நவீனம் என்றால் என்ன? : ஆடம் கிர்ஷ்

தமிழில் : விஷால் ராஜா


அமெரிக்க கவிஞர், ஆடம் கிர்ஷ் (Adam Kirsch பி.1976) சமகாலத்தில், ஆங்கில உலகின் மிக முக்கியமான இலக்கிய விமர்சனக் குரல்களில் ஒன்றாக அடையாளம் காட்டப்படுபவர். நியுயார்க்கர், அட்லாண்டிக் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் எழுதுபவர். கவிதையை மனித வாழ்வின் மீதான விசாரனையாக, உண்மையின் வெளிப்பாடாக கருதுகிற ரசனை மரபில் வருபவர்.

இந்த கட்டுரை அவருடைய “நவீனக் கூறு” (The Modern Element : Essays on contemporary poetry 2008) எனும் விமர்சனத் தொகுதியின் முன்னுரையாகும். “நவீனக் கூறு” தொகுதி உலகளவில் நவீனத்துவத்துக்கு பிந்தைய புகழ்பெற்ற கவிஞர்களின் நிரையை முன்வைக்கிறது. அதன் வழியே சமகால அழகியலின் பாதைக் குறித்த சித்திரத்தை அளிக்கிறது.

ஆடமின் கட்டுரைகளை வாசிக்கும் ஒரு நவீனத் தமிழ் இலக்கிய வாசகனை, உடனடியாக தாக்கக்கூடிய அம்சம் அதில் உள்ள பரிச்சயத்தன்மையே. இக்கட்டுரைகள் வழியே நாம் காண்கிற உலகளாவிய கவிதை வரலாறு எல்லா வகையிலும் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றுடன் கச்சிதமாக பொருந்துகிறது. “நவீன தமிழ் கவிதை உலகளாவிய அம்சத்துடன்தான் பிறப்பே எடுக்கிறது” என்று கவிஞர் தேவதச்சன் குறிப்பிடுவது எவ்வளவு சரியானது என எண்ணி பார்க்கிறேண். பிறப்பு மட்டுமில்லாமல் அதன் வளர்ச்சியும் உலகளாவிய ஓட்டத்திலிருந்து விலகவில்லை. [அதுவே எல்லா வடிவங்களுக்குமான அழகியல் விதி போல]. உதாரணமாக, செஸ்லா மிலோஷ் (Czeslaw Milosz), சார்லஸ் சிமிக் (Charles Simic) ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் ஆடம் இக்கவிஞர்கள் எப்படி வரலாறு மற்றும் அரசியல் மீதான நவீனத்துவத்தின் விலக்கத்தையும் அதன் மேட்டிமை பண்பையும் தங்கள் கவிதைகளில் எதிர்த்தார்கள் என்பதை விளக்குகிறார். தமிழ் இலக்கியத்தில் தொன்னூறுகளில் நிகழ்ந்த உரையாடலையும் அதன் விளைவான மாற்றத்தையும் இது ஒரு வாசகனுக்கு நினைவூட்டாமல் இருக்காது. தமிழ் நவீனத்துவத்தின் உடைப்புகளில் ஒன்று அது.

இலக்கிய விமர்சகரை ஓர் அசுவாரஸ்யமான பேராசிரியராகவே நாம் கற்பனை செய்ய விரும்புகிறோம். பொத்தாம் பொதுவான அந்த மனப்பதிவை நல்ல விமர்சகர்களை எளிதில் நொறுக்கிவிடுகிறார்கள். ஆடம் கிர்ஷ் அத்தகைய ஒருவர். கவிதை போல, சதா மொழியைக் கடக்க முயலும் ஓர் உயிரியை மொழி வழியாக அறிவு வழியாக அணுக முடியும் என்ற உறுதிப்பாட்டை அவர் அளிக்கிறார்.

“நவீனம் (Modern) என்றால் என்ன?” என்று ஆராயும் இந்த முன்னுரை நவீனக் கவிஞனின் இரண்டு அடையாளங்களை பேசுகிறது. கவிஞன் என்பவன் யார்? அவன் தன் காலத்தை வென்று விளக்குபவனா அல்லது தன் காலத்துக்கு தன்னை பலி கொடுப்பவனா? இந்த இரண்டு நிலைகளுமே ஆழ்படிமங்களாக (Archetypes) மாறிவிட்டவை என்று சொல்லலாம். பொதுவாக, கவிதைக்குள்ளேயும் வெளியேயும் கவிஞர்கள் தேர்ந்துக் கொள்கிற அடையாளம் சுயம்புவானது அல்ல. அது இலக்கிய மரபுடன் பிணைந்திருக்கிறது. அது புலப்படும்போதே ஒப்பனைகளை கண்டுபிடிக்க வழி கிடைக்கிறது.

கவிஞன் என்பவன் குரல் மட்டுமல்ல, மரபுகளால் உருவாக்கப்படும் ஒரு அடையாளம் என நமக்கு நினைவூட்டுகிறார் ஆடம் கிர்ஷ். போலவே, நவீனத்தன்மை என்பது வடிவம் மட்டும் அல்ல; நெறி என்பதையும்.

விஷால் ராஜா


1857-ஆம் ஆண்டு, ஆக்ஸ்போர்டில் கவிதைப் பேராசிரியராக பதவியேற்றபோது மேத்யூ அர்னால்ட் ஒரு துவக்க உரையை நிகழ்த்தினார். “இலக்கியத்தில் நவீனக் கூறு குறித்து” என்ற தலைப்பில் அது பின்னர் வெளியிடப்பட்டது. அர்னால்டைப் போலவே, பல கவிஞர்களும் விமர்சகர்களும் ‘நவீனத் தன்மை’ என்ற கருத்தை மீளாய்வு செய்ய முயன்றுள்ளனர் — அதனை வெறும் காலக்கட்டம் சார்ந்த ஒன்றாகப் பார்வையிடாமல், அழகியல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அடையாளமாக மாற்ற முயன்றுள்ளனர்.

அர்னால்டின் வாதப்படி, நவீனக் கூறு என்பது தற்கால கவிதைகளில் மட்டும் காணக்கிடைக்கும் ஒன்றல்ல; போலவே நிகழ்காலத்தை நெருங்கும்தோறும் மட்டும் தெளிவாக வெளிப்படுவதும் அல்ல. அவரது அர்த்தப்படி, பெரிகிளீசியன் ஏதென்சின் (Periclean Athens) இலக்கியமே விக்டோரிய இங்கிலாந்தின் இலக்கியத்தைவிட நவீனமானதாகும் — ஏனெனில் அது நவீனத்தன்மை பற்றிய அவர் வரையறையுடன் -“அறிவார்ந்த வெளிப்பாடு” (Intellectual Deliverance) என்ற கருத்துடன்- முழுமையாக பொருந்துகிறது:

“முதலில், ‘அறிவார்ந்த வெளிப்பாடு’ என்ற தேவை இந்நேரத்தில் ஏன் எழுகிறது? அந்த வெளிப்பாடு எதைக் குறிக்கிறது? நம்முடைய இந்தக் காலம் தன்னைச் சுற்றி ஒரு விரிவான, சிக்கலான நிகழ்காலத்தையும், அதன் பின்னே ஒரு விரிவான, சிக்கலான கடந்தகாலத்தையும் கொண்டிருப்பதாலேயே இந்த தேவை எழுகிறது. இக்காலக்கட்டமானது அது குறித்து ஆழமாகச் சிந்திக்கும் தனி மனிதனிடம், பெரும் அளவிலான தகவல்களை ஒரு பிரம்மாண்டக் காட்சியாக முன்வைக்கிறது. அவை அனைத்தும் அவனுடைய அறிதலுக்காக காத்திருக்கின்றன; அறிதலைக் கோருகின்றன.

அறிவார்ந்த வெளிப்பாடு என்பது மனிதன் இந்த நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் பூரணமாக அறிந்து கொள்ளும் செயலிலேயே இருக்கிறது. இந்த பெரும் அளவிலான தகவல்களின் அடிப்படை நெறியாக அமைந்திருக்கிற, பொதுக் கருத்துகள் நம் மனத்தில் நிலைபெறத் தொடங்கும்போதுதான் அந்த வெளிப்பாடு ஆரம்பமாகிறது. அந்த வெளிப்பாடு எப்போது முழுமை பெறுகிறது என்றால், நமக்கு புலப்படக்கூடிய அந்த பிரம்மாண்டக் காட்சியினை நாம் ஆழமாகச் சிந்தித்து அறியும் போது, நம்முள் உருவாகும் ஒத்திசைவுக்கூடிய மனதின் சமநிலை நிலைபெறும்போதே அந்த வெளிப்பாடும் முழுமை பெறுகிறது. அதாவது, நம்முடைய ஆர்வத்தை எப்போதும் தூண்டிக்கொண்டே இருக்கிற, அதே நேரம் நம் அறிதலை தொடர்ந்து சிக்கலாக்குகிற —குழப்பம் மிகுந்த, இடைவிடாமல் அசைகிற பிரம்மாண்டக் காட்சியை நாம் எதிர்கொள்ள நேர்கையில், நம் உள்ளத்தில் தோன்றும் பொறுமையின்மையும் எரிச்சலும் எப்போது தொலைகிறதோ அப்போது அந்த வெளிப்பாடும் முழுமை பெறுகிறது.”

மேத்யூ அர்னால்ட் (1822-1888)

தற்காலமும் நவீனம் என்ற கருதுகோளைச் சுற்றியே (பின்-நவீனம் எனும் எதிர்மறை வடிவத்தில் இருந்தாலும்) செயல்படும் வேளையில், நவீனம் பற்றிய அர்னால்டின் வரையறை கவனிக்கத்தக்கது. அது கூறப்பட்டு நூற்றியைம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், அதில் தென்படும் ஓர் அம்சம் இன்றைய வாசகரின் கவனத்தை தாக்கவல்லது. அவருடைய வரையறை முற்றிலும் நேர்மறையான குணத்தை கொண்டிருக்கிறது என்பதே அது. ஒரு கலைஞன், அவன் சேர்ந்த நாகரிகத்தை ஆழமாகக் கற்றுக்கொண்டு, அதில் உள்ள குழப்பம் மிகுந்த, எரிச்சலைத் தூண்டும் பண்முகப்பட்ட விஷயங்களை கலைக்குரிய ஒழுங்கினுள் கொண்டுவரும்போதே அவன் நவீனமானவன் ஆகிறான். தன்னைச் சுற்றிய சவாலான உலகை புரிந்துகொள்ளும்படி தன்னை நிறைவாக வைத்திருப்பதே நவீனக் கவிஞனின் அடையாளம். அர்னால்ட் அவருக்கு விருப்பமான சோபோகிளசைப் (Sophocles) பற்றி சொன்ன வரியில் இது வெளிப்படுகிறது: “[அவனால்] வாழ்க்கையை நிதானமாகவும் முழுமையாகவும் காண முடியும்”

“நவீனம்” குறித்து பிந்தைய காலங்களில் உருவான வேறுபட்ட ஒரு புரிதலுக்கான விதைகள், அர்னால்டின் அந்த உரையிலேயே காணப்படுகின்றன. டி.எஸ். எலியட் (அர்னால்டின் செல்வாக்குக்கு சவால் விட்டு) நிறுவிய அந்த புரிதலே இன்றும் நிலைக்கிறது. நவீன காலத்தின் இடைவிடாத திகைப்பையும் உற்சாகத்தையும் அர்னால்ட் ஐயமின்றி நேரடியாக அறிந்திருந்தார். ஆனால் அவர் லட்சியமாக சொல்கிற வெளிப்பாடோ, எல்லா மீட்புச் செய்திகளையும் போல, ஓர் அனுமானமாகவும் வருங்காலம் பற்றிய கணிப்பாகவும் மட்டுமே இருக்கிறதோ? இந்த சந்தேகத்தை தவிர்ப்பது கடினம். ஏனென்றால் அர்னால்டின் கவிதைகளிலேயே நவீனமாகத் தெரிவது — ஒரு ‘விரிவான, சிக்கலான நிகழ்காலத்தை புரிந்து கைப்பற்றும்’ அம்சம் அல்ல; மாறாக, ‘விடைபெறல்’ எனும் கவிதையில் நம்மால் காண முடிகிற, கைவிடப்பட்ட நிலையின் மெய்யான ஒப்புதலே நவீனக் குணமாக தெரிகிறது.

அய்யோ! நாம் வாழ்க்கையை சிதைக்கிறோம் —
வீடிலா காற்று போலச் சிதறி,
எங்கு செல்லக்கூடாத அங்கேயே சென்று மோதி,
எதை கண்டுபிடிக்க முடியாதோ அதையே தேடிக் கொண்டு “

“இலக்கியத்தில் நவீனக் கூறுப் பற்றி” உரையிலேயேக்கூட, அர்னால்ட் மறைமுகமாக தன் சொந்த தோற்றத்தையே வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது. அது, சோப்போக்ளீஸ் மற்றும் துகிடிடீஸ் (Thucydides) குறித்த அவர் புகழ்ச்சிகளில் வெளிப்படவில்லை. மாறாக சோர்வும் நிஹிலிசமும் நிறைந்த லூக்ரீஷியஸ் (Lucretius) குறித்து அவர் உருவாக்கும் சித்திரத்தில் வெளிப்படுகிறது. “என்ன ஒரு வெறுமைச் சித்திரம்? அதி நவீன சமூகங்களின், மேம்பட்ட நாகரீகத்தின் நோய்மைச் சித்திரம்… லூக்ரீஷியஸ் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறான், இருட்டைச் சுமக்கிறான், பிணியுற்றிருக்கிறான். பிணியுற்ற ஒருவனால் தன் காலத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியாது.”

“நவீனம்” பற்றிய அர்னால்டின் வரையறை நன்னம்பிக்கை மிக்கது. அவருடைய விருப்பத்தை சுமப்பது என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை. நேரெதிராக, பிணியுற்ற கவிஞனே நவீன காலக்கட்டத்தை அர்த்தப்படுத்த முடியும் என முடிவுக்கு கவிஞர்கள் வந்துசேர்ந்தபோது, அந்த வரையறை முற்றாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. எலியட் அடைந்த முடிவு அதுதான். அர்னால்டை, ஆழமற்ற விக்டோரிய நம்பிக்கையில் புழங்குபவராக எண்ணி புறந்தள்ளினார் எலியட். இருவரும் பல கருத்துச் சட்டகங்களை ஒரேவிதமாகப் பகிர்ந்தார்கள். அந்த உண்மையை தன்னிடமிருந்தே மறைக்கவே எலியட் அப்படிச் செய்திருக்க வேண்டும்.

“விரிவும் சிக்கலும் கூடியது” என்பது நவீன உலகம் பற்றிய அர்னால்டின் விளக்கம். தன் “மீபொருண்மை கவிஞர்கள்” (The Metaphysical Poets) கட்டுரையில் எலியட் கூறுகிற விஷயத்துடன் அது ஆச்சர்யமூட்டுவிதத்தில் ஒத்துபோகிறது. வேறுபாடு என்னவென்றால், அர்னால்டின் பார்வையில், நவீனத்தன்மை என்பது அந்த சிக்கல்களை எல்லாம் மீறி நிறைவை சாதிப்பது; எலியட்டோ, அந்த சிக்கல்களிடம் சுயவிருப்புடன் சரணடைவதை நவீனத்தன்மையாகக் காண்கிறார். “நாம் ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியும்: நம்முடைய இன்றைய நாகரீகத்தில், அது இன்றைக்கு அமைந்திருக்கும் விதத்தில், கவிஞர்கள் கடினமானவர்களாக மட்டுமே இருக்க முடியும்.நம் நாகரீகம் பல்வேறு வகைப்பாடுகளையும், மாபெரும் சிக்கல்களையும் உள்ளடக்கியது. இந்த பல்வேறு வகைப்பாடுகளும் சிக்கல்களும், ஒரு பண்பட்ட நுண்ணுணர்வின் மேல் செயல்படும்போது, பல்வகைப்பட்டதும் சிக்கலானதுமான வெளிப்பாடுகளையே உற்பத்தி செய்ய முடியும்.”

நவீனக் கவிஞனின் தனித்துவமான நாயக வல்லமை என்பது, தன்னை நாகரிகத்தின் முன்னோடியாக மாற்றிக் கொள்வதிலேயே இருக்கிறது; மேலும் தன் சமகாலத்தினர் இன்னமும் மொழியில் தொகுக்கக்கூட கற்றுக்கொள்ளாத ஆன்மீக அனுபவங்களை, முன்கூட்டியே, மிகக் கூர்மையாக எதிர்கொள்வதிலும் இருக்கிறது. துணிச்சலும் விலக்கமும் சேர்ந்த விநோதக் கலவையான இந்த நாயக வல்லமையின் சிறந்த வெளிப்பாடு, ஜான் பெரிமனின் (John Berryman) “கனவுப் பாடல்கள்” (The Dream Songs) தொகுப்பில் காணப்படுகிறது:

எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, முழு இருட்டில்
அதி நுட்பமான ஒரு அறுவை சிகிச்சையை
என் மீது நானே நிகழ்த்திக்கொள்ளும்படி

ஒரு நவீனக் கவிஞனை இவ்விதம் வரையறுத்த பிறகு — அதாவது, அவனைத் தன் காலத்துக்கு அர்த்தமும் விளக்கமும் அளிப்பவனாக இல்லாமல், தன் காலத்தின் ஆராயத்தக்க உயிரியாகவோ அல்லது சுயவிருப்புடன் தன்னை பலி கொடுப்பவனாகவோ வரையறுத்தப் பிறகு — நவீனக் கவிதையில் இன்றுவரை தொடர்கிற எல்லா நல்ல மற்றும் கெட்ட குணங்களும், தவிர்க்க முடியாதவையாக தோன்றுகின்றன.

டி.எஸ்.எலியட் (1888 – 1965)

நல்ல குணங்களாக இருப்பவை — துணிச்சலான நேர்மை, நுட்பமான தன்னறிவு, வரலாற்று மீதான நெருக்கமான (எல்லாக் காலங்களிலும் வெளிப்படையாகத் தெரியாத) அக்கறை. மேலும், அன்னியப்படுவது பற்றிய தயக்கமின்றி மொழியை,சாத்தியமான எல்லை வரை , தொடர்புறுத்தலுக்கான துல்லியமான கருவியாக மாற்றும் உறுதிப்பாடு. இந்த நற்குணங்களின் காரணமாக இருந்தபடி அவற்றை கேள்விக்கும் உள்ளாக்குகிற கெட்டக் குணங்கள் — மிகையுணர்ச்சியின் தன்னகங்காரம், சதா தன்னை நிகழ்காலத்தவராக காட்ட வேண்டிய அவதி, மொழியின் திருகல் தன்னளவிலேயே சுவாரஸ்யமானது என்றும் பாராட்டுக்குரியது என்றும் நம்புவது.

இந்த மதிப்பீடுகளே இன்றும் நாம் கவிதை வாசிக்கிற, எழுதுகிற விதத்தை வழிநடத்துக்கின்றன. அதற்கு சிறந்த சான்று — பழைய கவிதை காலகட்டங்களை சேர்ந்த ஆக்கங்களை விட ஒரு நல்ல நவீனக் கவிதை அந்தரங்கமாகவும் ஆழமாகவும் நம்மை அசைக்கிறது; ஒரு மோசமான நவீனக் கவிதை அருவெறுப்பூட்டுகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளாக நிகழ்வது போலவே, இன்றும் கவிதைகளில் உண்மையாகவே தங்களை அபாயத்துக்கு திறந்துவைத்திருக்கும் கவிஞர்களால் மட்டுமே, நவீனக் கவிதை நம்மிடம் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிகிறது. அர்னாலடின் பார்வைக்கு மாறாக, நவீன அனுபவம் என்பது வென்று அர்த்தம் பெறக்கூடியதாக இல்லாமல், துல்லியமாகவும் தீவிரமாகவும் பகிரக்கூடியதாக மட்டும் இருப்பதை ஒப்புக் கொள்வதன் அபாயம் இது. இந்த அபாயம் தேர்கிற வடிவங்கள் பல்வகைப்பட்டவை. கவிஞர்களின் பல்வகைத்தன்மை போலவே. எனினும் அந்த அபாயத்தை எதிர்கொள்வதற்கான தயக்கமில்லாத விருப்பமே, வேர்ட்ஸ்வொர்த் தொடங்கி, குறிப்பாக எலியட்டுக்கு பிந்தைய மகத்தான முன்னோடிகளுடன் இன்றைய சிறந்த கவிஞர்களை இணைக்கும் பொதுத்தடம்.

சாராம்சமான அர்த்தத்தில் நவீனமாக இருப்பது என்பது, முந்தைய தலைமுறை கையளித்த நவீனத்தன்மையின் தொகுப்பை (canon of moderness) அப்படியே ஏற்றுக்கொள்வதன்று. 1910கள் மற்றும் 1920களை சேர்ந்த நவீனத்துவவாதிகளின் அல்லது 1960கள் மற்றும் 1970களை சேர்ந்த பின்-நவீனத்துவவாதிகளின் செல்வாக்கு மிகுந்த உத்திகளை வெறுமனே நகலெடுக்காமல், நவீனம் எனும் கருதுகோளுக்கு முழுமையாக உண்மையாக இருக்கும்படி தன் சொந்த வழியை கண்டுபிடிப்பதே, சமகாலக் கவிதையின் மிகப் பெரும் சவால்.

சமகாலக் கவிதையில், போலியான அதிகாரத்தை பெருமிதத்தை உருவாக்கவும், வெளிப்படையான மதிப்பீட்டைத் தடுக்கும்படி கருத்துச் சட்டகங்களை குழப்பவும், எவ்வளவு தூரம் நவீனத்துவவாதிகளின் கருவிகள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டுகிறது. அதைவிட மோசம், பின்-நவீனத்துவவாதிகளின் செயற்கை விளையாட்டுகளையும் வடிவச் சிதைவுகளையும் உபயோகிப்பது. கவிதையின் வடிவத்தை சிக்கலாக்க அழுத்தம் கொடுப்பதன் வழியே, அதில் உண்மையான உள்ளுணர்வும், துல்லியமும், சவாலும் இல்லாததை இந்த உத்திகள் மறைக்க முயற்சிக்கின்றன. ஒருவேளை, கவிதை வரலாற்றின் எந்த தருணத்திலும் இருப்பதைப் போலவே, நம்முடைய காலகட்டமும் முன்பு உயிர்ப்புடன் இருந்த உத்திகளின் சடலங்களால் நிறைந்திருக்கிறது எனலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இக்கட்டுரைகளை எழுதிய வேளையில், கவிதையில் ‘நவீனத்தன்மை’ பற்றிய கேள்வி எனது மனதில் வெளிப்படையாக இருக்கவில்லை. ஆனால் பின்னோக்கி யோசிக்கும்போது, நவீனக் கூறு பற்றிய அக்கறைதான் இவை அனைத்தையும் இணைக்கும் காரணியாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. உண்மையிலேயே நவீனம் என்பதற்கான அடையாளமாக நான் சுட்டிய ஒருவித அபாயத்தின் இருப்பை அல்லது அதன் இன்மையை வைத்தே சமகால கவிதைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறேன். அதே நேரம் நவீனத்தன்மையும் அபாயமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பீடுகளாக விளங்கும் காலகட்டத்தில், பல சமயங்களில் அவை போலியாக உருவாக்கப்படுவது குறித்தும் கவனமாக இருக்க முயன்றுள்ளேன்.

ஆடம் கிர்ஷ்

கவிஞரிடமோ வாசகரிடமோ ஆழமான அகத் தூண்டுதலை ஏற்படுத்தாத போலியான சுய முன்னிறுத்தல்; புதுமையை, கண்டுபிடிப்பு என தவறாக எண்ணும் பயனற்ற பரிசோதனைகள் — இவையே நம் காலத்தின் மோசமான கவிதைகளின் இயல்புகள். முந்தைய காலகட்டங்களில் வேறுவகையான மோசமான குணங்கள் இருந்தது போல இவை இப்போது உள்ளன. தன் “கவிதை ஆய்வில்” (The Study of Poetry) மேத்யூ அர்னால்ட் எழுதினார் “மேன்மைக்கும் தாழ்வுக்கும், தெளிவுக்கும் தெளிவின்மை அல்லது அரைகுறை தெளிவுக்கும், உண்மைக்கும் பொய் அல்லது அரைகுறை உண்மைக்கும் நடுவிலான வேறுபாட்டினை குழப்பவோ அழிக்கவோ, வேறெந்த இடத்தைக் காட்டிலும் , கவிதையில் அனுமதியே கிடையாது”.

நவீனம் என்பது கவிதையில் ஒரு தொடர்ச் செயல்பாட்டை நிகழ்த்தும் வினையூக்கியையொத்த கூறாக இருக்கும்போதே, அது ஒரு பொது இயல்பாகவும் இருக்கிறது. நாம் அதனூடே அசைகிறோம். அதையே சுவாசிக்கிறோம். விளைவாக, நம் சமகாலத்தவரையும் நம் காலக்கட்டத்தையும், வெளியே இருந்து புறவய நோக்கில் அறிவது சாத்தியம் கிடையாது. புறவய நோக்கு என்பது ஒருவேளை பொருட்டின்மையின் இன்னொரு பெயராகவும் இருக்கலாம்.

விமர்சனமானது சார்பற்ற விலக்கத்துடன் மதிப்பீடுகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாள்பட நாள்பட என்வரையில் சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. மாறாக என்னுடைய இந்த கட்டுரைகள் , முக்கியமான சமகாலக் கவிஞர்களின் ஆக்கங்களை ஆராய்வதன் வழியாக, சில கேள்விகளை எழுப்பும் பணியை நிவர்த்தி செய்திருப்பதாக நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் கவிதை என்ன செய்யக் கூடும், என்ன செய்ய வேண்டும், அது எதற்காக இருக்கிறது, பிற எந்த கலையும் வழங்காத எந்த விஷயத்தை அது வழங்குகிறது? ஒருவேளை இக்கேள்விகளுக்கு அர்னால்ட் வழங்கிய பதிலைவிட வேறு சிறந்த பதில் இல்லாமல் இருக்கலாம். கவிதையை வரையறுக்கும்போது, மோஸ்தருக்கேற்ப இல்லாமல், உண்மையுடனும் ஞானத்துடனும் அவர் சொன்னார் – “[கவிதை] வாழ்வின் மீதான விமர்சனம்”.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop