/

ஆனந்த் குமார் கவிதைகள்

1. சென்றுசேர்ந்திடாத நதி

நதியோரத்தில் நீ அமர்ந்திருந்தாய்
உன் ஆடையெங்கும் பதித்திருந்த
சிறிய கண்ணாடிகளினுள்
நதி ஓடிக்கொண்டிருந்தது

தான் சுமந்தலைந்த 
ஆயிரமாயிரம் பிம்பங்களிலிருந்து
இன்று அது விடுதலை அடைந்தது
குட்டி குட்டி மீன்களாக
அது தன்னை இப்போது 
மாற்றியிருந்தது

நின்று சுழன்று
முகம் பார்த்து
ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு
பாய்ந்துகொண்டிருந்தது 
உன்னில் நதி

அதன் தெறிப்புகள் 
உன்னில் வெளிப்படத்தொடங்கின 
உனது அசைவுகளில் 
அதன் ஓசை கேட்கத் தொடங்கியது 

ஆடைபற்றி நீ மெல்ல எழுந்தபோது 
ஒன்றில் விழுந்து 
ஒன்றில் எழுந்து
உன்னை தைத்து 
மகிழ்ச்சி மகிழ்ச்சியென 
வீடு வருகிறது 
இனி ஒருபோதும் 
சென்றுசேர்ந்திடாத நதி

2.

இரண்டு பறவைகள்
களித்து நுழைந்து
அசைத்த மரத்தின்
இதயத்தினின்று 
வீழ்ந்ததொரு
மூவாத இலை 

நடித்தது அது
பறவையென
நிகழ்ந்தது பறத்தலென
காதலென தன்னையே
கண்டு அவ்விலை
வீழ வீழ
சிரித்தது
எத்தனையெத்தனையோ முறை

3. 

துரத்திச் சிரித்தபடி
ஆற்றை 
நடித்துப் பார்த்துக்கொண்டிருந்தன
இரு தட்டான்கள்

அலைகள் மீது 
துள்ளி 
இழுப்பின் மேல் 
மிதந்து 

சிதறல்களில் ஒன்றையொன்று 
விடுவித்து பின் இணைந்து

வளைந்து எழுந்து பறந்து
வந்தன 
ஒரு ஆழச்சுழியின் மேல்

சுழன்று சுழன்று
அச்சுழியை காற்றில் 
விடுவித்தன காதலால்

4. நீ காதலால் நிறைந்திருந்தாய்

ஊறித்திளைத்துவிட்டது ஆறு
குளிர் அதன் 
உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது

நீ ஆற்றிலிருந்து 
கால்களை எடுத்திருக்கலாம்

நீயோ எண்ணமெலாம் காதல் படர 
அசையாமல் இருந்தாய்
நீர்த்தாவரம் போல
உனது கால்கள் 
ஆற்றை அசைத்துக்கொண்டிருந்தன

அந்தி நெருங்க
சிறிய சிறிய சுழிகளாக
ஆறு மெல்ல
உன்னை நோக்கி 
மயங்கிச் சரிந்தது

தன்னைச் சேர்த்து 
தன்னைச் சேர்த்து
உனது கால்களில் 
ஒற்றை அணியாகியது 
தூரதூரம் போகவேண்டிய 
ஆறு

ஆனந்த் குமார்

கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.

1 Comment

  1. காதலால் நீ நிறைந்திருந்தாய் சொல்லில் முடியாமல் ஊறி பிணைந்துவிட்டது உயிரோடு

உரையாடலுக்கு

Your email address will not be published.