
முன்குறிப்பு: “தமிழ்ச்சூழலில் கல்வித்துறை சார்ந்து எப்போதும் தனிக்கவனம் இருந்து வருகிறது. பள்ளிக்கல்வி குறித்துச் சிறப்புத் தொடர்கள், இதழ்கள், ஆசிரியர்கள் – எழுத்தாளர் – வாசகர் விவாதங்கள் எனத் தொடர்ந்து ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்து வருவதை நாம் கவனித்திருக்க முடியும். பள்ளிக்கல்விக்கு நிகராக உயர்கல்வி குறித்த உரையாடல்கள் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால் ஒப்பீட்டளவில் அவற்றின் எண்ணிக்கை குறைவுதான். உரையாடல்கள் கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும், புதிய பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும், சிக்கல்களுக்குத் தீர்வாகும் என்பதால் அவை தொடர வேண்டும்.
தமிழக உயர்கல்வித்துறை சார்ந்த அனுபவப் பதிவுகளில் பெருமாள்முருகன், அவர் மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கல்விச்சாலையில் சாதிய
வேறுபாடுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் அனுபவக்கட்டுரைகள் அடங்கிய “சாதியும் நானும்” நூல் பெருமாள்முருகன் வழி முதல் வரவென்றால், மாதொருபாகன் பிரச்சினைக்கு பிறகு “எங்கள் ஐயா” என்கிற தொகுப்பு அவர் மாணவர்களின் வழி அடுத்த வரவு. அவர் மீண்டும் எழுதத் தொடங்கி “மனதில் நிற்கும் மாணவர்கள்” என்று தம் ஆசிரிய அனுபவங்களைத் தொகுத்தார். கல்லூரி முதல்வர் பணி என்னும் அதீத உழைப்பைக் கோரும் அனுபவமும் பணி ஓய்வுக்குப் பிறகு பெற்ற அதீத சுதந்திர உணர்வும் கல்வித்துறை சார்ந்த பல விமர்சனக் கட்டுரைகளைப் பிறப்பித்தது எனலாம். உயர்கல்வித்துறைச் செயல்பாடுகள், ஆசிரியர்கள் குறித்த கூரிய விமர்சனங்களைக் கொண்ட, கடும் எதிர்வினைகளையும் பெற்றுத் தந்த அவை, பின்னாட்களில் “மயிர்தான் பிரச்சனையா?”, “காதல் சரி என்றால் சாதி தப்பு” என்கிற நூல்களாகவும் வடிவம் பெற்றிருக்கின்றன. தற்போது தம் ஆசிரியர்களைக் குறித்தும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.
தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியர் பணி அனுபவம், கல்லூரி முதல்வர் என்னும் களச் செயல்பாடு எனத் தம் அனுபவத்தின் வழி பெருமாள்முருகன் உயர்கல்வித்துறை சார்ந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறார். கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகளால் முடக்கப்பட்ட அவர் கருத்துரிமை தொடர்பான உரையாடல்களில் தம்மைத் தொடர்ந்து முன்வைப்பது, அவருக்குப் பின் எவரும் கருத்துரிமை தொடர்பான பிரச்சினைகளில் வரலாறு அளிக்கும் அனாதைத்தன்மையை உணராதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்ச் சூழலில் கருத்துரிமை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சொல்லப்போனால் கருத்துரிமையின் ஆரம்ப இடம் ஆசிரியர் என்னும் அதிகாரத்தைத் தயக்கமின்றி கேள்வி கேட்கும் வகுப்பறைகளிலேயே தொடங்க வேண்டும். பெருமாள்முருகனின் வகுப்பறை அனுபவங்களிலும் முதல்வர் பணி அலுவலகத்திலும் இத்தகைய அதிகாரம் தொனிக்காத உரையாடல் தன்மையை அதிகம் காணலாம். எனவே அவரின் கல்விப் பக்கத்தை மட்டும் வெளிக்கொணரும் விதமாக, கருத்துரிமை தொடர்பான உரையாடல்களின் நீட்சியாக இந்த நேர்காணலை அமைக்கலாம் என எண்ணினோம். அவரின் கல்வித்துறை அனுபவங்கள், சமகால உயர்கல்வித்துறை, இந்திய அளவில் ஆசிரியர்களும் ஆசிரியர்களாக முயல்வோரும் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிப் பார்க்கலாம் என அவரிடம் கேட்டபோது உடனடியாகச் சம்மதித்தார். அவருக்கு நன்றி.”
விஜயகுமார்
விஜயகுமார்: மாணவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உங்களிடம் இருக்கிறதென்பது எழுத்துகளில் தெரிகிறது; செல்லப் பெயரும் வைக்கிறீர்கள். அது அவர்களைக் கோபப்படுத்தாமல் உங்களை நெருங்க வைக்கிறது; ஊக்கத்தைத் தருகிறது. இது ஆசிரியர்கள் முதன்மையாகக் கைக்கொள்ளவேண்டிய குணநலன் என்றும் தோன்றுகிறது. ஒய்வு பெற்ற பிறகு மாணவர்களுடனான உரையாடலை இழந்ததுபோல் உணர்கிறீர்களா?
பெருமாள்முருகன்: குடும்பம், பயணம், எழுத்து, வாசிப்பு, வேளாண்மை என்று தொடர்வேலைகளில் இருப்பதால் பணி ஓய்வு பெற்றதாகவே தோன்றவில்லை. மேலும் அரசுப்பணி பற்றி எனக்கு நல்ல புரிதலும் இருந்ததால் விடுதலை உணர்வுடன் இருக்கிறேன். அரசுப்பணியில் இருக்கும் ஒருவருக்குப் பணியிடமாற்றம் நிகழ்ந்த அடுத்த கணமே பணியாற்றும் நிறுவனத்திற்கும் அவருக்குமான தொடர்பு அறுந்துவிடும். சக நண்பர்களே யாரோ என்பது போலத்தான் பார்ப்பார்கள். ஓய்வு பெற்றாலோ முழுக்க அந்நியமாகிவிடுவோம். முதல்வர் நாற்காலியைச் சிம்மாசனமாகக் கருதி வீற்றிருந்தவர் பணி ஓய்வுக்குப் பின் முதல்வர் அறைக்கு முன்னால் போட்டிருந்த மொட்டைப்பெஞ்சில் உட்காரத் தயங்கி நின்றபடியே காத்திருக்க நேர்ந்ததை எல்லாம் பார்த்திருக்கிறேன்.
அரசுப்பணியில் நாம் முன்னெடுத்துச் செய்யும் முக்கியமான பணிகளுக்குக்கூட உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆட்கள் மாறிக் கொண்டே இருப்பதால் முன்னர் நடந்தவை எவை, அவற்றில் யாருக்கெல்லாம் பங்கிருக்கிறது என்பவற்றிற்கு எல்லாம் அர்த்தமே இல்லை. பலபேர் கடிவாளக் குதிரைகள். தாம் பணியாற்றும் நிறுவனத்தில் நடக்கும் எதைப் பற்றியும் அறிதலற்று அல்லது அசட்டையாக நடந்து கொள்பவர்களே பெரும்பகுதி. ஆகவே நிறுவனத்தின் மீதும் சரி, பணியின் மீதும் சரி ஆழ்ந்த பிடிமானத்தை நான் வைத்துக்கொள்ளவில்லை. மேலும் காலையில் எழுந்து அவசர அவசரமாகத் தயாராகி ஒரு வேலைக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் திரும்பும் கட்டுக்கு உட்பட்ட அன்றாடத்தில் எனக்கு
வெறுப்பு உண்டு.
நான் வேளாண் வாழ்க்கைப் பின்னணியில் வந்தவன். பருவத்தில் செய்ய வேண்டிய சில அடிப்படை வேலைகளைத் தவிரப் பிறவற்றை விரும்பியபடி விருப்பமான நேரத்தில் செய்வது வேளாண் வாழ்க்கை. சிலவற்றைத் தள்ளிப் போடலாம். பிறகு செய்வோம் என்று சோம்பலாகவும் இருக்கலாம். நேரம் காலம் எல்லாம் நம் முடிவுக்கு உட்பட்டது. என் மனநிலை அதிலிருந்து உருவானது. எழுத்தாளர் வாழ்வும் அதற்கு இயைந்ததே. வேலை எல்லாம் முடிந்து மாலையில் அல்லது முன்னிரவில் குளிப்பது வேளாண் வாழ்வு. குளித்துத் தயாராகித்தான் வேலைக்கே செல்ல வேண்டும் என்பது அலுவலக வாழ்வு. எனக்குக் காலையில் குளிப்பது கஷ்டம். குளிக்காமல் போனாலும் திருப்தியாக இருக்காது. இப்படிப் பல
முரண்கள்.

ஆசிரியப் பணி பிடித்தமானது எனினும் என் மனநிலை காரணமாகவும் அரசுப்பணி பற்றிய புரிதலினாலும் ஒட்டாமல்தான் இருந்தேன். பணி ஓய்வை நெடுங்காலம் பிரிந்திருந்த சொந்த வீட்டுக்குத் திரும்பியதைப் போல மகிழ்ச்சியாக உணர்ந்து வாழ்கிறேன். ஆனால் இழப்பேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் மாணவர்களைப் பிரிந்ததுதான். தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பார்த்தும் அவர்கள் குரலைக் கேட்டும் பழகிய எனக்கு அது இழப்புத்தான். சமகாலச் சமூகத்தின் விழுமியங்கள் உட்பட அனைத்தையும் அவர்களிடம் இருந்து அறிவேன். நான் கற்றுக் கொடுக்கிறேனோ இல்லையோ அவர்கள் எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறார்கள். பதின்வயதுப் பிள்ளைகள் பேரன்பு மிக்கவர்கள். அவர்கள் அன்பில் திளைத்திருந்தேன். இப்போது அவற்றை எல்லாம் இழந்திருக்கிறேன். அந்த இழப்பேக்கம் அவ்வப்போது தோன்றி பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.
விஜயகுமார்: இந்தியாவின் பிற பகுதிகளில் பல்வேறு இலக்கிய விழாக்கள், கல்வி நிறுவன விழாக்களில் பங்கெடுக்கிறீர்கள். கல்வித்துறை சார்த்து நீங்கள் வியந்த,
தமிழ்நாடு சுவீகரித்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணவைத்த நிகழ்வுகள் அல்லது திட்டங்கள் ஏதேனும் உண்டா?
பெமு: நிறைய உண்டு. கல்வியில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். சமகாலத்திற்கு ஏற்பப் போதுமான அளவு வளரவில்லை. குறிப்பாகக் கலைப்பாடங்கள் சார்ந்து நாம் வளரவில்லை. பெங்களூரில் உள்ள பல கல்வி நிறுவன நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். அவற்றின் அமைப்பும் இளையவர்களை நடத்தும் விதமும் அங்கே உள்ள படிப்புகளும் எனக்கு வியப்பைத் தருகின்றன. தமிழ்நாட்டில் ஏராளமான சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெங்களூரில் உள்ளது போலப் பல்துறைப் படிப்புகளை இணைத்துக் கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள் இல்லை. பெங்களூருக்கு நிகராக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. பல்கலைக்கழகங்களோ படிப்புகளோ இல்லை. பொறியியல், மருத்துவம் மட்டும் கல்வியல்ல. அவற்றுக்கு இணையாகவும் மேலாகவும் இருக்கும் தகுதி கொண்டவை கலைப்பாடங்கள். அவற்றில் அரசு நிறுவனங்கள் சிறிதும் கவனம் கொள்ளவில்லை. சுயநிதிக் கல்வி நிறுவனங்களிலும் இல்லை. அதில் பெருங்கவனம் செலுத்த வேண்டும் என்று
நினைக்கிறேன்.
கேரளத்தில் மொழி, இலக்கியம், நவீனக் கலை சார்ந்த படிப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. காலடியில் உள்ள சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்திற்கு ஒருமுறை சென்றிருந்தேன். பெயர் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் என்றிருந்தாலும் அம்மொழிக்கு ஒரே ஒருதுறைதான் இருக்கிறது. மலையாள இலக்கியம், தத்துவம், கவின் கலைகள் என்று விதவிதமான படிப்புகளைக் கொண்டிருக்கிறது. அதன் அமைப்பே ஒரு கலைக்கூடம் போலிருக்கிறது. செங்கற்களை அடுக்கி நிறுத்திய தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனக் கட்டிடங்களைப் பார்த்த கண்களுக்குக் கேரளச் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் பேரழகாகத் தோன்றியது. ஒன்றிய அரசிடம் நிதியுதவி பெற்றாலும் அப்பல்கலைக்கழகத்தைத் தனவயப்படுத்தி வைத்திருக்கிறது கேரள அரசு.
பிற மாநிலக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குப் பெருஞ்சுதந்திரம் தருகின்றன. சுயேச்சையாக இயங்கும் மாணவர் அமைப்புகள் பல இருக்கின்றன. அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் சாவித்திரி அம்பேத்கார் பண்பாட்டு மையம் என்னும் மாணவர் அமைப்பு ஒன்றுக்குப் பேசப் போனேன். அங்கே மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் வியப்பளித்தது. அவர்களே நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள், நடத்துகிறார்கள், உரையாடுகிறார்கள், விவாதிக்கிறார்கள். மாணவர் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற திராவிட இயக்கம் ஆளும் மாநிலத்தில் மாணவர்களுக்கு அத்தகைய சுதந்திரம் இல்லை.
இப்படிப் பலவற்றைப் பிற மாநிலக் கல்வி நிறுவனங்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
விஜயகுமார்: உ வே சாமிநாத ஐயருக்கும் ஜி யு போப்புக்கும் இடையேயான நட்பு குறித்து நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை பிரமாதமானது. இப்படி இந்திய மொழி அறிஞர்களுக்கும் மேலைநாட்டு மொழி அறிஞர்களுக்குமான உறவு ஆரோக்கியமானது எனத் தோன்றுகிறது. பிற நாடுகளில் / இந்திய அளவில் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது. தற்போதும் இத்தகைய உலகத் தொடர்புகள் உண்டா? கருத்தரங்குகள் ஏதும் நடக்கின்றனவா? தமிழ் அல்லாத பிறதுறை அறிஞர்களும், மாணவர்களும் வெளிநாடுகளிலிருந்து பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்ததற்கான சில புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அத்தகைய ஆசிரியர் – மாணவர் பகிர்வு தற்போது நடக்கிறதா?
பெமு: அதைப் பற்றிய விவரம் எனக்குத் தெரியவில்லை. தமிழறிஞர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் இப்போது சுருங்கிப் போய்விட்டன. பெரும்பாலான தமிழ்த்துறைகளில் யார் பணியாற்றுகின்றனர் என்னும் விவரமே எனக்குத் தெரியவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதும் வெளியுலகுக்குத் தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றும் ய.மணிகண்டன், கோ.பழனி ஆகியோர் இந்த ஆண்டு ஓய்வு
பெறுகின்றனர். அதற்குப் பின் அங்கும் என்ன நடக்குமோ தெரியவில்லை.
தமிழ்ப் பேராசிரியர்கள் நவீன இலக்கியத்தை வாசிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை 1950, 60களில் கடுமையாக முன்வைத்தவர்கள் க.நா.சு., சி.சு.செல்லப்பா முதலியோர். சி.கனகசபாபதி, எழில்முதல்வன் எனச் சிலரேனும் அப்போது நவீன இலக்கியம் தொடர்பாகக் கவனம் செலுத்தினர். பின்னர் இரா.மோகன், சு.வேங்கடராமன், வீ.அரசு, அ.ராமசாமி, சிற்பி, இரா.சந்திரசேகரன் போன்ற ஒருசிலரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடிந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, எல்லாமே பாடம் மட்டும் நடத்தும் சாதாரணக் கல்லூரி வகுப்பறைகளாகச் சுருங்கி விட்டன. அப்போது நவீன இலக்கிய ஈடுபாடு இல்லை என்றாலும் பழந்தமிழ் இலக்கியப் புலமை பெற்ற பேராசிரியர்கள் பலர் இருந்தனர். இன்று எந்தப் புலமையும் அற்றவர்கள் பல்கலைக்கழக நாற்காலிகளில் போய் உட்கார்ந்திருக்கின்றனர். நினைவில் தேடிப் பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவருமே இல்லை. என்ன நடக்கிறது? ஒன்றுமே நடக்கவில்லை. தமிழ்நாட்டைக் கடந்து தில்லி, ஜவகர்லால் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைதான் ஓரளவு நம்பிக்கை தருகிறது. இங்கே ஒன்றுமே
இல்லை. ஆராய்ச்சிக்கு என்று தொடங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இன்று அது சுயநிதிக் கல்லூரியைப் போல நடந்து கொண்டிருக்கிறது. அங்கே ‘அயலகத் தமிழ்’ என்றொரு துறையும் உண்டு. ஆனால் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தான் தெரியவில்லையோ என்னவோ?
கடந்த முப்பது ஆண்டுகளாகப் பல்கலைக்கழகப் பணியிடங்கள் ஏலத்தில் போகின்றன. பல லட்சம் பணம் கொடுத்து நாற்காலியைப் பிடிப்பவர்கள் எப்படி இருப்பார்கள்? என்ன செய்வார்கள்? திராவிட இயக்கங்கள் எல்லோரையும் உயர்கல்விக்குக் கொண்டு வந்தது சாதனைதான். சமூக நீதிதான். ஆனால் புலமைக்கு மதிப்பளிக்காமல் பணத்தைக் குறியாகக் கொண்டிருந்தமையால் உயர்கல்வியின் தரம் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இடஒதுக்கீட்டு உரிமை பெறும் எல்லாப் பிரிவிலும் திறமையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் தற்காலிகப் பணிகளில் குறைந்த ஊதியத்தில் முடங்கியுள்ளனர். இது உயர்கல்வியில் நிகழ்ந்த அநீதி. இதை இனிச் சரிசெய்ய முடியுமா என்று தெரியவில்லை. சரிசெய்ய முயன்றால் எத்தனை காலம் ஆகுமோ?
திருக்குறளைச் சந்தத்தோடு இரண்டு அடிகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரியில் பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்காகத் தமிழ்நாடு அரசின் அழைப்பில் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்து என்னைப் பார்க்க நாமக்கல் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். நாமக்கல் தமிழ்ச் சங்கத்திலும் இராசிபுரம்
திருவள்ளுவர் அரசு கல்லூரியிலும் அவரைப் பேச வைக்க முயற்சி எடுத்தேன். பேசினார். இங்கே இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. இதுதான் நிலை.

விஜயகுமார்: அண்மையில் ஜி.டி.நாயுடு என்ற பெயரை மேம்பாலத்திற்குச் சூட்டியதில் சாதிப்பெயரை வைத்துள்ளனர் என்கிற சர்ச்சை எழுந்தது. வரலாற்று மனிதர்களை சாதிப்பெயரோடு அடையாளப்படுத்துவதை எப்படிப் புரிந்துகொள்வது? உ வே சாமிநாத ஐயர், தியாகராச செட்டியார், அரங்கநாத முதலியார் என்கிற பெயர்கள் பாடத்திட்டத்தில் புகும்போது அவை எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன?
பெமு: ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டுவதில் பிரச்சினை எழுந்தமைக்குச் சாதிப்பெயர் மட்டுமல்ல, அது தெலுங்கு பேசும் சாதி என்பதும் காரணம். தமிழ்த் தேசிய அடிப்படைவாதம் இன்று எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு அது. ஜி.டி.நாயுடு பெயரைச் சூட்டுவதற்கும் வாக்கரசியலில் ஒரு கணக்கு இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது ஒருபுறம் இருக்கட்டும்.
இப்போது பள்ளிப் பாடநூல்களில் இடம்பெறும் அறிஞர்களின் பெயர்களில் எல்லாம் சாதிப் பின்னொட்டு நீக்கப்பட்டுத்தான் இருக்கிறது. உயர்கல்விப் பாட நூல்களிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். உ.வே.சாமிநாதையர் – உ.வே.சாமிநாதர் ஆகியிருக்கிறார். சி.வை.தாமோதரம் பிள்ளை – சி.வை.தாமோதரனார் என்றானார். இப்படிப் பல. எனக்கு இந்த மாற்றத்தில் உடன்பாடில்லை. 1929ஆம் ஆண்டு சாதிப் பின்னொட்டை நீக்கும் தீர்மானத்தைப் பெரியார் தம் சுயமரியாதை இயக்க மாநாட்டில் நிறைவேற்றினார். அதன் பின் படிப்படியாகச் சாதிப் பின்னொட்டு நீக்கம் நடைபெற்றது. 1950க்குப் பின் வந்த எந்த அறிஞர் பெயரிலும் சாதிப் பின்னொட்டைக் காண முடியாது. இது வரலாறு.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதிப் பின்னொட்டோடு அறியப்பட்டவர்களை அப்படியே விட்டுவிடுவதுதான் வரலாற்றுக்குப் பொருந்தும். ஒருகாலத்தில் சாதிப் பின்னொட்டைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது, உயர்சாதியினர் மட்டும் அவ்வாறு போட்டுக் கொண்டனர், அவர்களே அறிவுத்துறையில் அப்போது ஆதிக்கம் செலுத்தினர், பெரியாரின் தீர்மானத்திற்குப் பிறகு அவ்வழக்கம் கைவிடப்பட்டது என்னும் வரலாற்றை விளக்க வேண்டியது பாடம் நடத்தும் ஆசிரியரின் வேலை.
ஜி.டி.நாயுடு போல வ.வே.சு.ஐயர், கே.கே.பிள்ளை எனச் சாதிப் பெயரையே இயற்பெயர் போலக் கொண்டோரை என்ன செய்வது? பின்னொட்டு நீக்கம் செய்த பெயர்களை மனதில் பதித்துக் கொண்ட மாணவர்கள் பின்னர் மூல நூல்களைப் பயிலும் போது பெயர்க்குழப்பம் வரவும் செய்யலாம். எல்லா மூல நூல்களிலும் நீக்கம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது வரலாற்றுப் பிழையும்கூட. பள்ளிப் பருவத்தில் ‘உ.வே.சாமிநாதையர்’ என்பதில் உள்ள ‘ஐயர்’ என்பது சாதிப்பெயர் என்று நாம் சொன்னால்தான் பிள்ளைகளுக்குப் புரியும். சொல்லாவிட்டால் அது இயற்பெயர் என்றே கொள்வர். உயர்கல்வியில் தாராளமாக வரலாற்று விளக்கம் தரலாம். ஆகவே மத அடிப்படைவாதம் தமக்கேற்ப எல்லாவற்றையும் மாற்றுவது போல நாமும் செய்யக் கூடாது என்பது என் பார்வை.
விஜயகுமார்: ஒரு கல்லூரி முதல்வராக சில திட்டங்களை செயல்படுத்தும் போது ஆசிரியர்களின் பிற்போக்குச் சிந்தனையைக் கண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்திலும் இதைப் பார்த்தோம். ஆசிரியர்கள் தங்களைப் புதிய தொழில்நுட்பங்களுக்கு, நவீன சிந்தனைகளுக்குத் தம்மைத் தயாராக்கிக் கொள்ளப் போதுமான புத்தாக்கப் பயிற்சிகள் உண்டா? உங்களின் கழிமுகம் நாவலிலும் இப்படியொரு, புதியவற்றிக்கு முகங்கொடுக்காத அலுவலர் வருகிறார்.
பெமு: பணிக்காலத்தில் புத்தாக்கப் பயிற்சி ஒன்று (Orientation course), புத்தொளிப் பயிற்சி (Refresher course) இரண்டோ மூன்றோ முடிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. அவை குறிப்பிட்ட துறை சார்ந்தவை. முழுமையாக நம் வகுப்பறைக் கல்வி போல ஆசிரியர் மட்டும் பேசப் பிறர் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டிய முறையில்தான் அவை நடக்கின்றன. இப்போது அவற்றையும் இணையம் வழியாகக் கொண்டு வந்துவிட்டனர். அவற்றை முடித்தால்தான் பதவி உயர்வு பெற முடியும் என்றிருப்பதால் அப்பயிற்சிகள் சடங்குத்தன்மை பெற்றுவிட்டன. அவற்றால் இம்மியளவும் பயன் கிடையாது. உயர்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதுகூட இல்லை.
ஒருபாடத்தில் எல்லா மாணவர்களும் தோல்வி அடைந்துவிட்டால் கூட ஆசிரியரை நோக்கி ஒருகேள்வியும் வருவதில்லை. பள்ளியில் கேட்கிறார்கள். தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. உயர்கல்வியில் எந்தக் கேள்வியும் இல்லை. அரசு கல்லூரிகளில் வேலைப்பளு என்பதே இல்லை. வெளிப்படையாகச் சொன்னால் வேலையே இல்லை. பொதுவாக எட்டு மணி நேரம் வேலை என்கிறோம். அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஐந்து மணி நேரம்தான் வேலை. அதாவது கல்லூரியில் இருக்க வேண்டியது ஐந்து மணி நேரம். ஒரு பாடவேளை என்பது குறைந்தபட்சம் ஐம்பது நிமிடம் அதிகபட்சம் ஒருமணி நேரம் எனப் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு விதி இருக்கிறது போல. நாம் எப்போதுமே குறைந்தபட்ச நேரத்தைத் தானே எடுத்துக்கொள்வோம்? ஐந்து மணி நேரத்திலும் பத்துப் பத்து நிமிடங்களைக் கழித்துவிட்டால் ஐம்பது நிமிடம் போய்விடும். ஆக மொத்தத்தில் நான்கு மணி நேரம் கல்லூரியில் இருந்தால் போதும். அதிலும் முன் அனுமதி, பின் அனுமதி எல்லாம் எடுப்பார்கள்.
வாரத்திற்குப் பதினாறு மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும் என்பது விதி. சனி ஞாயிறு போக வாரத்தில் ஐந்து நாள்தான் வேலைநாட்கள். ஆனால் ஆறுநாள் என வைத்துக்கொண்டு கால அட்டவணை போடுவார்கள். வாரத்திற்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு மணி நேரம்தான் ஓர் ஆசிரியருக்கு வகுப்பு. துறைத்தலைவருக்குப் பத்து மணி நேரம் மட்டுமே. அதிலும் ஏதேனும் விழா, மாணவர் சேர்க்கைப் பணி உள்ளிட்டவை வந்தால் வகுப்பு ரத்தாகும். ரத்தான வகுப்பை மீண்டும் எடுக்க வேண்டியதில்லை.

ஒருபாடத்திற்குத் தொண்ணூறு மணி நேரம் வகுப்பு நடக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஐம்பது மணி நேரம்கூட வகுப்பு நடைபெறாது. அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அதில் பங்கேற்க வந்திருந்த மாணவர்களுக்கு அன்றைய வகுப்புகள் ரத்தாகிவிட்டன. அவற்றை ஈடு செய்யும் வகையில் வேறு நாட்களில் கூடுதல் வகுப்பு நடக்கும் என்று சொன்னார்கள். ஒருபாடத்திற்குத் தொண்ணூறு மணி நேரம் வகுப்பு என்றால் கட்டாயம் தொண்ணூறு மணி நேரம் நடந்திருக்க வேண்டும். அது ஆசிரியர் பொறுப்பு. நமக்கு அப்படிப் பொறுப்பெல்லாம் கிடையாது. வகுப்பு ரத்தாவதைப் பற்றிக் கவலையே இல்லை.
ஒரு பருவத்திற்குத் தொண்ணூறு வேலைநாள். இருபருவத்திற்கும் சேர்த்து நூற்று எண்பது நாள். தற்செயல் விடுப்பு உள்ளிட்டவை எல்லாம் போக ஓர் ஆசிரியர்
ஆண்டுக்கு நூற்றைம்பது நாள் கல்லூரிக்கு வந்தால் போதும். உலகத்திலேயே இத்தனை குறைவான வேலைநாளும் குறைவான வேலைநேரமும் கொண்டது அரசு கல்லூரி ஆசிரியர் பணிதான். நிரந்தர ஆசிரியரின் மாத ஊதியம் ஒருலட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரைக்கும். இவ்வளவு இருந்தும் ஆசிரியர்கள் வாசிப்பதில்லை. தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முயல்வதில்லை. வகுப்புக்குத் தயாரிப்பதில்லை. மாணவர்களிடம் அணுக்கம் காட்டுவதில்லை. அவர்கள் பெயரைக்கூடத் தெரிந்து கொள்வதில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று கல்வித்துறை சார்ந்த பல வேலைகளும் கணினி வழியாக நடைபெறுகின்றன. அதற்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக்
கொள்ளாததால் கௌரவ விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் அத்தகைய வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதில் அறிவியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் படுமோசம். மின்னஞ்சல் கூடப் பார்க்கத் தெரியாத துறைத்தலைவர்கள் உண்டு. இணைய வழிக் கூட்டத்தில் இணையத் தெரியாத ஆசிரியர்கள் அனேகம். அவர்கள் பிள்ளைகளோ மாணவர்களோ உடனிருந்து உதவியாக வேண்டும். சுயகற்றலுக்குப் பழகாமையும் சோம்பேறித்தனமும் அவர்களை இப்படி வைத்திருக்கின்றன.
‘பாடம் நடத்த விடாமல் இதைக் கொடு, அதைக் கொடு என்று தொந்தரவு செய்கிறார்கள்’ என எப்போதும் புகார் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தாலும் மீத நேரம் என்ன செய்கிறார்கள்?
ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பணி மட்டுமல்ல, கற்பித்தல் சார்ந்த பணியும் உண்டு. மாணவர்களுக்கு அரசு ஒரு சலுகை கொடுத்தால் அதைத் தம் மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கருதி வேலை செய்ய வேண்டாமா? அந்தச் சலுகையைப் பற்றிய உணர்வற்றுத் தங்களுக்கு வேலைச் சுமை என்று புலம்புவார்கள். நம் சமூகம் இன்னும் பலபடி முன்னேற வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு வகுப்பறை தாண்டி நிறையப் பணிகள் இருக்கின்றன. அவற்றை விருப்பத்தோடு செய்ய வேண்டும். அதற்கெல்லாம் எப்போதுதான் வழி பிறக்குமோ? ஆசிரியர்களுக்கு உண்மையான புத்தாக்கப் பயிற்சிகள், தொழில்நுட்பப் பயிற்சி, அரசுத் திட்டங்கள் பற்றிய அறிமுக வகுப்புகள் என அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். அவற்றில் சிறுதேர்வும் வைக்கலாம். பயிற்சியின் நடைமுறைப் பயன்பாடு பற்றி அவ்வப்போது அறிதலுக்கும் வழி வேண்டும். சில கடுமைகளைப் பின்பற்றினால்தான் ஆசிரியர்களைச் சமூக உணர்வுள்ளவர்களாக ஆக்க முடியும்.
[தொடரும் …]

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















கல்லூரிகளில் பேராசிரியர்கள், நன்றாக பாடம் எடுக்கும் கல்லூரிகள் அதிகம் உள்ளதை நான் பார்த்து ரசித்துள்ளேன். நேற்று செங்கல்பட்டு அரசுக் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாக சென்றிருந்தேன். அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒழுக்க சார்ந்த பண்புகளை கவனித்தேன். எல்லா பேராசிரியர்களும் அந்த வகுப்புகளுக்கு செல்வதையும் கண்டேன், அதே போல் மாணவர்களை கட்டுபாட்டில் வைத்திருந்ததையும் கவனித்தேன். அதே போல் IIT போன்ற நிறுவனங்களுக்கு மாணவர்களை அதிகபடியாக தயார்படுத்தியிருப்பதை கண்டேன். ஆனால், நீங்கள் கூறும் ஆசிரியர்கள் எல்லாக் கல்லூரிகளிலும் இருக்கின்றார்கள். இதில் நன்றாக பாடம் எடுக்கும் பேராசிரியர் தெரிவதில்லை. அரசு கல்லூரிகளிலில் முதல்வர் சரியாக இருக்க வேண்டும். ஒரு சார்பாகவும், சாதியின் அடிப்படையிலும், அதே போல் ஆளுமை இல்லாமலும் இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். தற்போது எல்லாம் தொலைபேசி உலகம் என்பதால் தொழில்நுட்ப தெரிந்தவர்கள் அதிகம் தான். ஆனால் அரசுக் கல்லூரிகள் ஒரு சில பகுதிகளில் அதிகபடியான சாதிய பின்புலம் கொண்டவர்களின் ஆதிக்கமும் அதில் சிலர் அரசியல் செய்வது நல்ல பேராசிரியர்களுக்கும், அந்த கல்லூரிக்கும் கெட்ட பெயர் வருகிறது என்பது என் கருத்து. நன்றி.
வணக்கம் ஐயா
நான் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்
தாங்கள் சொல்வது மிகச்சரி.புத்தகம்படிக்கும் ஆசிரியர் மிக மிக மிக குறைவு.கிட்டதட்டஇல்லவே இல்லை எனலாம்.
வெறும்பாடங்களைமட்டுமே வாந்தி யெடுக்கின்றனர் வகுப்பில்.அது சார்ந்த நிகழ்கால நிகழுவுகளையோ கடந்த கால நிகழ்வுகளையோ எந்த ஆசிரியரும் கூறி
நான் கண்டதேயில்லை.
Update என்பதை. இல்லை ஐயா.
நடை உடை யில் அதிக கவனம் செலுத்தும் ஆசிரியர்களே அதிகமுள்ளனர்.
இவர்களிடையே நான் என்னை odd one out ஆகப் பார்க்கிறேன்.அதை எவ்வாறு சரி செய்வதென்றறியாதிருக்கிறேன்.வீண்கதைகள் பேசுவலற்கு செலவிடும் நேரத்தில் கால் வாசிகூட வாசிப்பிற்கு செலவிடுவதில்லை.
நன்றாக வேலையில் ஏமாற்றும் ஆசிரியர்களே
மிகதிக வேலை பளு என புலம்பித் தவித்து அலட்டுகிறாரார்கள். நடுவில் சொந்த வேலைக்கு பர்மிஷன் எடுத்துவிட்டு (அதுவும் தினமும்) வேலை முடித்து மாலை 6 முதல் 7 வரை சிறப்பு வகுப்பு நடத்தி அதிகாரிகளிடம் பெயர் வாங்கிக் கொள்கிறார்கள்.ஒழுங்காகப் பள்ளி வேலை நேரத்தில் பள்ளியில் மட்டுமே இருக்கும் எங்களைப் போன்றோர் கோமாளிகளாக்கப்படுகிறோம் .எப்படி இவர்களை எதிர் கொள்வதென்றே தெரியவில்லை வழி இருந்தால் சொல்லுங்கள்.என்னால் ஆனதை மாணவர்களுக்குச் சொல்லி வழி காட்டிவருகிறேன்.தாங்கள் கூறுவது போல் கடுமைகளைக்
கடைபிடிக்க யாரும் தயாராயில்லை.பள்ளித் தற்காலிகத் தலைமைகள் உட்பட
பதவி மோகத்தோடு உள்ளனர்.மேலும் அவர்களின் பாத வருடிகளையும்
பக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர்.அந்த பாதவருடிகளே அத்தனை violations ம் செய்வது.
அவர்கள் அனைவரும் ஒற்றுமையின்சின்னமாகவே உள்ளனர்
உள்ளக் குமுறலுடன் ஏதும் செய்வதறியாமலுள்ளேன்.
நன்றி.
அற்புதமான கேள்விகளுக்கு அறிவார்ந்த விளக்கங்கள் தந்த பேராசிரியர் பெருமாள் முருகன் மற்றும் ஆய்வர் விஜயகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. தமிழக பல்கலைக்கழகத்தில் நிலவும் சூழல் குறித்து விரிவாக விளக்கவும். 2000-2010 காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பல தமிழக பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்கள் சேர்க்கை குறைந்து பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் குறைந்து தன் சிறப்பையும் மதிப்பையும் இழந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று நினைக்கிறேன்.
பொறியியல் மற்றும் மருத்துவ இளங்கலை படிப்பில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு போட்டி போட்டுகொண்டு வந்து சேரும் பிற மாநில மாணவர்கள், முதுகலை படிப்பிற்கு வரும் சதவிகிதத்தின் அளவை கொண்டு இங்குள்ள உயர்கல்வியின் தரத்தை ஒருவர் மதிப்பிட முடியும். பொருளாதார ரீதியாக முன்வைக்கப்படும் இக்கல்விகளின் நிலைமை இதுவென்றால், கலை மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளை கேட்கவேண்டியதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பயிலசென்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இதற்க்கு ஒரு சாட்சி. பொதுவாக இங்கு கல்வி சார்ந்த விவாதம் உருவாகும்போது எல்லாம் அது வெறும் பள்ளி மற்றும் இளங்கலை படிப்பு சார்ந்து நின்றுவிடுவது நம் துரதிஷ்டம். அவ்வகையில் முனைவர் பட்டம் பெற்று ஆய்வில் உள்ள ஒருவர் இந்த உரையாடலை நேர்காணல் வழியாக பொது வெளியில் அகழ் போன்ற ஒரு தீவிர இலக்கிய இதழில் முன்னெடுப்பது ஒரு புது முயற்சி. கேள்விகளுக்கு துறை சார்ந்து அனுபவம் உள்ள திரு பெருமாள் முருகன் போன்ற ஒரு எழுத்தாளரை தேர்வு செய்திருப்பது கேள்விக்கான ஞாயமான பதிலை தேடுவதில் உள்ள முனைப்பை காட்டுகிறது.
உயர்கல்வித்துறை கவனிக்கப்படாத துறையாக உள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் நியமனம் செய்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது. பள்ளிக் கல்விக்குப் பிறகு படிக்கத் தேவையில்லை என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எண்ணுகின்றனர். எப்போது மாற்றம் வரும் என்று தெரியவில்லை.