பத்து ரூபாய் & பேபி ஜட்டி : எஸ்.செந்தில்குமார்

பத்து ரூபாய் : இரண்டு சம்பவங்கள்

மாட்டுத்தாவணியிலிருந்து பெரியார் நிலையத்திற்குப் பன்னிரண்டு மணிக்கு மேல் பேருந்து கிடைப்பது சிரமம். தெப்பக்குளம், தெற்கு வாசல் வழியாகச் செல்லும் பேருந்து எப்போது வரும் என்கிற கேள்விக்கு ‘வர்ற நேரந்தான்’ என்கிற பதிலை மூன்று முறை அங்கு நின்றிருந்த போக்குவரத்து ஊழியர் சொல்லிவிட்டார். பன்னிரண்டு மணியைக் கடந்து பத்து நிமிடங்களுக்கும் மேலாகிவிட்டது. என்னருகில் ஒருவன் தள்ளாடியபடி வந்து நின்றதைப் பார்த்தேன். ஸார் பத்து ரூபா தர முடியுமா என்று கொடுத்து வைத்திருந்தவனைப் போல கேட்டான். எதுவும் பேசாமல் தள்ளி நின்றேன். திரும்பவும் என்னருகில் வந்து நின்று ஸார் பத்து ரூபா தர முடியுமா என்று குரலை உயர்த்திக் கேட்டதும் அவனது முகத்தைப் பார்த்தேன்.

அவன் காக்கிச்சட்டை அணிந்திருந்தான். வேட்டி உடுத்தியிருந்தான். காலில் செருப்பு இல்லை. பார்ப்பதற்குப் பரிதாபமான முகம், ஆனால் பேச்சில் தெனாவெட்டு இருந்தது. எதையே செய்தித்தாளில் சுற்றி பார்சல் மாதிரி கையில் வைத்திருந்தான். நன்றாகக் குடித்திருந்தான். வாடையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னருகில் நின்றிருப்பது எரிச்சலாக இருந்தது. என்னால் இதற்கு மேல் தள்ளி நிற்க முடியாது. சற்றுத் தள்ளி ஆட்டோக்காரர்கள் வரிசையாக வண்டிகளை நிறுத்தி ஆரப்பாளையம், ஆரப்பாளையம் என்று கூவினார்கள். குப்பைத்தொட்டிக்கும் எனக்கும் இடைவெளி அதிகமில்லை. பெரியார் பேருந்து வருவதைவிட அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.

பெரியார் நிலையத்திற்குச் செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி அமர்ந்ததும் என்னருகில் அவனும் வந்து அமர்ந்தான். எனக்கு கடுங்கோபம் வந்தது. எழுந்து வேறு இருக்கைகள் இருக்கிறதா என்று பார்த்தேன். ஆட்கள் திமுதிமுவென்று ஏறி இருக்கைகளில் அமர்ந்துகொண்டதோடு உட்காருவதற்கு இடமில்லாதவர்கள் கம்பிகளின் பக்கத்தில் நிற்கத் தொடங்கினார்கள். நான் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒருவர் வேகமாக வந்து இறங்கப்போகிறீர்களா என்று பதற்றமாகக் கேட்டார். என்னை இழுத்து பேருந்திலிருந்து தள்ளிவிட்டு இருக்கையில் அமர்ந்துகொள்ளும் அவசரத்தில் இருந்ததைப் பார்த்ததும் அமர்ந்துகொண்டேன்.

அவன் முன் இருக்கையின் கம்பியில் தலையைக் கவிழ்த்தி அமர்ந்திருந்தான். சிறிது நெளிந்து தள்ளி ஜன்னல் பக்கம் முதுகைத் திருப்பி அமர்ந்தேன். அப்படி இருந்தும் அவனுக்கும் எனக்குமான இடைவெளி உருவாகவில்லை. இப்போது வாடை என்னுடைய மூக்கின் அருகில் ஒட்டி இருப்பது மாதிரியாகிவிட்டது. பொறுத்துக்கொள்ள முடியாததால் கைக்குட்டையை எடுத்துப் பொத்திக்கொண்டேன்.

நடத்துனர் பேருந்தின் முன் வாசல் அருகில் நின்று புகைத்தபடி நின்றிருந்தார். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு நெற்றியில் சந்தனமும் குங்குமமும் விபூதியும் வைத்து முழுக்கைச் சட்டையும் சட்டைக்குள் சட்டையும் (வெளியே காக்கி, உள்ளே வெள்ளை.) என்.சி.சி. பூட்ஸ் அணிந்து விசித்திரமான நபராகக் காட்சித் தந்தார். பெரியார் போகுமா என்று கேட்பவர்களுக்குப் போகும் போகும் என்றார். பேருந்து நிறைந்துவிட்டது. இடமில்லாதவர்கள் வெளியே நின்றிருந்தனர். பேருந்து புறப்பட்டதும் ஏறிக்கொள்ளும் திட்டத்தில் அவர்கள் ஓட்டுநரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

என்னருகில் உட்கார்ந்திருந்தவன் நிமிர்ந்தான். என்னை முதல்முறையாகப் பார்ப்பதுபோல பார்த்து ஸார் பத்து ரூபா தர முடியுமா என்று கேட்டான். பேருந்தில் இருந்தவர்கள் முன்னால் அவனை அவமானப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். எதற்குப் பத்து ரூபாய் என்று கேட்டால் உரையாடல் தொடங்கிவிடும் என்று ஜன்னல் பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். அவன் கேட்டதை நான் பொருட்படுத்தவில்லை என்றதும் அவன் எனது தொடைகளைத் தட்டி பத்து ரூபாய் இருந்தா கொடுங்க எத்தனை தடவை கேட்குறது. ஒரு தடவை கேட்டதும் கொடுக்க மாட்டீங்களா. சும்மா சும்மா கேட்டுட்டே இருக்கணுமா என்று கோபமாகக் கேட்டான்.

உண்மையில் பயந்துவிட்டேன். அவன் பேசும்போது தெறித்த எச்சில் முகத்திலும் கண்களிலும் விழுந்து என்னைக் குடிகாரனாக மாற்றியது. என்னை மட்டும் குறி வைத்துப் பத்து ரூபாய் கேட்கும் அளவிற்கு அவனுக்கும் எனக்குமான பகை, உறவு என எதாவது இருக்கிறதா என்று யோசிக்கச் செய்தது. இதற்கு முன்பு அவனைப் பார்த்ததுக்கூடக் கிடையாது. அவனுடைய கையில் மடித்து வைத்திருந்த பார்சலை இருக்கையின் மேல் வைத்துவிட்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். பேருந்தில் நடத்துனர், ஓட்டுநர்  இல்லை என்று தெரிந்ததும் விசில் அடித்தான். அந்தச் சத்தம் என் காதுகளை அடைத்தது. சற்று நேரம் அதைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

ஓட்டுநர் பேருந்தில் ஏறி, “ஏய் சும்மா உட்கார மாட்டீய. எதுக்குடா விசிலடிச்சே” என்று கேட்டார். அவர் என்னைப் பார்த்துக் கேட்பதுபோலிருந்தது. விசிலடித்தவன் நான்தான் என்றும் என்னைத்தான் திட்டுகிறார் என்றும் நினைக்கத் தோன்றியது.

அவன் “சும்மாதான் ஸார் விசிலடிச்சேன். நேரமாச்சு. வண்டியெ எடுங்க” என்று இருக்கையை விட்டு எழுந்து சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் சிலர் எரிச்சலுடன் வண்டியெ எடுங்க ஸார் என்று முனங்கினார்கள்.

நடத்துனர் வேகமாக பேருந்துக்குள் ஏறினார். அவருடைய பூட்ஸ் கால்கள் பேருந்தில் விசித்திரமான சத்தத்தை எழுப்பியது. அந்தச் சத்தத்திற்காகப் பலரும் ஒதுங்கி நின்றுகொண்டனர். அவர் பேருந்துக்குள் நடுரோட்டில் நடந்துசெல்வதுமாதிரி நடந்து, “இருபத்தியேழு ரூபா சில்லறையா வெச்சிக்கங்க. நைட் சர்வீஸ் வண்டி இப்பத்தான் செட்டில இருந்து வருது. சில்லறை ஏங்கிட்ட இல்லை” என்றார். அதைக் கேட்டதும் பயணிகள் தங்களிடமிருந்த சில்லறைகளைச் சரி பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள். நானும் சில்லறை இருக்கிறதா என்று பார்த்தேன். முப்பது ரூபாய் இருந்தது. அவன் என்னிடம் பணத்தைப் பார்த்ததும் பத்து ரூபாய் கொடுங்க ஸார் என்று கேட்டதும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். கிட்டத்தட்ட பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் இருப்பத்தியேழு ரூபாயைச் சரி பார்ப்பதில் கவனமாக இருந்தார்கள். என்னிடம் பத்து ரூபாயை வாங்காமல் விட மாட்டான் என்பது மட்டும் தெரிந்தது. அவனிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரே வழிதான் உள்ளது. இருக்கையிலிருந்து எழுந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்றுவிடுவது. ஆனால் எழுந்து நிற்க முடியவில்லை. அவ்வளவு நெரிசல். தெற்கு வாசல்வரை நின்று கொண்டு வர முடியாது. திரும்பவும் ஜன்னல் பக்கமாகத் திரும்பிக்கொண்டேன். பேருந்து நகரத் தொடங்கியது எனக்கு நிம்மதியைத் தந்தது.

நடத்துனர் பயணச் சீட்டுகளைத் தரத் தொடங்கினார். சில்லறைக் கொடுக்காதவர்களைத் திட்டினார். பயணிகள் அவமானத்தையும் அசிங்கத்தையும் பொருத்துக்கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொள்ளாமல் ஒதுங்கி நின்றுகொண்டனர். பூ மார்க்கெட்டையும் காய்கறி மார்க்கெட்டையும் கடந்து எம்ஜீஆர் சிலை அண்ணா நகர் ஆர்ச் வழியாக பேருந்து வேகம் கொண்டது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஆட்கள் இறங்கினார்கள்.

நடத்துனர், எந்த ஸ்டாப்பில் இறங்கினாலும் இருபத்தியேழு ரூபாய். எந்த ஸ்டாப்பில் இறங்கினாலும் இருபத்தியேழு ரூபாய். சில்லறை கொடுங்க என்று கத்தினார். பேருந்து அண்ணாநகரைத் தாண்டி ஆவின் நிறுத்தத்தில் நின்றது. முன்னால் அமர்ந்திருந்தவர்கள் சிலர் இறங்கினார்கள். நடத்துனர் எனது இருக்கைக்குப் பக்கத்தில் வந்ததும் முப்பது ரூபாயைக் கொடுத்தேன். என்னிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையாக இரண்டு ரூபாயை மட்டும் கொடுத்தார். ஒரு ரூபாய் சில்லறை இல்லை வந்தால் தருகிறேன் என்றும் கூறினார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் தனது பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தந்தான்.

நடத்துனர் அவன் தந்த பணத்தை அப்படியே அவனுடைய முகத்தில் விட்டெறிந்தார். “உன்னோட தினமும் ரோதனையா போச்சு. ஒரு நா ரெண்டு நாளா, வருஷம் முழுசுமா இப்படி” என்றவர் அவனிடம், “பணத்தை எடு, இருபத்தியேழு ரூபாய வேணும். பதினேழு ரூபாயை வெச்சு என்ன செய்ய” என்றார். அவன் அமைதியாக இருந்தான். இதற்குத்தான் பத்து ரூபாய் என்னிடம் கேட்டிருக்கிறானா என்று நினைத்ததும் எனக்கு வியர்க்கத் தொடங்கியது. நடத்துனர் அவனை அவசரப்படுத்தினார். அவன் அசரவில்லை. எதோ அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுபவன் மாதிரி கம்பீரமாக உட்கார்ந்திருந்தான். பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்துவிடலாமா என்று தயங்கினேன்.

“தெனமும் நீ குடிச்சிட்டு பஸ்ஸேறுவ. பத்து ரூபா பதினைஞ்சு ரூபா தருவ. நா அதை வாங்கிட்டு உனக்கு டிக்கெட் தரணும். டவுசருக்குள்ளாற வெச்சிருக்கிற பணத்தை எடுறா” என்றார். அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.

அவன் டவுசருக்குள் பணத்தை ஒளித்து வைத்திருப்பான் என்று தோன்றியது. அவனை விட்டு நகர்ந்து அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு டிக்கெட்டைக் கொடுத்தார். பேருந்து பாலத்தின் மேல் ஏறி கல்லூரியை நோக்கிச் சென்றது. தெப்பக்குளத்திற்குள் எரிந்த விளக்குகளைப் பார்க்க முடிந்தது. நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு அவனிடம் வந்தார். பணத்தைக் கொடுக்கிறியா என்பது மாதிரி அவனைப் பார்த்து முறைத்தார். அவன் அசையாமல் இருந்தான். தன்னுடைய மடியில் இருக்கையில் சிதறிக்கிடந்த பணத்தைப் பொறுக்கி எடுத்துக் கையில் பத்திரமாக வைத்திருந்தான். அவனுடைய அமைதியும் நடத்துனரின் கோபமும் ெபரியதாக நடக்கப் போகிறது என்கிற பதற்றத்தை உண்டாக்கின. பத்து ரூபாயைத் தந்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும் என்கிற விருப்பமும் அதைத் தொடர்ந்து வந்தது. கொடுத்துத் தொலைக்கலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸை எடுத்தேன். உள்ளே ஐநூறு ரூபாய் தாள்களாக இருந்தது. நடத்துனர் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார். ஜநூறு ரூபாய் நோட்டை நீட்டினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன்.

தெப்பக்குளத்தைப் பேருந்து நெருங்கியது. குளத்து மண்டபத்தினுள் எரிந்துகொண்டிருந்த விளக்கைப் பார்த்ததும் அவன் எழுந்து பேருந்து கூட்டத்திற்கு நுழைந்து சென்றான். ஆனால் நடத்துனர் அவனை விடவில்லை. தெப்பக்குளம் ஸ்டாப் வந்ததும் முன் பக்கமாக இறங்கும் வழியில் வேகமாக இறங்கி பின் பக்கமாக இறங்கிச் சென்றவனைப் பிடித்தார். அவர்களுக்குள் சண்டை நடந்தது. தெப்பக்குளத்தில் நின்றிருந்த இரவு ரோந்து போலீஸ்காரர்கள் விசாரிக்க வந்தார்கள். அவனுக்கு நல்ல அடி விழுந்தது. அந்த இடத்திலிருந்து எங்கு சென்றான் என்று தெரியவில்லை. நடத்துனர் பேருந்தில் ஏறியதும் பேருந்து புறப்பட்டது.

அவன் அமர்ந்திருந்த இடத்தில் கூடத்திலிருந்த வேறொருவன் வந்து அமர்ந்தான். கையில் செய்தித்தாளைச் சுருட்டி வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. குச்சி வடிவத்திலிருந்த அதைக் கொண்டு தனது தொடையில் தாளமிட்டுக்கொண்டிருந்தான். பேருந்து காமராஜர் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. நிர்மலா பள்ளிக்கூடத்தைக் கடந்து முனிச்சாலையில் நின்றது. அப்போது அவன் என்னிடம் ஸார் பத்து ரூபா தர முடியுமா  என்று கேட்டான். ரோஜா பூ வாசம் திரும்பிப் பார்க்கச் செய்தது. சிரித்தபடி என்னைப் பார்த்தான். தெற்குவாசல் என்று நடத்துனர் கத்தியபோது அவனது முகத்தை இன்னொரு தடவை பார்த்தேன். ஸார் பத்து ரூபா தர முடியுமா என்று கேட்டான்.    அவன் அவனைப் போல இருந்தான். நிறுத்தத்தில் இறங்காமல் அப்படியே நின்றிருந்தேன். பேருந்து தெற்குவாசலைக் கடந்து சென்றது.

  •  

சந்தோஷ்குமாரின் வீட்டில் பத்து ரூபாய் நோட்டுகள் மட்டும் நிறைய இருந்தன. கடுகு டப்பாவில் அரிசி பானையில், சாமி படங்களுக்குப் பின்பக்கம், உண்டியல், சேலைகளுக்கு ஊடே, சட்டைகளுக்கு நடுவே, கைக்குட்டையின் மடிப்பில், வளையல் டப்பாவில், ஸ்டிக்கர் பொட்டு டப்பாவில் என்று பத்து ரூபாய் தாள்களில் கிடந்தன. அவற்றை எடுத்துச் செலவு செய்ததும் திரும்பவும் எப்படியோ எடுத்த இடத்தில் பத்து ரூபாய் நோட்டை வைத்துவிடுகிறார்கள். இது தற்செயலாக நடக்கிறதா, திட்டமிட்டு நடக்கிறதா என்று தெரியவில்லை. உண்மையில் தங்களிடம் எவ்வளவு பத்து ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாததால்தான் பத்து ரூபாய் நோட்டுக்கள் யாரிடமும் இல்லாதவகையில் தங்களிடம் சேர்கின்றன என்று சந்தோஷின் மனைவி சுலோக்‌ஷனா நினைத்தாள். பத்து ரூபாயைத் தவிர இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் இருநூறு, ஐநூறு ரூபாய்களைப் பத்து ரூபாயைப் போல தனித்தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் வைத்திருக்கிறார்கள். சுலோச்‌ஷனா, சந்தோஷிடமிருந்து மாதச் சம்பளத்தை வாங்கிக்கொண்டதும் முதல்வேலையாக அந்தச் சம்பள பணத்தில் பத்து ரூபாய்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்வதை பழக்கமாக, இருபது வருடங்களாக வைத்திருந்தாள். எதற்கென சந்தோஷ் இதுநாள்வரை அவளிடம் கேட்டதில்லை.  

சுலோச்ஷனாவை முதன்முதலாகப் பெண் பார்க்க வந்த நாளில் அவளுடைய வீட்டில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுச் சிறுமிக்கு சந்தோஷ்குமார் பத்து ரூபாயைக் கொடுப்பதைப் பார்த்தாள் சுலோச்ஷனா. சிறுமியிடம் சண்டை போட்டு அந்தப் பணத்தை வாங்கிப் பத்திரப்படுத்தியதோடு அன்று முதல் பத்து ரூபாய் நோட்டுக்குப் பைத்தியமாகிவிட்டாள். இது யாருக்கும் தெரியாது, தெரியக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்தாள்.

பத்து ரூபாய்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் அவளைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தெருவில் இல்லை. அவள் பிறந்து வாழ்ந்து படித்த கிராமத்திலும் இல்லை. சந்தோஷ்குமார் சிறுமிக்குத் தந்த பத்து ரூபாய் தாளின் ஓரிடத்தில் அழகான கையெழுத்தில் தேதி கிழமை நேரம் போன்ற தகவல்களை எழுதி வைத்திருந்தாள் சுலோச்ஷனா. அந்தத் தாளை மட்டும் கல்யாணப் புடவைக்குப் பக்கத்தில் பழைய ஜாமன்ட்ரி பாக்ஸ் டப்பாவில் வைத்திருந்தாள். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் எடுத்துப் பார்த்து முத்தமிடுவாள். ரூபாயைத் தலைக்கு மேலாகத்தூக்கிக் குடைராட்டினம் மாதிரி சுற்றிவிட்டு டப்பாவில் வைத்துவிடுவாள். புடவை தேய்த்து முடித்ததும் அயன் பாக்ஸ் சூடாறியதும் தாளைத் தேய்த்துவிடுவாள்.

சந்தோஷ்குமார், மகளைக் கல்லூரி ஆண்டு விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த சுலோச்ஷனா சந்தோஷின் பீரோவிலிருக்கும் பேன்ட் சட்டைகளை எடுத்து அடுக்கி வைக்கலாமென நினைத்தாள். இரண்டு தினங்களுக்கு முன்பு பீரோவைத் திறந்தபோது வரிசையாகச் சட்டைகள் கீேழ விழுந்தன. அந்தச் சட்டைகளைக் கட்டிலின் மேல் வைத்திருந்தாள். பீரோவைத் திறந்து துணிகளை அடுக்கத் தொடங்கினாள். சந்தோஷிற்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட காதல் திருமணமாக இருந்தது. பெண் பார்த்துத் திருமணம் முடிய ஒரு வருடம் ஆனது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு எட்டு மாதங்கள் கழிந்துதான் அவர்களது திருமணம் நடந்தது. அந்த நாட்களில் பத்து நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பதும் தினமும் தொலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட உடலுறவைத் தவிர்த்து பிற விஷயங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்தும் விட்டுக்கொடுத்தும் இருந்தனர். அந்த எட்டு மாதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட சினிமா படங்களைப் பார்த்தார்கள். கோயில்களுக்குச் சென்றார்கள். இருவரது உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று வந்தார்கள். பல முறை சந்தோஷிற்கு அவளது வீட்டில் விருந்து நடந்தது. திருமணத்திற்கு முன்பு வந்த பண்டிகைகளுக்குப் புதுத் துணி கிடைத்தது. திருமணம் முடிந்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபோது அவர்களுக்குச் சிரிப்பு வரவில்லை, பேசுவதற்கு இனிமேற்பட்டு ஒன்றும் புதிய விசயங்கள் இல்லை என்பதைப் போல பார்த்துக்கொண்டார்கள்.

சந்தோஷின் சட்டைகளை அடுக்கி முடித்ததும் பேன்ட்டுகளை அடுக்கினாள். பீரோவில் கடைசியாக இருந்த பேன்ட்டுகளை உதறி அடுக்கியபோது அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்று விழுந்தது. அது இரண்டாக மடிந்திருந்தது. ஆச்சரியத்துடன் அவள் அதை எடுத்தாள். புதிய தாள். பிரித்துப் பார்த்தாள். வெற்றிடத்தில் தேதி மாதம் வருடம் மட்டும் எழுதப்பட்டிருந்தது. வேறொன்றும் இல்லை. அந்தத் தேதியைப் பார்த்தாள். சந்தோஷின் கையெழுத்து. அவனது கையெழுத்து அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்தத் தேதி மூன்று மாதங்களுக்கு முன்னிருந்தது. தனக்குத் தெரியாமல் எதையும் சந்தோஷ் வைத்திருக்க மாட்டான் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அந்த ரூபாய் தாளை இருந்த இடத்தில் வைத்துவிட்டுத் துணிகளை அடுக்கிவைத்துப் பீரோவைப் பூட்டினாள். சந்தோஷ் தனக்குத் தெரியாமல் பத்து ரூபாயை வைத்திருந்தான் என்பதைவிட அந்தத் தாளில் எழுதியிருந்த தேதி அவளை நிம்மதி இழக்கச்செய்தது. அந்தத் தேதியில் என்ன நடந்தது, என்ன நடத்திருக்கும், எதற்காக அந்தத் தேதியை எழுதி வைத்திக்கிறான் என்று யோசித்தாள்.

சந்தோஷ்குமாரும் அவர்களது மகளும் கல்லூரி ஆண்டு விழா முடிந்து வந்தார்கள். அவனிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. மகளிடம் அந்தத் தேதியில் வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டாள். அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தத் தேதியில் தனக்கு செமஸ்டர் நடந்தது, படித்துக்கொண்டிருந்தேன், ஞாபகத்தில் எதுவுமில்லை என்று சொன்னாள். சுலோக்‌ஷனா ராத்திரி முழுக்க யோசித்துப் பார்த்தாள். அந்தத் தேதியில் என்ன நடந்தது என்று அவளுக்கும் தெரியவில்லை.

சந்தோஷ்குமாரிடம் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். தனக்குத் தெரியாமல் எதற்காகப் பத்து ரூபாயை இத்தனை நாட்கள் வைத்திருந்தான், அதில் எதற்காகத் தேதியை எழுதி வைத்திருக்கிறான் என்கிற குழப்பத்தில் இருந்தாள். காலையில் அலுவலகத்திற்கு சந்தோஷ்குமார் சென்றான். அதற்குப் பிறகு அவளுக்கு நிம்மதி இல்லை. சந்தோஷ்குமாரின் அக்கா தங்கை அம்மா ஆகியோரிடமும் தன்னுடைய அண்ணன் தம்பிகளிடமும் அந்தத் தேதியைச் சொல்லி எதாவது நடந்ததா என்று கேட்டாள். ஒன்றும் இல்லை, வழக்கமாகத் தூங்கி எழுந்தோம், சாப்பிட்டோம், வேலைக்குப் போனோம், இரவு தூங்கினோம் என்று பதில் வந்தது. பிறகு எதற்கு அந்தத் தேதியை எழுதி வைத்திருக்கிறான் என்று யோசித்தாள்.

பத்து ரூபாயிலிருந்த அந்தத் தேதி அவளுக்குத் தொந்தரவாக மாறியது. பிறகு அவளுக்குத் திடீரென்று யோசனைத் தோன்றி இதுவரை வீட்டில் வைத்திருக்கும் பத்து ரூபாய் நோட்டுகளை எல்லாம் தேடி எடுத்து அதில் எதாவது தேதி எழுதி வைத்திருக்கிறானா என்று பார்த்தாள். அவள் நினைத்தது போலவே ஒவ்வொரு பத்து ரூபாய் தாளிலும் ஒவ்வொரு தேதி எழுதி இருந்தது. எல்லாமே அவனுடைய கையெழுத்துத்தான். வீட்டிலிருந்த அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் தேடி எடுத்து ஒன்று சேர்த்தாள். சந்தோஷ்குமார் எழுதி இருந்த வருடம் மாதம் தேதி அவளுக்குப் புதிய குழப்பத்தைத் தந்தது. எதற்காக ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெவ்வேறு தேதிகளை எழுதி வைத்திருக்கிறான், அந்தத் தேதியில் என்ன நடந்திருக்கும் என்கிற குழப்பம் அவளை நிம்மதி இழக்கச் செய்தது. அவனிடம் எதற்கு என்ன விசயம் என்று கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. தான் கேட்காமல் அவன் சொல்ல வேண்டும் என்பதைவிட அப்படியென்ன தனக்கும் அவனுக்குமான ரகசியம் என்பதே அவளது தலையில் சுமையாக ஏறியிருந்தது.

அதற்குப் பிறகு அவளுக்குப் பத்து ரூபாயின் மேல் கோபம் வந்தது. வீட்டிலிருந்த பத்து ரூபாய்களை எண்ணினாள். 7500 பத்து ரூபாய் நோட்டு இருந்தன. அவற்றையெல்லாம் ஐம்பது ரூபாயாக நூறு ரூபாயாக மாற்றினாள். 7500 பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணும் போதுதான் அவளுக்கு அவன் எழுதிய தேதிகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்தது. அவளது மகள் பத்து ரூபாய் எல்லாம் எங்கே என்று கேட்டதற்கு அவள் பதில் பேசவில்லை. அதற்குப் பிறகு அவள் பத்து ரூபாய் நோட்டுக்களைச் சேகரிப்பதில்லை. சந்தோஷ்குமாரும் அவளிடம் பத்து ரூபாய் நோட்டு வேண்டுமா என்று கேட்பதும் இல்லை.

000

பேபி ஜட்டி: இரண்டு சம்பவங்கள்

டெரிக் ஜங்ஷன் நடுரோட்டில் பேபி ஜட்டி கிடந்தது. நான்கு கார்களும் பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் அதன்மீது ஏறிச்சென்றன. ஜட்டியிலிருந்த பூக்களும் மிருகங்களும் பறவைகளும் தங்கள்மேல் வாகனங்கள் ஓடிய அழுத்தத்தில் மூச்சுவிடாமல் திணறியதைப் பார்க்க முடிந்தது. பலமான காற்று வீசியதும் பறவைகளும் விலங்குகளும் பூக்களும் பறந்தன. யார் தவறவிட்டிருப்பார்கள் என்கிற கேள்வி அவனுக்குள் இருந்தது. யார் வேண்டுமென்றாலும் தவறவிட்டிருக்கலாம். தன்னுடைய குழந்தையின் ஜட்டியைத் தவறவிட்டுச் சென்ற பெண்ணின் தேடுதலை அதற்காக அவள் கணவனிடம் பேச்சு வாங்குவதை, குழந்தைக்கு ஜட்டி இல்லாமல் அடையும் அவஸ்தையை அவள் தலைவிதி என்று நினைப்பாள். பிரசவத்திற்குச் சென்றிருக்கும் அவனுடைய மனைவிக்கு இதுபோன்ற புதிய பேபி ஜட்டியை வாங்கிக்கொடுத்து அனுப்பி வைத்திருந்தான். அவளுக்கு அது பிடித்திருந்தது.

நடுரோட்டில் கிடந்தது புத்தம் புதிய ஜட்டி. பேபி சைஸ் ஜட்டிதான் என்றாலும் அதற்கும் உள்ளாடை அந்தஸ்து உள்ளதை யாரும் தெரிந்துகொள்ளவில்லை. அதன் அழகினை எவரும் ரசிக்க இயலாத துயரத்தில் எந்த கடையிலிருந்து தப்பித்து வந்து நடுரோட்டில் கிடக்கிறது என்று தெரியவில்லை. இதொன்றும் கவலைப்படும்படியான செய்தியோ சம்பவமோ வரலாற்று நிகழ்வோ இல்லை. ஜட்டி, ஜட்டிதான். ஐஸ்வர்யா அணிந்திருந்தாலும் பக்கத்து வீடு தங்கம் அணிந்திருந்தாலும் ஜட்டிக்குப் பெயர் ஜட்டிதான்.

இரண்டு நாட்களாக நடுரோட்டில் பேபி ஜட்டி கிடந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்று வரும்போது பார்க்கிறான். அவனைத் தவிர வேறுயாரும் அதைப் பார்க்கவில்லை. எவரும் அதைப் பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. பழைய துணி என்று குப்பை வண்டிக்காரர் எடுத்துக்கொண்டு செல்லவில்லை. இந்த உலகத்திற்கு, பேபி ஜட்டியின் மேல் இவ்வளவு வெறுப்பா என்ற கோபம் அவனுக்கு வந்தது. கோபத்தில் அவனுடைய வீட்டிற்கு பேபி ஜட்டியை எடுத்துச் சென்றான். வீட்டில் துவைத்து உலர வைத்தான். கொடியில் தொங்கும் பேபி ஜட்டியைப் பார்த்த எதிர்த்த மாடி வீட்டுப் பெண் அண்ணி வந்துட்டாங்களாண்ணே என்று கேட்டாள். அவன் இல்லை என்று பதில் சொன்னான். பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை பிறந்துவிட்டதா சொல்லவே இல்லை, என்ன குழந்தை என்று கேட்டாள். அவன் இல்லை என்று பதில் சொன்னான். அவன் குடியிருக்கும் வீட்டுக்காரர் அவனிடம் அலைபேசியில் குழந்தை பிறந்து உங்களது மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டீர்களா என்று கேட்டார். ஒரே ஒரு பேபி ஜட்டியைத் துவைத்துக் கொடியில் உலர வைத்ததற்கு மூன்று கேள்விகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கிறதே என்று சங்கட்டமாக இருந்தான்.

காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பும்போது அவர்களுக்கு நேரடியாக முகத்தைப் பார்த்துப் பதில் சொல்வதற்கு வெட்கமாக இருந்தது. தெருவில் கிடந்த ஜட்டியை எடுத்து வந்து துவைத்துக் காய வைத்திருக்கிறான் லூசுப்பயல் என்று தனக்குப் பின்னால் பேசினாலும் பரவாயில்லை, பதில் ெசால்லிவிட்டுத்தான் அலுவலகத்திற்குக் கிளம்ப வேண்டுமென்று அவர்களுக்குப் பதில் சொன்னான். அவனுடைய மனைவி ஏழு தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவளுடைய தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அவள் வரும்வரை இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுப் பழகிக்கொள்வதைவிடக் கேட்காமலிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அவளுக்கு ஃபோன் செய்து பேசினான். நடுரோட்டில் கிடந்த பேபி ஜட்டியில் தொடங்கித் துவைத்துக் காய வைத்ததுவரை பேசினான். அவள் சொன்னாள், நீங்கள் முதல்முதலாக வாங்கிக்கொடுத்த பேபி ஜட்டியைத் தொலைத்துவிட்டேன். ஊரிலிருந்து வரும்போது என்னுடைய துணிகளுக்கு இடையில் வைத்திருந்தேன். எப்படி தொலைந்தது, எங்கே தொலைத்தேன் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். வீட்டிலிருக்கிறதா என்று தேடிப் பாருங்கள் என்றாள்.  

பிரசவ வேளையில் இதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம், தொலைந்தது தொலைந்தாக இருக்கட்டும். குழந்தையைப் பார்க்க வரும்போது புதியதாக வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னான். அதற்கு அவள் நீங்கள் முதல்முதலாக வாங்கியது மாதிரி வாங்க வேண்டும், அதே நிறம், பூக்கள் விலங்குகளின் தலைகள் கொண்ட ஜட்டியை வாங்க வேண்டும் என்று சொன்னாள். அவனும் சரி என்றான். அவள் தன்னுடைய கனவில் பேபி ஜட்டியிலிருந்த பூக்கள் பறவைகள் விலங்குகள் மெதுவாக அசைந்து நகர்ந்து காட்டுக்குள் பறப்பதைப் பார்த்தாகச் சொன்னாள். நடுரோட்டில் கிடந்த ஜட்டியில் இருந்த பறவைகளும் விலங்குகளும் காற்றில் பறப்பதைத் தானும் பார்த்ததாக அவளிடம் சொன்னான்.  

அன்று முழுக்க அவன் அலுவலகத்தில் வேலை எதுவும் செய்ய இயலவில்லை. பிற்பகலுக்குப் பிறகு விடுவிப்பு எடுத்துக்கொண்டான். அவனுக்குத் தெரிந்த பிளாட்பாரத்தில் பேபி ஜட்டி விற்பவரின் கடைக்குச் சென்றான். அந்தக் கடை அந்த இடத்தில் இல்லை. வேறொரு இடத்திற்கு மாற்றலாகி இருப்பதாகப் பக்கத்துக் கடைக்காரர் சொன்னார். கடையைத் தேடிச் சென்றான்.

அவன் கடையைக் கண்டுப்பிடித்துச் சென்றபோது கடைக்காரர் கடைக்குள் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவர் அவனைப் பார்த்ததும் அவனுக்குத் தேவையானதை எடுத்துக்காட்டும்படி அவளிடம் சொன்னார். அப்பெண்ணிடம் பேபி ஜட்டி வேண்டும் என்றான். அவளும் எடுத்துக் காட்டினாள். அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏற்கெனவே வாங்கியதைப் போல வேண்டுமென்று கேட்டான். கடைக்காரர் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். கடைக்காரர் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குள் அவனை அழைத்துச் சென்றார். பிளாஸ்டிக் பைகளிலும் அட்டைப்பெட்டிகளிலும் கட்டி வைக்கப்பட்டிருந்த உள்ளாடைகள் குவிந்துகிடந்தன. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டிகளுக்கு நடுவே சென்றார்கள். குமட்டிக்கொண்டு வருவதுபோல கெட்ட வாடை வந்தது. அந்த இடம் முடியும் இடத்தில் ஒருவர் படுத்திருந்தார். அவருடைய உடம்பு போர்வையால் போர்த்தியிருந்தது. முகத்திற்கு முன் ஈயத்தட்டில் புரோட்டாவும் கறிக்குழம்பும் பிளாஸ்டிக் கப்பில் தண்ணீரும் இருந்தது. கடைக்காரர் வேகமாகச் சென்று அங்கிருந்த குச்சியை எடுத்து படுத்திருந்தவரின் புட்டத்தில் ஓங்கி அடித்தார். அவர் எழுந்து அவர்களைப் பார்த்தார். “வாங்கி வெச்ச ரொட்டியைத் திங்கணும்ன்னு தோனலையா.” என்று கத்தினார். அவர் ஈயத்தட்டை எடுத்து புரோட்டாவைப் பிய்த்தார்.

கடைக்காரர் அவனிடம் அங்கிருந்த அட்டைப்பெட்டியில் பேபி ஜட்டிகளை எடுத்துக் காட்டினார். “அண்ணாச்சி இதானே நீங்க கேட்டது” என்றார். அவனுக்குத் திடீரென படுத்துக்கிடந்தவரைப் பார்க்கத் தோன்றியது. திரும்பிப் பார்த்தான். அம்மணமாக உட்கார்ந்திருந்தார். உடம்பு முழுக்க புண்கள். சீழும் ரத்தமும் ஒழுகிக்கொண்டிருந்தது. இடுக்கிபோல இரண்டு விரல்களால் முழு ரொட்டியை எடுத்து கடித்தபோது அவருடைய கைகளைப் பார்த்தான். விரல்கள் முழுமையாக இல்லை. குழம்பில் ஊறிய புரோட்டாவை அவர் சவைத்து சவைத்து உண்டார். நீண்ட நாட்கள் பயிற்சியின் காரணமாக அவருடைய உடம்பிலும் தரையில் சொட்டுக்கூடக் குழம்பு சிந்தவில்லை.

முதன்முதலாக எடுத்த பேபி ஜட்டிபோல இரண்டும் வேறுவேறு நிறங்களில் சிலவும் எடுத்து வைத்துக்கொண்டான்.  

“அண்ணாச்சி ஒரு விஷயம்.” என்று தயங்கிய கடைக்காரர், “இங்க கொஞ்சம் வாங்க” என்று சற்றுத் தள்ளி அழைத்துச் சென்றார். தரையில் சில உள்ளாடைகள் குவிந்துகிடந்தன. சிவப்பு நிறத்தில் தனியாகக் கிடந்த பேபி ஜட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தார். ஈரமாக இருந்தது. வெறும் சிவப்பு நிறத்தில் படங்கள் எதுவுமில்லாமல் இருந்த பேபி ஜட்டி அது. அவர் அவனிடம் இந்த ஜட்டியை வெயிலில் எவ்வளவு நேரம் காய வைத்தாலும் ஈரம் போகாமல் இருக்கிறது. இந்த ஒரு ஜட்டிமட்டுந்தான் இப்படி. இதோட ஈரம் மற்ற ஜட்டிகளில் ஒட்டவில்லை, கைகளில் ஒட்டவில்லை. பாருங்கள் என்றார். உண்மைதான். சிவப்பு பேபி ஜட்டியில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தை அவனால் உணர முடிந்தது. ஆனால் கைகளில் அந்த ஈரத்தைத் தொட முடியவில்லை, ஆச்சரியமாக இருந்தது. வெளியே வந்து பிளாட்பாரத்தில் வெயில் விழும்படியாக, முக்காலியைப் போட்டு அதன் மேல் பேபி ஜட்டியை வைத்தான்.

“அதெல்லாம் நாங்க செய்து பாத்துட்டோம்”

கடைக்காரருடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசிக்கொண்டிருந்தான். சிவப்பு ஜட்டி எங்கிருந்து வந்தது, திருப்பூரிலிருந்தா மும்பையிலிருந்தா என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் பிளாட்பாரங்களில் கடை நடத்தும் சில்லறை வியாபாரிகளுக்கென்று தனியாகக் கடை இருக்கிறது, அங்கிருந்துதான் வாங்கிக்கொண்டு வந்தேன். எனக்கு விற்பனை செய்வர் எங்கு கொள்முதல் செய்தார் என்று தெரியவில்லை என்று அவனிடம் சொன்னார்.

முக்காலியின் மேல் உலர்ந்துகொண்டிருந்த பேபி ஜட்டியை எடுத்தான். ஈரம் அப்படியே இருந்தது. ஈரமான சிவப்பு பேபி ஜட்டி வெயிலில் உலரவில்லை, மற்ற உள்ளாடைகளின் மேல் அந்த ஈரம் படியவில்லை, தொட்டால் உணர முடிகிறது, கையில் ஈரமில்லை. விநோதமான பொருளாக அந்த சிவப்பு பேபி ஜட்டி அவனுக்குத் தெரிந்தது.

கடைக்காரரின் மனைவிக்கு அருகில் இருந்த மேஜை மின்விசிறியின்மேல் போட்டுவிட்டு நின்றான்.   

“அதெல்லாம் நாங்க செய்து பாத்துட்டோம்”

வெயிலில் உலராத ஈரம் காற்றில் உலருமா? உலர்ந்தாலும் உலரும் என்று காத்திருந்தான். உலரவில்லை. ஈரம் அப்படியே இருந்தது. பேபி ஜட்டியிலிருந்த ஈரம் நேரமாக நேரமாகக் கணத்து பாரமானது. கையில் கணமான பொருளைப் பிடித்திருப்பதுபோன்ற உணர்வு அவனுக்கு வந்தது. சிறிது நேரத்தில் தோள்பட்டை இரண்டும் வலியெடுக்கத் தொடங்கின. அந்த ஈர ஜட்டியை வைத்திருப்பது  குழந்தையைத் தூக்கிப் பிடித்திருப்பது போன்ற சுமையாக இருந்தது. கடைக்காரரிடம் அந்த ஜட்டிக்கு விலை கேட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருவதுபோல வீட்டிற்கு ஜட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தான். கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தான். சிவப்பு ஜட்டியைக் காயவைத்துவிட்டு ஏற்கெனவே உலர்ந்துகொண்டிருந்த ஜட்டியை எடுத்து மடித்து பீரோவுக்குள் வைத்தான்.

தண்ணீர் ெசாட்டுச்சொட்டாகத் தரையில் விழுகிற சத்தம் கேட்டது. கழிவறைக்குச் சென்று குழாயைப் பார்த்தான். சமையலறைக்குச் சென்று குழாயைப் பார்த்தான். வீட்டிலிருக்கிற குழாய்கள் அனைத்தும் இறுக்கமாகத்தான் அடைத்திருக்கின்றன, பிறகு எங்கிருந்து சத்தம் வருகிறது என்று கொடியில் உலர்ந்துகொண்டிருந்த சிவப்பு ஜட்டிக்குப் பக்கத்தில் வந்து நின்றான். சத்தம் கேட்டது.

  •  

அவனால் நம்ப முடியவில்லை. உடம்பு முழுக்கக் கொப்புளங்கள் புறப்பட்டிருந்தது. அரிப்பும் எரிச்சலுமாக இருப்பதைக் கனவு என்று முதலில் நம்பினான். தனக்கு ஏன் இப்படி வர வேண்டும் என்று புலம்பினான். மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்குச் சென்றிருந்த மனைவி வீடு திரும்பும் நேரத்தில் தனக்கு இப்படியாகிவிட்டதே என்று பரிதவித்தான். டாக்டரிடம் காட்டி மருந்து வாங்கினான். மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்டதும் கொப்புளங்கள் உடைந்து நீர் வடிந்து துர்நாற்றம் வீசியது. அவனுக்கு அவன் மேல் கோபம் வந்தது. வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது ஓடிப்போய் விடலாம் என்று முடிவுக்கு வந்தான். அவ்வளவு எரிச்சல், அவ்வளவு துர்நாற்றம்.  கடைசியாக அவனது நண்பன் மஞ்சள் காமாலை இருந்தால் உடம்பில் கொப்புளங்கள் வரும், மஞ்சள் காமாலை வைத்தியரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றான். அவன் வைத்தியரிடம் சென்றான். அவனுக்குக் கண்களில் பச்சிலைச் சாற்றை ஊற்றி உட்கார வைத்தார்கள். பின்னந்தலையைச் சுவற்றில் சாய்த்துக் கண்களைத் திறந்துவைத்தபடி அமர்ந்தான். அவனைப் போல பலரும் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவனது முறை வந்ததும் வைத்தியர் அவனது கையில் நாடித்துடிப்பைப் பார்த்தார். சிறிய புட்டியில் மருந்து ஊற்றி காலையிலும் இரவிலும் குடிக்கச் சொன்னார். வீட்டை விட்டு வெளியே போகாமல் கிடந்தான். உடம்பு பாதிக்கும் மேலாக மெலிவானது. கொப்புளங்கள் மேலும் பெருகின. கைகளிலும் கால்களிலும் புதிதாகப் புறப்பட்டது. முகத்திலும் தொடைகளின் இடுக்குகளிலும் பெரிதுபெரிதாகப் புறப்பட்டன. அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

மனைவிக்குக் கடிதம் எழுதி தந்தி அனுப்பி வரச் சொல்லலாமா என்று யோசித்தான். பிறந்த குழந்தையைப் பார்த்து நாட்களாகிவிட்டது. முகம் சரியாக நினைவுக்கு வர மறுக்கிறது. குழந்தைக்கு வாங்கிய புதிய ஜட்டிகளை அலமாரியில் வைத்திருந்தான். ஊருக்குப் போகும்போது எடுத்துச் செல்லலாம் என்று நினைத்திருந்தான். தனக்கு இப்படி கொப்புளங்கள் வந்துவிட்டதால் ஊருக்குப் போக முடியவில்லை என்று வருந்தினான். அந்த வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தான். வைத்தியர் தந்த மருந்தைக் குடித்தான். அவனாகக் கஞ்சி வைத்துக் குடித்தான்.

பத்து நாட்களுக்குப் பிறகு உடம்பு சரியானது போலிருந்தது. வீட்டை விட்டு வெளியேறி வந்தான். அவனால் நடக்க முடியவில்லை. தலைச்சுற்றியது. திரும்பவும் வீட்டுக்கு வந்தான். தயவுசெய்து யாராவது என்னை என் மனைவியிடம் என்னுடைய குழந்தையிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கத்த வேண்டும் என்று தோன்றியது. முடியவில்லை. கஞ்சி வைத்துத் தருவதற்கு ஆளில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தெருக்குழாய்க்குச் சென்று பானையில் நீர் பிடித்து வருவதற்குப் பள்ளிக்கூடப் பையன் செல்வத்தை வேண்டிக்கொண்டான். அவன் வீட்டுக்குத் தெரியாமல் மாலை நேரத்தில் வந்து தண்ணீர் பிடித்துத் தந்தான். அவனுடன் அவனது தங்கை குமாரி வந்தாள். குமாரி வீட்டுக்குள் வரவில்லை. வாசலில் நின்று அவனை எட்டிப் பார்த்தாள். அவளை இன்னமும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஜட்டி மட்டும் அணிந்திருந்தாள். அவள் முகத்திலும் உடம்பிலும் மஞ்சளும் வேப்பிலையும் பூசியிருந்தாள். செல்வத்தையும் குமாரியையும் அவளது அம்மா அழைத்தவுடன் அவர்கள் வேகமாக வீட்டுக்கு ஓடினார்கள்.

அவனால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள முடியவில்லை. காலையில் நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் சிறுவன் வந்து கதவைத் தட்டினான். கதவு திறக்கவில்லை. ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்தான். வீடு இருட்டாக இருந்தது. குமாரி வந்து ஜன்னலை எட்டிப் பார்த்தாள். வீட்டின் மூலையில் சுருண்டு கிடந்தவனை அவள்தான் பார்த்தாள். தெருவிலிருந்தவர்கள் வந்து கதவை உடைத்தார்கள். அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அவன் இறந்துவிட்டதாகத் தெருக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

தெருவுக்குள் ஆம்புலன்ஸ் வந்தது. அவனுடைய மனைவியும் பிறந்த குழந்ைதயும் உறவினர்களும் வந்திருந்தனர். அவனது குழந்தையையும் மனைவியையும் தெருக்காரர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். சிறுவனும் சிறுமியும் அவனது குழந்தையைப் பார்த்தார்கள். குழந்தையும் தன்னைப் போல ஜட்டி மட்டும் உடுத்தியிருந்ததைச் சந்தோஷத்துடன் பார்த்தாள் குமாரி. தன்னுடைய ஜட்டியின் நிறத்தைப் போலவே அவளுடைய ஜட்டியின் நிறமும் இருந்ததை அவனது அண்ணனிடம் சொன்னாள். ஆனால் அதில் ஆப்பிள் பழத்தின் படம் இருந்ததைப் பார்த்ததும் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. குழந்தையின் ஜட்டியிலிருக்கும் ஆப்பிளைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டுமென்று தனது அண்ணனிடம் சொன்னாள். ஆப்பிளைத் தொட்டுப் பார்க்க இருவரும் அக்குழந்தையின் அருகே சென்றனர். இறந்துபோனவனின் மனைவியைச் சுற்றி அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. இறந்துபோனவனின் குழந்தையைத் தூக்கி வைத்திருந்த அவனது மனைவியைச் சுற்றி நின்று விசாரித்துக் கொண்டிருந்தனர். இருவரும் பக்கத்தில் செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட அவனது உடலைச் சுற்றி ஆட்கள் வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். அவர்களால் குழந்தையைப் பார்க்க முடியவில்லை.  

அவனை மயாணத்திற்குக் கொண்டு சென்றார்கள். அன்றிரவு அவனது மனைவியும் குழந்தையும் அந்த வீட்டில் தங்கினார்கள். அவனது மனைவி அவனைப் போலவே பள்ளிக்கூடத்துச் சிறுவன் செல்வத்திடம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவன் தண்ணீர் கொண்டு செல்லும்போது அவனுடன் குமாரியும் சென்றாள். அவள் ஆசையாகக் குழந்தை அணிந்திருந்த ஆப்பிள் படம் போட்ட ஜட்டியைத் தொட்டுப் பார்த்தாள். அவள் தொட்டவுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை  விழித்துக்கொண்டு அழத் தொடங்கியது.

குழந்தையை அப்பெண் மடியில் கிடத்தி பால் தந்தாள். குழந்தை பால் குடிக்காமல் திரும்பவும் அழுதது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அலமாரியைத் திறந்து எதாவது விளையாட்டுப் பொருட்கள் இருக்கிறதா என்று தேடினாள். அலமாரியில் பேபி ஜட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவள் அந்த ஜட்டியிலிருந்து ஒன்றை எடுக்கவும் மற்றவைகளும் சரிந்து விழுந்தன. சிறுவனும் சிறுமியும் ஜட்டிகளை எடுத்துப் பார்த்தார்கள். கீழே விழுந்த அனைத்து ஜட்டிகளிலும் ஆப்பிள் படங்கள் இருந்தன.

இறந்துபோனவனின் மனைவி அழுதாள். குழந்தையும் அழுகையை நிறுத்தவில்லை. சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள் எட்டிப் பார்த்தார்கள். சிறுவனின் அம்மாவும் அங்கு வந்தாள். தரையில் கிடந்த ஆப்பிள் ஜட்டிகளை எடுத்து அடுக்கித் திரும்பவும் அலமாரியில் வைத்தாள். ஒரே நிறத்தில் ஒரே மாதிரியாக இத்தனை ஜட்டிகளை எதற்காக வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று குழப்பத்தோடு அவள் அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். வீட்டு வாசலைக் கடந்து தெருவுக்குள் இறங்கியதும் குழந்தை அழுகையை நிறுத்தியது.

வீட்டின் திண்ணையில் அவள் அமர்ந்து குழந்தையை மடியில் போட்டுக்கொண்டாள். குழந்தை அவளது முகத்தையும் தெருவையும் மாறிமாறி வேடிக்கைப் பார்த்தது. சிறிது நேரத்திற்கு முன்பாகத் தெருவில் பிணத்தை வைத்திருந்த இடத்தைக் குழந்தைப் பார்த்தது. தரையில் சிதறிக்கிடந்த பூக்களையும் அதனருகில் தேங்கியிருந்த தண்ணீரில் தெரிந்த வெளிச்சத்தையும் பார்த்துச் சிரித்தது. குழந்தை சிரிப்பதைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்த இறந்துபோனவனின் மனைவி வந்தாள். அவள் அழுகையை நிறுத்திவிட்டுக் குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டாள். அவர்கள் சிரிப்பதைக் கண்ட சிறுவனும் சிறுமியும் கைக்கொட்டிச் சிரித்தார்கள். திடீரென வீட்டிற்குள்ளிருந்து சத்தம் கேட்டது. வீட்டுக்குள் சென்றவர்கள் அலமாரியிலிருந்து ஆப்பிள் பழங்கள் உருண்டு விழுவதைப் பார்த்தார்கள். தரையில் உருண்டு போகும் பழங்களைப் பிடித்துவிட வேண்டுமென சிறுவனும் சிறுமியும் பின்தொடர்ந்து ஓடினார்கள். அவர்களால் பார்க்க முடிந்தது, தொட முடியவில்லை.

000

எஸ். செந்தில்குமார்

தமிழில் கதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் எழுத்தாளர். தேனி மாவட்ட பின்னணியில் கதைகளை எழுதுகிறார். யதார்த்தவாத அழகியலுடன் வெவ்வேறு நுண்வரலாற்று நிகழ்வுகளையும் தொன்மங்களையும் குலக்கதைகளையும் இணைத்து புனைவுகளை உருவாக்குபவர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. இரண்டு கதைகளும்
    மனதை பிழிந்து காயப்போட்டு விட்டன.
    இனம் புரியாத ஏதோ
    ஒரு வலி என்னவோ செய்தது மனதை.
    அதை சொல்ல வார்த்தைகள்
    வசப்படவில்லை.
    மனதை

    • கதைகளைப் பொருட்டுப்படுத்தி வாசித்தமைக்கு நன்றி சரவணக்குமார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop