க.நா.சு.வின் புத்தகக் கடை

The Bookshop – Advt. – Annamalainagar Miscellany, Vol. 13, no. 1, November, 1942

க.நா.சு.வைப் பற்றிப் பேசுபவர்கள் அவர் ஓர் இலக்கிய இயக்கம் என்று சொல்வதுண்டு. எழுதுவதற்கு அப்பால் இன்னும் பலவகையிலும் இலக்கியத்துக்காக உழைத்த ஒருவரைத்தான் அவ்வாறு நினைவுகூர முடியும். அதற்குத் தகுதியான வகையில் சாகசங்களைச் செய்துபார்த்தவர்தான் க. நா. சுப்ரமண்யம். எழுத்திலும் பேச்சிலும் பதிப்பிலும் அவர் இயங்கிய விதம் ஓரளவுக்கு அறியப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் சொந்தமாக ஒரு புத்தகக் கடையையும் நடத்தியிருக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி. க.நா.சு. அன்றைய பட்டணத்தில் நடத்திய கடை அல்ல; சிதம்பரத்தில் தான் படித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே புத்தகக் கடை நடத்தியிருக்கிறார்.

அந்தப் புத்தகக் கடையை எப்படி நடத்தினார், என்னென்ன புத்தகங்கள் இருந்தன, எவ்வளவு காலம் நடத்தினார் என்ற விவரமெல்லாம் தெரியவில்லை. ஞானக்கூத்தன் ‘பொய்த்தேவு’ என்ற கவிதையில் ‘புத்தகாலயத்தைப் போற்றிய க.நா.சு’ என்கிறார். தனது புத்தகாலயத்தை க.நா.சு. எப்படிப் போற்றி நடத்தினார்?

இதற்கு விடைகாணும் தேடலில் க.நா.சு.வின் புத்தகக் கடை பற்றிய விளம்பரம் ஒன்று கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடான ‘Annamalainagar Miscellany’ என்ற பத்திரிகையின் நவம்பர் 1942 இதழில் இந்த விளம்பரம் வந்துள்ளது. க.நா.சு. நடத்திய கடையின் பெயர் ‘THE BOOKSHOP’ என்று இந்த விளம்பரம் மூலமாகத்தான் தெரிகிறது. மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு பல்கலைக்கழக இதழில் வெளியிட்ட விளம்பரம் போலத் தெரிகிறது. முழு முகவரியைத் தராமல் ‘சிதம்பரம்’ என்று ஊர்ப்பெயர் மட்டும் உள்ளது. கடை பல்கலைக்கழகத்தின் அருகிலேயே இருந்ததால் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.

‘உங்களுக்கு வேண்டிய புத்தகம் எதுவாக இருந்தாலும், இங்கே கிடைக்கும்’ என்றும் ‘தமிழில் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க க. நா. சுப்ரமண்யம் உங்களுக்கு உதவி செய்வார்’ என்றும் விளம்பர வாசகங்கள் உள்ளன.

இந்த விளம்பரம் க.நா.சு.வின் புத்தகக் கடை பற்றி மேலும் அறியும் ஆவலைத் தூண்டியது. க.நா.சுவுடன் பழகியவர்கள், அவரது புத்தகக் கடையைப் பார்த்தவர்கள், தங்கள் நினைவுகளை எழுதியிருக்கிறார்களா, அப்படி ஏதாவது கிடைக்குமா என்ற யோசனைகள் எழுந்தன. சில மாதங்கள் கழித்து, இந்திரா பார்த்தசாரதியின் அற்புதமான நினைவுக்குறிப்புகள் கிடைத்தன. இ.பா. இரண்டு கட்டுரைகளில் க.நா.சு.வின் புத்தகக் கடை பற்றி எழுதியிருக்கிறார். இந்த இரு கட்டுரைகளுமே ஒரே மாதத்தில் இருவேறு பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. ‘நகுலன் என் அறை நண்பர்’ என்ற கட்டுரை ‘உயிர்மை’ மார்ச் 2025 இதழில் வந்தது. நகுலன் நூற்றாண்டையொட்டி எழுதப்பட்ட கட்டுரை இது. ‘க.நா.சு. என்கிற ஓர் இலக்கிய சகாப்தம்’ என்ற இன்னொரு கட்டுரை ‘கணையாழி’ மார்ச் 2025 இதழில் மறுபிரசுரமானது. இக்கட்டுரைகள் இ.பா.வின் நூல்களில் தொகுக்கப்பட்டவையா என்று தெரியவில்லை. எப்படியோ இவை ஒரே மாதத்தில் வெளியானதால் ஒருசேர வாசிக்க முடிந்தது.

இ.பா.வின் இவ்விரு கட்டுரைகளும் க.நா.சு.வின் புத்தகக் கடையைப்பற்றி அரிய செய்திகளைத் தருகின்றன.

இ.பா.வுக்கும் க.நா.சு.வுக்கும் முதல் சந்திப்பே புத்தகக் கடையில்தான் நிகழ்ந்துள்ளது. இ.பா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேரும்போது, நகுலன் அவருக்கு விடுதியில் அறைத்தோழராக அறிமுகமாகிறார். நகுலன் க.நா.சு.வின் கடைக்கு அன்றாடம் விஜயம் செய்பவர். நாள்தோறும் மாலை வேளையில் கடைக்குச் சென்று க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டவர். அவர்தான் இ.பா.வை க.நா.சு.வின் கடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகிறார்.

இ.பா. தனது ஊர், படிப்பு முதலிய விவரங்களைச் சொன்னதும் “நான் கடையைப் பார்க்கலாமா?” எனத் தயக்கத்தோடு கேட்கிறார்.

“பாருங்களேன். நீங்க வாங்கணும்னு கட்டாயப்படுத்தலே” என்கிறார் க.நா.சு.

இடையில், நகுலன் ‘John O’London’s Weekly’ வந்துவிட்டதா எனக் கேட்க, க.நா.சு. இன்னும் வரவில்லை என்கிறார்.

“அது என்ன பத்திரிகை” எனக் கேட்கிறார் இ.பா.

“இலக்கிய விசாரம். நானும் துரைசாமியும்தான் படிக்கிறோம். பத்து இதழ் வரவழைக்கிறேன். யாரும் வாங்கறதா தெரியலே.” என்கிறார் க.நா.சு.

இ.பா. புத்தகக் கடையைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘Eyeless in Gaza’ புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, “நாளைக்குப் பணம் தரலாமா” என்று கேட்கிறார்.

க.நா.சு.வின் பதில், “எப்போ வரேளோ அப்பொ கொடுங்கோ. நாளைக்குன்னு அவசியமில்லே.”

க.நா.சு., நகுலன், இ.பா. மூவரும் புத்தகங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்க, கையில் டென்னிஸ் ராக்கெட்டுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அங்கே பிரவேசிக்கிறார். அந்த மாணவர், டி. எஸ். எலியட் எழுதிய ‘The Love Song of J. Alfred Prufrock’-ஐ எடுத்து, இது நன்றாக இருக்குமா என்று விசாரிக்கிறார்.

க.நா.சு., “அது நீங்க நினக்கிற மாதிரி காதல் பாட்டு இல்லே, உங்களுக்குப் புரியாது இந்தப் புத்தகம்” என்று சொல்லிவிடுகிறார். கேட்டவரை எடைபோட்டுப் பார்க்கும் துடுக்கான தொனியும் இந்த பதிலுக்குள் ஒளிந்திருப்பதுபோலத் தெரிகிறது.

இப்படித்தான் புத்தகங்களை வியாபாரம் செய்திருக்கிறார் க.நா.சு.

க.நா.சு.வின் கடைக்கு ‘John O’London’s Weekly’ முதலிய வெளிநாட்டு இலக்கியப் பத்திரிகைகள் வந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள் கடையை நிறைத்துள்ளன. டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யீட்ஸ், ப்ரௌஸ்ட், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆடன் ஆகியோருடைய கவிதைத் தொகுப்புகள், ஹெமிங்வே, ஸ்டெயின்பெக், வர்ஜினியா வுல்ஃப், ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரின் நாவல்கள். ஐரோப்பிய, வங்க நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் க.நா.சு.வின் கடையில் இருந்துள்ளன. தமிழில் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார். குறிப்பாக, அவருக்கு மிகப்பிடித்த புதுமைப்பித்தன், ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற எழுத்தாளர்களின் நூல்கள்.

இவை அனைத்தையும் பார்த்த இந்திரா பார்த்தசாரதி, ‘சிதம்பரத்தில் இவற்றின் வாசகர்கள் யாராக இருக்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை’ என எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகக் கடையை க.நா.சு. எத்தனை காலம் சமாளித்து நடத்தியிருப்பார்? இந்திரா பார்த்தசாரதி 1950ஆம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக சேர்ந்தவுடன், க.நா.சு.வைச் சந்திக்கிறார். படிப்பை முடித்ததும் 1952ஆம் ஆண்டில் திருச்சி சென்று ஆசிரியராகப் பணியில் சேர்ந்துவிடுகிறார். இரண்டு ஆண்டுகளில் நஷ்டமடைந்து க.நா.சு. புத்தகக் கடையை மூடிவிடும்படி ஆகிவிட்டதாகப் பின்னர் தெரியவந்தது என இ.பா. குறிப்பிட்டுள்ளார். Annamalainagar Miscellany இதழில் க.நா.சு.வின் ‘THE BOOKSHOP’ விளம்பரம் 1942ஆம் ஆண்டு இறுதியில் பிரசுரமாகியிருக்கிறது. அப்படியானால் ஏறத்தாழ பத்தாண்டுகள் க.நா.சு. புத்தகக் கடையை நடத்திவந்தாரா? இக்கேள்விக்கான பதில் துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால், ஓர் அனுமானத்தைச் சொல்லலாம்.

க.நா.சு.

க.நா.சு. தனது படைப்புகள் பலவற்றை தன்வரலாற்றுத் தன்மையுடன் எழுதியவர் என்பதால், அவரது புனைவுகளில் உள்ள குறிப்பையும் இந்தப் புத்தகக் கடையுடன் தொடர்புறுத்திப் பார்க்கலாம். 1946ஆம் ஆண்டில் வெளியான ‘பொய்த்தேவு’ நாவலில் க.நா.சு.வின் சாயலுடன் படைக்கப்பட்ட பாத்திரம் சாமா என்கிற சுவாமிநாதன்.  பிழைக்கத் தெரியாத லட்சியவாதியான சாமா, பத்திரிகைகளுக்கு எழுதுவது போக, ‘சொல்ப அளவிலே புஸ்தக வியாபாரமும்’ நடத்துகிறான். பத்திரிகைகளுக்கு ஏஜென்சி எடுத்து விற்கிறான். வீட்டோடு வாசகசாலையும் நடத்துகிறான்.

இந்தக் குறிப்பைக் கொண்டு பார்க்கும்போது, க.நா.சு. தனது புத்தகக் கடையை முதலில் வீட்டிலேயே நடத்திப் பார்த்துவிட்டு, பின்னர் தனியே ஓர் இடத்தில் கடை அமைத்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஏதாவதொரு இடத்தில் புத்தக வியாபாராம் பத்து வருடங்களாகத் தொடர்ந்திருக்கிறது.

‘பொய்த்தேவு’ நாவலில் வரும் ‘வாசகசாலையில்’ என்ற அத்தியாயம் சாமா என்கிற க.நா.சு. நடத்திய புத்தகக் கடையின் வாடிக்கை எப்படி என்ற சித்திரத்தையும் கொடுக்கிறது.

சாமாவின் கடைக்கு வந்துபோகிறவர்களில் நாவலின் நாயகனான சோமசுந்தர முதலியாரும் ஒருவர். அவர் பி.ஏ. படித்துவிட்டு பிழைக்கத் தெரியாமல் இருக்கும் சாமாவின்மீது அனுதாபம் கொண்டு நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார். எழுத்தாளரும் புத்தக வியாபாரியுமான சாமா அந்த வாய்ப்பை சுலபமாக மறுத்துவிடுகிறான். முதலியார் போனதும், சாமாவின் ஆப்த சிநேகிதன் சிவராமன் வருகிறார். அவன் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டே சாமாவின் தத்துவ விசாரத்தைக் கேட்கிறான்.

ஒருநாள் முதலியாருடன் பேசிக்கொண்டிருக்கும் சாமா தற்செயலாக நெப்போலியன் பற்றிக் கூறுகிறான். உடனே முதலியார் நெப்போலியன்தான் தன்னுடைய ஹீரோ என்று சொல்லி, நெப்போலியனைப் பற்றிய புத்தகம் ஏதும் இருந்தால் தனக்காக எடுத்துவைக்கும்படி சொல்லிவிட்டுச் செல்கிறார்.

‘தீபம்’ இதழ் வெளியிட்ட பேட்டியில் ‘பொய்த்தேவு’ நாவலை தான் எப்படி எழுதினேன் என்றும் க.நா.சு. கூறுகிறார். அதில் நாவலின் மையப் பாத்திரமான சோமு முதலியின் அசல் சொரூபம் யார் எனக் காட்டுகிறார்.

‘சாதாரண நிலையிலிருந்து சில்லறை வியாபாரங்கள் செய்து படிப்படியே முன்னேறிய ஒரு மனிதரை எனக்குத் தெரியும். … ஒருநாள் என்னிடம் வந்து நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் கேட்டு வாங்கிப் போனார். அவருடைய வாழ்க்கையில் நெப்போலியன் தன்னுடைய வாழ்வில் பெற்றுவிட்ட வசதியைப் பெற்றுவிட்டது போன்ற ஒரு பிரமை. அவருடைய அந்தப் போக்கு என் மனத்தில் ஒரு எண்ணப் பாங்கை விளைவித்தது. அவரையே கதாநாயகனாக வைத்து இதை எழுதினேன். அதை ஒரு நபரின் வரலாற்று நூல் என்பது போல்தான் எழுதியுள்ளேன்.’

‘ஆடரங்கு’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘சரோஜாவின் சவுரி’ என்ற கதையிலும் சிதம்பரத்தில் புத்தகக் கடை நடத்தியது பற்றி உரையாடல் இடம்பெறுகிறது.

“எக்ஸ்யூஸ் மீ! நீங்கள் சிதம்பரத்தில் படித்தீர்களோ?” என்று அந்தப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்துக் கேட்டேன்.

இருவரில் பெரியவள் பதில் சொன்னாள். “ஆமாம். இவள் மூன்றாவது வருஷம் அண்ணாமலைச் சர்வகலாசாலையில் பி.ஏ.படித்தாள். நான் பட்டணத்தில் எம்.ஏ. படித்துவிட்டுச் சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ‘என் பெயர் சரஸ்வதி. இவள் பெயர் கௌரி” என்று தொடர்ந்து நான் கேட்டிருக்கக் கூடிய கேள்விகளுக்கும் சேர்த்துப் பதில் அளித்தாள்.

“அப்படியா? தங்களை அறிந்துகொண்டதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷமே!” என்று நான் உபசாரமாகச் சொன்னேன்.

“சிதம்பரத்தில் உங்களுக்குப் புஸ்தகக் கடை இருக்கிறது, இல்லையா?” என்றாள் சிதம்பரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன் படித்த மாணவி கெளரி.

“ஆமாம், அதுதான் உங்களை எங்கோ பார்த்த மாதிரியிருக்கிறதே என்று கேட்டேன்” என்றேன் நான்.

“புஸ்தகக் கடையா?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“ஆமாம், ஸார் அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் கதைகள்கூட எழுதுவார்” என்றாள் கௌரி.

அடாடா! தேவலையே; நம்ம புகழ் இவ்வளவு தூரம் எட்டியிருக்கிறதே! எனக்குத் திருப்தியாகத்தான் இருந்தது.

‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலிலும் க.நா.சு. நடத்திய புத்தகக் கடை பற்றிய சிறிய குறிப்பு இடம்பெறுகிறது. அந்நூலில் உள்ள தி. ஜானகிராமன் பற்றிய கட்டுரையில் அவர் தனது புத்தகக் கடைக்கு வந்துப் பேசிக்கொண்டிருப்பதை நினைவுகூர்கிறார்.

‘சிதம்பரத்தில் எனக்குப் புஸ்தகக் கடை இருந்த காலத்தில் அநேகமாக மாதம் ஒரு தடவை (சில மாதங்களில் இரண்டு தடவைகள் கூட) வருவார். ஒரு நாள் இரண்டு நாள் தங்கி இலக்கியம் பற்றி விவாதம் செய்வது, பேசுவது, படித்த புஸ்தகங்களைப் பற்றி அலசுவது, புதுசாக எழுதத் தொடங்கியுள்ளவர்களின் எழுத்துக்களைக் கணிப்பது என்பது ஒரு பழக்கமாக ஆறேழு ஆண்டுகள் நடந்து வந்தன.’

இந்தக் குறிப்பும் க.நா.சு. நடத்திய புத்தகக் கடையில் ‘விற்பனை’ நடந்த விதத்தை காட்டுகிறது.

க.நா.சு.வின் இந்தச் சிதம்பரத்துப் புத்தகக் கடை பற்றி இன்னும் பலவகையிலும் துருவிப் பார்க்கலாம். இ.பா. கட்டுரைகளில் பதிவாகியுள்ள அரிய செய்திகள் அந்தத் தேடலுக்கு துணைபுரியவை. ஆனால், இ.பா.வை க.நா.சு.வின் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்ற நகுலனின் கட்டுரைகளில் புத்தகக் கடையைப் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. பெ. அய்யனாருக்கு அளித்த நேர்காணலில் க.நா.சு. சிதம்பரத்தில் புத்தகக் கடை நடத்திக்கொண்டிருந்தார் என்று சொல்கிறார். பணம் தேவைப்பட்டால் தன்னிடம் கேட்குமாறு சொல்லுவார் என்றும் நகுலன் கூறுகிறார். இவ்வளவுதான் நகுலன் தரும் செய்திகள். க.நா.சு.வின் கடைக்கு அடிக்கடி சென்று அவருடன் அளவளாவிக்கொண்டிருந்த நகுலன் அந்தக் கடையைப்பற்றி ஒரு கட்டுரையாவது எழுதியிருக்கமாட்டாரா? அவரது தொகுக்கப்படாத கட்டுரைகளில் புதிய செய்திகள் கிடைக்கலாம்.

இருக்கும் தகவல்களைக்கொண்டு, க.நா.சு.வின் புத்தகக் கடையைப்பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். புதுமைப்பித்தனை எப்போதும் போற்றிவந்த க.நா.சு., அவரது புத்தகங்களை தமிழ் வாசகர்களிடையில் பரப்புவதில் வியாபாரியாகவும் களமிறங்கியிருக்கிறார். மற்ற ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களின் நூல்களையும் விற்பனை செய்துள்ளார். அவரது சமகாலத்தவர்களான கு.ப.ரா.வும் சி. சு. செல்லப்பாவும்கூட புத்தக வியாபாரத்தையும் செய்துபார்த்துள்ளனர். கு.ப.ரா. ‘மறுமலர்ச்சி புத்தகக் நிலையம்’ நடத்தி கையைச் சுட்டுக்கொண்டார். சி. சு. செல்லப்பா ‘எழுத்து பிரசுர’த்தின் வெளியீடுகளை ஊர்ஊராகச் சென்று விற்றார்.

‘எந்த பாஷையிலுமே நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வாசகர்களுக்கு எட்ட வைப்பது என்பது உண்மையில் சிரமமான காரியமே’ என்று எழுதியிருக்கும் க.நா.சு., தானே புத்தக வியாபாரியாக இறங்கி அனுபவப் பாடம் கற்றிருக்கிறார். விமர்சனம், மொழிபெயர்ப்பு, பட்டியல்கள் என க.நா.சு. ஈடுபாடு கொண்டிருந்த தொடர் இலக்கியச் செயல்பாடுகளில் இந்தப் புத்தகக் கடையும் ஒரு முக்கியமான கண்ணி எனச் சொல்லவேண்டும்.

*

க.நா.சு.வின் புத்தகக் கடையுடன் அவர் பிற்காலத்தில் மேற்கொண்ட மற்றொரு முயற்சியைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். எழுபதுகளில் புது தில்லியில் வசித்த க.நா.சு. ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Authors Guild of India) நடத்திய Indian Author என்ற காலாண்டிதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். அப்போதுதான் ‘Books of the Month Club’ என்ற புத்தக விற்பனைத் திட்டம் ஆதர்ஸ் கில்ட் சார்பாக அறிவிக்கப்பட்டது. ஜூலை-செப்டம்பர் 1978 Indian Author இதழின் தலையங்கம் இந்தப் புத்தக விற்பனை திட்டம் எப்படி செயல்படும் என எடுத்துரைக்கிறது. ஆங்கிலம் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளில் வெளியாகும் முக்கியமான நூல்களையும் வாசகர்களுக்குப் பெற்றுத்தருவது இத்திட்டத்தின் நோக்கம். லாபநோக்கற்ற இந்தத் திட்டம் பதிப்பகங்களுக்கும் உதவக்கூடியது. க.நா.சு.வின் புத்தகக் கடையுடன் இந்த ஆதர்ஸ் கில்ட் திட்டமும் கவனத்திற்குரியது.

***

உதவிய நூல்கள் / இதழ்கள்:
‘நகுலன் என் அறை நண்பர்’, இந்திரா பார்த்தசாரதி, உயிர்மை, மார்ச் 2025
‘க.நா.சு. என்கிற ஓர் இலக்கிய சகாப்தம்’, இந்திரா பார்த்தசாரதி, கணையாழி, மார்ச் 2025
தீபம் இதழ் தொகுப்பு (பாகம் 1), வே. சபாநாயகம் (தொ-ர்), கலைஞன் பதிப்பகம், 2004
பொய்த்தேவு, க. நா. சுப்ரமண்யம், கலைமகள் காரியாலயம், 1956
ஆடரங்கு, க. நா. சுப்ரமண்யம், கலைமகள் காரியாலயம், மே 1955 
இலக்கியச் சாதனையாளர்கள், மணிவாசகர் பதிப்பகம், டிச. 1985
நகுலன் இலக்கியத் தடம், காவ்யா, சண்முகசுந்தரம் (தொ-ர்), காவ்யா வெளியீடு, டிச. 2006
ஞானக்கூத்தன் கவிதைகள், திவாகர் ரங்கநாதன் (தொ-ர்), காலச்சுவடு, டிச. 2018
Annamalainagar Miscellany, November 1942
Indian Author, July-Sep 1978

ஸ்ரீநிவாச கோபாலன்

ஶ்ரீநிவாச கோபாலன் பதிப்பாளர். ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. வேர்பற்று நாவலில் புத்தக கடை, நகுலன் க நா சு ஆகியோர் பற்றிய சித்திரம் உள்ளது.

  2. தற்செயலான ஆச்சர்யம். நூலகத்திலிருந்து இவ்வாரம்தான் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்*க.நா.சு) நூலை எடுத்து வந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். சில கட்டுரைகளை முன்னமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தாலும் ஒருசேர வாசிக்கும்போதே அவரின் ‘இலக்கிய விசார விருப்பம்’ நன்கு புலப்பட்டது.
    அவரின் இலக்கிய விசார விருப்பத்தின் நடைமுறைச் சமூக வடிவமாக புத்தகக் கடையை அவர் துவங்கி இருக்கலாம் என்றே படுகிறது.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களைக் கூட அகழ்வாராய்ச்சி செய்வதைப் போலத்தான் நாம் ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. என்றாலும், அதில் குறைபட்டுக் கொள்ள ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது.

    – சக்திவேல், கோபிசெட்டிபாளையம்

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss