
1882
ஸோஃபி இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, அவளை மருத்துவமனையில் காண வந்திருந்தார் ஒருவர். ப்ரீ-ராஃபெலைட் ப்ரதர்ஹுட் குழுவைச் சேர்ந்த, புகழ்பெற்ற ஓவியரான ஜான் மில்லாய்ஸ்தான் அவர்.
தைல வண்ணங்கள், வண்ணங்களைக் குழைக்கும் தட்டுகள், ஆளி எண்ணெய், ஓவியம் தீட்டவென முன்னரே மெலிதாகப் பழுப்பு நிறமூட்டி இழுத்துக் கட்டப்பட்ட கேன்வாஸ் திரை, கேன்வாஸைப் பொருத்தி வைத்து வரைய சட்டகம், ஒரு ஜாடி நிறைய தூரிகைகள், இன்னொரு ஜாடி நிறைய தூரிகைகளைச் சுத்தம் செய்யும் பொருட்கள், ஓவியம் தீட்டப் பயன்படும் கத்திகள், மாற்றுத் துணிகள் எனக் கொண்டு வந்திருந்தார். அவற்றையெல்லாம் குப்பலாகப் போட்டுவிட்டு, அவளைப் பார்த்து உணர்ச்சியற்ற ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு வெளியேறியவர், மேலும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் திரும்பிவந்தார். அவள் அணிந்துகொள்ள ஆடைகள், அவள் காலடியில் விரிக்கப்பட ஒரு துணி, அவள் அமர்ந்துகொண்டு தோன்ற விரும்பினால், கையை வைத்துக்கொள்ள ஒரு பெட்டியையும் எடுத்துவந்திருந்தார்.
ஸோஃபி நின்றுகொள்ளவே விரும்பினாள்.
அவர் வரைய வரையவே, விமர்சகர்கள் வரத்தொடங்கியிருந்தார்கள். ஸோஃபி அவர்களையெல்லாம் பார்த்து வெகு காலம் ஆகியிருந்தது. முதலில் வந்தவர் ஜானின் தோள்புறமாக நின்று மெதுவாக அங்குமிங்குமாக நகர்ந்து ஜான் வரைவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸோஃபியையும் இடையிடையே பார்த்துக்கொண்டார்.
“மிகவும் மெலிந்து போயிருக்கிறாள்…” என்றார்.
அவரைத் தொடர்ந்து இரண்டாவது விமர்சகர், “அவளைப் புகழ்பெறச் செய்த அந்த தீர்க்கமான தோற்றம் இப்போது நிச்சயமாக இல்லை” என்று விரித்துக்கொண்டு போனார்.
“ஆனால் அதுவே இதனை மனசுக்கு நெருக்கமான சோகச் சித்திரம் ஆக்குகிறது. மனமுடையச் செய்யும் அவள் வாழ்வின் துயரை அவள் அக்காளின் கணவரை விட வேறு யார் நன்றாகத் தீட்ட இயலும்?” – என்றார் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த மூன்றாம் விமர்சகர்.
“அவர்களிடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்தது” என்று முதலாமவர் ஆமோதித்தார்.
“என்னை நேருக்கு நேர் பார், ஸோஃபி, நீ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தாயே… அது போல்” என்று பணித்தார் ஜான்.
அவள் மெலிந்த உடலை ஆடைகளைக் கொண்டும், துவளும் மணிக்கட்டை கம்பீரமான பாவனையைக் கொண்டும் மறைத்துவிடலாம் என நினைத்தார். அவள் முகமோ… அது தனிக் கதை; அவள் மூக்கு சதைப்பற்றின்றி எலும்பும் தோலுமாகியிருந்தது. மூக்கின் சீரற்ற வடிவை அது மேலும் எடுத்துக் காட்டியது. ஏதோ அவள் உதடுகளும், தாடையுமாவது மாற்றமின்றி அப்படியே இருந்தனவே… அவள் குழந்தையாக இருந்தபோது இருந்தது போலவே முழுமையாக, எடுப்பாக, மறுப்பு தெரிவிக்கும் பாவனையில் அழகாகத் தூக்கிவைத்துக்கொண்ட அதே பொலிவுடன்.
வலியெடுக்கும்போது அவ்வப்போது நிறுத்தி, கைகளை நீவிவிட்டுக்கொண்டதைத் தவிர, இரவு முழுக்க நிறுத்தாமல் வரைந்துகொண்டேயிருந்தார் அவர்.
1873
அந்த மனநலக் காப்பகத்தின் பெயர் மேனர் பண்ணை இல்லம். முதல்முறை இங்கு சேர்க்கப்பட்டபோது, தொடக்கத்தில், ஸோஃபிக்கு சகித்துக்கொண்டு வாழக்கூடிய ஒரு இடமாகவே இது தோன்றியது; பியானோ வாசிப்பாள்; நூல்கள் வாசிப்பாள்; சில சமயம் தன்னைக் காண வருபவர்களோடு இருப்பாள். ஸ்காட்லாந்தில், பெர்த்தில் அவளுடைய சொந்த ஊரிலிருந்து ஜேம்ஸ் கேய்ர்ட் அவளைக் காண மூன்று முறை வந்தான். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். மூன்றாம் முறை வந்திருந்தபோதுதான், தன்னை மணந்துகொள்ளுமாறு ஸோஃபியைக் கேட்டான்.
“இன்றைக்கு மிக அழகாக இருக்கிறாய்” என்றான்.
அவள் அப்படியொன்றும் இல்லை. அவள் குழந்தையாக இருந்தபோதிலிருந்து இருந்து வந்த மெல்லியல் தன்மை வேறு; ஆனால், இப்போது அவள் உடல் நைந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடையோ பத்தாண்டுகளுக்கு முந்தைய பாணியில் அமைந்திருந்தது.
அவளடைந்திருந்த புகழ் பற்றி முன்னரே தான் அறிந்திருக்கவில்லை என்றான் ஜேம்ஸ். சில ப்ரீ-ராஃபெலைட்டுகளை அவன் முன்னர் சந்தித்திருக்கிறான். அவன் சந்தித்தவர்களெல்லாருமே வெறும் மண்டைக் கனம் பிடித்த, பெண்பெண்ணென்று அலைகிற, தற்பெருமைப் பிரசங்கிகளாகவே இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. ஜேம்ஸுக்கு அறிவியலில்தான் ஈடுபாடு. அன்ட்டார்ட்டிக்கா செல்லும் ஒரு குழுவுக்கு நிதியுதவி செய்ய விரும்பியிருந்தான். ஸோஃபியின் குடும்பத்தினர் தங்கள் மகள்களைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிகக் கவனம் செலுத்தியதாகத் தோன்றியது ஜேம்ஸுக்கு; ஸோஃபியின் ஹிஸ்டீரியாவைத் தீர்க்க ஒரு இடமாறுதல்தான் தேவை என்பது ஜேம்ஸின் எண்ணம்; புதிய காற்றும், சூரியக் கிரணங்களும் அவளுக்குத் தேவை.
“உன் குடும்பத்தைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். நீ பழைய துடிதுடிப்பை அடைய உனக்குக் கொஞ்சம் தனிமை தேவை. அதனால் நம் திருமணம் முடிந்தபிறகு, உன் குடும்பத்தினரை நீ அடிக்கடி சந்திக்காமலிருப்பது நல்லது என்று நினைக்கிறேன், அதிலும் குறிப்பாக அந்த ஜானை…”
இதையும் ஜேம்ஸ் அடிக்குறிப்பிட்டுவிட்ட பிறகு, ஸோஃபி அப்போதே திருமணத்துக்குச் சம்மதமும் தெரிவித்துவிட்டாள்.
மணநாளன்று, திருமணத்துக்கு முன்பு, ஸோஃபியின் அக்கா எஃபி கண்ணாடி முன்பு அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு, அவள் கேசத்தைத் திருத்தி, கொண்டை ஊசியைச் செருகிவிட்டுக்கொண்டிருந்தாள்.
“லண்டனில் என்னோடு வந்து தங்கியிருந்தாயே… ஞாபகம் இருக்கிறதா? ரஸ்கினை விட்டுக் கொஞ்ச நேரமேனும் தப்பிக்க, உனக்குத் தலைசீவி விட வேண்டும் என்று சொல்லிவிட்டு வருவேன். அப்போதெல்லாம் உன் கூந்தலைப் பார்த்து மிகுந்த பொறாமை கொள்வேன். ஆனால் இப்போது அடர்த்தி குறைந்து முடி எவ்வளவு மெலிந்து கிடக்கிறது பார்…”
பேசிக்கொண்டே, ஸோஃபியின் தலையிலிருந்து ஜீவனற்றுச் சுருண்டிருந்த இழைகளை எடுத்துத் தோளில் தவழவிட்டாள்.
முதல் விமர்சகர் அப்போது அங்கே வந்திருந்தார். ஸோஃபியின் கேசத்தைப் பார்த்துத்தான் அவரும் தமக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்: “அவள் கூந்தல்… விரித்து விடப்பட்டிருக்கும் அவள் கூந்தல்… அதுதான் அவள் எழிலுக்கு மகுடம்போல் இருந்தது. மில்லாய்ஸ் இவள் சகோதரிகளின் ஓவியங்களை வரைந்த போதுகூட, ஸோஃபியைப் போலன்றி அவர்கள் எல்லாரும் தங்கள் கேசத்தினை முடிந்து வலையிட்டிருப்பார்கள்…”
எஃபி தங்கையின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். அவள் முடி நரைக்கத் தொடங்கியிருந்தது. கன்னங்களில் சுருக்கம் விழத் தொடங்கியிருந்தது. ஸோஃபி அவளை விடப் பத்து வயது இளையவளாயிருந்தாலும், அவளிடம் முதுமையின் அடையாளங்கள் எப்போதோ தோன்றத் தொடங்கிவிட்டிருந்தன. அவளுடைய கேசம் வறண்டு வலுவிழந்துபோய், தொடும்போதெல்லாம் கூடுகூடாகக் கொட்டத் தொடங்கியிருந்தது.
“நீ பேசாமல் என்னோடும் ஜானோடும் வந்து இருந்துவிடு. எப்போதோ நடந்தவற்றுக்கு நாங்கள் உன்னை மன்னித்துவிட்டோம் என்பதை இப்போதாவது நீ தெரிந்துகொள்ள வேண்டும். யாரும் அது பற்றி இப்போது பேசுவது கூட இல்லை. நீ பழையபடி எல்லோரோடும் வந்து வாழ்வதற்கு அஞ்சத் தேவையில்லை” என்றாள் எஃபி அவளிடம்.
திருமணம் மிக அமைதியான முறையில் நிகழ்ந்தது; அங்கங்கே தாழ்ந்த குரல்களில் தமக்குள் சிலர் பேசிக் கொண்டது தவிர. எதிர்பாராமல் எழும் சிறு சப்தம்கூட ஸோஃபியின் பெற்றோருக்கிடையில் இருந்த நொய்ந்த அமைதியை நொறுக்கிவிடும் என்று அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது தெரிந்தது. அவள் பெற்றோருக்கு இத்திருமணத்தில் சம்மதமேயில்லை; அதையெண்ணிக் கரைந்து அழுதுகொண்டிருந்தனர். தொடர்ந்து புன்னகை செய்துகொண்டிருந்ததால், மணமகளுக்கு முகம் நோகத் தொடங்கியிருந்தது. திருமண வைபவம் முடிந்ததும், கணவன் ஜேம்ஸ் கேய்ர்டுடன் ரயிலேறிவிட்டாள் ஸோஃபி. படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டி அது. அன்று இரவு, தங்கள் பெட்டியினுள் இருந்தபோதுதான், தான் செய்துவிட்ட தவறு அவளுக்கு உறைத்தது.
ஜேம்ஸ் கேய்ர்ட் அவளுடன் இணைந்தபோது, “பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓவியக் கண்காட்சியில் ‘போர்ட்ரெய்ட் ஆஃப் அ யங் லேடி’யைப் பார்த்தேன். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நான் உன் மேல் வேட்கை கொண்டிருந்தேன்” என்று அவள் காதுக்குள் மெதுவாகக் கூறினான்.
ரயில் பெட்டியின் ஜன்னலில் கூடியிருந்த மூன்று விமர்சகர்களும், இதைப் பார்த்து இளித்துக்கொண்டிருந்தனர்.
“அறிவியல் சார்ந்த மனிதனும் கலையில் ஈடுபாடு கொண்டவனும் எப்போதுமே ஏறத்தாழ ஒன்றுதான். இரண்டையும் பிரித்துவிட முடியாது” என்றார் இரண்டாம் விமர்சகர்.
ஸோஃபி, அதுபற்றி வேறேதும் செய்யக்கூடிய நிலையைத் தாண்டியிருந்தாள்; அவனைத் தாங்கிக்கொள்வதைத் தவிர இப்போது அவளுக்கு வேறு வழியில்லை. வெகு காலமாக யூகத்துக்கும் அனுமானத்துக்கும் பொருளாகிக் கொண்டிருந்த தன் கன்னித்தன்மையை இழந்தாள் ஸோஃபி. படுக்கை விரிப்பில் அப்போது லேசாகக் குருதிக்கறை படிந்தது.
1869
முதல்முறையாக மனநலக் காப்பகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்தினம், தங்கள் போவர்ஸ்வெல் வீட்டில் பல மணிநேரமாக பியானோ வாசித்துக்கொண்டிருந்தாள் ஸோஃபி. தலைமுறைகளாக அவர்கள் குடும்பத்தில் இருந்து வரும் பியானோ அது. அவளுடைய வாசிப்பைக் கேட்டு அவள் தாய் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.
“எத்தனை இனிமை… எவ்வளவு அழகாக வாசிக்கிறாள்… அவள் அந்த பியானோக் கட்டைகளிடம் பேசுவது போல் ஏன் நம்மிடம் பேசுவதில்லை?” என்றாள் ஸோஃபியின் தந்தையிடம்.
ஸோஃபி அப்போது இருபத்தாறு வயது மங்கை. ஆனால் இளஞ்சிறுமியைப் போல் மெலிந்தேயிருந்தாள். புகழ்பெற்ற அந்த முதல் போர்ட்ரெய்ட்டுக்கு மாடலாக அமர்ந்தபோது இருந்த அதே போன்ற துருத்திக்கொண்டு தெரிந்த கழுத்தெலும்புகள், தொட்டாலே நொறுங்கிவிடுமோ என்றிருந்த மணிக்கட்டுகள்தாம் இப்போதும்.
மறுநாள் காலை, அவளை மேனர் பண்ணை இல்லத்துக்கு அழைத்துப்போக ஜான் மில்லாய்ஸ் வந்திருந்தார். இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை, குறைந்தபட்சம் அதையேனும் தாம் செய்யவேண்டும் என்று அவள் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஒரு மெல்லிய பீங்கான் பொருளைப் பற்றுவது போல் அவள் கையைப் பற்றினார்.
“டாக்டர் ட்யூக் மிகவும் நல்லவர். உன்னைப் போல் மனவெழுச்சி கொண்டு உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனிதர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்” என்றார் ஸோஃபியிடம்.
ச்சிஸிக் வரையிலும் ரயிலில் செல்லவிருந்தனர். வேறேதோ நிகழ்வுக்குச் செல்லும் வழியில் எஃபி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தாள். ஆனால் சொற்ப நேரந்தான் இருந்தாள்; தங்கையையும் கணவனையும் கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிவிட்டாள். புறப்படும் முன், ‘விரைவில் பூரண குணமடைந்து திரும்பப் போகிறாய், பார்’ என ஸோஃபியிடம் உறுதியாகக் கூறினாள்.
மேனர் இல்லத் தோட்டத்தில், செங்கற்றள நடைபாதையின் இரு ஓரங்களிலும், பூத்து அடர்ந்திருக்கும் ரோஜாப் புதர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று அழகூட்டிக் கொண்டிருக்கும். ஆனால், ஸோஃபி வந்து சேர்ந்த சமயத்தில், அவை மொத்தமாகக் கத்தரித்து விடப்பட்டிருந்தன. சாம்பல் நிறத்தில் அடர்ந்த குச்சிகளாக மொட்டுக்கள் ஏதுமின்றி மொட்டையாக, வேனிற்காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நின்றிருந்தன அவை.
சேர்க்கைக்கான சம்பிரதாயங்கள் முடிந்ததும், தாம் நோயாளிகளைச் சந்திக்கும் அறைக்கு ஸோஃபியை அழைத்துச் சென்றார் டாக்டர் ட்யூக். நோயாளிகளுக்கான இருக்கை ஜன்னலருகே அமைந்திருந்தது. அவள் அங்கிருந்து கீழே தோட்டத்தைக் காண முடிந்தது. விமர்சகர்கள் அவளைத் தொடர்ந்து வந்திருந்தனர்; ஆனால் சற்றுத் தள்ளியே இருந்தனர். இப்போதெல்லாம் அவள் விஷயங்களில் முன்னிருந்த அளவு சுவாரஸ்யம் தோன்றுவதில்லை அவர்களுக்கு.
“மனைவியுள்ள ஆண்மக்களை மயக்கவேண்டும் என்ற மனவோட்டத்துக்கும் உன் ஹிஸ்டீரியாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும் என்று எண்ணுகிறாயா?” என்று கேட்டார் டாக்டர் அவளைப் பார்த்து.
தம் சட்டை காலரை லேசாக இழுத்துவிட்டுக்கொண்டே, பின்னும் கேட்டார்: “சாப்பாட்டை வெறுத்து ஒதுக்கும் மனநிலை உன் உடற்கட்டைக் கவர்ச்சியாகவே வைத்துக்கொள்ளும் எண்ணத்தினால் ஏற்பட்டதா?”
கிளைகள் இருக்கின்றனவோ இல்லையோ எனுமளவு இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தெரிய, கிட்டத்தட்ட அதன் வேர் வரை வெட்டிவிடப்பட்ட பிறகும், ஒரு ரோஜாப் புதர், அடுத்த பூக்காலத்தில் மீண்டும் துளிர்த்து மலர்வது ஒரு அதிசயம்தான்!
“உன் அக்காவின் முதல் மண வாழ்க்கை பிரிவில் முடிய நீதான் காரணமா?”
ஜான் மில்லாய்ஸ் அதே செங்கற்றள நடைபாதையில் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார் இப்போது. இடையில், மெதுவாகக் குனிந்து, கத்தரித்துவிடப்பட்டிருந்த ஒரு ரோஜாச் செடியை அவர் தொட்டுப் பார்த்ததை ஸோஃபி பார்த்தாள். அதை அவர் ஆராய்ந்த விதத்தைப் பார்த்தால், மற்ற செடிகளை விட, தான் உயரமாக வளருமா, மற்றவற்றை விட இன்னும் எழிலுடன் பூக்குமா என்பதையெல்லாம் அச்செடி அவரிடம் சொல்லுமோ எனத் தோன்றியது.
டாக்டரும் இப்போது நடைபாதையை எட்டிப் பார்த்தார். பிறகு, தன் மீசைக்கிடையில் மெதுவாகச் செருமினார்.
“நீ மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே என் அறிவுரை. ஒருவேளை உன் அத்தானுடன் உன்னுடைய உறவு பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டால், நீயும் கொஞ்சம் தேறி வரலாம்” என்றார் டாக்டர்.
1859
ஸோஃபிக்கு அப்போது பதினாறு வயது. ஒரு விருந்து நிகழ்வில் இருந்தாள். அவளுடைய குடும்பம் வேண்டாமென நிராகரித்திருந்த அவளுடைய போர்ட்ரெய்ட் ஒன்று, ஜானின் நண்பரான ஜ்யார்ஜ் ப்ரைஸ் போய்ஸுக்கு விற்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தைத் திறந்து காட்சிப்படுத்தும் நிகழ்வுக்குத்தான் அவள் அழைக்கப்பட்டிருந்தாள். எஃபியும் ஜானும் கூட வந்திருந்தனர்; ஸோஃபி அவர்களைக் கடைசியாகச் சந்தித்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
அந்நிகழ்ச்சிக்கு போய்ஸின் காதலி, ஃபேனி கார்ன்ஃபோர்த்தும் வந்திருந்தாள். அவள் ஆடையின் கழுத்துப் பகுதி ஒரு தோள்பட்டையையொட்டி அசௌகரியமாக இழுத்துச் செருகப்பட்டிருந்தது. ஸோஃபியின் போர்ட்ரெய்ட்டும் அதே அளவு வரையப்பட்டிருந்த ஃபேனியின் போர்ட்ரெய்ட்டும் அருகருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
“நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம், இல்லையா?” – அறிமுகமாகும் விதத்தில் கேட்டுக்கொண்டே வந்து, ஸோஃபியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஃபேனியின் போர்ட்ரெய்ட் ‘பொக்கா பஸியெட்டா’ – முத்தமிடப்பட்ட வாய் – என்று பெயரிடப்பட்டிருந்தது. லேசாகப் பிரிந்திருக்கும் உதடுகள், ஆப்பிள் கன்னங்கள், மெலிதாகச் செம்மை படர்ந்த தோல் நிறம் – பொருத்தமாக, தங்கநிறச் சட்டமிடப்பட்ட இவ்வோவியத்துக்கு அருகே, அதை எடுத்துக்காட்டுவது போல், ஸோஃபியின் போர்ட்ரெய்ட் அமைவது போல் செய்திருந்தார் போய்ஸ்.
“நீ ரொம்ப அமைதியாக இருக்கிறாயே… இவள் ரொம்ப அமைதியாக இருக்கிறாள், இல்லையா?” – சின்னப் பெண்ணினது போலிருந்த ஸோஃபியின் இடையில் கையைச் சுற்றி வளைத்துக்கொண்டே கேட்டாள் ஃபேனி.
விருந்திலிருந்த ஸோஃபியை, சுவரிலிருந்த பதின்மூன்று வயது ஸோஃபி குனிந்து நோக்கிக்கொண்டிருந்தாள்.
“இவ்வளவு சின்ன வயதில், இச்சையை வேட்கையைத் தூண்டிவிடக்கூடிய தன் திறனை இந்த போர்ட்ரெய்ட்டின் மூலமே இவள் காட்டியிருக்கிறாள்” என்று மூன்றாவது விமர்சகர் மிகவும் பாராட்டிப் பேசினார்.
“பாய்ஸின் ஆசைநாயகியான இந்த ஃபேனி… இவள் பலரோடும் சேர்ந்து வாழ்பவள் என்பது ஊருக்கே தெரியும்… அப்படிப்பட்ட ஒருத்தியின் படத்தருகே இருப்பதை வைத்துப் பார்த்தால், ஸோஃபியும் அப்படியே பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்தே மில்லாய்ஸ் இதை வரைந்திருக்கவேண்டும் என்றுதான் யாருக்கும் தோன்றும்… அதுவும் இதையெண்ணி மிகத் தீவிர முனைப்புடன் அவர் வரைந்திருக்கவேண்டும்” என்றார் இரண்டாம் விமர்சகர்.
“டோன்ட் யூ லுக் லவ்லி, மை ம்யூஸ்*?” – ஸோஃபியின் கையைப் பற்றி முத்தமிட்டுக்கொண்டே கேட்டார் பாய்ஸ்.
“உன் பெற்றோரே இப்படத்தை வைத்துக்கொண்டிருந்திருக்கலாம்” எனக் கூறி அவளின் இன்னொரு கையைப் பற்றி முத்தமிட்டார் மில்லாய்ஸ்.
“எனக்கென்னவோ இந்தப் படத்தில் நீ மிகவும் அசங்கியமாகக் காட்சியளிக்கிறாய் என்று தோன்றுகிறது” என்றாள் எஃபி. இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும், விமர்சகர்கள் உட்பட, எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
ஸோஃபி எந்த அறைக்குள் நுழைந்தாலும், ஓவியக் கலைஞர்கள் தமக்குள் கிசுகிசுத்துக்கொண்டு அவளைச் சூழ்ந்துகொண்டனர்; ஸோஃபி – ஜான் மில்லாய்ஸின் தனிப்பட்ட ப்ரத்யேகமான ம்யூஸ். அவர்களின் சிரிப்பும் எக்காளமும் கூடத்தில் எதிரொலித்தது.
ஸோஃபி இன்னொரு கூடத்தின் கதவைத் திறந்தபோது, அங்கே பாய்ஸை ஃபேனி வாயோடு வாய் முத்தமிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டாள். விமர்சகர்கள் அங்கும் ஸோஃபியின் பின்னால் வந்துவிட்டனர்; அவள் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்துகொண்டேயிருந்தனர்.
“அவள் காலத்தின் பெரும் காமத்துக்கும் இச்சைக்குமான பொருள் என்றுதான் அவளை யாரும் காணமுடியும்” என்றார் முதல் விமர்சகர்.
“போர்ட்ரெய்ட் ஆஃப் அ யங் லேடி’க்கு முன்பேகூட, இச்சைகளைக் கிளர்த்தும் பேரொளியை வீசிக்கொண்டிருந்தவள் அவள்” என்றார் இரண்டாமவர்.
அவள் வேகத்துக்கு ஈடு கொடுக்க, மெதுவாக அவளோடு ஓடி வந்துகொண்டிருந்தனர் அவர்கள். இன்னொரு அறைக்கதவை அவள் வீசித் திறந்தபோது, மூன்றாமவர் அந்தக் கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தார்.
“மில்லாய்ஸும் ஸோஃபியும் ரொம்ப நெருக்கமாக இருப்பதுபோல் தெரிகிறதே… இதை வைத்துப் பார்க்கும்போது, முன்பு ஸோஃபி லண்டனுக்குப் போனதும், அதைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே எஃபியும் ஜான் ரஸ்கினும் பிரிந்ததும் எதனால் இருக்கும் என்று யோசியாமல் இருக்க முடியவில்லை” என்றார் அவர்.
“இச்சையைத் தூண்டுபவள்” – வீதியின் எதிர்ப்புறம் நின்று ஸோஃபியைப் பார்த்துக் கூவினார் முதலாமவர்.
“நாணிப் பசப்புபவள்” – ஸோஃபி ரயில் டிக்கெட் வாங்குகையில் உரக்கக் கேட்டது இரண்டாமவரின் குரல்.
“இழிந்தவளே…” – மூன்றாமவர் சத்தமிட்டார், ஸோஃபியின் பெற்றோரின் பணியாள் அவளை பெர்த் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்திருந்தபோது.
அவளது பிள்ளைப் பருவத்தின் வாசலில் தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டு விமர்சகர்கள் மேலும் பேசிக்கொண்டே போயினர்: மில்லாய்ஸ் மீது எவ்வளவு ஈர்ப்பு இருந்திருந்தால், இப்படியொரு பார்வையை வீசியிருப்பாள், தாடையை இவ்விதம் தூக்கிக் காட்டி, தன் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியிருப்பாள். எஃபி இவர்கள் இருவரும் இனிமேல் சந்தித்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டதாக வதந்திகள்… அது உண்மையாக இருக்குமா? இவ்வளவு சிறந்த இரண்டு காதல்கள் கிட்டி, அவற்றுள் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிலை – ஜானுக்கு இது எவ்வளவு துன்பம் தரக்கூடியதாக இருக்கும்.
காலையில், ஸோஃபியின் அறைக்குள் அவள் பெற்றோர்கள் நுழைந்தபோது அவர்கள் கண்ட காட்சி – கண்ணாடி, முத்துக்கள் அடைக்கப்பட்ட சீப்பு, படுக்கைத் திரைச் சீலைகள், நிலைக்கண்ணாடியையடுத்திருந்த மேஜை, இன்னும் எல்லாமும் உடைந்தும், நொறுங்கியும், கிழிந்தும், நெளிந்தும் காணப்பட்டன. விமர்சகர்கள் சளசளவென்று பேசிக்கொண்டேயிருந்தனர் – ஸோஃபி தலையணையைத் தன் தலையைச் சுற்றி வைத்து செவிகளை அடைத்துக்கொண்டு அலறியபோதும், தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தனர்.
1857
ஒரு வழியாக, ‘போர்ட்ரெய்ட் ஆஃப் அ யங் லேடி’யை வரைந்து முடித்துவிட்டார் ஜான் மில்லாய்ஸ். அதனை உலகின் பார்வைக்கு விடும் முன்பு, ஸோஃபியின் குடும்பத்தினருக்குக் காட்டினார். விமர்சகர்கள் மூச்சடைத்துக்கொண்ட ஒலி ஒரே குரலில் கேட்டது; பிறகு நிசப்தம்.
ஸோஃபியின் தாய் அழத் தொடங்கினாள். ‘ஊ’ என்றும் ‘ஆ’ என்றும் ஒலியெழுப்புவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை ஸோஃபியின் தங்கை ஆலிஸ்க்கு. ஸோஃபியின் தந்தையோ, குதித்து எழுந்து, “இதன் பொருள் என்ன?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
எஃபி ஆழ்ந்த மௌனத்தில் இருந்தாள். அவள் கரம் ஸோஃபியை இறுகப் பற்றியிருந்த இடம், மெதுவாக வெளுக்கத் தொடங்கியிருந்தது.
“ஸோஃபி ஒரு அருமையான ம்யூஸ். படத்தில் அவளுடைய தோற்றம் நமக்குள் ஆழ்ந்த உணர்வினைக் கிளர்த்த வல்லது” என்று ஜான், ஓவியத்தைப் பார்த்தவாறு வியந்து பேசிக்கொண்டே போனார்.
“மிக மிக அழகாக இருக்கிறது” என்றாள் ஆலிஸ்.
உள்ளார்ந்த அமைதியுடன் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தார் ஜான்.

அது வரையப்பட்டபோது, ஸோஃபி நெடுநேரம் அமர்ந்திருக்கவேண்டியிருந்தது. ஓவியம் எழுதி முடிக்கப்பட்ட பிறகு, அதை அவள் பார்க்கக்கூடவில்லை. அமர்ந்த இடத்திலேயே உறங்கியிருந்தாள். படுக்கைக்கு அவளைத் தூக்கித்தான் செல்லவேண்டியிருந்தது.
இப்போது அவள் முன்னால் இருக்கும் இந்த மங்கை யார்? அவளின் உள்ளின் உள்ளே அந்தரங்க ஆழத்தில் உள்ள அவளை, இந்த ஓவியம் அப்படியே உள்ளது உள்ளபடியே வெளியே கொண்டு வந்திருந்தது. இப்படியான தன் முகத்தை, இன்னும் கண்ணாடியில் காணக்கூட அவளுக்கு வேளை வந்திருக்கவில்லை. ஸோஃபி திரும்பி, தன் பெற்றோரின் முகங்களைப் பார்த்தாள்; வேதனையால் அவை சுண்டிப்போயிருந்தன.
விழுந்தடித்துக்கொண்டு மாடிக்கு ஓடிப்போய், நிலைக்கண்ணாடி முன்னிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். எத்தனை மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ… தெரியாது. கீழிருந்து உரத்த குரலில் பேசிக்கொண்ட ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன.
அவள் தந்தைதான் முதலில் மாடியேறி வந்தார். அவர் முகம் சிவந்திருந்தது. மீசை துடித்துக்கொண்டிருந்தது.
“ரஸ்கின் பற்றிய விஷயங்களுக்குப் பின்னால், பலரின் வம்புப் பேச்சுக்களில் இருந்தும் தப்பிப்பதற்குள் உன் அக்கா மிகவும் சிரமப்பட்டுவிட்டாள்.”
ஸோஃபி எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து, கழுத்து வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.
“உன்னையும் ஜானையும் மிகவும் நம்பித்தான், லண்டனில் அவன் உன்னை எந்த நிகழ்வுக்கும் அழைத்துப்போகவும், அவன் வரையும் படங்களுக்கு நீ மாடலாக அமரவும் சம்மதித்தோம்… புரிந்ததா? குடும்ப நன்மையைக் கெடுப்பதுபோல் நீ நடந்துகொள்ள மாட்டாய் என்று நினைக்கிறேன்” என்றார்.
ஒரு விமர்சகர் – முதலாமவராக இருக்கலாம் – அவளுக்கு அருகே நெருங்கிப் படுத்துக்கொண்டு, “மாஸ்டர்பீஸ்” என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தார்.
“உன் நெறியை மறந்துவிடாதே…” என்று கூறிவிட்டு, அவள் தந்தை எழுந்துபோய்விட்டார்.
“பல தலைமுறைகளுக்கு ஒரு முறையே தோன்றும் ஒரு முகம்… தன் வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சியுடன்…” – விமர்சகர் பேசிக்கொண்டே போனார்.
அடுத்து எஃபி வந்தாள். அதற்குள் ஸோஃபி உறங்கிப்போயிருந்தாள். நிசப்தமான இரவில் தோன்றும் இடியைப் போல், கதவை ஓங்கியடித்துத் திறந்துகொண்டு வந்தாள். முத்துக்கள் அடைபட்டிருக்கும் ஸோஃபியின் சீப்பை எடுத்துக்கொண்டாள். அதைக் கொண்டு அவள் கால்களிலும் தோள்களிலுமாக மாறி மாறி விளாசினாள்.
“நடத்தை கெட்டவளே… ஆள்மயக்கி… மறுபடியும் எனக்கு இப்படிச் செய்ய உன்னால் எப்படி முடிந்தது? நீ இனிமேல் ஜானைப் பார்க்கவே கூடாது. இனியொருமுறை ஜானின் போர்ட்ரெய்ட்டுக்கு உன்னை மாடலாக அமர விடவே மாட்டேன்… என் உயிருள்ள வரை விடமாட்டேன்.”
அடிபட்டுச் சிவந்திருந்த ஸோஃபியின் தொடையைத் தட்டிக்கொடுத்தார் இன்னொரு விமர்சகர். “அந்தத் துளைக்கும் பார்வை. எதன் மீதான வேட்கை அவள் முகத்தில் அப்படி எழுதப்பட்டிருந்தது என நான் வியக்கிறேன்” என்றார்.
எஃபி திரும்பிச் செல்கையில் கதவை மீண்டும் ஓங்கியறைந்து சார்த்திவிட்டுப் போனாள். அறைந்த வேகத்தில் தாழ்ப்பாள் கழன்று தெறித்து கதவு மீண்டும் திறந்துகொண்டது.
எஃபி போனபின், கடைசியாக வந்தது ஜான். தொடுவானில் வெளிச்சம் தோன்றும் பொழுதுக்குச் சற்று முன்னால், அவள் படுக்கையில் மெதுவாக ஏறி வந்தார். ஒரு ஆணின் வலுவான ஆகிருதி.
“இதோ பார், கண்ணா. என் செல்ல ம்யூஸே… இந்தக் கலவரங்களைப் பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே…” – தன் பெரிய விரல்களால் அவள் கூந்தல் கற்றைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து, மனம்போனபடி பின்னத்தொடங்கினார்.
“உன் போர்ட்ரெய்ட்டை நான் எல்லோரும் காணக் காட்சிக்கு வைக்கும் நேரம், அது பெறப் போகும் பெயரையும் புகழையும் பார். அப்போது உன் குடும்பம் இன்று அதீதமாக நடந்துகொண்டதையெண்ணி எப்படி வெட்கப்படப் போகிறார்கள் பார். பிறகு, இதைப் பற்றி எப்போதுமே பேச மாட்டார்கள்…” என்றார்.
எந்தத் திறந்த கழுத்தை இன்று அவள் குடும்பம் ஓவியத்தில் கண்டு நிலையழிந்ததோ, அந்தக் கழுத்தில் தம் விரல்களைப் பதித்தார்.
“ஒரு சிறந்த கலைப் படைப்பு என்பது நம் அனைவரையும் அசைத்துப் பார்ப்பது. ஆனால் ஒரே திசையில்தான் அசைக்கும் என்று சொல்ல முடியாது. எஃபியைப் பற்றிக் கவலைப்படாதே… அவள் புரிந்துகொள்வாள்” என்றார்.
“ஓவியத்தின் வழியே ஒரு அழியாத அமர வாழ்வு, ஸ்காட்லாந்திலேயே சிறந்த அழகி, ஒரு அதிசயம், ஒரு வெற்றி, ஒரு தாரகை…” – ஜானும் விமர்சகர்களும் இரவெல்லாம் மென்குரலில் மந்திரம் போல் இதைக் கூறிக்கொண்டிருந்தார்கள். வானம் வெளுக்கத் தொடங்கியபோது, ஜான் மெல்ல நழுவி வெளியேறினார். ஸோஃபி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
1856
ஜான் மில்லாய்ஸ் எஃபியை மணந்துகொண்டபிறகு, ஸோஃபி அவருக்கு மாடலாக இருக்கட்டும் என எஃபிதான் கூறினாள்.
“அவள் எனக்குச் செய்யக் கடமைப்பட்டவள். அதோடு என் விவாகரத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த வம்புப் பேச்சுக்களை என்னால் தாங்கமுடியவில்லை. இன்னொரு முறை எந்த ஓவியத்துக்கும் என்னால் மாடலாக இருக்கவியலாது” என்றாள்.
ஸோஃபியை இரண்டு போர்ட்ரெய்ட்களுக்கு மாடலாக ஜான் பயன்படுத்தினார். ஸ்காட்டிஷ் நாட்டுப்புறங்களைப் படம்பிடித்த, பழைய ஞாபகங்களை மீட்டும் தன்மையிலமைந்த ஓவியங்கள் அவை: ஒன்று, இலையுதிர்கால இலைகள்; இன்னொன்று, ஆப்பிள் பூக்கள். அவை இரண்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
லண்டனில், ஊரே இவர்களின் பின்னேதான் இருந்தது அப்போது – மில்லாய்ஸ் அறிமுகப்படுத்தியிருந்த துடிப்பான அந்தப் புதிய மாடலால். அவள் அபூர்வமான அழகி மட்டுமல்ல – மெலிந்து போய் இருந்தாலும் நல்ல வலிவுடனும் ஆரோக்கியமாகவும் திட சித்தமுடையவளாகவும் காணப்பட்டாள். ஆனால் அது மட்டுமே காரணமல்ல; ஸோஃபி, எஃபி க்ரேயின் தங்கை. எஃபியின் சர்ச்சைக்குரிய விவாகரத்து இன்னும் ஒரு பேசுபொருளாக இருந்ததும் ஸோஃபி மீது எழுந்த ஆர்வத்துக்கு ஒரு காரணம்.
“பருவம் மாறக்கூடிய ஆண்டில் அவள் கச்சிதமாக இந்தப் படத்தில் வரையப்பட்டிருக்கிறாள். ஒரு சிறுமியாகவும், வளர்ந்த பெண்ணாகவும் ஸோஃபி இருக்கக்கூடிய ஒரே இலையுதிர்காலம் இது. அவள் கன்னக் கதுப்புகளைப் பாருங்கள்! ஒரு பெண்ணாக அவள் அடையவிருக்கும் பருவ முதிர்ச்சியை லேசாகக் கோடிட்டுக் காட்டுகிறது அது; ஒரு பூ மடல் விரியும் முன்னால் லேசாகத் தயங்குவது போல்.”
ஓவியக் கண்காட்சிகள், பலருடைய வீடுகள், பல கலைக்கூடங்கள் எனப் பல இடங்களுக்கு ஸோஃபியை அழைத்துச் சென்றனர், எஃபியும் ஜானும்; ஸோஃபி தான் வரையப்படுகையில் அமர்ந்திருப்பாள். பியானோ வாசிப்பாள். ஜான் மட்டும் வேறு எந்த ஓவியரும் ஸோஃபியை வரைய அனுமதித்ததில்லை.
“உங்கள் யாராலும் அவளுடைய சிக்கலான உள்ளடுக்குகளை வரையமுடியாது. அவளுடைய கதையை நான் மட்டுமே கூறமுடியும்” என்பார்.
அவளுக்குப் பதின்மூன்று வயது நிரம்பியபோது, ஒருநாள், அவள் செந்நிறக் கூந்தலை நன்கு எடுத்துக்காட்டக்கூடிய ஒரு பச்சை நிற ஆடையை அணிந்துகொண்டு வந்து அவளை அமரச் சொன்னார்.
“ஒருவரின் போர்ட்ரெய்ட்டை வரையும்போது அது எவ்வளவு தட்டையாகி விடுகிறது… கவனித்திருக்கிறாயா? ஒரே அலுப்பாகிவிடுகிறது. பிறப்போடு தோன்றிய மச்சம், தழும்பு போன்ற அடையாளங்களை மறைத்து விடு என்றால், கண்களை, இதழ்களைப் பெரிதாகக் காட்டு என்ன்னும்போது ஒருவரின் உண்மையான இயல்பை, சாரத்தை அதில் எவ்விதம் நாம் கொண்டுவர முடியும்; ஆத்திரம்தான் ஏற்படுகிறது அவ்விதம் வரையச் சொல்கையில். உன்னுடைய இயற்கையான அழகு போல் வேறு யாரிடமும் கிடையாது, ஸோஃபி.” – ஒரு ஈயை விரட்டுவது போல், கேன்வாஸில் கரித்துண்டால் லேசாகத் தீட்டியவாறு பேசிக்கொண்டிருந்தார்.
பிறகு, அவளை வரையத் தொடங்கினார்; அழுத்தமாகத் தூக்கிவைத்துக்கொண்டிருந்த அவள் தாடையிலிருந்தே போர்ட்ரெய்ட்டைத் தொடங்கியிருந்தார். பெண்மை மிளிரும் அவளுடைய சிவந்த இதழ்கள் கீழ்நோக்கி வளைந்திருந்தன. ஆனால் பிதுக்கியது போலில்லை; எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பாவனையில் வளைந்திருந்தன. அவற்றை எடுத்துக்காட்டும் ஒரு அடித்தளம் போல தாடை அமைந்திருந்தது. அவள் மூக்கு அத்தனை சீராக இல்லை; அவள் நாசித் தண்டிலிருந்த லேசான வளைவையும் கூட படத்தில் வரும்படி அமைத்திருந்தார். நாசித் துவாரங்கள் விரிந்திருந்தன. ப்ளஷ்ஷின் செந்நிறம் சற்று முன்பின்னாகத் தீட்டப்பட்டிருந்தது. அது, கன்னங்களை அவள் இதழ்களைப் போலவே சிவந்ததாக ஆக்கியிருந்தது. சிவப்பு, பழுப்பு மற்றும் ஆழ்ந்த கருப்பு நிறங்களால் வரையப்பட்ட ஒரு மலைத் தொடரைப் போல அல்லது ஒரு நதியைப் போல இருந்தது, ஓவியத்தில் அவள் கேசம்.
இரவு பின்னேரம் வரையிலும் அவள் விழிகளைத் தீட்டிக்கொண்டிருந்தார்; போர்ட்ரெய்ட்டை அவை வெட்டித் துளைக்கும் வரையிலும் விடமாட்டார் போலிருந்தது.
“நீ என்ன நினைத்துக்கொண்டிருந்தாய் என்று எனக்குத் தெரிந்துவிட்டால் அது இதனைச் சிதைத்துவிடும். வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதில்தான் வசீகரமே உள்ளது. ஆனால், நீ என்ன நினைக்கிறாய் என்று மட்டும் நான் தெரிந்துகொள்ள முடிந்தால்…” – கேன்வாஸில் தூரிகையை முன்னும்பின்னும் இழைத்துக்கொண்டிருந்தார்.
“தெரிந்துகொள்ள முடிந்தால்… தெரிந்துகொள்ள முடிந்தால்…”
எஃபி அதிகாலையில் ஜானுக்குக் காலை உணவாக முட்டைகளைக் கொண்டு வந்தபோது, ஸோஃபி அமர்ந்தவாக்கிலேயே உறங்கிக்கொண்டிருந்தாள்; ஜான் இன்னும் வரைந்துகொண்டிருந்தார்.
எஃபி ஓவியத்தைப் பார்த்தாள்; ஸோஃபியைப் பார்த்தாள். பிறகு மீண்டும் ஓவியத்தைப் பார்த்தாள்; ஸோஃபியையும் பார்த்தாள். அவள் கண்கள் சுருங்கின. ஜானுக்குத் தாங்கமுடியாத திருப்தி தம் மீதே; தமது திறன்களையெல்லாம் பிழிந்து எடுத்துவிட்டது போலிருந்தது. மூர்ச்சை தட்டிவிடும் போலிருந்தது அவருக்கு.
அறையோரங்களிலிருந்து சில உருவங்கள் நெருங்கி வருவதாகத் தோன்றியது; விமர்சகர்கள். எஃபி அவ்வோவியத்திலிருந்து எதனை உணர்ந்துகொண்டாளோ… அதையே தாமும் உணர்ந்தவர்கள் போலிருந்தனர் அவர்கள். இது – இந்த ஒரு ஓவியம் – தன்னிகரற்றது என்பதுதான் அது.
1854
ஆனால் முதலில், ஸோஃபியைப் பற்றி விமர்சகர்கள் அவ்வளவு கவனம் கொள்ளவில்லை; எஃபியின் மீதுதான் அவர்கள் கவனமெல்லாம். எஃபியும் ரஸ்கினும் விவாகரத்து செய்துகொண்டபோது, எங்கும் இதே பேச்சாக இருந்தது.
அத்தனை ஆண்டுகளும், தாம்பத்ய உறவற்ற திருமணமாக அது ஏன் இருந்தது என்றெல்லாம் அவர்கள் ஆளாளுக்கு தம் ஊகங்களைப் பரப்பிக்கொண்டிருந்தனர். ‘ஒருவேளை, எஃபியின் மேனியில் துர்மணம் வீசுவதாக இருக்கலாம்; ஒருவேளை, உள்ளழகில் ஒரு குரூபியாக இருக்கலாம் அவள். அது ஈர்ப்பைக் கெடுப்பதாக இருந்திருக்கும்; அல்லது ஒருவேளை பெண்களுக்கு இயல்பாக இருக்கும் அளவைவிட அவளுக்கு அதிக அளவில் மாதவிலக்கு நிகழுமோ… அது ஒரு காரணமாக இருக்கலாம்.’
“உனக்கு எப்படி இது விளங்கும்? உனக்குப் பதினொரு வயதுதானே ஆகிறது. ஒரு மருத்துவரிடம் போக வேண்டுமென்றால், அதை விட நான் செத்துப்போவேன். ஆமாம்… வெறுமே செத்துப் போவேன் அதைவிட…” – ஸோஃபியின் மெலிந்த தோளில் அணைந்தவாறு, எஃபி பேசிக்கொண்டிருந்தாள்.
ஆறு ஆண்டுகள் மணவாழ்வில், எஃபி இன்னும் கன்னித்தன்மையோடே இருந்தாள் என்னும் வதந்திகளின் உண்மைத்தன்மையை மருத்துவர் தீர்மானிக்கவேண்டி இருந்தது. விவாக ரத்து வழக்கு விவாதங்களில் இது பலனளிக்கக்கூடும் என்றனர்.
“அவருக்கு என் முடி பிடிக்கவில்லை என்பதே காரணம்” – தனக்குள் முணுமுணுப்பது போல் எஃபி சொன்னாள். தன் தலையிலிருந்த முடியை அவள் குறிப்பிடவில்லை.
எஃபியும் ரஸ்கினும் பிரிய முடிவெடுத்த பிறகு, அந்த விவகாரம் தீர்க்கப்படும் வரையிலும் பல மாதங்கள் எஃபியும், ஸோஃபியும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
அச்சமயம், ஒரு நாள் காலை, ஸோஃபியை எழுப்பிய எஃபி கேட்டாள்: “எனக்காக நீ எதுவும் செய்வாய்… அல்லவா?”
“செய்வேன் என்று சொல்லு. நீ எனக்குச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன்.”
எழுதி மடிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பை ஸோஃபியிடம் கொடுத்து, ஜான் மில்லாய்ஸின் ஓவியக் கூடத்துக்குப் போகும் வழியையும் சொன்னாள்.
“அவர்கள் உன்னைப் பார்த்துவிடக்கூடாது… தெரிந்ததா?” – என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் என்றது அவளை எங்கேயும் பின்தொடர்ந்துகொண்டிருந்த விமர்சகர்களை.
போகும் வழியில் ஸோஃபி அந்தக் கடிதத்தை லேசாகப் பிரித்துப் பார்த்தாள். ‘…கடைசியில் நாம் ஒன்றாகக் கூடும் வேளை. என் ப்ரியத்துக்குரிய மிஸ்டர் மில்லாய்ஸ், உங்களுக்காகத்தான் இவ்வளவு காலம் என்னை நானாகவே பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் போலும்… எனக்கு விதி அதற்கு உதவியது என எண்ணுவது முட்டாள்தனமாகுமோ? உங்கள் கரங்கள் என்னைச் சுற்றி வளைத்து அணைப்பதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்; ஏங்கிக்கொண்டிருக்கிறேன், அவை என்னை…’ – ஸோஃபி காகிதத்தை மடித்து மூடிவிட்டாள்.
ஜானின் ஸ்டுடியோவில் அவர் பதில் எழுதித் தரக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஸோஃபி. காத்திருக்கும்போது, மெலிதாக மூச்சு விட்டுக்கொண்டு, வாயிலிருந்து ஈரப்பதம் கூட வெளியேறிவிடாமல், எச்சரிக்கையுடன் அமர்ந்திருந்தாள். அசட்டையாக இமைத்துவிட்டாலோ, மூச்சுவிடும்போது கழுத்தெலும்பு லேசாக உயர்ந்துவிட்டாலோகூட, தமது பணியிலிருந்து மில்லாய்ஸின் கவனத்தை அது சிதறடித்துவிடக்கூடும் என்பது போலிருந்தாள். அவளைச் சுற்றிலும், விரித்துக் கட்டப்பட்டிருந்த கேன்வாஸ்களில் தைல ஓவியங்கள் உலர்ந்துகொண்டும் உலரும்போது லேசாகக் கீறல் விட்டுக்கொண்டும் இருந்தன. மத்தியில், மில்லாய்ஸ் தமது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
பல மணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தக் கடிதத்தை வந்து பெற்றுக்கொண்டார்.
“உனக்கு மிகவும் அதீதப் பொறுமை” என்றார். ஸோஃபி எதுவும் பதில் பேசவில்லை; ஆனால் அதனினும் அதிகமாகவே அவள் முகம் கூறிவிட்டது.
1852
ஸோஃபிக்கு ஒன்பது வயது ஆகியிருந்தது. அவள் நல்ல பழக்கவழக்கங்களில் ஒழுகி வந்தாள். கையெழுத்து மிகவும் நேர்த்தியாக இருக்கும். அப்போது லண்டனில் இருந்த எஃபி மிகவும் தனியாக இருப்பது போல் உணர்ந்தாளோ என்னவோ… கொஞ்சம் வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருந்தாள். அவளுக்குத் துணையாக இருக்க ஸோஃபியை அனுப்பி வைக்கலாம் என அவள் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
எஃபி அப்போது ஓவியங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தாள்; மட்டுமன்றி, கணவனோடும், அவன் நண்பர்களோடும் தர்க்கம் செய்யத் தொடங்கியிருந்தாள். ரஸ்கின் கொஞ்சம் சிக்கலான ஆள்தான்; ஆனால் க்ரே குடும்பத்தின் நிதிநிலைமை அவரால்தான் கொஞ்சம் முன்னேறத் தொடங்கியிருந்தது.
“நல்ல பெண்ணாக நடந்துகொள், ஸோஃபி. முடிந்தால் அவர்கள் சேர்ந்திருக்கும்படிச் செய்ய ஏதாவது செய்” என்றாள் அவள் அன்னை.
ஸோஃபியை ரயில் நிலைய நடைமேடையில் பார்த்ததுமே, எஃபி மகிழ்ச்சியில் கீச்சிட்டாள்.
“நம் சமூகத்துக்கேற்ற நாரீமணிகளாக நாம் இருக்கப்போகிறோம், பார். நாள் முழுக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்களை நான் திட்டமிட்டு வைத்துள்ளேன். இவ்வளவு மெனக்கெட்டு நீ இங்கே வந்திருப்பதற்கு உனக்கு முதலில் ஒரு நல்ல தொப்பி வாங்கித் தருகிறேன். எந்த முரட்டுப் பயலும் நம்மைத் தடுக்க முடியாது, ரஸ்கின் உட்பட. தெரிந்ததா?” – எஃபி பேசிக்கொண்டே போனாள்.
அவர்கள் நிறைய விருந்து நிகழ்ச்சிகளுக்குப் போனார்கள். அங்கெல்லாம் எந்த அறையினுள் எஃபி நுழைந்தாலும் அவள்தான் அங்கே நடுநாயகமாக விளங்கினாள். அவளுடைய சாமர்த்தியமான வேடிக்கைப் பேச்சுக்கள், லண்டன் ப்ரீ-ராஃபலைட்டுகளைச் சாய்த்துவிட்டன. அவர்கள் அவளை அப்படி ஆராதித்தனர்; கிட்டத்தட்ட அவள் காலடியிலேயே விழுந்துவிட்டனர்.
கன்னத்தில் முத்தமிடும் அவர்கள் சம்பிரதாயப்படி, எப்படிச் சரியாகக் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என எஃபிதான் ஸோஃபிக்குக் கற்றுத்தந்தாள்; ஒரு ஓவியத்தை அதன் நிறங்களின் குறியீடுகளைக் கொண்டு எப்படி விமர்சிக்க வேண்டும் எனவும் சொல்லித்தந்தாள்; தன்னுடைய எல்லாவிதச் சிரிப்புகளையும்கூடக் கற்றுத் தந்தாள்.
கைக்குப் பின்னாலோ, கை விசிறிக்குப் பின்னாலோ மறைந்துகொண்டு, சிறிதாகக் கெக்கலிக்கவும், தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு வெடித்துச் சிரிக்கவும் சொல்லித் தந்தாள். நக்கல் தொனியில் கனைத்துக்கொண்டு சிரிக்கவும் கூட – ஆனால் வேண்டாதவர்களிடம் மட்டுமே காட்டவேண்டும் என்றும் சொல்லியிருந்தாள். ரஸ்கினின் வீட்டுக்கு வெளியே, எஃபி வேறு பெண். அவளிடம் அப்போது ஒரு தனிப் பிரகாசம். உரக்கப் பேசும், அழகிய அன்பான துறுதுறுப்பான பெண், அப்போது.
ஆனால், வீட்டுக்குள்ளே… இருபது பேர் அமரக்கூடிய அந்த உணவு மேஜையில் தாங்கள் மூன்று பேர் மட்டும் இருக்கும்போது, ரஸ்கினால் தடுத்து நிறுத்தப்படும் வரை எஃபியின் விரல்கள் எத்தனை முறை மேஜையில் தட்டித் தாளமிடுகின்றன என ஸோஃபி எண்ணிக்கொண்டிருந்தாள்.
பிறகு, சகோதரிகள் இருவரும் உறங்குவதற்கு மாடிக்கு வந்ததும், எஃபி ஸோஃபியின் பெரிய படுக்கையிலே வந்து விழுந்தாள்.
“ஸோஃபி… ஸோஃபி… கல்யாணம் முடிந்து ஐந்து ஆண்டுகள்… ஆனால் நான் இன்னமும் கன்னி. இப்படியொரு நிலையை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?” என்று புலம்பினாள்.
திரும்பிப் படுத்துக்கொண்டு, நிலைக்கண்ணாடியில் தெரிந்த ஸோஃபியைப் பார்த்தாள் எஃபி.
“நான் உன் வயதில் இருந்தபோது, என்னால் அவரை விட்டு விலகி இருக்கவே முடியாது. அவருக்குச் சிறுமிகளைத்தான் மிகவும் பிடிக்கும் என்று கனவு பாதி கற்பனை பாதியாக இருப்பேன். நீ ரஸ்கினை விட்டுத் தள்ளியே இருக்கவேண்டும், ஸோஃபி. என்னால் ஒரு போட்டியைச் சமாளிக்கமுடியாது.” – ஃப்ரில் வைத்துத் தைத்திருந்த ஒரு சிறிய தலையணையை ஸோஃபியின் மீது எறிந்தாள்.
“ஆனால், நீயும் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேனோ… அதுவும் எனக்குத் தெரியாது. நீ என்னை விட்டுப் போகவே கூடாது.”
அடுத்து வந்த ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு, ஸோஃபியை விட்டுவிட்டு எஃபி மட்டும் போயிருந்தாள். அப்போது ரஸ்கின் அவள் அறைக்கு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தார்.
“உன் அக்கா சிறியவளாக இருந்தபோது அவளுக்கு நான் இதை எழுதியிருக்கிறேன். இதில் என்ன நடந்ததென்று உனக்குத் தெரியவேண்டுமா?” என்றார்.
ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தன் கால்முட்டியைத் தட்டினார். குட்டி ஸோஃபியை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, அவள் வயிற்றைக் கட்டிக்கொண்டார். இரண்டு சகோதரர்கள் – ஒருவன் துஷ்டன், ஒருவன் அன்பானவன் – பற்றியும், அவர்கள் ஆஸ்திரியாவில் மேற்கொண்ட சாகசங்கள் பற்றியுமான ஒரு விசித்திரமான கதை அது. முடிவில், துஷ்டனான அந்தச் சகோதரன் ஒரு கல்லாக மாறிவிடுகிறான்; அன்பானவனுக்கு அவன் குடும்பத்தின் பூர்விக நிலங்களனைத்தும் கிடைக்கின்றன.
கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ரஸ்கினின் கைகள் அங்குமிங்குமாக உலவின; ஸோஃபியின் தொடை, தோள்பட்டை, அவளுடைய மெலிந்த சிறிய கரம்.
“அழகிய சிறுமிகள் எப்போதும் அப்படியே இருப்பதில்லை. நான் உன்னை மணந்துகொள்வேன், ஸோஃபி. ஆனால், என்னிடம் வந்தபிறகு உனக்கு வயதாகத்தான் செய்யும்.”
அந்த அறையில் விமர்சகர்கள் யாரும் இல்லை. எதையும் கவனிக்க அங்கு யாரும் இல்லை, ஸோஃபியையும் ரஸ்கினையும் தவிர. இது இப்படி நடந்தது என்றோ வேறு மாதிரி நடந்ததென்றோ மாற்றிச் சொல்லக்கூட யாரும் அங்கு அப்போது பார்த்துக்கொண்டிருக்கவில்லை.
“எனக்கு உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டாம்” என்றாள் குட்டி ஸோஃபி.
“ஷ்ஷ்… நீ எனக்குத் தரமுடியும் அன்பைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்… காலத்தில் நகராமல் உன்னை இப்படியே இதே பருவத்தில் உறையவைத்துவிட என்னால் முடிந்தால்…” – அவர் கரம் அங்குமிங்குமாக, எல்லாப் புறமும் அலைந்தது.
எஃபியும், ஸோஃபியும் லண்டனை விட்டுக் கிளம்பியபோது, ரயில்நிலையத்தில் ஸோஃபியின் சிறிய தோளில் முகம் புதைத்து எஃபி அழுதாள். ஸோஃபி மெதுவாகக் கை நீட்டி எஃபியின் கேசத்தைத் தொட்டாள், தான் இழந்தவற்றை அது ஏதோ ஒருவகையில் ஈடுசெய்துவிடும் என்பது போல்.
1882
மீண்டும், மனநலக் காப்பகம். ஜான், கேன்வாஸிலிருந்து சில அடிகள் விலகி வந்தார். வண்ணக் கலவைகள், அவற்றைக் குழைக்கும் கிண்ணங்கள், தைலங்கள் – எல்லாவற்றையும் மூடிக் கட்டி வைத்தார். தூரிகைகளும், அவற்றைச் சுத்தம் செய்யும் பொருட்களும் நிறைந்த ஜாடிகள். தரையில் விரித்திருந்த துணியை எடுத்து மடித்துவைத்தார். நெடுநேரம் அசையாமல் இருந்ததால் நோவெடுக்கத் தொடங்கியிருந்த தன் பின்கழுத்தைத் தொட்டுக்கொண்டாள், ஸோஃபி.
இனி அவள் உடம்பெங்கும் வலியெடுத்துக்கொண்டுதானிருக்கும் அவள் இறக்கும் வரை; அதுவும் இப்போது விரைவில் நிகழ்ந்துவிடும். இறந்தபின் அவளைப் பரிசோதிக்கும் மருத்துவர், பதினேழு வருடங்களாக மெல்ல மெல்ல நைந்து நலிவுற்று வந்திருந்த உடல்நிலையே இறப்புக்குக் காரணம் என்பதாகக் கண்டறிவார்; பட்டினி கிடந்து தற்கொலை என்கிற வதந்திகள் வலுவிழந்து போகும்.
அப்போது எஃபி அந்த அறையில் இருப்பாள். ஸோஃபியின் குளிர்ந்த கரத்தை, தன் கரங்களுக்கிடையில் இறுகப் பற்றுவாள். அவளுக்கென ஒரு மலர் ஜாடியைக் கொண்டு வந்திருப்பாள்; அவள் குழந்தைகள் பற்றிய செய்திகளையும். பிறகு வெளியேறுவதற்கு முன் ஸோஃபியின் முகத்தைத் தீண்டுவாள்; பல ஆண்டுகளுக்கு முன்னால் தன் கணவன் அந்த கேன்வாஸில் கொண்டுவந்திருந்த முகத்தில் இருந்தது போன்ற ஒரு உணர்வை, இப்போது குளிர்ந்து கிடக்கும் ஸோஃபியின் இந்த முகத்தில் காணக்கிட்டுமா என்பது போல் தீண்டுவாள்.
நிறக்கலவைகளின் அடர்ந்த மணத்தினூடாகத் துளைத்துக்கொண்டு இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தது. ஜான், ஸோஃபியின் கரத்தைப் பற்றி, மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்த அவள் மேனியை ஜாக்கிரதையாகத் தாங்கி நேராக்கி, ஓவியச் சட்டத்தைச் சுற்றிக்கொண்டு வந்து நிறுத்தினார்.
“வெல்..?” என்றார். வியர்வையைப் புறங்கையால் துடைத்தபோது, அவர் நெற்றியில் தீட்டிக்கொண்ட இடத்தில் இப்போது திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது அந்தப் பழுப்பு நிற பெயின்ட். ஸோஃபி க்ரே, தன் ஆடையால், அவர் விரல்களை ஒற்றித் துடைத்தாள்.
ஓவியம், எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிக எளிமையாக இருந்தது. ஓவிய உருவம் புன்னகைத்துக்கொண்டிருந்தது, மிக அடக்கமான மேம்போக்கான முறையில் இருந்தது.
“என்ன ஒரு ஏமாற்றம்” என்று முணுமுணுத்தார் ஒரு விமர்சகர்.
ஸோஃபியால் எதையும் காணமுடியவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், கேன்வாஸின் மையத்தில் ஒரு இருண்ட சூன்ய வெளி; அவள் ஒட்டுமொத்த வாழ்வையும் நிகர்த்த ஒரு சூன்யம். அவளிடம் மறைந்திருந்த, வெளிப்படுத்தச் சாத்தியமாயிருந்த அவளின் அனைத்தும், அவளே கண்டுகொள்ளும் முன்னால், ஒரேயொரு ஓவியத்தில் சிறை பிடிக்கப்பட்டு உலகிடம் கையளிக்கப்பட்டுவிட்டது.
அவள் கையை உயர்த்தி தன்னைத் தொடப் போனாள், ஓவியத்திலிருக்கும் தான் ஒருவேளை தன்னை நோக்கி பதிலுக்குக் கை நீட்டக்கூடும் என்பதாக.
ஜான் பட்டென்று ஓவியத்தை நகர்த்திக்கொண்டார்.
“நீ ஓவியத்தைக் கெடுத்துவிடக்கூடும். அதை நான் விரும்பவில்லை” என்றார்.
000
*ம்யூஸ் – ஒரு கலைப் படைப்புக்கு மாதிரியாகக் காட்சியளிப்பவர். மட்டுமன்றி, இசையோ, ஓவியமோ, வேறு எந்த ஒரு கலைப் படைப்போ – அது உருவாக ஊக்கமாகவும், ஆதர்சமாகவும் அமைபவரும் ம்யூஸ் எனக் குறிப்பிடப்படுவர்.
(மூலப் பிரதியில் இல்லாத அடிக்குறிப்பு; கதையில் அச்சொல் மற்றும் பொருளின் முக்கியத்துவத்துக்காக மொழிபெயர்ப்பாளரால் கொடுக்கப்பட்டுள்ளது.)
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
அற்புதமான மொழியாக்கம். ஒரு தமிழ்க்கதையைப் படிப்பது போலவே இருந்தது. அதே சமயத்தில் வேறு நாட்டு, வேறு கலாசாரத்து அனுபவத்தைக் கொடுக்கிறது.