நெய்தல் நிலம்தாண்டி பாணர்கள் பயணிக்கபோகும் காட்டின் அழகை விவரிக்கின்றது சிறுபாணாற்றுப்படை. “பவளங்களாய் சிரிக்கிறது அவரைக்கொடி, மயில் கூட்டத்தின் கழுத்துப்போல காயாம்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. முசுண்டைக்கொடி கடவம் போன்ற பூக்களை கொண்டிருக்க, காந்தள் அழகியர் விரல்களை கொண்டு முகிழ்ந்திருக்கிறது. முத்துக்களும் பவளமும் பிணைந்த வடம் போல முல்லைகொடிகளும் இந்திரகோபமும் கான்நிலமெங்கும் தவழ்ந்து செல்கின்றன.பாண்குடியை வரவேற்க பூத்து நிறைந்திருக்கிறது வனம்.”
எயிற்பட்டினத்து மீனவர்கள் கிடங்கில் மன்னனான நல்லியக்கோடனின் புகழ் கேட்க விரும்பி பாணர்களுக்கு தேறலும் சுட்ட கருவாடும் கொடுத்து உண்ணச்செய்தனர். அவர்கள் விரும்பியபடி விறலியரோடு பாடி ஆடியபின் பாணர்கள் நெய்தல் நிலம் கடந்து முல்லை நிலமாகிய வேலூரை அடைகின்றனர். நல்லியக்கோடன் தனது வேலின் வீரத்தால் வென்ற ஊர் அது. ஒலிக்கும் வளை அணிந்த கைகளால் மாந்தளிர் நிறமுடைய எயிற்றியர் இன்புளி பெய்த சோறும் சுட்ட இறைச்சியும் தந்து பாணர்களை உபசரிப்பார்கள்
உப்பு வேலூர், மரக்காணத்திலிருந்து முப்பது கிமீ தொலைவில் உள்ளது, பாணர்கள் கடந்துசென்ற வேலூர் இன்றைய உப்பு வேலூராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் அனுமானம். நல்லியக்கோடன் படைகொண்டு வென்ற வேலூர், எயினர் குடி வாழ்ந்த வேலூர் எப்போது முன்னொட்டாக உப்பை எடுத்துக் கொண்டது என்று தெரியாது. முதலாம் இராஜேந்திரனின் பூமீஸ்வரர் ஆலய கல்வெட்டு மனக்காணமான இராசராச பேரளம் என்று உப்பு விளையும் இடமாக மரக்காணத்தை குறிப்பிடுகிறது, இன்றளவும் பெரிய உப்பளங்கள் உள்ள ஊர் மரக்காணம். அங்கிருந்து நடுநாட்டுக்கு சென்ற ‘உப்புப் பாதையில்’ வேலூர் முக்கியமான இடமாக இருந்திருக்கலாம். உமணர்களை நெய்தல் திணைக்குடிகளாக தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. இந்த உப்பு வணிகர்களின் மாட்டு வண்டிச்சக்கரங்கள் சங்க இலக்கியம் முழுவதும் உருண்டுசெல்கின்றன. நிலம் பார்க்க விரும்பிய கடல் உப்பாகி உமணர்கள் வண்டியில் ஏறிச்செல்கிறது.

மூன்று வேந்தர்களையும் ஏழு வள்ளல்களையும் துவக்கத்தில் பாடி அவர்கள் கொடையை காட்டிலும், நல்லியக்கோடனின் கொடை பெரியது என்று பாடுகிறார் நத்தத்தனார். ஒருவகையில் வள்ளல்களை சொல்லிச்சொல்லி பாணர் கண்ணுக்குப்புலப்படும் வரைபடமாக தமிழ்நிலத்தை சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது. மூன்று வேந்தர்களில் முதலாவதாக சேர நாட்டு வஞ்சியின் செழுமை பாடி, பிற்பாடு பாண்டிய நாட்டு வளம் பாடுகையில் உமணர்கள் குறித்த அழகிய காட்சி ஒன்று சிறுபாணாற்றுப்படையில் வருகின்றது.
செழியனின் கொற்கை துறையிலிருந்து உப்பு வண்டிகள் நாட்டுக்குள் நிரைவகுத்து போகின்றன. உமணர்கள் தங்கள் பிள்ளைகள் போல வளர்க்கும் குரங்குகளும் மரத்தால் செய்த நகைகளை காதிலும் தலையிலும் அணிந்துகொண்டு அவர்களுடன் பயணிக்கின்றன. ஐந்து பிரிகளாக குழல் கொண்டு தோள்மறைக்கும் அழகிய உமட்டியர் தம் குழந்தைகளோடு கிலுகிலுப்பை வைத்து விளையாடும் குரங்குகளுக்கு, அதன் ஒலிக்கு காரணம் உள்ளிருக்கும் கொற்கை முத்துக்கள் என்று தெரிந்திருக்க நியாயமில்லை. முத்துக்களை கிலுகிலுப்பையில் போட்டு பிள்ளைகளுக்கு அளிக்கும் முத்து வளமுடைய நாடு.
உமணர்கள் மருத நிலத்தவர் அவர்கள் பரதவரிடம் உப்பு பெற்று நாட்டிற்குள் சென்று விற்றனர் என்றும், உமணர்கள் நெய்தல் நிலத்தவர்கள் என்றும் இரண்டு வகையான குறிப்புகளை சங்கப்பாடல்கள் தருகின்றன. இரண்டுமே உண்மையாக இருந்திருக்கலாம். உமணர்கள் தங்கள் பயணத்தில் தற்காலிகமாக ஓரிடத்தில் தங்கி வணிகம் முடித்து நீங்கிப்போகையில் அவ்விடம் கைவிடப்பட்டு பாலை நிலம் போலிருக்கும் என்கிறது அகப்பாடல் ஒன்று.
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
– குறுந்தொகை, பாலை பாடிய பெருங்கடுங்கோ
உடன்போக்கு வலியுறுத்தும் தோழி கூற்று இது. காதலியை விட்டுவிட்டு பொருளுக்காக தனித்து பாலைவழி செல்பவனே, உமணர் இருந்து ஒழிந்த ஊர்போல ஓமை மரங்கள் நிரம்பிய காடு கொடியது என்றால் தனித்திருக்கும் இவளுக்கு வீடு மட்டும் இனியதா என்ன..
ஏனைய திணைக்குடிகள் பண்டமாற்று செய்ததுள்ளன எனினும், வணிகத்துக்கான கூறுகளை கொண்டிருந்தவர்கள் சங்க இலக்கியம் மீண்டும் மீண்டும் குறிப்பிடும் உமணர்களே. அவர்கள் நெல்லுக்கு நேர் என்று உப்பை விற்றனர். நெய்தலங்கானலில் இருந்த உமணர்களே மக்கள் வசிக்கும் சமவெளி நிலங்களுக்கு பயணித்த உள்நாட்டு வணிக முன்னோடிகள்.
உப்புவேலூர் ஒரு சமணத்தலம், அங்கிருக்கும் ஆதிநாதர் ஆலயத்திற்கு தான் நாங்கள் சென்றோம். தென்னார்க்காடு மாவட்டம் முழுவதும் சமணர் கோவில்கள் உண்டு, வந்தவாசியை நெருங்குகையில் கோவில்கள் செறிவாக ஆகிக்கொண்டே போவதை காணலாம். சமணர் குகைத்தளங்கள் காலத்தால் பழமையானவை. தொண்டூர், சோழவாண்டிபுரம், எண்ணாயிரம், சீயமங்கலம், அனந்த மங்கலம், நறுங்கொண்டை என்று பலவும் உண்டு இப்பகுதியில். கட்டுத்தளிகளில் பள்ளன் கோவில் செப்பேடு சுட்டும் திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் ஆலயம் காலத்தால் முந்தையது.
தமிழகத்தில் செஞ்சிக்கு அருகிலுள்ள மேல்சித்தாமூரிலும் போளூர் அருகிலுள்ள திருமலையிலும் சமண மடங்கள் உள்ளன. சித்தாமூர் மடம் தமிழக திகம்பர சமணத்தின் தலைமைப்பீடம். இந்த மடம் முன்பு ஜைன காஞ்சியான திருப்பருத்திக்குன்றத்தில் இருந்தது. நாயக்கர் காலத்தில் நலிந்துகொண்டிருந்த சமணத்தை உயிர்ப்பிக்கும் விதமாக வீரசேனாச்சாரியார் என்னும் துறவி மேல்சித்தாமூரில் ஜினகாஞ்சி சமணமடத்தை நிறுவினார். இந்த செய்தி மெக்கன்சி தொகுப்பில் உள்ளது. வீரசேனர் உள்ளிட்ட துறவிகள் உப்புவேலூரிலிருந்தே சென்று மேல்சித்தாமூரை அடைந்தனர். அருகிலுள்ள பெருமண்டூர் சந்திரநாதர் கோயிலில் மக்கள் உதவியுடன் வீரசேனர் மேல்சித்தாமூர் மடத்தை நிர்மாணித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உப்புவேலூரும் சித்தாமூரும் இவ்வாறு நெடுங்காலம் பிணைப்பு உள்ளது, சித்தாமூரிலிருந்த மடாதிபதிகள் சிலர் உப்பு வேலூரை பூர்வீகமாக கொண்டவர்கள். 1915-ல் சித்தாமூரில் மடத்தை விரிவாக்கம் செய்த மடாதிபதியான அப்பாவுசுவாமி உப்புவேலூரை சேர்ந்தவர்.
உப்பு வேலூர் ஆலயம் முதல் சமண தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக பதினைந்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. ரிஷபதேவர் கருவறையில் அமர்ந்துள்ளார், வெளிப்புறத்தில் உள்ள தர்ம தேவி சிற்பம் மிகவும் அழகானது. கிராமத்தவர் சிலர் மகாவீரர் சன்னதிக்கு முன்பிருந்த மேடையில் அரிசிகளை இட்டு அருகர் துதிகளை சொல்லிக்கொண்டிருந்தனர். செஞ்சியிலிருந்து நாயக்க மன்னர் காலத்தில் உப்புவேலூருக்கு குடும்பங்களாக இடம்பெயர்ந்ததாக பழங்கதை ஒன்று இவ்வூர் சமணர்களிடையே வழங்குகிறது. கோவிலுக்கு அருகிலேயே புதிய சிலை நிர்மாணங்களை கொண்ட ஜைன வழிபாட்டிடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அங்கு திருக்குறளை எழுதியவர் என்று சமணர்கள் கருதக்கூடிய குந்த குந்தாச்சார்யாருக்கும் சிலை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. திகம்பர துறவியாக ஆடையற்று மயிற்பீலி கொண்டு அமர்ந்தவராக இருக்கிறார் சமண வள்ளுவர்.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முற்றிலுமாக அறநெறி நூல்கள் என்பதல்ல. திருக்குறளிலும் நாலடியாரிலும் மூன்றாவது விழுமியமான இன்பம் உள்ளது, முக்கியமாக அவை சங்க இலக்கியத்தில் அதிகமும் இடம்பெற்ற அகத்துறைப்பாடல்களை புரிந்துகொள்ள உதவுபவை, தனித்த அறமாக முன்வைக்கப்பட்டாலும் அது முன்பிருந்த ஒன்றன் நீட்சியாகவும், அதை வரையறை செய்ய முற்படுவதுமாகவே இருக்கிறது. சங்கஇலக்கியம் சொல்லாத உப்பின் ருசி கீழ்க்கணக்கு நூல்களில் உண்டு
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
காதலில் உப்பின் சுவை ஊடலாக உவமிக்கப்படுகிறது. ஊடல் உப்புப்போல அளவாக இருந்தால் ருசிக்கும் என்னும்போதே உணவில் உப்பு அளவாக பயன்கொள்ளப்படுவதை திருக்குறள் சொல்கிறது. ‘உப்பமை காமம்’ என்பது சிந்தாமணி, ஊடலில்லாத கூடலை உப்பிலாக்காமம் என்கிறது நாலடியார். உப்பு உணவை ருசியுள்ளதாக்கும், எப்படி? அது தனது ருசியால் பிற அனைத்து ருசிகளையும் நாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. அடுத்த குறள் நள்ளிரவு பண்பலைகளில் ஒலிக்கும் குரல் போல கேட்கிறது.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
ஊடலின் வழி மீண்டும் ஒருமுறை நெற்றி வியர்வையில் உப்பு தோன்றலாம் அல்லவா, உப்பால் உப்பு விளைவிக்க ஒருவழி.
நெல்லுக்கு நேராக விற்கப்பட்ட உப்பு பிற்காலத்தில் மதிப்பற்று உப்புக்கும் பெறாத விஷயமாக ஆகிவிடுகிறது. ஆனால் உப்பு உணர்வாக நமது மனதின் கடலாழத்தில் பதிந்திருக்கிறது. அந்த உணர்வு மதிப்பு இப்போதும் குறையவில்லை. உப்பும் மிளகும் கொட்டி கடவுளிடம் நோய்தீர வழிபடும் சடங்கில் உப்பென்பது ஆரோக்கியம் என்று பொருளளிக்கிறது. மிகையாகும் மீனும் கறியும் உப்பால் இன்னும் சிறிதுநாள் வாழ்நாள் நீட்டிப்பு பெறுகின்றன. எத்தனை விதமான உணர்வுகள், உப்பென்பது ரோஷம், உப்பென்பது சத்தியம், மாறாத நிலைப்பாடு,வியர்வையாகி உழைப்பை ஆடையில் வரைந்துகாட்டும் துகள்வெளி. சுதந்திர காலத்தில் உப்பென்பது எதிர்ப்பு, உரிமைக்கான குரல். இலக்கியங்களில் உப்பென்பது கண்ணீராகி கரிக்கும் துயர், உப்பென்பது காதலில் ஊடலென்னும் ருசி.
கோமதேஸ்வரர் என்னும் பாகுபலி ரிஷபதேவரின் மகன், நின்ற நிலையிலேயே அவருக்கு ஞானம் வாய்த்தது. சோழர்காலத்திய அழகிய சிலைகள் அவருக்கு திருமலை பாறைச்செதுக்கு தொகுதியிலும் சித்தாமூர் மலைநாதர் கோவிலிலும் உண்டு. உப்புவேலூர் புதிய வழிபாட்டிடத்தில் 18 அடி உயர பீடத்தின் மீது 18 அடி உயர கோமதேஸ்வரர் சிலை அமைக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சிலையின் பீடத்தை சுற்றிலும் பாகுபலியின் கதை வடிக்கப்பட்டுள்ளது, அவர் சகோதரனை வீழ்த்தும் தருணம், அருக ஞானம் அடையும் தருணம் எல்லாம் செதுக்கப்பட்டுள்ளது. கண்கூச நிற்கும் அவர் பாதங்களுக்கு கீழே பசுவும் புலியும் ஒரே கலத்தில் நீர் அருந்துகின்றன.

துறவறம் தமிழ் பண்பாட்டில் எப்போது வந்தது என்பது ஒரு பெரிய கேள்விதான், திணை இலக்கணத்தில் அதற்கு இடமே இல்லை. பொ யு மு மூன்றாம் நூற்றாண்டு முதல் சமணம் இங்கு இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன, சங்ககால இலக்கியச்சான்றுகள் கிட்டத்தட்ட ஏதுமில்லை. சங்ககாலத்திற்கும் காப்பிய காலத்திற்குமான இடைவெளியில் தான் துறவு இங்கு பேசும் பொருளாக மாறியிருக்க வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக இங்கு வந்து அறப்பணி செய்த சமணர்கள் காரணமாக இருந்திருக்கலாம்.
உணவளித்தலை பேரறமாக கருதும் சமணம் தான் உண்ணாநோன்பு மூலம் உயிர் விடுதலையும் முன்வைக்கிறது. சல்லேகனை கொண்டு உயிர் துறப்பவர்களை கண்டும் அருகர்கள் உறைந்த புன்னகையோடிருக்கிறார்கள். பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை என்கிறது ஒரு குறள். துறவிகளுக்கு கடுமையான நோன்புகளை சமயங்கள் அக்காலத்தில் விதித்திருக்கலாம், துன்பங்களை ஏற்றுக்கொள்வதுதான் தவம் சுடரும் வழி என்கிறது இன்னொரு குறள், துறவோ சமயமோ இலக்கியமோ ஒரு நவீன மனிதன் ஒருவழிப்பாதையாக எதையும் பின்பற்ற முடியாது, அவனுக்கு பரிசீலித்துப்பார்க்க உரிமையுண்டு.
புழங்குமொழியில் இருந்து பல சொற்றொடர்கள் பூதஉடலுடன் சுவர்க்கம் புகுந்தாற்போல ‘அப்படியே’ இலக்கியத்திற்குள் இடம்பெற்றிருக்கலாம். யானையால் யானையாத்தற்று, பெய்யெனப்பெய்யும் மழை போன்ற குறளடிகள் அப்படி மக்கள் மொழியிலிருந்து சென்றவையாக இருக்கலாம். கீழ்க்கண்ட நல்குரவு அதிகார குறள் அதுபோல ஒன்று. நல்குரவு என்பது வறுமை, வறுமையின் கொடுமை பற்றி சொல்லிச்செல்லும் அதிகாரம் இது. இன்று கொல்லும் வறுமை நாளையும் கொல்லுமே, உயிருடன் நெருப்பிலிட்டாற்போல வாட்டுவது வறுமை என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசி குறளாக இது வைக்கப்பட்டுள்ளது.
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
துறவறம் கொள்ள வாய்ப்பிருந்தும் முழுதும் துறக்காதவர் இருப்பது உப்புக்கும் கஞ்சிக்கும் பிடித்த கேடன்றி வேறென்ன என்பது பொருள். ஈற்றடி வள்ளுவர் காலத்தில் ஒரு வசை மொழியாக இருந்திருக்கக்கூடும். இக்குறளுக்கு வறுமையில் நுகர்வு ஒழிதல், போலித்துறவை சாடுதல் என்றெல்லாம் உரையாசிரியர்கள் ‘பொருள்’ சொல்கிறார்கள். இருப்பினும் ‘துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று’ என்னும் சொற்றொடர் மனதை அதிரச்செய்து கொண்டே இருக்கிறது. உணர்வென்னும் உப்பைத் துறத்தல் அத்தனை எளிதா?

பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்
புதுச்சேரியில் வசிக்கும் தாமரைக்கண்ணன் தமிழ் இலக்கியம், பண்பாட்டு வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிவரும் “ஆடல்” என்ற கட்டுரைத்தொடர் சிற்பவியல் வழியாக தமிழின் நாட்டார், செவ்வியல் நிகழ்த்துகலைகளை அதன் மூலங்களை ஆராயக்கூடியது. குருகு என்ற கலை-பண்பாட்டு மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

திரு தாமரைக்கண்ணன் அவர்கள், புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறையின், கிளை நூலகமான…திருவாண்டார்கோயில் நூலகத்தில் ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்துச் சென்று, முன்னுரை , அணிந்துரை, c pipliography page வரை ஒரு எழுத்து மிச்சமில்லாமல் ஆழ்ந்து வாசிக்கும் அருமையான வாசகர்