இந்திய தத்துவம்- நியாயம்: பி.ஏ.கிருஷ்ணன்

தமிழில்- சதீஷ்குமார் ஆர் எம்

சூத்திரம் எனும் வடிவம்

“சூத்திரம்”  என்றால்   நூல் அல்லது இழை என்று பொருள். ஆனால் தத்துவத்தில் இந்த சொல்  சுருக்கமான, தேர்ந்த சொல்லாட்சி என்ற  அர்த்தத்தில்  பயன்படுத்தப்படுகிறது. முற்கால இந்தியத் தத்துவவாதிகள் தத்துவங்களை  எழுத்துவடிவில் பேணவில்லை.  பிற்காலத்திலும்  அதற்கான  முயற்சிசெய்யவில்லை. எனவே மிக விரிவான ஆழமான தத்துவ உரைகளை  செறிவாக, மிகச்சுருக்கமாக,  மனப்பாடம் செய்ய வசதியான வடிவில் வைக்க வேண்டிய தேவை இருந்தது. ஆரம்பகட்ட சூத்திரங்கள் பெரும்பாலும் வேள்விச்சடங்குகள் மற்றும் முறைமைகள் பற்றி குறிப்புகள்தான் , ஆனால் ’சூத்திரம்’ என்ற வடிவம் மற்ற துறைகளுக்கும் பரவியது. சம்ஸ்கிருத இலக்கண அறிஞர் பாணினியின் (பொ.மு. 6-5 ஆம் நூற்றாண்டு) இலக்கண சூத்திரங்கள்தான் பிற்காலத்தில் உருவான சூத்திரங்களுக்கு மாதிரியாக அமைந்தன. இந்தியத் தத்துவ மரபின் எல்லா பள்ளிகளும்(சாங்கியத்தின் காரிகைகள் தவிர) அவற்றிற்கே  உரிய சூத்திரங்களை கொண்டிருந்தன. அவை பொது யுகத்தின் ஆரம்பத்தில்  எழுத்து வடிவில் மாற்றி பேணப்பட்டன.

வரலாறு – காலம்

சாங்கியம்-யோகம் போலவே நியாயம்-வைசேஷிகம் கூட இணை தத்துவங்கள்தான். ’நியாயம்’ என்ற பெயருக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.  நியாயம் என்றால்   ”மறைநூல்கள் அல்லது வேறு நூல்கள் மீதான  கூரிய பகுப்பாய்வு” என்று பொருள். வைசேஷிகம் என்றால் விசேஷமானது, தனித்துவமானது என்று  பொருள். நியாய சூத்திரத்தின் ஆசிரியர் கௌதமர்(Gautama). வைசேஷிக சூத்திரத்தின் ஆசிரியர் கணாதர்(Kanada). இந்த இருவரை பற்றியும் எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இந்த சூத்திரங்களின் காலம் பற்றிகூட ஊகங்கள் மட்டுமே உள்ளன. ஆய்வாளர் ஜாகோபியின் கருத்துபடி நியாயம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம், வைசேஷிகம் அதற்கு சற்றே முன்னர். ஆனாலும் மற்ற மரபுகளான சாங்கியம், மீமாம்சம் மற்றும் வேதாந்தம் போல நியாயமும் வைசேஷிகமும்  மிகத்தொன்மையானவை  அல்ல.  இவை பொது யுகத்தின் ஒன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் உருப்பெற்று இருக்கக்கூடும் என சில அறிஞர்கள் உத்தேசிக்கின்றனர். பாதங்களில் கண்களை உடையவர் என பொருள்படும் ‘அக்ஷபாதர்’ என்கிற பெயரும் கௌதமருக்கு உண்டு. அவரின் தத்துவநோக்கு   நடைமுறையானதும்,  நிரூபணவாத முறைமையை  சார்ந்ததாகவும்  இருப்பதால் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும். அதேபோல,, கணாதர்  என்ற சொல்லுக்கு  ‘அணுவை -உண்பவர்’ என்று பொருள். வைசேஷிக தத்துவம்  அணுக்களை பற்றி மிக விரிவாக பேசுவதால் அவர் இந்த பெயரை பெற்றிருக்கலாம். 

நியாயம்

நியாயத் தத்துவம் பொது விவாத முறைகளைப் பற்றிய ஆய்வுகளிலிருந்து தோன்றி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது பொது விவாதத்தின் வழிமுறைகளுக்கான மூல நூல் அல்லது கையேடு. நியாயம், தர்க்கத்தின் தத்துவம் என பொருள்படும்  ஆன்வீக்ஷிகீ(Ānvīkṣikī) என்றும் அழைக்கப்படுகிறது.

 பிரமாணங்களின்(சான்றுகளின்) உதவியுடன் விஷயங்களை ஆராயும் முறை என விளக்கவுரையாளர் வாத்சாயனர் நியாயத்தின் தனித்தன்மையை விளக்குகிறார். அவதானிப்பு  மற்றும் முன்னறிவின் துணையுடன் செய்யப்படும் விவாதம் மீளாய்வு(anvıks̄a ̄) எனப்படுகிறது. இவ்வகையான தர்க்கம் சார்ந்த வாதங்களை ஆழமாக ஆய்வு செய்யும் நெறியே நியாயம் அல்லது ஆன்வீக்ஷிகீ(anv̄ ıks̄ ̣ikı̄). எளிமையாக சொல்வதானால், நியாயம் என்பது பகுத்தறிவு சார்ந்த ஆய்வுமுறை.

நியாய சூத்திரம்

நியாய சூத்திரம் அதன் தொடக்கத்திலேயே, ஆன்ம விடுதலைக்காக, பிறவிச்சுழலிலிருந்து வெளியேறுவதற்கான   வழியாக  16 விஷயங்களைப்பற்றிய  அறிதலை  அடைவதை  பட்டியல் இடுகிறது.

1. பிரமாணம் – அறியும் முறை

ஞானத்தை அறியும்முறைகளாக நேர்காட்சி (பிரத்யக்ஷம்), ஊகம் (அனுமானம்), உவமை (உபமானம்) மற்றும் முன்னறிவு (சப்தம்) எனும் நான்கு பிரமாணங்களை நியாயம் ஏற்கிறது. நேர்காட்சி என்பது அறுதியானதாக, பெயரற்றதாக,  நிலையானதாக  இருக்க வேண்டும். அறுதியாக   வகுத்துக்கொள்ள முடியாதது எது?  உதாரணமாக, மலையில் தெரிவது புகையா, மேகமா, தூசுப்படலமா என்று உறுதியாக சொல்லமுடியாவிட்டால் அதை அறுதியாக வகுத்துக்கொள்ளமுடியாது  . எது பெயரற்றது? ஒரு பொருளின் பெயருக்கும், நாம் அதை புலனறிவு மூலம் அடையும் அறிதலுக்கும்  தொடர்பு  இருப்பதில்லை. உதாரணமாக, நாம் நன்கறிந்த பொய்யரின் பெயர் ‘சத்யா’. நீரோடும் நதிக்கு வைக்கப்படும் பெயர் ‘பாலாறு’. எது நிலையானது? நம் அறிதலின்  உண்மைத்தன்மையால்தான்  ஒரு விஷயம் நிலைபேறுடையதாக ஆகிறது. அதாவது, கானல் நீரை பருக முடியாது. இப்படி எல்லா பிரமாணங்களையும் நியாயம் வகுத்து செல்கிறது.  அசலான அறிதல் கொண்ட, உண்மையான, நம்பிக்கைக்குரிய ஒருவர் (ஆப்தர்) அறிவுறுத்தும் நோக்கில் சொல்லும்  கருத்துகளை  மட்டுமே சான்றுகளாக  எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நியாயம் சொல்கிறது.  வேதங்கள் மற்றும் உபநிடதங்களின்   அறிஞர்களை ஆப்தர்கள் என்று சொல்லலாம். 

 2. பிரமேயம் – அறிபடுபொருள்

தூய  அறிதல்களுக்கான  அறிபடுபொருட்களாக ( பிரமேயங்களாக)  12 விஷயங்களை நியாயம் பட்டியலிடுகிறது: உடல், புலன்கள், அறிவு, செயல், பயன், மறுபிறவி, ஆத்மா, அனுபவங்கள், தர்க்கமனம், சமநிலையின்மை, துயரம் மற்றும் வீடுபேறு.

சரியான அறிதலை அடைவதற்கு  தேவையான  அறிபடுபொருட்கள்  நிறையவே இருந்தாலும், நியாயம் இந்த பன்னிரண்டை மட்டுமே பட்டியலிடுகிறது.  இவற்றை பற்றி விவாதித்தாலே, மாயையை அகற்றி துயரங்களில் இருந்து விலகி தூய அறிவை பெறலாம். மேலும் பிழையான அறிதல் அடுத்தடுத்த பிறவிகளாக, அதன் விளைவான  துயருக்கு இட்டுச்செல்லக்கூடியது.  

3. சம்சயம் – ஐயம்

ஐயம் என்பதை பிழையான அறிதலுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஐயம் என்பது முழுமையற்ற, குறைபட்ட அறிவாகும்; அது மேலும் ஆராய்ந்து தெளிவுபெற தூண்டுதலாக ஆகிறது. எனவே இது நேர்மறையான, விரும்பத்தக்க பண்பு. நியாயம் சொல்லும் நான்கு வகை ஐயங்கள்:

அ) புலனறிவு மூலம்  பொருட்களுக்கு இடையே உள்ள  பொதுத்தன்மைகளை  மட்டும்  அறிவது  அல்லது அவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை  உணரமுடியாதது. உதாரணமாக  குறைவான வெளிச்சத்தில்  கயிறை பாம்பாக கருதுவது (கயிற்றரவு).

ஆ) ஒரே  விஷயத்தை பற்றி   பல்வேறு நபர்களின் வேறுபட்ட அபிப்பிராயங்கள்.  ஒரே பொருளைப்பற்றி  இரண்டு தனிநபர்களின்  மாறுபட்ட சான்றுகள். 

இ) புலனறிவின் சீரற்றதன்மை: குளத்துநீரை   நம்  புலன்கள் நீர் என்று அறிகின்றன. ஆனால்  நம் புலன்கள் கானல் நீரையும்   நீர் என்றே அறிகின்றன. இந்த இரண்டிலும்   நாம் அறிந்தது உண்மையான  நீரையா என்று  தீர்மானிக்க முடியாது.

 ஈ) புலன்களால் அறியமுடியாமையின்  சீரற்ற தன்மை: ஒரு குறிப்பிட்ட பொருளின் இயல்புகளை நம் இதுவரை எதிர்கொண்ட பொருள்கள் மூலமாக நாம் அறிந்திராவிட்டால் அந்த பொருளின் இருப்பை நம்மால் நம்பமுடியாது. உதாரணமாக வாலுள்ள மனிதன்.

4. பிரயோஜனம் – பயன்

அறிவர் ஒருபோதும் பயனற்ற  செயலில் ஈடுபடுவதில்லை. பயன்  எல்லா செயல்களுக்குமான தூண்டுகோல் .
அது இன்பமளிப்பதை  அடைவதற்காகவோ அல்லது விரும்பத்தகாதததைத் தவிர்ப்பதற்காகவோ இருக்கலாம். பயன் கருதா செயலில் வெற்றி இருக்காது.

5. திரிஷ்டாந்தம் – எடுத்துக்காட்டு

 வலுப்படுத்தும் சான்று. ஒரு விஷயத்தை பற்றி  அறிவார்ந்தவர்களும் அப்படி அல்லாதவர்களும் ஒருமித்த  கருத்தை  கொண்டிருப்பது. அப்படியென்றால் அது மிக  பழக்கப்பட்ட உதாரணமாக இருக்க வேண்டும். உதாரணமாக, மழை பெய்யும்போது  மேகங்கள் சூழ்ந்திருக்கும் என்ற பொதுக்கூற்றை விஞ்ஞானி சாமானியன் இருவரும் ஏற்றுக்கொள்வார்கள்.  அறிந்தவற்றை வைத்து அறியாதவற்றை கண்டறியும் தர்க்கபூர்வமான வழிமுறையாக இந்த உதாரணத்தை  பயன்படுத்தலாம்.

6.  சித்தாந்தம் – முடிபு

’முடிபு’ என்பது ஒரு குறிப்பிட்ட தத்துவப்பள்ளியால் தர்க்கபூர்வமாக நிறுவப்படுவது . கொள்கைகள் நான்கு வகைப்படும்.

அ) பொதுவாக ஏற்கப்பட்ட உண்மை:  எந்த  தத்துவப்பள்ளியாலும் மறுக்கப்படாத , குறைந்தபட்சம்  ஏதோ ஒரு தத்துவப் பள்ளியால் தன்னுடைய   தரப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று . எல்லா இந்து தத்துவ மரபுகளும்  நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்  என்ற ஐந்து பருப்பொருட்களையும்;  புலன்களால்   அறியப்படும்   சுவை, ஒலி, மணம், ஒளி, தொடுகை என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஏற்கின்றன. 

ஆ) விஷேஷமான  உண்மை: சில சமானமான கருத்துகள் கொண்ட தத்துவப்பள்ளிகள் ஏற்கக்கூடிய , அவற்றின் எதிர்தரப்புகள் மறுக்கக்கூடிய கொள்கை. உதாரணமாக, “ இந்த உலகம்  ஒரு மாயை”  என்ற கொள்கையை  பௌத்தர்கள் ஏற்கும்போது, சாங்கியமும் வைஷேசிகமும் அதை ஏற்பதில்லை. அவை  “இவ்வுலகு   உண்மையானது, இது மாயை அல்ல, ”  என்ற கொள்கையை கொண்டவை.

இ) தவிர்க்கமுடியாத உண்மை :  ஒரு கொள்கையை ஏற்பதால் தவிர்க்கமுடியாமல் இன்னொரு கொள்கையை ஏற்கவேண்டிய நிலை. உலகை கடவுள் படைத்தார் என்பதை ஏற்றால், அந்த கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், அசாதாரணமானவர்  என்பதையும்  ஏற்க வேண்டும்.

ஈ) மறைமுகமான  உண்மை: இது நேரடியாக உரைக்கப்படாத, ஆனால் அதனுடன் தொடர்புடைய குறிப்புகளை  ஆராயும்போது வெளிப்படும் கொள்கை.  ஒரு ஆண் அல்லது பெண்ணின் சட்டரீதியான ஒப்புதல் வயது(16 அல்லது 18 வயது)(age of consent) பற்றிய விவாதித்தால், அந்த ஒப்புதல் வயதிற்கு மேல் அவர்கள் யாருடன், எப்போது உடல்ரீதியாக இணையலாம் என்று சுயமுடிவை எடுக்கும் தகுதி பெறுகிறார்கள் என்பது நேரடியாக விவாதிக்கப்படாமல்  உணர்த்தப்படுகிறது. 

7. அவயவம் – படிநிலைகள்:

நியாய தரிசனம்  சரியான அறிவை நிலைநாட்ட ஐந்து தர்க்கரீதியான  படிநிலைகளை பயன்படுத்துகிறது.

அ) பிரதிக்ஞா – நிறுவப்படவேண்டிய கருத்து.

ஆ) ஹேது – காரணம்: அந்த கருத்தை  நிறுவ பயன்படுத்தப்படும் வாதம்

இ)  உதாரணம்-எடுத்துக்காட்டு:  நிறுவப்பட வேண்டிய விஷயத்திற்கான   பொதுவாக ஏற்கப்பட்ட  எடுத்துக்காட்டு.

ஈ) உபநயம் – பயன்பாடு: நிறுவப்பட வேண்டிய கருத்துடன் தொடர்புடைய  கருத்துகளை  பயன்படுத்துவது.

உ) நிகமனம் – முடிவு: மேலே குறிப்பிட்ட  நான்கு தர்க்கபூர்வமான படிநிலைகளையும் பயன்படுத்தி   ஒரே முடிவுக்கு வருவது.

இந்த ஐந்து படிநிலைகளையும் விளக்கும் உதாரணம் ஒன்றை பார்ப்போம்:

பிரதிக்ஞா:   கிருஷ்ணன் நித்தியமானவன் அல்ல.                                    

ஹேது: ஏனெனில் அவன் ஒரு மனிதன்

 உதாரணம்: எல்லா மனிதர்களுக்கும் இறப்பு உண்டு. காந்தி, நேரு, நெப்போலியன் போன்ற மனிதர்கள் இறந்துவிட்டார்கள்.

 உபநயம்: கிருஷ்ணனும்  மனிதனே.

 நிகமனம்: எனவே கிருஷ்ணனுக்கும்  இறப்பு உண்டு,  அதனால் கிருஷ்ணன் நித்தியமானவன் அல்ல. 

8. தர்க்கம்: அனுமானங்கள் வழியாக அறிதல்

தெரியாத, தெளிவில்லாத விஷயத்தை  ஒப்பீடுகள் வழியாகவும்,  அந்த விஷயத்தின்  இருப்பை  மறுக்கும் கருத்துகளை(competing suppositions)  படிப்படியாக இல்லாமலாக்குவது மூலமாகவும்  அதைப்பற்றிய  சரியான அறிதலை அடைய முடியும். இந்த  வழிமுறை தர்க்கம் எனப்படும்.

9. நிர்ணயம் – முடிவு:

 முரணியக்கம் என்பது மாறுபட்ட பார்வை கொண்ட இருவர், உண்மையை நிறுவவேண்டும் என்ற விழைவால் உரையாடல் மூலம் ஒரு இறுதி நிலைப்பாட்டை அடையும்  விவாதமுறை. இது  மற்றவரின் பார்வையை தவறு எனவும் தனது பார்வையை சரி எனவும் விவாதித்து நிறுவும்  வழிமுறைக்கு  நேர்எதிரான வழிமுறை.  

10.   வாதம் – விவாதம்:

நிறுவப்பட வேண்டிய   கூற்றின் உண்மைத்தன்மையை  அடைவதுதான் விவாதத்தின் நோக்கம். மெய்மையான தேடல்  கொண்ட எவரிடமும்,  எடுத்துக்கொண்ட கருத்தை பற்றி விவாதித்து நிறுவலாம். வாதத்தில் ஒருவர் முன்வைக்கும் அவரின் சொந்த கருதுகோளை நிறுவ வேண்டிய அவசியமில்லை,   பரிசோதித்து பார்ப்பதற்காக  தன்னுடைய  தரப்பை வெறுமே  முன்வைத்தாலே போதும்..

11.   ஜல்பம் – பொய்யான மறுப்பு:

பூசலின் ஒரே நோக்கம் எதிர்தரப்பை தோற்கடிக்கவேண்டும் என்பது மட்டும்தான். இதில்  அறிதலுக்கான  விழைவோ,  தன் தரப்பை நிறுவும் முனைப்போ இல்லை என்பதால்   வாதத்தில்  வெற்றிபெற  எந்த  வழிமுறையையும் பயன்படுத்தக்கூடியது. இந்த வழிமுறைகள் மிக எதிர்மறையானவை. எதிராளியை பழிப்பது, சில்லறை மற்றும் பயனற்ற வாதங்களை முன்வைத்தல், மையத்தை தொடாமல் சுற்றி வருதல், வாதத்தின் மையக்கருத்தை விவாதிக்காமல் அதற்காக பயன்படுத்தப்பட்ட   உவமைகள், உருவகங்களை  விவாதித்தல் போன்றவை.

12.   விதண்டம் – வீண்வாதம்:

எதிர்தரப்பின் சிறிய குறைகளை பெரிதாக்கி, எந்த ஒரு கருத்தையும் நிலைநாட்டும் விருப்பமின்றி, எதிர்தரப்பில் விவாதிப்பவரை  இடையூறு செய்யும் நோக்கத்தில், அவர் கூறுவதைத் தடுக்கச் சில்லறையான எதிர்ப்புகள் மட்டுமே முன்வைப்பது. ஒருவரது தத்துவம் அல்லது நம்பிக்கை தாக்கப்படும் போது இது போன்ற எதிர்மறையான செயல்களை தற்காப்புக்காக அவரால் பயன்படுத்தப்படும்.

13.   ஹேத்வாபாசம் – பிழைவாதம்:

அ) கூற்றுகள் குழப்பமாக தெளிவில்லாமல் இருந்தால், அது ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளுக்கு வழி வகுக்கும். உதாரணம்: இமாலயத்தில் உள்ள  பனிக்குகைகளில் முனிவர்கள் வாழ்கின்றனர். பனிச் சிறுத்தைகளும் அந்த  குகைகளில் வாழ்கின்றன. எனவே பனிச் சிறுத்தைகளும்  முனிவர்கள் தான்.

ஆ)தன்னையே  மறுக்கும் கூற்று: ஒலி நிரந்தரமானது ஏனெனில் அது உருவாக்கப்படுவது. நிரந்தரமான ஒன்றை உருவாக்க முடியாது. இங்கே காரணம் நிரூபிக்கப்படவேண்டிய கருத்துடன் முரண்பட்டு நிற்கிறது. நிரந்தரமானது,  உருவாக்கப்பட்டது இரண்டுமே பொதுத்தன்மையே இல்லாத தனி இயல்புகள்.    

இ) நிறுவும் கூற்றின் போதாமை 

” மனித உடல் நித்தியமானது அல்ல ஏனெனில் அது நித்தியதன்மைக்கான  பண்புகளை கொண்டிருக்கவில்லை”. இந்த கூற்றில் குறிப்பிடும் அநித்தியம் என்பதும்  நித்தியத்தின் பண்புகள் இல்லாததும்  ஒன்றுதான். அதனால் மேலே உள்ள கூற்றில் உள்ள “உடல் நித்தியமானது அல்ல” என்ற  இன்னும் நிறுவப்படவே இல்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஈ) நிறுவப்படாதது – கருத்து அல்லது கொள்கை போலவே, காரணமாக முன்வைக்கப்படும் ஒன்றுக்கும் சான்று தேவை.  உதாரணமாக, எல்லா பவுத்தர்களும் சைவ உணவு உண்பவர்கள் ஏனெனில் அவர்கள் அஹிம்சையை பின்பற்றுபவர்கள் என்று சொன்னால்   பவுத்தர்கள் சைவ உணவு உண்பவர்கள் என்பதற்கு நிரூபணம் இல்லை.

உ)பிழையானது: தீ குளிரும். நீர் கடினத்தன்மை உடையது.

14.   சல – அற்பவாதம்

அ) வார்த்தைகளுடன் விளையாடுதல்: எதிர்தரப்பு  சொன்னதை வேண்டுமென்றே அவர் உத்தேசிக்காத பொருளில் எடுத்துக்கொள்வது. உதாரணம், நான்கு கால்கள் உடையது என்ற சொன்னால் அதை விலங்காக அல்லாமல், நாற்காலி எனக் எடுத்துக்கொள்வது.

ஆ) பொதுமைப்படுத்தல்: முழுமையில் இல்லாதது அதன் பகுதியில் இருக்க இயலாது என்று  வாதிப்பது.  எல்லா பசுக்களும் கருப்பு நிறத்தில்  இல்லை, அதனால்  ஒரு குறிப்பிட்ட பசு கருப்பு நிறத்தில் இருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பது.

இ) உருவகங்கள்: உருவகமாக சொன்னதை  நேரடிப்பொருளில் எடுத்துக் கொண்டு விவாதிப்பது, மறுப்பது. ‘அரங்கு ஆர்ப்பரித்தது’ எனும் போது அங்கே உள்ள மக்களின் ஆரவாரம் தானே சொல்லப்பட்டதே ஒழிய அரங்கம் எனும் கட்டிடம் அல்ல.

15.   ஜதி – கூடுதல் வாதம்:  சில  ஒற்றுமைகள் அல்லது வேறுபாடுகளை மட்டுமே வைத்து வாதிப்பது. புலிக்கு வாலுண்டு. பசுவுக்கும் வாலுண்டு. பசு இறைச்சி உண்ணாது. அதுபோல புலியும் இறைச்சி உண்ணாது என விவாதிப்பது தவறு.

16.   நிக்ரஹஸ்தானம்: வாத முடிவுப்புள்ளி : ஆராயும் ஒரு விஷயத்தின் மேல் எந்த புரிதலும் இல்லாத ஒருவரிடம் விவாதிப்பது வீணானது. எனவே, எப்போது ஒருவர் விவாதப்பொருளின் மீதான அறியாமையையும் புரியாமையையும் வெளிப்படுத்துகிறாரோ  அப்போதே விவாதிப்பதை நிறுத்திக்கொள்வது நன்று. நியாய சூத்திரத்தில் ‘அடிப்படையான உடன்பாடின்மை’ என இருபத்தியிரண்டுத் தருணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த இருபத்தியிரண்டில்  ஏதேனும் ஒன்று  நிகழ்ந்துவிட்டால்  விவாதம் தோல்வியடைந்துவிட்டது என்று பொருள். 

நியாயத் தத்துவத்தின் படி, இந்த வழிமுறைகள்  வழியாக ஆராயும் போது, எது உண்மை என்ற  தெளிவை அடைய முடியும், வீடுபேறு கிடைக்கும். 

பி.ஏ. கிருஷ்ணன்

பி.ஏ. கிருஷ்ணன் (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

சதீஷ் குமார் RM

சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார் இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss