அன்பென்ற ஒன்று : பார்கவி

நாம் எதிர் நாயகர்களின் உலகில் வாழ்கிறோம். நவீன உலகில் வாழ்பவருக்கு மீட்பர்கள் மீதான நம்பிக்கை இயல்பாக இற்றுப் போய்விட்டது. காவியங்கள் போலவே காவிய நாயகர்கள் மீதான விமர்சனப்பார்வையும் கூர்மையாகிவிட்டன. காவிய உலகமும் ஒரு விதத்தில் எதிர் நிலை பாத்திரங்களுக்கானவை என்றாலும் இங்கு எதிர் நிலை கதாபாத்திரங்கள் ஆதர்சம் இல்லை என்பதே முக்கிய வேறுபாடு. கம்பன் தனது காவிய முயற்சியில் ராவணனை ஆசையில் அறிவிழந்த பித்தனாகவே சித்தரிக்கிறார். சீதையை தீக்குள் இறங்கச் சொன்ன அன்றே நாம் ராமனை சற்று வெறுத்தோம். ராமன் வேறு இப்போது வலது சாரி அரசியலின் பிரதிநிதி ஆகிவிட்டான். இல்லாவிட்டாலும் அவன் சிட்டன், அறமுறுக்கேறியவன். ராவணன் கட்டறவன். அந்த காலத்து கிட்டாரான வீணையை வாசிப்பவன். கொஞ்சம் சுருட்டை முடியுடன், முன்னிரவு தூங்காத வெம்மை சிவக்கும் கண்ணில், காதல் தோல்வியின் மயக்கமும் வழிய இசைக்கும் கவிஞன், கலைஞன். நாம் ராமனைவிட ராவணனை அதிகமும் விரும்பப் பணிக்கப்பட்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் அவனுள் நம்மையே காண்கிறோம்.

தனி மனித ஒழுக்கம் என்பது அகவயமானது, அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவது என்பது இன்றைக்கு ஏற்கபட்ட கருதுகோள் . நவீன இடர்களுக்கான முறிமருந்தை நவீன கலை இலக்கியத்தில் இருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்பதும் சரியான பார்வையே. அவற்றை மீறி, செவ்வியல் ஆக்கம், காலம் கடந்து நின்ற காவியம் ஆகிய பதாகைகளைத் தாங்கி நிற்கும் கம்பராமயாணத்தைப் போன்ற ஒரு படைப்பில் இருந்து ஒரு நவீன வாசகர் எதைப் பெற முடியும் என்பது முக்கியமான கேள்வி. அறம்-பிறழ்வு பற்றிய பிரக்ஞை ஒன்பது நூற்றாண்டுகளில் மாறி இருந்தால் நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பல நூற்றாண்டுகளாக காதலின் எல்லைகளையும் மீறலையும் அதன் ஆகிருதி கெடாமல் நீட்டிக் கொணர கம்பனால் முடிந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

நவீன காலத்து வாழ்க்கை, நுகர்வு கலாச்சாரத்தின் மிகைகளில் ஊறி ஒரு விதமான பெரும் சலிப்பையும் மன அழுத்தத்தையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இலக்கியத்தில், குறிப்பாக நவீன கவிதைகளில் இந்த சலிப்பையும் சோர்வையும் தொடர்ந்து கவனிக்கலாம். ‘சூட்டினால் தணியும் சூடு’ என்று அரிஸ்டாட்டில் சொல்வது போல, வாழ்வின் நோய்க்கு வாழ்வே மருந்து என்பதை காவியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மறுபக்கத்தில், காவியத்தின் காலாதீதங்களை அடையாளங்காட்ட நமக்கு நவீன இலக்கியம் தேவைப்படுகிறது. இன்று காவியத்தை வாசிக்கும் ஒருவர் வழமையான நயத்தலையும் வியத்தலையும் கடந்து எதைப் பேச வேண்டும்? எப்படி மதிப்பேற்றம் செய்து எதை பெற்றுக் கொள்ளலாம்?

கவிதைகளை, அதிலும் கம்பனை நயக்காமல் பேசுவது கடினம் தான். குறிப்பாக, செய்யுள் மொழியில், கவிதைத் தருணங்கள் நிறைந்திருக்கும் கம்பனை நவீன கவிதையாகவே வாசிக்கும் போக்கு எந்த விளிம்பு வரைச் செல்லலாம் என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் சொல்கிறேன், கவிதை மொழியில் அமைந்திருந்தாலும், கவிதை வாசிப்பை மீறிய ஒரு பார்வையை காவியம் எதிர்பார்க்கிறது. நவீன கவிதைகளின் வழி காவியத்தை வாசிக்கும் அணுகுமுறை எல்லைக்குட்பட்டது. இதில் செய்யுள் வடிவம் என்பது ஒரு கூறுமுறை. மொழிச் செறிவிற்காக மட்டும் வாசிப்பதும் காவியத்தின் மையத்தை சிதறடிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. சொல் நேர்த்தி குறித்த விளக்கங்கள் எளிதில் ஆராய்ச்சியாகி ரசனையில் இருந்து தடம் புரள்கிறது. கவிதையின் அலகு சொல் என்றால் காவியத்தின் அலகு நிகழ்வுகள். கவிமொழியில் அமைந்திருப்பதால் இயல்பாக சில சொல் இணைவுகள் படிமங்களாக கனிந்து வருவதை கவனிக்க முடியும்.

தனி மனிதனின் தனித்துயர் இதில் இருந்தாலும், மேற்சொன்ன நவீன கவிதை மரபில் இருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. இதை காவியத்திற்குள் இருக்கும் மதக்குறிப்புகளை வைத்து அதை பக்தி இலக்கியமாகக் கருதி பாராயணம் செய்யும் போக்கிற்கும் பொருத்திக் கொள்ளலாம். நெகிழ்வுகளுக்குள் மட்டும் உறைந்து அதன் ஓட்டுமொத்தத்தை தவிர்க்கிறோம் என்றால் வாசிப்பு குறுகி காவியத்தை கைவிடுகிறோம் என்பதே பொருள். சங்க மரபிற்குரிய பொதுப்படையான அனாமதேய நிகழ்வுகளை சொல்லும் பாணியில் இருந்து நகர்ந்து பெயரிடப்பட்டதும் தனி ஆளுமையும் கொண்ட பாத்திர வார்ப்புகளில் காவியம் தன்னை இன்னும் இன்னுமென விரித்துக் கொள்கிறது.

உலகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் மீது நவீன இலக்கியத்திற்கு இருக்கும் வாஞ்சையும் கரிசனமும் காவியத்திற்கு இல்லை. நுண்மைகளை தக்க வைத்ததுக் கொண்டே சற்று மேலெழுந்து அனைத்தையும் காணும் குரூரமான கண்கள் காவியத்தின் போக்கில் காணலாம். அடித்தளங்களைக் கட்டமைக்கும் தருணங்களை நீக்கி அதை அனைவருக்குமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன் மானுடப் பொதுமை அம்சம் என்பது பாத்திரங்கள் அல்ல, அவற்றின் கட்டுமானங்கள், அவை சென்று தொடும் மையத் தரிசனம். அந்த மையத்திற்கு மிக அருகில் இருப்பவன் காவிய நாயகனாகவும் இறை அம்சமாகவும் உயர்த்தப் படுகிறான் என்று கூட சொல்லிப் பார்க்கலாம்.

நவீன உரைநடையின் உச்ச தருணங்களை காவியத்தின் நாடகீய உச்சங்களோடு வைத்துப் பேசுவது அவசியமானது என்பதில் எனக்கும் ஒப்புதல் உண்டு. நவீன – காவிய உலகங்களுக்கு இடையில் உள்ள உணர்வு நிலைகளை ஒப்பிட்டுப் பரிசீலிக்க வேண்டிய தேவையை அதன் போதாமைகளோடு நிறுத்திப் பார்த்து சமன் செய்வதும் முக்கியம். முற்றிலும் வேறான காலகட்டத்தில் இருந்து, வேறுபட்ட நோக்கத்தோடு எழுந்த இலக்கிய வடிவத்தை இன்றைய வாசகர் கையில் எடுக்கிறார் என்றால், அதன் எய்துதல்களையும் இடர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே காவியப் பரப்பின் எல்லைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைய முடியும் என்ற பார்வை வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. வ வே சு ஐயர், அ ச ஞானசம்பந்தம், அ அ மணவாளன், வ சு ப மாணிக்கனார், க நா சு, ஜெயமோகன் என்று இதற்கொரு நீண்ட மரபும் இருக்கிறது. அவ்வகையில் இது ஒரு நினைவூட்டல்.

OOO

உலகத்தின் தலைசிறந்த காவியங்கள் எல்லாமே காதல் கதைகள். அவ்வரிசையில் கம்பராமாயணமும் காதல் கதை தான். கம்பனில் வரும் செவ்வியல் ரக காதல்களுக்கு இணையாகவே, அதில் இருந்து பிறழ்ந்து ஏறத்தாழ-செவ்வியல் ரக காதல்களும், மீறலின் துடுக்கும் ஆகர்ஷணமும் கொண்ட விழைவுகளும் மனதை ஈர்ப்பவை. ஆனாலும், அவை கம்பனின் பாவிகம் இல்லை என்பேன். காவியம் முழுதும் பரவிக் கிடக்கும் மையக்கருத்தை பாவிகம் என்று கவிதையியல் கோட்பாடு சொல்கிறது. வால்மீகிக்கு அது கற்பாக, மரியாதையாக இருக்கிறது. கம்பனுடைய பாவிகம் என்றால், அது அன்பும் துயரமும் என்றே எண்ணுகிறேன் அன்பின் நிமித்தம் எதிர்கொள்ளும் துயரமும், துயரத்தின் பாதையில் எதிர்ப்படும் அன்பும் மீள மீளத் தொடரும் கருப்பொருள்.

அறிவும் அறமும் மதம் காட்டும் கொள்கைகளும் இணைந்து தொழில்படுவதால் நாம் காவியத்தை சற்று மரியாதையுடன் அல்லது சுணக்கத்துடன் தள்ளி வைக்க வேண்டியதில்லை. கம்பன் அவற்றை கருணையுடன் கையாளுகிறார். அன்பையும் அறநெறியையும் (morals) ஒரே வாக்கியத்தில் சேர்ப்பது கூட முரணாகத் தோன்றலாம். அறம் நம்மை பக்கச்சார்புகளை கைவிடச் சொல்வது. அன்பில், காதலில் சார்பே பொன்விதி. காதல் ஏன் வருகிறது என்ற கேள்வியை உளவியலாளர்கள் பலவாறு ஆராய்ந்து சொல்லிவிட்டனர். பிராய்ட் முன்வைக்கும் கொள்கையான காம உந்துதலால் எழும் காதலை தத்துவ விசாரணைக்கு உட்படுத்தி டேவிட் வெல்லமன் (David Velleman) மறுக்கிறார். அதன் இலக்கை வைத்து அன்பின் தன்மையை புரிந்து கொள்ளுதல் தவறு என்கிறார். காதல் என்பது ஒரு வகையான மனப்பான்மை, அதற்கென நோக்கம் உள்ளது என்றாலும் அது தன்னளவில் இலக்கற்றது. கோழிக்குஞ்சு ஏன் சாலையின் அந்தப்பக்கம் சென்றது என்றால், அதற்கு அந்தப்பக்கம் செல்ல வேண்டும் என்பதால் மட்டுமே. ‘இதற்குத்தானா பாபு?’என்ற கேள்வியை நாம் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்பது இதன் உட்பொருள். காதலென்பது இன்னொருவரின் ஆளுமையின் மதிப்பீடுகளின் மீது தோன்றும் கூர்மையான விழிப்புணர்வு. ஒருவரின் ஆளுமை அவருடைய மதிப்பீடுகளை பிரதிபலிக்காவிட்டால் நாம் அவரை அன்பு செய்வதும் கடினம். நம் மனச்சாய்வுகளை, சுய ஆளுமையின் மீதான பிரக்ஞையை, நாம் பெற்றுக்கொள்ள விரும்பும் விழுமியங்கள் என நம் வாழ்வின் ஒட்டு மொத்த அர்த்தமும் நாம் தேர்ந்தெடுக்கும் அந்த ‘பிறனி’ல் இருக்கிறது. இது பால் நிலைக் காதலில் மட்டுமல்ல நம் நட்புறவுகளிலும் தொடர்வதை கவனிக்கலாம். ஆகவே, அன்பு என்பது அறநெறியுடன் கூடிய உணர்வு மட்டுமல்ல, அறநெறிக் கல்வியும் கூட என்று வெல்லமன் கூறுகிறார். பிரிந்தவர் கூடினால் பேசலும் வேண்டுமோ’ (517) என்று கேட்பவன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு கவி மட்டும் அல்ல.

அவ்வகையில், கம்பனின் ராம காதை மிகைகளால் ஆட்டுவிக்கப்படும் நம் உலகிற்கு மிக அருகில் பயணிக்கிறது. மருத நிலத்தின் பச்சைக் கொழிப்பில் இருந்து ராமன் எழுந்தான் என்றால், கடல் நடுவில் பொன்மாளிகையில் ராவணன் திகழ்கிறான். அத்தனையும் கொடுக்கப்பட்ட வாழ்வமைந்த இருவரில் ஒருவர், அனைத்தையும் உதறுகிறார், ஒருவர் அனைத்தையும் செலவழிக்கிறார். வாழ்வின், வளமையின், தீவிரத்தின், அழகின், அன்பின், அறிவின், மிகையின், பெண்மையின் சாரம் கனிந்து, ஒட்டுமொத்த குறியீடாக அமைந்த சீதை என்ற ஒருத்தி, இருவர் இடையில் நிற்கிறாள். அவள் எவரைத் தேர்ந்தெடுத்தாள் என்பதை தனியாக சொல்லத் தேவை இருக்காது. ஆனால், அந்த ஏன் முக்கியமானது. அது என்றுமிருக்கும் கேள்வி.

வாசகர்களுக்கு அப்படி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லாததால் தீர்ப்பளிக்க வேண்டியதில்லை. என்றாலும், நாம் ஏன் காவியகர்த்தனின் நாயகனை தேர்ந்தடுக்கத் தயங்குகிறோம்? நாம் தொடர்புறுத்த முடியாத அதி தூய வாழ்வை அவன் வாழ்கிறான் என்று சொல்லக் கூடும். ஆனால் அதி தூய்மை என்பது வாழ்வியல் உண்மை இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த காரணத்தினால் அது காவிய உண்மையாகவும் இருக்க முடியாது என்று கருதுகிறேன். என் நினைவில் மீட்டி, இவனும் ராமன் என்று எண்ணிக்கொள்ளும் வரி ஒன்றுண்டு – அழகிற்கு அவதி உண்டோ? (2767) என்று ராமன் சூர்ப்பணகையை முதன்முறை பார்த்து எண்ணியது. அவள் விண்ணில் இருந்து இறங்கி வந்த அமுதம் போல மிளிர்கிறாள். மூவுலகத்தில் தேடினாலும் கிடைக்காத ஒப்பற்ற இந்தப் பேரழகி யார்? அழகிற்கு உண்மையில் எல்லையே இல்லையோ? என ராமன் எண்ணிக்கொள்கிறான். நாம் கண்டு கேட்கும் ராமர்கள் மண்டோதரியின் நிழலைத் தன் மீது படிய விடாதவர்கள், அகல்யையை பெண்ணாக்கி மீண்டும் கல்லாக்கியவர்கள். ஒரு வேளை சீதை இன்னொருவன் காதலியாக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, ‘என் மனம் பிழைக்காது’ என்று தனக்குத் தானே சமாதனம் சொல்லிக்கொண்ட ராமனின் கட்டுக்கோப்பான மனமா சூர்ப்பணகையை ‘அழகி!’ என்று வியக்கிறது? ராவணனும் சீதையை அப்படித் தானே கண்டு களித்து வியக்கிறான். ராமன் எத்தனை ராமனடி என்ற அவநம்பிக்கையை விதைப்பதல்ல இங்கு நோக்கம்.

உணர்வுகளுக்கும் (feeling) உணர்ச்சிகளுக்குமான (emotion) அடிப்படை வேறுபாடு இது. உணர்ச்சி என்பது உடலும் மனமும் அறிவும் தருணத்திற்கு ஏற்ப ஆற்றும் உடனடி எதிர்வினை. உணர்வுகள் என்பவை ஆழத்து அகநிலை அனுபவங்கள். நாம் உணர்ச்சிவசப்படுவதைப் போல உணர்வுகளில் வசத்தில் சிக்கிக் கொள்வதில்லை என்பதை கார்ல் யங் குறிப்பிடுகிறார். அழகின் முன் ஏற்படும் சகல சலன உணர்ச்சிகளை அடைபவனும் ராமன், அதைக் கடந்துஆழத்து மெய்யால் இயக்கப்படுபவனும் ராமனே. காவியம் முழுவதும் ராமனின் அகநோக்குப் பார்வை ஊடுபாவாக வந்து கொண்டிருக்கிறது. என் தந்தையை கொன்றுவிட்டேனா? மனைவியை பாதுகாக்கத் தவறி விட்டேனா? கூனியின் வளைந்த முதுகை விளையாட்டுப் பொருளாக்கி ஏளனப் படுத்திவிட்டேனா? என்னுடைய பெண்ணாசைக்கு பெரும்போரைத் தொடங்கி விட்டேனா? தம்பியைக் கொன்றுவிட்டேனா? நான் ஏன் அறம் அறம் என்று அரற்றி உலகத்தோடு ஒட்டாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? உண்மையில், நான் அன்பற்றவனோ?

ராவணனுக்கு இத்தகைய அடிப்படைக் கேள்விகள் எழுவதில்லை. அவன் மிகத் தெளிவாக இருக்கிறான். காதலெனும் ஒற்றை உணர்ச்சியில் மீட்சியின்றி சிக்கிக் கிடக்கிறான். சீதை மீது காதலுணர்வு எழுந்த பிறகு ராவணனின் வாழ்க்கை கீழ்நோக்கிக் கொண்டே செல்கிறது. நகரம் எரி கொள்கிறது, ஒரு தம்பி நாட்டை விட்டு ஓடுகிறான், இன்னொரு தம்பி உடல் கூறுபட்டு இறக்கிறான், மைந்தர்கள் கொடூரமாக இறக்கின்றனர், தானும் உடலும் உள்ளமும் நோக இறக்கிறான்.

ராவணன், இத்தனை அன்பையும் இழந்து எதைத் தான் இறுதியில் பெற்றான்? இந்த அபத்தத்தை எப்படி அர்த்தப் படுத்திக்கொள்வது? காம்யுவின் மொழியில் இப்படிச்சொல்லலாம், ‘என்னை யாராவது ஒழுக்கத்தைப் பற்றி எழுதச் சொன்னால், தொன்னூற்றி ஒன்பது பக்கங்களை காலியாக விடுவேன், கடைசி பக்கத்தில் இப்படி எழுதுவேன், ‘நான் ஒரே ஒரு கடமையைத் தான் அங்கீகரிக்கிறேன், அது அன்பு.’ வாழ்வின் பொருளின்மையை எழுதிய அவர், அன்பு என்றால் என்ன என்று குறிப்பிடவில்லை. அன்பு, சமயங்களில் நிபந்தனையற்றதாக அமையாவிட்டாலும் குறைந்தபட்சம் வன்முறையற்றதாகவாவது இருக்கலாம் என்பதை ராவண காதலர்களும் ஏற்க வேண்டி இருக்கிறது.

ராவணனின் காதல் மயக்கத்தை ‘ஆசையால் உயிர் ஆசு அழிவான்’ (5167) என்கிறார் கம்பன் – தவிர்க்கவே முடியாத உந்துதலால் உயிரின் ஆதாரத்தை இழக்கிறான். உயிரின் ஆதாரம் ஒழுக்கம் என்று உரையாளர்கள் சொல்கின்றனர். நான் அன்பென்றே கொள்கின்றேன். தனக்களிக்கப்பட்ட பேரன்பை இழந்து இல்லாத அன்பை வேட்கை மீதூறத் துரத்துகிறான். அன்பென்றாலும் அது விருப்புற்ற வடிவில் அமைய வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. காதலில் பிறந்த செயலானாலும் சிலவை நம்மைக் கூசிப் பின்வாங்கச் செய்கின்றன. இதை ஒரு பெருங்காதலன் தவறவிட்டிருக்கக்கூடாது என்றும் தோன்றுகிறது. சூர்ப்பணகை என்ற காதலிக்கும் இதை நீட்டிக் கொள்ளமுடியும். கீதை இதை ‘சர்வமிதம் ஜகத் மோஹிதம்’ என்கிறது. நன்மையாலும் வேகத்தாலும் குழபத்தாலும் ஆன இவ்வுலகம் மொத்தமும் மயக்கநிலையில் கிடக்கிறது, அதுவே வற்றாத பேருண்மையை அறியத் தடையாகிறது. அவரவர்க்கு அவரவர் மயக்கம்.

ராமன் இதை எப்படி புரிந்து கொள்கிறான்?இலங்கை எரியுண்ட பின், அங்கதனை தூதாக அனுப்பிய பின் போர் தொடங்குகிறது, முதல் நாளே ராவணன் களத்தில் இறங்குகிறான். தோல்வியுற்று நிராயுதபாணியாக நின்ற ராவணனுக்கு படைத் திரட்ட ராமன் இன்னொரு அவகாசம் கொடுக்கிறான். அகல்யை, சுக்ரீவன் போன்ற பிறழ் தன்மை கொண்ட பாத்திரங்களுக்கு உதவுவதை சந்தர்ப்பவசமாகச் செய்தான் அல்லது அருள்கூர்ந்தான் என்று எடுத்துக் கொண்டாலும், மனைவியைக் கடத்திக் கொண்டு சென்ற ராவணனுக்கு எதற்கு இந்தச் சலுகை என்ற கேள்வி என்னைத் தொந்தரவு செய்வது. ராமனின் சுயக்கட்டுபாட்டை வைத்து அவன் உலகறியாதவன் என்ற முடிவு கட்டிவிட வேண்டாம். மனம் காட்டும் மாயவித்தைகளை அறம் பேணுபவன் இன்னும் நுட்பமாக அறிவான். அவனும் அதே வழுக்குப்பாறையில் சரிந்து நிமிர்ந்தவன் தான். ராவணனின் கொந்தளிப்பை ராமன் தன்னுடைய சமநிலையற்ற தருணங்கள் வழியாகவே அடைகிறான் என்று எண்ணுகிறேன். கண்ணன் சொல்லையும் ராமன் செயலையும் பின்பற்றுமாறு மரபு கூறுகிறது. சொல்லும் செயலும், அவற்றின் பின்னால் ஒழுகும் அறமும் காலத்திற்குட்பட்டவை, மனம் செல்லும் தூரம் பல ஒளியாண்டுகளைக் கடந்து நிற்கவல்லது. நான் ராமனின் குழம்பிக் குழம்பித் தெளிந்து வரும் மனதைத் தொடர்வது ஒப்புநோக்கச் சிறந்தது என்று நினைக்கிறேன். அது தான் அவனை காந்தி வரைக் கொண்டு சேர்த்த உந்துசக்தியாகவும் இருக்கிறது.

OOO

ராமனையும் ராவணனையும் அன்பு நிலை உணர்வுகளின் துலாக்கோலில் இட்டது போல சீதையையும் சூர்ப்பணகையையும் வைப்பதற்கு காவியம் இடம் அளிக்கவில்லை. இப்படிச் சொல்லலாம், பால் பேதமின்றி ராமனைக் காண்போர் அனைவரும் அவன் தோள் அழகையும் தாள் அழகையும் அதிசயிக்கிறார்கள். ராமன் முன் நின்றால் காமனும் வெறும் நாய் என்று தோன்றுகிறது என்கிறான் ராவணன். அனுமனுக்கும் வீடணனுக்கும் எலும்பே அன்பால் உருகுகிறது. சூர்ப்பணகை ராமன் மீது வைத்திருப்பது, கடலையும் வானையும் சிறியவையோ என்று தோன்றச் செய்யும் பேரன்பு – நீத்தமும் வானும் குறுக நெஞ்சிடை கோத்த அன்பு. (2757) அன்பின் அனைத்து வகையான பார்வைகள் அவன் மீது படிந்தாலும், அவன் பாதுகாப்பிற்கு ஒரு குறையும் நேர்வதில்லை. சூர்ப்பணகையும் அயோமுகியும் ராம இலக்குவர்களைக் கட்டித் தூக்கிப் பறந்திருப்பார்கள் என்ற சாத்தியத்தை நான் ஒரு வாசகராக நான் நம்பவில்லை. கையில் ஆயுதம் வைத்திருப்பவர்கள் என்பது ஒரு வசதி. இன்னொரு பெண்ணின் கண் படாத வாழ்க்கை நெறி அமைய வேண்டும் என்பது அவர்களுடைய அறமும் அல்ல. அது ஒரு தேர்வு மட்டுமே.

சூர்ப்பணகையின் முலை அறுப்பட்டதற்கும் சீதை கடத்தப்பட்டதற்கும் பின்னால் இருக்கும் அறமும் அரசியலும் நாகரிகமற்றவை. பெண்ணிற்கு காதலை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் சம உரிமை இல்லை என்பது இங்கு தெளிவாகிறது. அவள் ஏற்றாலும் மறுத்தாலும் உடல் மற்றும் உளவியல் ரீதியான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது இதன் நுண்ணரசியல். ஒரு சிறிய அளவிலேனும் இன்றுவரைத் தொடற்கிறது என்பதால் சொல்ல வேண்டி இருக்கிறது, உடலுக்கு அடிப்படைப் பாதுகாப்பு இல்லாத இடத்தில் உள்ளம் மலர முடியாது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுபவர்களிடம் பேரன்பை எதிர்பார்க்கவியலாது. தன் காலத்தின் எல்லைக்குட்பட்டு காவியம் சில சாத்தியங்களை காட்டுகிறது. கம்பன் காட்டும் அனுமன்-சீதை நட்பு என்பது பெண்ணின் பாதுகாப்பு கவசங்களை மரியாதையும் கண்ணியமும் கலந்த பரிவால் கரைப்பது. சீதையின் ‘கற்பு’ குறித்த பார்வைகளுக்கு எதிராக (சரியாக) கொடிபிடிப்பவர்கள் தவறவிடும் நுட்பம் இது.

இன்னொரு வகையில் சூர்ப்பணகையும் அயோமுகியும் அகல்யையும் தாரையும், காமத்தையும் காதலையும் சீதையை விட தீர்க்கமாகக் கையாண்டார்கள் என்று சொல்ல முடியும். சீதையை இலக்குவனுடன், அனுமனுடன், ராவணனுடன் காதல் உறவில் பிணைத்த கதைகளும் நாட்டார் கதைகளில் கிடைக்கின்றன என்ற வகையில் அப்படிச் சொல்லலாம். ஆனாலும், ஒரு பெண், பழக்கத்தின் பிழையாலோ, சுயதேர்வின் அடிப்படையிலோ ஒரே ஒருவனை வாழ்நாள் முழுக்க காதலித்தாள் என்றும், அதன் பொருட்டு பிறரை காதலிக்கவில்லை என்பதையும் ஏற்பதில் இத்தனைப் பின்வாங்க வேண்டியதில்லை. ராமன் இறுதியில் அவளை கைவிட்டான் என்றாலும் கூட அது அவள் காதலை இன்னும் காவியமாக்குகிறது என்றே தோன்றுகிறது. ‘என் தன் பொரு சிலை மேகம்தன்னைக் காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்’ (8701) என்கிறாள் சீதை. வில்பிடித்த என் ஆசை மேகத்தை காணும் ஆசையில் ஆருயிரை வைத்திருந்தேன் என்பவள், ராவணனை கூடியே ஆக வேண்டிய காரணமில்லை. ஆசை மேகங்கள் குரூரமானவையாக மாறுவது துரதிஷ்டவசமானது. சீதையின் விடாப்பிடியான காதலே ராமனை ராமனாக்குகிறது என்றால் அது மிகையல்ல.

OOO

உருக்குவது, ஒளிகொள்வது, ஆற்றுவது; ஆனாலும், வீழ்த்துவது, அத்து மீறுவது, மோசடி என்று தோன்றுவது, அன்பு. சில நேரங்களில், கடும்பகையும் வெறுப்பும் மேல் என்று தோன்றுமளவு உள்ளில் எஞ்சிக் கசப்பது. இருப்பிலும் இன்மையிலும் இன்னுயிரைக் கோருவது. இத்தனை இரக்கமற்ற அன்பை ஏன் நாம் இவ்வளவு கொண்டாட வேண்டும்? அழுது அழுது கவிஞர்கள் ஏன் அதைப் பாட வேண்டும்? பெற்றோர் குழந்தை மீது வைக்கும் பேரன்பு, ஆண்-பெண் இடையில் பூக்கும் இலட்சிய காதல், அண்ணன் தம்பியர் இடையில் இருக்கும் இரத்த பாசம், நன்றியுணர்வுடன் எழும் பதிலிப்பிரியம், அறத்தால் துணை நின்றவர்கள் மீது எழும் பரிவு, நண்பர்களில் நேசம், அபயம் கேட்பவருக்குக் கருணை, பகைவருக்கு அருள், எத்தனை மறுத்தாலும் விளக்கவோ விலக்கவோ இயலாத பெருந்திணைப் பித்து என்று அன்பென்ற பெயரில் மண்ணில் திகழும் அத்தனை நல்லவைக்கும் அல்லவைக்கும் இடையில் நின்று கம்பன் சொல்லும் ஒரு பாடலை இங்கு முன்வைக்கிறேன். இலக்குவன் இறந்துவிட்டதாக கருதி ராமன் மூர்ச்சை அடையும் காட்சியைப் பார்த்து வீடணன் சொல்லும் பாடல் இது. இராவணன் கட்சியில் இருந்து தாவி எதிர் அணியில் இணைந்த பின் கும்பகர்ணனனையும் போரில் வீடணன் இழக்க நேர்கிறது. சந்தர்ப்ப வசத்தால் ஓங்கி அழ முடியாதவனின் ஏக்கம் இதில் கலந்திருப்பதாக சொல்லலாம். அதை உதறி, தனிப்பாடலாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம்,
பின்பு என்ப அல்லவேனும், தம்முடைய நிலையின் பேரா
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே. (8706)

எது இங்கு உடலாகிறது? எது பின்னர் உயிராகிறது? எது அன்பு என்னும் பிரக்ஞையாக உருக்கொள்கிறது? எலும்பின் கூடும் உடலும் உயிரும் தோன்றிய பின் அன்பு எழுகிறதா என்ன? இல்லை, அன்பு தோன்றுவதற்காகவே அவை எழுகின்றன. அன்பு என்று சொல்லப்படும் இச்சூழமர் அழகொளி ஆடுவதற்கென முன்னமே இங்கு தன்னை நிறுவிக்கொண்ட நிலைமேடைகள். அன்பெனும் கோபுரம் எழ முன்னெழுந்த மதில் சுவர்கள். உடலும் உயிரும் பூவானால், அதன் மீது பனித்துளியாக திரண்டு நிற்பது அன்பு. அதை என்னவென்று புரிந்து கொள்ள எத்தனித்தால், யாரால் என்ன தான் சொல்லிவிட முடியும்? அன்பென்ற ஒன்றின் தன்மையை எவருமே அறிந்ததில்லை. ஆம், எவரும்.

குறிப்பு – பாடல் எண்கள் கோவை கம்பன் அறநிலை உரை நூல்களின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) வழி.

பார்கவி

எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஸ்ரீநிவாஸ் எனும் தன் நண்பருடன் இணைந்து “இம்பர்வாரி செவ்விலக்கிய வட்டம்” என்ற கம்பராமாயண வாசிப்புக் குழுமத்தை நடத்தி வருகிறார். சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. பவித்ராவின் கட்டுரை அவரின் ’பார்வையில்’ நன்றாகவே துலங்கி வந்திருக்கிறது. புரிபடாமல் தொக்கி நிற்கும் சம்பவங்களை அடுக்கி வைத்ததைப் போன்று தோன்றும் வாழ்வை நெருங்கி விட்டதான எத்தனிப்பையும், நெருங்க முடியாத தத்தளிப்பையும் ஒருங்கே பகிர்ந்து கொள்பவை இலக்கியங்கள்.

    இலக்கியங்களை மரபு நவீனம் எனும் வ்கைமைகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து தட்டையாக்கிக் கொண்டே இருப்பது நம் ஆறாவது அறிவின் அகங்கார இயல்பு. ஆனால், மானுட வாழ்வின் கலவையான நிகழ்வுகளை எழுதுபவரின் நோக்கு கடந்து வெளிப்படுத்திக் கண்சிமிட்டிக் கொள்பவை இலக்கியங்கள். அதனால்தான் எழுதும்போது இதை எழுத நான் நினைக்கவேயில்லை என்பது போல எழுத்தாளர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

    அதற்காக இலக்கியம் தானாக உருக்கொள்ளும் சுயம்பு என்பதான அர்த்தத்தில் புரிந்து கொள்வது இன்னும் ஆபத்து. வாழ்வு நிகழ்வுகளாலும், நிகழ்வுகள் தொடர்பான மனிதக்கற்பனைகளாலும் ஆனது. இவற்றைப் பகுத்துத் தனியாகப் பார்த்து விடவோ வரையறுத்துக் கோட்பாடுகளாக்கி விடவோ சாத்தியமில்லை; வேண்டுமானால் தர்க்க வழியில் அதற்கான சாத்தியப்பாடுகளை முன்மொழியலாம். மற்றபடி, வாழ்வை வரையறுத்தலை மனித அறிவுக்கற்பனை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

    கம்பனின் பாடலைத் தன் கோணத்தில் கண்டிருக்கும் பவித்ரா, நவீன மனங்களின் சிதறல்க்ளை ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவற்றை அப்படியே விட்டுவிடக்கூடாது என ‘உள்நுழைந்து’ அன்புநெறியைப் போதிக்கத் தொடங்கி விடுகிறார்(சலிப்பாய்ச் சொல்லவில்லை). அவர் கட்டுரை, அவர் விருப்பம்.

    – தமிழ்மொழி சக்திவேல்
    கோபிசெட்டிபாளையம்

  2. முழு காவியத்தையும் தொகுத்து ஒரு கட்டுரையாக எழுதியிருப்பது மிகச் சிறப்பு..

    எத்தனை காவியங்கள் எழுதப்பட்டாலும் அன்பென்ற ஒன்றை வரையறுத்திட இயலாதென முடித்திருப்பது முத்தாய்ப்பு.

    வாழ்த்துகளும் நன்றியும் பார்கவி.

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss