ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

ராகுதசை

பாம்பின் உடல்
மனிதத் தலை
கொண்ட
ராகு தசை நடப்பதால்
நிலைகொள்ளாத
இன்பவாதைகளின்
மேடையாக
உன் கபாலம் திகழும்
என்றான் ஜோதிடன்.

மணி, மனத்தில் தொடங்கி
மனத்தில் வரைந்து முடிக்கும்
வாழ்வுதான்
உனக்கு
என்று சொன்னவள் அம்மா.

000

காடு

அவனுக்கும் அவளுக்கும்
இரண்டிரண்டு
முள்ளம்பன்றி முட்களை
சமப்பரிசாய் கொடுத்தது
காடு.

வாழ்வு மரணம்
அழகு கோரம்
அன்பு வெறுப்பு
இடையில் நிற்கும்
வேலியில்
தந்திரங்கள் எதையும் பயிலாத
மூன்று நரிகள்
அப்போதுதான்
விடிந்து
உடைந்துகொண்டிருக்கும்
வெளிச்சத்தில்
கடந்துபோகின்றன.

நடந்து கடப்பவர்களுக்குத்
கொடும் வலியை
தற்காலிகமாகக் கொடுக்கும்
கட்டெறும்பின்
தலையிலுள்ள
நுண்கொடுக்கு
மட்டும்
எப்போதும் எரிநிலையில்.

000

மான்கள்

மரங்கள்
கல்லறைத் தூபிகள்
இடையிடையே
தலையைத் திருப்பி
சிலைத்து நிற்கும்
மான்கள்.

000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss