/

தேன்கூடு: தீபு ஹரி

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

எல்லா விஷயங்களும் என்று சொல்ல முடியாது, என்னைச் சுற்றி எத்தனையோ நல்ல விஷயங்களும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருவதில்லை. கெட்ட விஷயங்கள் அதிலும் அருவருப்பான விஷயங்கள்தான் காரணமே இல்லாமல் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தொலைக்கிறன.

மூன்று மாதங்கள் இருக்கும். எழுந்து பல் துலக்கியபடியே பால்கனி கதவைத் திறந்தபோது மொய் மொய் என்று தேனீக்கள் பறந்தபடி இருக்க, அங்கே ஒரு பெரிய தேன்கூடு தொங்கியது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் விதிர்த்துப்போய் நின்றுவிட்டேன். பிறகு ஓடிவந்து சரவணனை எழுப்பினேன். அவன் “நம்ம பால்கனியிலயா?” என்று அரைத்தூக்கத்தில் எழுந்து அந்தக் கதவை திறக்கப் போனான். நான் பதட்டமாகி “கதவைத் திறக்காத சரவணா, ரொம்ப பெரிய கூடு, ஒன்னு ரெண்டு உள்ள வந்தாக்கூட போச்சு” என்றேன்.

அவன் கீழே போய் அங்கிருந்து தேன்கூட்டைப் பார்த்து மொபைலில் படம் எடுத்து வந்தான். மேல் சுவரின் பாதியிலிருந்து தொடங்கி பால்கனியின் தடுப்புக் கம்பிகள்வரை பெரிதாகத் தொங்கியது. பார்க்கும்போது உடல் அருவருப்பில் சிலிர்த்தது.

சரவணன் அபார்ட்மெண்ட் அசோஸியேஷனுக்குப் போய் தகவல் சொல்ல, அவர்கள் தேனீக்களைக் கொல்லாமல் கூட்டை அகற்றும் ஆட்களை வரவழைக்க முயற்சி செய்தார்கள்.

இரண்டுநாள் ஆகியும் யாரும் வந்தபாடில்லை. அதற்குள் ஏசிக்காக விடப்பட்டிருந்த துளையின் வழியாகவும், எக்ஸாஸ்ட் ஃபேனின் இடைவெளி வழியாகவும் ஒன்றிரண்டு தேனீக்கள் உள்ளே வர ஆரம்பித்தன.

“இது சாதா தேனீ இல்லை. மலைத்தேனீ. ரொம்ப பத்திரமா இருங்க” என்று பார்த்தவர்கள் எல்லோரும் எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

நாங்கள் வீட்டிலிருந்த சிறிய சிறிய துளைகளை எல்லாம் கவனமாக பேப்பர்கள் வைத்து அடைத்தோம். இரண்டு நாட்கள் கழித்து “கோவிட் சமயம் இல்லையா. உயிரோட கூட்டை ரிமூவ் பண்றவங்க கிடைக்கல. பெஸ்ட் கண்ட்ரோல் ஆளுங்களை வரச்சொல்லி இருக்கோம்” என்று அசோஸியேஷனிலிருந்து கூப்பிட்டுச் சொன்னார்கள். அதே நாள் மதியத்தில் இரண்டு பேர் வந்து மருந்து அடித்து கூட்டை அப்புறப்படுத்தினார்கள்.

“நாளைக்கு க்ளீன் பண்ணுங்க சார். இன்னிக்கு கதவையே திறந்துடாதீங்க. அங்கங்கே ஓடின பூச்சிகளும் திரும்பி வரப்போ இந்த மருந்து வாசத்துக்கு செத்துடும். பயப்படாதீங்க” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அடுத்த நாள் சரவணன் பெருக்கி எடுக்கும்போது ஒரு குப்பைக் கவர் முழுக்க தேனீக்கள் நிரம்பின.

இதெல்லாம் நடந்து வெறும் இரண்டே மாதத்தில், அதே இடத்தில் அச்சு பிசகாமல் ஒரு பெரிய தேன்கூட மறுபடியும் உருவாகி இருந்தது.

முந்தையநாள் சாயங்காலம்தான் , காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்தபடி நானும் சரவணனும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். இன்று கதவைத் திறந்தால் தேன்கூடு. இந்தமுறை முதலில் அதைப் பார்த்தது சரவணன். அவன் அலறியடித்துக்கொண்டு உள்ளே வந்து சொன்னபோது, என்னை பயமுறுத்தத்தான் விளையாடுகிறான் என்று நினைத்துச் சிரித்தேன். அவன் மறுபடியும் பெஸ்ட் கண்ட்ரோல் ஆட்கள் எண்ணை மொபைலில் தேடி எடுத்து அழைத்த போதுதான், அவன் சொன்னது உண்மை என்று உணர்ந்து, என் உடல் நடுங்கியது.

திரும்ப அதே இடத்தில் கூடு உருவாகி இருப்பதை நாங்கள் அவர்களிடம் சொன்னபோது அவர்களே அதிசயித்தார்கள்.

“என்ன சார் ரெண்டு மாசத்துலேயே திரும்ப கட்டியிருக்குன்றீங்க?”

“சரி எப்படினாலும் இன்னிக்கு வர முடியாது. ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. காலையில நேரமே வந்து க்ளியர் பண்ணி தந்தடறோம்” என்றார்கள்.

சரவணன் வீட்டிலிருந்த சிறிய சிறிய துளைகளை எல்லாம் மறுபடியும் பேப்பர் வைத்து அடைத்துக் கொண்டிருந்தான். என் மனம் இருண்டு போயிருந்தது. படுக்கையறைக்கு வந்து கதவை அடைத்து அமர்ந்து கொண்டேன்.

“அதை ரிமூவ் பண்ற வரைக்கும் இங்கேயேதான் இருக்கப் போறேன் சரவணா. ஒரு ரெண்டு மூணு நாளைக்கு நீயே சமைச்சுக்கோ, காபி போட்டுக்கோ, எல்லாம் பண்ணிக்கோ, சரியா?”

கண்ணை மூடும்போதெல்லாம் பெரிய பெரிய மலைத்தேனீக்கள் விர்விர்ரென்ற சீரான சத்தத்துடன் பெரிய கூடாக தொங்கிக் கொண்டு இருந்தது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. தட்டில் கைவைத்து சாப்பாட்டை அள்ளுகிற போது, காபி டம்ளரை வாய்க்கருகே கொண்டு போகும்போது அதிலிருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் பறந்தன.

தேனீக்கள், தேனீக்கள், தேனீக்கள்.

என் தலைக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தேனீக்கள் பறந்து கொண்டே இருந்தன. இந்த உலகமே பெரிய தேன்கூடு மாதிரி தோன்றியது.

“அய்யோ சரவணா, எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. ஏதோ பெரிய கெட்டது நடக்கப் போகுது. நீ வேணாப் பாரேன். ரொம்பக் கெட்டது. ரொம்ப, ரொம்பக் கெட்டது.”

நான் தலையைப் பிடித்தபடி பேசிக் கொண்டே இருந்தேன். சரவணன் என்னை சமாதானப்படுத்தும் விதமாக பக்கத்தில் அமர்ந்து முதுகை தடவியபடி “இன்னும் ரெண்டு மாசம்கூட ஆகலை. திரும்ப அதே இடத்துல கூடு கட்டியிருக்குன்னா, நமக்கு ரொம்ப அதிர்ஷ்டமாம். இப்போ புதுசா சேர்ந்திருக்கிற செக்யூரிட்டி சொன்னார்”

“போடா எருமை. மயிறு அதிர்ஷ்டம். அந்த ஆள் வந்து இருப்பானா தேன் கூட்டுக்குள்ளே. லூசு மாதிரி பேசிகிட்டு”

“சரி இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற? பெஸ்ட் கண்ட்ரோலுக்கு கால் பண்ணியாச்சு. எல்லா சந்து பொந்துகளையும் அடைச்சாச்சு. வேற என்னதான் செய்யனும்?எனக்கும் கடுப்பாதான் இருக்கு. அத புரிஞ்சுக்கோ”

“இந்த வீடே நமக்கு வேண்டாம் சரவணா. எப்போ பாரு பிரச்சினை. லெப்ட் சைடு பால்கனிலே எப்போ பாரு புறாங்க வந்து அசிங்கம் பண்ணிட்டே இருக்கு. கழுவி முடியலை. அன்னிக்கு ஒரு புறா செத்துகூட கிடந்ததே. இப்போ இந்த இடத்துல ரெண்டாவது வாட்டி தேன்கூடு. நாம வேற எங்கியாச்சும் போயிடலாம். இதை வாடகைக்கு கொடுத்துடலாம். ப்ளீஸ்டா…ப்ளீஸ்…ப்ளீஸ்”

“என்ன ரஞ்சனி இது அபசகுணம், சுபசகுணம்னு பேசிகிட்டு. எங்க வீடு கட்டினாலும் ஏதோ ஒரு பிரச்சினை வந்துட்டுத்தான் இருக்கும். நீ எல்லாத்தையும் அதிகமா யோசிச்சு, யோசிச்சு சிக்கலாக்கிக்கறே. நான், பாப்பா எல்லோரும் இதே வீட்ல உன் கூடவேதான் இருக்கோம். நாங்க இப்பவும் ஹால்ல உட்கார்ந்து டிவி பார்க்கலையா? எங்களுக்கு மட்டும் பயமோ, கவலையோ இல்லையா? அதுங்க எந்த வழிலேயும் வீட்டுக்குள்ள வராதபடி நல்லா அடைச்சாச்சு. காலையில அவங்க வந்து கூட்டை அப்புறப்படுத்திடப் போறாங்க. இப்படி நினைச்சு, உன்னை நீயே சமாதானப்படுத்திகனும். உன்னை மாதிரியே நாங்களும் பெட்ரூம்குள்ளே வந்து கதவை அடைச்சுட்டு உட்கார்ந்துட்டா எல்லாம் சரியாகிடுமா?”

நான் எதுவும் சொல்லாமல் சுவரையே வெறித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னை பரிதாபமாகப் பார்த்தபடி “இங்க பாரு கண்ணம்மா, எல்லாத்தையும் பூதாகரமாக்கி, உன்னோட கற்பனைல உருவாகிற ஆபத்துகளுக்கு வீட்டு மூலைல ஒளிஞ்சிகிட்டு இருக்காதே. வா, வந்து கொஞ்ச நேரம் எங்களோட உட்கார்ந்து டிவி பாரு. எனக்கும் பாப்பாவுக்கும் நடுவில உட்கார்ந்துக்கோ வா.” அவன் என் தலையை வருடியபடி சொன்னான். நான் எதுவும் பேசாமல் அவனை இடுப்போடு அணைத்து, அவன் நெஞ்சில் தலையை சாய்த்துக் கொண்டேன்.

சரவணன் என்னை கவலையோடு சில நொடிகள் பார்த்துவிட்டு, பெருமூச்சொன்றை வெளிப்படுத்தி, என் கைகளை விலக்கிவிட்டு வெளியே போனான்.

நான் அப்படியே படுக்கையில் சரிந்து ஒருக்களித்துப் படுத்தேன். ஒன்று போனால் இன்னொன்று. அந்த இன்னொன்று போனால் மற்றொன்று. ஒரு நாள் தேன் பூச்சிகள் கூடு கட்டி தொலைக்கின்றன, ஒரு நாள் வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகிறது, சிங்க் பைப் அடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறாது தாலியறுக்கிறது ஒரு நாள். எல்லா ஒரு நாளும் , கேடுகெட்ட ஒரு நாள். இழவு நாற்றமெடுத்த ஒரு நாட்கள்.

ஒரு மனிதன் இந்த மாதிரி சில்லறை பிரச்சினைகளில் லோல்பட்டே தன்னுடைய வாழ்நாளின் பாதியை கழிக்க வேண்டும் போல. இந்த மாதிரி அற்ப காரியங்களில் கவனம் செலுத்தியே தொலைகிற வாழ்க்கை பேரிம்சை.

இந்த ஊரில் எத்தனை மரங்கள், எத்தனை ஆளே இல்லாத அனாமத்தான கட்டிடங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் போய் கூடுகட்டித் தொலையாமல், நான் சற்று நேரம் சாவகாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டே காபி குடிக்கிற அந்த இடத்தில்தான் வந்து கட்டித் தொலைக்க வேண்டுமா?

எனக்கு சோர்வாக இருந்தது. அழுகையாக வந்தது. தலைக்குள் தேனீக்களுக்கு இணையாக யோசனைகள் பறந்து கொண்டிருந்தன.

கொஞ்சநாள் முன்பு பார்த்த Black Mirror சீரிஸில் ஒரு எபிசோட் நினைவு வந்தது. “தேனீக்கள் இல்லைனா இந்த உலகத்தோட சமநிலை குலைஞ்சிடும்.” Fuck you! Fuck the world!

எனக்கு என்னோட சமநிலைதான் ரொம்ப முக்கியம். இந்த உலகம் எக்கேடு கெட்டா எனக்கென்ன? போன வாரம் ஒரு கிராமத்துல தோட்ட வேலைக்குப் போன ஒரு அம்மாவை தேன் பூச்சிங்க கடிச்சு முகம் உடம்பெல்லாம் கொதகொதன்னு வீங்கிடுச்சாம். ‘என்னைக் கொன்னுடுங்க, கொன்னுடுங்கன்னு’ கையெடுத்து கும்பிட்டாங்களாம் டாக்டரை. எந்த ட்ரீட்மெண்டும் சரிப்படாம ரொம்ப வேதனைப்பட்டு கடைசியில செத்துப் போயிட்டாங்க. இப்ப சொல்லு. உனக்கு யாரோட சமநிலை முக்கியம்? உன்னோடதா? உலகத்தோடதா?

எனக்கு என்னோட வீடு சுத்தமா இருக்கணும். ஜன்னல் கண்ணாடிகள்ல தூசு படியக்கூடாது. கிச்சன் மேடை பிசுக்கில்லாம இருக்கணும். பாத்ரூம் பளிச்சுன்னு இருக்கணும். எல்லாமே அததோட இடத்தில, வெச்சது வெச்ச மாதிரி கலையாம, சீரா இருக்கணும். Bright and Beautiful home, Bright and beautiful world. என்னோட உலகத்துல புழு, பூச்சிங்க, கெட்ட நாத்தம் அடிக்கிற சாக்கடை, முக்கியமா தேன்கூடு இது எதுவும் வேண்டாம்.

I hate bee hives, I hate bee hives, I hate bee hives.

“சரவணா மணி என்னடா?”

“5.30 ஆச்சு”

“ச்சீ. என்னடா இது. நேரமே போய் தொலைய மாட்டேன்னுது. எப்படா காலைல வரும்னு இருக்கு. ஆமா காலைல எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னாங்க?”

“ஏழரைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க. பார்ப்போம்”

“எதுக்கும் நீ நைட் ஒரு வாட்டி கால் பண்ணி அவங்களுக்கு ஞாபகப்படுத்துறியா ப்ளீஸ்? மறந்துடப் போறாங்க அதுதான் சொல்றேன்”

“சரிடி. நீ கொஞ்ச நேரம் தூங்க முயற்சி பண்ணு”

“நான் ட்ரை பண்ணினேன்டா. தூக்கம் வரமாட்டேன்னுது. கண்ணை மூடிப் படுத்தா அந்தக் கருமம்தான் கண்ணுக்குள்ளே நிக்குது. ஒரே அழுகையா வருதுடா”

அவன் என்னை தன்மீது சாய்த்துக் கொண்டான். 

“It’s ok கண்ணு. It’s ok. நாளைக்கு காலைல எல்லாம் சரியாகிடும். கொஞ்சம் காப்பி போட்டுத் தரவா? குடிக்கிறியா?”

“ம்”

செல்போனில் மெஸேஜ் ஒலி கேட்டது. ப்ரபா அனுப்பியிருந்தான்.

“Wt dng?” என்று ஒளிர்ந்தது திரை.

நான் பாய்ந்து மொபைலை எடுத்து “டேய் பிரபா, எங்க வீட்ல திரும்ப தேனீங்க கூடு கட்டிடுச்சுடா. முன்ன கட்டியிருந்த அதே இடத்துல. ஒரே அழுகையா வருதுடா” என்று வாய்ஸ் நோட் அனுப்பினேன்.

பதிலுக்கு அவனிடமிருந்து கண்களில் நீர் தெறிக்கச் சிரிக்கிற மாதிரி இரு மஞ்சள் இமோஜிகள்.

“ச்சீ. பே. எவ்ளோ கவலையா சொல்லிட்டு இருக்கேன். இப்படி சிரிச்சிட்டு ரிப்ளை அனுப்புற?”

அவன் உடனே என்னை அழைத்தான்.

எடுத்த உடனே “என்ன” என்றேன்.

“இல்லடி. நீ இவ்ளோ பதட்டமா அழற மாதிரி சொன்னியா. அதான் சிரிப்பு வந்துடுச்சு. சாரி. சாரி. சரி இப்போ என்ன செய்யப் போறீங்க அதை ரிமூவ் பண்ண?”

“பெஸ்ட் கண்ட்ரோலுக்கு சொல்லியிருக்குடா. நாளைக்கு வந்துடுவாங்க நேரமே.”

“மறுபடியும் பெஸ்ட் கண்ட்ரோலா? போனவாட்டியே அவ்வளவு புலம்பினயே? நாம எல்லாம் எவ்ளோ செல்பிஷ்? நாம் வாழ எல்லாத்தையும் அழிக்கிறோம்னெல்லாம் பேசினியேடி” என்று சொல்லி பெரிதாகச் சிரித்தான்.

எனக்கு எரிச்சலாக வந்தது.

“ரொம்ப சிரிக்காதே. இந்த வாட்டி புலம்பமாட்டேன் சரியா?”

“சரி சரி calm down. கோபப்படாதே. அன்னிக்கு கேரளாவில ஒரு ஆள் வயத்தில குட்டியோட இருந்த யானையை சுட்டுக் கொன்னப்போ நான் இதைத்தான சொன்னேன். ஒருவேளை சுட்டவனுக்கு அதோட வயித்தில் குட்டி இருந்தது தெரியாம இருந்திருக்கலாம். இல்லேன்னா அவன் வாழ்வாதரமான பயிர்களை அழிச்சிடுச்சேன்னு ஒரு ஆவேசத்துல யோசிக்காம சுட்டு இருக்கலாம். அப்போ எப்படி என்கிட்ட சண்டை போட்ட நீ!”

“டேய் அதுவும் இதுவும் ஒன்னா? இப்போ எதுக்குடா நீ எனக்கு கால் பண்ணினே? நான் என்னென்ன தப்பு எப்பெப்போ செஞ்சேன்னு சொல்லிக்காட்டவா? நா கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன் விடு. என் நிம்மதி எனக்கு முக்கியம்.  போயும் போயும் உன்கிட்டே சொன்னேன் பாரு. I’m tired both mentally and physically. நா இன்னொரு சமயம் பேசறேன். பை”

“ஏ, ஏய் சாரிடி. சாரி நிஜமாவே. நா உன்னை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை. எல்லா கதைகளுக்கும் இன்னொரு பக்கம் உண்டுன்னு சொல்ல முயற்சி பண்ணினேன். அவங்கவங்களுக்கு அவங்கவங்க நம்பிக்கைகள், நியாயங்கள்.”

“எல்லோராட நியாமும் எல்லா நேரமும் சரியா இருக்காதுடா. யாரும் அதுக்கு விதிவிலக்கில்ல. Sorry.நான் இப்போ எதையும் விவாதிக்கிற மனநிலையில இல்லை. அப்புறம் பேசறேன்.”

“சரி சரி நம்ம இதெல்லாம் இப்ப பேச வேண்டாம். இன்னும் என்ன காலைல வரைக்கும்தானே? தூங்கு கொஞ்ச நேரம். You sound restless. சரவணன் எங்க?”

“காபி போடப் போனான்”

“சரி சரி எதுனா சாப்டுட்டுத் தூங்கு. காலைல திரும்ப கூப்பிடறேன். சரியா?”

“ம்”

“சரவணா காபி போட்டுட்டியா?”

“ம். இதோ ஆச்சு”

“காபியோட இன்னிக்கு ரெண்டு மாத்திரை சேர்த்துக் கொடுத்துடுடா. இல்லைனா நைட் எனக்குத் தூக்கம் வராது.”

சரவணன் எதுவும் சொல்லாமல் கூட இரண்டு மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்தான்.

உறக்கம் வரத் தொடங்கியது. கடைசியாக மணி பார்த்த போது இரவு 8.30.

காலை.

எழுந்தபோது விர்ரென்ற சத்தம். மருந்து நெடியும், வெள்ளைப் புகையும் மூடிய கதவுகளையும் தாண்டி உள்ளே வந்தது. சிறிது நேரம் கழித்து பால்கனி கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே வந்த இருவரில் ஒருவர் “லாஸ்ட் டைம் மாதிரிதான் சார். சாயந்திரம்வரை கதவைத் திறக்க வேண்டாம். அப்புறமா க்ளீன் பண்ணிக்கோங்க” என்றார்.

சரவணன் முன்னூறு ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

“சரி சார்” என்று அவர் பாக்கெட்டில் வாங்கி வைத்துக் கொண்டார்.

நான் “அண்ணா, திரும்ப ஒன்னும் வந்துடாதே?” என்று கவலையுடன் கேட்டேன்.

“பால்கனி காலியா இருக்குமா. அதான் கூடு கட்ட தோதா இருக்குன்னு வருதுங்க போல. ஒரு கம்பி வலை அடிச்சு விட்டுடுங்களேன். என்ன, உட்கார்ந்துட்டு வேடிக்கை பார்க்க எல்லாம் வாட்டமா இருக்காது. ஆனா இந்தத் தொந்தரவு குறையும்.”

அவர்கள் வெளியேறிய பின் சரவணன் கதவையடைத்துவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான். நானும் தொப்பென அவனருகே அமர்ந்து அவன் தோள்களில் முகத்தைச் சாய்த்துக் கொண்டேன்.

கொஞ்சநேரம் கழித்து நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து “சரவணா, இன்னொரு தடவை கூடு கட்டினா, நாம யோசிக்கவே வேண்டாம்டா. உடனே வீடு மாத்திடலாம். சரியா?” என்றேன்.

அவன் சோர்வாகத் தலையசைத்தான்.

தீபு ஹரி

தீபு ஹரி சமகாலத்தில் கவிதைகள், சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருபவர். பொன்முகலி என்ற புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். இவரது ‘தாழம்பூ’ கவிதைத் தொகுப்பு தனித்து கவனம் பெற்றது.

1 Comment

  1. அருமையான கதை….நல்ல செய்தியை தந்தது……இந்த பூவுலகில் உயிரினங்களுக்கு பிந்தையவர்களான மனிதர்களின் கருணையற்ற போர் முடிவில்லாதது…பல சமயங்களில் உயிரினங்களை வில்லன்களாக்கி கொன்று குவிக்கும் படுபுத்திசாலி கூட்டம் மனிதர்கள்….

உரையாடலுக்கு

Your email address will not be published.