/

வாக்குறுதி : அகரன்

ஓவியம்: செயற்கை நுண்ணறிவு

1

கனடா, யூகொன்.

மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon)  என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம்.

‘யூகொன்’ ஆண்டின் அதிக காலத்தை வெண்நிலமாகவே வைத்திருக்கும். கடும் வெயில் காலத்தில் 18 இல் இருந்து இருபது பாகை வெப்பம் மட்டுமே அங்கிருக்கும். மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒருவருடம், ஒருநாள் முன்னதாக அங்கு  -51 குளிர் பதிவாகியது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் யூகொன் கண்ட உயர்ந்த குளிர் அதுதான்.

உயிர்களையும் இயற்கையையும் சம ஆத்மாவாக நேசித்த மகாத்மா ஒன்று, கொல்லப்பட இருப்பதை இயற்கை தனது முன்னறிவிப்பால் வெளியிட்டுக்கொண்டது.

மனிதர்களின் தோல்களே கல்லாகி இறுகிவிடும். யூகொன் கனடாவின் வெண்கட்டி இரும்புகளின் குளிர்..நிலம்.

சூரியனுக்கும், நிலவுக்கும் பெரிய குணவேறுபாடு அங்கில்லை. யூகொன் நதி பனிக்கட்டிக்கு கீழ் ஓடுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறது. ஆற்றின்மேல் சறுக்குப்பலகையில் மக்கள் செல்வார்கள். பனிக்கிணறு கிண்டி மீன்பிடிப்பார்கள்.

மாயோன் கடந்த இருபது ஆண்டில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளையும், நுண்ணுயிர்களையும் ஆராய்வதும், வெப்பமாதலில் இருந்து துருவ வெண்நிலங்களை காப்பதற்கான கட்டுரைகளை எழுதுவதும்தான் அவனது பணி.

அவன் தன் வாழ்நாளில் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துபவன். ‘நெகிழியை கையால் தொடுவதில்லை’ போன்ற மூட நம்பிக்கை அவனிடம் உண்டு. யூகொன் ஆராட்சிப்பணிக்கு தனக்கு நாய் வண்டியொன்றை அமர்த்தியுள்ளான். ஐந்து நாய்கள் அவனை வேண்டிய இடங்களுக்கு இழுத்துச்செல்லும். அன்று இரவு பன்னிரெண்டுமணி. சூரியனையும், நிலவையும் காணவில்லை. வானம் மென் வெளிச்சத்தில் முயங்கி இருந்தது. அந்த நேரத்தில் வானம் சிலவேளை பாடும். ஒளி நடனம் நிகழ்த்தும்.

பிரபஞ்சத்தின் அந்தப்பாடலை கேட்பதில் அவனக்கு அவ்வளவு பிரியம். நாய்வண்டியில் வானத்தை பார்த்தவாறே சென்றுகொண்டிருந்தான். அந்த நடனத்தை பார்த்தால் அவன் மனம் நிறைந்து விடும். ஆண்டின் எட்டு மாதங்களை கடும் குளிரில் கழிக்க அதைத்தவிர உற்சாகப்படுத்தும் காரியம் அவனுக்கு வேறில்லை.

அப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தில் தாயாரின் அழைப்பு வந்தது. இப்படியான நேரத்தில் வனசா அவனை தொந்தரவு செய்வதில்லை. அவன் ‘அம்மா ஆர் யூ குட் ?’ என்றதும் வனசா கைக்கடிகாரப்பேசி கழன்றுவிடும் அதிர்வுடன் பேச ஆரம்பித்தாள்.

அந்த நேரம்பார்த்து ஐந்து நாய்களும் குரலெழுப்ப துருவ வானம் பாட ஆரம்பித்தது. ஒளிநடனம் பச்சை, மஞ்சள், நீலம், நாவலென மாயம் செய்தது.  இயற்கைக்காக போராடும் போராளி பேரொளியில் நனைந்திருந்தான்.

2.

பிரான்ஸ். பாரிஸ்.

இன்றுதான் இறுதிச் சவாரி என்று நினைத்துக் கொண்டு வண்டியை எடுத்தேன். இரண்டு வருடமாக டாக்சி ஓடுவது தான் என் தொழில். ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது கூண்டுக்குள் வளரும் பறவை போல உணரச் செய்தது.

டாக்சி ஓட்டுவதால் பாரிஸ் நகரை அறியலாம், அங்கு வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளைச் சேர்ந்த மக்களை அறியலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும், என்னைத்  திருமணம் முடித்தவளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் எல்லாவற்றையும்விட முன்னுக்கு என்னை தள்ளிய விடயம்.

அவள் ஊரில் இருந்து வந்த புதிதில் நான் வேர்க்க விறுவிறுக்க சமையல் வேலைமுடித்து வந்தபோது அவள் முகம் வெம்பிப்போன பப்பாப்பழம்போல் சூம்பிக்கிடந்தது.

« என்ன ?… என்ன.. ?  உமக்கு ஏதும் உடம்பு சரியில்லையா ? »

என்று நான் கேட்டபோது, ‘வெளிநாட்டு மாப்பிள்ளை ரை கட்டி வேலை செய்வார் என்று நான் நினைத்தேன்,. நீங்கள் படுற பாட்டைப்பார்த்தால் கவலை.. கவலையாய் கிடக்குது.. ‘’

 என்று அவள் சொன்ன மறு நொடி எனக்கு ‘பக்’ என்று இருந்தது. எனக்கு கிடைத்த ஒரே ஒரு பெண்ணின் மனக்கவலையின் ஆழம் என்னை அதிர்வுக்குள்ளாக்கிற்று.

சமையல் வேலையை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக என் மூளையில் எல்லா பாகங்களும் இயங்க வைத்து டாக்ஸி ஓட்டும் உரிமையைப்பெற்றேன். பிரெஞ்சு மொழியையும் ஓரளவு சீர் திருத்தி வாசனைதிரவியம் போட்டு பாரிசுக்கு ஏற்றபடி நளினமாக்கி மனைவி பெருமைப்படும்படி ரை கட்டி டாக்சி ஓட்ட ஆரம்பித்தேன்.

இப்போது அந்தத்தொழிலையும் கைவிடும் நிலைக்கு நிலமைகள் வந்துவிட்டிருக்கிறது. பாரீஸ் நகரின் வாகன நெரிசல், வங்கிக்கணக்கே எரிந்துவிடும்படி ஏறி நிற்கும் எரிபொருள் விலையேற்றம். வாடிக்கையாளர்கள் மோசமாகிச்செல்லும் போக்கு, கரியமில வாயுவின் அடர்த்தியால் பாரீஸ் காற்று அழுக்காவதற்கு என் வண்டியும் காரணமாக இருப்பது பேன்ற காரணங்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகமானவர்கள் ஓய்வெடுப்பதால் சாலை சற்று ஓய்வாக இருக்கும். நீண்ட தூர ஓட்டங்கள் வந்துசேர வாய்ப்புண்டு.. என்று கொக்கின் காத்திருப்புப்போல வண்டியில் இருந்தேன்.

பாரீஸ் றுவசி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வனசா என்ற பெயரில் அழைப்பு வந்தது. அது ஒரு பெரிய சவாரி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வனயா, வனயாதேவி என்ற பெயர்களில் தமிழ்ப் பெண்களுக்கும் பெயருண்டு.

இதுவரை என் வண்டியில் ஒரு தமிழ்ப்பெண் மட்டுமல்ல தமிழ் ஆண் கூட ஏறியதில்லை என்ற வருத்தம் எனக்கும் வண்டிக்கும் உண்டு. இந்த வனசா ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்தால் என் தொழில் ஒரு பூரணமான முடிவை அடையக்கூடும். ஆனால் பிரஞ்சுப்பெண்களுக்கும் வனசா என்ற பெயருண்டு. அதை அகதியாக பதிவு செய்து அலைந்து திரிந்த நாட்களில் அறிந்திருந்தேன்.

முதல் முறையீடு நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யவேண்டும். அதற்கு அப்புக்காத்துமார்களை அகதி ஒருவன் அமர்த்தவேண்டும். அப்படி அகதிகளின் மேன்முறையீடுகளால் புகழும் செல்வச்செழிப்பும் அடைந்த சில பிரஞ்சு சட்டவாளர்கள் பாரீசில் உண்டு. அதில் ஒருவரின் பெயர் ‘வனசா’. அதன்பின்னர்தான் தமிழின் பெருமை எனக்கு பிடிபட்டது. இப்போது என் வண்டியில் வர இருப்பது தமிழ்ப்பெண்ணா ? பிரஞ்சுப்பெண்ணா ? என்பதில் மனம் குழைந்துகொண்டிருந்தது.

பாரீஸ் றுவசி சார்த்துகோல் சர்வதேச விமான நிலையம் மூன்று முனையங்களை வைத்திருக்கிறது. இதில் முனையம் இரண்டில் சிறுபிள்ளை அரிவரி படிப்பதுபோல் A, B, C, D, F  என்று ஆறு வாசல்கள். இதில் F வாசலில் தான் நிற்பதாக வனசா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

நான் அழைப்பெடுத்து அந்தக்குரலை ஆராய விரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். நானும் பிடி கொடுக்காமல் பேசினேன். ‘அம்மணி, உங்களை நான் இலகுவாக கண்டுபிடிக்க உங்கள் தோற்றத்தை கூறமுடியுமா ?’ என்றேன்.

‘நீலக்கோட்டும், மூன்று சிவப்புப் பயணப்பெட்டிகளுடன் நிற்கிறேன்’ என்றார்.

‘அம்மணி, வனசா நீங்கள் இந்தியப்பெண்ணின் தோற்றத்தில் இருப்பீர்களா ? ‘

‘ஓ.. கடவுளே ! எப்படித்தெரியும் ?’

‘உங்கள் பெயரை வைத்து ஊகித்தேன்’

‘உங்கள் கணிப்பு கிட்டத்தட்ட சரியானது. நான் இலங்கைப்பெண்’

‘நீங்கள் தமிழ் பேசுவீர்காளா ?’

‘கந்தனே.. ! யேஸ்.. யேஸ்.. நான் தமிழ்ப்பெண்தான்’

(மொழி மாறியது)

‘மகிழ்ச்சி, இன்னும் ஐஞ்சு நிமிசத்தில வந்திடுவன்’

‘நன்றி, பாரிசில் தமிழ் டாக்சி கிடைச்சது மகிழ்ச்சி. நான் ஐம்பத்தி ஐந்தாவது வாசலில் நிற்கிறேன்.’

முனையம் F  இல் நுழைந்ததும் ஐப்பத்தைந்தாவது வாசலைப்பார்த்தேன். வனசா கொண்டைபோட்டு, கறுப்பு நீள்சட்டையும், மேல் நீலக்கோட்டும், கறுப்புநிற கைப்பையை தள்ளுவண்டியின் முன் கூடையில் வைத்துக்கொண்டு மீன்பறவையின் தலையசைவுகளோடு என்னைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஐம்பது வயதுகளை யோசித்துக் கடந்த தோற்றம். செவ்விளநீர் கோம்பைகள் போன்ற கன்னம். புன்னகைக்கும், அழுகைக்கும் நடுவில் களைத்துப்போய் இருக்கும் முகம். சராசரியான தமிழ்ப்பெண்களைவிட உயரமும் அதற்கேற்ற பருமனும். தரிப்பிடத்தில் இருந்தே அவரை அவதானித்துவிட்டு, வண்டியின் பிருட்டம் வாய்பிளந்து திறப்பதற்கு கட்டளை கொடுத்துவிட்டு அவரருகே நடந்தேன்.

என்னை இனங்கண்டவர் அவர் வீட்டுக்குச் சென்ற விருந்தாளி போல..

‘’வாருங்கோ தம்பி. சொன்ன நேரத்திற்கு வந்திட்டீர்கள். நீங்கள் தமிழ் எண்டது எனக்கு மகிழ்ச்சி. பாரிசுக்கு முதல்முறை வருகிறேன். உங்கள் உதவி தேவை.’

‘கட்டாயம் அன்ரி. நீங்கள் காறுக்குள் ஏறுங்கோ நான் சூட்கேசுகளை ஏத்துறன்.’’

‘நன்றி ராசா’

ஒரு நொடியில் என்னைத் தன் ‘ராசா’ ஆக்கிவிட்டு அவர் ‘ராணி’ போல வண்டிக்குள் அமர்ந்திருந்தார்.

தாய்மார்கள் பிள்ளைகளை ‘ராசா’ என்று சொல்லும்போது வரும் சொல்வாசம் பூவாசம் நிறைந்தது. அதனால் வனசாவை எனக்குப்பிடித்துப்போனது.

‘அன்ரி, நீங்கள் போகவேண்டிய முகவரி என்ன ?’

‘தம்பி, ஒரு கொட்டல் முகவரியை என்ர மகன் அனுப்பி இருக்கிறார். அங்குதான் போகவேண்டும். நான் இரண்டு நாளில் மீண்டும் கனடாவுக்கு பிளைட் பிடிக்கோணும். என்னால் தொடர்ந்து இலங்கையில் இருந்து கனடாவிற்கு பயணம் செய்யமுடியாதென்பதால் பாரிசில் இரண்டுநாள் தங்கி பின்னர் பயணம் செய்யும்படி மகன் ரிக்கற் போட்டவர். உங்களுக்கு நல்ல கொட்டல் தெரிஞ்சா அங்க என்னை விட்டு விடூறிங்களா பிளீஸ் ? ’’

‘ அன்ரி, உங்களுக்கு பாரிசில் சொந்தக்காரர் ஒருவரும் இல்லையோ !’

‘இல்லத்தம்பி, எல்லாரும் கனடாவில இருக்கிறம். இலங்கையில கூட இப்ப சொந்தபந்தம் இல்லையெண்டா பாருமன்’

‘அன்ரி பாரிசில் எல்லாக் கோட்டலும் நல்லதுதான். ஆனால் நீங்கள் விரும்பினால் எங்கள் வீட்டில் தங்கலாம். இரண்டு நாட்கள்தான ? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.’

‘ஐயோ..தம்பி நீர் எவ்வளவு நல்லபிள்ளையாய் இருக்கிறீர் ? உமக்கு இடைஞ்சல் தர நான் விரும்பேல்லை. என்ர மகனும் விரும்பமாட்டார்.’

‘அன்ரி,பாரிஸ் வினோதமானது. உங்கள் மகன் தெரிவு செய்த கோட்டல் இருக்குமிடம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாதது. ஆனால் உடைமைகளுக்கு உத்தரவாதம் இல்லாத பகுதியில் இருக்கிறது. உங்களைப்போன்ற புதியவர்களை அவர்கள் இலகுவாக இனம்கண்டு விடுவார்கள்.

வனசா மறுகதை பேசவில்லை. ‘உங்கள் வீட்டில் சிரமம் இல்லையோ ? என்ர பிள்ளை போல இருக்கிறீர்’

(இப்போது தான் நீங்கள் கதையின் வாசலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்தக்கதை வனசா மூலம்தான் கிடைத்தது. அவரே அதைச்சொல்லட்டும். விமான நிலையத்தில் இருந்து ஒருமணி நேர பயண தூரத்தில் என் வீடு உள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில் என் காதுகளில் வந்த கதைதான் உங்கள் கண்களுக்கு வர இருக்கிறது)

‘அன்ரி இலங்கையில் ஒருவரும் இல்லை என்கிறீர்கள். அப்ப, யாரிடம் சென்று வருகிறீர்கள் ?’

‘ராசா, முப்பத்தி ஐந்து வருடத்தின் பின்பு என் நண்பியை சென்று பார்த்துவிட்டு வாரன்.

என்ர மனுசன் 1987 இல் இலங்கையை விட்டு வெளிக்கிட்டு கனடா போனவர். உங்களுக்கு அந்தக்கதைகள் தெரியாது. அப்பேக்க ஒரு இனம் மற்ற இனத்த அடக்குதெண்டு போராட வெளிக்கிட்ட காலம். பிறகு எல்லா இடத்திலும் போர் ஆட வெளிக்கிட்டுது. என்ர மனுசன் ‘இந்தத் தீவில் இனி மனுசர மனுசர் கொல்லத் தெரிஞ்சாத்தான் வாழலாம் வனசா’ என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார்.

எண்பத்தி ஏழுல இந்தியன் ஆமி வந்தபிறகு பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஆறுதலாய் இருந்தனாங்கள். அவரோட பள்ளியில் உயிரியல் படிப்பித்த சினேகிதர் ஒருத்தர எங்கோ வெடித்த குண்டுக்கு பதிலாய் வந்த இந்தியன் ஆமி சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல். அந்த சடலத்தை நாலுதுண்டா வெட்டிப்போட்டு போயிட்டினம்’ அந்த அதிர்ச்சியில் இலங்கையை விட்டு வெளிக்கிட்டவர், அவற்ற வாழ்நாளில இலங்கை திரும்பேல்லை.

அவற்ற அப்பா, பெரியவர் கன்டி பேரின்பநாயகம் உடன் சேர்ந்து மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்தவர்களில் ஒருவர். அந்த நேரத்தில் கதர் போராட்டத்துக்கு எங்கட சனத்திட்ட காசு தெண்டி காந்தியின் கையில் லட்ச ரூபா கொடுத்தவர்கள் தம்பி. அதைப்பற்றி இப்ப யாருக்கு மோன தெரியப்போகுது ?

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு நான் மட்டும் திரும்பக்காரணம் என்ர நண்பி  அதே கிராமத்தில வாழ்கிறாள் என்ற சேதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளும் அவளை நினைக்காத நாளில்லை.

நம் ஊரை விட்டு வெளிக்கிடேக்க அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் அவள் காதலித்து திருமணம் செய்த மனுசன் யாராலோ கடத்தப்பட்டு விட்டிருந்தார். அவள் ஒரே அழுகையாய் இருந்தவள்.

பள்ளியில் படிக்கேக்க நான் முதலாம் பிள்ளையாக வந்தால் அவள் இரண்டாம் பிள்ளையா வருவாள் : நான் இரண்டாம் பிள்ளை என்றால் அவள் முதலாம் பிள்ளையா வருவாள். இருவரும் வேறு யாருக்கும் அந்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. குடும்ப ரகசியங்களையும் நாம் பகிர்ந்து கொண்டோம். தோற்றத்தில் கூட இருவரும் ஒத்து போனோம். அப்போது பள்ளிக்கூடம் பூராவும் எங்களை ‘இரட்டை இராட்சசிகள்’ என்று தான் சொல்லுவினம்.

நான் அவளை விட்டு பிரியேக்க என் மகன் மயூரனுக்கு இரண்டு வயது. அவள் மகள் பச்சைக்குழந்தை. அவள் பிறந்த மணம் மாறாத அந்தக்குழந்தையை மடியில வைச்சுக்கொண்டு ‘வனசா இந்தப்பிள்ளையும் நானும் என்ன சொய்யப்போறோமோ தெரியேல்ல’ என்று சொன்னதும் அவளை கட்டிக்கொண்டு இருவரும் அழுததும் என் மனதில் அப்பிடியே இருக்குது.

‘தம்பி மயூரனுக்கு இவளைத்தான் கட்டிக்கொடுக்கிறது. எப்படியாவது நான் எங்கிருந்தாலும் வருவன். நீ காத்திரு. ஒருபோதும் உன்னை மறக்கமாட்டன்’

என்று சொல்லிப்போட்டு அந்த பெண்குழந்தையை வாரியெடுத்து அணைத்து வெளிக்கிடும்போது அந்த குழந்தை என் ஆட்காட்டி விரலை விடவே இல்லை. அவர்களின் படலை தாண்டி நான் வரப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

கனடா வந்த பிறகு ஊரில் நடந்த ஓவ்வொரு இரத்தக்களறியிலும் கனகாம்பிகையும், குழந்தையும் என்ன பாடோ ? அவர்கள் உயிரோடு இருப்பார்களோ என்று நினைத்தவாறே இருப்பேன்.

‘ பிறகு ?’

கனடா வந்து மொன்றியலில் குடியேறினோம். சகோதரம், சொந்தபந்தம் என்று எல்லோரும் கனடா வந்துவிட்டார்கள். நாங்கள் இருந்த வீடு அந்த ஊரிலேயே பெரிய வீடு. முதலில் போராளிகள் இருந்தார்கள். பிறகு ஐ. சி. ஆர். சி இருந்தார்கள். பிறகு 1999 இல் கிபிர் விமானத்தால் எங்கள் வீட்டை தாக்கி அது தரைமட்டமாய் கிடந்ததை அப்போது பி. பி. சி இல் பார்த்து தெரிந்துகொண்டோம்.

நாள்பட.. நாள்பட இலங்கைய பற்றி நினைப்பதே நின்றுபோனது. அம்பியையும், குழந்தையும் நினைத்தால் கடும் கவலைதான் வரும்.

அண்மையில் ரொரன்ரோவில் ஒரு விழாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த, அந்த காலத்தில் கனகாம்பிகையை காதலிக்க முன்னும் பின்னும் திரிந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் கனடாவில் பெரும் பணக்காரர். அவரிடம் கேட்டால் கனகாம்பிகை பற்றி தெரியும் என்று விசாரித்தேன். அவர், ‘அவள் யுத்தத்தில் இருந்து மீண்டு ஊரில் மீள் குடியேறி வாழ்வதாகவும் தேடிப் போனபோது   வீட்டு முத்தத்தில்(முற்றம்) வைத்துப் பேசிவிட்டு அனுப்பி விட்டதாகவும், தான் பணம் கொடுத்தபோது அதை விரும்பவில்லை என்றும் தனக்கு அவமானமாக போய் விட்டது தான் வந்து விட்டேன்’ என்றும் சொன்னார்.

கனகாம்பிகையின் மகள் பற்றிக்  கேட்டேன். மகள் இருப்பது பற்றி தனக்கு தெரியாது. ஆனால் அவள் வாழும் இடம் அவர்களின் தோட்டக்காணியில் சிறு வீட்டில் வாழ்வதாக கூறினார்.

 எனக்கு உடலெல்லாம் உவர் நீர் சுரந்து அடுத்த நொடியே அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. விபரத்தை மகனுக்கு கூறியபோது உடனே ரிக்கற் போட்டுத்தந்தான். அப்படித்தான் என் நண்பியையும் அவள் மகளையும் பார்க்க இலங்கைக்குப்போனேன்.

‘அப்ப, உங்கட மகன் திருமணம் செய்து விட்டாரா ? ‘

‘இல்லைத் தம்பி. அவனுக்கு இப்ப மயூரன் பெயரில்லை. அவனை பள்ளியில் சிறு வயதில் இருந்து எல்லோரும் மாயோன்… மாயோன் என்று கூப்பிட்டினம். அவனுக்கும் அது பிடித்துப்போய் விட்டது. பிறகு நாங்கள் அகராதியெல்லாம் ஆராய்ந்தால் மாயோன் நல்ல தமிழ்ப்பெயர்தானே ?  கனடிய குடியுரிமை பெற்றபோது மாயோன் என்றே பெயரை மாற்றிவிட்டோம்.

தம்பி, என்ர மகன் முதலில் தத்துவம் படித்தான். பிறகு உயிரியல் படித்தான். பிறகு இயற்கையியல் படித்து அதில் அவன் எழுதிய காலநிலை பற்றிய கட்டுரை பெரிய விஞ்ஞானிகளின் தொடர்பை அவனுக்கு ஏற்படுத்தியது. காசுக்காக வேலைக்கு போக முடியாது என்று அடம்பிடித்துக்கொண்டு எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். காலியான வயது வந்தும் அவனுக்கு அதைப்பற்றி கவலையில்லை. ‘பூமி ஆபத்தை நோக்கி நகர்கிறது. இந்தத்தலைமுறைக்கான இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் சண்டையை நாம்தான் செய்யவேண்டும்’ என்று எனக்கு புரியாத பல விசயங்களை சொல்வான். எனக்கு சிலநேரம் பயம் பிடித்துவிடும்.

அவன் ஆசைப்பட்டது போல கனடிய-அமெரிக்க அரசாங்கங்கள் சேர்ந்து ‘வடதுருவ பாதுகாப்பு ஆராட்சி விஞ்ஞானிகள்’ குழுவில் ஒருவனாக கனடாவின் யூகொன்(yukon) என்ற இடத்தில் இருக்கிறான். அந்த இடத்துக்கு மொன்றியலில் இருந்து விமானம் மூலம் செல்வதானால் பத்து மணிநேரம் பிடிக்கும். அங்கு கடும் குளிர். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டாலே எனக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இலங்கையை விட எட்டு மடங்கு பெரிய அந்த கனடிய மாவட்டத்தில் நாற்பத்தி ஐஞ்சாயிரம் சனம் தான் இருக்குதெண்டால் யோசித்துப்பாரன் தம்பி.

மகன் காதலித்ததாகவும் தெரியவில்லை. அவனுக்கு முப்பத்தி ஏழு வயதாவதை நினைத்தால் எனக்கு கவலைதான்.

மகனிடம் சிறு வயதிலேயே நண்பி அம்பியைப் பற்றியும், அவள் மகள் பற்றியும் கூறியிருக்கிறேன். அம்பி பற்றி அறிந்தபோது அவள் பற்றிச் சொல்லி சிலவேளை அவள் மகள் திருமணம் செய்யாது இருந்தால் நீ அவளை திருமணம் செய்வாயா ? என்று கேட்டேன். ‘நான் எதிர்பார்க்கவில்லை ‘அந்தப்பெண் இப்போதும் இருந்தால் நான் திருமணம் செய்கிறேன்.’ என்று சொல்லி விட்டான். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. இந்த சந்தோசத்தோடுதான் இலங்கை போனேன்.

«’கனகாம்பிகையை கண்டீர்களா? மகனுக்கு மருமகள் கிடைத்தாளா? ‘

வனசாவின் முகம் சிவக்க ஆரம்பித்தது. பேச்சு வரவில்லை. முன் கண்ணாடியால் பார்த்தபோது துன்பச்சாக்கை கட்டிவிட்டதுபோல் உதடுகள் குவிந்திருந்தது. வார்த்தைகள் வராதபோது கண்கள் முட்டி நின்றது. இடது கையால் அதை ஒற்றி எடுக்கிறார். நான் அமைதியாக வண்டியை ஏகாந்த நிலையில் செலுத்தினேன்.

‘ஊருக்குப்போய் கனகாம்பிகை இருப்பதாகச் சொல்லப்பட்ட அவர்களின் தோட்டக்காணியில் இருந்த இடம் அடைந்தேன். ஒர் சிறு வீடு. பனமட்டை கட்டிச்செய்த கதவு. வீடு பூட்டப்பட்டிருந்தது. பெட்டிகளை திண்ணையில் வைத்துவிட்டு அயல் வீட்டில் சென்று விசாரித்தேன். கனகாம்பிகை கூலி வேலைக்கு சென்றிருப்பார் வருவார் என்றார்கள். நினைவுகளோடும், ஏக்கத்தோடும் அவளின் திண்ணையில் காத்திருந்தேன்.

பொழுதுபடும் நேரம் படலை திறந்து அவள் வந்தாள். அவள் என்னைக்கண்டு கத்திவிட்டாள். இருவரும் மணிக்கணக்காக முதலில் அழுதோம். அம்பிகை ஒரு தாமரை போல இருக்கவேண்டியவள் ; கப்பியில் தொங்கும் கயிறுபோல இருந்தாள். நான் தன்னைப்பார்க்க வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றாள். பின்பு அயல் வீட்டில் ஓடிச்சென்று கறி வேண்டி வந்தாள். தடபுடலாக உணவு தயாரிக்க ஆரம்பித்தாள். நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளின் பின் கிணற்றில் அள்ளிக்குளித்தேன். மகளைப்பற்றி எப்படிக்கேட்பது என்று தெரியாமல் இருந்தது. இளம் பெண் வாழும் தடயங்கள் அந்த வீட்டில் இல்லை. சிலவேளை மகள் திருமணம் செய்து வேறெங்கும் வாழலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அப்போதுதான் ‘அம்பி மகள் எங்க ?’ என்றேன். அந்த வீட்டில் அவள் கணவனின் படம் மட்டும் மாலையிடப்பட்டிருந்ததால் என் மனதில் தைரியம் இருந்தது.

அம்பி எழுந்தாள். என்னைக் கை பிடித்து அறைக்குள் அழைத்துப்போனாள். அங்கு ஒருவரும் இல்லை. சாமியறையில் இரண்டு சாமிப்படங்கள் இருந்தன. மலர் வாசனையும், அகில் வாசனையும் அந்த குடிசை அறையை நிறைத்திருந்தது. அம்பி அதில் ஒரு சாமிப்படத்தை எடுத்து பின்பகுதியைத் திருப்பினாள். கறுப்பு வெள்ளை படத்தில் வரி உடையுடன் ஒரு இளம் பெண் கனகாம்பிகை இளமையில் இருந்த தோற்றத்தில் புன்னகைத்தபடி இருந்தாள்.

பெயர்    :-கேணல் இதயக்கனி

வீரச்சாவு :- 04 :04 :2009

இடம் :-ஆணந்தபுரம்.  என்றிருந்தது தம்பி.’’

என்றவர், விம்ம ஆரம்பித்தார். அந்த வாய்மூடி அழும் சத்தம் கேட்டு என் இதயம் தொண்டைக்குள் வந்து அடைத்துவிட்டது போல் இருந்தது.

என் வீடு வந்திருந்தது. என் மனைவி வனசாவிற்கான அறையை தயார் செய்திருக்கக்கூடும். இரண்டு நாட்களுக்குள் மீதிக்கதையை அவள் கேட்கட்டும். அவர் எம்மை விட்டு பிரியும்போது எம் பெண் குழந்தைக்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்துவிட்டு கனடா செல்லக்கூடும். அதை அவர் நிறைவேற்றுவார். சர்வ நிச்சயமாக அதுதான் எனது கடைசிச் சவாரியாக இருக்கும்.

அகரன்

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

1 Comment

  1. கதை சொல்லும் பாங்கு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் அகரன்

உரையாடலுக்கு

Your email address will not be published.