தாமரைபாரதி கவிதைகள்

மரணவீட்டின் நினைவுக் குறிப்புகள்.

1.
அந்த மலைகளின் பின்னாலிருந்து
ஒரு பூவாக மலர்ந்தெழும் பரிதி
பிரகாசத்தைத் தெளிக்கின்றது

சூரியனை வருடும் பறவைகள்
வடதிசையிலிருந்து தென்திசைக்கு
ஆளுக்கொரு செய்தியைக் கொண்டு செல்கின்றன

காற்றை அசைக்கும் மரங்கள்
சூரியனையும் அசைக்கின்றன

அதிகாலைத் தூக்கத்திலிருந்து விழித்தெழும் குடிகாரனின் சமநிலைதான்
இன்றிந்த சூரியனுக்கு

குயிலின் கூவலோசையில்
வேப்பிலைகள் காற்றில் மிதக்கின்றன

இலைகள் உதிர உதிர
பெருக்கித் தள்ளுகிறாள்
மாநகராட்சியின் நீல சாம்பல் உடையணிந்தவள்

இருள் நிலவை
நினைவூட்டும் பனி
சூரியனைத் தழுவிக்கொண்டிருக்கிறது

நல்லவேளை
இன்று நான்
இறக்கவில்லை

2.

என் கால்கள் கைகள் அசைகின்றன
எனக்குப் பார்க்க முடிகிறது
ஜன்னலுக்கு வெளியே காலைக் குருவிகளின் ஒலியைக் கேட்க இயலுகிறது.

செய்தித்தாள் போடுபவன்
வீதி பெருக்குபவள்
பால் பாக்கெட் போடுபவன்
டெங்கு வராமல் தடுப்பதற்காக
மாநகராட்சியிலிருந்து வந்து மருந்தடிப்பவன்

நிரம்பிய பாதாள சாக்கடையை
வண்டி வைத்து அள்ளிச் செல்பவன்
இவர்களெல்லோரும் காலையின் சமிக்ஞைகள்
அல்லது
நாம் உயிரோடிருப்பதை
அறிவுறுத்தும் பூலோகவாசிகள்

சூரியன்
எல்லோரையும் பார்ப்பதைப்போல
நானும் பார்க்கிறேன்
எல்லோரையும்.

3.

அந்த மரணச்செய்தியை
அறிவித்தவுடன்
சூரியனுக்குக் கீழே
பரபரப்பு பற்றிக்கொண்டது

அந்த மரணத்தைப் பற்றி
எல்லோரும் பேசிக்கொள்வதையும்
கேட்க முடிகிறது.

அந்த மரணத்தைக்
காணொலியில் காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்

அந்த மரணம் குறித்துப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்

மரணத்திற்கான காரணங்களை
அவர்கள் அழுவதன்
காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்

செத்துப்போனவன்
உங்கள் வீட்டில்
செத்துப் போயிருந்தால்
இப்படித்தான் காட்டிக்கொண்டேயிருப்பீர்களா

இப்படித்தான் பேசிக்கொண்டேயிருப்பீர்களா
எனக்
கேட்டுக் கொண்டேயிருந்தான்
செத்துப்போனவன்.

4.

சூரியனுக்கு வெகு தூரத்திலிருந்து வலசை போய்க் கடல்களைக்
கடக்கும் பறவையை
அறிவதால் பயனென்?

விண்கல்லின் தீப்பிழம்பெனப்
பிடித்துக் காற்றுரசி
நகரும் வால் நட்சத்திரங்களில்
இரவின் பறவைகள்
மரணத்தின் சிறகுகளை
மெல்ல அசைக்கின்றன

வால் நட்சத்திரங்கள்
வலம் வருகையில்
காகங்களுக்கு உணவளிப்பவர்கள்
வேறு கோள்களில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்

பச்சை வால்நட்சத்திரத்தின்
கதையறிந்தோரின் வார்த்தைகள்
பச்சையம் கொள்ளும்
இக்கோளின் ஜீவராசிகள்
மரணித்து விடுதலை பெறுகின்றன

கோள்களினூடே வலசை போகிற
இம் மனதை எப்படியாவது
நிறுத்தி வைக்கவேண்டும்
அதன் உணவுக்காலம் வரையிலாவது
அல்லது உயிர்க்காலம் வரையிலாவது

5.
அடுத்த நொடியோ
அதற்கடுத்த நொடியோ
நிகழப்போகும் மரணத்தையாகிலும்
ஒரு செய்தியாக மட்டும்
கடந்துபோக முடியாத சாமர்த்யத்தை
இப்பாழுலகுக்குக் கற்றுக்கொடு
சூரியனே.

இடமும் காலமும்

இரு விரல் பிடியளவு
தீக்குச்சியின்
உச்சிமுனைக் குமிழின்
வட்டப்பாதையில்
வலம் வருகிறான்,
குடித்த எண்ணெய்யால்
நெருப்பை
ஊதி ஊதி
பெருக்குபவன்.

சிறு கரு முனையளவே
எரிந்து முடியும்
கால இட
இருப்பில்
பதட்டத்துடன்
சிரித்து சிரித்து
மகிழ்கிறது
இத்திருவிழா கூட்டம்

நல் ஆசி

பூமுகம் வாய்த்தோருக்கு
நல் ஆசி
வழங்க கருவறை செல்லுமவர்
அனவரதமும் துளசி செடிகளை
நாகலிங்க மலர்களை
பவள மல்லியை
பாரிஜாத மலரை
மகிழ மலரை
செண்பகத்தை
பிரசாதமாக வழங்குகிறார்

ஆலயம் செல்கிறார்
வழிபடுகிறார்
ஆசி வழங்குகிறார்

படையலுக்கிட்ட பொருள்களின் மிச்சத்தோடு
வீடு திரும்புகிறார்

பூவை முகமாகக் கொண்டவளோ
அசிரத்தையோடே சமையல்கட்டிலிருந்து
அன்றாடங்களைப் புலம்புகிறாள்
அன்றாடங்களை அடுக்கி வைத்தபடி .

நேர்த்தி

முகத்தாமரை
தாமரை முகம்
வாய்பவளம் பவளவாய் தொகைஉவமையும்
உருவகங்களும்
புகைப்படக் கருவிகள் அறியாதன போலவே
புகைப்படக்காராரும் அறிவதில்லை

புகைப்படத்தில் தெரிகிறவர்
மிக அழகாக
மிக எழிலாகத் தெரியலாம்
நேரில்
தெரிவதை விடவும்

நேரில் தெரிகிறவர்
மிக எழிலாக
மிக அழகாகத் தெரியலாம் புகைப்படத்தில்
தெரிவதை விடவும்

நேர்த்தியுறு படத்துக்கு
யாரும் எதுவும் பொறுப்பாகலாம்

புகைப்படமெடுப்பவர்
புகைப்படமெடுக்கப்படுபவர்
புகைப்படமெடுக்கும் கருவி
புகைப்பட சூழல்

எல்லாமே நேர்த்தியாகக் கூடிவர
வேண்டுமென்ற நியதியெல்லாம்
இல்லை.

வெறுமனே
பல்லைக்காட்டியோ காட்டாமலோ புன்னகைத்தாலே போதுமானதுதானே
நேர்த்திக்கு.

000

தாமரை பாரதி

கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

6 Comments உரையாடலுக்கு

  1. எப்பொழுதும் போல நல்ல சிறப்பான கவிதைகள் ,மரணம் பற்றிய கவிதை இன்னாரு பரிணாமத்தை காட்டியது நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss