புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் மேரி ஆலிவரின் ‘Upstream: Selected essays’ நூலில் இடம்பெற்றுள்ள அத்தியாயம் ஒன்றின் தமிழ் வடிவம் இங்கு தரப்பட்டுளது.
எந்தக் காலையைப் போலவும் வெள்ளியென மின்னுமொரு காலைப்பொழுது அது. நான் என்னுடைய எழுத்து மேசையில் அமர்ந்திருக்கிறேன். என்னுடைய தொலைபேசி ஒலிக்கிறது, அல்லது வீட்டின் கதவை யாராவது தட்டுகிறார்கள். அறிவின் சாதூர்யமான இயக்கவோட்டத்தின் அடியாழத்தில் நான் மூழ்கி இருக்கிறேன். விருப்பமில்லாமல் அதிலிருந்து விடுபட்டு தொலைபேசியை எடுக்கிறேன் அல்லது வாசல் கதவைத் திறக்கிறேன். அவ்வளவுதான். அந்த கணம்வரை என் கைப்பிடியில் -அல்லது கைக்கெட்டும் தூரத்தில்- இருந்த சிந்தனை என்னைவிட்டு நழுவிச் சென்றுவிடுகிறது.
படைப்பூக்கமான வேலைகளுக்கு தனிமை தேவை; இடையூறில்லா கவனம் தேவை. பறந்து செல்ல அதற்கு முழு வானமும் வேண்டும். அத்துடன் அது எட்ட முனையும் இலக்கை உறுதியாக அடையும் வரையில் எந்த கண்காணிப்புகளும் இருக்கக் கூடாது. அதாவது தனிமையில் காலாற நடக்கவும், பென்சில்களை கடிக்கவும், கிறுக்கவும், அழிக்கவும், பின்னர் மீண்டும் கிறுக்கவும் என அந்தரங்கமான ஒரு இடம் அதற்குத் தேவை.
ஆனாலும் இடையூறானது பெரும்பாலான நேரங்களில் வெளியில் இருந்து வருவதில்லை. நம்முடைய சுயத்திலிருந்தோ அல்லது நமக்குள் விசிலடித்தபடி கதவை நெட்டித் திறந்து அமைதியென்னும் குளத்தில் தண்ணீர் தெறிக்கும்படி குதிக்கும் வெறொரு சுயத்திலிருந்தோ தான் வருகிறது. அவ்வாறு தொந்தரவு செய்து அது என்ன சொல்கிறது? பல் மருத்துவருக்கு அழைக்க வேண்டும் என்றோ, கடுகு தீர்ந்துவிட்டது என்றோ, மாமாவின் பிறந்தநாள் வரவிருக்கிறது என்றோ கூறுகிறது. நாம் அதற்கு எதிர்வினையாற்றுகிறோம், வேறு வழியில்லை. பிறகு அங்கிருந்து நம்முடைய முந்தைய வேலைக்குத் திரும்பும்போது நம் மனதில் உதித்திருந்த அந்தக் குறும்புக்கார தேவதை மீண்டும் வின்னகத்திற்கே பறந்து சென்றிருக்கும்.
இந்த அக ஆற்றலின் -நமக்கு அனுக்கமான குறுக்கீட்டாளரின்- கால்தடத்தையே நான் பின்தொடர விரும்புகிறேன். ஒரு பெரும் விழாக்கால கூட்டத்தைப்போல இந்த உலகம் அதன் ஏராளமான வணக்கங்களை நம்மேல் இடைவிடாது பொழிந்து கொண்டிருக்கிறது. உலகமென்றால் அப்படித் தான் இருக்கும், இதில் சண்டையிட என்ன இருக்கப்போகிறது? ஆனால் நம்முடைய சுயமே நம்மை இடையூறு செய்வதென்பது இருள் கவிந்த, சுவாரசியத்திற்குரிய விஷயம் இல்லையா?
*
என்னளவிலேயே குறைந்தது மூன்று சுயங்களாவது உள்ளது. முதலாவதாக என்னுள் இருக்கும் ‘குழந்தை’யான சுயம். அவ்வளவு குழந்தையாக நான் இப்போது இல்லை என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் வெகு தொலைவிலிருந்து -சில நேரங்களில் அருகிலிருந்தும்- அந்தக் குழந்தையின் ஓசையை என்னால் கேட்க முடிகிறது. அதன் நம்பிக்கையை அல்லது வலியை என்னால் உணரமுடிகிறது. அது இன்னும் முற்றாக மறைந்து போகவில்லை. ஞாபகத்தில் இருந்தோ, அருவியெனப் பாயும் கனவில் இருந்தோ அவ்வப்போது அதனுடைய ஆற்றல் மிக்க இருப்பு என்னுள் எழுந்து வருகிறது. அது அவ்வளவு எளிதாகத் தொலைந்துவிடாது என்று நான் உறுதியாகச் சொல்வேன். இந்தக் கணம் வரை அது என்னுடன் இருக்கிறது, என் கல்லறை வரையிலும் அது தொடரும்.
அடுத்ததாக இருக்கவே இருக்கிறது என் சமூகமான சுயம்(social self). எப்போதும் விழித்தே இருப்பது. வீட்டிற்கு வருபவர்களுக்கு கதவைத் திறந்துவிடுபவரும், புன்னகைப்பவரும் இவர்தான். அன்றாட வாழ்வின் ஊடாக ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முள்ளை நகர்த்துவதற்கான காற்றைச் பீய்ச்சுபவர் இவர்தான். வாக்குறுதிகளையும் காலக்கெடுகளையும் நினவில் வைத்துக்கொண்டு நிறைவேற்றுவதும் இந்த சமூகமான சுயம் தான். கடமையென்னும் ஆயிரக்கணக்கான மாயச் சங்கிலிகளால் கட்டுண்டிருப்பதும் இதுதான். நகர்வதையே முழுநேர வேலையாக எடுத்துக்கொண்டு நாள்முழுவதும் நடந்துகொண்டிருப்பதும் இந்தத் திருவாளர் தான். இந்த ஓட்டத்தில் இருந்து கொஞ்சமேனும் ஞானமோ மகிழ்ச்சியே கிடைக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பிடித்தமான பாடல் என்பது கட்டுக்கோப்பாக, அவ்வளவு உறுதியோடும், துடிப்புடனும், முடிவுறாமல் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அந்த முள்ளின் ஓசைதான்.
அந்தக் கடிகாரம்! பன்னிரெண்டு இலக்கங்கள் கொண்ட நிலவின் எலும்பு, வெள்ளைச் சிலந்தியின் வயிறு! முலாமிட்ட மெல்லிய முட்கள் எண்களின் மேல் எவ்வளவு சலனமில்லாமல் அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது! பன்னிரெண்டு மணி நேரமும் முதலில் இருந்து மீண்டும் மீண்டும் என! சாப்பிடு, பேசு, உறங்கு, வீதியைக் தாண்டு, பாத்திரத்தைக் கழுவு! இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம்! அதன் வடிவமைப்புகள் எவ்வளவு விதவிதமாக இருந்தாலும் அது சாதாரணமாகவே இருக்கிறது. ஒழுங்கில்லாத வாழ்க்கையை -அதைவிட இன்னும் ஒழுங்கில்லாத சிந்தனையை- வரிசைபடுத்தி அடைப்பதெற்கென பன்னிரெண்டு கூடைகள் நாள்தோறும். நகரத்தின் மணிக்கூண்டு அலறுகிறது; ஒவ்வொரு மணிக்கட்டிலுள்ள சிறு முகமும் பளிச்சிடவோ முனகவோ செய்கிறது; அதற்கு ஏற்றாற்போல் வேகமெடுக்கிறது உலகம். மற்றுமொரு நாள் கடந்து செல்கிறது; எப்போதும் போலவொரு சாதாரணமான நாள்.
*
நியூயார்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்வதற்காக நீங்கள் விமான டிக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த விமானத்தில் ஏறி நீங்கள் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவுடன் அதன் விமான ஓட்டி என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?
உறுதியாக அவர் தன்னுடைய இயல்பான, சாதாரணமான சுயத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அவர் தன் பணியை நிதானமான அனுகி செய்துமுடிக்கவே விரும்புவீர்கள். அவரிடமிருந்து உங்களுக்கு புதியதாகவோ வித்தியாசமாகவோ எதுவும் தேவையில்லை. அவருக்கு தினசரி இயல்பாக என்ன தெரியுமோ -அதாவது விமானத்தை ஓட்டுவது- அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அவர் பகல்கனவு காண நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். சுவாரஸ்யமானதொரு சிந்தனையை நோக்கி அவர் மனம் அலைபாயக்கூடாது என்றுதான் நம்புவீர்கள். இந்த விமானப் பயணம் மொத்தத்தில் சாதாரணமானதாக இருக்கவே விரும்புவீர்கள். அங்கு அசாதாரணமான எதுவும் தேவையில்லை. இதையே தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுனரோ, அவசரஊர்தியின் ஓட்டுனரோ, கப்பலோட்டியோ செய்யவேண்டும் என்றும் எதிர்பார்ப்போம், இல்லையா? அவர்கள் எல்லோரும் அவர்களுடைய பணியை அன்றாடம் செய்வது போல பரிச்சயமான தன்னம்பிக்கையோடு செய்யட்டும், அதற்கு மேல் எதுவும் தேவையில்லை. அவர்களுடைய சாதாரணத்தில் தான் உலகத்தின் நிச்சயத்தன்மை இருக்கிறது, அதுதான் இப்புவியை சுழலச் செய்கிறது.
நானும் இந்த சாதாரணமான உலகில் தான் வாழ்கிறேன். இங்குதான் பிறப்பெடுத்தேன். சொல்லப்போனால் எனக்களிக்கப்பட்ட பெரும்பாலான கல்வியும் சாதாரணமான இவ்வுலகத்தோடு நான் இணக்கமாக உணர்வதன் பொருட்டே. எனினும் அந்த நிறுவனம் ஏன் தோல்வியடைந்தது என்பது வேறு விஷயம். இம்மாதிரியான தோல்விகள் ஏற்படக்கூடியது தான். எல்லா விஷயங்களையும் போல இதுவும் ஒருவகை நன்மைக்காக தான். ஏனெனில் செருப்பு தைப்பவர்களைப் போல கனவு காண்பவர்களும் இவ்வுலகத்திற்கு தேவை. கனவு காண்பது எளிதான விஷயமென்று இதன்மூலம் நான் சொல்லவரவில்லை. அத்துடன் அவ்வப்போது சிந்தனை அலைபாய்வதினால் செருப்பு தைப்பவர் தன் கைகளை துளையிட்டுக் கொள்கிறாரா என்ன? அதுபோல கனவு காண்பவர்களும் வயதான தம் மிருகவுடல் கவனத்தைக் கோரும் போது அதைப் பட்டினி போடாமல் அவர்களுடைய பகல்கனவில் இருந்து இறங்கி வந்து கடை மூடுவதற்குள் ஓடிச்சென்று காய்கறிகளை வாங்கிவருகிறார்கள்.
மேலும் இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது : படைப்பூக்கமான வேலைகள் -எல்லாவகையான படைப்பூக்கமான வேலைகளையும் இங்கு குறிப்பிடுகிறேன்- உலகம் சுற்றிவர உதவுவதில்லை. மாறாக உலகம் முன்னோக்கி செல்வதற்காகவே கலைஞர்கள் செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்தமாகவே அன்றாடத்தில் இருந்து வேறுபட்டது. இந்த வேலை அன்றாட அலுவல்களை நிராகரிப்பதில்லை. அதன் தளம் வேறு அவ்வளவே. அந்த வேலையின் தோற்றமும் அதன் முக்கியத்துவங்களும் வித்தியாசமானவை. குழந்தையாகவும் இல்லாமல், அல்லும்பகலும் வேலை செய்பவராகவும் இல்லாமல் இருக்கும் ஒரு மூன்றாவது முகம் நம் அனைவரின் சுயத்திலும் நிச்சயம் இருக்கும். இந்த மூன்றாவது சுயம் சிலருக்கு அவ்வப்போது வெளிவரும், வேறு சிலருக்ககோ அது இடைவிடாது ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். சாதாரணத்தின் மேல், காலத்தின் மேல் உள்ள அன்பினால் உருவாவதே இந்த சுயம். காலமற்ற நித்தியத்திற்கான வேட்கைதான் இந்த சுயத்தில் இருக்கிறது.
இந்த மூன்றாவது சுயத்தின் பிடிக்கு அகப்படும் தூரத்தில் அறிவார்ந்த வேலைகள் சில நேரங்களில் மட்டும் தான் இருக்கும். ஆனால் ஆன்மீகமான வேலைகளும், கலைசார் வேலைகளும் எப்போதுமே அதன் பிடியில் கீழ் இருக்கும். ஏனெனில் இவை இரண்டுமே பழக்கத்தின் கூண்டுக்கு வெளியே காலம் என்னும் கருதுகோளுக்கு அப்பால் பறந்து செல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் இதற்கு தேவைப்படும் அசலான பணியை மொத்த வாழ்க்கையிலிருந்து தெளிவாகப் பிரித்தெடுக்கவும் முடியாது. படைப்பூக்கத்தை நோக்கி நகர்ந்த மனிதர்களால் தம்முடைய உடலையும் மனதையும் அதற்காகத் தயார்ப்படுத்துவது என்பது சுலபமான விஷயமில்லை. பண்டைய கால படைத்தளபதிகளைப்(Medieval knights) போல அவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களை கணிக்கவே முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் படைப்பூக்க செயல்பாடே ஒரு சாகசம் தான். அசாத்தியமான அளவில் ஆற்றலும் கவனமும் அதற்குத் தேவை. இவையிரண்டும் அசாத்தியத்தை விட கொஞ்சம் குறைந்தாலும் அந்தக் கலைஞனால் தன்னுடைய பணியைச் செய்ய இயலாது. அந்த நிலையில் அவன் பணியாற்றவும் விரும்ப மாட்டான். இந்த அசாத்தியம் தான் கலையாகிறது.
அதுபோல படைப்பூக்கத்தின் இயந்திரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் இயலாத காரியம். படைப்பூக்கத்தோடு இயங்குவது என்பது அதற்கு எதிராக செயல்படுவது இல்லை. ஆன்மீக வாழ்வைப்போல கலையிலும் ‘தேவைப்படும்போது நிறுத்திவைக்கக்கூடிய சமனிலை’ என்ற ஒன்று கிடையாது. குறிப்பாக ஆரம்ப காலத்தில் அபரிதமான ஒழுக்கமும், தனிமையும், உளக்குவிப்பும் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தேவை. உதாரணமாக, எழுதுவதற்கென நாள்தோறும் திட்டமிடப்பட்ட நேரம் என்பது இளம் எழுத்தாளர்களுக்கான நல்ல பரிந்துரை என்பேன். அதுபோல அறிவுறைகளை அவர்களுக்கு சொன்னால் மட்டும் போதும். அத்துடன் அவர்கள் எல்லா நேரமும் படைப்பூக்கத்துடன் காத்திருக்க வேண்டும். எவ்வளவு விழிப்புணர்வோடு இருந்தாலும் சிந்தனைக்கான மகரந்தம் தன்னளவில் தனிச்சையாகவே நம்முள் வந்தமரும்; அதுபோல எந்த ஒழுங்கும் இன்றி அலட்சியமாக அதன் இறகுகளை உதறி பறந்தெழுந்தும் போகும்; எடுத்தவுடனேயே இந்த உண்மைகளையெல்லாம் அவர்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்?
அசாதாரணமானவை இந்தெந்த இடங்களில் நிகழும், நிகழாது என்று யாரும் அறுதியாகப் பட்டியலிட முடியாது. எனினும் அதற்கான அறிகுறிகள் உண்டு. கூட்ட நெரிசலில், காத்திருப்பு அறைகளில், ஓய்வாக இருக்கும் வேளைகளில், புலனின்பத் தருணங்களில் அவற்றை அடிக்கடி காண முடியும். நான்கு சுவர்களுக்கு வெளியேயுள்ள எந்த இடமும் அதற்கு பிடித்தமானதே. ஒருமுகப்படுத்தும் மனதையும் தனிமையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். சதா வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பவர்களை விட, எதிர்பாராத விஷயங்களை நோக்கி தம்மைத் திறந்து வைப்பவர்களுக்குதான் அது கைக்கூடுவதற்கான வாய்ப்பு அதிகம். இதன்மூலம் அது உலகின் சீரான அலுவல்களையோ சௌகர்யங்களையோ குறைத்து மதிப்பிடுகிறது என்று அர்த்தமில்லை. அதன் அக்கறை வேறு தளங்களை நோக்கியது. அதாவது விளிம்பும், விளிம்பிற்கு அப்பால் உள்ள அருவமான விஷயங்களுக்கு திட்டவட்டமான ஒரு உருவத்தை அளிப்பதும் தான் அதன் பிரதான நோக்கம்.
புவியீர்ப்புக்கு நீர் அளிப்பதைப் போலான முழுமையான விசுவாசம் படைப்பூக்கப் பனிகளுக்கு தேவை – இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். படைப்பூக்கத்தின் அடர்வனத்தில் உலவும் ஒருவருக்கு இது தெரியவில்லையென்றால், இதை அவர் உணர்ந்துகொள்ளவில்லை என்றால் அவர் வழி தவறுவது உறுதி. கூரையில்லாத நித்தியத்தின் மீது பெருங்காதல் இல்லையென்றால் அவர் பத்திரமாக வீட்டிலிருப்பதே நல்லது. அப்படியான ஒருவர் நிச்சயம் மதிப்பான, உபயோகமுள்ள, அழகிய மனிதர் தான், இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் அவர் கலைஞர் இல்லை. திட்டவட்டமான இலக்குகளையும் அதனால் உருவாகும் வேலைகளையும் அவர் செய்து வாழ்வதே பொருத்தமானது. அப்படியான ஒருவர் கிளம்பிச் சென்று விமானத்தை ஓட்டுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
படைப்பூக்கம் மிக்கவர்கள் எல்லாம் அலட்சியமானவர்கள், அசிரத்தையானவர்கள், சமூகக் கடமைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவர்கள் என்றொரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. இது உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஏனென்றால் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய உலகமே வேறு. இந்த உலகில் நான் மேற்சொன்ன மூன்றாவது சுயமே கோலொச்சுகிறது -கலையின் பரிசுத்தமோ, இளமைக்கால அப்பாவித்தனமோ(இப்படியான ஒன்று முதலில் இருக்கும் பட்சத்தில்) இல்லை. ஆழமும் அகலமுமான உணர்ச்சிகளைக் கொண்ட ஒருவருடைய குழந்தைப் பருவம் என்பது சிறகுகளைக் கொண்டவொரு குதிரையின் பற்களுக்கான புல். அதன் மூர்க்கமான பற்கள் அந்தப் புல்லை நன்றாக மென்று விழுங்கியிருக்க வேண்டும். ஒருவருடைய கடந்தகாலத்தின் கதைகளை விசாரணைக்கு உட்படுத்துவதும் அங்கீகரிப்பதும் வேறு; மறுபுறம் அவற்றிற்கு உடையனிவித்து வளர்ந்த மனிதர்களாக்கி கலைத்தகுதி கொடுக்க முயல்வது என்பது வேறு; இவ்விரண்டிற்கும் இடையே சமரசம் செய்துகொள்ள முடியாத அளவு வித்தியாசம் இருக்கிறது. பின்னது ஒருபோதும் கலையாகாது. தன்னுடைய சுயம் தன்னை இடையூறு செய்யவிடாமல் கவனத்தோடு வேலை செய்யும் கலைஞர் என்பவர் ஒரு வளர்ந்த மனிதர் தான். ஆகையால் அதில் மூழ்கி வேலைசெய்து அதிலிருந்து தொடர்ந்து வேலை செய்வதற்கான ஆற்றலைப் பெறும் அவர்தான் அந்தப் படைப்புக்கு பொறுப்பானவர்.
*
அதனால் படைப்பூக்கமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது வேறொருவரிடம் இருந்து வரும் இடையூறில் எந்த அபாயமும் இல்லை. அம்மாதிரி இடையூறுகளெல்லாம் அசௌகர்யமான, அதே நேரம் அன்பான, குதூகலமான இடையூறுகள். நம்மையே மேற்பார்வையிடும் நமது கண்கள் தான் உண்மையில் அபாயகரமான இடையூறுகள். நாம் நாண் ஏற்றி இலைக்கை நோக்கிக் குறிவைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அம்பைத் தட்டிவிடும் அந்த அடி; நம்முடைய நோக்கங்களின் மீது நாமே விட்டெறியும் அந்தக் கல்; இவையெல்லாம் தான் நாம் பெரிதும் பயப்படவேண்டிய இடையூறுகள்.
தற்சமயம் காலை ஆறு மனி; என்னுடைய வேலையில் மூழ்கியிருக்கிறேன். நான் அலட்சியமானவள், அசிரத்தையானவள், சமூகக் கடமைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பு கொடுக்காதவள், இன்னும் என்னவெல்லாமோ… வண்டியின் சக்கரம் பழுதாகிறது; ஆடிக்கொண்டிருந்த பல் விழுகிறது; கடுகில்லாமல் இன்னொரு நூறு மதிய உணவுகள் இருக்கப் போகிறது. எனினும் கவிதை எழுதப்படுகிறது. அந்த தேவதையுடன் நான் மல்யுத்தம் புரிந்திருக்கிறேன், அவ்வொளியின் கறை என்மேல் படிந்திருக்கிறது, இது குறித்து எந்த வெட்கமும் எனக்கு இல்லை. எந்த குற்றவுணர்வும் இல்லை. சாதாரணத்தோடும், நேரத்தோடும் எனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை; விழுந்த பல்லோ, கடுகோ இல்லை; உடைந்த பொத்தானோ, கின்னத்தில் வேகும் பருப்போ கூட இல்லை. என்னுடைய விசுவாசமெல்லாம் அகத்தின் தரிசனத்திற்கு தான் – அது எப்போது வேண்டுமானாலும், எந்தமாதிரியும் வரட்டும். உங்களை மூன்று மணிக்கு சந்திப்பதாகச் சொல்லிவிட்டு நான் தாமதமாக வந்தால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். நான் வரவே இல்லையென்றால் இன்னும் சந்தோஷப்படுங்கள்!
காரணம் கலைமதிப்புடைய பணிகளை வேறு எந்த வகையிலும் செய்ய முடியாது. அதை மேற்கொள்பவருக்கு அவ்வப்போது கிடைக்கும் வெற்றியின் சுவைக்கு என்ன வேண்டுமானாலும் தகும். மறுபக்கம் படைப்பாக்க செயலுக்கான அழைப்பைப் பெற்று, படைப்பூக்க ஆற்றல் மேலெழுந்து தம்மை அலைகழிப்பதை உணர்ந்தும் அதற்கான நேரத்தையோ, ஆற்றலையோ அளிக்காதவர்கள் எல்லாம் இவ்வுலகில் மிகவும் வருத்தத்திற்குறிய மனிதர்கள்.
***
ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.