புதுமைப்பித்தனும் புத்தகக் கடையும் : ஶ்ரீநிவாச கோபாலன்

சென்னை மாநகரின் மீது மிகுந்த பற்றுடைய நண்பரொருவர் மூர் மார்க்கெட்டின் கதையை வாய்மொழி வரலாறாக எழுதவேண்டுமென்று கூறினார். அங்கு கடை வைத்திருக்கும் பலரது நினைவுகளிலும் பதிவாகியுள்ள சம்பவங்களைக் கோர்த்து ஒரு நூலாக எழுதவேண்டும் என்பது அவருடைய யோசனை. பழைய புத்தகங்கள் மீது அலாதியான பிரியம் கொண்ட அவர் எண்ணியதை எண்ணியாங்கு எய்தக்கூடிய திண்ணமுடியவர்தான்.

அவரது திட்டத்தை அறிந்த சில தினங்களில் க.நா.சு. எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்று கிடைத்தது. கெடுவாய்ப்பாக அக்கட்டுரையின் ஒரு பக்கம்தான் இருந்தது. அந்தப் பக்கத்தில், புதுமைப்பித்தன் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று புத்தகம் வாங்கியதைப் பற்றிக் கூறுகிறார். புதுமைப்பித்தன் அந்தக் கடையின் நெடுநாள் வாடிக்கையாளர். பழைய, புதிய புத்தகங்களை விற்கும் கடை அது. கடையின் உரிமையாளர் வெங்கடேசன் புதுமைப்பித்தனின் நண்பர். அயல்நாடுகளிலிருந்து வந்துசேரும் புத்தகங்களை உடனுக்குடன் வாங்குபவர் புதுமைப்பித்தன். ஒருநாள் ‘மணிக்கொடி’ அலுவலகத்திற்கு வாசகர் ஒருவர் அனுப்பிய சந்தா தொகை 3 ரூபாய் வந்திருக்கிறது. ‘மணிக்கொடி’யின் ஆசிரியரும், துணையாசிரியரும் இல்லாத நிலையில், புதுமைப்பித்தனே பணத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். நேராக மூர் மார்க்கெட்டில் உள்ள தனக்கு விருப்பமான வெங்கடேசனின் கடைக்குச் சென்று மூன்று புத்தகங்களை வாங்கியிருக்கிறார். அவருக்காக மொத்த விலையில் அரை அணா தள்ளுபடியும் கிடைத்துவிட்டது. புத்தகத்துடன் 2 அணாவுக்கு இரண்டு ஸ்பென்ஸர் சிகரெட்டுகளையும் வாங்கிக்கொண்டு அலுவலகம் திரும்பிவிட்டார் புதுமைப்பித்தன். எஞ்சிய தொகையை ஆசிரியரிடமே ஒப்படைத்துவிட்டார்.

க.நா.சு. இந்நிகழ்வைக் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் தனது காலத்து எழுத்தாளர்களில் மேதைமையுடன் திகழ்ந்த ஒருவர் எனக் குறிப்பிட்டுக் கட்டுரையைத் தொடர்கிறார். தொடர்ச்சி கிடைக்கவில்லை. க.நா.சு. குறிப்பிட்டுள்ள சம்பவத்தை நினைவில் இருத்திக்கொண்டு அடுத்த சங்கதிக்குச் செல்லலாம்.

புதுமைப்பித்தன் புத்தகம் வாங்கிய கதையை அறிந்த கொஞ்ச நாட்களுக்குள், ‘ஏழுபேர்’ (மார்ச் 1947) என்ற க.நா.சு. நாவலின் முதற்பதிப்பு கிடைத்தது. அதில் சில முத்திரைகள் இருந்தன. முதலாவது ‘தாசன் தமிழ் நூல் நிலையம் – வேப்பேரி, சென்னை’ என்ற புத்தகக் கடையின் முத்திரை. அடுத்து ஆனந்த விகடன், ஜெமினி ஸ்டூடியோ நூலகங்களின் பதிவுத்தாள்களும் இருக்கின்றன. திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியொன்றின் நூலக முத்திரையும் இருக்கிறது. அதாவது, கிடைத்திருக்கும் ‘ஏழுபேர்’ நாவலின் முதற்பதிப்பு சென்னை வேப்பேரியில் உள்ள தாசன் தமிழ் நூல் நிலையத்திலிருந்து வாங்கப்பட்டு, ஆனந்த விகடன், ஜெமினி ஸ்டூடியோ நூலகங்களில் சிறிது காலம் இருந்து, பின்னர் எப்படியோ நெல்லையில் உள்ள பள்ளி நூலகத்துக்கு வந்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டு பழைய புத்தகக் கடைக்கு வந்திருக்க வேண்டும். அந்தப் பழைய புத்தகக் கடை நண்பரிடமிருந்து வாங்கியதுதான் ‘ஏழுபேர்’ நாவலின் முதற்பதிப்பு. இந்நூல் கைசேர்வதற்குள் கடந்திருக்கும் பயணத்தைப் பார்க்கும்போது, ‘தாசன் தமிழ் நூல் நிலையம்’ என்ற புத்தகக் கடைதான் இப்பிரதியை விற்பனை செய்திருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அந்தக் கடையைப் பற்றி மேலும் விவரமறியும் ஆவலும் பெருகியது.

இனி, புதுமைப்பித்தன் பற்றி இன்னொரு சேதியைக் கவனிப்போம். சுந்தர ராமசாமி ஒருமுறை தொ.மு.சி. ரகுநாதனைச் சந்திக்கச் சென்றிருந்தார். இருவருக்கும் இடையேயான பேச்சு புதுமைப்பித்தன் பற்றியதாகவே இருந்திருக்கிறது. அப்போது ரகுநாதன் தன்னிடம் கூறியவற்றை சுந்தர ராமசாமி தனது கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

‘…மூர்மார்க்கெட்டில் அந்தக் காலத்தில் தாஸன் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடைக்காரர் இருந்திருக்கிறார். இவர் புத்தகங்களின் தரங்கள் பற்றியும் அவற்றிற்குரிய சந்தை விலையைப் பற்றியும் நுட்பமாக அறிந்தவர். மணிக்கொடி கோஷ்டியைச் சேர்ந்த பி. எஸ். ராமையா, கி.ரா., க.நா.சு. எல்லோருக்கும் இவருடன் தொடர்பு இருந்திருக்கிறது. இவரிடம் பாலியல் ஆபாசப் புத்தகங்களும் இருந்திருக்கின்றன. இவற்றை அவர் அதிகப் பணத்திற்கு இரவல் தருவாராம். இவரிடமிருந்த ஆபாசப் புத்தகங்களில் பல கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்திருக்கின்றன. ‘ஒரு ரஷ்ய இளவரசியின் அந்தரங்க டயரி’ என்பது அந்தக் காலத்தில் ஒரு உச்சகோடி ஆபாச நாவலாகக் கருதப்பட்டது என்றார் ரகுநாதன். அதைப் புதுமைப்பித்தன் உள்பட மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் படித்தார்கள் என்று அவர் சொன்னார். இந்த புத்தகத்தைப் படித்த பின்பு பாலுணர்வு ஆபாசம் சொட்டும் ஒரு நாவலை புதுமைப்பித்தன் எழுதினார் என்றும் அது கமலாம்பாளிடம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “எதற்காக இந்த மாதிரி ஒரு புத்தகத்தை எழுதினீங்க?” என்று புதுமைப்பித்தனிடம் ரகுநாதன் கேட்டாராம். “தமிழ் மட்டும் தெரிஞ்சவனுக்கு ஆபாசப் புத்தகம் படிக்க வேண்டாமா?” என்று திருப்பிக் கேட்டாராம் புதுமைப்பித்தன்…’

ரகுநாதன் குறிப்பிடும் தாஸன் யார்? தாசன் தமிழ் நூல் நிலையம் என்ற கடையின் பெயரைத்தான் கடைக்காரரின் பெயராக நினைவுகூர்கிறாரா? புதுமைப்பித்தனை வாடிக்கையாளராகப் பெற்ற மூர் மார்க்கெட் புத்தகக் கடைக்காரர் வெங்கடேசன் நடத்திய கடைதான் தாசன் தமிழ் நூல் நிலையமா? ‘மணிக்கொடி’ கோஷ்டிக்கு லேசில் கிடைக்காத புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தவர் தாசன் என்ற பெயரில் கடை நடத்திய வெங்கடேசன்தானா?

மேற்சொன்ன குறிப்புகள் அடுத்தடுத்து கவனிப்புக்குள்ளானபோது இந்தத் கேள்விகளை முன்னிட்டு யோசிப்பதற்கான சாத்தியம் உள்ளது. ‘தினமணி’, ‘தினசரி’ போன்ற நாளேடுகளில் ‘நித்திய கருமான தர்ஜுமா தொழில்’ செய்து சலித்த புதுமைப்பித்தன் உலக இலக்கியப் படைப்புகளைப் படிக்க வழிசமைத்தது மூர் மார்க்கெட் கடைகள்தான். புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்ததும் நேராக மணிக்கொடி காரியாலத்திற்குச் சென்று அங்கிருந்தவர்கள் சாப்பாட்டுச் செலவுக்கு எனக் கொடுத்த இரண்டு ரூபாயில் உடனே புத்தகம் வாங்கிவந்ததை வ.ரா.வின் கூற்றாகப் பதிவுசெய்திருக்கிறார் ரகுநாதன்.

“ஆசாமி திடீரென்று ஒருநாள்‌ வந்து நின்றார்‌. எங்கள்‌ நிலைமைதான்‌ தெரியுமே, தள்ள முடியுமா? வந்தவருக்குக்‌ கைச்செலவுக்காக இரண்டு ரூபாய்‌ கொடுத்தோம்‌. செலவு என்றால்‌ மேல்‌ செலவுக்கா? சாப்பாட்டுச்‌ செலவுக்கு. மனுஷன்‌ என்ன செய்தார்‌ தெரியுமா? வெளியே போனார்‌. திரும்பி வரும்போது மூர்‌ மார்க்கெட்‌ பழைய புத்தகக்கடையில்‌ ஒண்ணேகால்‌ ரூபாய்க்கு மாப்பஸான்‌ கதைப்‌ புஸ்தகம்‌, மீதிக்‌ காசுக்கு ஸ்பென்ஸர்‌ சுருட்டு இவற்றை வாங்கிக்‌கொண்டு வந்துவிட்டார்‌. “என்னவோய்‌, இப்படிப்‌ பண்ணினீர்‌? செலவுக்கு என்ன பண்ணுவீர்‌?” என்று கேட்டேன்‌. அதைப்பற்றி அவர்‌ கவலைப்படவில்லை. பேசாமல்‌ சுருட்டைப்‌ பற்றவைத்துக்‌கொண்டு, வாங்கிவந்த புஸ்தகத்தைப்‌ படிக்க ஆரம்பித்துவிட்டார்‌.”

இச்சம்பவமும் க.நா.சு. குறிப்பிடும் சம்பவமும் புதுமைப்பித்தனின் வாடிக்கையான மூர் மார்க்கெட் விஜயத்துக்குச் சான்றாகின்றன.

புதுமைப்பித்தனுடன் மூர் மார்க்கெட் கடைகளுக்குச் சென்று புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கிய நினைவுகளையும் க.நா.சு. ‘புதுமையும் பித்தமும்’ கட்டுரையில் எழுதியுள்ளார். இருவரும் தேடிப் பிடித்து வாங்கிய நூல்களை ஒருவருக்கொருவர் பறிமாரிக்கொண்டு வாசித்து விவாதித்தும் இருக்கிறார்கள்.

‘‘கிரேட் ஷார்ட் ஸ்டோரிஸ் ஆப் த வோர்ல்டு’ [The World’s Greatest Short Stories] என்கிற ஒரு நூலும் (இலண்டன்), அதேபோல, அமெரிக்கப் பதிப்பான ‘த வோர்ல்டு புக் ஆப் ஷார்ட் ஸ்டோரிஸ்’ [The World Book of Short Stories] என்பதில் இருபது பாகங்களில் ஒரு மூன்று பாகங்களும் எங்களுக்கு மூர் மார்க்கெட்டில் மலிவு விலையில் கிடைத்தன. அவற்றில் பல ஸ்பானிய, இத்தாலிய, ஜெர்மன், டர்க்கிஷ், அரபிக் கதைகளைப் படித்து விவாதித்ததும் நினைவிற்கு வருகிறது. இரண்டாவது நூலின் மற்றப் பாகங்களும் கிடைக்குமோ என்று தேடித் துருவிப் பார்த்ததும் ஞாபகமிருக்கிறது.’

அன்று அயல்நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியானதும் உடனே வாசிக்கும் வாய்ப்பு மூர் மார்க்கெட் புத்தகக் கடைகள் மூலம்தான் கிடைத்தது என்பதையும் தேர்ந்த புத்தகக் கடைக்காரரான வெங்கடேசன் ஒரு முக்கியப் பாத்திரமாக செயல்பட்டிருக்கிறார் என்பதையும் க.நா.சு. அளிக்கும் மற்றொரு குறிப்பு உணர்த்துகிறது.

‘ஃபிரான்ஸ் காஃப்காவின் [Franz Kafka] கதைகள் ஒரு தொகுப்பு வெளிவந்து கண்ணில் பட்டதும், மூர் மார்க்கெட் வி. ஸி. வெங்கடேசனிடம் இரண்டு பிரதிகள் வாங்கி ஒரு பிரதியைப் புதுமைப்பித்தனிடம் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது. காஃப்காவின் கதைகளைப் படித்தவுடன் பாராட்டியவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். அந்தக் காலத்தில், 39, 40இல் காஃப்காவின் பெயரோ, மேதமையோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை.’

என்று க.நா.சு. எழுதியுள்ளார். புதுமைப்பித்தனுடன் அடிக்கடி மூர் மார்க்கெட் புத்தகக் கடைகளுக்குச் செல்வது பற்றியும் அப்போது அவருடைய பேச்சின் வாயிலாக பல உலக இலக்கியப் படைப்புகளை அறிந்தது பற்றியும் இன்னொரு குறிப்பில் க.நா.சு. கூறுகிறார்.

வி. ஸி. வெங்கடேசன் பற்றி க.நா.சு. தரும் குறிப்புகளும் தாஸன் பற்றி ரகுநாதன் தரும் செய்திகளும் சேர்ந்து மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைக்காரர் ஒருவரின் புகைச்சித்திரத்தை வரைகின்றன. உலக எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தரமறிந்து தருவித்து விற்பனை செய்தவர், புதுமைப்பித்தன் முதலான எழுத்தாளர்களுடன் நன்கு பழகியவர் என்பன அந்தப் புத்தகக் கடைக்காரரின் சிறப்புகள். இக்குறிப்புகளுடன் தொடர்புறும் வகையில் தாசன் தமிழ் நூல் நிலையம் பற்றிய குறிப்பும் இருக்கிறது. இவற்றை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு தேடினால், தாஸன் அல்லது வி. ஸி. வெங்கடேசனின் ஆளுமைச் சித்திரம் மேலும் துலக்கம் பெறலாம்.

*

சில குறிப்புகள்:

மூர் மார்க்கெட் வாய்மொழி வரலாறு எழுதும் திட்டம் கொண்ட நண்பர் சு. அருண் பிரசாத். மூர் மார்க்கெட் பற்றி ஆவணச் சித்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் மாப்பஸான் கதைப் புத்தக்கத்தை மூர் மார்க்கெட்டில் வாங்கவில்லை என்றும் தான் ஆலோசகராக இருந்த ‘கரண்ட்‌ சர்குலேட்டிங்‌ லைப்ரரி’ என்ற நிறுவனத்தின் கடையில் ஏழு ரூபாய்‌ விலை கொடுத்து, புதிய புத்தகமாக வாங்கினார் என்றும் வாதிடுகிறார் சிட்டி. அவருக்கு ரகுநாதன் தக்க பதிலளித்துள்ளார்.

பயன்பட்ட நூல்கள்:

Ka. Naa Subramanyam, ‘The Stormy Petrel of Tamil Literature’, Mirror, September 1979

க. நா. சுப்ரமண்யம், ‘புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்’, 2023

சுந்தர ராமசாமி, ‘மனக்குகை ஓவியங்கள்’, 2011

தொ. மு. சி. ரகுநாதன், ‘புதுமைப்பித்தன் வரலாறு’, ஆ. இரா. வேங்கடாசலபதி (ப-ர்), 2021

தொ. மு. சி. ரகுநாதன், ‘புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’, 1999 ஶ்ரீநிவாச கோபாலன், ‘புதுதில்லியில்

ஸ்ரீநிவாச கோபாலன்

ஶ்ரீநிவாச கோபாலன் பதிப்பாளர். ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. நல்ல துப்பறியும் கதைபோல இருக்கிறது புதுமைப்பித்தன் மூர் மார்க்கெட்டில் புத்தகங்கள் வாங்கிய கதை. செக்ஸ் கதைப் புத்தகங்களை, பாலியல் ஆபாசப் புத்தகங்கள் என்று சுந்தர ராமசாமி எழுதுகிறார். உலகில் நிறைய பேருக்கு அத்தியாவசியமாக இருப்பதை ஆபாசம் என்று சொல்ல இயலுமா? அப்படிச் சொல்கிறபோது அப்படிச் சொல்பவரின் ஒழுக்கப் பார்வையையும் அது காட்டிவிடுகிறதுதானே. தமிழில் சரோஜாதேவி புத்தகம் என்ற குறிப்பு பொதுவாக இந்தப் புத்தகங்களைச் சுட்டுவதற்கு உள்ளது. காமக்கதைப் புத்தகம், சரசப் புத்தகம், சிருங்காரக் கதைப் புத்தகம் என்று சொல்லிச் சொல்லி அப்புத்தகங்களைச் சுட்டுவதற்கு ஒரு பதத்தைக் கொண்டுவர வேண்டும்.

  2. மூர் மார்கெட்டும் எழுத்தாளர்களின் பரந்து பட்ட தேடுதலும் நிறைவான விருந்து நன்றி.

Leave a Reply to ஷங்கர்ராமசுப்ரமணியன் Cancel reply

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss