
சறுக்குமேடையைக் கண்டதும் சிரிக்காமல் முறுவலித்துக்கொண்டேன். ரிஷி அந்த சறுக்குமேடையில் ஏறிச்சென்று இரயில் நிலையத்திற்குள் நுழைந்தான். திரும்பிப் பார்ப்பானென்று ஒரு தினுசில் யோசித்தபடியே பின்தொடர்ந்து சறுக்கில் ஏறுகிறபோது எடுத்துவைத்த ஒவ்வொரு அடிகளையும் சறுக்காமல் பார்த்துக்கொண்டேன்.
சின்னதாகப் பயணிகள் காத்திருக்குமிடம். டிக்கெட் கவுண்ட்டரில் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிவருவதாக என்னை வரிசையைவிட்டுத் தள்ளியிருக்கச் செய்துவிட்டு பரபரப்பாக ஓடினான். அதே பதற்றத்தில் திரும்பிவந்தவன், டிஸ்பிளேயில் ரயிலின் தகவல்களைக் குறித்து அறிந்துகொண்டான். பிறகு கையைப் பிடிக்காத குறைதான். என் கையில் துணிப்பையின் பொதிந்த கனம். இம்முறைப் பயணத்தில் எதையோ கனமாக திணித்துக்கொண்டிருப்பது போலிருக்கிறது. ரிஷி பழவியாபாரி ஒருவரிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டே ரயில் நிற்கும் ப்ளாட்ஃபாரத்தை விசாரித்துவிட்டு படிக்கட்டுகளில் ஏறினான். பையைத் தூக்கிக்கொண்டு கடகடவென ஏறுவது அவ்வளவு சுலபமில்லை. இதற்காகத்தான் ரயிலில் வருவதில்லையென்று அப்போது ஒரு கொக்கி போட்டு அவனைப் பின்னே இழுத்துத் தள்ள ஆரம்பித்தேன். அவனோ அசௌகரியமாகச் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதாக ஆழ்ந்தான். அந்த முகத்தில் பற்கள் ஒன்றிரண்டாகத் தெரிய முறுவலித்தான். என் சிரிப்போ நடையோடு நடையாகக் கடகட.
இறங்குமுகப் படிக்கட்டுகளில் இறங்கி ஒருவழியாக ரயிலை வந்தடைந்தோம். காத்திருப்பு சிமெண்ட் பெஞ்சுகளில் ஒருவரையும் காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகள் தெரிவதுபோலிருக்க சுணக்கமாகயிருந்தது. எங்கள் பதிவுப் பெட்டியைக் கண்டதும் உள்ளே ஏறிக்கொண்டோம். எங்களுக்கு முன் ஒரு குடும்பம் ஏற எத்தனித்தபோது சுத்தம் செய்வதாக தவிர்த்துக்கொண்டிருந்தார்கள். ஏனோ ரிஷிக்கு எனது பதினைந்து வருடங்களுக்குப் பிறகான ரயில் பயணத்தைத் துவக்கி வைக்க அவ்வளவு ஆர்வம். ஆனால், அந்தப் பதினைந்துவருட இடைவெளிகுறித்து இப்போது அவனுக்குத் துணுக்களவுகூடத் தெரியாது. பையை மட்டும் பதிவிருக்கையில் வைத்துவிட்டு வெளியேறுகிறோமென்று துப்புரவாளர்களிடம் நேரடி ஒப்பந்தம் செய்துவிட்டு இருவரும் சமர்த்தாக வெளியேறி, இல்லை இல்லை… அதற்கு நேரெதிரான பெட்டிக்குள் நுழைந்தோம். எல்லாம் காலியான இருக்கைகள். ஆனால் எங்கள் பெட்டியிலிருந்து இந்தப் பெட்டிக்கு வர இடையில் கழிவறைகளின் இருப்பில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடந்தேன்.
ரிஷிக்கு இரண்டு மணிக்கு மீட்டிங். ஆபிஸில் மேலாளர் உத்தியோகம். ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பதாகச் சொன்னான். கண்டிப்பாக இவன் மீட்டிங்கை அட்டன் செய்தே ஆகவேண்டும். என்னைக் காலிப்பெட்டிக்குள் தனியாக விட்டுவிட்டு கூகுள் மீட்டிங் லிங்கை க்ளிக்செய்து ஒவ்வொருவராக கனெக்ட் செய்தபடியிருந்தான். வராத ஒருவரின் பெயரைச் சொல்லி மற்றொரு குழு உறுப்பினரிடம் சொல்ல அவரும் அந்த இணையாதவரைத் தொடர்புகொள்ள அதில் ஏதோ தாமதம். இவனே அப்பெண்ணை நேரடியாகப் ஃபோனில் அழைத்து மீட்டிங்கில் சேருமாறு ஆங்கிலத்தில் இழைந்தான். அப்பெண் மதிய உணவிற்குப் பின்னான உறக்கத்திலிருந்து மீண்டவளாக சோர்வில் “ஓகே” என்று ஃபோனைத் துண்டித்துவிட்டு மீட்டிங்கில் புகுந்துகொண்டாள். ரிஷியும் ஒருமுறை மீட்டிங்கில் அவளது பெயரை அழைத்து குழுவைச் சரியாகச் சேர்த்துவிட்டதில் துலக்கமடைந்தவனாக ப்ராஜெக்ட் ,இத்யாதி முடிக்கவேண்டிய டார்கெட்களை குறிப்பெடுக்கத் தொடங்கினான். ஒன்றிரண்டாக விழுந்த கார்ப்பரேட் மொழிகளைக் கேட்டவாறு காலாற நடக்கலாமென்று பயணிகள் நடக்கவிட்டிருக்கும் இடைவெளியில் நடந்துபார்த்துக்கொண்டிருந்தேன். நீல நிற இருக்கைகள். அப்பொழுதுதான் துடைத்திருக்கவேண்டும் இந்தப் பெட்டியை. லேசாக ஈரவாடை.
துப்புரவு முடிந்ததும் உபகரணங்களுடன் வெளியேறிப்போனார்கள். உடனே மூச்சை உள்ளே இழுத்துப்பிடிக்கத் ஆரம்பித்தேன் இந்தப் பெட்டியிலிருந்து நகர்கிறபோதே. கழிவறைகளைக் கடந்தும் இந்த மூக்கு முகத்தில் சரியாகப் பொருந்திக்கொள்ளாமல் சுவாசத் தடுமாற்றம். எனது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். பக்கத்து இருக்கையில் பாய்வீட்டுப் பிரியாணிக் கடையில் வாங்கிய சிக்கன் பிரியாணிப் பார்சலும் தண்ணீர்பாட்டில்களும் பிறகு ரிஷியின் பிளாஸ்க்கும் வைக்கப்பட்டது. துணிப்பையை மேலே தூக்கிவைத்துவிட்டு மீட்டிங்கிற்குள் புகுந்துகொண்டான். என்ன செய்வதென்ற யோசனையில் பையை மேலே வைக்கத் தூக்கும்போதே வாசிக்கக் கொண்டுவந்த புத்தகத்தை எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு எடுத்துக்கொண்டேன். மெல்லிய கத்தையான புத்தகம். நூறுபக்கங்கள். ஒன்றரை நாள் வெளியூர் பயண நெருக்கடியில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவே நேரமிருக்காது. ஆனாலும் பக்கங்களில் பிடிமானம் பிடித்திருந்தது. அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட கதை எப்போதோ எழுதப்பட்டது. நிச்சயமாய் இன்றிலிருந்து பின்னோக்கிய பத்துவருடங்களில் எழுதியதில்லை. கதையின் பழுப்பு வளையம் சூழ்ந்துகொள்ள இலகுவாகயிருந்தது. உண்மையில் வயதாகிப் போன கதைகளுக்கு மவுசு உண்டு. தரமென்று சொன்னால் ஒரு அழுத்தம் பின்னடைவோடே இருக்கும். ஒரு கதையைச் சொல்ல முனைந்திருப்பார்கள். அந்தக் கதைக்குள் நம் மூளையைச் சரியாகப் பிணைத்துக்கொள்ள முடியும். எவ்வளவுதான் சமகாலத்தோடு ஒட்டி உறவாடி முன்னேறிக்கொண்டுபோவதுபோல் ஓர் எழுத்தாள மனநிலைக்குத் தோன்றினாலும் பழைய கதைகளில் உள்ள காலம் மழுங்கலில்லாமல் நேரே பிரஸ்தாபிக்கப்படுவது ஆச்சரியமொன்றுமில்லை. பழைய சேலை பழைய நகைகள் பழைய சோறு இன்னும் பழைய…எனப் பழையவைகளுக்குள் இருந்துகொள்ள ஆசைப்படுகிறோம். காலத்தை அவ்வகையில் நிறுத்திப் பார்க்கிறோம். மனதின் மூலைமுடுக்கில் பழையதை விரும்பி பழையதிற்கேத் திரும்பும் வாஞ்சை ரகசியப் பித்தாய் ஒளிந்து இல்லாமலாகிறது. அந்தப் பித்துக்கண்களின் ஒளி பழைய கதைகளுக்குள் பிரவேசிக்கிறபோது மனமானது பார்வையில் புத்துயிர் பெற்று மருகி நிற்கிறது. பிறகு சமகாலத்திற்குத் திரும்புகிறபோதும் அந்தப் பழைய செப்பு பூசப்பட்ட கதைகளின் வர்ணஜாலம் மிகையற்ற வெளியாகத் தொடர்வதில் குறிப்பாக அடுத்து எழுத்தாளர் புதிதாக எழுதப் போகும் கதையிலும் மொழி செப்பனிடப்படுவதில் எந்த மிகையழுத்தமும் இல்லாமல் தாகசாந்தி செய்துகொள்கிறது. நாமெல்லாம் தாகத்திற்குத்தானே தண்ணீரே குடிக்கிறோம்.
எழுத்தாளர் சிறப்பான கதைசொல்லி. ஆனால் அந்த எழுத்தாளர் மேல் அத்தனை கதைசொல்லிகளும் ஏறி அமர்ந்துகொள்வதில்லையா?!.
இரண்டு பாட்டில்கள் எதற்கென்றேன். தூரமான பயணம் வெயிலைக் காரணம்காட்டி இரண்டையும் என் பக்கமே தள்ளிவிட்டான். ஒன்றைச் சுமந்துசெல்வதே பெரும்பாடு.தண்ணியைக் குடித்தெல்லாம் பயணம் சிறக்குமா?! தாகமும் பெரிதாக ஊற்றுப்பெருக்கப் போவதில்லை.ஏசிப் பெட்டியிது .பயணமென்றாலே கனன்றுகொண்டிருக்கும் உடலைத்தான் தூக்கிச்செல்வோம். அதற்கெல்லாம் நீர்வார்த்து ஆகுமா?!. புத்தகத்தை மடியில்வைத்துப் பிரித்துப் பார்க்கவும் பதற்றமடையவும் மனம் இருப்புக்கொள்ளாமலும் இருக்கவே ஆசைப்பட்டேன்.எனது பக்கத்து இருக்கையிலிருக்கும் தண்ணீர் பாட்டில்கள் ஒருபுறம் வதைசெய்கின்றன. அவற்றைப் பார்க்காமலாவது இருக்கலாம். அவற்றிற்கோ என்னைப் பிடித்துக்கொண்டு ஆட்டுவிக்கும் பகிஷ்காரம் வேறு.ஒன்றிலாவது எனக்கு நிம்மதி கிடைக்குமா என் தர்மசங்கடம் நீங்குமா பக்கத்தில் அமர்ந்திருப்பவரை தொந்தரவு செய்யக் கூடாதென்கிற குறைந்தபட்ச நாகரீகமாவது அவற்றிடமிருந்து கிடைக்குமா?! இல்லை நிச்சயமாகயில்லை. எனக்குத் தண்ணீர் பாட்டில்களை இப்படி இருக்கையில் அமர்த்துவது காலங்காலமாகப் பிடிக்காது. இடையில் ரிஷி வேறு வந்து முன்னிருக்கையின் முதுகிலிருந்து லாக்கை எடுத்துவிட்டால் திறந்துகொள்ளும் உணவுப்பொட்டல மேசையைத் திறந்துவிட்டுக் காட்டினான். எனக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடில்லை. அதிலும் இற்றுத் தொய்ந்த லாக்.இப்பொழுது வேண்டாமென்று சைகையில் காட்டிவிட்டு புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டதாகயிருந்தேன். இந்தப் புத்தகத்தில் படித்து முடித்த பக்கங்கள் அதிகமாகியிருந்தன. இப்போது குறைந்தபட்சமாவது ஒரு பக்கத்தை நகர்த்திவிட்டதாக தூக்கி நிறுத்திக்கொள்ளவேண்டும் என்னை. என்னவோ இது மட்டும் முடியாத காரியமாகவே நகர மறுத்தபடியேயிருந்தது.காலமென்கிற பெருவெளியை ஒரேயொரு பக்கத்தில் வைத்து அழுத்தி அதை மறைத்து ஒழுங்குபடுத்தி நிறைத்து எங்கும் விலகிச் சென்றுவிடாதாவாறு ஒரு பக்கத்தின் எழுத்துக்களாக ஊடுருவவிட்டேன். ஒரு எழுத்துக்கும் என்னைத் தொடர்பிறுத்திக்கொள்ள வக்கில்லை. எல்லா எழுத்துக்களையும் கோர்வையாக்க முயற்சித்தேன்.ம்ஹூம் எழுத்துக்கள் எல்லாம் அசைவின்றிக் கிடந்தன. ஒன்றுக்கும் உயிரில்லை.எழச் சத்தில்லை. யோசிக்கத் தூண்டும் உணர்வில்லை.ஒரு எழுத்தாளர் தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் திரண்ட மனநிலையில்லை.இதற்குப் பிறகு வாசிக்கவாவது மண்ணாவது என்று மூடிவைக்கத் தாமதித்திருக்கிறேன் அவ்வளவுதான். ஏசிப் பெட்டியின் அடைக்கப்பட்ட கண்ணாடிகளின் வழியே வெளியே மரத்துக்கிடக்கும் காட்சிகளைக் கூட இப்போதிந்த செய்கைக்கு உதாரணப்படுத்திவிடலாம்.வெளியில் யாரையும் காணோம்.தண்ணீர் பிடிக்கும் குழாய்கள் மட்டும் எதிரெதிர் துருவங்களில் ஏப்ரல் வெயிலில் வறட்சித்துக் கிடந்தன.யாராவது வந்து அந்தக் குழாயின் மூடுபல்லக்கை மேலே தூக்கவேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வராத குழாயென்றே நினைத்துக்கொள்வேன். சொல்லிவைத்ததுபோல் ஜனநடமாட்டம் பெரிதாகயில்லை.ஒருவரும் குழாய்ப் பக்கம் தலைகாட்டுவதாகயில்லை. மருந்திற்குக் கூட ஜனங்கள் ஜன்னல் வெளியில் கிழக்கும் மேற்குமாக நடந்துபோகவில்லை.
வயதானவர் ஒருவர் வரிசையாக லக்கேஜூகளை ஏற்றி அடுக்கிக் கொண்டிருந்தார். அவரின் பின் வந்தவர்களெல்லாம் அவரது குடும்ப அங்கத்தினர்கள். பேரன் பேத்தி.மருமகள் ஒருத்தி புதிதாய்ப் பிறந்த தொட்டில் குழந்தையோடு ஏறியிருந்தாள்.எனது இருக்கைக்கு முன்னால் அமர்ந்துகொண்டாள். அவளது பக்கத்து இருக்கைக்கும் யாரும் இதுவரை வந்துசேரவில்லை.வயதானவர் அந்தக் குடும்பத்தின் தாத்தா. பேரன் பேத்திகளுக்குக் கொண்டுவந்த சிற்றுண்டிகளை அவ்வப்போது திறந்துகொடுப்பதும் அவர்களை கழிவறைகளுக்குக் கூட்டிக்கொண்டு போவதுமாக வேலையாகவேயிருந்தார். இத்தனை வயதானவர் இவ்வளவு பெரிய பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஏற்றி அதன்பிறகு ஒவ்வொருவருக்கும் பார்த்துப்பார்த்துக் கவனித்துக்கொள்வதென்று அந்த ஆற்றலை என்னவென்று சொல்வது. அதுவும் ஒரு வழியாகப் படிக்கட்டுகளில் ஏறி மறுவழியாக இறங்கி எனது ஒற்றைப் பையை ஏற்றியிறக்கிக் கொண்டுவரவே அவ்வளவு மூச்சிரைப்பு. பெரியவருக்கும் சும்மா சொல்லக்கூடாது. அவரும் மூச்சிரைப்புகளோடே எல்லாப் பொறுப்புகளையும் குறிப்பாக இந்தக் குடும்பத்திற்கு இப்போது அவர்தான் ஆண்துணையென்கிற வலிய கௌரவத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். அவரின் வயதையும் வலுவில்லாத உடலையும் சேர்த்துப் பார்த்தேன். தொய்வில்லாமலில்லை. ஏனோ பொறுப்பு இருக்கிறதே.பொறுப்பை விட்டொழிக்க முடியுமா?!. இருக்கையில் கூன்போட்டு உட்கார்ந்திருந்தவள் தலையை எக்கி ரிஷியைத் தேடிப் பார்த்தேன். அடுத்தப் பெட்டிக்கும் எங்களது பெட்டிக்குமிடையே ஊடாடிச் சென்றுவிட்டதுபோல் கண்ணாடி பிம்பமாகத் தெரிந்தான். சரி அவன் அவனது வேலையில் பிஸி. வெளியில் சென்று பார்க்கவேண்டும். பின்னாலுள்ள இருக்கைகளுக்கெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் வந்தபடியிருந்தார்கள். பக்கத்தில் பிரியாணிப் பொட்டலம், சாப்பிடலாம். யார்வந்து கேட்கப்போகிறார்கள் .எதற்கோ தயங்கித் தயங்கி நேரம் போகட்டுமென அவ்வப்போது கடிகாரத்தின் முட்களைப் பார்த்துக்கொண்டேன். அவைகள் இன்னும் நேரமிருப்பதாக உத்தேசிக்க ஆரம்பித்தன.
கேசவன் அழைத்துப் பேசினார். அலுவலகத்தின் புதிய வருகை. புதிதாக முளைத்த காளான். கொஞ்சம் பூரிப்பில் வெளுத்திருக்கத்தான் செய்யும். என்ன வேண்டுமோ அவருக்கு. எனக்குப் பெரிதாக யாருடனும் எந்த ஈர்ப்புமில்லை. தற்காலிகக் காதல்வலையில் விழுகிற மீன்துள்ளலுமில்லை. ஆனால் பேசினால் பேசலாம். அதுவும் சுயமரியாதையைத் தொட்டுவிட்டால் கொஞ்சமும் இந்தப் பேச்சு தொடராது. ரத்துதான். ரயிலில் ஏறியமர்ந்திருப்பதாக ரிஷியின் உதவியாகச் சொல்லி மௌனம் கலைக்கத் தொடங்கியிருந்தேன்.என் மௌனத்திலிருந்து சில கூழாங்கற்கள் மழுப்பலில்லாமல் மெய்சிலிர்க்க ஜிவ்வென்று உருண்டோட கற்களை அதன்போக்கிலேயே போகவிட்டபடி பேசிக்கொண்டிருந்தேன்.
“இங்கிருந்து திருச்சி வரைக்கும் ட்ரெயின்.அப்றம் பஸ்” என்றேன்
“ஏன் மறுபடியும் ட்ரையின்லயே போகலாமே.எதுக்கு மாறனும்.இரு பாக்றேன்”
இந்தப் பக்கம் அலைபேசியில் காத்திருக்கச்செய்துவிட்டு டிக்கெட் பார்ப்பதை தெளிவாகத் தனது சுய புலம்பல்களோடு ப்ரஸ்தாபித்தார். வேண்டாமென்றேன் அழுத்தமாக. அவரோ ஆனால் ஆச்சு என்கிற வகையில் அலைபேசி எண்கள் வயது இத்யாதிகளைக் கேட்டு டிக்கெட்டை எடுத்துவிட்டார்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பசி. வெகுநேரமாக வயிற்றோடு பிணைத்துக்கொண்டிருந்த லேசான தலைவலி தலைக்கும் வயிற்றுக்குமான நேர்கோட்டை இழுத்துப் பிடித்திருந்தது. மேலுமந்த இழுத்த இழுப்பிற்கெல்லாம் போகமுடியாதபடி பொட்டலைத்தைத் திறந்து ரிஷியைத் தேடினேன். எப்போது என் பின்னால் இடதுபக்க இருக்கைகளின் வரிசைக்கு வந்தாரென்று தெரியவில்லை. கூப்பிட்டுப் பார்த்தேன். ஜனசந்தடிகளுக்கு மத்தியில் என் குரல் கவ்விக்கிடந்து காற்றில் அலைந்து எங்கோ போய்க்கொண்டேயிருந்தது. சரியாக ரிஷியின் காதுகளுக்கு எட்டாத அலைவரிசையிலிருந்தேன். அவரோ கீழே பார்த்தவாறே ஏதோ யோசனையில் யாரையோ ஒட்டுக்கேட்பது போலிருந்தார். அவர் காதுகளில் ஹெட்ஃபோன்ஸ்களைப் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.
“ரிஷி….
ரிஷி …….”
ஒருவழியாக நிமிர்ந்து தொடர்பெல்லைக்கு அப்பாலிருந்து திரும்பிவிட்டார்.
“சாப்ட வாங்க”
“……….”
அவரோ பரமபிதாவாகி வேண்டாமென்று எளிதாகக் கடந்துவிட்டார். எனக்கு சங்கடம்.சரி…அவரின் மறுப்பு தெளிவாகவே உணர்த்தப்பட்டதையுணர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்.
சாப்பிடச் சாப்பிட உள்ளே சால்னாவில் ஊறி வந்துகொண்டிருந்தது கவளங்கள். ஒரு முட்டையையும் கோழிக்காலையும் தீர்க்கிற வரை பிரியாணி சுகம் தனி. அதன் ருசியோ அபாரம்.பிறகு மிச்சமுள்ள உணவை பேக் செய்து எங்க போடவேண்டுமென்று தேடிக்கொண்டு பெட்டியைவிட்டு வெளியேறினேன். சாப்பிடுவதற்கு முன்னர் கைகழுவ வாட்டர் பாட்டிலை ஒயிலாகத் தூக்கிக் கொண்டு வந்தால், அங்கே பைப்பொன்று அறுதியிட்டு அரையில் நின்றுகொண்டிருந்தது. இருந்தாலும் சும்மா தண்ணியென்றாலும் விடுவோமா,பாட்டிலை இடுப்பில்வைத்து அழுத்திக்கொண்டு பைப்பை எவ்வளவு அதன் முக்காட்டைப் பிடித்துத் தூக்க முடியுமோ முயன்றேன். தண்ணீர் பீறிட்டுவிடும் அபாயமெல்லாம் நினைவில் வந்து அச்சமூட்ட சற்றே தணிந்தவாறே முக்காட்டை தூக்கி ஒருவழியாக கையைக் கழுவியிருந்தேன். இப்போது மீதியான பொட்டலத்தைத் தூக்கிப்போட வேண்டும்.ஏனோ ரயிலின் கதவுகள் இறுகச் சார்த்தப்பட்டதாகத் தோற்றமளித்தன ஒரு பக்கம் எச்சில் கை.ஒரு பக்கம் பொட்டலம். யாரும் உதவிக்கு வருவதாகத் தெரியவில்லை.யாரோ வந்தார் ஒருவர். சரியாக என் புலம்பலைக் காதில் வாங்கிக்கொண்டவர் கைகழுவுமிடத்திற்குக் கீழ் அடைபட்டிருக்கும் பகுதியை ஓங்கி ஒரு உதை.
“இங்க போடுங்க”
உதவியாகக் குப்பைத்தொட்டியை அறிமுகம் செய்தவர் கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி கழிப்பறைப் பக்கம் நகர்ந்தார். அவர் உதைக்குத் திறந்து அடையாளம் காட்டியது என் கைகொடுத்த விசைக்கு பொறுமையாகவே திறந்துகொண்டது. பையோடு விசையைச் செலுத்தி உள்ளே தள்ளிவிட்டு வந்தேன். நேரம் செல்லச் செல்ல ரிஷியும் இதே பெட்டியில் என்னோடு பயணத்தைத் தொடரக்கூடுமென்ற இயல்பு மீறலில்லாமல் தொற்றிக்கொண்டது. வந்தாலும் வரலாம். மீட்டிங்கில் மூழ்கிவிட்டானா..? தூங்கிவிட்டானா..? தெரியவில்லை. கீழே பார்த்தமாதிரியே உட்கார்ந்திருந்தான். கடிகாரத்தைப் பார்த்தால் கடைசி பத்து நிமிடங்கள். பரபரத்த கால்களை உதறியெழ ரிஷியைப் பார்த்தும் பார்க்காமலும் கடந்துபோனேன்.
கதவைத் திறந்து வெளியேறினால் காலியாகக் கிடக்கும் நடைமேடை. ஆனால் முதல் நடைமேடையில் ஒன்றிரண்டு கடைகள். பயணிகள் தூரத்தில் நடந்துவருவது தெரிந்தது. வெண்கல நிறத்தில் வெயில் வியர்வையாக வழிய துடைத்துக்கொண்டே பார்வைகளைச் சுழலவிட்டேன். சில எட்டுகள் வைத்து ஆசுவாசமடைந்தேன். திரும்பிப் பார்த்தால் ரிஷி உடைமைகளோடு இறங்கத் தயாரானான்.
“கொஞ்ச நேரம் வெளில நிக்கலாம்னு…”
“நில்லுங்க..நில்லுங்க..”
“கிட்டத்தட்டப் பதினஞ்சு வருசமாச்சு ட்ரெயின்ல போயி. இன்னிக்கிதா ஃபர்ஸ்ட் டைம் தனியா போறேன்.”
“ஓ…ஆச்சரியமா இருக்கு …பதினஞ்சு வருசமாச்சா!”
“ஆமா…வீட்லயுமே ட்ரெயின் ப்ரீஃபேர் பண்ணமாட்டாங்க.சட்டுனு லக்கேஜ்ஜத் தூக்கிட்டு வந்து ஏறி…கஸ்டமாயிருக்கும்”
“ஷியின் கவனம் என் பேச்சைச் சுற்றியேயிருந்தது.
“நீங்க சாப்ட்லயே?”
“பாத்தீங்களா மீட்டிங்கே இவ்ளோ நேரமாச்சு. இனி வீட்டுக்குதா போகனும்”
“ம்ம்ம்…அது ஒரு தடவ அப்பாவும் அம்மாவும் சித்திப் பையன் பூணூல் கல்யாணத்துக்கு ட்ரெயின்ல போய்ட்டு திரும்பி வர்றப்ப, ஒருத்தர் அவசரமா ஏறிவந்து இவங்க முன்னாடி உக்காந்துருக்கார். ஓடி வந்து ஏறுனதுல ஹார்ட் அட்டாக் வந்து அப்டியே அவங்க முன்னாடியே உட்கார்ந்த மாதிரியே டெத் ஆகிருக்காரு. அதனால ஒரு பயம்.”
“ஆமாமா ஏதாவது ஒரு ரீஸன் இப்டியிருக்கும்”.
ரிஷி நல்ல உயரம். ஒல்லி. காலையில்தான் அறிமுகம். அலுவல் வேலை முடிந்த கையோடு அவசரமாகக் கிளம்ப யோசனையாகவே நின்றிருந்தார். சரியாக அறையை அடைந்ததும் அலைபேசியில் அழைத்து,
“ட்ரெயின் டிக்கெட் இருக்கு” என்றார்.
சுத்தம்,போகத்தெரியாதென்றேன்.சரிதான்..ஏற்றி உட்காரவைத்துவிட்டே செல்வதாக உத்தரவாதமளித்தார்.
ரிஷியிடம் பேசிக்கொண்டேயிருந்ததில் பத்துநிமிடங்களுக்கு எத்தனை வேகக் காலடிகள் முளைத்தன தெரியவில்லை. சினிமாவில் வருகிற மாதிரி ட்ரெயின் ஊர்ந்துசெல்வதை கொஞ்சம் தாமதமாகத்தான் பார்த்தேன். அய்யோ இதென்ன …ஒரே தாவலாக ஏறிக்கொண்டேன். பலவருடங்கள் கழித்த களிப்பு நீங்கவுமில்லை. நுழைவில் நின்றபடியே புகைப்படமெடுத்துத் தரச்சொன்னேன். அவர் ஃபோனை எடுத்து லாக்கை நீக்குவதற்குள் ட்ரெயின் வேகமாக ஊர்ந்துசெல்ல நடையின் வேகத்தைக் கூட்டியவர்,
“இன்னோரு நாள் பாத்துக்கலாம்”என்றார்.
பின்னோக்கிய காட்சி, சரிதான். நிராசை எப்போதும் வேடிக்கையானதுதான் .கதவை இழுத்துச் சார்த்திவிட்டுப் பெட்டிக்கு வந்தேன் .இருப்புக்கொள்ளவில்லை. ஏனோ ரிஷியைக் கண்ணாடி வழியாகத் தேடினேன். ரயில் இன்னும் வேகமாக ஓடத்தொடங்கியது.

க.சி.அம்பிகாவர்ஷினி
க.சி.அம்பிகாவர்ஷினி சிறுகதைகள், கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். படிமங்கள் ஊடாக மன நகர்வுகளை புனைவின் வழியே வெளிப்படுத்துபவர். இரவு ஒரு சிறிய நூலகம், தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம், சிதைமுகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.