அவன் வீட்டுச் சுவரில் ஒரு ரிப்பர் மோதியதில் விழுந்த பகுதியிலிருந்து கற்களை உடைத்து முழுமையாக தேறியதைக்கொண்டு சுவரில் உண்டான பெரிய இடைவெளியை மறைக்க அடுக்கியிருந்தனர். கல்லடுக்கு சரிந்து வெளியே விழாமல் இரண்டு கம்புகளை கத்தரிக்கோல் போல குறுக்காக கட்டி அடைவைத்திருந்தார் அவனது வாப்பா. வீட்டு முற்றத்தில் பெரிய மாமரத்தில் மிச்சமிருந்த ஒரே கிளையிலும் ஒரு பலகை ஊஞ்சலை கயிற்றால் கட்டி ஊஞ்சல் பலகையும் கயிறும் அவனுக்கெட்டாத உயரத்தில் கொழுவியிருக்கும். எப்போதாவது அடம்பிடித்தால் பின்னேரம் வகுப்பு முடிந்து வந்து அழுதுகிடப்பவனை ஆடவிடுவார். அவனுக்கு வாப்பாவென்றால் விருப்பம். சுவரில் ஓடும் அணில், பம்பாய் முட்டாய், குக்கூசு, சைக்கிள், சனத் ஜயசூரிய என எல்லாமே விருப்பம். அப்படித்தானே வாப்பாவுக்கும் உம்மா விருப்பமாயிருந்திருக்கும்.

” ஏன் மா வாப்பா ஒங்கொள விரும்பின எண்டு வாப்படம்மா நம்மளோட பேசுறல்ல. மாமியும் வாறல்ல நம்முட வீட்ட..? “

அவன் அடிக்கடி கேட்டாலும் அவனது அறிவுக்கு படுகிற பதிலை யாரும் சொல்லியதில்லை. அவன் வீட்டில் ஒரு குஷன் செட் இருக்கும். பாலைக்குத்திகளை நீவி மூன்று இருக்கைகளை சேர்த்தியாக பலகைகளைக்கொண்டு செய்த பெரிய இருக்கையும் இரண்டு தனி இருக்கைகளுமிருக்கும். இந்த இருக்கைகளில் கிடையாகவும் நிலையாகவும் இரண்டு சதுர வடிவ பஞ்சு சீற்றுகள் உறையிடப்பட்டு அமருவதற்கு சொகுசாக வைக்கப்பட்டிருக்கும். இந்த சீற்றுகளை தனியே எடுத்து கூடு போல அடுக்கி அவன் விளையாடுவது அவன் உம்மாவுக்கு பிடிப்பதில்லை. அவன் ஒவ்வொரு முறை விளையாடும் போதெல்லாம் அவள் திட்டி விரட்டிவிடுவாள்.

” இது எங்குட ஊட்ட சீதனமாத்தந்த குஷன், சின்ன கூரைப்பொட்டியோட தானே நீங்க வந்த “

என வாப்பாவையும் உம்மா சீண்டுவாள். அப்போதும் அவன் மீன் தொட்டியை வெறிக்க பாத்தபடியே அல்லது ஊஞ்சலிலின் கயிறு மாமரத்தோடு ஆடுவதை ரசித்தபடியே இருப்பான். அந்த நாட்களில் தேர்தல் காலம் என்பதால் கூட்டங்கள் நடக்கும். ஸ்பீக்கர் கட்டி இரண்டு ட்ரக்டர் பெட்டிகளை அருகருகே நிறுத்தி அதன் மேல் மேடையமைத்திருப்பர். மேடையில் கூட்டம் துவங்க எப்படியும் மாலையில் வெயில் இருட்ட ஆங்காங்கே ஃபோகஸ் லைட் தொங்கும். ஃபோகஸ் லைட் உள்ளே சூடான இழைவிளக்கில் விட்டில் விழுந்து பொசுங்கிப் பொசுங்கி அந்த நெடி மணக்கும். வாப்பா மினிஸ்டரோட ஆள். அவனை எல்லாக் கூட்டங்களுக்கும் சைக்கிளில் கூட்டிப் போவார். கூட்டம் துவங்க முன்னர் ஸ்பீக்கரில் இசுலாமிய கீதங்கள் காதைப்பிளக்கும். மேடைக்கு முன்னால் சாஷ்டாங்கமாக கவிழ்த்தப்பட்ட கதிரைகளில் அவன் ஓடிப் போய் குந்திவிடுவான். ஐஸ்கிரீம் காரன் ஹார்னை அமுக்கும் சத்தம் எங்காவது கேட்டால் குட்டிக்கரணம் போட்டாவது வாங்கியெடுத்துவிடுவான். இரவானதும் கூட்டம் ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக சனம் கூடிவிடும். மினிஸ்டர் கடைசியில் தான் வருவார். மினிஸ்டர் வரும் போது சனம் முண்டியடித்து ஆர்ப்பரித்து அவரை வரவேற்கும். பட்டாசுகளை பெட்டி பெட்டியாக குவித்து அக்கினி குண்டம் போல கொழுத்தி விடுவர். சத்தம் காது கிழிய பட்டாசு மருந்து வாசம் அந்த ஊரெல்லாம் மணக்கும். மினிஸ்டரை வாப்பாவும் இன்னும் சிலரும் தோளிலே சுமந்து மேடையில் கொண்டுபோய் விடுவர். மினிஸ்டர் மேடைகளில் படுகுஷியாக பேசுவார். அவர் பேச்சுக்கென்றே சுற்றுவட்டாரத்தில் ஒரு ரசிகக்கூட்டமிருந்தது. அவன் வாப்பாவுக்கு பியூன் வேலை மினிஸ்டர் போட்டு கொடுத்திருந்தார். அந்த விசுவாசத்தில் கட்சி தலைவரென்று அவன் வாப்பா பித்துப்பிடித்தபடி பேசுவார்.

***

பேட்டியை முழு சத்தமாக அவனது வீட்டு தொலைக்காட்சி பெட்டி கூவிக்கொண்டிருந்தது. தலைவர் அதிர அதிர பேசிக்கொண்டிருந்தார். வாப்பாவின் தோளிலிருந்து ரிமோட்டை கடித்த படி அவனும் பார்த்தபடியிருந்தான். ஒரு நொடியாவது சேனல் மாறிவிடக் கூடாதென ரிமோட் பேட்டரியை ஏற்கனவே கழட்டியிருந்தார் வாப்பா.

” ஆயுதம் என்பது பலமல்ல, பணம்..”.

தலைவர் இப்படி முழங்க காரணமில்லாமல் இல்லை. போர்நிறுத்த காலத்திற்கு பிறகான தமிழ் முஸ்லிம் இனமுரண்பாடு இன்னும் ஒரு படி மேலே சிக்கலை வளர்த்துக் கொண்ட காலகட்டம். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா தரப்பு முரண்பட்டு வெளியேறிய காலத்தில் இந்த முரண்பாடு மீண்டும் தொன்னூறுகளின் அவலநிலைக்கு கொண்டு போய் விடுமோ என்ற அச்சம் முஸ்லிம்களிடம் இருந்தது. அக்கரைப்பற்று எல்லைப்பகுதியிலும் விவசாயிகளிடத்தில் கிராமவாசிகளிடத்தில் ஒரு வகையான பதட்டம் இருந்திருந்தது. கருணாவின் எதேச்சாதிகார இன-வன்முறையும் சிறிலங்கா அரசின் ஆதரவும் தூங்கிய போதும் பலருடைய காதுகளை கூர்மையாக்கிவிட்டிருந்தது. அப்போதிருந்த பிரதமர் மகிந்தவின் விடுதலைப் புலிகளுக்கெதிரான நிலைப்பாடு தெற்கில் ஏற்படுத்திய அதிர்வலை, புலிகளோடு சமாதான உடன்படிக்கை செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் தலையிடியாக இருந்தது. கடும் போக்கு வாத மார்க்சிய கூட்டணிக்கட்சிகளின் நெருக்குவாரம் ஆட்சி மாறினால் இருக்குமென்று வியாபாரிகள் கூட கொழும்பிலிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் தான் மினிஸ்டரும் மகிந்த கூட்டணியில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். இதனால் அவர் உயிருக்கிருந்த ஆபத்தை அறிந்தவரென்பதால் ஊரில் சொந்த வீட்டிலல்லாது நண்பர்கள் ஆதரவாளர்களின் வீடுகளில் மாறிமாறி தங்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். மகிந்த கூட்டணி என்பதால் புலி எதிர்ப்பு, பிரிந்த வடகிழக்கு என அவரது பிரச்சாரத்தொனி தமிழ் ஆயுதக்குழுக்களை ஆத்திரமூட்டியது உண்மை. தேர்தல் நாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்ததால் வாப்பாவும் நண்பர்களும் முற்றத்திலிருந்து வாக்கு கணக்கு போட்டபடியிருந்தனர். தேர்தலன்றைக்கு வாகனங்களில் ஆட்களை வாக்குச்சாவடிக்கு ஏற்றுவது, வாக்களிக்க முடியாத வயதானவர்களையும் கூட்டிக் கொண்டு போய் தலைவருக்கு வெட்டச்சொல்வது, ஊரில் இல்லாத ஆட்களுக்கு பதிலாக கள்ள வோட்டு போட ஆட்களைத் தயார்படுத்துவது, தேர்தல் களத்தில் உள்ள கட்சி ஆட்களுக்கு சாப்பாடு, சிகரட் நேரத்திற்கு கிடைக்கும் படி பார்த்துக்கொள்வது, தலைவர் வரும் நேரத்தில் வாக்குச்சாவடியில் முன்னால் நின்று களத்தை கவனிப்பதென்று எக்கச்சக்கமான வேலைகள் இருந்தன. அப்போதுகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தொலைகாட்சி நேரலை நிகழ்ச்சிகள் குறைவு. சுனில் செட்டியின் ஜங்கிள் இந்தி படத்தை தேர்தல் நாளிரவு விசேட படமாக விளம்பரப்படுத்தியிருந்தனர். அவனும் ஆர்வத்தோடிருந்தான். வாப்பா அப்போது பள்ளிக்கு போகத்துவங்கியது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.

” ஒண்டுமில்லாட்டியும் பரவாயில்ல, தொழயாலும் பழக்கியிருக்கலாம். ஒங்குட உம்மா வாப்பா..”

என அவன் உம்மா, வாப்பாவை நக்கலடிப்பதுண்டு. வெள்ளிக் கிழமை மட்டும் குளித்து அத்தர் பூசி பச்சைத்தொப்பியோடு கிளம்பி விடுவார். அங்கு போய் வெளியில் கதைத்துக் கொண்டு திரியாமல் உள்ளே முன்னால் போய் இருங்கோ என்பாள் உம்மா. இப்போது வாப்பா ஐந்து வேளையும் பள்ளிக்கு போகிறார். தலைவர் இந்த முறையும் செயிக்க வேண்டும் என்று தான் போகிறார். அவன் தெருவிலிருந்து கொஞ்சம் தெற்காக நடந்தால் ஒரு வளவு வரும். மாலையானால் மற்ற பிள்ளைகளோடு அவனும் விளையாட போவதுண்டு. இப்போது அவன் போவதில்லை. அவன் வாப்பாவை அடிபார்ட்டியென்று எல்லோரும் கிண்டலடிக்கிறார்களென்று அவன் போவதை நிறுத்தியிருந்தான். அக்கரைப்பற்றில் ரவுடிகளுக்கு அடிபார்ட்டியென்று ஒரு விசித்திர நாமமுண்டு. நீ போய் சொல்லுடா நம்முட வாப்பா அடிபார்ட்டியில்ல பியூன் என்டு என அழுதவனை உம்மா சமாதானம் செய்வாள். ஒரு காலத்தில் தலைவருக்காக அடிதடியில் இறங்கிய பிள்ளைகள் இன்றைக்கு அரச இலாக்காக்களில் உத்தியோகம் பார்க்கின்றனர். ஆனாலும் அந்த பழிச் சொல் அவர்களை விட்டு நீங்காமல் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.

***

தேர்தல் நாளன்று காலையிலேயே வாடகைக்கு எடுக்கப்பட்ட வேன்களின் நடமாட்டமிருந்தது. வாக்குச்சாவடிக்கு வாப்பாவோடு பாடசாலைக்கு போகவும் உம்மா முதலில் பயந்திருந்தாள். எங்கே கொண்டு போறேள், எங்க பாம் வெக்கிறானெண்டும் தெரியா என உம்மா அச்சிறுத்தி இருந்தாள். வாக்களிக்கும் நிலையத்திற்கு என அம்புக்குறி காட்டப்பட்ட அறிவித்தல் பலகைக்கு பக்கத்தில் ஆயுதமேந்திய இரண்டு இராணுவத்தினர் கடமைக்காக நின்றிருந்தனர். கயிறு இரண்டு பக்கமும் கட்டப்பட்ட வரிசையில் வாப்பாவோடு அவனும் நின்றிருந்தான். வாப்பாவின் விரலில் மை பூசிய அந்த பெண் உத்தியோகத்தர் அவன் விரலிலும் தடவி விட்டார். வாக்குச் சீட்டை மடித்து அவனைத் தூக்கி பெட்டியிலிருந்த இடவினுள் போடச்சொல்ல அவனும் உற்சாகமாக உள்ளே தட்டிவிட்டான். வாக்குச் சாவடிக்கு வெளியே பரபரப்பாயிருந்தது. பெஜீரோவிலிருந்து கறுப்பு பிஜாமாவோடு தலைவர் இறங்க ஆட்கள் அவரை சூழ்ந்து கொள்ள மெய்ப்பாதுகாவலர் விலக்கி வழிவிடும் படி தடுத்துக் கொண்டிருந்தார். ஏறுவெயிலில் தகதகவென்று சிகப்பாக மின்னிய தலைவரை அவன் வாப்பாவும் போய் கட்டித்தழுவினார். அவன் வாப்பா முன்னர் இருந்த இடத்தில் இப்போது இளம் அடிபார்ட்டி ஆட்கள் சூழ்ந்திருந்தனர். ரத்தக்கண்களும் தடித்த வெள்ளி கழுத்துச்சங்கிலிகளோடும் அவர்கள் வெண்ணிற சேர்ட் அணிந்திருந்தனர். அவர்கள் வந்திருந்த வேனில் கட்சி நிறத்தாலான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தலைவரின் பெரிய படம் நான்கு பக்கமும் சிரித்தபடியிருந்தது. அவர்களை கண்டு அஞ்சுவதற்கொன்றுமில்லை. எதிர்காலத்தில் அரச இயந்திரத்தின் ஏதாவது ஒரு டயரை அவர்கள் உருட்டலாம். இந்த ரவுடிகளின் பின்னணி ஆபத்தானது. ஆயதக்கலாச்சாரம் விரவியிருந்த ஈழத்து சூழலில் தமிழர் ஆயுதக்குழுக்களுக்கு எதிராக முஸ்லிம் கிராமங்களில் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து ஊர்காவற்படைகள் இருந்து வந்தன. இவர்களுக்கு இருந்த அரச புலனாய்வுத்துறை ஆதரவினால் ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக இதிலிருந்தவர்களும் வேறு குழுக்களிலிருந்து விலகியவர்களையும் அரசியல் வாதிகள் உபயோகப்படுத்தியிருந்தனர். அரசியல் ரீதியாக தனக்கு எதிரானவர்களை அடக்குவதோடு கொலைகளையும் செய்ய இந்த குழுக்கள் தயங்குவதில்லை. பிறகு ஐந்தாறு டீவிக்காரர்களுக்கு தலைவர் பேட்டி கொடுத்தபடி இருக்க அவன் வாப்பாவோடு களவேலைக்காக வெளியேறிருந்தான்.

***

அன்றிரவு நிலவு நாளென்ற படியால் ரோட்டிலிருந்த லைட்டை அணைத்திருந்தாள் உம்மா. வீதிகளில் வாகன நடமாட்டம் சுத்தமாக இல்லாத பேய் அமைதியில் சருகுப்பூனைகளின் சரசரப்பு நன்றாக கேட்டது. பக்கத்து வீடுகளில் எரியும் லைட்டுகளை பார்த்து பரவாயில்லை எல்லோரும் விழித்திருக்கிறார்களென சிரித்து கொண்டபடி வறுத்த கச்சான், சோளம் பொறி, வறுத்த வடப்பருப்போடு டீவியின் முன்னால் குந்திவிட்டார் வாப்பா. வழக்கமாக படுக்குமறையிலிருந்து மெத்தையை இழுத்து ஹாலில் போட்டு அவனையும் கிடத்தி விட்டாள். சுனில் செட்டியின் படம் துவங்கும் போது எழுப்பும் படி அவன் கண்டிப்பாக சொன்னதில் அவனை எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டாள் உம்மா. உம்மாவை அணைத்தபடி கால்கள் இரண்டையும் வாப்பாவின் மேல் லாவகமாக தூக்கி போட்டபடி படம்பார்க்க தயாராகியிருந்தான். தேர்தல் முடிவுகளை சிங்களம் தமிழ் ஆங்கிலமென மூன்று மொழிகளிலும் சொல்லி மீண்டும் திரைப்படம் போடத்துவங்க மீண்டும் ஒரு தொகுதி முடிவு வரும். இப்படியே மூன்று மணிநேரத்தில் அரைமணி நேரம் மட்டும் தான் படம் பார்க்க முடிந்தது. அவனும் சலித்தபடி நம்மூர் ரிசல்ட் வந்திட்டா வென நச்சரித்தபடியிருந்தான். கொஞ்ச நேரத்தில் வாப்பா பள்ளிக்கு கிளம்பினார்.

” கொஞ்ச நேரத்தில் ரிசல்ட் வந்திடும், இதுதான் தொழுறது கடைசியாக்கும்..”

என வாப்பாவை சீண்டினாள் உம்மா. வாப்பா என்ன தான் உம்மா சீண்டினாலும் கோபித்துக் கொள்வதில்லை. அவனுக்கு தெரியும்; வாப்பாவுக்கு உம்மா விருப்பம். அவனுக்கு தூக்கம் வரிந்து விழ எழுந்து குஷனை இழுத்து கூடுபோல கட்டி உள்ளே குந்தியிருந்தான். அடிவானில் மெல்ல ஏறிய வெண்மை ஏதோவொன்றுக்காய் காத்திருப்பது போலவிருந்தது. திடீரென கேட்ட டுமிரென்ற சத்தத்தில் அதிர்ந்து போக உம்மா வாசலை எட்டிப் பார்த்தாள். பள்ளி ஒலிபெருக்கியில் யாரோ அழுவது போல கேட்டது.

” பெரிய பள்ளியில பாம் அடிச்சிட்டாங்களாம்..”.

தெருவில் கூக்குரலோடு ஆட்களும் வாகனங்களும் விரைந்த புழுதி வெளுத்த வெயிலில் கிளம்பியது தெரிந்தது. ரத்தங்கலந்த வெள்ளை சேர்ட்டுகளோடு அவர்கள் அவன் வாப்பாவை தூக்கிவந்தனர். ஹாலில் கிடந்த மெத்தை மீண்டும் அறைக்கே போனது. உம்மா அழுது கோலம் மாறியிருந்ததில் அவனுக்கு பார்க்கவே பயமாயிருந்தது. கட்டிலில் அவன் வாப்பாவை குளிப்பாட்டிய சிவப்பு நீரை ஊஞ்சலிருந்த இடத்தில் குழிவெட்டி இறக்கிவிட்டிருந்தனர். வாப்பா பள்ளிக்கு போகும் போது பூசிய அத்தர் வாசம் நிரம்பித்தளுதளுத்தது. அன்று மாலை அவனை அவன் வாப்பா நேற்று தூக்கியது போல இன்று யாரோ தூக்கி ஒரு பிடி மண் போடச்சொன்னார்கள். வாப்பாவை அடக்கிய இடத்தில் மினிஸ்டர் அவனை இடுப்பில் தூக்கிவைத்திருந்த படி உரக்கப் பேசினார்.

” நபீலை அடக்கியிருக்கிறோம். எனக்கு இப்போதும் நபீல் இடப்பக்கம் நிற்பதுபோல அவன் பாரம் என் இடுப்பை அழுத்துகிறது..” .

சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.