
01
காலம் கள்ள முத்துக்கள் இடுகிறது
சுற்றிச் சுற்றி வருகிறது
ஆட்டத்தையது தன்போக்கில் வளைப்பது
எப்படியோ எனக்குத் தெரிகிறது
ஆனாலும் சிக்கிக்கொண்டு விட்டேன்
பல்லாங்குழி ஆட்டத்தில்
காலத்துடன் எதிர்ப் பாண்டியாட்டம்
தந்திரம் சூது நைச்சியம்
எல்லாம் ஓருருக்கொண்ட
மிக மோசமான எதிரி அது
ஆட்டத்தைக் கைக்கொள்ளப் பார்த்தால்
குழியில் தள்ளுகிறது
தொக்கக் குழிகளில் தவங்கும்போது
வெல்ல வைக்கிறது
மனசார விடவும்
விட்டு விட்டு எழவும்
முடியா
ஓர் ஆட்டம்
தன் போக்கில் நீட்டிக்கிறது
சீதைப் பாண்டி ஆடுவதற்கு
காலத்தோடு இப்படி முட்டிக்கொள்வது மேல்
முத்துக்கள் நிறைந்து தளும்பிக் கொண்டேயிருக்கிறது
அதன் பெருங்குழி
யார் தடவியெடுக்கும் முத்துக்களானாலும்
காலத்தின் பொக்கிஷக் குழியில்
போய் விழுவதுதான்
இப் பாண்டியாட்டத்தில்
வினோத விதி.
குழிகள் நிறையவும் வற்றவுமாய்த்
தொடர்கிற முடிவில்லா ஆட்டம்.
02 மறுநாள்
தினமும் புரட்டும்
என் இரவின் ஆல்பத்தில்
இரண்டு பகுதிகள்
முப்பதாண்டுகள் முன்
கோடை விடுமுறையில் காய்ந்து சருகான
மயில்மாணிக்கக் கொடிகள்
இங்கிலீஷ் தாத்தா பேக்கரியில்
தயாரிப்பு நிறுத்தப்பட்ட
இளமஞ்சள் நிற பிஸ்கெட்டுகள்
கிட்டாமல் போன பிரியங்கள்
கூண்டு திறந்து பறக்கவிட்ட கிளிப்பிள்ளை
இன்ன பிற.
பிறகு
அடைபடும் கதவுகள்
கூட்ட நெரிசல்
படுக்கையின் அருகே நிற்கும் இருளுருவம்
முகத்தின் மேல் இழுபட்ட போர்வை
உறக்கத்தில் அடைபடுவதான ஓவியம்
பிரகாசமான நிறங்களமைந்த தொட்டில் கம்பு
மேலும் சில.
இரவின் ஆல்பம் புரட்டப்படும் முன்
ஒரு குளிகையை விழுங்கினேன் நேற்று
வண்ணங்களால் நிறைந்து தளும்பும்
ஒரு சிறு பறவை போல்
என்னுள் இறங்கிற்று அது
ஒரு தாலாட்டை இசைத்துக்கொண்டு
தேர்ந்த ஒரு பாலே கலைஞர் போல்
சுழன்றுகொண்டே.
என்னைக் கேளாமல்
என் இமைகளை மூடி
என்னுடைய நாளை
இழுத்துப் பூட்டிற்று அது.
நானும் ஒரு பாலே கலைஞராகிச் சுழன்றேன்
அப்பறவையின் இனிய குரலைப் பற்றிக்கொண்டு
எங்கோ இறங்கிக் காணாமலானேன்
உறக்கம் என்னை விடுதலை செய்திற்று
உறக்கம் என்னை லகுவாக்கிற்று
மேலும்
சொற்ப சமயம் கொஞ்சம் இறந்திருந்த என்னை
மீண்டும் உயிர்ப்பித்துத் தந்திருக்கிறது
தண்ணீர் விசிறிவிடப்பட்ட கண்ணாடி போல்
ஒரு மாய வசீகரத்துடன்
ஏன் இப்படி மினுங்குகிறது
இந்த அதிகாலை
03 பூச்சிப் பிள்ளைகள்
வெகுகாலம் நிசப்தம் தழுவிய இருள்தான்
திடீரென
மீண்டும் சிள்வண்டுகள் ஒலிக்கும்
ஒரு இரவை வந்தடைந்தேன்
என் வீடு வீடாகிவிட்டது அப்போது
எல்லாம் நிறைந்த ஒரு வீடு
என் சிறகணைவில்
எல்லாமும்தான் வேண்டும் என்றிருந்த
தாய்க்கோழி நான்
என் குஞ்சுகளெல்லாம்
இப்போது பஞ்சாரம் வந்தடைந்துவிட்டன.
மின்மினிப் பூச்சிகள் ஒளியேற்றும்
இவ்விருளில்
இவ்விரவில்
எனதிந்தச் சிறிய நிறைவை
சிள்வண்டுகள் பாடி இசைக்கின்றன
04.
ஆள்வாசம் மெல்லக் காலியாகி
வெயில் மட்டும் அலையும் சிற்றூர்
தெருவோர நிழலூடே
அர்த்தமற்ற நடை
ஓடைத் திண்டில் காலோய அமர்ந்தேன்
தரையில் நிழல்பாவா
செவலை நாய்க்குட்டியொன்று
புதிதாக இத்தெருவை அளந்து தீர்க்கிறது
எங்கிருந்து வந்து
என் வெறுங்கையில்
என்ன கண்டு
அன்பை நக்கித் திளைக்கிறது
காகங்கள் வெயிலை இசைக்கத் தொடங்கிவிட்டன
வீதி நிழல் சுருங்குகிறது
கானலில் தொலைகிறது நாய்க்குட்டி
வீடு திரும்பிவிட்டேன்
தலைவாசல் சாவியைப் பற்றுகையில்
முகம் கழுவுகையில்
உணவை ஏந்துகையில்
ஏது செய்கையிலும்
பார்வைக்குத் தப்பிய ஏதோவொன்று
என் உள்ளங்கையில் மென்மையாக இடறிக் கொண்டேயிருக்கிறது
இவ்வுலகுக்கும் எனக்கும் ஏதோவொன்றுக்கும் இடையில்
சுழன்று சுழன்று உருவாகிறது
பட்டு ரோமங்களினால் ஒரு பாதை.
000

கார்த்திகா முகுந்த்
பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.
கம்பளி ஆடை வடிவமைப்பு(Knitting), பூப்பின்னல்(Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.
வெளியாகியுள்ள நூல்கள்:
- இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
- குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
- ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
- துமி (2022) – கவிதைத் தொகுப்பு
- க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண் (2024) - கவிதைத் தொகுப்பு
- என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது (2024) - கவிதைத் தொகுப்பு
- ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் (2024) – சிறுகதைத் தொகுப்பு
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















பட்டு ரோமங்களிலான ஒரு பாதை எனும் சித்திரம் சிறப்பாய்த் துலங்கி வந்திருக்கும் கவிதையை வாசித்ததில் அகநிறைவு(குமிழ்க்கணந்தான்); இன்றைக்கு அது போதும் கார்த்திகா, வாழ்த்துகள்.
– சக்திவேல், கோபிசெட்டிபாளையம்.
நன்றி.