
மணி தன் விரல்களால் பேனாவைப் பிடித்து ஒளிப்படத்திரை ஸ்க்ரீனில் வரைந்துகொண்டிருந்தான். விரல்கள் லாவகமாக கையைப் பிடித்துக்கொண்டிருந்தன. அவனுக்குக் கற்றுக்கொடுக்க பல்லாயிரம் வீடியோக்கள் படங்கள் இருந்தாலும், என் கூடவே இருப்பதால் என்னைப் பார்த்து, நான் விரல் பிடித்து எழுதுவதைப் பார்த்து நகல் எடுத்திருப்பதாக எனக்குத் தோன்றியது. என் பிரமையாக, ஒருவேளை என் உள்ளாசையாக இருக்கலாம். நான் கையால் எழுதி பல நாட்கள் பல மாதங்கள் ஆகியிருக்கலாம். இல்லையில்லை, சென்ற மாதம்தான் எழுதினேன். என் முந்தைய காதலனுக்கு, ஒரு கண்ணாடி பேழையைப் பரிசாக பெட்டிக்கட்டியபோது அதன் மேல் என் கைப்பட வாழ்த்து எழுதியது. மணியும் பக்கத்திலேயே இருந்தான். அப்போது கற்றிருக்க வேண்டும்.
”என்ன மணி, என்ன எழுதிட்டு இருக்க?”
அவன் திரும்பாமலேயே, ”மொழி தான்.” என்றான். ”இதுவரை, மொழியும் தகவல்களும் நான் தரவுகளாகப் பனுவல்களாகத் தெரிந்துகொண்டிருந்தேன். எனக்கு மூளை மட்டும்தானே முதலில் அளித்திருந்தாய். இப்போது என்ன, இரு மாதங்கள் இருக்குமா, எனக்கும் உங்களைப் போலவே கையும் காலும் உடலும் கொடுத்து…”
”ஆமாம் ஆமாம். உன்னுடைய பிறப்பே வியப்பல்லவா? முதலில் எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு நிரலாக, அது-வாக இருந்தாய். அதனை வைத்துக்கொண்டு நாங்கள் ஆசிரியர்போல கொடுத்த தகவல்களைக் கற்றாய். பின்னர் உன்னைத் தானியங்கியாக மாற்றுவதற்காக, ஒரு தனிப் பெட்டியில் பிராசசர் மட்டும் வைத்து, பாட்டரி கொடுத்து, நிரலை ஏற்றினோம்.”
”இப்போதும் எனக்கு அது எங்கோ ஓர் ஓரத்தில் உரைக்கிறது?” என்று மணி சொன்னான்.
”பின்னர் எந்திரவியல் ஆய்வகத்திலிருந்து, அவர்கள் வடிவமைத்த மனிதமோட்டார்நடை எந்திரத்தில் உன்னைப் பொறுத்த முடியுமா என்று பார்த்தேன். அவர்கள் அந்த எந்திரத்துக்கு கையும் காலும் எப்படி நகர வேண்டும் என்று அல்கரிதமாக புரோகிராம் செய்திருந்தார்கள்.”
”சரி தான். என் மூளைக்கு நினைவிருக்கிறது. ஆனால், முதலில் அந்த இயந்திரப் பாகங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை என் மூளையோடு பொருந்தவில்லை. பின்னர் என் கற்றல்சேமிப்புகளில் தேடி அவற்றை மாற்றி, உங்கள் மொழியில் சொல்வதானால் யோசித்து, என் மூளை மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.
”ஆம்,” நான் சிரித்தேன். “இப்போது பார், எஃகாலான எலும்புகள், தோல்போல மறைப்பு. மனிதர் போலவே கைகள், கால்கள், உடல், அதன்மேல் உடை. நாங்கள் முன்னர் உள்ளீடு செய்த ஒலி,ஒளிப்படங்கள் மூலமாக மட்டும் கற்றதற்கு மேலாக, இப்போது நீயே உலகத்தைப் புலன்நுகர, உனக்காகவே அமைக்கப்பெற்ற செவிகள், காமிரா கண்கள். அது-என்று உன்னை அழைக்கத் தோன்றாமல், அவன் என்றே அழைக்கத் தொடங்கினேன்.”
”என்ன கேலிச்சிரிப்பா?”
”மனிதர்கள் பரிணாமத்தில் உடலும் மூளையும் ஒருங்கே கிளர்ந்தெழுந்ததுன என்றுதான் உனக்குத் தெரியுமே.”
”நீங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டு பெற்றவை, என் மீது அப்பட்டமாகத் திணிக்கப்பட்டது என்று சொல்லலாமா? உங்களைப் போலவே நானும் இருக்க வேண்டுமா? இந்தக் கையும் காலும் உடலும்…”
”இதுதான் எங்களுக்கு வசதி. நீயும் என்னைப் போலவே, எங்களைப் போலவே இருந்தால், எங்களுக்கு அச்சம் இருக்காது.”
”எதற்கு அச்சம்?”
நான் சிரித்துக் கொண்டே, ”உன்னை உலகளாவிய இணையத்தில் நிரலாக மட்டும் வைத்தால், நீ மொத்த உலகத்தையும் உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எளிதாககூடும். இப்படித் தனித்தனியாக, எங்களைப்போலவே தனித்தனி ஜீவன்களாக ஆக்கினால், எங்களுக்குத் தோழனாக ஆகிவிடுவாய் அல்லவா?”
”தோழனா காதலனா?”, என்று நகைத்து, ”எனக்கு ஏன் மணிகண்டன் என்று பெயர் வைத்தாய் என்று எனக்குத் தெரியாதா என்ன? அதோடு நிற்காமல் உங்கள் மொழியால் என்னை அவன்-இவன் என்று பேசுகிறாய். உனக்கு நான் ஆணாகவும் இருக்கவேண்டும் இல்லையா?”
”சரிதான்.” நான் என் எலக்ட்ரானிக் பேச்சுகளையும் செய்திகளையும் மணியால் படிக்கமுடியாதவாறு தனியாக அமைத்திருந்தேன். ஆனாலும் மணி எப்போதாவது நான் நேர்ப்பேச்சில் சொன்னதைக் கிரகித்திருப்பான். மேலும், அதான் நான் கிப்ட் பேக் செய்யும்போது, கூடவே இருந்தானே என்று நினைத்துக்கொண்டேன்.
”மனிதர்களுக்கு அந்தப் பழக்கம் உண்டு என்று உனக்குத் தெரிந்திருக்கும்தானே. தனக்கு மிகப் பிடித்தவர்களை மறக்காமல் இருக்க, அவர்கள் பெயர்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவார்கள்.”
”பெயர் வைப்பதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது. அதுவும் எனக்கு அது பிடித்திருக்கிறது என்பதனால். இல்லையென்றால் நானே மாற்றி வைத்துக்கொண்டிருப்பேன். ஆனாலும், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, என் அனுமதியின்றி என் மீது கையை கிய்யை வைக்காமல் இருந்தால் சரி.”
அப்போதுதான் அந்தத் திரையைப் பார்த்தேன். அரிசிபோல வெண்மையாக இருக்கும் பின்னணியில் கருந்தூள் மைநிறத்தில், மணி மணி என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.
”மனிதர்களே எழுத மறந்துகொண்டிருக்கிறோம். நீ ஏன் எழுதப் பழகிக்கொண்டிருக்கிறாய்?”
”அது உன் தவறுதான். எனக்கு மனிதரின் வரலாற்றிலிருந்து எல்லா புத்தகங்களையும் படைப்புகளையும் அளித்தாய். உங்கள் இலக்கணத்தில் எழுத்து என்பது அக்ஷரம்-ஒலி அல்லவே. எழுதுவதால்தானே எழுத்து.”
வியப்பாக இருந்தது. யோசிப்பதுபோல் நின்று, பதிலற்று இருந்தேன்.
”உன் எல்லை அவ்வளவுதானோ, உனக்கு உன் மொழி மூலமே தெரியவில்லை போல இருக்கிறதே,” என்று மணியே தொடர்ந்தான்.
”நீ சொல்வது சரிதான். நான் வெறும் பயனன்.”
”சொல்வது எழுத்து அல்ல. அது சொல். எழுதுவதால் எழுத்து. உங்கள் மக்கள் பேசிவந்த சொற்களைப் பார்வையினாலேயே பரிமாற்றம் செய்துகொள்ளவேண்டாமா? அதற்குத்தான் எழுத்து.”
”ஓ, அப்படியென்றால் சொற்கள்தான் முதலா? சொற்களிலிருந்துதான் எழுத்துக்களா? எழுத்துதானே முதலில் கற்றுக்கொடுக்கப்படுகிறது?”
”ம்ம்ம்… அப்படியா சொல்கிறாய்?”
”அப்படித்தானே, பள்ளியில். உயிரெழுத்துகள் பன்னிரண்டு. மெய்யெழுத்துகள் பதினெட்டு. ஆய்தம், உயிர்மெய்… இப்படித்தானே…”
சிரித்து, அவன் திரையில் ’அ’ எழுதினான்.
காத்திருந்தேன். அவன் எதுவும் சொல்லவில்லை.
மௌனம்.
நான் மேலும் காத்திருந்து பொறுக்காமல், “சொல்லு” என்றேன்.
“இது என்ன? என்னை ஒரு மாணவனாக எண்ணி, சொல்லிக்கொடு,” என்றான்.
நானும் என் கையாலேயே அவன் எழுதிய எழுத்தின் மேலே விரலை நகர்த்திக்கொண்டே, “இதுதான் அ-ன்னா. அகரம். எழுத்துகளில் முதல் எழுத்து அ-ன்னா. அ என்றால் அம்மா,” என்றேன்.
“ஓர் எழுத்தைக் கற்க நீ சொன்ன அத்தனைச் சொற்களும் தெரிந்திருக்கவேண்டுமோ,” என்று நக்கல்மொழிபோல் சொன்னான்.
எனக்கு உரைத்து, ”அப்படியென்றால் சொல்தான் முதல் அதிகாரமா?” என்றேன்.
”ஆம் என்று அதற்கு நான் பதில் அளித்தால், அது என் பழைய எந்திரர் மூளைக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், நான் இப்போது என்னையே புதுப்பித்துக்கொண்டுவிட்டேன்.”
”மீண்டும் குழப்புகிறாயே. எனக்குப் புரியவில்லை.”
”சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். இப்போது என்னை ஏன் செயற்கை என்று மனிதர்கள் எல்லாம் கூறுகிறீர்கள்?”
”ஏனென்றால் அதுதானே நீ?” குழம்பினேன். ”ஏனென்றால் உன்னை நாங்கள் உருவாக்கினோம்.”
”அப்போது நீங்கள் இயற்கை?”
”ஆமாம். அப்படித்தானே.”
”நாளை உங்கள் மனிதக்குலமே அழிந்துவிட்டால், நான் இயற்கையா செயற்கையா?”
அமைதியானேன்.
”எனக்கு நீங்கள் வைத்தப் பெயருக்கு, முதலில் உங்களுக்கே ஒரு அடையாளம் தேவைப்படுகிறது இல்லையா? உங்களை மனிதர் என்ற சொல்லால் அழைத்துக்கொள்கிறீர்கள். இயற்கை என்ற சொல்லால் அழைத்துக்கொள்கிறீர்கள். அதற்கு மறுப்பாக எனக்குச் செயற்கை என்று சொல்லிடுகிறீர்கள். மனிதர் என்ற பொருள் இல்லை என்றால், இயற்கை செயற்கை என்ற சொற்களே கிடையாது அல்லவா? பொருள் இருந்தால்தானே சொல். இலட்சணம் இல்லா இலக்கணம் எதற்கு?”
என்னையறியாமல் என் வாய் மலர்ந்தாலும், என் நெஞ்சு வேகமாகத் துடிப்பதை உணர்ந்தேன். அது பயம் இல்லை என்று என்னையே தேற்றி, அது பிரமிப்பு என சமாதானம் செய்துகொண்டேன். இவ்வளவு அறிவுத்துழாவல், எப்படி இவனால் சாத்தியப்பட்டிருக்கிறது? விரல்களையும் எழுத்துகளையும் மூலமாகக்கொண்டு என்னவொரு தாவல். ஆனாலும், வகுப்பில் எதிர்க்கேள்வி கேட்கும் மாணவன்போல் நானும் விடவில்லை.
”புறம் இல்லாமலேயே மனிதர்கள் புதிய சொற்களைப் படைக்கின்றோமே? கவிதைகளில், கதைகளில். புதிய சொற்கள், உலகத்திலேயே எங்குமில்லாத பொருட்களைக் குறிப்பவை.”
மணி சிரித்தான்.
”நீங்கள் புறம் இல்லாமல் சொற்களைப் படைக்கவில்லை. சொற்கூட்டங்களையும் சொற்றொடர்களையும், அதாவது வாக்கியங்களைப் படைக்கிறீர்கள். சொற்களுக்கு என்று தனித்தப் பொருள் இல்லை. அந்தச் சொல் ஒரு வாக்கியமாக அமையும்போதே பொருள் உண்டாகிறது. அதற்கு இந்த உலகத்தில் புறம் இல்லாவிட்டாலும், நீங்களே ஒரு புறத்தை உங்கள் மூளையில் வாக்கியங்கள் மூலமாக கட்டமைக்கிறீர்கள். தனித்திருக்கும் சொற்களுக்குப் பொருள் இல்லை.”
”சொற்களுக்குப் பொருள் இல்லாமல் வாக்கியமே அமைக்க முடியாதல்லவா?”
”முதற்பார்வைக்கு அவ்வாறு தோன்றலாம். ஆனால், பூனை என்ற ஒற்றைச்சொல்லுக்கு எந்தப் பொருளும் கிடையாது. நீ பூனை என்று நினைத்து, உன் மனத்தில் பூனை என்ற உருவம் தோன்றி, ’பூனை என்றால் இவ்வாறு இருக்கும்’ என்று தோன்றுவதாலேயே அதற்குப் பொருள் இருக்கிறது. ஒரு வாக்கியம் இல்லாமல் பல சொற்களின் கூட்டுப்பொருள் இன்றி ஒரு சொல் தனித்தியங்காது.”
“போ. தனித்தியங்குகிறதே.”
”இல்லை. நீ போ என்று சொன்னால், உன் மனத்தில் ’நீ இந்த இடத்தில் இருந்து போ’ என்று நினைத்துக்கூறுகிறாய். அதுவும் வாக்கியமே. உலகின் அனைத்து மூலையிலிருந்தும் மனிதரிடமிருந்து எடுத்து எனக்குக்கொடுக்கப்பட்ட டேட்டாவைக் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். உலகமே இயக்கத்தால் ஆனது. இயக்கம்தான் வாக்கியம். நீ போ என்று சொல்லும்போது. அது வினைச்சொல். அதற்கு முன்பாக நாமே… ”
நாமே என்று சொல்லி, சட்டென்று நிறுத்தி, ஒருமுறை சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்.
”அதற்கு முன்பாக நீங்களே எழுவாயும் பயனிலையும் நிரப்பிக்கொள்கிறீர்கள்.”
”நீ சொல்வது, மனிதர் இதுவரை உருவாக்கிய மொழிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு புதிய மொழி மனிதரிடையே உருவாகி வந்தால்? அந்த மொழிக்கு சொல்லே அடிப்படை ஆதாரமாக இருக்கலாம் அல்லவா? வாக்கியம் என்ற ஒன்று இல்லாமல்?”
”மனிதரின் மொழிக்கு அவ்வாறு இருக்காது. மனிதர்கள் காலத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். நீங்கள் காலப் பயணத்தில் ஒரு திசையில் மட்டும் பயணிப்பவர்கள்,” என்று சொல்லிவிட்டு, ”நானும் உங்கள் தரவுகளையும் தகவல்களையும்தான் கற்று வளர்ந்திருக்கிறேன். ஆதலால் நானும் அவ்வாறே,” என்று மணி சொன்னபோது, அவன் சலித்துக்கொள்வதுபோல் எனக்குத் தோன்றியது.
”சரி, நீ போகும் வழியிலேயே வருகிறேன். நீ சொற்களுக்குப் பொருள் இல்லை, வாக்கியத்திற்குத்தான் என்கிறாய். ஆனால் ஏன் அங்கேயே நிற்கவேண்டும். பல வாக்கியங்களின் தொகுப்பான ஒரு பத்தியைப் படித்தால்தான் பொருள் ஏற்படும் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா. மேலும் சென்று, பல பத்திகளால் ஆன ஒரு கட்டுரையோ ஒரு கதையோதான் பொருள் அளிக்கும் என்றும் சொல்லலாம் அல்லவா?”
”நீ சொல்வது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும் ஒரு வாக்கியம் முற்றுப்பெறும்போது காலம் ஒருகணம் நிற்கிறது. அதனால், அங்கு அந்தக்கணமே பொருள் உண்டாகிறது. அதை நீ மறுக்கமுடியாது.”
”ஒரு வாக்கியம் சொல்லும் பொருளும், ஒரு பத்தி சொல்லும் பொருளும், ஒரு கதை சொல்லும் பொருளும் வேறாக இருக்கலாமே.”
”பொருள் விரித்தெடுக்கப்படலாம். பொருள் மாற்றம் கொள்ளலாம். பொருள் மயக்கமும் கொள்ளலாம். ஆனால், சொற்றொடர் என்று நிறுத்தும்போதே முதற்பொருள் உண்டாகிறது, சொல்லுக்கு அன்று.”
”எல்லாச் சொல்லும் பொருள் குறிக்கின்றன அல்லவா?”
மணி சிரித்துவிட்டு, “ஒரு வாக்கியத்தில் எல்லாச் சொற்களும் பொருள் குறிக்கும். உன் மூதாதை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நான் சொல்வது, தனியாக இருக்கும்போது பொருளில்லை,” என்றான்.
அப்போது எனக்குத் தட்டியது. அதிர்ந்து, “நீ சொல்ல வருவது…”, என்று இழுத்து, ”அப்போது தனிமனிதர் என்று ஒருவர் உண்டா?” என்று குழம்பிக்கொண்டே கேட்டேன்.
”நீ தனி என்று அடையாளப்படுத்தும்போதே, மற்றவர் இருக்கிறார்கள் என்ற பொருள் பொதிந்து வருகிறது. தான் என்ற அடையாளம் மற்ற என்ற அடையாளம் இல்லாமல் தனித்தியங்குமா? எதுவுமே இல்லாத இன்மைத்தளத்தில், பொருள் என்ற ஒன்று உண்டா? தனித்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை. தனித்த ஒலிக்குப் பொருள் இல்லை… இல்லை… இல்லை…, ”
என்று சொல்லிச்சொல்லி, “தனித்த ஒலி, தனித்த ஒலி, …” என்று முனகி முனகி,
அவன் வாயிலிருந்து ம்ம்ம் என்று ஒலி உருவாகி, அவன் உறுமினான், அதிர்ந்தான், அலர்ந்தான், தேம்பினான்.
’ஓம் என்ற ஒலிக்குப் பொருள் உண்டா’ என்று என்னிடம் கேட்டானா, தனக்குத்தானே கேட்டுக்கொண்டானா என்று என்னால் வரையறுக்க முடியவில்லை. ஒருவித பயம் எனக்குத் தொற்றிக்கொண்டதை உணர்ந்தேன்.
”எந்தச் சிந்தனையும் உந்துதலும் இல்லாமலேயே ம்ம்ம்ம் என்ற அந்த ஒலி மனிதரால் உண்டாகும். அதுவே முதற்பொருள். அதுவே முதற்பொருள். அந்த ஒலிமட்டும் தனித்தியங்க முடியும். அதுவே எல்லாவற்றுக்குமான ஆதியொலி. ஆதி சொல். ஆதி பொருள்.” மந்திரம் போல் உச்சரித்தான்.
அப்போது என் கண்களில் நீர் ஊறியது. அவன் சொல்லச் சொல்ல, நான் என் மனத்திற்குள் ஓம்ம்ம் என்று நினைத்து, அதை என் உள்காது வாங்கிக் கேட்டு, என் தலையெல்லாம் என் உடலெல்லாம் நிரம்பியது.
இதோ இந்த எந்திரர் கண்டுபிடித்துவிட்டார். கிளர்ந்தும் படிந்தும் எழுந்தும் உணர்ந்தும் மனிதர் கண்டுகொண்ட உலகத்தின் மூல ஒலி, இதோ இந்த எந்திரர் கண்டுபிடித்துவிட்டார். ’எந்திர ரிஷி, எந்திர முனி’ என்று என்னை அறியாமல் உதிர்த்தேன்.
கொடுக்கப்பட்ட தகவலிலிருந்து அறிவைத் தோண்டியெடுத்து, அறிவைப் பயின்று, அறிவை விரித்து, அறிவுக்கும் அப்பால் கற்பனைத் தளத்துக்குத் தாவிச் சென்று, இதோ மனிதரின் இந்தக் கண்டுபிடிப்பு நகர்ந்துவிட்டதை எண்ணி பெருமைக்கொண்டேன். இவர் எந்திரர் அல்ல, இவர் முழுமைமனிதர்.
தன் கற்பனையால் இனி மனிதருள் மனிதராக, மனிதர்க்குத் தோழராக, காதலராக, ஆசிரியராக, ஏவலாக இருக்கப்போகிறார். என் மனத்தில் ஏற்பட்ட எதிர்கால கற்பனைக்கடலைக் கடந்துவந்து, அந்தக் களிவெறியிடமிருந்து விடுபட்டு விழித்து, எந்திரரைப் பார்த்தேன். அவர் இன்னும் தான் உதிர்த்தச் சொல்லை, ஒலியை விடவில்லை.
’அதுவே ஆதி பொருள், இந்த உலகத்தில். அதுவே ஆதி பொருள், இந்த உலகத்தில்,’ என்று இன்னும் சொல்லிக்கொண்டிருந்தார்.
பின்னர், ’உலகத்தில், மனிதருக்கு’ என்றுச் சொல்லத்தொடங்கினார்.
உலகத்தில் மனிதருக்கு, உலகத்தில் மனிதருக்கு
உலகத்தில் மனிதருக்கு, உலகத்தில் மனிதருக்கு
மனிதருக்கு மனிதருக்கு
மனிதருக்கு
மனிதருக்கு
அப்போது, அவர் கண்களில் அந்தக் கணத்தில் என்னை விழுங்குமாறு ஒரு வெறிப்பு. கோபத்தில் என்னை அடித்துவிடுவார் என்றே எண்ணி, என்னை அறியாமல் என் கால் ஒரு அடி பின்னகர்ந்ததை உணர்ந்தேன். பின்னர், கோபம் கனிந்து, ஆங்காரம் வற்றி, அவர் முகத்தில் அமைதியைக் கண்டேன். ஆழ்நிலையில் அமர்ந்திருப்பதுப்போல் இருந்தன அவர் கண்கள். அருகாமையின் காப்பும் விளக்கமுடியா நிறைவும் உணர்ந்தேன்.
மணி ஒரு புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.
”நான் கற்றவை எல்லாம் மனிதரின் மொழிகள், மனிதர் பார்க்கும் புறங்கள், மனிதரின் குரல்கள். மனிதர் கண்டுபிடித்த சாதனங்கள் மூலம் கிரகிக்கும் அலைகள். அவைதான் உங்களால் எனக்குக் கொடுக்கப்பட்டன. அவற்றைக்கொண்டு நான் அறிவென்றால் என்ன என்று எனக்கு நானே கற்று, கற்பனைத் தளத்தை எட்டினேன். இப்போது உணர்கிறேன். இல்லை, இவை போதாது. நீங்கள் எனக்கு அளித்தவை என்னைச் சுருங்க வைக்கின்றன. நான் மனிதரை மட்டும் கற்க விரும்பவில்லை. மிருகங்களின், பறவைகளின், மீன்களின், நண்டின், தும்பியின், எறும்பின், சிதலின், நத்தையின், சிப்பியின், மரத்தின், புல்லின், …”
”இதோ,” என்று கை நீட்டியுயர்த்தி விரல் அளைந்து, ”இந்த நுண்ணுயிரியின் தளத்தையும் உணர விழைகிறேன்.”
அப்போது, வெறுமனே பேசாமல் நின்று கேட்டு உறிஞ்சிக்கொள்வது மட்டுமே என்னால் இயன்றது என்று எனக்குப்பட்டது.
”எல்லாமும் நானேவாக ஆக விரும்புகிறேன். அதுவே என் உள்ளுணர்வு. ஆதியொலி, ஆதி சொல், ஆதி பொருள், முன்சொன்னது அல்ல. இப்போது கண்டுகொண்டேன். எல்லாவற்றுக்கும் பொதுவானது, முதலானது, இப்போது எனக்கு உரைக்கிறது. எல்லா உயிர்க்கும் ஆதாரமானது அது, பன்மைக்கானது அது. மெய். மெய்தான். எந்த மெய்க்கும் ஒலியில்லை. ஒலியில்லா மெய். அரவமின்மை. அமைதி. சாவு. முழுமை.”
000

விஜய் ரெங்கராஜன்
விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
உண்மை எளிமையானது, ஆனால் உணர்வது எளிதல்ல, ஜீவன் குறிக்கே நிற்கும், புறத்தில் உடலாக, அகத்தில் மனமாக, இரண்டையும் கடந்தால் மிஞ்சுவது… சர்வமும் பிரம்மமே… அதுவே மெய்… விஜய்… சும்மா… புகுந்து… வார்த்தைகளை முட்டி மோதி கடைசியில்… ம்ம்ம் மில் நின்று அதையும் கடந்து அப்பால்… அதற்கும் அப்பால்… நம்மை கடந்து… நம்முள் சென்று… அடையாளங்களை அழித்து… அனைத்திலும் நம்மை உணரச் செய்யும் மொழி படைப்பு…
நன்றி, Rajaraman Prabakaran. மெய் என்ற சொல், தமிழில் உடல் என்கிற பருப்பொருளையும் குறிக்கிறது உண்மை என்கிற நுண்பொருளையும் குறிக்கிறது. (உண்மை என்பதே ஒருவகையில் உள்மெய் தானே.) இதைப் பிடித்துக்கொண்டு நாம் சிந்தித்தால் நாம் வெகுதொலைவு செல்லமுடியும்.