மகிழ்ச்சி என்பது ஓர் ஏமாற்று வேலை : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

உரையாடல் : நிஷாந்த்

“எழுத்தாளர்கள் நடுவே கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்பது அகழின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று. இவ்வருடம் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘பொருள் மதிப்பு வாழ்வு’ கட்டுரைத் தொகுப்பு வெளியானது. நிஷாந்தின் ‘பின்காலனிய நினைவேக்கம்’ என்ற நூலும் வெளியானது. இரண்டுமே சமூக, அரசியல் மற்றும் கலாச்சார விமர்சனத்தை உள்ளடக்கமாக கொண்டவை. எனவே இருவரிடமும் கலந்துரையாடலுக்கான கோரிக்கையை முன்வைத்தோம். ‘பின்காலனிய நினைவேக்கம்’ நூலை ஒட்டி, நிஷாந்திடம் பாலசுப்ரணியன் பொன்ராஜ் மேற்கொண்ட உரையாடல் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது ‘பொருள் மதிப்பு வாழ்வு’ பற்றிய கேள்வி-பதில் வெளியாகிறது. இருவருக்கும் அகழ் சார்பில் நன்றி”

000

தேசியம் என்பது காலனியம் அரசியல்ரீதியாக உருவாக்கிய ஒரு பிரச்சனை



நிஷாந்த்: ‘பொருள் மதிப்பு வாழ்வு’ – நல்லதொரு கட்டுரைத் தொகுப்பு. வாழ்த்துக்கள். உங்களுடைய இலக்கியஞ்சார் கட்டுரைகளைவிட இசை மற்றும் பாப்புலர் கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகளை ரசித்து வாசித்தேன். வடிவேலு, கோக், கண்கள், Electronic Dance Music தொடர்பான கட்டுரைகளில் சிறப்பான கவனிப்புகளை வெளிப்படுத்தியிருந்தீர்கள். கண் எனும் நுகர்வுறுப்பு மிகச்சிறப்பான கட்டுரையாக இருந்தது. உங்களுடைய எள்ளலான ஒற்றை வரிகளும் பிடிந்திருந்தன. தனிப்பட்ட முறையில், உரைநடை சார்ந்த இறுக்கங்களை தளர்த்துவது குறித்த எண்ணத்தை இத்தொகுப்பு எனக்கு ஏற்படுத்தியது.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: நன்றி

கேள்வி: ‘பொருள்-மதிப்பு-வாழ்வு’ புத்தகத்தின் அட்டைப்படத்தோடு தொடங்குகிறேன். அபார்ட்மெண்டுகளின் மேலே, சிறகிலிருந்து பிரிந்த இறகுபோல, மிதந்து கொண்டிருக்கும் ஒரு பழைய துருப்பிடித்த கோக் டின். அநேகமாக உங்களுடைய புனைவுலகில் இடம்பெறக்கூடிய படிமம். ஒரு ரோஜாவைவிட ஒரு monobloc chairதான் உங்களுடைய புனைவுலகினுள் இயல்பான சங்கடமில்லாத இருப்பைக் கொண்டிருக்குமென்று கருதுகிறேன். நுகர்வுச் சமூகத்தின் பொருட்களுக்கும் உங்களது புனைவெழுத்துகளுக்குமான உறவு எத்தகையது?

பதில்: இயற்கையைக் காட்டிலும் ஓர் ஏடிஎம் இயந்திரம் பிசகாமல் செயல்படும் காலத்தில் இருக்கிறோம். நான் நுகர்வுக் காலத்தின் தயாரிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை.  நிதிமயமாகும் வாழ்க்கை, கடனில் மூழ்கும் குடும்பங்கள், வாங்கிக் குவிக்கப்படும் பொருட்களும் விரைவில் சலிப்படையச் செய்வது, பொருட்களின் புதிய பதிப்புகள் வரும் போது நாம் அடையும் குறுகுறுப்பு, செய்திகளின் பெரும் மழையில் தப்ப முடியாமல் நனைவது இவையனைத்தும் நம் காலத்திற்கான புதிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றன.  இருள்திரவம் எனும் கதை 2009இல் எழுதியது. அப்போது இணையம் கூட வேகமாக இல்லை, திறன்பேசிகள் கிடையாது.  தகவல்களால் தாக்குறுவது குறித்த கதை அது. நான் இரண்டு தனிநபர்கள் ஓயாது பேசிக் கொள்வது, செய்திகள் பரிமாறிக் கொள்வதே நுகர்வு என்றுதான் கருதுகிறேன். நாம் பொருட்களால் மெல்ல மெல்ல கொல்லப்படுகிறோம் இல்லையா? செயலிகள், செல்பேசிகள், கணிப்பொறிகள், இணையம், நகரமயமாதல் இவற்றின் வழியே அழிந்து போகும் எல்லைகள், வரம்புகள் இவையெல்லாம் எனக்கு பேசுவதற்கான பொருட்களாக இருக்கின்றன.

கேள்வி: தமிழ் புனைவுகளுக்கும் வரலாற்று எழுத்துக்குமான பந்தம் ஓரளவு ஆரோக்கியமாகவே உள்ளதாகக் கருதுகிறேன். ஒரு கச்சாப்பொருளாகவேனும் வரலாறு வந்துவிடுகிறது. தமிழ் புனைவுக்கும் தத்துவத்திற்குமான பந்தம் எந்நிலையில் உள்ளது? வடிவ முயற்சிகளைத் தாண்டி உள்ளடக்க ரீதியாக தத்துவக் கேள்விகள் சமகால தமிழ் புனைவுகளில் செலுத்திய தாக்கம் குறித்து..

பதில் : நல்ல புனைவெழுத்தாளர்கள் தத்துவவாதிகளே என்று முன்னர் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறேன். தனக்கென்று வரலாறு குறித்த சிந்தனை, மொழிவளம், சமகால உலகைக் குறித்த ஆழமான அறிவு, சிந்திக்கும் முறைமை இவை அனைத்தும் கொண்ட ஓர் எழுத்தாளரை உயர்ந்த ஓரிடத்தில் வைக்கிறோம்.  சமகாலத்தின் தத்துவம் என்று நாம் எதனைச் சொல்வோம்? நாம் பல வகைகளில் தத்துவத்தோடு தொடர்பை இழந்து விட்டோம்.  கருதுகோள்களை, முறைமைகளை உருவாக்க நாம் சிரமப்படுகிறோம். நாம் சிந்தனை செய்ய முடியாதவர்களாக அல்லது அதில் மோசமானவர்களாக மாறியிருக்கிறோம். ஆனால் வளமான நம் மரபு, தன்னில் ஒரு பகுதியாக நம்மை செரித்திருப்பதன் வழியே நம்மை காப்பாற்றுகிறது. மரபின் வழியே சிந்திக்கும் பாரத்திலிருந்து நாம் தப்பிப்பதாக கருதுகிறேன்.  சமகால தமிழ் புனைவுகள் வெகு வெளிப்படையான விஷயங்கள் அல்லது ஒட்டடை மண்டிக் கிடக்கும் வரலாற்று அறைகளில் இயந்திர வேகத்தில் செயல்படுகிறது.  தத்துவத்திற்கான கடவுச் சீட்டு விண்ணப்பத்தை எப்படி நிரப்புவதென்று தெரியவில்லை.

கேள்வி: இன்று கேளிக்கையின் மையக்கூறாக அல்லது ஒரு மந்திர சொல்லாகவே ‘மூழ்கடிக்கும் அனுபவம்’ (immersive experience) மாறியுள்ளது. ஒரு இயர்போன் கூட புறத்தை இழக்கச் செய்யும் வகையில்- ஒலியை ரத்து செய்யும் – திறனைப் பெற்றிருக்க வேண்டியுள்ளது. ஒற்றைத் திரை (single screen) அரங்கங்கள் காலாவதியாகிவிட்டன. ஏனெனில், அவை மூழ்கடிப்பவையாக இல்லை. இவ்வாறான நுகர்வுச்சமூகத்தின் புலனனுபவத் திளைப்புகளை விமர்சனக்கண்ணோட்டதுடன் பார்ப்பதன் நீட்சியாகத்தான் ‘பாதை யாத்திரை செல்லுதல், நோன்பிருத்தல் போன்ற செயல்களைப்போன்றதே தற்காலத்தில் நாவல் வாசிப்பதும்’ என்கிறீர்களா? புலன்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கும் கேளிக்கை நுகர்வின் எதிர்நிலையில் நீங்கள் இலக்கிய வாசிப்பு அனுபவத்தை நிறுத்துகிறீர்கள் என்று புரிந்துகொள்ளலாமா?

பதில்: நமது புலன்களில் கண் ஏறக்குறைய ஒரு பாலுறுப்பாகவே மாறி இருக்கிறது. இணையத்திற்குப் பிறகு சந்தை தற்போது கையகலத்தில் குறுகிவிட்டது.  நான் தொழில்நுட்பத்தை வெறுப்பதில்லை. நீங்கள் குறிப்பிடும் Active Noise Cancellation earphoneகள் நான்கைந்து வாங்கியிருப்பேன். ஆனால் புலன்கள் தங்கள் ஆற்றலுக்கு மீறி பாரம் சுமக்கின்றன. ஆகவே விரைந்து மோசமடைகின்றன.  வாசிப்பை எடுத்துக் கொள்வோம், நாம் ஏன் முழுமையாக ஒரு நூலை வாசிக்க சிரமப்படுகிறோம்? ஏன் வாசிப்பில் ஆர்வமற்றுப் போகிறோம்?  திறன்பேசியை அருகே வைத்துக் கொண்டு ஒருவர் கவனம் சிதறாமால் வாசிக்க முடியுமா?  ஓயாது இணைந்திருத்தலின் திளைப்பில் இருந்து சற்று ஓய்வெடுப்பதற்கு வாசிப்பு பயன்படுகிறது என்பதால் நான் அதனை ஏறக்குறைய தியாகம் போன்ற ஒன்றாகப்  பார்க்கிறேன். நான் எல்லோராலும் அன்றாடம் பயன்படுத்தப்படும் செயலியைப் போலவோ, இணையதளத்தைப் போலவோ இருக்க விரும்புகிறேன்.  கவனத்தில் கொள்ளப்படாத, ஏற்கனவே மறக்கப்பட்ட மனிதர்களைப் போலவே நாம் எல்லோரும் வாழ்கிறோம்.  உலகம் நம்மீது ஓயாது அதன் வாந்தியைக் கொட்டுகிறது.  இதில் இருந்து நான் விடுபட விரும்புகிறேன். பெரும் நாவல்களை வாசித்து முடிக்கையில் எனக்கு பழநிக்கு பாதயாத்திரை சென்ற வந்த அளவிற்கு நிறைவு கிடைக்கிறது. 

கேள்வி: அரசியல் சரிநிலையை (political correctness) ஒரு அரூபமான தணிக்கைத் துறை அல்லது அரூபமான நவீன கட்டுப்பாட்டு இயந்திரம் எனலாம். நனவிலி எண்ணங்கள், ஆழ்மன உணர்வுகள், கனவுகள் முதலானவை சுதந்திரமாகத் திரியும் புனைவு வெளியை தற்கால அரசியற் சரிநிலை இயந்திரம் வெகுவாகச் சுருக்குகிறது. ‘ஒரு வகையில் நாவல் அடைந்த சுதந்திரம் நாம் பெற்றிருக்கும் சுதந்திரங்களின் தொகுப்பாகவும் தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனில், புனைவாசிரியர்கள் இப்புதிய சென்சார் இயந்திரத்தை பொருட்படுத்த வேண்டுமா? அல்லது அதனை எவ்வாறு அணுக வேண்டும்?

பதில்: புனைவாசிரியர்கள் எப்போதும் தணிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  மத நிறுவனங்கள், பத்திரிக்கை சட்டங்கள் இப்படியாக.  Inquisition காலத்திலிருந்து பார்க்கிறோம்.  டால்ஸ்டாயின் படைப்புகளும் தணிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றன. ஜாய்ஸின் யுலிஸிஸ் ஆபாசமானது என்று விமர்சிக்கப்பட்டது.  அரசியல் சரித்தன்மை தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் தரப்புகளின் குரலாகவே பார்க்கிறேன்.  நாம் ஊனமுற்றவர்கள் என்று சொல்வதை மாற்றி இருக்கிறோம். அலிகள் என்று திருநங்கைகள் அழைக்கப்படுவதை மாற்றி இருக்கிறோம். பொதுவெளிகளில் நிகழும் இம்மாற்றம் தனிப்பட்ட முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறோம். ஆனால் ஊடகப் பெருக்கமே அரசியல் சரித்தன்மையை ஊதிப் பெரிதாக்குகிறது.  பொதுவெளியில் நமக்கென நடத்தை விதிகளை இந்த புதிய நிலை உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு புதிய யுடோப்பியாவிற்கு நாம் தயாராகிறோம்.  ஆர்வெல் 1984இல் குறிப்பிடுவதைப் போல நமது மொழிகள் மாறிவிடும் போலிருக்கிறது.

கேள்வி: உங்களுடைய எழுத்துகளில் நுகர்வியம், நவதாராள வாழ்க்கைக் கூறுகள் வெளிப்படுமளவுக்கு சாதியச் சமூகத்தின் கூறுகள் வெளிப்படுவதில்லை. இத்தொகுப்புலுள்ள கட்டுரைகளிலும் சாதியமைப்பு குறித்த விசாரங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. இந்திய நகர்ப்புற வாழ்க்கையின் அடிநிலையில் தொக்கியுள்ள நவீன சாதிய இழைகளை எழுதுவது உங்களுடைய எழுத்து வடிவத்தை பாதிக்கும் என்பதால் பிரக்ஞைப்பூர்வமாக தவிர்க்கிறீர்களா அல்லது இயல்பாகவே அது வெளிப்படுவதில்லையா? 

பதில்: இரண்டும் இல்லை. சாதிக்கு அப்பாலான வெளிகளில் நிகழ்பவையாக எனது கதைகள் எழுதப்பட்டிருப்பதால் அதைத் தவிர்த்து விட்டிருப்பதாகத் தோன்றுகிறது. என்னளவில் நான் பிறந்த சாதியைக் குறித்த பெருமிதமும், தாழ்வும் இல்லை, அதன் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால் சீமுர்க் தொகுப்பில் இதைக் குறைந்த அளவில் கையாண்டிருக்கிறேன்.

கேள்வி: நீட்ஷேவின் ஈபர்மென்ஷ் (Übermensch) மற்றும் செர்வாண்டிஸின் டான் கிஹோத்தே. மேற்கூறிய இரண்டில் எது சிறந்த (தத்துவார்த்த) கற்பனையாகக் கருதுகிறீர்கள்? ஏன்? நீங்கள் யாருடையை பாதையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? (தன்முனைப்பின்மூலம் ஒருவர் கிஹோத்தே ஆக முடியாது என்கிற உண்மையை அடுத்த கேள்விக்குப் போகும்வரைக்கும் மறந்துவிடுவோம்.)    

பதில்: டான் கிஹோத்தேவையே அபாரமான கற்பனை என்று சொல்வேன். ஏனெனில் அக்கதாபாத்திரம் அவ்விதத்தில் கற்பனை செய்யப்பட்டதல்ல. அதற்கென அப்படியொரு சித்திரத்தை செர்வாண்டிஸ் வலிந்து உருவாக்கவில்லை. அது நிகழ்ந்துவிட்ட ஒன்று. பார்சிலோனாவில், டான் கிஹோத்தேவை எதிர்கொள்ளும் ஒருவன் சொல்வான், உன்னுடைய பைத்தியம் எல்லோருக்கும் தொற்றிவிட்டது என்று.  அதிமானுடன், டான் கிஹோத்தேவை அவனுடைய சாஞ்சோ பாஞ்சோவாக மாற்ற முனைந்து தோல்வியடைவான் என நினைக்கிறேன்.

கேள்வி: நீட்ஷே, மிஷிமா உள்ளிட்ட iconoclastகள் உங்களை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள் என்று இத்தொகுப்பில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. இவர்களைப்போல சமகாலத்தில் யாரைனும் உள்ளனரா?  அல்லது வருங்காலத்தில் உருவாகக்கூடிய iconoclast எத்தகைய இலட்சியங்களையும் கூறுகளையும் கொண்டிருப்பாரென்று நினைக்கிறீர்கள்?

பதில்: வருங்காலமா?!. நாம் ஏற்கனவே வருங்காலத்தில்தான் இருக்கிறோம். இலக்கியத்தைப் பொறுத்தவரை சமகாலத்தில் Laszlo Krasznahorkaiஐ சொல்வேன். ஆனால் அவர் மிஷிமா, நீட்ஷே போன்றவர் அல்ல. ஜோர்டன் பீட்டர்சனை வழிபடுபவர்கள் ஒருபக்கம், ஜிஜெக்கைத் தொடர்பவர்கள் ஒருபக்கம், டிரம்ப், மோடி வழிபாட்டாளர்கள் ஒருபக்கம். நாம் சமகாலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் சேர்த்தே அழித்துவிட்டதாகக் கருதுகிறேன். 

கேள்வி:
உங்களுடைய ‘இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்’ கட்டுரை, விக்டர் ஷ்லாவ்ஸ்கியின் பரிச்சயமழித்தலை நினைவுபடுத்துகிறது.  சாதாரணங்கள் பெருகிவிட்ட இன்றைய யுகத்தில் நல்ல இலக்கியம் உருவாவதற்கான மூலப்பொருட்களும் அதிகரித்துள்ளன என்று கொள்ளலாமா?

பதில்: எல்லாக் காலத்திலும் எழுதுவதற்கான விசயங்கள் நம்மிடையே இருக்கின்றன.  சொல்வதற்கான மொழியும், வடிவமும் மட்டுமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.  தற்போது எழுதுபவர்கள் மிகுந்த உற்சாகமாகவே எழுதுகிறார்கள்.  சூழல் என்னதான மகிழ்ச்சியற்றதாக இருப்பினும் அவர்களது வேகம் கிட்டத்தட்ட இலட்சிய வேட்கைக்கு ஒப்பாக இருப்பது வியப்பாக இருக்கிறது.  அவ்வப்போது தமிழில் கதைகள் படிப்பேன்.  கட்டுரைகள் சுத்தப் போர்.  அன்றாட வாழ்வு, பேச்சு மொழி இவற்றைக் கொண்டு ஏராளமான கதைகள் எழுதப்படுகின்றன.  எல்லாக் கதைகளும் பெரிய கேள்விகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  சாதாரணமாக நாம் கருதக்கூடியவையே நம் வாழ்வை தக்க வைக்க உதவுகின்றன.  அவற்றின் மதிப்பை நாம் உணர முடியாத அளவிற்கு நாம் அசாதாரணமானவற்றின் மீது மையலோடு திரிகிறோம்.  ஒரு தேவதைக் கதையைப் போல நம்மால் கதை சொல்ல முடிவதே முக்கியமானது என்று கருதுகிறேன். 

கேள்வி: படைப்பூக்கத்திற்கும் Melancholyயாவுக்குமான உறவை அரிஸ்டாட்டில் தொடங்கி வால்டர் பெஞ்சமின், ஹெய்டேகர் வரை பேசியிருக்கிறார்கள்.  ‘இழந்த பொற்காலத்திற்கு சென்று திரும்புகின்றவனாகவே நான் நாவலை வாசிக்கும் போது உணர்கிறேன்’ என்று நாவல் பற்றிய கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள்.  வாசிப்பையும், மெலன்கலியாவையும் இணைக்கும் புள்ளி சுவாரசியமானது இன்னும் விரிவாகக் கூற முடியுமா?

பதில்: நல்ல புத்தகங்கள் நம்மை சோர்வடையச் செய்கின்றன என்பார் டால்ஸ்டாய்.  ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், குற்றமும் தண்டனையும் வாசித்து இரண்டு நாட்கள் தூங்காமல் இருக்கலாம், ஆனால் அதன் பிறகு நாம் அன்றாடத்தில் மூழ்கிவிடுகிறோமே என்று.  இதை நான் தலைகீழாகத் திருப்புகிறேன்.  நாம் மூழ்கியிருக்கும் அன்றாடத்திலிருந்து விடுபட குற்றமும் தண்டனையும் வாசித்து இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்து பார்க்கலாம்.  அப்படிப்பட்ட இரண்டு நாட்களின் போது உண்மையில் நாம் நம்மை மிக நல்லவர்களாகக் கருதிக் கொள்வோம்; அடுத்த மனிதரின் துயரத்தில் பங்குபெறுகின்றவர்களாக.  எங்கோ ஓரிடத்தில் அது ஒரு தொடர் சங்கிலியை உருவாக்கும் என்று நம்புகிறேன்.  அது தற்காலிகமாக இருந்தாலும், நம்மை நாம் நிறொத்துப் பார்க்கும் போது அதன் எடை எத்தனை குறைவாக இருப்பினும் ஒரு சமாதானம் கிடைக்கும்.  நாம் செய்கிற நல்லவைகள் அனைத்தும் முட்டாள்தனமானவை.  சிறிது முட்டாள்தனம் கூட இல்லை என்றால் நம்மால் நல்லவற்றை செய்ய முடியாது. அப்படிப்பட்ட முட்டாள்தனமே பங்குச்சந்தையில் ஈடுபடுவதைக் காட்டிலும் இலக்கியம் வாசிக்க வைக்கிறது. 

மெலான்கலியாவை நாம் தமிழில் துயரார்த்தம் என அழைக்கிறோம். மகிழ்ச்சி மேலோட்டமானது. அது போலியானதாக ஆகிவிட்டது.  எல்லோரும் ஒன்று போலவே சொல்கிறார்கள்- எல்லாம் கடந்து போகும்; காலம் அனைத்தையும் மாற்றும் என்று.  இவ்வளவு தெளிவான மனநிலையில் உலகம் இருந்தும் ஏன் ஒவ்வொருவரும் சிக்கலில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை!  எனக்கு துயாரார்த்தமே நம்பகமான ஒன்றாகப் படுகிறது. மகிழ்ச்சி என்பது இந்த உலகுக்கும் நமக்கும் இடையே நடக்கிற,  உணர்ச்சிகள் சார்ந்த பரிவர்த்தைனைகளில் இருந்து  நாம் அடையும் இலாபம்.  அதிக விலை வைப்பதால் கிடைப்பதே இலாபம் என்பதால், அதனை எளிமையாக ஓர் ஏமாற்று வேலை என்று அழைக்கலாம். வாழ்விற்கு நம்பகத்தன்மை அளிக்கும் உணர்வாக நான் துயரார்த்தத்தை பார்க்கிறேன்.  நாம் மகிழ்ச்சியை ஐயுறுவோம், ஆனால் துயரத்தை சிறுதும் கேள்வி கேட்க மாட்டோம்.  அது எப்போதும் நம்மிடம் இருந்து விலகாமல் இருக்கும் நண்பர்களைப் போல இருக்கிறது.  அதன் அணுக்கம் நமக்கு ஓர் ஆழ்பரிச்சயம்.

000

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”, “சீமுர்க்” ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss