இந்தியத் தத்துவம்‍‍-மீமாம்சம்

தமிழில்- சதீஷ்குமார் ஆர் எம்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

‘மீமாம்சம்’ என ஆசிரியர் இந்த கட்டுரையில் குறிப்பிடுவது முழுவதும், வேதத்தை மட்டுமே முழு முதல் அறிவாக கொண்ட ஜைமினியின் ‘பூர்வ மீமாம்சம்’ எனும் தத்துவ மரபு பற்றி மட்டுமே. பாதராயனரின் ‘உத்தர மீமாம்சம்’ அல்ல.

அறிமுகம்

ஏறத்தாழ 2500 சூத்திரங்களின் தொகுப்பான ‘மீமாம்ச சூத்திரம்’, மீமாம்ச தத்துவத்தின் மூல நூல். அது ஜைமினியால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த நூலின் காலமும் தெளிவாக தெரியாது என்றாலும் நிச்சயமாக பொதுயுகம் தொடக்கத்திற்கு முன்பு என்று எடுத்துக்கொள்ளலாம். ஜைமினி அவரது காலத்திற்கு முன்புள்ள ஆசிரியர்களின் நிறைய மேற்கோள்களையும், வேத சடங்குகளை பற்றிய விவாதங்களையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த வேத சடங்குகள்தான் மீமாம்ச தத்துவத்தின் முதன்மையான அக்கறை. மீமாம்ச சூத்திரத்தின் தொன்மையான விளக்கவுரையாக நமக்கு கிடைக்கும் சபர-பாஷ்யம் பொ.யு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

சபரருக்கு பின் மீமாம்சக தரப்பின் சிறந்த விளக்கவுரையாளர்களாக பிரபாகரர் மற்றும் குமாரில பட்டர் எனும் இருவரை குறிப்பிடலாம்(காலம் பொ.யு. ஏழில் இருந்து எட்டாம் நூற்றாண்டு). இருவரும் சபரரின் உரைக்கு விளக்க உரைகள் அளித்தவர்கள். குமாரிலபட்டர், பிரபாகரர் இருவரும் மீமாம்சகத்தை கருத்தியல்ரீதியாக இரண்டு வெவ்வேறு வகையில் விளக்கினார்கள். அவர்களுக்கு இடையேயான வேறுபாடு மீமாம்சக தத்துவத்தின் மிக அடிப்படையான அம்சம். எனவே மீமாம்சம் பட்ட- மரபு, பிரபாகர மரபு என இரு தனிப்பள்ளிகளாக ஆயின.

வரையறை

மீமாம்சம் கிட்டத்தட்ட நியாய-வைசேஷிக தத்துவத்தின் சில கருதுகோள்களுடன் ஒத்துப்போகிறது. மீமாம்சம் ஆத்மாக்களின் பன்மைதன்மையை ஏற்கிறது. இவ்வுலகையும், அதில் உள்ள அனைத்தையும் உண்மை என்று ஏற்கிறது. ஆனாலும், இரு முக்கியமான புள்ளிகளில் நியாய வைசேஷிக தத்துவத்தில் இருந்து மீமாம்சம் வேறுபடுகிறது. ஒன்று, அது வைசேஷிகத்தின் அணுக்கொள்கையை மறுக்கிறது. நாம் தினமும் நம் அறையில் தூசி சுழலும் சூரியக்கதிர்களை பார்க்கிறோம். மீமாம்ச மரபை பொறுத்தைவரை சூரியனின் இருப்பிற்கு அந்த சான்றே போதுமானது. இந்த இயல்பான அறிதலுக்கு அப்பால் இன்னும் ஆழமான தர்க்க விளக்கங்களுக்கு போகத் தேவையில்லை. மீமாம்சம் நியாய-வைஷேசிகத்திலிருந்து மாறுபடும் இன்னொரு இடம் அதன் வேதங்களின் மீதான சார்பு. வேதங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் அறிதல் அதனளவில் சரியும் அல்ல தவறும் அல்ல; கடவுளிடம் இருந்து கிடைக்கும் அறிதல் மட்டுமே சரியானது என்று நியாய தத்துவம் வகுக்கிறது. அதே சமயம் மீமாம்சம் கடவுளை ஏற்பதில்லை. வேதங்களில் அறிதல்களும், உண்மைகளும் உள்ளுறைந்திருப்பதால் வேதங்கள் மட்டுமே உண்மை. வேதங்கள் மனிதனாலோ அல்லது தெய்வீகத்தன்மை கொண்டவர்களாலோ உருவாக்கப்பட்டவை அல்ல, அவை சுயம்பு. மீமாம்சகர்கள் இந்த நிலைப்பாடை எடுத்ததற்கான காரணங்களை இனி பார்க்கலாம்.

ஜைமினி

வேத மரபில் விளைந்த மீமாம்ச தத்துவத்தின் மையச்சரடு அதன் சடங்குகளை பின்பற்றும்தன்மை என்று சொல்லலாம். மன்னர்களின் அஸ்வமேத யாகம் முதல் எளிய மக்களின் சந்தியாவந்தனம் வரை, இறைவனை மகிழ்விக்க சடங்குகள் ஒன்றே வழி. எனவே சடங்குகளின் நம்பகத்தன்மை, சடங்குகளை வரையறுக்கும் வேதத்தின் அதிகாரம் என்கிற இந்த இரண்டு விஷயங்களும் வைதிக மரபினருக்கும் அவர்களின் விமர்சகர்களான அவைதீக மரபினருக்கும் இடையேயான முக்கியமான விவாதப்பொருளாக அமைந்தது. பௌத்தர்களுக்கு சடங்குகள் அவ்வளவு தனித்துவமோ, சிறப்போ வாய்ந்தது அல்ல. அவர்களை பொறுத்தவரை சடங்குகள் என்பவை தேவையற்ற விழைவுகளை அடைய மேற்கொள்ளும் வெறும் சில செய்கைகளின் தொகுதி மட்டுமே. வைதீக தரப்பினர் வேதங்களை ”ஸ்ருதி” என்று அழைக்கிறார்கள். ஸ்ருதி என்றால் “கேட்கப்பட்ட” என்று பொருள். மனித குலத்திற்கு வகுக்கப்பட்ட கடமைகள் என்னென்ன என்பது வேதங்களில்தான் உள்ளது என்பது வைதீகத்தின் நிலைப்பாடு.

விமர்சனங்கள் மற்றும் அதற்கான பதில்கள்

இந்தியாவில் உருவான வெவ்வேறு தத்துவதரப்பினர் குறிப்புகளில் வைதீக மரபின் மேல் பௌத்தர்கள் மற்றும் சில வேதமறுப்பாளர்கள் முன்வைக்கும் எதிர்வாதங்கள் மீளமீள சுட்டப்படுகின்றன. வேதங்களில் மூன்று போதாமைகள் சுட்டிக்காட்டப்படுகிறது

1. பொய்மை

2. அதில் உள்ள முரண்பாடுகள்

3. மீளுரைத்தல்

இந்த மூன்று போதாமைகளால் வேதங்களை குறைபட்டது. அவற்றை ஆமோதிக்க இயலாது என்பது சடங்குகளுக்கு எதிரான அவைதீக தரப்பினரின் விமரிசனம். அது நியாய சூத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக வேதங்களின் பொய்மை பற்றி அதன் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். வேத சடங்கின் பலனாக, அதாவது வேள்விப்பயனாக உறுதியளிக்கப்படும் ஒன்று எல்லா நேரங்களிலும் உண்மை ஆவதில்லை.. ஒரு செல்வந்தர் மேலும் செல்வம் வேண்டி செய்யப்படும் சடங்குகளால் செல்வம் சேர்ப்பதற்கு பதிலாக செல்வத்தை இழக்க நேரிடலாம். குழந்தை பாக்கியம் வேண்டி அதற்கான சடங்கை செய்தாலும் குழந்தை பிறக்காமல் போகலாம். சொர்க்கத்தை அடைய வேதங்கள் சொல்லும் சடங்குகள் என்னென்ன? என்ற கேள்விக்கு உபநிடதத்தில் ஒரு கட்டளை உள்ளது, ‘சொர்க்கம் வேண்டுபவர் அக்னிஹோத்ர வேள்வி செய்ய வேண்டும்’ என்கிறது என்று வைதீக தரப்பு பதில் சொல்கிறது. ஆனால் வாத்சாயனர், அக்னிஹோத்ர வேள்வியால் சொர்க்கத்தை அடைய முடியும் என்ற எந்த உறுதியும் இல்லை என்கிறார். வேதச்சடங்குகள் வழியாக உலகியல் லாபங்களையே(செல்வம், குழந்தை) கண்டிப்பாக அடையமுடியாது எனும்போது, அதை நம்பி ஆன்மிகமான மீட்பான சொர்க்கத்தை எப்படி அடைய முடியும்? என்று வேதத்தின் அதிகாரத்தை சந்தேகிக்கும் அவைதீக மரபினர் கேள்வி எழுப்பினார்கள்.

வேதங்கள் மீதான மற்ற இரு மறுப்புகளான ‘முரண்பாடு’ மற்றும் ‘மீள் உரைத்தல்’ அவ்வளவு கடுமையானவை அல்ல. ‘சூரிய உதயத்திற்கு பின் அவியளிக்க வேண்டும்’ மற்றும் ‘சூரிய உதயத்திற்குப் பின் அளிக்கப்படும் அவி, நாய்களை சேரும்’ என இரண்டு முரண்பட்ட கருத்துகளை வேதம் சொல்கிறது. இன்னும் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. இவற்றை வேத மறுப்பாளர்கள் ஒருவகையான உளறலுடன்(பிரமத்தவாக்கியம்) ஒப்பிடுகிறார்கள்.

சில சமயங்களில் வேதச்சடங்குகள் தோல்வியுறும். ஆனால் அந்த தோல்விக்கு சடங்கு செய்பவரின் தவறான செயலாக்கம் மட்டுமே காரணம். சடங்குகளை நிர்வகிக்கும் விதிகளில் எந்த பிழையும் இல்லை. வேதங்களில் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் விவரிக்கப்படுகிறது. அது அவற்றை நினைவில் நிறுத்துவதற்கு பயன்படும். இந்த இரண்டு கருத்துகளும் வேத சடங்குகளை வாதத்தில் காப்பாற்றினாலும், வேதங்களை முழுமையாக நம்புபவரும், வேதங்களில் சில விவாதத்திற்கு உரிய வரிகள் இருப்பதை ஏற்க வேண்டும். நியாய சூத்திரத்தில் விவாதித்து மறுக்கப்பட்ட இந்த மூன்று குறைகளுக்கு அப்பால் வேதங்களில் இன்னொரு போதாமையும் உண்டு. வேதங்களில் சில சடங்குகள் சார்ந்த விவரணைகள் மிகக்குறைவான அளவே இருக்கின்றன.

தொகுப்பு மற்றும் நம்பகத்தன்மை

வேதக்கட்டளைகளை தொகுக்க ஒரு முறைமையும், அதில் உள்ள குறைவான தகவல்களை வைத்து ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள சரியான தர்க்கமுறையும் தேவையாகிறது. வேதங்களை புரிந்து கொண்டு, அவற்றிற்கு விரிவான அர்த்தங்களை அளித்து, ஒழுங்கான, நிலையான சடங்கு முறைகளை நிறுவுவதே மீமாம்சத்தின் குறிக்கோள்.

சடங்குகளை அடிப்படையாகக்கொண்டு பெறப்பட்ட கருத்துக்களை, நமது அன்றாடத்தில், நமது நடைமுறை செயல்களில் பயன்படுத்தி விரிவுபடுத்தும் போது மீமாம்சம் தத்துவ நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. வேதத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்ப தத்துவவாதிகள் ஒரு வழிமுறையை உருவாக்கினார்கள். உதாரணமாக, வேதங்களில் குறிப்பிட்ட விஷயத்திற்காக விவரிக்கப்பட்டுள்ள ஒரு சடங்கிலிருந்து வேறோரு விஷயத்திற்கான சடங்கை தங்கள் தர்க்கம் வழியாக உருவாக்கினார்கள். மேலும் வேதத்தில் உள்ள ஒரு சடங்கிற்கு சமானமான பிற சடங்குகளை கண்டடைந்தார்கள்.

வேதத்தில் ஏதேனும் ஒரு சடங்கு துல்லியமாக விவரிக்கப்படவில்லை என்றால், அதை மூன்று வழிமுறைகளில் சரிசெய்யலாம்.

1. மாற்றுதல் (Atideśa)

2. தகவமைதல் (adaptation)(ūha)

3. தேவையற்றதை இல்லாமலாக்கல் (annulation) (bādhā)

ஒரு சடங்கில் போதுமான விதிமுறைகள் இல்லையென்றால் அதை நிரப்ப, அதே போன்ற மற்றொரு மாதிரி(Pratimāna) சடங்கினை அணுகலாம். நியாயவியலாளர்கள் இந்த மாதிரி சடங்கு சார்ந்த அர்த்தப்படுத்தலை, சாப்பாட்டை பதம் பார்க்கும்(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்) முறையுடன் ஒப்பிட்டு, சரியான தர்க்க முறையாக ஏற்கின்றனர். ‘தர்மம் வேதங்களை சார்ந்துள்ளது எனவே வேதமல்லாத பிறவற்றை நம்பி ஏற்கமுடியாது’ என இதே தர்க்கத்தை மீமாம்சம் தர்மத்தின் மீதும் வைக்கிறது.

குறைவுபட்டதாகவே இருந்தாலும், வேதம் மட்டுமே நமக்கிருக்கும் ஒரே வழிகாட்டி. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது அறிவு புலனனுபவங்கள் மூலம் பெறப்படுகிறது. ஆனால் புலன்களுக்கு நெறி மற்றும் சடங்குகள் பற்றி எதுவும் தெரியாது. இங்கே வேதம் மட்டுமே அறிதலுக்கான மூலம் என்பது மீமாம்சத்தின் அடிப்படை நம்பிக்கை. இந்த பருவுலகு இப்போது நாம் பார்ப்பது போலவே எப்போதும் இருந்து வருகிறது என்பது மீமாம்சத்தின் இன்னொரு அடிப்படை நம்பிக்கை. முக்கியமாக வேதங்கள் இங்கே எப்போதும் இருந்து வருகிறது, அதுவே எப்போதும் சடங்குகளை நெறிபடுத்தி வருகிறது. எனவே, நமக்கு தெளிவில்லாதது என்றாலும், நமக்கு மரபாக வழங்கப்பட்ட சடங்குகள், வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று நம்பிக்கை கொள்ளலாம்.

சடங்குகள் என்பது எவ்வளவு விஷேஷமான செய்கைகள் என்றாலும் அவை வெறும் செய்கைகள் அல்லது செயல்கள் மட்டுமே. அவற்றை மேலும் புரிந்துகொள்ள செயல்களின் பொதுவான இயங்குமுறையை ஆராய வேண்டும். நாம் ஒரு செயலை செய்யும்போது சில விதிமுறைகளை மறைமுகமாக பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் விதிமுறைகள் நம் விழைவுகள் அல்லது எதிர்பார்ப்புகளை பொறுத்து அமைகின்றன. உணவு உண்பதற்கான விழைவு(அல்லது பசி) ஏற்பட்டவுடன், நாம் சமையல் எனும் செயலை செய்கிறோம், அதற்கு உணவு சமைக்கும் விதிமுறைகளை பின்பற்றுகிறோம். ஒரு காரணம் விளைவாக ஆக விழைபவன், விழையும் பொருள், அதை நிறைவேற்ற உதவும் கருவி, செயல்முறை என அனைத்தும் தேவையாகிறது. நாம் மேலே குறிப்பிட்ட உணவு உண்பதற்கான விழைவு என்ற உதாரணத்தை எடுத்துக்கொண்டால், விழைபவன் என்ற இடத்தில் நாமும், விழையும் பொருள் சாதம், கருவி/முறை என்பது சமையல், செயல்முறை என்பது உணவு சமைப்பதற்கான எல்லா செயல்முறையையும் குறிக்கும் (தீ அமைத்தல், தண்ணீர் கொதிக்க வைத்தல், சாதம் வடித்தல் போல). இது மிக நேரடியான விஷயம் போல தோன்றலாம். ஆனால் பகவத்கீதை விழைவற்ற செயலை (நிஷ்காம கர்மம்) பரிந்துரைக்கிறது. தத்துவார்த்தமாக பார்த்தால் இது மிகச்சிக்கலான ஒரு விஷயம். எந்த செயலிலும் இயல்பாகவே அந்த செயலை செய்பவனின் விழைவு உண்டு என்று மீமாம்சக தரப்பு சொல்கிறது. விழைவுகள் அனைத்தையும் துறந்து, ஒரு செயலின் பலன்களில் இருந்து முற்றிலும் விலகி நின்று ஒருவர் செயல்களை செய்ய வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, தான் விழைந்தவற்றை எய்த அதற்கு உரித்தான விதிகளை பின்பற்றி செயல்பட்டால் போதும் என்று மீமாம்சகம் பரிந்துரைக்கிறது. இது பகவத்கீதையின் பரிந்துரைக்கு நேர் முரணானது.

வேதச்சடங்குகள் அந்த சடங்குகளை செய்பவரின் தனிப்பட்ட நோக்கங்களை அவ்வளவுதூரம் சார்ந்திருக்கிறது என்ற மீமாம்சகர்களின் கருத்து உங்களுக்கு வியப்பானதாக தோன்றலாம். வேதச்சடங்குகள் தவிர்க்கவே முடியாமல் செய்தாகவேண்டிய சடங்குகளா என்ன? ஒவ்வொரு மனிதனும் சில மதச்சடங்குகளை கண்டிப்பாக செய்தே ஆகவேண்டுமா? இந்த கேள்விகளுக்கு “இல்லை” என்று மீமாம்சம் பதில் சொல்கிறது. வேத சடங்குகளில் எதுவும் மறுக்கவே முடியாத கடமை என்பதாக இல்லை. மேலும் சடங்கு செய்வதற்கான உள்ளார்ந்த விழைவில்லாதவர்கள் சடங்கை செய்பவர்களுக்கான கட்டளைகள்(சோதனா) எதையும் கடைபிடிக்க தேவையில்லை.

மீமாம்கர்களின் இந்த கருத்திற்கு எதிர்வாதமாக, சில வேதச்சடங்குகள் எந்த குறிப்பிட்ட பலனையும்(Artha) குறிப்பிடவில்லை. அது ஏன்? என்று கேட்கலாம். அதற்கு மீமாம்சகர்கள் இப்படி பதிலளிக்கிறார்கள்: “சொர்க்கம் என்பது உச்சபட்ட மகிழ்ச்சியான நிலை. சொர்க்கத்திற்கான விழைவு மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. குறிப்பிட்ட பலன்கள் எதையும் உறுதியளிக்காத வேதச்சடங்குகளை செய்வதற்கு சொர்க்கத்திற்கான விழைவு தூண்டுதலாக உள்ளது என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.” வேதச்சடங்குகளில் பெண்களும் கலந்துகொள்கிறார்கள். அதற்கான காரணம் தங்கள் கணவனுக்கு உதவும் பொருட்டு மட்டுமல்ல, பெண்களுக்கும் சொந்த விழைவுகளும் உண்டு என்கிறது மீமாம்சம். மீமாம்சத்தின் இந்த வாதங்களையெல்லாம் கவனித்தால், வேத சடங்குகள் மனிதனின் நலனுக்காகவும், அவனின் தனி விருப்பங்களுக்காகவும் உருவாக்கப்பட்டது, அதற்கப்பால் அவற்றிற்கான தனிப்பட்ட மதிப்பு எதுவுமில்லை என்ற மனப்பதிவு நமக்கு உருவாகலாம். ஆனால் மீமாம்சம் நம் புரிதலுக்கு நேரெதிரான ஒன்றை சொல்கிறது. மீமாம்ச தத்துவப்படி, வேள்வி தன்னளவில் உள்ளார்ந்த மதிப்பு கொண்டது. வேள்விச்சடங்கு தன்னை நிகழ்த்திக்கொள்ள மனிதனை தன் கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது, அவன் சடங்குகளை தன் விழைவுகளுக்கான கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதாக அல்ல. வேள்வி செய்பவரும் அவரது விழைவும் இணைந்து வேள்விக்கான நிமித்தமாக அமைகிறது. மனித விழைவுகள் இன்றி வேள்வி சடங்குகள் நிகழாது, ஆனாலும் வேள்வி சடங்குகளுக்கு மனித விழைவுகளை நிறைவேற்றுவது தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. வேள்வி சடங்கின் இருப்பிற்கு அதற்கான சொந்த நோக்கம்(sva-artha) உண்டு. ஒரு நாடகீய தருணத்தில் என்பதுபோல, வேள்வி சடங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும்போது வேள்விசெய்பவர் பாதியிலேயே இறந்துவிட்டால், அவரது எலும்புகளை ஒரு மான் தோலில் பொதிந்து, அதை பாவையாக ஆக்கி வேள்வி நிகழும் இடத்தில் வைத்துவிட்டு சடங்கில் மீதி பகுதிகளை பிறர் நிறைவேற்றலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சடங்குகளின் பயன்மதிப்பு, அவற்றின் மீதான முழு அர்பணிப்பு, வேதங்களின் முதன்மை அதிகாரம், மனித விழைவுகளை அங்கீகரிப்பது போன்றவற்றின் மீதான மீமாம்சத்தின் பார்வை, பௌத்தத்தின் பார்வைக்கு நேர் எதிரானது. எனினும் பௌத்தத்தின் சாரத்தை மீமாம்சம் பிரதிபலிக்கிறது. பௌத்தர்களின் எதிர்ப்பை சமாளிக்க, பௌத்தத்தின் சில கருத்துகளை மீமாம்சம் தன்னில் சேர்த்துக்கொண்டிருக்கலாம் என்று ஆய்வாளர் ஆண்டர்சன் கருதுகிறார். வேள்விகளில் திட்டவட்டமான உலகியல் குறிக்கோள்களான பணம் மற்றும் குடும்பம் போன்றவற்றில் இருந்து விண்ணுலகு(சொர்க்கம்) எனும் பொதுக் குறிக்கோள் நோக்கிய நுண்ணிய நகர்வை நாம் காண்கிறோம். விழைவுகளை முற்றும் துறக்கும் நிலை சாத்தியப்படவில்லை என்றாலும் வேள்விசெய்பவரின் தனி விழைவு குன்றுவதை, அது தணிந்து வேள்வி செய்பவன் வேள்வி சடங்கிற்கு பங்களிப்பவனாக மட்டுமே ஆவதை நம்மால் பார்க்கமுடியும். குறிப்பாக வேள்விகளின் மாயத்தன்மை(Mysticism) இல்லாமல் ஆவதை கவனிக்க வேண்டும். வேள்விச்சடங்குகள் கடவுள்களை மகிழ்விப்பதற்காகவோ, கட்டாயமாக செய்தே தீரவேண்டிய மத கட்டளையாகவோ மீமாம்ச சூத்திரங்கள் வகுக்கவில்லை. வேள்விச்சடங்குகளை செய்வது என்பது நம் அன்றாடச்செயல்களை செய்வது போல இயல்பானது என்கிறது மீமாம்சம். குறிப்பிட்ட நோக்கம் கொண்ட ஒருவர் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, எனக்கு ஒரு குறிப்பிட்ட உணவு எப்படி செய்வது என்று தெரியவேண்டுமென்றால் நான் சமையல்நூலில் பார்க்க வேண்டும் அல்லது என் அம்மாவிடம் கேட்ட வேண்டும். அதேபோல ஒருவரின் இலக்கு தர்மம் சார்ந்தது என்றால், அவர் வேதங்களைத்தான் அணுகவேண்டும். சில ஆய்வாளர்கள் வேதங்களை சில முனிவர்களின் வெளிப்பாடுகள்(book of revelations) எனும் கருத்தை முன்வைக்கின்றனர். இந்த கருத்தை மீமாம்சகர்கள் கடுமையாக மறுக்கிறார்கள். வேதங்கள் யாரின் வெளிப்பாடுகளும் அல்ல, வேதங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் வேதங்களுக்கு விளக்கமளித்த முனிவர்கள் இறை தூதர்கள் அல்ல என்கிறது மீமாம்சகம். வேதங்கள் எப்போதுமிருப்பவை, அந்த முனிவர்களுக்கு முன்னரே இருந்தவை. முதல்முடிவற்ற வேதத்தை முனிவர்கள் விளக்கங்கள் வழியாக தங்கள் வழித்தோன்றல்களுக்கு அதை கையளித்தனர். அவர்கள் செய்தது அந்த சேவையை மட்டுமே. இங்கு வேதங்களின் உள்ளார்ந்த சாராம்சம் முதன்மையாகவும், அதன் மனிதத்தலையீடு அவ்வளவு முக்கியமில்லாததாக ஆவதை கவனிக்கலாம். வேத சடங்குகளில் மனிதர்களின் விழைவும், குறிக்கோளும் எப்படி முக்கியமல்லாதவை ஆனதோ அதே போல. இந்த ஞானத்தையும் சடங்குகளையும் நமக்களித்த முன்னோர்கள் போற்றுதலுக்குரியவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் எனினும், அவர்கள் வேதங்களை இயற்றவோ கண்டுபிடிக்கவோ இல்லை. அதிகபட்சமாக முனிவர்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கான வெறும் பாலம் மட்டுமே. செமிடிக் மதங்கள் போல, அவர்கள் இறைவனுக்கும் மனித குலத்திற்கும் இடையேயான இணைப்பு அல்ல. அத்தகைய ஒரு இணைப்பு இங்கு தேவையே இல்லை. என்றென்றைக்குமான ஞானத்தின் உறைவிடமாக வேதங்கள் இங்கே எப்போதுமே இருக்கின்றன. அதை கடவுளோ மனிதனோ இயற்றவில்லை.

வேதத்தின் பிரமாணங்கள்

வேதம் நிலையானது, அதற்கு ஆசிரியர் இல்லை என்னும்போது அதில் பிழைகள் இருக்கவும் வாய்ப்பில்லை. எனவே அது நம்பகமானது. மீமாம்சகர்களின் ’வேதம்’ தத்துவார்த்தமாக அனுபவவாதம்/புலனறிவுவாதம் (empiricism) மற்றும் இயற்கைவாதம்(naturalism) போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. நம் புலன்கள் வழியாக நம்மை சுற்றியுள்ள பொருட்களை, காட்சிகளை நாம் எப்படி அங்கீகரிக்கிறோமோ அவ்வளவு நேரடியாக நாம் வேதங்கள் என்ற உண்மையை அங்கீகரிக்கமுடியும் என்கிறது மீமாம்சம்.

குழப்பமில்லாத, மயக்கத்தில் அல்லது போதையில் இல்லாத புலன்கள் நம்பகமானவை. அந்த நம்பகமான வழியில் அடையப்படும் ஒரு புலனறிதல் சரியானதாகவே இருக்கும் என குமாரில பட்டர் சொல்வதை சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள். நமது புலனறிதல்களின் நம்பகத்தன்மையை நாம் ஒவ்வொருவருமே ஆராயவேண்டும், நம்பவேண்டும். புலன்வழி அறிதல்கள் தங்களை சரியானவையாகவே காட்டிக்கொள்ளும் என்பதாக குமாரில பட்டரின் கருத்தை சிலர் புரிந்து கொண்டனர். “எந்த புலனறிவு மாறாததோ; வேறு காலத்தில், வேறு இடத்தில் நிகழும் புலன் அறிதல்களுடன் முரண்படாததோ அதுவே பிரமாணம் எனப்படும்” என்கிறார் குமாரில பட்டர்.

நம் புலனறிவை அப்படியே ஏற்கச்சொல்லி குமாரில பட்டர் வலியுறுத்துகிறார். அதை அப்படியே உண்மையென எடுத்துக்கொள்ளமுடியுமா? மீமாம்சகரர்களின் எதிர்தரப்பில் உள்ள சந்தேகவாதிகள்(Scepticism) மிகச்சரியாக நமது புலனறிதல் சில சமயங்களில் குழப்பமூட்டும் என்று சொல்லி குமாரில பட்டரின் கருத்தை ஏற்க மறுக்கின்றனர். மீமாம்சகர்கள் இதை சந்தேகவாதத்தின்(Scepticism) நிலைப்பாடைக்கொண்டே எதிர்கொண்டனர்: நமது ஒவ்வொரு அறிதலையும் நிறுவ இன்னொரு அறிதல் தேவையாகிறது. அந்த இன்னொரு அறிதல் மற்றொன்றை. அதனால் எந்த ஒரு அறிதல்முறையும்(பிரமாணம்) நம்பத்தகுந்தது அல்ல என்பது சந்தேகவாதத்தின்(Scepticism) தரப்பு. மீமாம்சகர்கள் இந்த முடிவை தலைகீழாக ஆக்கி இப்படி வாதிடுகிறார்கள்: “நீங்கள்(சந்தேகவாதிகளான பௌத்தர்கள்) சிலவற்றையும், நாங்கள்(மீமாம்சகர்கள்) வேறு சிலவற்றையும் அறிந்ததாக நம்புகிறோம்.. அப்படி அடிப்படையான நம்பிக்கையை அடைய நாம் இருவரும் (மீமாசகர்களான நாங்களும், எதிர்தரப்பான நீங்களும்) சில அறிதல்களை நிறுவத்தேவையில்லாததாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே எந்த பிராமணமும் நம்பத்தகுந்தது அல்ல என்பது அறிதலில் சாத்தியமற்ற நிலை”

ஆத்மா

ஆத்மா எனும் நிலையான தன்னிலையை பௌத்தம் மறுக்க, மீமாம்சகர்கள் அதை வலியுறுத்துகின்றனர். ‘நான்’ என்கிற ஒன்று எப்போதும் நம்முள் தனித்து இருப்பதையும், நம் அனுபவங்களாக அறிவதை ‘அது’வும் அனுபவிப்பதையும் அறிகிறோம். அனுபவங்களை சந்திக்கும் ஒரு நிலையான ‘நான்’ நம்முள் இருப்பதை நாம் அறிகிறோம் என்று சொல்லும் மீமாம்சகர்கள், தன்னிலையை நுட்பமாக மறுக்கும் பௌத்தர்களின் கருத்துகளை பொருட்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் உணரும் தன்னிலையை யாராலும் மறுக்க முடியாது .

எப்போதைக்கும் நிலையான, மாறாத வேதம்

நிலையான, மாறாத வேதம் எனும் மீமாம்சகர்களின் நிலைப்பாடு வழியாக தர்க்கரீதியாக ’மொழி’யும் முதல்முடிவற்றது, நிரந்தரமானது என்ற கருத்தை மீமாம்சகர்கள் வந்தடைகிறார்கள். இது அவர்களின் புகழ்பெற்ற, ஆழமான விவாதங்களை ஏற்படுத்திய கருத்து. இந்த ஆச்சர்யமூட்டும் நிலைப்பாட்டை நிறுவ மீமாம்சக அறிஞர்கள் நிறைய வாதங்களை முன்வைத்தனர். குழந்தைகள் எப்போதும் பெரியவர்களின் மொழி உபயோகத்தை கேட்டே தாங்களும் மொழியை கற்கின்றனர். நாம் நம்மை, நாம் மொழியை கற்றுக்கொண்ட அனுபவத்தை சான்றாக எடுத்துக்கொண்டால் எப்போதும் மொழி தலைமுறை தலைமுறையாக இவ்வாறே கடத்தப்பட்டு வருகிறது. முதல் தலைமுறை எது? என்ற கேள்விக்கு மீமாம்சகர்கள் தலைமுறைகளின் வரிசையை முடிவிலிவரை நீட்டிக்கொண்டு போவார்கள். ஆனால் மீமாம்சகர்களின் இந்த கருத்தை நாம் யோசித்துப்பார்த்தால், அவர்கள் சொல்வதுபோல அல்லாமல் வேறெப்படியும் இது நிகழமுடியாது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியும். உதாரணமாக, பசு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அது ஒரு பொதுச்சொல்(Universal). அது குறிப்பிட்ட கால-இடத்தில் உள்ள ஒரு தனிப்பசுவை(particular) குறிக்கும் சொல் அல்ல. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு இடத்திலும் நாம் ஒவ்வொரு தனிப் பசுவையும் குறிப்பிட நாம் புதுப்புது சொற்களை பயன்படுத்துவதில்லை. ‘பசு’ என்ற பொதுச்சொல்லையே பயன்படுத்துகிறோம். அதனால் ‘பசு’ என்ற சொல் நிரந்தரமானது/பொதுவானது (universal) என்று மீமாம்சகர்கள் சொல்கிறார்கள். இந்த கருத்தை நாம் இப்படி மறுக்கலாம்: “ஒரு மொழியில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளுக்கோ, விலங்கிற்கோ ஒரு சொல் உருவாகிறது. அதன்பிறகு அதை அந்த மொழிச்சூழலில் புழங்குபவர்கள் அதை நிரந்தரமாக சொல்லாக பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். சொற்கள் என்றென்றைக்குமே நிரந்தரமானவை அல்ல.” அந்த எதிர்வாதத்தை மீமாம்சகர்கள் இப்படி மறுக்கிறார்கள்: “ஒருவர் ஒரு மொழியின் சில சொற்களின் அர்த்தத்தை தன் அனுபவத்தில், பழக்கத்தில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை முழுக்க அப்படி கற்பது சாத்தியமில்லை. அந்த மொழி புழங்குவதை, அது ஒலிக்கப்படுவதை தொடர்ந்து கேட்டால், கவனித்தால் மட்டுமே அந்த மொழியில் எழுதவும், பேசவும், புரிந்துகொள்ளவும் முடியும். குழந்தைகள் ஒவ்வொரு சொற்களின் அர்த்தத்தையும் பெரியவர்கள் பேசுவதை கவனித்தே புரிந்துகொள்கின்றன. மொழியில் நாம் போதுமான தேர்ச்சியை அடைந்தபிறகு மட்டும்தான் புதிய சொற்களின் அர்த்தத்தை நமக்கு அறிமுகமான பழைய சொற்களை வைத்து நேரடியாகவே கற்றுக்கொள்ளமுடியும். மொழி இல்லாத ஒரு சூழலை நாம் கற்பனைசெய்வோம். அப்படி கற்பனைசெய்தால், அந்த சூழலில் நாம் எப்படி மொழியை கற்றுக்கொண்டிருக்கமுடியும்? அந்த சூழலில் மொழியை கற்றுக்கொள்ளும் செயல்முறையை எப்படி விளக்கமுடியும்? அதனால் மொழி என்றென்றைக்குமானது”

மீமாச்கத்தின் விமர்சிகர்கள் இந்த வாதத்தை முன்வைக்கிறார்கள்: ஒரு வேள்விச்சடங்கில் வேள்வி செய்பவர் ‘பசுவை கொண்டு வருக’ என்று சொல்கிறார். இதில் ’பசு’ என்பது வேள்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பசு(particular). அப்படி அல்லாமல் அது மீமாம்சகர்கள் சொல்வதுபோல எப்படி பசுவிற்கான பொதுச்சொல்லாக(universal) இருக்கமுடியும்?

மீமாம்சகர்கள் அதற்கு இப்படி பதிலளிக்கிறார்கள்: இங்கேயும் ’பசு’ பொதுச்சொல்தான், ஒரு சொல் தனியாக எந்த தனிப்பட்ட பொருளையும் குறிப்பதில்லை. அதனுடன் உள்ள இணைப்பு சொற்களே பின்னணியை உருவாக்குகின்றன. இந்த சொற்றொடரில் ”கொண்டு வருக” என்ற இணைப்பு சொல் வழியாகத்தான் அதற்கான பின்னணியும், அது குறிப்பிட்ட ஒரு பசுவையும் சுட்டுவதாக ஆகிறது.எல்லா சொற்றொடர்களும் அவற்றில் உள்ள பொது சொற்களின் அர்த்தத்தையும், பேசப்பட்ட சந்தர்ப்பத்தையும் இணைத்தே பொருள்கொள்ளப்படுகின்றன. ஆகவே ‘பசுவை கொண்டு வருக’ என்பது வேள்வி நிகழும் சமயத்தில் சொல்லும் போது குறிப்பிட்ட பசுவை கொண்டு வந்து வேள்விச்சாலையில் நிறுத்துவது என்ற அர்த்தம் வருகிறது. இந்த பதில் விமர்சகர்களை திருப்திப்படுத்தினாலும், மீமாம்சகர்களில் சிலரை திருப்திப்படுத்தவில்லை. மீமாம்சக மரபு வளருந்தோரும், சொற்களுக்கும் சொற்றொடருக்குமான உறவு பற்றிய விவாதமும் பூசலும் அதிகரித்தது. விளைவாக மீமாம்சகம் குமாரில மீமாம்சம் மற்றும் பிரபாகர மீமாம்சம் என இரு பிரிவுகள் உருவாயிற்று.

குமாரில மீமாம்சம் மற்றும் பிரபாகர மீமாம்சம் வேறுபாடுகள்

சொற்கள் தன்னளவில் தனி அர்த்தம் கொண்டிருந்து, பொது அர்த்தமும் கொண்டிருக்கும் என குமாரில பட்டரின் மீமாம்ச மரபு ஏற்கிறது. ‘பசு’ என்ற தனிச்சொல் ஒரு அர்த்தத்தை அளிக்கிறது. அதே சொல் ஒரு சொற்றொடரில், அந்த சொல்லுடன் உள்ள இணை சொற்களுடன் சேரும்போது பிறிதொரு புதிய அர்த்தத்தை கொள்கிறது. அதனால்தான் குமாரில பட்டரின் தரப்பை ” வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அதனுடன் தொடர்புடையவை பற்றிய கோட்பாடு(அபிஹிதான்வயவாதா)” என்று அழைக்கிறார்கள்.

இதற்கு முரணாக, ஒரு சொல் ஒரு சொற்றொடரில் இருந்தால் மட்டுமே அது பொருள்கொள்கிறது என்கிறார் பிரபாகரர். இது ”தொடர்புடையவை வழியாக வெளிப்படுத்தப்பட்டது எதுவோ அது பற்றிய கோட்பாடு (அன்விதாபிதானவாதா)“ எனப்படுகிறது. முதற்பார்வைக்கு இந்த கருதுகோள் ஏற்புடைய ஒன்றாக இல்லாமலிருக்கலாம். ‘பசு’ என்றவுடன் உங்கள் மனதில் ஒரு பொருள் தோன்றும். எனினும் பிரபாகரரின் பார்வையை நம்மால் எளிதில் ஒதுக்கிவிடவும் முடியாது. பின்னணி(context) இல்லாமல், பல சொற்களுக்கு நிலையான அர்த்தம் இல்லை என்பதும் ஒரு உண்மைதான். ஆண்டர்சன் எழுதிய Classical Philosophy என்ற நூலில் இது பற்றி பேசுகிறார். உதாரணமாக அவர் ‘at’ என்ற ஆங்கில சொல் வெவ்வேறு சொற்றொடர்களில் எப்படி வேறுபட்ட அர்த்தங்கள் கொள்கிறது என்பதை விளக்குகிறார்.

·  The cow is at the sacrifical post

·  We will sacrifice her at sunrise

·  The cow looked at me with her big brown eyes

·  All at once, I decided I could not go through with it

முன்னரே வகுத்துரைத்த வேதவேள்வி நெறிகளை(சோதனா) ஆராய்வதே மீமாம்சத்தின் பிரதானமான நோக்கம். பிரபாகரின் கருதுகோள் மீமாம்சகத்தின் இந்த முக்கிய நோக்கத்துடன் கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு குறிப்பிட்ட வேதச்சடங்கில் குறிப்பிட்ட தருணத்தில் ஒரு மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நெறி உண்டு. அந்த மந்திரத்தை வேறொரு தருணத்திலோ, வேறு ஒரு சடங்கிலோ உச்சரித்தால் அது மந்திரம் என்ற அளவில் பயனற்றதாக ஆகிவிடுகிறது. அதனால் மந்திரத்தின் அர்த்தம் அல்லது பயன் அது உச்சரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தையும், நெறியையும் பொருத்தே அமைகிறது. மற்றொரு விஷயத்திலும் பிரபாகரர் மற்றும் குமாரிலர் வேறுபடுகின்றனர்.

மாயைக்கு உதாரணமாக நம் மரபு சொல்லும் உவமை: கயிற்றரவு:கயிறை பாம்பாக எண்ணி குழம்பும் நிலை. இவ்வகையான குழப்பங்கள் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்க அ-கியாதி(அறிதல் இன்மை) என்ற கொள்கையை பிரபாகர் உருவாக்குகிறார். கயிறை பாம்பாக எண்ணும் மாயை நம்மில் எப்படி நிகழ்கிறது? இரண்டு குறைவுபட்ட அறிதல்கள் இணையும்போதுதான் அது நிகழ்கிறது. கயிற்றின் தனி இயல்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால் அதைப்பற்றிய நம் புலனறிதல் குறைவுபட்டதாக இருக்கிறது. பாம்பைப்பற்றி நம்முடைய முன் அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால்தான் நாம் கயிறை பாம்பாக எண்ணுகிறோம். நம் நினைவு ஒரு கணத்தில் கயிற்றை பாம்பாக உணர ஆரம்பிக்கிறது, அது ஒருவகையான அரைகுறை நினைவுகூரல். ஒரு நொடியில் மிக அவசரத்தில் இது நிகழ்வதால் நாம் நம் முன்அனுபவத்தை, நினைவை முழுமையாக நாம் பயன்படுத்துவதில்லை. பிராபாகரரை பொறுத்தவரை இங்கு பிழையான அறிதல் நிகழ்ந்ததற்கு காரணம் மேலே சொன்ன இரண்டு குறைவுபட்ட அறிதலுக்கு இடையேனான வேறுபாடு என்ன என்பதை நம்மால் அறியமுடியவில்லை என்பதுதான். பிராபகர் ஒன்றை பிறிதொன்றாக அறிவது என்பது அறிதல் இன்மையே என்கிறார். ஆனால் அங்கு உண்மையான கயிறு உள்ளது என்பதையும், நாம் அதை பாம்பாக அறிகிறோம் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் நம்மில் அறிதல் இன்மை(அ-கியாதி) நிகழ்கிறது என்றும் சொல்கிறார்.

குமாரில பட்டரின் மரபு பிரபாகர மரபின் அ-கியாதி கொள்கையை ஏற்கவில்லை. இவர்கள் பெரிதும் நியாய-வைசேஷிகத்துடன் ஒத்துப்போகிறார்கள். இந்த மரபு முன்வைப்பது ”அன்யதா-கியாதி” என்ற கருதுகோளை: ஒன்றை இன்னொன்றாக அறிவது, இது அறிதல்இன்மை அல்ல, பிழையான அறிதல். கயிற்றரவு என்ற உதாரணத்தில் பாம்பு, கயிறு என இரண்டு தனித்தனி பொருட்கள் உள்ளன. ஆனால் மாயை வழியாக நாம் அதை ஒற்றை அனுபவமாக எண்ணிக்கொள்கிறோம். முதலில் கயிறை முழுமையாக கயிறு என உணராமல், அதை பாம்பு என்று புரிந்துகொள்கிறோம். மாயை மூலமாக நாம் அடைந்த உணர்வு, நம் அறிவால் ‘இது கயிறு, பாம்பு அல்ல’ என்று திருத்தப்செய்யப்படுகிறது. இங்கே நாம் அடைந்த பிழையான உணர்விற்கு காரணம் நம் முன் அனுபவத்தை நினைவுகூர்வதில் உள்ள பிழை. கயிறு சார்ந்த முன் அனுபவம், பாம்பு சார்ந்த முன் அனுபவம் என இங்கு முன் அனுபவம் இரண்டு பகுதிகளாக இருக்கிறது. நம் அறிதல் அதில் ஒருபகுதியை மட்டுமே திருத்துகிறது(பாம்பு சார்ந்த நம் முன்அனுபவத்தில் உள்ள பிழை) இன்னொரு பகுதியான கயிறு சார்ந்த நம் முன் அனுபவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. வெளிச்சத்திலும் இருட்டிலும் கயிறு கயிறுதான். நம் மாயையால் நாம் அடையும் புலனுணர்வு பாதி சரியானது, ஏனெனில் அது வேறொரு புறவயமான ஒன்றை சார்ந்து நம் புலன்கள் அடையும் சரியான உணர்வு என்கிறார் குமாரில பட்டர். நாம் கயிறை பாம்பென தவறாக உணர்ந்தாலும், வேறொரு கால-இடத்தில் பாம்பு என்ற ஒன்று உண்மையில் இந்த உலகில் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த விஷயத்தில் பாம்பென நாம் உணர்வதுதான் மாயை, பாம்பு என்ற தனி இருப்பு மாயை அல்ல. எனவே மாயை என்பது ஒரு விஷயத்தை பிறிறொன்றாக உணரும் பிழைப்புரிதல் மட்டுமே.

வேதங்களில் உள்ள சொற்களை அதன் நேரடி அர்த்தத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மீமாம்சகர்கள் மிக உறுதியாக இருப்பவர்கள். வேதம் வேள்விப்பசுவை கம்பத்தில் கட்ட வேண்டும் என்று சொன்னால் அதில் பசு என்றால் பசு, கம்பம் என்றால் நேரடியாக கம்பம் தான். அதை உருவகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அதன் அர்த்த சாத்தியங்களை மேலதிகமாக விரித்துக்கொள்ளவோ கூடாது. வேதம் என்பது மொழியின் ஊடாக மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ள உண்மையான ஒரே முன்னறிவு(அறிவுக்களஞ்சியம்). நம் விழைவுகளை தெளிவாக விவரிக்கவும், அதை அடைய நாம் செய்ய வேண்டியதை விளக்கவும் மொழி தேவை. மீமாம்சம் என்பது புனிதமான வேதத்தை விளக்குவதற்காக உருவானது, ஆனால் அதன் அறிதல்முறை முழுக்கமுழுக்க புலன் அனுபவம் மற்றும் சம்ஸ்கிருத மொழியியல் அடிப்படையில் அமைந்தது. சொல்லப்போனால் சம்ஸ்கிருத மொழி அறிவு கொண்ட எந்த ஒருவரின் சொற்களுக்கும் மீமாம்சகம் இந்த வழிமுறையைத்தான் கடைபிடிக்கும். மீமாம்சகர்களுக்கு அமானுஷ்யமான அறிதல்களில் நம்பிக்கை இல்லை, அப்படியான அறிதல்களை முன்வைக்கும் மற்ற தரப்பினரின் கூற்றுகளை மறுப்பவர்கள். புத்தர் முற்றும் அறிந்தவர்(சர்வஞ்ஞன்) என்பதும், யோகத்தில் நிபுணத்துவம் அடைந்தவர்களுக்கு அசாதாரண உள்ளொளி கிடக்கும் போன்ற கூற்றுகள் மீமாம்சகர்களால் கடுமையாக மறுக்கப்பட்டது. நம் அன்றாட அனுபவ மண்டலத்தில், அப்படியான அமானுஷ்யமான, அதீதமான அறிதல்களுக்கு எந்த அடிப்படையுமே இல்லை. நம் சொந்த புலன் அனுபவங்களையும், மொழி வடிவிலான சான்றுகளையும் மட்டுமே நாம் பின்பற்றவேண்டும்.

கடவுளின் இடம்

மீமாம்சக தரப்பின் குறிப்பிடத்தக்க அம்சம் அந்த அமைப்பில் கடவுளுக்கு இடமே இல்லை என்பதுதான்.

“பூர்வ மீமாம்சகத்தில் உள்ள இந்த அகழியை, அந்த நிரப்ப முடியாத இடைவெளியை, பிற்கால மீமாம்சகர்கள், ரகசியமாக கடவுளை கடத்துவந்து நிரப்பினர்” என்கிறார் ராதாகிருஷ்ணன். பிரளய காலத்தில் வேதங்களை கடவுள் காப்பாற்றினார் என ஆபதேவர் கூறுகிறார். ஆனால் பிரளயம் அல்லது சிருஷ்டி போன்ற கருதுகோள்கள் வெறும் புனைவுகள் என்று குமாரீல பட்டரும், பிரபாகர பட்டரும் விரிவான வாதங்களுடன் மறுக்கின்றனர். ”கடவுள் இருப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை. நம் புலனறிதல் கடவுளை நமக்கு உணர்த்துவதில்லை. நம் எல்லா அறிதல்களும், உணர்வுகளும் புலன் அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே உருவாக முடியும்” என்று அப்பட்டமாக சொல்கிறார் சபரர்.

குயவன் இல்லாமல் பானை இல்லை, அது போல கடவுள் என்பது இங்குள்ள இருப்புகளின் நிமத்தக்காரணம் என்கிறது நியாய தத்துவம். இதை மீமாம்சக அறிஞர்கள் இதை மிக விரிவாக, கடுமையாக மறுக்கிறார்கள்.

இந்த உலகம் நித்தியமானது என்பதால் இங்குள்ள தனிப்பொருட்களுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த உலகில் ஒன்று பிறிதொன்றாக ஆகிக்கொண்டே இருக்கிறது, சிலவை மறைந்துகொண்டே இருக்கின்றன, அது உண்மைதான். நம் அறியும் உலகில் உள்ள தனிப்பொருட்களை, நாம் எப்படி அறிகிறோமோ, மேலதிக ஊகங்கள் செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் ஒரு ஆணும் பெண்ணும் சில மாதங்களுக்கு முன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்றுதான் ஊகிக்க முடியும், குழந்தை கடவுளின் படைப்பு என்பதாக அல்ல.

நியாய தத்துவம் தன் தரப்பை முழுக்க குயவன் பானையை உருவாக்குவது சார்ந்த உதாரணத்தை வைத்தே விளக்கியது. குயவன் பானையை உருவாக்குகிறான் என்றால், பானைக்கு குயவன் தான் நிமித்தகாரணமே அன்றி கடவுள் அல்ல. கடவுள் என்ற காரணத்தை குமாரில பட்டர் முழுமையாக மறுக்கிறார். அப்படி பானைக்கு கடவுள் நிமித்தக்காரணம் எனில், குயவன் தேவையே இல்லையே என்கிறார். நியாய தத்துவத்தில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று, அவர்கள் குயவன் பானை என்ற உதாரணம் பிழையானது. அல்லது அந்த உதாரணத்தில் இருந்து அவர்கள் வந்தடையும் முடிவு(கடவுள் என்ற நிமித்த காரணம்) பிழையானது. கடவுள் என்ற உடலில்லாத ஆத்மா எதையும் படைக்க இயலாது. படைப்பிற்கு உடல் தேவை. தன் உடலை ஒருவர் தானாக உருவாக்கி கொள்ள இயலாது. அதற்கு இன்னொருவர், அந்த இன்னொருவருக்கு இன்னொருவர் என அந்த சங்கிலித்தொடர் முடிவிலிவரை நீண்டுகொண்டே போகும். எனவே ‘சிருஷ்டிக்கும் கடவுள்’ என்பது முற்றிலும் சாத்தியமற்ற நிலை.

——-

பி.ஏ. கிருஷ்ணன்

பி.ஏ. கிருஷ்ணன் (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

சதீஷ் குமார் RM

சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார் இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. தமிழில் மீமாம்சத்தின் ஒரு அறிமுகமாக நன்றாக எழுதப்பட்டுள்ளது. சாங்கியம், யோகம், பற்றியும் இதைப்போல் எழுதப்படவேண்டும்.

  2. இன்னொன்று. இந்த அறிமுகங்கள் மூலமாக மூல சமஸ்கிருத நூல்களை படிப்பதற்கு கிரந்த பிரயோகத்தை மறுபடியும் உயிராக்க வேண்டும். கிரந்தம் தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை படிக்க/எழுத உருவாக்கப்பட்டது. பல இந்திய தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், அதை பிழையில்லாமல் படிக்க/ புரிய கிரந்தம் அவசியமாக்க வேண்டும்

    வ.கொ.விஜயராகவன்

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss