சோ.விஜயகுமார் நீள்கவிதை

அக்காவலர்க்கு மிகவே

கச்சிதம் தவறாது
வேலைக்கு கிளம்புகிறார்கள்
ஒரு புறமாக தொங்கிய தலையோடு
ஒரு புறமாக தொங்கிய பையோடு

கச்சிதம் தவறாமல்
வீட்டிற்கு திரும்புகிறார்கள்
ஒரு புறமாக தொங்கிய தலையோடு
ஒரு புறமாக தொங்கிய பையோடு

அந்த அலுவலகத்தின்
இரவு நேரக் காவலர்
வாயிற்கதவுகளை திறப்பதும் மூடுவதுமாய்
ஒவ்வொரு இரவையும்
ஒவ்வொரு நபரையும்
வரவேற்றும் வெளியனுப்பியும்
துல்லியமாக முடித்து வைப்பார்

அவர் ஒருபுறமாக சாய்ந்ததில்லை
அவரிடம் பையில்லை
தனியே இருக்கும்போது
அவர் அமர்ந்துகொள்ளும்
முக்காலியை
அவரே செய்தது என்றார்

வலியோடு அமர்ந்திருந்தாலும்
சொந்தக்காலில் உட்கார்ந்துகொள்ளும்போது
அந்தக் கண்களில் ஏன் அத்தனை சிரிப்பு

அதிகுணம் நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
யார் வரும்போதும் எழுந்து நிற்கும் அந்தப் பெண் காவலாளி
செருப்பின் சப்தத்திற்கு எழுந்து நிற்க பழகியிருந்தாள்
காபி மேக்கரில் பால் தீரும் நேரத்திற்கும்

இரவுப் பணி முடியும் நேரத்தில்
எல்லோரும் கிளம்பிப்போன பிறகு
தனியே இருக்கும் கட்டடத்தின் தாழ்வாரத்தில் ஒரு சோபாவில்
பாடலைக் கேட்டபடி
தனியே அமர்ந்திருக்கிறாள்

தன்னை வழி அனுப்புவதற்காக
இரவு வரும்போது
ஒருதரம் தன் செருப்புகளைத்
தனியே தட்டிக்கொண்டு
அவள் குதூகலாமாய்
எழுந்து நிற்பதை
நீங்களும் பார்த்ததில்லைதானே

அத்தகு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
காவலாளி வருகிறார்
மற்றொரு காவலாளி கிளம்புகிறார்
துப்புறவுப் பணியார்கள் வருகிறார்கள்
கதவுகள் திறக்கின்றன
கதவுகள் சாத்தப்படுகின்றன
முதலாளியின் பணியாட்கள் வருகிறார்கள்
கதவுகள் திறந்துவைக்கப்படுகின்றன
கதவுகள் சாத்திவைக்கப்படுகின்றன
முதலாளி வருகிறாரென சொன்னபடி
ஒரு குரல் வருகிறது
கதவுகள் வேகமாக திறக்கப்படுகின்றன
பெருத்த ஓசையுடன் சாத்தப்படுகின்றன

அந்த அறையில் நம்புகிறார்கள்
கதவுகள் காவல் காப்பதாய்
அவர்கள் நம்புகிறார்கள்
அந்தரமில்லாத அந்தரங்கத்தை
அந்தரங்கமாக பேசப்படுகிறதென

கதவு நம்புகிறது
தான் கசியவைத்த
ஓசைகளை
காவலாளி கேட்கவில்லையென

காவலாளி நம்புகிறான்
தான் கேட்டது
யாருக்கும் தெரியாதென

அப்படி நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
இடைவேளை நேரத்திலெல்லாம்
தேநீர் வருகிறது
கதவுக்கு உள்ளும்
கதவுக்கு வெளியிலும்

கதவுக்குள் மேசையின்மீது
ஒவ்வொரு கணிணி அருகிலும்
பாதி பருகியும் பருகாமலும்
கிடக்கும் கோப்பையில்
சில்லிட்டு கிடப்பது
யாருடைய சுதந்திரம்

கதவுக்கு வெளியே நின்றபடி
வான் பார்த்து
அந்த காவலாளி
கடைசித் துளிவரை
பருகியது
உண்மையில் யாருடைய சுதந்திரத்தை

ஆழ்கடல் நல்லநல்ல
அவை தேநீர் நல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
புல் மேயவரும் மாட்டை
ஒருபோதும் விரட்டாத
அவர்தான் சொன்னார்
அதன் வால் மட்டுமே
தனக்காக சாமரம் வீசுவதாய்

பூனைக்கு பால் வைக்கும்
அவர்தான் சொன்னார்
நாள் தவறாது அது
காலின் அருகே வந்து
வாஞ்சையாய்ப் பார்ப்பதாய்

பெட்டிகிரீ வாங்கிவரும்போதெல்லாம்
எரிச்சலடைந்து புகைப்பார் அந்தக் காவலாளி

முதலாளியின் குரலைவிட
எரிச்சலானது
முதலாளியின் நாய்
நம்மைப் பார்த்துக் குறைப்பது

இதை நாங்களும் சொன்னோம்

ஆளரி நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
ஒரு வேலை நாளின் இடையே வெட்டப்படும் குழந்தையின் பிறந்தநாள் கேக்கை பத்திரப்படுத்தும் காவலாளி
விடுமுறை தினங்களில்
எல்லா அறைகளையும்
முறையாக சுத்தம் செய்யும்போது
கேட்டுக்கொண்டே முணுமுணுக்கும் பாடலை
நாமும் கேட்கத்தோன்றும்போது
கதவுகள் சப்பதத்தோடு திறக்கப்படுவது
தற்செயலன நம்பும் மனம்
எப்படியேனும் வாய்ப்பதாகுக

அறைமௌனம் இரைச்சல் நல்ல
அவை நல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
மதிய வேளையில்
கால்வலிக்காக
மாத்திரை சாப்பிடும் காவலாளி
மழைக்காலங்களில் ஏன்
குடையைத் தவிர்த்து
கருப்பு நெகிழியை தலையில் மாட்டிக்கொள்கிறார்

அந்தக் குளிரூடுட்டப்பட்ட அறையில்
தன் காலணித் தடங்களை முழுக்க ஒருதரம் பதிட்டுவிட்டு
தானே சுத்தம் செய்வதில்
அந்தக் காவலாளிக்கு
அப்படி ஒரு குதூகலம்

எப்போதும் அடர்ந்த வண்ணங்களிலேயே ஆடைகளை அணிகிறார்
வேலை நேரம் முடியும்போது
புடவைக்கும் வண்ண சட்டைக்கும் மாறும் அந்தத் தருணத்தைப் பார்க்க
பணி நேரம் முடிந்த கண்கள் பெரும்பாலும் அங்கு இருப்பதில்லை
எங்குமேவும்

அத்தகு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
அறைக்குள் எலியோ பாம்போ வந்தாலும்
பல்லியை விரட்டுவதென்றாலும்
உடனே அழைக்கப்படும் காவலாளி உண்மையிலேயே பயமின்றி இருக்கவேண்டுமென நம்ப வைத்தவன்தான் முதன்முதலில் தலைமையின் ருசியை
சரிவர ருசித்திருப்பான்

தீ விபத்தென்றாலும்
திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்தாலும் ஒரு காவலாளி முதலில் அழைக்கப்பட வேண்டுமென்பதை
ஆமொதித்தவன்தான்
அதிகாரத்தினை முகத்தில்
பூசிக்கொள்கிறான்

ஆனாலும்
ஆனாலும்
நீரிழிவு நோய் வந்த காவலாளியை
வேலையிலிருந்து நிறுத்த
நீங்கள் வேறு ஏதேனும்
நல்ல காரணத்தை
கண்டடைந்திருக்கலாம்

அஞ்சிடு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
உணவு இடைவேளையில்
சிரித்துப்பேசும் காவலாளிகளிடமிருந்து
ஒரு குரல் எக்ஸ்கியூஸ்மி என ஒலிக்கிறது

பீங்கானில் புதைந்த முகமொன்று
புருவமுயர்த்தி குரல் வந்த திசையைப் பார்க்கிறது

இங்கே எச்சில் துப்பக்கூடதென
குரலின் பிம்பம் கண்ணாடி பார்த்துசொல்கிறது
கண்ணாடியைத் துடைத்தபடி

முகம் மன்னிப்பைக் கேட்டபடி
மறுபடி பீங்கானில் முகம் புதைக்கிறது

ஆங்கிலம் நல்ல நல்ல
அதிஉரிமை நல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*
காலின் கட்டை விரலுக்குமட்டும்
பிங்க் நிற நகச்சாயம் பூசிக்கொள்ளும்
அந்தக் காவலாளிக்கு
நகங்களில் அத்தனை மேடு பள்ளம்

வேலை முடிந்து அவர் வீட்டிற்குச் செல்லும்போது
மிதிவண்டியில்
ஏறி இறங்கி
ஏறி இறங்கி
அசைந்துகொண்டிருக்கிறது
பிங்க் நிற நிலா

அன்பொடு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அக்காவலர்க்கு மிகவே
*

சோ.விஜயகுமார்

சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. / தன்னை வழி அனுப்புவதற்காக
    இரவு வரும்போது
    ஒருதரம் தன் செருப்புகளைத்
    தனியே தட்டிக்கொண்டு
    அவள் குதூகலாமாய்
    எழுந்து நிற்பதை
    நீங்களும் பார்த்ததில்லைதானே /

    வாழ்த்துகள் விஜயகுமார்.

    மனுஷ்யபுத்திரனின் டெம்ப்ளேட்டில் இருப்பது போன்று தெரிகிறது. மற்றபடி, கவிதையின் கருவும் உள்ளடக்கங்களும் நிறைவு(நிறைவின்மையின்).

    ஒரு பெண் காவலாளியைக் கவித்துவ ‘தரிசனமாக்கிய’தில் விஜயகுமார் இன்னும் கொஞ்சம் கவிஞனாக முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்.

  2. அன்பொடு நல்லநல்ல
    அவைநல்ல நல்ல
    அக்காவலர்க்கு மிகவே
    * நல்லது

    இரவு பகல் காவலர்களின் துயரத்தையும், பணிகளையும், எதிர்கொள்ளும் திறமையும் விவரித்தலில் தனித்தன்மையை கண்டேன் மேலும் எதிர்பார்க்கிறேன்

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss