந்த வாழ்வில் அவனுக்கு எஞ்சுவது பதற்றம் ஒன்றுதான். மறுபுறம் ஒருவர் தத்துவத்தால்  சுதந்திரமான, அமைதியான ஒரு வாழ்க்கையை அடையலாம். ஆற்றல்மிக்க பிரம்மாண்டமான இந்த உலகத்தின் நடுவில் அமையப் பெறும் ஒருவருடைய சுயநலமான தனிவாழ்க்கை மிகச்சிறியது. இந்த உலகின் மொத்த ஆற்றலும் சேர்ந்து அந்த தனிவாழ்க்கையை வெகுசீக்கிரத்தில் இடித்துத் தரைமட்டமாக்கிவிடும். நம்முடைய ஆர்வத்தை விசாலமாக்கி பிரம்மாண்டமான இந்த உலகத்தை நம்முடய தனிவாழ்வில் உள்ளடக்காது போனால், முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டையை அல்லும் பகலும் காத்து நிற்கும் படைவீரனைப் போல ஆகிவிடுவோம். கடைசியில் தப்பிக்க எந்த மார்க்கமும் இல்லாமல் எதிரியிடம் சரனாகதி அடையவேண்டியதுதான். ஆசையின் அழுத்தத்திற்கும் ஆன்மாவின் கையறுநிலைக்கும் இடையே நடந்தேறும் இந்தத் தொடர்போராட்டத்தின் விளைவாக அமைதியென்பதே இல்லாமலாகிவிடும்.

தீவிரமான தத்துவ விசாரணையென்பது இந்த போராட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு சிறந்த வழி. அது இவ்வுலகத்தை நண்மை-தீமை, உபயோகமானது-உபயோகமற்றது, அணுகூலமானவர்கள்-எதிரிகள் என்று பிரிப்பதில்லை; அத்துடன் எவ்வித பக்கச்சார்பையும் அது எடுப்பதில்லை. எந்த முன்முடிவுகளும் அற்ற தத்துவ விசாரணையின் இறுதி இலக்கு என்பது மொத்த பிரபஞ்சமும் மனிதனை ஒத்தவகையில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். அறிவை ஈட்டிக்கொள்வதென்பது ஒருவகையில் நம் சுயம் விரிவடைவது தான் என்றாலும் இந்த விரிவாக்கத்தை நாம் நேரடியாக அடைய முயலாமல் இருப்பதுதான் சிறந்தது. அதாவது எந்த முன்முடிவுகளும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல், நம் சுயத்தை எந்தமாதிரியான மாறுதல்களுக்கும் ஒப்புக்கொடுக்கத் துணிந்து, அங்கு அறிவுக்கான வேட்கை மட்டும் செயலாற்றும் போது நிகழும் சுய விரிவாக்கமே மேலானது. நம் சுயமும் இந்த உலகமும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டு, அதற்கு முரண்பாடன, அந்நியமான எதையும் ஏற்றுக் கொள்ளமல், உள்ளபடியே அறிவில் முழுமையை எட்டிவிடலாம் என்று எண்ணினால் அங்கு உண்மையில் எந்த சுயவிரிவாக்கமும் நிகழ்வதில்லை. இப்படி எண்ணுவதும் ஒருவகையான தன்முனைப்பு தான். நம் சுயம் அடைய முற்படும் வளர்ச்சிக்கு இந்த தன்முனைப்பு ஒரு தடையாகிறது. பிற அறிவுத்துறைகளைப் போல தத்துவத்திலும் தன்முனைப்பு என்பது முழுஉலகத்தையும் தன்னளவிற்கு குறுக்கும் தன்மை கொண்டது. இங்கு மொத்த வெளியுலகத்தின் மதிப்பையும் எல்லைகளையும் சுயமே வரையறை செய்வதால் அவற்றை அது குறைத்து மதிப்பிடுகிறது. இதற்கு நேரெதிராக சுயமற்ற நிலையில் இருந்தே தத்துவ விசாரணை துவங்குகிறது; அந்த விசாரணையின் பிரம்மாண்டத்தை அதில் ஈடுபடும் சுயத்தின் எல்லைகளும் எட்டிப் பிடிக்கிறது; எல்லையில்லா இப்பிரபஞ்சத்தை உசாவி அறிய முற்படும் மனமும் அந்த முடிவிலியின் அங்கமாகிறது.

இந்த காரணத்தினால் தான் பிரபஞ்சத்தை மனிதன அறிவின் எல்லைக்குள் சுருக்கும் தத்துவமுறைகளால் ஆன்மா எந்த வளர்ச்சியும் அடைவதில்லை. சுயம், சுயமல்லாதவற்றுடன் இணையும் போதே அங்கு அறிவு பிறக்கிறது. எந்த இணைவையும் பாதிப்பது அதிலுள்ள ஆதிக்கத் தரப்புதான். எனவே நம் தனிப்பட்ட அறிவின் எல்லைக்குள் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் திணிக்க முயன்றால் அந்த இணைவு சீர்குலைந்துபோகும்.  மனிதனே எல்லாவற்றிற்குமான அளவுகோல் என்றும், உண்மை, காலம், நேரம், பிரபஞ்ச வெளிகள் என இவையெல்லம் மனிதனால் உருவாக்கப் பட்டதே என்னும் பொதுவான ஒரு தத்துவப் பார்வை இருக்கிறது. அதோடு மனித மனதால் உருவாக்கப்படாதவை எல்லாம் மனிதனின் அறிதலுக்கு அப்பால் உள்ள சம்பந்தமில்லாத விஷயங்கள் என்றும் கூட கருதப்படுகிறது. நாம் இதுவரை விவாதித்த விஷயங்கள் சரியென்னும் பட்சத்தில் இம்மதிரியான பார்வைகள் தவறானதாகிறது. தவறாக இருப்பதற்கு அப்பால், இந்தப் பார்வை எந்த சிந்தனை விரிவையும் சுயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து,  தத்துவ விசாரணைக்கு உண்டான மொத்த மதிப்பையும் இல்லாமலாக்கி விடுகிறது. இந்த பார்வை முன்வைக்கும் அறிவில் சுயத்திற்கும், சுயம் அல்லாதவற்றிற்கும் இடையில் எந்த இணைவும் இல்லை. நமது சுயத்திற்கும் மொத்த உலகத்திற்கும் இடையே முன்முடிவுகளாலும், பழக்கவழக்கங்களாலும், ஆசைகளாலும் ஆன ஒரு ஊடுருவ முடியாத திரையையே இந்த பார்வை உருவாக்குகிறது. தன்னுடைய சொல் எடுபடாது என்னும் அச்சத்தில் தன் கூட்டை விட்டு வெளிவராத ஒரு மனிதருக்குதான் இப்படியான பார்வை மகிழ்வூட்டுவதாக இருக்கும்.

அசலான தத்துவ விசாரணையானது அது ஆராயும் அனைத்து விஷயங்களினுடைய விரிவிலும், சுயம் அல்லாதவற்றின் பிரம்மாண்டத்திலும் திருப்தியடைவதாக இருக்கும். இங்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், பழக்க வழக்கங்களும் உசாவப்படும் விஷயத்தை திரிபடையச் செய்து, மாசற்ற ஒன்றிணைவைக் குலைக்கிறது. இதனால் அறிவார்ந்த ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களே அவருடைய அறிவை முடக்கும் சிறையாகவும் மாறிவிடுகிறது. கடவுளின் பார்வைக்கு நிகரான அளவில் சுதந்திரமான அறிவின் பார்வை இருக்கிறது: அதில் எந்த இடம் பொருள் ஏவலும் இல்லை; கலாச்சார முன்முடிவுகளோ, நம்பிக்கைகளோ, பயங்களோ கூட இல்லை; அறிவின் வேட்கையை மட்டும் கொண்ட, உணர்ச்சிகள் கலக்காத, மனிதனால் சிந்தித்து அடையக்கூடிய உச்சபட்ச அறிவு மட்டுமே அங்கு அமைதியாக செயலாற்றுகிறது. தனிப்பட்ட பார்வைக்கோணமும், புலனறிவின் தாக்கமும் கொண்ட அறிவின் மதிப்பானது குறைவுபட்டதாகவே இருக்க முடியும். ஏனெனில் தனிப்பட்ட பார்வையும், புலணறிவும் அறிதலுக்கு உதவி செய்யும் அளவிற்கே அதைத் திரிபடையவும் செய்கிறது.

தத்துவ விசாரணையின் சுதந்திரத்திற்கும், பாகுபாடற்ற தன்மைக்கும் பழக்கப்படும் மனம், செயல்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான நடைமுறை உலகத்திலும் அதே சுதந்திரத்தையும், பாகுபாடற்ற தன்மையையும் தக்கவைத்துக் கொள்ளும். இதன்மூலம் இவ்வுலகில் உள்ளவற்றை சிதறுண்ட தனித்தனி பொருட்களாக எதிர்கொள்வதால் உருவாகும் அழுத்தம் மனதிற்கு இல்லாமலாகிவிடுகிறது. அது தன் தேவைகளையும் ஆசைகளையும் ஒட்டுமொத்தத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்கிறது. மனதின் இந்த பாகுபாடற்ற தன்மையே அறிவை அடைய முனையும் கலப்படமில்லா தூய வேட்கையாகிறது. மனதின் இந்த பண்பு செயலாக மாறும் போது நீதிநெறியாக ஆகிறது; உணர்ச்சியாக மாறும்போது அன்பாகிறது. அதாவது சுயநலமான விஷயங்களுக்கு என்று மட்டுமில்லாமல், எல்லோருக்கும் அளிக்கக் கூடிய உலகளாவிய அன்பு. ஆகையால் தத்துவ உசாவல் நமது சிந்தனையை மட்டும் விசாலமாக்குவதில்லை. நமது செயல்களையும், உணர்ச்சிகளையும் கூட விரிவடையச் செய்கிறது. அத்துடன் நம்மை நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைக்காமல் பிரபஞ்சத்தின் குடிமக்களாக்குகிறது. இந்த பிரபஞ்சத்தின் குடியுரிமையில்தான் குறுகலான நம்பிக்கைகளில், பயங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட உண்மையான மனித சுதந்திரம் பொதிந்திருக்கிறது. 

மொத்தத்தில் வறையறுக்கப்பட்ட பதில்களைப் பெறுவதற்காக வேண்டி தத்துவத்தை பயிலக் கூடாது. காரணம் அப்படி வறையறுக்கப்பட்ட எந்த பதில்களும் ஒருபோதும் முழுமுற்றான உண்மையாகாது. தத்துவம் அது எழுப்பும் கேள்விகளுக்காவே முதன்மையாக பயிலப்பட வேண்டும். ஏனென்றால் இப்படியான கேள்விகள்தான் சாத்தியக்கூறுகளை அதிகரித்து அதன் வழியாக நம் சிந்தனைத்தளத்தை பெரிதுபடுத்துகிறது. அத்துடன் நம் பிடிவாதங்களை வலுவிழக்கவைத்து, ஊகங்களை நோக்கி நம்முடைய மனதைத் திறந்துவைப்பதன் மூலம் நம் அறிவார்ந்த கற்பனையையும் வளப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தாண்டி, தத்துவத்தால் உசாவி அறியமுற்படும் இந்த பிரபஞ்சத்தின் மகத்துவத்தால் நம்முடைய மனமும் உயர்வடைந்து, அதனுடைய உச்சபட்ச  மேன்மையைப் பெறுவதற்கு தகுதியுடையதாகிறது.

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

4 Comments

  1. ரஸலின் படைப்புகள் தமிழில் கிடைப்பது மகிழ்வளிக்கிறது. நன்றி.

  2. Typo? ஊகங்களை நேக்கி ?
    Or ஊகங்களை நீக்கி?

    • தட்டச்சு பிழையை திருத்திவிட்டோம். நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.