இந்தியத் தத்துவம் – சாங்கியம், யோகம்: பி. ஏ.கிருஷ்ணன்

தமிழில்: சதீஷ்குமார் ஆர் எம்

இதுவரை, இந்தியத் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளான தரிசனம், ஊழ்வினை(கர்மா), வீடுபேறு(முக்தி) போன்றவற்றை விரிவாக பார்த்தோம். வேதங்களிலும் உபநிடதங்களிலும் இந்தியத் தத்துவம் தளிர்விட ஆரம்பிப்பதை காணமுடிந்தது. இந்திய தத்துவத்தை மறுத்த பொருள்முதல்வாத தரப்பை பார்த்தோம். இனி அதன் மையப்புள்ளிகளை சற்று ஆழமாக ஆராயவேண்டியிருக்கிறது. அதற்குமுன், ‘பூர்வபக்ஷம்’ எனும் கருதுகோளை காண்போம்.

பூர்வபக்ஷம் – கண்டனம் – உத்தரபக்ஷம் முறைமை

தங்கள் கருத்துக்கு எதிர்தரப்பு(பூர்வபக்ஷம்) முன் வைக்கும் மறுப்பை முதலில் மறுத்து(கண்டனம் தெரிவித்து) தங்கள் கருத்துத் தரப்பை, சிந்தனை தரப்பை(உத்தரபக்ஷம்) பதிலுகளுடன் சான்றுகளுடன் நிறுவுதல் என்ற விவாத முறைமையை எல்லா இந்திய தத்துவப் பள்ளிகளும் பின்பற்றியுள்ளன. அதாவது, எல்லா தரிசனங்களும் தாங்கள் அளிக்கும் கண்ணாடிகளை அணிந்து உலகை பார்க்கச் செய்கின்றன. எதையும் ஏற்கும் முன், எவற்றை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றன. அதன் பின்னரே தத்தம் தரிசனம் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்கு ஏற்கப்படும். சூத்திரங்கள், அதற்கான பாஷ்யங்கள், வார்த்திகங்கள் என எல்லா வடிவங்களும் இந்த முறைமையால் உருவாகி வந்தவை. விவாதத்திற்கு ஏற்கப்படும் தலைப்பின் கீழ் வரும் எல்லா சுய மற்றும் எதிர் கருத்துகளை(சுபக்கம் மற்றும் பரபக்கம்) இந்த முறைமை விரிவாக கலைக்களஞ்சியம் போலத் தொகுப்பது ஒரு பெரும் பயன். இதனால் தத்துவத் தரப்புகள் மேலும் சீர்மை பெற்று வளர்ந்தன. ஒரு குறிப்பிட்ட தத்துவப்பள்ளி  தங்கள் தரப்பை முன்வைக்கும் போது, எதிர் தரப்பின் எல்லா அம்சங்களையும், மாறுபடும் இடங்களையும் பட்டியலிட்டு விரிவான விவாதத்திற்கு உள்ளாக்குகின்றன. ஒரு தத்துவதரப்பு பிற எல்லா தத்துவதரப்புகளையும் பூர்வபக்ஷமாக கொள்வதால், மாற்றுச் சிந்தனைகளின் தொடக்கப்புள்ளிகளும், சிறு வேறுபாடுகளும் கூட விரிவாக விளக்கப்படுகின்றன. இந்த முறைமை மூலம், தங்கள் கருத்தை முதன்மையாக முன்வைக்கும் தரப்பினர், பூர்வபக்ஷமாக மற்ற சிந்தனைப் பள்ளிகளை பற்றி விரிவான சித்திரத்தை அளித்துவிடுகிறார்கள். எதிர்தரப்புடனான இந்த தீவிரமான தத்துவ மோதல்கள், ஒவ்வொரு இந்திய தத்துவ மரபும் தங்கள் தரப்பை தொகுத்து சீர்படுத்தி மேலும் பரிணமிக்க காரணமானது என்றால் அது மிகையல்ல.

கபிலர் PC: தமிழ்விக்கி

சாங்கிய தத்துவம்

‘சாங்கியம்’ என்ற சொல்லுக்கு தெளிவான ஒற்றை அர்த்தம் இல்லை. இதன் ஊற்றுமுகமாக கபிலர் என்பவர் முன்வைக்கபடுகிறார். அவரைப் பற்றியும் தெளிவான தகவல்கள் இல்லை. இதன் தொன்மையை எந்த ஆய்வாளரும் மறுக்கவில்லை. மகாபாரதம், சரக சம்ஹிதை, மனுஸ்மிருதி போன்ற பல நூல்கள் சாங்கிய கொள்கைகளால் நிரம்பியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார். மகாபாரதம் இதை ‘சனாதனம்’ என்கிறது. சாங்கியத்தை விவரிக்கும் இரு நூல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. ஒன்று பொ.யு. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, ஈஸ்வர கிருஷ்ணாவின் 72 ஈரடிகள் கொண்ட ‘சாங்கிய காரிகை’. மற்றொன்று கபிலரால் எழுதப்பட்டதாக கருதப்படும் ‘சாங்கிய சூத்திரம்’ (இது பொ.யு. 14 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக ஊகம்).

துவக்கத்தில் சாங்கியம் தூய பொருள்முதல்வாத தத்துவமாக இருந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதி. காலம் சாங்கியத்தின் பெரும்பகுதியை உண்டு, சிறு துண்டை மட்டுமே மிச்சம் வைத்திருப்பதாக விளக்கவுரையாளர் விக்ஞான பிக்ஷு கூறுகிறார். எனவே ஆரம்பகால பொருள்முதல்வாத அடித்தளம், பின்னாட்களில் கருத்துமுதல்வாத முகப்பால் மறைக்கப்பட்டதாக சட்டோபாத்யாய கருதுகிறார்.

புலனறிவு, ஊகம் மற்றும் முன்னறிவு எனும் மூன்று பிரமாணங்களை சாங்கியம் ஏற்கிறது.

சாங்கிய தத்துவம் மானுட துயரம் என்ற யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டது. இந்த துயரமான வாழ்க்கை தளையில் இருந்து விடுபட மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என நம்புகிறது. அதை அடைவதற்கான வழிதான்  சாங்கியத்தின் இலக்கு.

பிரகிருதி மற்றும் புருஷன்

பிரகிருதியும் புருஷனும்  சாங்கிய பள்ளியின் இரு அடிப்படை கருத்துருக்கள். பிரகிருதி என்பது இயற்கை. புருஷன் என்பது மனிதர்கள். பல மனிதர்கள் ஆனால் இயல்பு ஒன்றே. இவை இரண்டும் நித்தியமானவை, ஒன்றின் மீது மற்றொன்று சாராதவை. ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில், கடவுள்கள்  உலகை படைப்பதற்கான வேள்வியில் ‘புருஷனை’ பலியிடுகிறார்கள். அந்த ‘புருஷன்’ மனிதனைப்போல உடலால் ஆனவன். சாங்கியத்தில் ‘புருஷன்’  ஒருவகையான அருவமான கருத்துரு மட்டுமே.

சாங்கிய அமைப்பின்படி, பிரபஞ்ச ஆக்கம் என்பது இவ்விரண்டின் இணைவின் வெளிப்பாடு. பிரகிருதிக்கு பிரக்ஞை(அறிநிலை) இல்லை என்றாலும் நோக்கம் உண்டு, மாறிக்கொண்டே இருப்பது. புருஷன் என்பது தூய அறிநிலை. மாறாதது, செயலற்றது. இறப்பிற்கு பின் ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்கு இடம்பெயர்கிறது. இந்த முடிவற்ற சுழற்சியிலிருந்து வெளியேற பிரகிருதிக்கும் புருஷனுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடை அறிவது ஒன்றே வழி. தனி புருஷன், பிரகிருதி மீதான விழைவை இழந்து, அவ்வாறாக எல்லா நுண் மற்றும் பரு உடல்களிலிருந்தும் விடுதலை அடைவது. காந்தப்பொருள் இரும்பு துகள்களை தன்னிடம் இழுப்பது போல, புருஷன் பிரகிருதியுடன்  இணையும் போது, பரிணாம வளர்ச்சி தொடங்குகிறது. எந்த நோக்கமும் அற்ற தூய புருஷன் பிரகிருதியின் மீது கவனம் குவிக்கும்போது அதிலிருந்து புத்தி அல்லது மஹத் பிறக்கிறது. அதிலிருந்து அகங்காரம் எனும் தன்னுணர்வு பிறக்கிறது. தன் புறவயமான இருப்பிற்கான அடிப்படை  தன்னுணர்வுதான்  என புருஷனை அது நம்பவைக்கிறது.  

வானம், காற்று, தீ, நீர், பூமி எனும் ஐந்து பருப்பொருட்களாக; ஒலி, தொடுகை, பார்வை, சுவை, மணம் எனும் ஐந்து தன்மாத்திரைகளாக;  காது, தோல், கண், நாக்கு, மூக்கு எனும் ஐந்து அறிபுலன்களாக; ஐந்து செயற்புலன்களாகவும் மனமாகவும்  இந்த அகங்காரம் 21 ஆக பிரிகிறது. இந்த 21 அறிதல்நிலைகளின் பல்வேறு இணைவு சாத்தியங்களால் ஆனது பிரபஞ்சம். ஒவ்வொரு சாத்தியத்திலும் புருஷனும் உண்டு. மொத்தமாக, இவை 24 தத்துவங்கள் என சாங்கியத்தால் அழைக்கப்படுகின்றன.

இதற்கு மேலாக பருப்பொருட்களின் மூன்று அடிப்படை குணங்கள் சாங்கியத்தால் விளக்கப்படுகின்றன:  தமோ(தமஸ்), ராஜசம்(ரஜஸ்) மற்றும் சத்வம்(சத்வ) குணங்கள்.

தமோ குணம்: இருள், அறிவின்மை, தெளிவின்மை, செயலற்ற தேக்க நிலை போன்ற எதிர்மறை பண்புகள். அறிவற்ற சோம்பல் மனிதர் உதாரணம்.

ராஜச குணம்: உணர்ச்சிநிலை, ஆர்வம், ஆற்றல், வெல்லும்விழைவு போன்ற செயலூக்க பண்புகள். செயலூக்கம், ஆர்வம் மிகுந்த மனிதர் உதாரணம்.

சத்வ குணம்: ஒளிர்தல், அறிவு, இலகுத்தன்மை போன்ற நற்பண்புகள். ஞானமும் தெளிவும் உடைய மனிதர் உதாரணம்.

தன்மாத்திரை

தன்மாத்திரை என்ற சம்ஸ்கிருத சொல்லை  தன்+ மாத்திரை என்று பிரிக்கலாம். ”தன் என்ற சொல்லுக்கு ”நுண்மையான” என்று அர்த்தம், “மாத்திரை” என்றால் பருப்பொருள். 

 ’தொடுத’லுக்கான  தன்மாத்திரை ’ஸ்பர்ஷா’. அதற்கான மூலம் ’காற்று’ என்ற பருப்பொருளில் இருக்கிறது. ”ஸ்பர்ஷா” அடிப்படையானது. அது ’தொடுதல்’ என்ற புலனுணர்வாக இன்னும் உருக்கொள்ளாதது.  ’தொடுதல்’ என்ற புலனுணர்விற்கான சாத்தியம் அந்த தன்மாத்திரையில் இருக்கிறது. அதாவது நுண்வடிவில் உள்ள “தொடுதல்’. தொடுகையும் காற்றையும் பிரிக்க இயலாது. 

ஒவ்வொரு புலன் அனுபவத்திற்கும் சாரம்சம் உண்டு என்றும், அந்த சாராம்சம் பருவடிவமானது அல்ல என்றும்  சாங்கியம்  விளக்கிறது. இந்த ஒட்டுமொத்தத்தில்  ‘புருஷன்’ பிரக்ஞை என்ற அம்சத்தை கலக்கிறது, ஆனால் அது இந்த அறிவார்ந்த செயல்பாட்டில் வெறும் சாட்சியாகவே இருக்கிறது.  

சாங்கியத்தின் பிரகிருதி புருஷன் இணைவை இந்த உவமை வழியாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்: புருஷன் வீட்டின் உரிமையாளன். முக்குணங்களும் வாயில்காவலர்கள். புலன்கள் கதவுகள்.

புருஷனால் எதையும்  படைக்க முடியாது. ஆனால் பிரகிருதி அதனுடன் இணைவது வழியாக பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. பிரகிருதி குருட்டுத்தனமானது. அது புருஷனின் துணையுடன் தான் பிரபஞ்சத்தை உருவாக்கமுடிகிறது. பிரகிருதி புருஷன் இணைவை முடவனும் குருடனும் இணைவதுபோல என்று சொல்லலாம். நல்ல கண்பார்வை கொண்ட முடவன்(புருஷன்) குருடனின் (பிரகிருதி) தோள்களில் அமர்ந்திருக்கிறான். 

இந்த இருமைவாதம் சமநிலை இல்லாமல்  இருப்பதை உங்களால் உணரமுடியும். புருஷன் இல்லாவிட்டாலும் பிரகிருதி வழியாக  இந்த உலகத்தின் முழுசித்திரத்தையும் உருவாக்கிவிடமுடியும். பிரகிருதி என்பது அசைவற்ற இயந்திரத்தனமான ஜடப்பொருள் அல்ல, அது உயிராற்றலும் படைப்பூக்கமும் கொண்ட கருதுகோள். அது தனித்தே இயங்கினாலும், மனித மனதையும் அறிவையும் படைக்க தேவையான ஆற்றல் அதற்குண்டு. அப்படிப்பார்த்தால் சாங்கியம் பொருள்முதல்வாத நோக்கில் பிரபஞ்சத்தை விளக்குகிறது. சலனமற்ற, மாறாத பிரக்ஞையான ’புருஷன்’  பிற்கால சேர்க்கையாக இருக்கலாம் என இடதுசாரி தத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சத்காரியவாதம்

காரண-காரிய உறவை நிகழ்வுகளுக்கு இடையேயான தொடர்பாக பார்க்கும் ஐரோப்பிய சிந்தனையில் இருந்து இந்திய மரபு வேறுபடுகிறது. இந்திய மரபு காரண-காரியத்தை ஒன்றின் மூலமாக(source) காண்கிறது. களிமண்ணில் இருந்து பானை உருவாகி வருவது குயவனின் திறமை எனும் காரணத்தால். இது காரண-காரிய உறவிற்கான நல்ல உதாரணம். சாங்கியத்தில் இது சத்காரியவாதம் எனப்படும். சாங்கிய சூத்திரங்களுக்கான விளக்கவுரைகளில் காரணத்தில் காரியம் உள்ளுறைகிறது என்று  சொல்லப்படுகிறது. எனவே காரியத்தில் (விளைவில்) எதுவும் புதிதாக இல்லை, காரணத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என சத்காரியவாதம் கூறுகிறது.

  1. இன்மையில் இருந்து எதுவும் பிறக்காது
  2. குறிப்பிட்ட பொருளை உருவாக்க குறிப்பிட்ட மூலப்பொருட்கள் தேவை. அதாவது பானைக்கு களிமண், தயிருக்கு பால் போல.
  3. இல்லையெனில் எதிலிருந்தும்  எதுவும் உருவாகலாம்.
  4. படைப்பாளியால் இயன்றதை மட்டுமே படைக்க இயலும். அதாவது குயவன் பானை தயாரிக்கலாம், தங்கநகை செய்ய இயலாது.
  5. காரியத்திலும் காரணத்தின் கூறுகள் உள்ளுறைந்திருக்கும். அதாவது பானையில் களிமண்ணின் கூறுகள் இருப்பது போல.

நாம் காணும் இந்த புறவயமான உலகம் நம் புலன்களால் அறியமுடியாத மீபொருண்மையான காரணத்தால் உருவானது. அந்த காரணத்தின் அடிப்படை இயல்புகளை  ஊகிக்க  இந்த கடைசி வாதத்தை(காரியத்தில் காரணம் உள்ளுறைந்திருப்பது)  சாங்கியம் பயன்படுத்திக்கொள்கிறது.

புருஷன் ஒரு தூய தன்னிலை:

புருஷன் எனும் பொருளற்ற ஆத்மாவை புலன்களால் நேரடியாக அறியமுடியாது. அதன் இருப்பை நிறுவ இந்த ஐந்து வாதங்கள் முன்வைக்கபடுகின்றன.

  1. எல்லா சிக்கலான அமைப்புகளும் ஒரு புற நோக்கத்தை கொண்டுள்ளன. கட்டில் ஒருவர் படுத்து இளைப்பாற உதவுவது போல, இயற்கையில் உள்ள எல்லா பொருட்களும், குறிப்பாக உடல்,  அது அல்லாத ஒன்றிற்கு(புருஷன்)  உதவுகிறது.
  2. புறவயமானவற்றையும் அவற்றின் இயங்குமுறையை முக்குணங்கள் விரிவாக விளக்கினாலும், உணர்வுள்ள உயிரினங்களில் ’குணம்’ என்ற இயல்பிற்கு  நேர்மாறான ’தன்னுணர்வு’ இருக்கிறது. அதனால்  பருவடிவமில்லாத  ’புருஷன்’ என்ற அருவமான  காரணம்  தேவைப்படுகிறது.
  3. மனித உடலின் எல்லா உறுப்புகளும்   ஒருங்கிணைந்து செயலாற்றுவதால் அவற்றை ஏதோ ஒன்று மேற்பார்வை செய்கிறது என்பது உறுதியாகிறது. அப்படி இல்லாவிட்டால் உறுப்புகளுக்கிடையான ஒருங்கிணைவு  குலைந்து இறந்த உடலைப்போல ஆகிவிடும். அதனால் புருஷன் இருக்கிறான்.  
  4. நம் புலன்களால்  நாம்  புருஷனை உணரமுடியாவிட்டாலும், நாம் பிரக்ஞையை  நாம் நேரடியாகவே உணர்கிறோம்.  புருஷன் என்பது  அந்த  அறியும் தன்னிலைதான்.
  5. புருஷன் என்ற ஒன்று இல்லையேல், ஆத்மா உடலில் இருந்து விடுபட இயலாது.

இந்த பலவீனமான வாதங்கள் எளிய தர்க்கங்களால் கூட வீழ்த்தப்படும். புருஷன் செயலற்றது எனில் அது எதையும் மேற்பார்வை செய்யவோ, தனிமனித செயல்களுக்கு மூலமாகவோ இருக்க இயலாது. மேலும் குணங்களே இல்லாத புருஷன் எனில், எண்ணிலடங்கா புருஷர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட முடியாது.

ஈஸ்வர கிருஷ்ணா சாங்கிய காரிகையில் இந்த மறுப்பைகளை இப்படி எதிர்கொள்கிறார்: புருஷனின் செயலற்றதன்மை என்பது ‘அக்ரிய (அ+க்ரிய)’: அதாவது நகரவும் செயல்படவும் முடியாத நிலை மட்டுமே, ஆனால் அது மேற்பார்வை செய்யும், நம் செயல்களை தீர்மானிக்கும் காரணியாகவும்  இருக்கும்.

பிரபஞ்ச பரிணாமம் மற்றும் செயல்பாடு

இந்த பிரபஞ்சம் உண்மையும் அல்ல மாயையும் அல்ல. மனிதனுக்கு கொம்பு இருக்கிறது என்று யாராவது சொன்னால் அந்த கூற்றின் உண்மையின்மையை நம்மால் உணரமுடியும். அதேபோல  பிரபஞ்சம் என்பது மாயை என்று சொல்வது உண்மைத்தன்மை இல்லாத கூற்று என்று சாங்கியம் சொல்கிறது. ஆனால் பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் உருமாறிக்கொண்டிருப்பதனால் நாம் காணும்  பிரபஞ்சம் முற்றிலும் உண்மையும் அல்ல. பிரபஞ்சம் என்ன என்பதை விளக்கமுடியாது என்ற கூற்றையும் சாங்கியம் ஏற்றுக்கொள்வதில்லை. சாங்கியத்தை பொறுத்தவரை விளக்கமுடியாதது என்பது  இல்லாதது.  பிரபஞ்சம் என்பது கருத்துவடிவானது என்ற கூற்றையும் சாங்கியம் மறுக்கிறது. பிரகிருதியின் புறவய இருப்பாக என்றென்றைக்குமாக இருக்கிறது. அதன் வெளிப்பாட்டில் பிரபஞ்சம் தோன்றி மறைகிறது.  மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சம் புறவயமான யதார்த்தம். பிரபஞ்சம் இரண்டு அடுக்குகளில் இயங்குகிறது:  மூலப் பிரகிருதியின் முடிவற்ற வெளிப்பாடுகளையும் பரிணாமங்களையும் ‘ஆக்கம்’ என்று சொல்லலாம், அந்த வெளிப்பாடுகள் மீண்டும் மூலப் பிரகிருதிக்குள்ளேயே ஒடுங்குவது ‘அழிவு’. மூலப்பிரகிருதியின் சமநிலைக்குலைவால், பல்வேறு பொருட்களால் ஆன பிரபஞ்சம் உருவாகிறது, பின் பிரபஞ்சம் அழியும் கட்டத்தில் அதே பொருட்கள் தங்கள்  முந்தைய நிலைக்கு திரும்புகின்றன, அப்படி பின்னால் போய் மூலபிரகிருதியில் ஒடுங்கி  பிரபஞ்ச முடிவை நோக்கி செல்கின்றன. புதிய பிரபஞ்சம் உருவாவதுவரை பிரகிருதி அதேநிலையில் இருக்கிறது.  எளிமையான உதாரணமாக, அட்டன்பரோவின்  இயற்கை சார்ந்த ஆவணப்படத்தில்  சிறு செடி முளை விடுவதை பிரகிருதி-புருஷன் ஆக்கமாக காணலாம். அந்த காணொளியை  பின்னோக்கி ஓட்டினால், அதே செடியின் முளை பூமிக்குள் அடங்குவதை காணலாம். சாங்கிய தரிசனத்தின் படி அவ்வாறே பிரபஞ்சமும்.

துக்கநிவாரணம்

பிரகிருதி அடிப்படையில் மாறிக்கொண்டிருப்பதால், இப்பருவுலகில் எதுவும் நிரந்தரமில்லை. ஒவ்வொன்றும்  சிதைந்தும், கூறுகளாக பிரிந்தும் முடிவை சந்திக்கின்றன. எனவே, மறுபிறவி எனும் கூறு உள்ளவரை, முதுமையின் வேதனைகளையும் மரணத்தையும் தவிர்க்க முடியாது. சாங்கியத்தின் படி துயரத்தை கடக்க (துக்கநிவாரணம்), சம்சாரம் எனும் சுழலில் இருந்து, மறுபிறப்பின் சுழலில் இருந்து எப்போதைக்குமாக விடுபடுவது ஒன்றே வழி. அதுவே புருஷனின் வீடுபேறு. சாங்கியத்தில் இந்த முழு ஒடுங்குதல் ‘கைவல்யம்’ எனப்படுகிறது. இது பிரகிருதி-புருஷன் இடையேயான இணைப்பை தளர்த்துவது வழியாக சாத்தியமாகிறது. உண்மையில் ஆத்மாவின் அறியும் ஆர்வத்தால்தான் இந்த இணைப்பே உருவாகிறது. நம் அகங்காரம் தன்னை  நம் அனுபவ உலகமாக , நம் உடலாக, நுண்மையான உறுப்புகளாக, நம் மனமாக அடையாளம் காண்பதால் இந்த இணைப்பு இன்னும் வலுவானதாக ஆகிவிடுகிறது. புருஷனை எந்த புறவிசையும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அவன் இந்த ஆடலால் ஆட்கொள்ளப்பட்டவன். அதிலிருந்து கண்களை விலக்கமுடியாத பார்வையாளன். சாங்கியத்தின் படி,  அந்த ஆட்கொள்ளலில் இருந்து படிப்படியாகத்தான் விலக இயலும். இது நானல்ல, இது எனதல்ல என மீச்சிறு தத்துவங்களில் இருந்து தன் சுய புத்தி வரை ஒவ்வொன்றாக விலக்கவேண்டும். பிரகிருதியின் அனைத்து நிலைகளின் பரிணாமங்களையும் முழுமையாக உள்வாங்கிய பின்னரே, தூய முழுஅறிவு மட்டுமே ஆன புருஷனின் தனிநிலையை எய்த இயலும். அந்நிலை ‘கேவல’ எனப்படும் தனிமை. அதாவது பிரகிருதியை துறந்து, தூயதன்னிலை ஆக மட்டுமே எஞ்சும் புருஷன். இவ்வாறு உலகியல் சுழலில் இருந்து வீடுபேறு பெறுவதே சாங்கிய தத்துவம்.

பிரகிருதி புருஷனுக்காகத்தான் செயல்படுகிறது. புருஷன் போதுமென்று பற்றின்றி விலகும்போது, பிரகிருதியும் தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்கிறது.

சாங்கியத்தில் இறைக்கொள்கை

சாங்கியத்தின் பழைய செவ்வியல்வடிவில் கடவுள் இல்லை. நம் எல்லா செயல்களுக்கு பின்னும் சுயநலம் அல்லது பிறர்நலன் சார்ந்த நோக்கம் இருக்கும். கடவுளின்  எல்லா சுயவிருப்பங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதால்  அவருக்கு மேலதிக சுயவிருப்பங்கள் இருக்க இயலாது. ஒருவேளை கடவுள்  சுய விருப்புகளாலும் நோக்கங்களாலும் பிணைக்கப்பட்டிருந்தால் அவர் சுதந்திரமானவர் அல்ல. அவர் முழுசுதந்திரமானவராக இருந்தால் படைப்பு செயலில் ஆழ்ந்திருக்க வேண்டியதில்லை. கடவுள் சுதந்திரமாகவும் இல்லை, தளைக்கப்பட்டும் இல்லை என்று சொல்வது  தத்துவவிவாதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது. கடவுள் தன் கருணையால் இந்த உலகை படைத்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படைப்புக்கு முன் ஆத்மாக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை, அத்துன்பத்திலிருந்து விடுபட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, உலகத்தை உருவாக்கிய செயல் கடவுளின் கருணையின் வெளிப்பாடாக இருக்க முடியாது என சாங்கியம் உறுதியாகவே மறுக்கிறது. கடவுளை நல்லெண்ணமும் கருணையும் இயக்கினால், உலகம் முழுதும் மகிழ்ச்சியானவர்கள் மட்டுமே நிறைந்திருப்பார்கள். மனிதர்களின் நடத்தைக்கேற்ப இறை அவர்களை கையாளுகிறார் என கொண்டால், இதற்கும் இறை தேவையில்லை, அது ஊழ்வினை அல்லது கர்மா என்கிற கருதுகோள்படி செயல்படுவதாக கொள்ளலாம். ஆத்மா எனும் பொருள்வடிவாக அல்லாத ஒன்றிலிருந்து பொருட்கள் தோன்ற முடியாது.  எல்லையற்ற படைப்பு சக்தியான கடவுளின் இருப்பு என்பது நித்திய இருப்பான புருஷனுடன் ஒத்திசையவில்லை. புருஷன் நித்தியமானது, புருஷர்களும்  நித்தியமானவர்கள் பிரகிருதியும் நித்தியமானது என்கிறது சாங்கியம். அவற்றிற்கு கடவுளின் படைப்புசக்தி தேவையில்லை. சாங்கிய தத்துவத்திற்கு கடவுள் இன்றியமையாதவர்  அல்ல. அதே சமயம் சாங்கியம் கடவுள் இல்லை என நிறுவி இறைமறுப்பும் செய்வதில்லை. கடவுள் என்ற ஒன்றை கற்பிதம் செய்வதற்கான அவசியமே இல்லை என்று மட்டுமே சொல்கிறது.

யோகம்

யோக சூத்திரத்தின் ஆசிரியர் பதஞ்சலி. இவர் பொ.யு. 4-5 நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கலாம். யோகம் என்பது தன்னளவில் தத்துவம் அல்ல. அது மிக தொன்மையான சில பயிற்சி(சாதகம்) முறைகளை குறிக்கிறது. அவை பயில்பவருக்கு சில இயற்கையை தாண்டிய திறனை அளிக்கும் என்று நம்பப்பட்டது. ஏதும் உள்ளார்ந்த இணைப்புகள் இல்லாவிடினும், சில தத்துவ உசாவல்களையும் யோகப்பயிற்சி முறைகளையும், யோக சூத்திரம் இணைத்து விவாதிக்கிறது.

பதஞ்சலி யோகத்தில் உள்ள யோகம் என்பது இணைவு(சம்யோகம்) அல்ல, பிரிவு/பிளவு(வியோகம்) என்று ராதாகிருஷ்ணன் அவதானிக்கிறார். புருஷன்-பிரகிருதி பிரிவுக்காக யோகம் பயிலவேண்டும். யோகம் என்பது மனித இயல்பின் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு கூறுகளை கட்டுப்படுத்துவதின் மூலம்,  முழுமையை அடைவதற்கான வழிமுறை. பருவுடல், விருப்புறுதி மற்றும் அறியும் மனம் – இவை கட்டுக்குள் கொண்டுவரவேண்டியவை. நமது உடலின் அலைபாய்தல்களை இல்லாமலாக்குவதும், அதன் மாசுக்களில் இருந்து தூய்மைபடுத்தவும், பதஞ்சலியோகம் சில வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. இந்த பயிற்சிகளின் ஊடாக உற்சாகமும், நீடித்த இளமையும், நீள் வாழ்வும் பெற்று அவற்றை ஆன்மீக விடுதலை எனும் நோக்கத்திற்காக பயன்படுத்தலாம். பதஞ்சலியின் முக்கிய குறிக்கோள் இந்த கோட்பாடுகளை வகுப்பதல்ல. ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்களின் வாயிலாக வீடுபேறு பெறுவது எப்படி என்பதே அதன் நடைமுறை நோக்கம்.

அந்த செயல்கள் எட்டு படிநிலைகளால் ஆன அஷ்டாங்கம் எனப்படும்:

  1. யமம் (புற ஒழுக்கம்): அறம் சார்ந்து வாழ்தல், தீமை செய்யாமை மூலம் சுய ஒழுங்கை அடைதல்
  2. நியமம் (அக ஒழுக்கம்):  வாழ்க்கையில் நல்ல மதிப்பீடுகளை, நல்லியல்புகளை  வளர்த்தெடுத்தல்.

நம்முள்ளே உள்ள கட்டுப்படுத்தமுடியாத சபலங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும், மனச்சிதறல்களிலிருந்தும் நம்மை காக்கக்கூடியவை யம-நியமம்.  

  1. ஆசனம் (உடற்பயிற்சி)
  2. பிராணாயம் (மூச்சுப்பயிற்சி)

யோகத்திற்கு உடலின் உறுதியான அதே நேரம் இலகுவான நிலைத்தன்மை அவசியம். ஆசனம் அதை வழங்குகிறது. ஆசனம்-பிராணாயம் இரண்டும் சேர்ந்து உடல் மற்றும் மனதின் நிலைத்தன்மையை மேம்படுத்துகின்றன.

  1. பிரத்யாஹாரம் (புலன்களை உள்ளிழுத்தல், ஒடுங்குதல்): புலன்களை புறஉலகில் இருந்து உள்ளிழுத்தல். அதன் மூலம் மன ஒருமுகப்படுத்துதலை சாத்தியமாக்குதல்.
  2. தாரணம் (நிலை கொள்ளுதல்): மனதை ஒரே விஷயத்தின் மீது நிலைக்க செய்தல்.
  3. தியானம் (ஆழ்தல்): எந்த இடையூறும் இல்லாதபடி மனம் குவிந்திருத்தல். சித்தம் என்பது நீரோடை போன்ற தடையில்லா ஒழுக்கு.  மனம் சலனமற்றதாக இருந்தாலும், அது சுயத்தை அறிந்தபடியே இருக்கிறது. நம் மனதில் அனைத்தையும் நோக்கும் ஒன்றுண்டு. அதேபோல தான் நோக்கப்படுகிறோம் என்ற  உணர்வும் அதற்கு உண்டு.
  4. சமாதி (அமைதல்): யோக பயிற்சியின் இறுதி நிலை. மனதின் தன்னிலை  மறைகிறது. பிரகிருதி மீதான பற்றிற்கு தனது அவித்யா எனும் அறியாமையே காரணம் என உசாவுபவன் அறிகிறான். மாயை அகன்று, உன்னதமான ‘நிர்பீஜ சமாதி’ நிலை அடைதல். பிரகிருதி இல்லாத, தூய தன்னிலை மட்டுமே ஆன நிலை. அறிபவனும் அறிபடுபொருளும் ஒன்றென ஆதல்.

யோகத்தின் தத்துவ பகுதி

யோக தத்துவம் என்பது சிறு மாற்றங்களுடன் கூடிய சாங்கிய தத்துவம் மட்டுமே. சாங்கியத்தின் 24 தத்துவங்களையும் யோகம் வாதமின்றி ஏற்கிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்டது அல்ல, நித்தியமானது, எப்போதும் மாறிக்கொண்டிருப்பது.  நம் புலனறிவுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிரகிருதி அதனுடன் இணைந்து முக்குணங்களும் இயங்கி வருகின்றன. உயிர்களை செயல்புரிய செய்யும் எண்ணற்ற தனித்தனி ஆத்மாக்கள் இருக்கின்றன. அவை இயல்பிலேயே தூய்மையானது, நித்தியமானது, நிலையானது. ஆனால், அந்த ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்துடன் தொடர்புபடுத்தப்படும்போது, மறைமுகமாக இன்ப துன்பங்களை அனுபவிப்பவையாகவும், இந்த சம்சார(உலகியல்) சுழற்சியில் எண்ணற்ற உடல்களை ஏற்பவைகளாக ஆகின்றன. பிரகிருதியின் வளர்ச்சி சார்ந்து இணையான இரண்டு பரிணாமப் பாதைகளை யோகம் வகுக்கிறது. ஒன்று மஹத் அல்லது புத்தியில் அகங்காரம் பிறக்கிறது, அதிலிருந்து மனமும் 20 தத்துவங்களும் உருவாகிறது. அது வானம், காற்று, தீ, நீர், பூமி எனும் ஐந்து பருப்பொருட்களாக; ஒலி, தொடுகை, பார்வை, சுவை, மணம் எனும் ஐந்து தன்மாத்திரைகளாக; காது, தோல், கண், நாக்கு, மூக்கு எனும் ஐந்து அறிபுலன்களாக, ஐந்து செயற்புலன்களாக ஆகிறது. சாங்கியம் நமக்குள்ளே  அகங்காரம், மனம் மற்றும் புத்தி என மூன்று உறுப்புகளை சொல்கிறது. யோகம் அந்த மூன்றையும் சித்தம் என ஒரே அம்சமாக  வகுக்கிறது.

பொருள்களின் உண்மைத்தன்மையை பற்றிய அறியாமையால்(அவித்யை)  விழைவுகளும் இச்சைகளும் உருவாகின்றன. அவை இந்த வாழ்வின் துயரங்களுக்கும், வலிகளுக்கும் காரணமாக ஆகிவிடுகின்றன. உலகம் முதலற்றது(அநாதி) எனும் நிலையில், அறியாமையின் மூலம்(source) பற்றிய கேள்வி பொருளற்றதாகும்.

கடவுள் மற்றும் அவித்யை எனும் இரு கருதுகோள்களை யோகம் முன்வைக்கிறது. இதில் அவித்யை என்பது சாத்தானுக்கு ஒப்பாக வைக்கப்படுகிறது. அவித்தையின் (அறியாமையின்) உந்துதலால், தீரா சுழலிலிருக்கும் பிரகிருதியின் ஆற்றல், புற அக உலகங்களாக உருமாற்றம் அடைகிறது. அதேசமயம் பிரகிருதியின் செயல்பாடுகளுக்கு அப்பால் நிலைத்திருக்கும் கடவுள், அவித்யையால் உருவாகும் தடைகளை அகற்றுகிறார். இந்த தடைகளை அகற்றும் கடவுள் எனும் கருதுகோள் தான் யோகம் சாங்கியதில் இருந்து வேறுபட்டு நிற்கும் இடம்.

சாங்கியம் தர்க்கம் சார்ந்த தேடல்களில் இருக்க, யோகமோ அக ஒழுக்கம் மற்றும் ஆன்மீக முறைகளை பற்றி விவாதிக்கிறது. சாங்கியம் நிரீஸ்வர(இறையிலி) சாங்கியம். யோகம் சேஸ்வர(இறை கொண்ட) சாங்கியம். மனிதரை உலகியல் பொருட்களில் இருந்து விடுவிப்பதே யோகத்தின் நோக்கம். அந்த உலகியல் பொருட்களின் உச்சமான ‘சித்தம்’ என்பதின் கட்டுக்குள் இருந்து மனிதன் விடுபட தேவையான வழிமுறைகளை யோகம் வகுக்கிறது. சித்தத்தை அதன் இயல்பான செயல்பாடுகளில் இருந்து விலக்குவதன்(சித்த விருத்தி நிரோத – அகச்செயல் நிறுத்தல்) மூலம்,  நாம் உலகத்தின் வழிகளை கடந்து,  சம்சாரத்தில் இருந்து விடுபடுகிறோம்.

பி.ஏ. கிருஷ்ணன்

பி.ஏ. கிருஷ்ணன் (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

சதீஷ் குமார் RM

சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார் இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. ‘சாங்கியம்’ என்றால் எண்ணிக்கை. அது எப்படி ஒரு தத்துவத்தை அப்படி அழைக்கின்றனர் என்பது என்பது வேறு கேள்வி.

    सांख्य sāṅkhya from Macdonell: A practical Sanskrit dictionary (p. 345)
    सांख्य sāṅkhya a. [samkhyâ] relating to grammatical number; m. calculator, deliberator; adherent of the Sâmkhya doctrine; n. the philosophical system, attributed to Kapila, which enumerates the twenty-five Tattvas or principles (an evolutionist doctrine): -purusha, m…

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss