ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

புற்றுநோய் வார்ட்

ஜன்னலுக்கு வெளியே
இருள் நுழையும் அந்தி
உள்ளே
பொழுதுணர இயலாததொரு
வெளிச்சத்திலிருக்கும்
புற்றுநோய் வார்ட்.
தாதியின் உதவியுடன்
சக்கர நாற்காலியில்
மெலிந்த தேகத்துடன்
தினசரி
குளிக்கப்போகும்
50 வயதுப் பேராசிரியை
உள்தாழிடாமல்
நிர்வாணமாய் நிற்கப் பழகிவிட்டாள்.
தூவாலைக் குழாயின்
குமிழைத் திருகி
தண்ணீர் தொடும்போது
யாருமில்லாத குளிர் இது
என்கிறாள்.
000

குற்ற ஸ்தலம்

அந்தச் சம்பவ ஸ்தலத்துக்கு
பிரௌனியும் நானும் வந்து
சேர்ந்திருந்தோம்.
தடயமே அற்ற
புனிதக் குற்றமொன்றின்
காட்சி அது…
நாங்கள்தான் நிகழ்த்தினோம்.
எங்கள் குருதியைப் பரிசுத்தமாக்கிய
அக்குற்றத்தின் அரவத்தை
அமிர்தம் போல
நாங்கள் செவியால் பருகினோம்.
“நிஜமான
கேவல ஞானம் நான்தான்”
பட்டப்பகலில்
வெட்டவெளியில்
நின்று
எங்களுக்குச் சொன்னது
அந்தக் குற்றம்.
அப்போது சுற்றிலும் ஓயாத மயில்களின்
அகவல்கள்.
மயில்களைக் காட்டவில்லை மரங்கள்.
000

முதல் வெளிச்சம்

தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது.
000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. காட்சி ரூபமும், படிமம் நிறைந்த கவிதைகள், வாழ்வின் பல வாசற்படிகளை காட்டுகின்றன.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss