டுல்சே மரியா லோய்னாஸ் கவிதைகள்

தமிழில்: வயலட்
டுல்சே மரியா லோய்னாஸ்

டுல்சே மரியா லோய்னாஸ் (1902 – 1997), கியூப தேசத்து கவிஞர். இக்கவிதைகள் “முழுமையானத் தனிமை” (Absolute Solitude) எனும் அவர் நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பெயரில்லா கவிதைகள்

ஒவ்வொரு நாள் காலையிலும் யாரோ ஒருவரின் சவப்பெட்டியில் ஒரு ரோஜா அழுகுகிறது.
ஒவ்வொரு நாள் இரவிலும் கடவுள் முப்பது வெள்ளிக்கு விற்கப்படுகிறார்.
நீயோ துரோகம் பக்கவாட்டில் தாக்கியது, சேறு முகத்தில் வீசியது என்று குறைசொல்கிறாய். நீ! உழைப்பில்லா, இருண்மையில்லா காதல் வேண்டுமெனக் கேட்கும் நீ! சரி சொல், உன் காதல் ஒரு ரோஜாவை விடப் பெரியதா? உன் காதல் கடவுளைவிடப் பெரியதா?

OOO

உன் காதல் பரவிக்கிடக்க வேண்டியிராதபோது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், எல்லா வயல்களின் தானியமான எல்லா பள்ளத்தாக்குகளின் மானான எல்லா காற்றின் சிறகான ஒரு இதயத்தைத் துரத்தவேண்டியிராதபோது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்.
உன் காதல் ஒரு பெயரில் அடங்கிப்போகும்போது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், அவரது கண்களின் நிறத்தை புருவ இடைவெளியின் நீளத்தை உன்னால் விவரிக்கமுடியும்போதும் அவரது காலடியில் நன்றியுள்ள நாய்போலத் தூங்கமுடியும்போதும் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

OOO

உண்மை நம்பிக்கையை எழச்செய்கிறது, ஆனால் சிலசமயம் நம்பிக்கை நேரெதிர் உண்மையை எழச்செய்கிறது, இல்லை இழுத்து வருகிறது.

OOO

நீ இன்னொரு சொல் சொன்னால், ஏற்கனவே என் இதயத்துக்குள் பாய்ந்துகொண்டிருந்தும் உனது அந்தக் குரலால், விரும்பினால் ஒரு நீண்ட கூரான அழகிய வாளைப்போல என்னைத் துளைத்துச் செல்லும் உனது அந்தக் குரலால் இன்னொரு சொல் சொன்னால் நான் செத்துப் போவேன்.

நீ உனது அந்த இரும்புக் குரலால் இன்னொரு சொல் சொன்னால், எனை அறுக்கும் குரலால், சாவின் குரலால், நான் அணைத்து நசுக்கி கடிக்க முடிகிறதுபோன்ற அந்தக் குரலால், என் மார்பை நோக்கி நீ குறிவைக்கும் அந்தக் குரலால் இன்னொரு சொல் சொன்னால், என் இதயத்துக்கு நேர்ப்பாதை அறிந்த கண்ணுக்குத் தெரியாத வாளால் வெட்டப்பட்டதுபோல நான் அங்கே செத்து வீழ்வேன்.

OOO

நீ என்னோடு பேசினாய், ஆனால் எங்கிருந்து, எனக்குத் தெரியவில்லை. உன் குரலை உணர்ந்தேன், கதகதப்பான வழிந்தோடும் குரலை, சில சமயம் உன் தொண்டையில் சிக்கிக்கொண்டிருக்கும் வெறுமையால் கரகரக்கும் குரலை. நீ என்னோடு பேசினாய், எங்கிருந்தென்று தெரியவில்லை. உன் சொற்களும் எனக்குப் புரியவில்லை. ஒரு நிலப்பரப்பில் எல்லா திசைகளிலிருந்தும் பிறந்து சூழும் இரவைப் போல உன் குரலை மட்டுமே உணர்ந்தேன்.

என்னை மெல்ல மெல்ல மூழ்கடிக்கத் தொடங்குமொரு கதகதப்பான அலை, நிலவோடு வளர்ந்து, தொடுவானில் எழும் புயலாகக் கவர்வதுபோலே உன் குரல்.

மீண்டும் உன் குரல்? எப்போது உன் குரல் இல்லாமல் இருந்தது? என் காதுகளில் கேட்ட குரல் மட்டுமல்ல, என் சதையில், நீர் அலையாய், தீ அலையாய், அருகே வரவர வளரும் அலையாய் உணர்ந்த குரல்.

உன் குரல், என் காதுகளில் பேய் போல. எல்லா இசையிலும், எல்லா சொற்களிலும், என் வாழ்க்கையில் உன் குரலைக் கேட்டதிலிருந்து கேட்ட எல்லா குரல்களிலும் ஆழமாக விடாது கேட்கும் குரல். உன் குரல், வேறு யாருடையதும் போலல்லாத உன் குரல் எப்போதும் எனைச் சூழ்ந்து, நெருங்கி, என் ஆன்மாவின் போராட்டங்களை அடக்கிய குரல், சட்டென அதிர்ந்த குரல்.

ஆனால், நீ எங்கிருந்து பேசுகிறாயென எனக்குத் தெரியவில்லை. ஆம், அது உன் குரல், நீரும் நெருப்பும் புயலுமான உன் குரல். ஆனால், நான் நடுங்கியபடி எனைச்சுற்றிப் பார்த்தபோது மௌனத்தின் வெற்றுச் சுவர்கள் மட்டுமே சூழ்ந்திருந்தன.

OOO

என்னிடம் அலைகள் உயர்ந்தெழும் கடலுள்ளது. உன்னிடம் அசைக்கமுடியாத பாறை உள்ளது.

என்னிடம் சூரியனும் நிலவுமில்லாத காடுள்ளது. உன்னிடம் புதிதாய் சாணைபிடித்த கோடரியுள்ளது.

என்னிடம் தங்கமும் இரும்பும் உள்ளன, என்னிடம் இரவின் ரகசியமுள்ளது, என்னிடம் உண்மை உள்ளது, என்னிடம் நம்பிக்கை உள்ளது, என்னிடம் எல்லாம் உண்டு.

உன்னிடம் உன் கண்களின் அந்தப் பார்வை உள்ளது.

OOO

ஒவ்வொரு நாளும் இருபத்துநான்கு மணிநேரங்களில் ஒன்றை நீ என்னைக் கைவிட்டுச் செல்லத் தருகிறேன், உனக்கு அதுதான் வேண்டுமென்றால்.

ஒவ்வொரு நாளும் நீ எனக்கு இருபத்துமூன்று மணிநேரங்களைத் தருவாயென்றால், நீ என்னைவிட்டுச் செல்வதுகுறித்து யோசிக்க ஒரு மணிநேரத்தை வைத்துக் கொள்ளலாம், மீத இருபத்துமூன்று மணிநேரங்களை நீ புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவாயென்றால்.

அந்த ஒரு மணிநேரம் உனது. அதன் அறுபது நிமிடங்களையும் நான் மதிப்பேன். அதில் நான் மூச்சை நிறுத்திக் கொண்டு, என் நுரையீரலை நிரப்பும் காற்றும் உன்னைத் தொந்தரவுசெய்யாமல், உன் கவனத்தைக் கோராமல் பார்த்துக்கொள்வேன்.

அந்த ஒரு மணிநேரம் என் சுயம் அழிய, ஒரு மணிநேரம் என்னை இதயத்தில் கட்டிவைத்து, என் ஆங்காரத்தை எதிர்கொண்டு, நூற்றாண்டுகள் ஒரு மணற்கடிகையில் கடந்துசெல்ல நடுங்கிக்கொண்டிருப்பேன்.

அந்த ஒரு மணிநேரம் கடந்து நான் கண் திறந்து நீ என்னை விட்டுச்செல்லவில்லையென்று பார்க்கும்போது, ஒரு சைகையுமில்லாது ஒரு சொல்லும் சொல்லாது, நீ எனக்காக மாத்திரம் பூக்குமொரு அதிசயமென வரவேற்பேன்.
தினம் நடக்கும் அதிசயம் அதிசயமாகாது போவதில்லை, தினம் வரும் வேதனை வேதனிக்காமல் இருப்பதில்லை, தினமும் வரும் மகிழ்ச்சி இப்படி அற்புதமான தூய முன்னெப்போதுமில்லாத மகிழ்ச்சியாக இல்லாமல் போவதில்லை.

OOO

அதோடு அந்த ஒளி?
— அது உன் நிழல்.

OOO

என்னை மன்னியுங்கள் தேவனே, நான் அடக்கி வைக்கும் எல்லாவற்றுக்கும், உம்மை வந்தடையாமல் நான் அழுத்தி வைக்கும் எல்லாவற்றுக்கும்.
நான் உங்களுடையவள் ஆனாலும், நான் எல்லாவற்றையும் உங்களிடமிருந்து மறைக்கிறேன். நான் என்னுள் அழிக்கும், அடக்கும், கடக்கும் எல்லாவற்றுக்கும் என்னை மன்னியுங்கள்.
என் ஆன்மாவை ஏழு பூட்டுகளால் பூட்டி, நீங்கள் தட்டும்போது கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என்னை மன்னியுங்கள். என் உடலைக் கட்டுப்படுத்தியதற்கு மன்னியுங்கள், அது உங்களிடம் சேராதிருக்க சுவரோடு ஆணியடித்து வைத்ததற்கு மன்னியுங்கள். என் உடலையும் ஆன்மாவையும் கட்டியாள்வதற்கு மன்னியுங்கள், உங்களைவிட ஆற்றல்மிக்கவளாயிருப்பதற்கு, என்னைவிடவும் ஆற்றல்மிக்கவளாயிருப்பதற்கு என்னை மன்னியுங்கள்.
இத்தனை உறுதியாயிருப்பதற்கு என்னை மன்னியுங்கள். இந்த பலத்தை நான் கேட்கவில்லை, ஆனால் நான் பலத்தோடிருப்பதால், பலத்தோடிருந்துவிட்டுப் போகிறேன்.
யாக்கோபு இரவு முழுக்க ஒரு தேவதையோடு போராடினான், ஆனால் நான் வாழ்க்கை முழுக்க அவனோடு போராடிக்கொண்டிருக்கிறேன், இருப்பினும் இதுவரை என் காலடியில் ரத்தம் வழிய விழுந்து கிடக்கும் தேவதையொன்றின் முகத்தைப் பார்த்ததில்லை.

OOO

சிறிது காதலுக்காக என் தனிமையை விற்கமாட்டேன். நிறைய காதல் என்றால் விற்றுவிடுவேன்.
ஆனால், நிறைய காதல் என்பதும் ஒருவகைத் தனிமைதான்.
ஜெத்சமனித் தோட்ட ஆலிவ் மரங்களைக் கேளுங்கள்!

OOO

நிலம் காய்ந்து சோகமாகக் கிடந்தது. கவிஞன் ஒரு அசிங்கமான மனைவியைப் பெற அதை ஏழாண்டுகள் உழுதான், ஒரு அழகான மனைவியை வெல்ல இன்னொரு ஏழாண்டுகள்.

அசிங்கமான மனைவி, அவன் அன்புக்குத் தகுதியற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தாள், அவன் ஓய்வெடுக்க நேரம் கிடைக்குமுன்னே அழகான மனைவி அவன் கைகளிலே இறந்துபோனாள்.

எனவே கவிஞன் தொடர்ந்து உழுதான். அவன் இன்னும் நம்பினான், கனவுகாண்பர்களிடம் மட்டுமே காணப்படும் பொறுமையோடு, மூன்றாவது மனைவி கிடைப்பாளென நம்பினான்.

லேயாவைப் போல குழந்தைகள் பெறுபவளாய் ரேச்சலைப் போல அழகானவளாய், அவன் சோர்வுக்கெல்லாம் பலனாக இருப்பவளாய், அவள் எப்போதும் வராவிட்டாலும், பலமுறை கேலி செய்யப்பட்ட அந்த விடாப்பிடியான கனவு, பலமுறை காற்றில் தீப்பற்றி எரிந்தாலும், விதிக்கு முன் பலத்தோடு நின்றது.

ஒரு கனவால் உழப்பட்ட நிலம் பசுமையானது, பழங்கள் பல பழுத்து நிறைந்தன, பூக்களின் இனிமை நிறைந்தது.
மனிதர்கள் தம் நிலத்தின் எதார்த்தத்தில் மகிழ்ச்சிகொண்டனர், எல்லாம் ஒரு கவிஞன் வீணாய் கனவுகண்டதால்.

OOO

இலையுதிர்காலத் துயரம்

ஓர் நபர் என்பது ஒருவரின் சுயமல்ல, ஒருவரின் காதல்.

OOO

கடைசியில் என் வாழ்வெனும் இந்தத் தோல்விக்கு எனை மன்னிக்க ஒரே காரணம் இந்த பூமியின் ஒவ்வொரு சாலையிலும் எதையோ நினைத்தபடி, காரணமின்றி நான் நடந்தேன் என்பதே.

OOO

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. “கடைசியில் என் வாழ்வெனும் இந்தத் தோல்விக்கு எனை மன்னிக்க ஒரே காரணம் இந்த பூமியின் ஒவ்வொரு சாலையிலும் எதையோ நினைத்தபடி, காரணமின்றி நான் நடந்தேன் என்பதே”

    அற்புதமான கவிதைகள். அனைத்தும் ரசிக்கும் வரிகளால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மூல எழுத்தாளருக்கும், மொழிபெயர்ப்பாளர் வயலட்டுக்கும் வாழ்த்துகள்💐

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss