ஆனந்த் குமார் கவிதைகள்

நேரம் சரியாக

உறங்கும் குழந்தை
கடிகார முள்ளென
படுக்கையைச் சுற்றுகிறான்

கைகள் சின்ன முள்
கால்கள் பெரிய முள்

அம்மாவை எழுப்புகிறது ஒரு முள்
அப்பாவை ஓரமாய் தள்ளுகிறது
ஒரு முள்

காலத்தை குழப்பி அவன்
நெளிகிறான்
சிரிக்கிறான்
எழுகிறான்

குழந்தை காட்டும் நேரம் இப்போது
பின்னிலில்லை முன்னிலில்லை

குழந்தை காட்டும் நேரம்
மிகச்சரியாக
குழந்தை

000

டோக்கன்
*
எல்லோர் செருப்புகளையும்
ஒன்றாய் பையிலிட்டு வாங்கி
அக்காள் ஒரு
நீல நிற டோக்கன் தந்தாள்
நம்பர் 18

கோவிலுக்குள் செல்லும்போது
நிம்மதியாக இருந்தது
அக்காள் எங்களை
பத்திரமாக பார்த்துக் கொள்வாள்
நான் இந்த டோக்கனை மாத்திரம்
பார்த்துக் கொண்டால் போதும்

சாமி கும்பிட்டு
உண்டியலுக்கு சில்லறை தேடுகையில்
நீல நிற டோக்கன்
கையில் வந்தது

கொஞ்சமானால் தவறி
கடவுளிடம் சென்றிருக்கும்
எங்களை மொத்தமாக
மீட்க வேண்டிய டோக்கன்

000

நிழல் விளையாட்டு
*

கடற்கரையில்
ஒரு குடையை நட்டு
அதன் கீழ் அமர்ந்திருந்தார்
அவர்

சூரியன் நகர்ந்து
நிழலை கொஞ்சம் தள்ளி வைத்தது
அவர் எழுந்து
நிழலுக்குள் போனார்

சூரியன் மீண்டும் நிழலை நகர்த்த
அவர்
துரத்தித் துரத்தி நிழலைப் பிடித்தார்

அந்தி சாய
சூரியன்
குடையின் கீழ் அமர்ந்திருந்தது

அவரையும் காணோம்
நிழலையும் காணோம்

000

கோவிலகம்
*

குழந்தை இல்லாத வீடு
அமைதியாக இருக்கிறது
கோவில் போல

எப்போதாவது வருகிறது
எதிர் வீட்டு குழந்தை
எக்கியெக்கிப் பார்க்கிறது
ஓசையின் மடிக்கு கீழ்

யாரது
தூக்கிவிடுவது?
அவன்தான் தந்தை

ஒரு மணி ஒலிக்கவும்
தெய்வத்திற்கு
சிலிர்த்துக் கொள்கிறது

000

ஆனந்த் குமார்

கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. முதல் கவிதை எனக்குப் பிடித்திருந்தது. கைகள் சின்ன முள்
    கால்கள் பெரிய முள் எனும் வரி மிகச்சுலபமாக கவிதையில் அமர்ந்திருக்கிறது; எனக்கோ வெகுதிகைப்பாகவே தொனிக்கிறது, இதை எழுதிக் கொண்டிருக்கும் இப்போது வரை.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss