நினைவுகள் நெய்திடும் மௌனம் : சியாம்

வயலட்டின் "இதோ நம் தாய்" நாவலை முன்வைத்து


“அவர்களது நினைவுகளில் வண்ணங்கள் மட்டுமே நிறைந்திருந்தன, சொற்கள் இல்லை. அவர்களால் எல்லா உயர்களிடத்தும் பேச முடிந்திருந்தது. பின் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். உலகத்திடமிருந்து தனித்திருக்கத் தொடங்கிய அவர்களது நினைவுகளில் முடிச்சுகள் தோன்றின. அவையே சொற்கள் ஆகின.”
(“இதோ நம் தாய்” நாவலில் இருந்து)

வயலட்டின் “இதோ நம் தாய்” நாவல் பற்றி பேசும்போது, நண்பர் ஒருவர், “இது நம் தாய், இதுதான் நம் தாய், இதோ நம் தாய். ஆகியவற்றுக்கு மத்தியில் வேறுபாடு உண்டு தானே?” என்றார். “இதோ நம் தாய்” என்பதுடன் தேடலும் தவிப்பும் மீட்பும் தன்னியல்பாக இணைந்துக் கொள்கின்றன.

ஆனந்தி எனும் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்ட திருநங்கையின் தன்னுரையாகவும் நினைவுகளாகவும் இந்நாவல் விரிகிறது. உண்மையாகவே நாவல் விரியத்தான் செய்கிறது.  நாவலில் இருக்கும் காலம் என்பது ஞாயிறு காலைக்கும் திங்கள் அதிகாலைக்கும் இடையேயான காலமே. அச்சிறிய காலத்தில் ஆனந்திக்குள் நொதித்துக்கொண்டே இருக்கும் நினைவுகளே இதோ நம் தாய். ஆனந்தியே ஓர் இடத்தில், “நீ வெறுமனே நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது. கொஞ்சம் நினைவுகளிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டும்” என்கிறாள். நாவலில், ஒரு மரவட்டை மேரி சிலையின் மேல் ஊரும் சித்திரிப்பு வருகிறது. ஆனந்தியின் மேல் ஆயிரம் கால்கொண்டு சதா ஊர்ந்துக்கொண்டே இருக்கும் மரவட்டையா அவளது நினைவுகள்? நாவலின் இறுதி வரியாக வரும் “இதோ நம் தாய்” என்பது அந்த நினைவுளின் தவிப்பிலிருந்து விடுபடுகையில் ஆனந்தி சொல்வதுதானா?

எழுத்தாளர் டி.தருமராஜன் இந்நூல் பற்றிய தன் கட்டுரையில் ஆனந்திக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையில் இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டுகிறார். “[இந்நாவல் ]திருநங்கைகளும் மொழிபெயர்ப்புகளும் ஒன்று என்கிறது. அந்த வகையில் நாவலின் அடிப்படையான சிக்கல் – trance. Transgender and translation. உருமாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன (பால் உருமாற்றம் மற்றும் மொழி உருமாற்றம்); இவற்றின் அடிப்படை என்ன?” என்று வினவுகிறார்.

ஆனந்தி மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறாள் என்பதைக் கடந்து ஆனந்தியே ஒருவகையில் மொழிபெயர்ப்புதான் என்று தோன்றுகிறது. ஒரு சொல் மூலத்திலிருந்து வேறு மொழிக்கு மாற்றப்படுகையில் அதில் ஒலிக்கும் குரல் எதனுடையது? ஆணிலிருந்து பெண்ணாக மாறிய ஆனந்தியின் குரல் எது? “நான் தாயாக முடியுமா?” என்ற கேள்வி சில இடங்களில் வருகிறது; “தாய்மை என்றால் என்ன?” என்ற கேள்வியும்.

‘Eucharist’ எனும் சொல் பற்றி நாவலில் ஒரு குறிப்பு வருகிறது. தமிழில் அது ‘நற்கருணை’ என்றாகும்போது அச்சொல் மொழிபெயர்க்கப்படுகிறது என்று மட்டுமில்லாமல், அச்சொல் புதிதாக முளைத்து எழுகிறது; ஒரு கோணத்தில், மேலதிகமான அர்த்தத்தை சேர்ப்பதாக கூட சொல்ல முடியும். ஆதியிலிருந்து பெண் என்ற மொழியில் மட்டுமே பிரத்யேகமாக ஒளிர்ந்துக்கொண்டிருக்கும் தாய்மையை திருநங்கை என்ற மொழிக்கு மாற்றும்போது ஆனந்தி அதை என்னவாக மாற்றுகிறாள்? எவற்றை தவிர்த்து எவற்றை மேலதிகமாக சேர்க்கிறாள்? பொது போக்குவரத்தில் அல்லாமல் காரில் செல்வதற்காக வருத்தம் அடைவது, குப்பைகளை கம்போஸ்ட் செய்வது போன்றவற்றின் மூலம் ஆனந்தி தாய்மைக்கு புதிய அர்த்தத்தை உருவாக்க முயல்கிறாள். அது பால் பாகுபாட்டை கடந்த தாய்மையாக இருக்கிறது. பரிணாம வளர்ச்சியில், தேவை அற்ற உறுப்பு என்று வாலை நாம் கைவிட்டது போல மெல்ல மெல்ல ஆண்மையையும் அதனுடனே இணைந்த தந்தைமையையும் கைவிட நேருமா? ஆண்மை அற்ற அவ்வுலகில் எல்லோரும் திருநங்கைகளே. அப்போது தாய்மை என்பது என்னவாக இருக்கும்?

மொழிபெயர்ப்பாளராக இருக்கும் ஆனந்தியால் உண்மையில் சிலவற்றை திட்டவட்டமாக மொழியில் சொல்லிவிடமுடிவதில்லை. யாஷ்மினிடம் தனக்கு இருக்கும் அன்பை எவ்வளவு முயன்றும் மொழிபெயர்க்க முடியாமல் போகிறது. தனது அம்மா கௌதமிக்கும் தனக்கும் இடையில் உள்ள வேற்றுமையை ஒருபோதும் ஆனந்தியால் பிறருக்கு சொல்லில் கடத்திவிடமுடிவதில்லை. நாவலில் வரும் யாஷ்மின், யசோதா, கௌதமி ஆகியோரின் குரல் ஆனந்தியுடைய குரலாகவே ஒலிக்கிறது. ஆனந்தியுடைய யாஷ்மினாகவும் யசோதாவாகவும் கௌதமியாகவுமே அவர்கள் நாவலில் வருகிறார்கள். ஆனந்தியின் குரலில் வெளிப்படமுடியாத தருணங்களில் அவர்கள் மர்மமான மௌனத்தில் அடைக்கலம் கொள்கிறார்கள்.

பொதுவாக நமது நினைவுகளில், நாம் தீர்க்கமான நபராகவே இருக்கிறோம். என்றோ ஒரு நாள் எந்த ஒரு திட்டமும் உறுதியும் இன்றி நாம் செய்தவற்றை காலம் கழிந்தபின்பு நினைவுகளாக மீட்டுப் பார்க்கையில், அன்று நாம் மிகவும் உறுதியுடன் செயல்பட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் ஆனந்தி நினைவுகளில் கூட நிச்சயமின்மையின் சாயல் படிந்தவளாகவே இருக்கிறாள். நினைவுகளில் ஆனந்தியும் பிறரும் மௌனம் பூணுகிறார்கள். அவர்கள் மௌனம் பூணும் இடங்களை ஆனந்தி மொழிபெயர்த்துவிட்டால் அவளது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? நிச்சயமின்மையிலிருந்து மௌனமும், மௌனத்திலிருந்து நிச்சயமின்மையும் சதா பிறந்துகொண்டே இருக்கிறதா?

வயலட் இந்நாவலில் உருவாக்கும் தனிமை எனக்கு மிகவும் நெருக்கமானது. நவீன இலக்கியம் தொடர்ந்து தனியர்களை வார்த்து எடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் தன்னைப் பற்றியே சிந்திக்கும் தனிமை, மற்றொரு பக்கம் தன்னைப் பற்றி சிந்திக்க அவகாசமும் திராணியும் அற்ற தனிமை. ஆனந்தியின் தனிமை இக்காலகட்டம்  உருவாக்கக்கூடியது.

பூமியில் எந்த மூலையில் உள்ளவரையும் நொடிப்பொழுதில் தொடர்புகொள்ளும் சாத்தியம் கொண்டது இக்காலம். அதே நேரத்தில் அத்தொடர்பு தற்காலிகமானதும் உள்ளீடற்றதும் என்று நம்மிடம் இக்காலம் அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஆயிரம் நபர்களை எலும்பு நொறுங்க கட்டியணைத்துவிட முடியும். ஆனால் எல்லா அணைப்புகளுக்கு அடியிலும், ‘அணைக்கப்படுபவது தேகம் மட்டுமே’ என்று மங்கலாக எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரின் இதயத்திலும் பிறரால் மட்டுமே நிரப்பப்படும் வெற்றிடம் ஒன்று உண்டு. ஒரு பொழுதும் கடைசித் துண்டு சேர்க்கப்படாத puzzle ஆகவே நம்மை இக்காலம் வெம்பி அழவைக்கிறது. இக்காலகட்டத்தின் தனிமை, தன்னிலிருந்து ஒரு துணுக்கை அளிக்கவும் தன்னில் வேறொரு துணுக்கை சேர்த்துக்கொள்ளவும் இயலாத கையாலாகாத்தனத்தை உணர்ந்த பின் சூழும் தனிமை. அது ஆனந்தியின் தனிமை.

நவீனத்துவ இலக்கியத்தின் பிரசித்தி பெற்ற தனிமை என்பது தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருப்பதன் விளைகனி. சிந்தனை, உலகுடன் ஒட்டாதபோது உருவாகும் நான்xபிற என்ற அந்நியத்தின் மறுமுகம் அந்த தனிமை. ஆனால் ஆனந்தியின் தனிமை அத்தகையது அல்ல. அவள் நேசித்து தனிமையை ஏற்பவளும் அல்ல. ஒருவகையில் அத்தனிமைக்கு நேர்மாறானதா ஆனந்தியுடைய தனிமை என்ற கேள்வியும் எழுகிறது. அவள் தன்னைப் பற்றி சிந்திக்க தொடங்குகையில்தான் நினைவுகள் வருகின்றன, நினைவுகளின் வழியாகவே பிறர் வருகிறார்கள். பூனைகளினாலும் நாய்க்குட்டிகளினாலும் மனிதர்களினாலும் அவள் தனிமையை முறியடிக்கவே எத்தனிக்கிறாள். ஒரு நினைவிலிருந்து மற்றொன்று, ஒருவரிலிருந்து மற்றொருவர் என்று அவளது மனம் நெய்து கொண்டே செல்கிறது.

வயலட்

நினைவுகள் கடந்த காலத்திற்கான கச்சிதமான நுழைவுச் சீட்டுகள். நாவலில் உள்ள எதிர்கால வினைச் சொற்களை விரல்விட்டு எண்ணிப் பார்த்துவிட முடியும். ஆனந்தியின் மொழி கடந்த காலத்தால் மட்டுமே ஆனதாக இருக்கிறது. நாளையைப் பற்றிய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் அற்ற சூன்யத்தில் நேற்றின் நினைவுகள் சுழித்து உள் நுழைகின்றன.

அகஸ்மாத்தாக நம் கண்ணில்பட்டுவிடும் கடந்தகால புகைப்படங்கள் போன்றவை நினைவுகள். புகைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் நாம் தவறவிட்ட சிறிய பெரிய விஷயங்களை, புகைப்படங்களில் காண்கையில் புரிந்துகொள்கிறோம். அவ்விஷயங்கள் கடந்த காலத்தின் குறியீடுகளாகின்றன. கடந்த காலம் எத்தனை தற்செயலானதாக இருப்பினும், அதை பற்றிய நினைவுகளில் நாம் குறியீடுகளை கண்டடைந்துவிடுகிறோம். ஒரு நாவலை வாசிப்பதைபோலவே நினைவுகளை வாசிக்கிறோம், பொருள் அளிக்கிறோம். ஆனால் அந்நினைவுகளிலும் ஆனந்தி சாட்சியாக மட்டுமே நிற்கிறாள்; அவற்றை மாற்றியமைத்து பொருள்கொள்ளவோ பதில்களை கண்டடையவோ எத்தனிக்காத சாட்சி அவள். தன்னுடைய சிறு துணுக்கை அளிப்பதற்கும் தனக்குள் வேறொன்றை பெற்றுக்கொள்வதற்கும் ஆனந்தி நினைவுகளிடம் தஞ்சமைடைகிறாள். எதிர்காலப் பிரக்ஞையற்ற ஆனந்தி நினைவுகளின் வழி தன் இருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வதாக தோன்றுகிறது. ஆனால் அங்கும் அவள் மெளனம் கொள்கிறாள். அலைகளை பிறப்பித்து சாட்சியாக உறைகிறது கடல். ஆனந்தி கனம் தாளாமல் கையில் ஏந்தி நிற்பது, அக்கடலின் தனிமை. அது கையறு நிலையும் கூட. அக்கையறு நிலைதான் உண்மையில் இயல்பு நிலையா? அதனால்தான் நகுலன், “அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை/கடல் இருக்கிற வரை
” என்கிறாரோ?    

வயலட்டின் சிறுகதைகள் நேர்கோட்டில் அமையாத சிறு நிகழ்வுகளால் ஆனவை, ஆசிரியரின் இடையீடு கொண்டவை. இந்நாவலிலும் ஒரு நிகழ்விலிருந்து மற்றொன்று என்று வயலட் எழுதிக்கொண்டே செல்கிறார். நாவலின் காலமே ஒரு நாள்தான்; அதில் வரும் சிறு நிகழ்வுகள் காலத்தை இன்னும் சிறிய துண்டுகளாக வெட்டுகின்றன. மேலும், வயலட் “நாவலின் பன்முகத்தன்மை” பற்றி எழுதியக் கட்டுரையில், “கதை(சிறுகதை) நமக்கு ஒன்றை வழங்குகிறது. ஆனால் வழங்கப்படும் அந்த ஒன்றே கதையாக இருக்கிறதே தவிர, நாமோ கதையோ வழியில் எதையும் கண்டெடுப்பதில்லை. இந்த கண்டெடுத்தல் அனுபவமே சிறுகதைக்கும் நாவலுக்குமான முக்கியமான வித்தியாசமாகவும் எனக்குப்படுகிறது….நாம் அறியாத ஒன்றை, எழுத்தாளரே அறியாத ஒன்றைத் தேடித் தர நாவல் பொருத்தமான வடிவமாக இருக்கிறது.” என்கிறார். இது, ‘எழுத்தாளன் எழுதும்போது கண்டடைகிறான்’ என்ற மர்மம் கூடிய கூற்றை அடிப்படையாககொண்டிருந்தாலும் வயலட் இதை சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடாக முன்வைக்கிறார்.

வயலட், இந்நாவலை சிறிய நிகழ்வுகளின் தொகுப்பாக எழுதுகையில், அந்நிகழ்வுகள் தனித்து நின்று எதையும் ‘வழங்கிவிடாதவாறு’ எழுதியிருக்கிறார். நாவலை வாசித்தபின்பு, ஒரு சில நிகழ்வுகள் நாவலில் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. சிறுகதை போல் அல்லாமல், நாவலில் எழுத்தாளனும் வாசகனும் வழியில் கண்டடைகிறார்கள் என்ற நம்பிக்கைதான் இந்த வடிவத்திற்கு இட்டுச்செல்கிறதா? ஒரு நாவல் எதையும் வழங்கிடாத சிறிய நிகழ்வுகளால் கட்டமைக்கப்படுகையில் நாவலின் ஒருங்கமைவு என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்நாவலை, ஒரு திருநங்கையின் கதை என்று ஒருங்கமைக்க முடியும் என்று கூட சொல்லிவிட முடியாது. நாவலை வாசிக்கையில் சில இடங்களில் ஆனந்தியின் பால் அடையாளத்தையே நாம் மறந்துவிட நேர்கிறது.

எல்லா சிறிய நிகழ்வுகளையும்(கதைகள்) ஒரு நாவலாக ஒருங்கமைப்பது ஆனந்தி என்ற இருப்பு மட்டுமே, அவளது தேடலும் கேள்வியும் தெளிவுற இல்லாதபோது நாவல் ஒருங்கமைவை இழக்கிறது. எதையும் வழங்கிடாத சிறு துண்டுகளால் ஆன நாவல், ஒட்டுமொத்தமாக நாவல் என்ற வடிவில் கண்டடைவுகளை அளிக்கும் சாத்தியம் கொண்டதுதானா? வயலட் சொல்லும் “எழுத்தாளரே அறியாத ஒன்றைத் தேடித் தர பொருத்தமான நாவல்” ஆக இந்நாவல் இருக்கிறதா என்பது என்னளவில் சந்தேகத்துக்கு உரியதே. கண்டடைவு என்றோ கண்டடைவுத் தருணம் என்றோ நாவலில் திட்டவட்டமாக ஒரு இடத்தை சொல்லமுடியவில்லை. வாசகன் கண்டடைவதற்கு முன்பே நாவல் தன்னை நிறுத்திக்கொண்டது போல தோன்றுகிறது. நாவலின் வடிவமே, இந்நாவல் திரும்ப திரும்ப நடக்கக் கூடிய ஒன்றாக தோன்றச்செய்கிறது. ‘ஆனந்தி மிகுந்த டிப்ரஸனில் இருந்த ஒரு ஞாயிறில்’ என்று தொடங்கும் நாவல், ஆனந்தி அடுத்த ஞாயிறிலும் அதையே மீண்டும் சொல்லப் போகிறாள் என்று உணரவைக்கிறது. சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடாக கண்டடைவை வயலட் முன்வைப்பதால், இதற்கு அதிகம் கவனம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றையும் கடந்து நாவல் எனக்கு அணுக்கமாக இருப்பது, எவ்வளவு முரண்பட்டாலும் ஆனந்தியால் விட்டுவிலகிச்செல்ல முடியாத அவளது அம்மா கௌதமி. நாவல், கௌதமி இல்லாத காலத்தில்தான் தொடங்குகிறது; ஆனால் அவளது பிரசன்னத்தை அழுத்தமாக பதியச்செய்கிறது.

மேரி, ஏசுவை ஸ்பரிசிக்கும் தருணங்கள் இரண்டு. பாலகனாக ஏசுவை கையில் ஏந்தி நிற்பதும், சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட ஏசுவை மடியில் கிடத்தி அமர்ந்திருப்பதும். இது இரண்டுக்கும் இடையில், ஏசு நீரின்மேல் நடக்கையிலும் நோயாளிகளை சொஸ்தப்படுத்துகையிலும் மேரி அவர் திரும்பி வந்து வாசல் கதவை தட்டுவதற்காக காத்துக் கொண்டிருந்திருக்கலாம். முடிவற்ற காத்திருப்பின் உருவமாகவே நான் மேரியை உணர்கிறேன். கௌதமியும் அவ்வாறு காத்திருந்தவள்தானா? தட்டினால் திறப்பதற்கு எந்தக் கதவும் காத்திருக்கவில்லை என்ற உணர்வு வந்த பிறகே ஆனந்திக்குள் நினைவுகள் நொதிக்கின்றன. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மேரியை பொறுப்பேற்றுக்கொள்வதற்காக யோவானிடம் சொன்னது, “இதோ உன் தாய்.” ஆனால் அவள்தான் நமக்கு தாயாகியிருக்கிறாள். ஆனந்தி ஏசுவாக அல்ல மேரியாகவே மாற முயல்கிறாள், நம் தாயாக.

“இதோ நம் தாய். நமக்கு உணவளிப்பவள். இந்த வானையும், உலகையும் நமக்காக சுமந்து தந்தவள். உலகில் வேறு யாரையும் விட நம்மை அதிகம் நேசிப்பவள். நம் எல்லோரையும்! நம் செயல்களால் அவளைக் காயப்படுத்துகிறோம். நாம் இல்லாவிட்டால் அவள் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும். அது எப்படியென கற்பனை செய்ய அவளுக்கு விருப்பமில்லை. நம் எண்ணங்கள் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. நம்மைக் குறித்து அவளிடம் பல கற்பனைகள் இருந்தன. நாம் ஏன் அவளாக விரும்புவதில்லை. ஏன் நம்மால் வானையும், கடலையும், உலகையும் சுமக்க முடிவதில்லை.”                

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. உண்மையில் மிகச் சிறப்பான நாவல் அறிமுக கட்டுரை , ஒப்புநோக்கும் விஷயங்களும் எதார்த்தத்தை சொல்கிறது . மேலும் விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன். நன்றி.

  2. ஒரு சிறந்த விமர்சனம். தனித்துவமான பார்வையும், நுண்ணிய அவதானங்கள் வழியாகவும் நாவலின் ஆழத்துக்கு வாசகனை இட்டுச்செல்லக்கூடியது.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss