/

வரலாறெனும் அன்றாடம் – அமர்மித்ராவின் துருவன் மகன் நாவலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

நூற்றுக்கணக்கான நாடுகள் அமைதியாக வாழ்ந்துவருகின்றன. வரலாறு இந்த உண்மையைக் கணக்கில் கொள்வதில்லை; கவனத்தில் கொள்ள வரலாறால் முடியவும் முடியாது. வரலாறு என்பது உண்மையில் அன்பு அல்லது ஆன்மா சமநிலையில் செயலாற்றிக்கொண்டிருப்பதன் மீதான ஒவ்வொரு குறுக்கீட்டையும் பதிவு செய்வதாகவே இருக்கிறது – காந்தி

வரலாறு என்ற சொல்லே ஒரு வகையில் சற்று மயக்கம் தருவதாகத்தான் இருக்கிறது. வரலாற்றை இரண்டு காரணங்களுக்காக நாம் வாசிக்கலாம். ஒன்று சமகாலத்தை புரிந்துகொள்ள. மற்றொன்று சமகாலத்தில் இருந்து தப்பிச்செல்ல. முதல் காரணத்திற்காக வரலாற்றின் மீது ஆர்வம் கொள்கிறவர்கள் மிகக்குறைவு. வரலாற்று மிகுபுனைவு என்ற எழுத்து வகைமை இன்றும் செல்வாக்கு குன்றாமல் இருப்பதற்கு இரண்டாம் வகை வாசகர்களே காரணம் என நினைக்கிறேன். ஒரு நூல் நம்மை காலத்தில் எவ்வளவு பின்னே இழுத்துச் செல்கிறதோ அந்த அளவு அதன் சுவாரஸ்யத்தன்மை கூடும். ராமச்சந்திர குஹா நமக்கு சமீபமாக இருக்கும் காலத்தை வரலாறாகப் பார்ப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன என்று சொல்கிறார். காலம் பின்னே செல்லச் செல்ல வரலாற்றில் ஒருவித மர்மமான இருள் வந்து படிகிறது.

கென் லியூ எழுதிய Good Hunting என்ற நீள்கதை ஒரு மரபார்ந்த கிராமத்தை மின்சாரம் ரயில் போன்ற நவீன விஷயங்கள் மர்மம் இழக்கச் செய்வதை உணர்ச்சிகரமாக பேசுகிறது. ஒரு வகையில் இவ்வுணர்வு நம் அனைவரிடமும் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவர்கள் என்று நாம் நம்புகிறோம். ஊர்க்குடிகளும் பேரரசுகளும் நம்முடைய இன்றைய நவீன ஜனநாயக அரசுகளில் இருந்து மாறுபட்டவையாக இருப்பதால் அன்றைய மனிதர்களின் வாழ்க்கைமுறையும் அதன் காரணமாகவே அவர்களுடைய உணர்வுகளும் நம்மிலிருந்து வேறுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் சில சமயம் நம்முடைய மனம் புறக்காரணிகளால் தீண்டப்படாதிருப்பதையும் நாம் உணர்கிறோம். அவ்வுணர்வை அடையும்போது வரலாற்று மனிதர்கள் நம்மை பரவசம் கொள்ளச் செய்யும் கோமாளிகளாகவோ அதிமனிதர்களாகவோ நமக்கு தெரியமாட்டார்கள். இன்றிருக்கும் பாடுகளையும் துயர்களையும் போல தங்களுடைய காலத்தின் பாடுகளையும் துயர்களையும் அனுபவித்து மறைந்தவர்களே அவர்களும். இவ்வுணர்வை ஒரு புனைவில் வெளிக்கொணர்வது சவலான விஷயம்.

அமர் மித்ராவின் துருவன் மகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உஜ்ஜைனி நகரிலும் அவந்தி நாட்டிலும் நிகழும் சம்பவங்களாலான நாவல். இப்படி ஒரு களத்தை தேர்ந்து கொண்டு அதை ‘யதார்த்தமாக’ சொல்கிறேன் என்று ஒரு நாவலாசிரியர் பிடிவாதம் பிடித்தால் அது இன்றைய காலத்தின் வறண்ட யதார்த்தவாத நாவல்களில் ஒன்றாக மாறிவிடும். அதேநேரம் வரலாற்றை ‘மர்மம்’ நிறைந்ததாக கற்பனை செய்து கொண்டு கதையை நகர்த்தினால் நாவல் வரலாற்று மிகுபுனைவின் எல்லையில் போய் நிற்கும் அபாயமும் இருக்கிறது. இவ்விரண்டு எல்லைகளுக்கு இடையே ஒரு சமநிலையை பேணியபடியே கதையைச் சொல்லி இருப்பதுதான் துருவன் மகன் நாவலின் வெற்றி என்று சொல்ல வேண்டும். நாவலின் இந்த சமநிலைத்தன்மையை சுட்டுவதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.

நாவலில் ஜோதிடம் ஒரு முக்கியமான கூறாக இடம்பெறுகிறது. பொதுமக்களின் நாட்கணக்குகள்கூட சதுர்தசி, அமாவாசை,பௌர்ணமி, சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் என்றுதான் அமைகின்றன. வெகுநாட்களாக உஜ்ஜைனியில் மழையும் இல்லை. மழை எப்போது வரும் என்று கணிக்க அரசர் தேசத்தின் தலைமை ஜோதிடரையே நம்பிக்கை இருக்கிறார். ஆனால் தலைமை ஜோதிடர் விருஷபானு நாவல் முழுக்க தன் திறன்களை இழந்த தடுமாறும் முதியவராக மட்டுமே வருகிறார். அவருடைய மாணவனாக வரும் புத்திசாலியான தாமிரதுவஜன் தன்னுடைய அவதானிக்கும் திறனால் விஷயங்களை கணிக்கிறானே  ஒழிய அவனுடைய ஜோதிட அறிவு அவனுக்கு கைகொடுப்பதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் நாவலில் ஜோதிடம் மழையை கணித்தல் போன்றவை ஒரு புனைவெழுத்தாளனுக்கு தன்னுடைய ‘கற்பனையை’ விரிப்பதற்கான இடங்கள். ஆனால் அவ்விடங்களைக்கூட அமர் மித்ரா நிதானமாகவே கையாண்டிருக்கிறார்.

அடுத்ததாக இந்நாவலில் இடம்பெறும் கணிகையர். தேவதத்தை, சதுரிகா, லலிதா என முக்கியமான பாத்திரங்களாக கணிகைகள் இடம்பெறுகின்றனர். ஆனால் அவர்களை ஒரு காலகட்டத்தின் ‘அவலத்தை’ சுட்டும் குறியீடாகவோ அல்லது ஆண்களுடன் அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபடும் ‘முற்போக்கான’ பெண்களாகவோ நாவல் சித்தரிக்கவில்லை. ஒவ்வொருவருடைய தனித்தன்மையும் அற்புதமாக வெளிப்படும் வண்ணமே நாவலில் இப்பாத்திரங்கள் இடம்பெறுகின்றன.

ஒரு தீபாவளி சமயத்தில் முதியவரான சிவநாதர் தன்னுடைய நண்பன் துருவனின் மகனைத் தேடி (நாவல் முழுக்க துருவனின் மகன் ‘துருவன் மகன்’ என்றே குறிப்பிடப்படுகிறான்) அவந்தியின் தலைநகரான உஜ்ஜைனிக்கு வருவதில் நாவல் தொடங்குகிறது. சிவநாதரின் மகன் கார்த்திக்குமார் அவந்தி ஈடுபட்ட ஒரு போரில் தொலைந்துவிடுகிறான். சிவநாதருடன் கார்த்திக்குமாரின் மனைவி ரேவா மற்றும் மகள் கந்தவதி இருவரும் வசித்து வருகின்றனர். கந்தவதியின் களித்தோழனான துருவன் மகனை நாவல் முழுவதும் இவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இத்தேடலின் ஊடாக அமர்மித்ரா வரலாற்றில் எந்தவித ‘திருப்பமும்’ நிகழாத பஞ்சம் மெல்லத் தலைகாட்டத் தொடங்கி நிலைபெறும் ஒரு காலத்தை நம்மிடம் சித்தரித்துக் காட்டுகிறார்.

அவந்தியின் அரசன் பர்த்ருஹரி திருமணமாகி பதினெட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறான். அவன் மனைவி பானுமதி அவனிடம் சலிப்பு கொண்டு அவனுடைய சிற்றன்னை மகனாக விக்ரமனை காதலிக்கத் தொடங்குகிறாள். விக்ரமனுக்கு அவந்தியை கைப்பற்றிக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. அவனுக்கு தேசத்தின் தலைமைப் பூசகர் துவிஜதேவரும் பெரும் செல்வந்தரான வணிகர் சுபக் தத்தரும் துணை நிற்கின்றனர். இப்படி கதையாக சுருக்கிச் சொல்லும்போது சுவாரஸ்யமாக தென்படும் இந்நாவல் வாசிப்பதற்கு அத்தகைய சுவாரஸ்யம் எதையும் அளிப்பதில்லை. அது ஏன் என்று கேட்டுக்கொள்ளத் தொடங்கும்போதுதான் நாவலின் தத்துவ தளத்திற்குள் நாம் நுழைய முடியும்.

அரசருக்கு எதிரான சதி என்பது உண்மையில் வாசகனை உற்சாகம் கொள்ளச் செய்யும் ஒரு இடம். ஆனால் இந்த நாவலில் ‘சதி’ என்று நமக்கு எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. நாட்டை பஞ்சம் சூழ்வதை முன் உணரும் அரசன் மகாகாலர் கோவிலின் அர்ச்சகரும் தேசத்தின் தலைமை பூசகருமான துவிஜதேவரை சந்திக்கச் செல்கிறான். அர்ச்சகரின் காம வெறிக்கு பலமுறை பலியான கணிகை லலிதா கோவிலை ஒட்டிய அர்ச்சகரின் அறைக்கு வெளியே படுத்திருக்கிறாள். மயக்கத்திலும் மனதில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் ரணங்களாலும் அரசனை மகாகாலர் என்று எண்ணி அவனை கூடலுக்கு அழைத்து அங்கேயே கூடுகிறாள். அரசன் பர்த்ருஹரியும் இணங்குகிறான். ஆனால் இச்செய்தி நாட்டில் பரவுகிறது. அரசன் கோவிலில் கணிகையை கூடியதால்தான் மழை பொழியவில்லை என்று மக்கள் நம்பத் தொடங்குகின்றனர். இவ்வாறாக நாவலில் ஒவ்வொரு தருணமும் தன்னிச்சையாக நிகழ்வதும் அது அரசனுக்கு எதிராகத் திரும்புவதும் தொடர்ந்து நிகழ்கிறது. இந்நாவலின் சுவாரஸ்மற்ற தன்மைக்கு இந்த ‘தன்னிச்சையான’ இயல்புதான் காரணமாக அமைகிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை ஒரு சில ‘நிகழ்வுகளே’ திரும்பத் திரும்ப விவரிக்கப்படுகின்றன.

தலைமை ஜோதிடர் ஆசாரியார் விருஷபானுவின் மாணவன் தாமிரதுவஜன் மீண்டும் மீண்டும் தொலைந்துபோன துருவன் மகனை தன் கணிப்பின் மூலம் கண்டுபிடிக்க முயல்கிறான். கந்தவதி அவனுக்காக காத்திருக்கிறாள். அரச கணிகை தேவதத்தை சுபக் தத்தரை நிராகரித்துக் கொண்டே இருக்கிறாள். உத்தப நாராயணன் சதுரிகாவை கொடுமைப்படுத்திக்கொண்டே இருக்கிறான். ரேவா தன் கணவன் கார்த்திக்குமாருக்காக காத்திருக்கிறாள். அரசன் உட்பட அனைவருமே மழைக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே கொடுமை நிறைந்ததாக இருக்கும் வாழ்வில் இரண்டரை ஆண்டுகளாக நீங்காத வறட்சி மேலும் மேலும் இடர்களைச் சேர்க்கிறது. மன்னன் மதிப்பிழக்கிறான். மக்கள் தங்களுடைய நீதி உணர்வை மெல்ல மெல்ல இழக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் கொடூரமானவர்களாக மாறுகின்றனர். இவை அனைத்தையும் நாவல் சித்தரிப்பினூடாக மட்டுமே சொல்கிறது. சொல்முறையில் இருக்கும் இறுக்கமான நவீனத்தன்மை நாம் வாசித்துக் கொண்டிருப்பது எல்லா காலத்துக்குமான ஒரு கதையாக மாறிவிடுகிறது.

அரசாங்கம், மக்கள், அரசன், கணிகையர் என ஒவ்வொரு அம்சத்தையும் இந்த நாவல் பிரித்து அணுகி இருந்தாலும் சமூகம் என்பது ஒற்றை உயிருள்ள அமைப்பென இயங்குவதை சுட்டி நிற்கிறது. ஒருவகையில் மேற்சொன்ன அனைத்து அம்சங்களையும் இணைப்பதாக துருவன் மகனுடைய இருப்பே இருக்கிறது. அவந்தியின் தலைநகரான உஜ்ஜைனியில் உள்ள மக்கள் அரசன் கோவிலில் கணிகையைப் புணர்ந்ததால் தேசத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று நம்புகின்றனர். தங்களுக்கு ஒரு அரசன் இருப்பதே தெரியாத தேசத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் மக்கள் தங்களுடைய அரசனைப் பற்றித் தெரிந்து கொண்டதும் அவனை தங்கள் குடிப் பெண்களுடன் வறண்ட நிலத்தில் கூட அழைக்கின்றனர். அப்படிக் கூடினால் மழை வரும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு காலத்தில் இருவேறு முரண்படும் நம்பிக்கைகள் ஒரே காலம் என்பது ஒரே மனநிலையைச் சுட்டுவது அல்ல என்று சொல்வதாக உள்ளது.

ஒரே நிகழ்வுகள் மீள மீள நிகழ்வது போலத் தெரிந்தாலும் நாவல் உச்சம் நோக்கி நகர்கையில் ஒவ்வொன்றும் திரிபடைகின்றன. அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் ரேவாவும் அவள் மகள் கந்தவதியும் தாங்கள் இருவருமே ஆழத்தில் ஒரே ஆணுக்காக காத்திருக்கும் பெண்களோ என்று கொள்ளும் சந்தேகம் அவர்களை கசப்படைந்து விலகச் செய்கிறது. தன்னுடைய விசுவாசமான வேலைக்காரனின் மரணத்துக்கு காரணமாகிவிட்டோம் என சுபக் தத்தர் தேசத்தை விட்டு புறப்படுகிறார். துருவன் மகனுக்காக காத்திருக்கும் தேவதத்தை வணிகருடன் தேசத்தைவிட்டு கிளம்ப முடிவு செய்கிறாள். அரசன் பர்த்ருஹரிக்கு எதிரான சதித்திட்டம் நிறைவை நோக்கி நகரும் போது அவனுக்கு ஞானமளிப்பவனாக துருவன் மகன் மீண்டும் உஜ்ஜைனிக்குள் நுழைகிறான்.

ஒருவகையில் இந்த நாவலில் நாவலின் மாந்தர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அகத்தினை எதிர்நின்று நோக்கும் ஒரு தருணம் வருகிறது. அத்ருணத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களுடைய எல்லையை உணர்த்துவதாக அமைகிறது. தேவதத்தையின் மீது காதல் கொண்டான் என்பதற்காக சுபக் தத்தரால் துருவன் மகன் அவமானப்படுத்தப்பட்டு தேசத்தைவிட்டு துரத்தப்படுகிறான். அவனுடைய தொலைதலில் தொடங்கும் நாவல் கடும் வறட்சியை உஜ்ஜைனி சந்திப்பதை சாவகாசமாக சித்தரித்தப்படி நகர்கிறது.

வறட்சி தொடங்கும் சமயத்தில் நாவலில் இப்படி ஒரு வரி வருகிறது.

/இரக்கம்,பாசம்,அன்பு எல்லாமே நீர் மாதிரிதான். இது இப்போதுதான் குறையத் தொடங்கியிருக்கிறது தெரிகிறதா? இதற்குப் பிறகு இந்த நகரத்தில் அறிவு குறையத் தொடங்கும்/

துருவன் மகன் நகரத்தின் அறிவின் குறியீடாகவே வருகிறான். அரசனுக்கு எதிராக சதி செய்கிறவர்கள் அரசனின் புனிதம் கெட்டுவிட்டது என்று மக்களை நம்பவைக்க மழை வரக்கூடாது என்று நினைக்கின்றனர். ஆனால் துருவன் மகன் அரசனுக்கு அளிக்கும் ஞானம் வேறொரு பாதையைத் திறக்கிறது. நாவலின் இறுதி அத்தியாயம் அதுவரையிலான சமநிலையான சொல்முறையில் இருந்து மேலெழுந்து உணர்ச்சிகரமானதாக மாறுகிறது. உஜ்ஜைனியில் மீண்டும் அறிவும் உணர்ச்சியும் நிரம்பத் தொடங்குவதை சித்தரிப்பதாக நாவலின் முடிவு உள்ளது.

ஏராளமான பிழைகளைக் கொண்ட இம்மொழிபெயர்ப்பை பிழைகளை பொறுத்துக்கொண்டே வாசிக்க வேண்டியிருக்கிறது. போர், அரியணைப்போட்டி, பிரம்மாண்டமான சித்தரிப்புகள் என்று எந்த எல்லைக்கும் நகராமல் இன்றைய காலத்தின் சாமான்யத்தன்மையுடன் வரலாற்றை அணுகி எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் இருந்து வரலாற்றை அணுகுவது குறித்து தமிழ்ச்சூழல் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

2 Comments

  1. அருமையான விளக்கம்
    தெளிவான விமர்சனம்

உரையாடலுக்கு

Your email address will not be published.