ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

அண்மைக் காட்சி சேய்மைக் காட்சி

முதல்முறையாக அம்மா அப்பாவுடன்
உணவுகத்துக்கு
புரோட்டா சாப்பிட வந்த
குழந்தை
வறுத்த நாட்டுக்கோழிக் கறியை
மட்டும் தேர்ந்து
புரோட்டாவை
அம்மாவின் இலைக்கு
வீசி எறிகிறது.

இது ஒரு அண்மைக் காட்சி.

காஸாவின் அகதிமுகாம்களில்
உணவில்லாமல் மண்தின்று
இறந்துபோகும் குழந்தைகள்,
அவர்கள் இறந்ததை
ஏற்கமுடியாமல்
மார்பில் அடித்து அழும் தாய்மார்கள்
என் அலைபேசித் திரையில்
தினசரி
திரள்கின்றனர்.

இது ஒரு சேய்மைக் காட்சி.

கைவிடப்பட்டோம் என்று
முகங்களாலேயே சொல்லும்
எத்தனையோ பிராணிகளைக்
கடந்துவந்துதான்
எனது வளர்ப்புயிர்
பிரௌனியுடன்
தற்காலிக நிறைவு என்னும் குமிழை
தினசரி
உருவகித்துக்கொண்டு
உறங்கச் செல்கிறேன்.

இங்கே
எல்லோரையும் காப்பாற்றமுடியாமல்
போனதால்
தான்
நாம்
யாரையாவது
காப்பாற்றிக்கொண்டிருக்கிறோமா?
000

மெய்ஞான சபை

உயிர் சந்தடியே இல்லாமல் போன
அடையாறு
பிரம்ம ஞான சபை வளாகத்தின்
காட்டிலிருந்து
கடைசி வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பின்தொடர
ஜே. கிருஷ்ணமூர்த்தி
வெளியேறி பல தசாப்தங்கள் சென்றுவிட்டன.

பிரம்ம ஞான சபையின் எல்லையை
கட்டியம் கூறிநிற்கும் பனைமரங்கள்
கல் மரங்களாக
கடலைப் பார்த்து
நிச்சலனமாய்
வெறித்து நிற்கும் சோகத் தோற்றம்.

சகோதரன் நித்யாவின்
மரணத்துக்குப் பிறகு
புத்தகங்கள் அனைத்தும்
ஒருகணம்
சடலங்களாக சிறுவன் ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு
தோற்றம் கொடுத்த
மறைஞான நூலகத்தின் படிக்கட்டுகள்
இப்போது உடைந்து தூர்ந்துவிட்டன.

அன்னிபெசண்ட் அம்மையாரே
எப்படித் தொலைத்தீர்கள்
கிருஷ்ணமூர்த்தியை?
அன்னிபெசண்ட் அம்மையாரே
ஏன் மெய்ஞான சபையிலிருந்து
கிருஷ்ணமூர்த்தியோடு
வெளியேறின
வண்ணத்துப்பூச்சிகள்?
000

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும்
இடையிலுள்ள இருட்டில்
கண்பதித்திருக்கிறாள்
சிற்றுடல் கொண்ட காந்திமதி.
அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில்
வசந்த மண்டபத்தில்
ஆளரவமற்ற
மத்தியானத்தில்
ஆடிக்கொண்டிருக்கும்
ஓர் ஊஞ்சல்.

கூலக்கடை பஜார்
சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய
மதில் சுவருக்கு அப்பால்
நிழல் எதையும் பிரதிபலிக்காது
அடர்பாசியால் மூடி
விலக்கவே இயலாத
பச்சைத் தனிமையில்
உள்தெப்பக்குளம்
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
அந்தர் தியானம்.
000

சங்க கால மரங்கள்

வெள்ளை நிறத்தில்
கொத்துக் கொத்தாய்
பூ பூத்தது
மரா

இறால்களின் தோற்றத்தில்
காய்களை விட்டது
உகா.
000

தக்காளிகள்

தக்காளிகள் தப்பி
தரையில் உருள்கின்றன.
தக்காளிகள் நழுவி
விழுந்துவிடுவது
இயல்பாக நடக்கிறது.
தக்காளிகள்
கைநழுவிப் போய் விடுகின்றன.
தக்காளிகள்
உருண்டு
உருண்டு
கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன.
நழுவித் தொலைந்துவிடாமல்
தக்காளியைப்
பிடிக்க
தக்காளிக்கு முன்னால்
நான்
விழுந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது.
தக்காளிக்கு
தான் விழக்கூடாதென்ற
பொறுப்பும் கிடையாது.
தக்காளி
நீ உடைந்துவிடக் கூடாது.
தக்காளி
நீ நொறுங்கிவிடக் கூடாது.

௦௦௦


ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

5 Comments உரையாடலுக்கு

  1. சிறுமிக்கும் குமரிக்கும்
    இடையிலுள்ள இருட்டில் – அசந்து போனேன்.

  2. காசா அகதிமுகாம் காட்சியில் குழந்தைகளின் பசி என்ற பெருநெருப்பு , சொல்லமுடியாதவை,,

  3. அன்னிபெசண்ட் அம்மையாரே
    எப்படித் தொலைத்தீர்கள்
    கிருஷ்ணமூர்த்தியை?
    அன்னிபெசண்ட் அம்மையாரே
    ஏன் மெய்ஞான சபையிலிருந்து
    கிருஷ்ணமூர்த்தியோடு
    வெளியேறின
    வண்ணத்துப்பூச்சிகள்?—
    simple lines well expose the great vaccum

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss