/

ஆனந்த் குமார் கவிதைகள்

1.

கன்னி

சாப்பாடு மேஜை நடுவில்

அள்ளிக் குவித்து நிற்கவைத்த

ஸ்பூன்களில்

ஒருத்தி மட்டும் அழகி

பிறந்ததிலிருந்தே 

அவள் அப்படித்தான்.

அவளுக்கு மட்டும்

கழுத்துக்குக்கீழ் ஒரு ஆபரணம்.

பார்த்தவர் நின்று கவனிக்கும்

பூரணம்.

வீட்டில் எல்லோருக்கும்

அவள் மீதே கண்

எனினும்

உப்பைக் கரைக்க

ஊறுகாய் எடுக்கவென

யாரும் அவளை தொடுவதில்லை.

உண்ண அமரும்

ஒவ்வொருவர் தேர்வும்

அவளைத்தான் முதலில் தேடும்

பாதம் மறைய ஆடைவிரித்து

ஒயிலாய்ச் சாய்ந்து நிற்கும்

அவள்

அடிதொட்டெடுத்துப் பார்த்துவிட்டு

கிண்ணத்துள் இட்டுவைப்பர்

மீண்டும் 

2.

தென்மலை குறிப்புகள்

நின்று நின்றேனும்

நிகழ்ந்து விடுகிறது பயணம்

அமைந்துவிடுகிறது

வளைவில் ஓரிலை

திருகி இறுக்கும்

காட்சியின் சட்டகம்

ஏற்றம் இறக்கம்

மாற்றுகிறது

வேகத்தின் விதிகளை

பழுதடைந்த சாலைகள்

போலவே

வேகத்தை குறைக்கிறது

அழகிய சாலைகள்

சென்றுசேர்ந்தபின்

கூட்டி வகுத்தால்

கிடைக்கும்

வேகத்தின் சராசரி

இவன் வயதைப்போல் இருக்கிறது

*

முடிவில்லாமல் விழுங்கிக்கொண்டிருக்கிறது

சாலை எனது வாகனத்தை

இடையிடையே

நீர் அருந்துவதுபோல்

கொஞ்சம் நிழல்களை

ஒன்றுமறியாது சாலையில்

உறங்கிக் கொண்டிருக்கின்றன

நான் சென்றபின்

துடித்தெழும் இலைகள்

*

எத்தனை கற்கள்

உள்கிடந்தாலும்

நானும் ஒரு கல்லை

ஆற்றில் எறிகிறேன்

அத்தனை நீர்

தழுவி ஓடினாலும்

நட்ட கல் வளருமா

வளரும்

எவ்வளவு நீர் குடித்ததோ

அவ்வளவு வளரும்

3.

மதுர மலர்

இரண்டு டீயில்

ஒன்று சர்க்கரை இல்லாமல்.

இப்போது

எங்கள் முன் அமர்ந்திருக்கின்றன

ஒன்றையொன்று காட்டிக்கொடுக்காமல்

வெப்பம் அவிழும்

ஆவியில் மட்டும் சின்ன

நளின வேறுபாடு

நாங்கள் தேர்ந்தெடுத்தோம்

அவரவருக்குப் பிடித்த

ஒரு வசீகர நடனத்தை

ஒரு நொடி

நிலைகுலைந்தன

உலகின் மதுர விகிதங்கள்

செடிமாற்றிப் பூத்தன இரு

சின்னஞ்சிறிய மலர்கள்.

(கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு)

ஆனந்த் குமார்

கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.

3 Comments

  1. உருவங்களைப் போலவே உங்கள் எழுத்துக்கும் நிழல் இருக்கிறது . அதன் நிழல்களை பின்தொடர்ந்து மகிழ்வான அனுபவம்

  2. /* நட்ட கல் வளருமா ? */
    நானும் என் சிறு வயது நண்பன் அங்கமுத்துவும் கல் வளருமா என்ற கேள்விக்குப் பதில் தெரிய, பள்ளி விட்டு வரும் ஒரு நாளில் சிறு கல் ஒன்றை எடுத்து பாதுகாப்பாக எடுத்து ஒளித்து வைத்தோம். தொடர்ந்து சில நாட்கள் பார்த்து வந்தோம். அப்புறம் மறந்தேவிட்டது, ஆனந்த் குமாரின் கவிதையில் எனக்கான பதில் கிடைக்கும் வரை.
    //நட்ட கல் வளருமா
    வளரும்
    எவ்வளவு நீர் குடித்ததோ
    அவ்வளவு வளரும் //

உரையாடலுக்கு

Your email address will not be published.