
பிரபஞ்சத்திற்கு திரும்பும் மூன்றாவது நொடி
இந்த வாழ்வுக்குள் வந்ததுபோலவே
அந்த மலைகளுக்கும் நாம்
முன்னும் பின்னுமாய் பயணித்தோம்
நீ எனைக் கண்டடைந்தது
மூன்றாவது கொண்டை ஊசி வளைவில்
நான் உனைப் பிரிந்தது
பதினோராவது கொண்டை ஊசி வளைவில்
*
வானம் உன் கண்களின் வழியாக
தேயிலைத் தோட்டத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது
கத்திரியில் வெட்டப்பட்ட இலைகளுக்கு நடுவே
பனி படர்ந்த தேயிலைப்பூ விழுந்தது
அதை யாரும் சூடவுமில்லை
அது வாடவுமில்லை
*
தனித்தும் தணிந்தும்
மலை முகட்டை அடையும்போது
பள்ளத்தாக்கிலிருந்து மேலெழும்பிய மேகங்களைக்
கூர்ந்து நோக்கும் கண்களில் ஒரு துளி விழுகிறது
உப்பிட்ட பாதைகளில்
பெருகியோடும் சுனையை அதுதான் தீர்மானிக்கிறது
*
தூரத்துப் பச்சையில்
துலங்கலாய் தெரியுமொரு மரத்தில்
உணர்தலின்பொருட்டு என் கையை
அதன் திசைநோக்கி நீட்டினேன்
என் விரல்களின் கூச்சலை
உன் கண்கள் கேட்டன
*
நாம் பார்த்தபோது
வெள்ளை வால் அசைய பறக்கும்
அந்த அரிய பறவை அசையாமல் நின்றது
உனக்காக ஒரு நொடி
எனக்காக ஒரு நொடி
*
நாம் பார்த்தோம்
தேயிலைப் பூவை காலில் பற்றியபடி
மேலும் கீழுமாய்
இப்பிரபஞ்சம் இருநொடி அசைந்ததை
௦௦௦

சோ.விஜயகுமார்
சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















