
“குடியுடுறதுக்கு இன்னும் கொஞ்சநேரந்தான் இருக்கு வேல சொணங்கிப்போச்சி!“ என்று சொல்லிக்கொண்டே கொதிக்கும் எண்ணெயில் பொன்னிறமாக வறுபட்டுக்கொண்டிருந்த மாசிகருவாடு துண்டுகளை அரிக்கரண்டியில் அள்ளி மூங்கிலால் பின்னப்பட்ட தட்டில் போட்டார் மருதையண்ணன். மீண்டும் உப்பில் ஊறவைக்கப்பட்டிருந்த கொச்சிக்காய்களை அள்ளி கொதிக்கும் எண்ணெயில் போட்டார். ‘சொய்…ங்..‘ என்ற சத்தம் கேட்டு பறந்து வந்தான் பரமு.
“என்னாப்பா வேலையெல்லாம் முடிஞ்சிறிச்சா? சாமி ஊற சுத்தி முடியபோவுது!“ என்று மருதையண்ணனிடம் பேச்சு கொடுத்தவாறு பீடியொன்றை வாயில் வைத்து எரிகின்ற பெரிய ‘கொள்ளிக்கட்டையை’ எடுத்து பீடியை பற்றவைத்தான் பரமு.
‘கவனம், மூஞ்ச சுட்டுபுட போவுது முடியெல்லாம் பொசுங்கி போயிறாம’ அவனை எச்சரித்துக்கொண்டு கொச்சிக்காயை புரட்டினார் மருதை. “வேல முடிஞ்சிறுச்சி கொச்சிக்காய எடுத்துட்டா சோத்த கட்டுற வேலதான்“.
பதமாக இளமஞ்சளாக சோற்றை வடித்து மாரியம்மன், கோவிலின் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு பின்னுள்ள சுவரோரம் கொஞ்சம் முன்னர்தான் கொட்டிவைத்தார். பீடியை இழுத்து வீசிவிட்டு உள்ளேபோய் சோற்றை இரண்டொன்றாக எடுத்து பதம் பார்த்துவிட்டு போனவருஷமும் அதே பதம்! சோற்றின் பதம் மாறாததை யோசித்துக் கொண்டே வெளியே வந்தான் பரமு.
மீண்டும் வறுபட்ட பொன்னிறமான கொச்சிக்காய்களை அள்ளி எடுத்துக் கொண்டிருந்தார் மருதைக் கிழவர். அவரது வயது வேண்டுமானால் எழுபதைத் தாண்டியிருக்கலாம். வேலையில் மிக நுட்பமானவர் என்பதுதான் தோட்டத்தாரின் கணிப்பு. ஆனைத்தோட்டத்தில் ‘கட்டுச்சோறு’க்கென்று பேர் போனவர்தான் மருதை. அவர் கட்டுச்சோற்றைத் தயாரிக்கும் விதமும் அதன் சுவையும் அலாதியானது.
முதலில் சிறிதாக துண்டாக்கப்பட்ட மாசிக்கருவாடு துண்டுகளை பொரித்தெடுப்பார். அடுத்ததாக உப்பில் சுமார் மூன்று மணித்தியாலம்; ஊறவைக்கப்பட்ட பட்டக்கொச்சிக்காய்த் துண்டுகளை அதே கருவாட்டு எண்ணெயிலேயே வறுத்தெடுப்பார். அதற்கு முன்னர் சோற்றை ஆக்கி வடித்து வாழையிலைகளை வெட்டி தரையில், அடுக்கி அதன்மேல் வேட்டியை விரித்து, அதன்மேல் ‘தலைவாழை’யிலையை போட்டு சோற்றைக் கொட்டி பரப்பிவிடுவார். அந்தச்சோறு காய்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாகிவிடும். பின்னர் கருவாட்டுத்துண்டுகளையும், கொச்சிக்காய்களையும் சோற்றில் கொட்டுவார். இரண்டையும் கலந்து கருவாடு கொச்சிக்காய் பொரித்தெடுத்த கார எண்ணையை அதன் மேல் ஊற்றி சோற்றைக் கலவைசெய்து இலையுடன் சேர்த்து வேட்டியை இறுக்கி தட்டி தட்டி கட்டுவார்கள். அடித்து அடித்தும் கட்டுவார்கள். அந்த கட்டுச்சோறு பொதி சுமார் ஐம்பது கிலோ மூடை தான்.
ஆனைத்தோட்டத்தில் அந்த கட்டுச்சோற்று சுவையை சுமார் முப்பத்தைந்து வருடமாக தனது கைப்பக்குவத்தாலேயே கட்டிப் போட்டு வைத்திருப்பவர்தான் மருதைக்கிழவர். ‘எத்தனை பிரியாணி சாப்பிட்டாலும் இந்த கட்டுச்சோற்று சுவை வராதுடா’ என்று கொழும்பில் இருந்து வரும் இளைஞர்கள் வாயூறிச் சொல்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்!
இது முப்பத்தைந்தாவது வருடம், ஊரில் மாரியம்மன் திருவிழா வந்ததும் அவர் வேண்டிக்கொள்வதெல்லாம் இந்தமுறை ‘குடி வுடும்போது’ எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாதென்றுதான். ஆனைத்தோட்டத்தில் ‘குடிவிடுதல்’ ஒரு முக்கிய சமாச்சாரம். முப்பத்தாறு வருடமாக சாமி கும்பிட்டு திருவிழா செய்து குடிவிட்டுவிட்டார்கள். ஆனால் குடியைதான் விடுவதாயில்லை. குடிவிடும் இடத்தில் எப்படியும் சண்டை வருமென்றே சிலர் அந்த இடத்துக்கு போவதை நிறுத்திக் கொண்டார்கள்.
அந்த தோட்டத்தில் திருவிழாவுக்கு காப்பு கட்டுவதிலிருந்து குடிவிடுவதுவரையில் நெய்ப்பந்தம் ராமு, தப்பு தங்கையா, தீக்குழி முருகன், பூசாரி பொன்னையா, முதலிய பிரபலங்களுடன் கட்டுச்சோறு மருதையும் அடைமொழி பெற்று அமைந்தவர். மருதைக்கிழவருக்கு அதற்கு முன்னரும் ஒரு அடைமொழியுண்டு அதுதான் ‘கவ்வாத்து மருதை’ கவ்வாத்து வெட்டுவதில் அவரை மிஞ்சிய ஒரு வேலைக்காரன் இன்றுவரையுமில்லை. கவ்வாத்துவெட்டினாரென்றால் ஒரே இழுப்பில் தேயிலை வாதுகள் வரைந்தெடுத்ததுபோல மிக அழகாக காட்சிதரும். தூரத்தேயிருந்து கண்டுபிடித்துவிடலாம். இது மருதையின் வெட்டுதானென்று. தேயிலையின் அசும்புகளை நீக்கி, பக்கவாதுகளை பணித்து, நடு மரத்தை தூக்கிவெட்டுவார். அதற்கேற்ப கவ்வாத்து கத்தியை பதமாக வைத்திருக்க மலைக்கு ஒரு ‘தீட்டுக்கட்டையை’ சவுக்குமர வாதை வெட்டி சீவி வைத்திருப்பார். எவ்வளவு பெரிய வாதுகளையும் கை ஓங்காமலே வீழ்ந்திடுவார்.
‘தோட்ட வருமானம் பத்தாது. இரண்டு புள்ளைகளையும் படிக்கவைக்கனும் கொழும்புக்கு போனாதான் சரிவரும்னு நெனக்கிறேன் ராமலிங்கோ’ என்று ஒருநாள் கவ்வாத்து வெட்டிப்போட்டுவிட்டு, ‘கரகம்பாலிக்கிற’ காணோரம் அமர்ந்து ‘தேத்தண்ணி’ குடிக்கும்போது சொல்லிக்கொண்டிருந்தார்.
தொண்ணூற்றி ஏழாமாண்டு கொழும்பில் பாஸ்கிட்ட வேலைக்குப் போனார். ‘பத்துநா பேரு தோட்டத்துல போட்டுகிட்டா போதும்’ என்று சொல்லிக் கொண்டு பதினைந்து நாட்களையாவது பாஸ்கிட்ட வேல செஞ்சி மாச கடசில வந்து வீட்ல இருந்துட்டு போறதையே வழக்கமாக்கிட்டார் என பக்கத்திலுள்ளோர் பேசுவதையும் அவர் கேட்டுக்கொள்ளமாலில்லை.
ஆனைத்தோட்டத்திலிருந்து முதலில் கொழும்புக்கு வேலைக்குச் சென்றவர் மருதை அண்ணன்தான், தைபொங்கல், சித்திரை, ஆடி பதினெட்டு, தீபாவளி, பஜனை என்ற தோட்டத்து சமாச்சாரங்களில் மட்டுமல்லாமல் தோட்டத்தில் நடக்கும் சடங்கு கல்யாணம், சாவுகளிலும் அவர் முதல் ஆளாக நிற்பார். மொத்தமாக கூறினால், விசேட நிகழ்வுகளில் விசேட மனிதனாக அவர் பிரசன்னமளிப்பார். முகத்தை புல்சேவ் பண்ணி, வெள்ளைச்சட்டையுடன், வெள்ளைச்சாரம் அணிந்து நேர்த்தியாக வந்திடுவார். ‘கொழும்புகாரு வந்திட்டாரா’ என்று அவர் வயது நண்பர்கள் தேடி வந்து மகிழ்ந்துவிட்டு போவார்கள். திருவிழா ஆரம்பித்தால் மூன்று நாளைக்கு முன்பே லீவு போட்டுவிட்டு வந்து அந்த வேலைகளை பொறுப்பெடுப்பார்.
கட்டுச்சோறு வேலைகளை மும்முரப்படுத்துவதில் மருதைக்கிழவருடன் பரமுவும் ஒத்தாசை புரிந்து கொண்டிருந்தான். எனினும், அவனது மனதுக்குள்ளே ஒரு பொறாமை இருந்தது. வழமைப்போலவே சோற்றுடன் கருவாடு, கொச்சிக்காய்த்துண்டுகளை கலந்து தாய்ச்சியிலுள்ள எஞ்சிய கருவாட்டு எண்ணெயை ஊற்றி அரிக்கரண்டியில் புரட்டி புரட்டி எடுத்தார்கள். பின்னர் இலையுடன் சேர்த்து இருக்கி கட்டி, தட்டி அதை மேலும் கெட்டியான சோற்று மூடையாக கட்டி கோயிலின் உள்ளே சாமியின் முன் கொண்டுபோய் வைத்தார்கள். மருதைக்கிழவரும் பரமுவும். ‘குறிப்பெடுப்பதில்’ தொடங்கி, கரகம் தூக்குதல், பால்குடம் பவனி எனவும் தீக்குழிகொரு பொழுது, தேருக்கொரு பொழுதென்று திருவிழாமுடிந்து இறுதி நாள் ‘மஞ்சநீருக்குள்’ வந்து நின்றது ‘மாவிளக்கெடுத்து’ மஞ்சள் நீருக்குச் சென்ற இளைஞர்; முதியோர் சிறுவரென எல்லோரும் மஞ்சள்நீரில் நனைந்தவாறு கோயில் முன்றலில் வந்து நின்றார்கள்.
வருடத்துக்கொருமுறை அம்மனுக்கு திருவிழா கொண்டாடி மஞ்சள் நீராட்டி தானும் அதில் நீராடி ஊர்முழுதும் மஞ்சள்நீரால் சுத்தம் செய்தால் எல்லாம் புனிதமாகுமென்பது அவர்களது நம்பிக்கை.
மாலை ஏழரை மணி இருட்டத்தொடங்கியது. ராமு நெய்பந்தத்தை பிடிக்கத் தொடங்கினார். சாமிக்கு சூடம் காட்டியபின் கட்டுச்சோற்றை தூக்கி, மருதை கிழவர் தலையில் வைத்தனர். ஐம்பது கிலோவுக்கு குறையாத சுமை. கிழவரிடம் துணிச்சல் இருந்தாலும் வயது எழுபத்தேழை கடப்பதால் சிறிது நடுக்கம். ஆனால் கட்டுச்சோற்றை இறுக்கமாக பிடித்தவாறு கோயில் படிக்கட்டில் இறங்கினார். சுமார் ஐம்பதுபேர் கொண்ட ஆண்கள் கூட்டம் ராமுவின் நெய்ப்பந்த வழிகாட்டலில் நடக்கத் தொடங்கினார்கள். ஏழாம் நம்பர் ஆற்றங்கரையை நோக்கி ஒரு அணிவகுப்பு. வழமையாக குடிவிடுவது அங்குதான்.
கட்டுச்சோற்றை சுமந்து செல்லும் மருதை கிழவருக்கு பலத்த பாதுகாப்பு. எல்லோரும் வரிசையாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். இருட்டு கவிந்து நிலவொளியும் மங்கிக் கொண்டிருந்தது. ஆலமரச்சந்தியை கடந்து குறுக்குப்பாதையில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் மஞ்சள் நீராடலுடன் நீரை கலந்து மயங்கியதால் மிதந்தார்கள். குறுக்குப்பாதை கல் நொடித்து மருதைக்கிழவர் கட்டுச்சோற்றுடன் விழுந்தார். விழுந்தவர் வழுக்கிச்சென்று தனது முழங்காலை வங்கியில் இடித்து நிறுத்தினார். முட்டி சிராய்த்து இரத்தம் கசிய ஆரம்பித்தாலும் ஐம்பது கிலோ கட்டுச்சோறு மூடையை அவரது கைகள் இறுக்கமாக பற்றியிருந்தன. அது தலையை விட்டு அசையவேயில்லை.
வேகமாக பாய்ந்து வந்த பரமு கட்டுச்சோறு மூடையை கிழவரிடமிருந்து வாங்க எத்தனித்து ‘சொல்லியிருந்தா நான் தூக்கிட்டு வருவேன்தானே முடியாத வயசுல விழுந்து எதாச்சும் ஆனா என்னா பண்ணுறது?’ என்றான்.
மருதை கிழவர் வெடுக்கென்ற கோபத்தோடு பொங்கியெழுந்தார். ஒருகையில் கட்டுச்சோற்றை பிடித்துக் கொண்டு மறுகையில், அவனது கையை பிடித்து இழுத்து தள்ளினார். எங்கிருந்து வந்தது அவ்வளவு பலம்? தேயிலையில் சரிந்த பரமுவை நோக்கி ‘முப்பத்தஞ்சி வருஷமா தூக்கிட்டு வாரேன் !’ என்று ஒரு முறை முறைமுறைத்தார்.
மீண்டும் அவரது இரு கைகளாலும் பொதியை மேலும் இறுகப்பற்றினார். விறுவிறுவென நடக்கத் தொடங்கினார். முழங்காலில் இரத்தம் ஒழுக ஆற்றங்கரையில் கொண்டுபோய் இறக்கினார்.
இந்த சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் எதுவுமே பேசவில்லை. வழமைப்போலவே குடியிடும் ஆற்றங்கரையில் காப்பு, கரகம் எல்லாம் அவிழ்த்து குடிவிடப்பட்டது. மிகுந்த களிப்புடன் கட்டுச்சோற்றை தனது இரு கைகளாலும் சேர்த்து அள்ளி ஒவ்வொருக்காய் கொடுத்துக்கொண்டிருந்தார் மருதைக்கிழவர்.
பக்கத்தில் நின்று சந்தோசமாக சோற்றை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பரமுவும்.
“அடே பரமு, அடுத்த வருசம் நீதான் கட்டுச்சோறு தூக்கிறாய்… அதுக்கு ஒனக்கு ஒரு பலம் வேணும். மனசில வைராக்கியம் இருக்கணும்.. இத்தின வருசமா இந்தச் சோத்தில அத நீ எடுக்கல்ல. இனியாவது எடுத்துக்க..” என்றார் கிழவர்.
பரமுவின் கைகளில் இருந்த சோற்றில் கண்ணீர் விழுந்து தெறித்தது.
00

சு. தவச்செல்வன்
சு. தவச்செல்வன், இலங்கையில் ஹற்றனை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஆடுபாலம், சிங்க மலை என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. டார்வினின் பூனைகள், சிவப்பு டைனோசர்கள், படைப்பும் படைப்பாளுமையும் என வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். ஆய்வாளர், விமர்சகர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















கருவாட்டைப்பொரித்து சோற்றுடன் கலந்து வாழையிலையில்போட்டு அதனை பழைய வேஷ்டியில் பொதியாகக்கட்டிச்சுமந்துகொண்டுகோவிலுக்குக் கொண்டுபோய் அங்குள்ளவர்களுக்கும் கொடுத்துண்டு மகிழும் திருவிழாநிகழ்vaanathu, பங்குடிமக்களின் சடங்கைப்போல் ரசிக்கும்படியுள்ளது. `குடியுடுறது’ எல்லாம் புதியவகையிலான சொல்லாடல்.. மக்கள்சூழப் பாதுகாப்புடன் செல்லும் மருதைக்கிழவரை எதுக்காக ஆசிரியர் விழுத்தாட்டுகிறார் என்பது எனக்குப்புரியவில்லை.. மீனைப் பொன்னிறத்தில் வறுத்தெடுக்கலாம். மாசிக்கருவாடானது புளியம்விறகைபோலக் கருமையாகவே இருக்கும், அதனைப்பொன்னிறமாக வறுத்தெடுப்பதாக எழுதுவது கொஞ்சம் மிகைப்படுத்தும் வார்த்தையாடலாக எனக்குப்படுகிறது. இன்னும் படைப்பில் கூறியதுகூறல் எனும் வழுவுள்ளது. கட்டுச்சாதப்பொதி 70 கிலோ விருக்குமென இரு இடங்களில் கூறப்படுகின்றது. வித்தியாசமான பகைப்புலமும், கதைமாந்தர்களும் இடம்பெறும் வித்தியாசமான கதை. நிறைய எழுதுங்கள், பாராட்டுக்கள்.