/

ச. துரை கவிதைகள்

மாண்புமிகுந்த பாவம்

மீன்களின் சடலத்தைப் பார்க்கும் போதெல்லாம்

காகாமாக உருமாறுகிற ஒருவனை சந்தித்தேன்

நானும் அவனும் இணைப்பிரியாத நண்பர்களானோம்

அவன் எங்கு போனாலும்

பின்னேயே நானும் நடந்தேன்

மேகமலை உச்சியில் ஏறினோம்

வானத்தை பார் என்றான் பார்த்தேன்

சுல்தான் கோட்டையின் மீதமர்ந்தோம்

சுற்றியுள்ள அரண்களை பார் என்றான் பார்த்தேன்

“போதும்” என்று சொல்லும்போதுதான்

பாவம் தொடங்குகிறது என்றான் ஏற்றுக்கொண்டேன்

நாட்டு சவுக்கைகளுக்கு நாம்தான் காவல் என்றான்

இரவு பகல் பாராது சவுக்கைகளுக்குள்

போவதும் வருவதுமாக நடந்து கழித்தேன்

அதன் ஊசி இலைகள்தான் முதல் விநோதம் என்றான்

அப்படியே உள்வாங்கினேன்

ஒருநாள் கடற்கரையோரத்தில் மடிந்து கிடந்த

பேத்தை மீனொன்றை பார்த்து அழுதுக்கொண்டிருந்தான்

நான் ஆறுதலலித்து கொண்டிருந்தேன்

திடும்மென என்னவோ பேத்தையை வாயில் கவ்வியபடி

வீட்டுக்கு ஓடினான் பின்னேயே நானும் ஓடினேன்

திண்ணையின் மையத்தில் வைத்து புசித்தான்

அதன் குண்டு வயிற்றில் உருவான

எல்லா முட்களும் அறுபது திசைகளையும் பார்த்தபடியே

அவனுக்கு உணவாகி கொண்டிருந்தன

அதிலிருந்து ஒரு துண்டை பிட்டு எனக்கும் கொடுத்தான்

நான் இல்லை நண்பா வேண்டாம்‌

நீயும் உண்டது “போதும்” என்றேன்

போதும் போதுமென இருமுறை உச்சரித்தவனுக்கு

பிறகென்னவோ அன்றிலிருந்து நான் பாவியாகிவிட்டேன்

வசைப்பாடத்தொடங்கினான்

நான் தாங்கமாளாது “போதும்” நிறுத்துவென்றேன்

அவ்வளவுதான்

அப்போதே நான் பெரும் பாவியாகிவிட்டேன்

என் பாவம் கரையாது என்கிறான்

என் பாவம் இறக்காது என்கிறான்

நான் போதும் போதுமென மேலும் சொன்னேன்

மீன்களின் சடலத்தை பார்த்தால் காகமாகிறவன்

இப்போதெல்லாம் என்னை பார்த்தால் கழுகாகிறான்

துயரம் தாங்காது இறுதியாக “போதும் நண்பா”

இறந்த சடலத்தை எவ்வளவுதான் கொத்துவாய்

வலிக்கிறது இல்லையா என்றேன் அவ்வளவுதான்

இப்போதெல்லாம் எங்கு போனாலும் அவனுக்கே

தெரியாமல் என்னையும் கொண்டு போகிறான்

அந்தளவுக்கு நான் மாண்புமிகுந்த பாவியாகி விட்டேன்.

புகாரில்லாத உடல்

எவ்வளவு முடியுமோ

அவ்வளவு நேரம் தூங்குறேன்

எழுந்ததும் எஞ்சிய  சிகரெட்களை எண்ணுகிறேன்

ஒருநாளும் சுடு தண்ணீருக்கு அடிமைப்படாத

என் உடலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது

யாராவது தொப்பி தலையுடன் வீதியில் அலைவதை

பார்த்தால் வியப்பாக இருக்கிறது

தினமும் தனது சின்ன சைக்கிளின் கூடையில்

பழங்களை சுமந்து வரும் சிறுமியை பார்த்தால்

அவளது உலகம் அழுகாதென நம்பிக்கை வருகிறது

யாருக்கும் சரணடைவது பற்றிய புகாரில்லை

பிறகெப்படி இந்த வீதியில்

இவ்வளவு கூட்டம் இவ்வளவு இரைச்சல்

இது யாருக்கு உருவாகி இருக்கிறது என கேட்டேன்

கொஞ்சம் சப்தமாக கேட்டுவிட்டேன்

அருகில் நின்றவன் எனக்குத்தான் என்கிறான்

அவனுக்கு அருகில் நின்றவன்

இல்லை எனக்குத்தான் என்கிறான்

மற்றவன் என்னுடையது என பலத்து கத்துகிறாள்

கத்தல்கள் தொடர்கின்றன

சரணடைவதை பற்றிய புகாரில்லாத உடல்கள்

கலவரத்திற்கு ஆயத்தமானதை உணர்ந்து

இரவு வரை ஓடினேன்

மொட்டைமாடியில் விரிப்புகளை தயார்செய்து

தூரத்து உயர கட்டிங்களை பார்த்தேன்

அதிலொருவன் உச்சி மாடியில்

தனித்து நின்றுக்கொண்டிருந்தான்

அப்போதுதான் புதிதாக வானத்திலிருந்து

குதித்தவனை மாதிரி அங்கிருந்து

எனக்கு தூரங்களை அளந்துக்கொண்டிருந்தான்

எனக்கு தோன்றியது

அவனிடம் நிறைய பதில்கள் இருப்பதாக

அதை மிக மெதுவாகதான் எனக்குள்ளே சொன்னேன்

“ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என

அங்கிருந்து பலமாக கத்தினான்.

ச.துரை

ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.