மலை என, மாரி என – வாயில்

கபிலர் கவித்துவத் திரட்டு

“ மாரியும் உண்டு , ஈண்டு உலகு புரப்பதுவே” என்கிற, நீடூழி வாழ்ந்து வரும் வரியின் ஈர்ப்பால் பள்ளிப்பருவத்திலேயே மனதில் தங்கிவிட்ட பெயர் கபிலர். கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை. பொருள் கொள்ளலில் சிக்கலில்லை. சிறியது, தெளிவானது, பாட்டின்பம் கூடியது. அநேகமாக நான் வாசித்து மெய்சிலிர்த்த முதல் கவிதை இதுவாக இருக்கலாம். என் வயதொத்த, கொஞ்சம் சொற்களில் நாட்டம் கொண்ட பலரும் இப்படியே மெய்சிலிர்த்திருக்கக் கூடும். வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு உதாரணமாக இந்தப் பாடலை நான் கற்கவில்லை. ஏன் இந்தக் கவிதை இவ்வளவு ஜொலிக்கிறது என்கிற பரவசத்திற்கான விடையாகவே வஞ்சப்புகழ்ச்சி என்கிற இலக்கணத்தை அடைந்தேன்

சங்கக் கவித்திரட்டில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியவர் கபிலரே. அளவு அதிகம் என்பதல்ல, அழகும் அதிகம் என்பதே அவர் சிறப்பு. சங்கத்தில் மொத்தம் 235 பாடல்கள் இவர் பாடியவை. இதில் 261 அடிகள் கொண்ட ‘குறிஞ்சிப் பாட்டு’ ஒரே ஒரு நீள்கவிதையாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர ‘ இன்னா நாற்பது’ என்கிற நீதி நூல் ஒன்றும் கபிலரின் பெயரில் உள்ளது ஆனால் இதை இயற்றியது சங்கக் கபிலர் என்பதை தமிழறிஞர்கள் பலரும் ஏற்பதில்லை. நாமும் இங்கு 235 சங்கக் கவிதைகளை மாத்திரமே காணப் போகிறோம்.

ஒளவையார் என்கிற பெயரில் பல குழப்பங்கள் உள்ளது போன்றே, கபிலர் என்கிற பெயரிலும் பலர் வாழ்ந்துள்ளனர்.

வேதகாலத்தில் ‘கபில முனிவர் ‘ என்று ஒருவர் உள்ளார். பெளத்த மரபிலும் ஒரு கபிலர் உள்ளார். கபிலர் என்கிற பெயர் பல முனிவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்.

சங்கக் கவிஞர்களின் வரலாறுகள் தெளிவாக இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. பலரின் பெயர்களைக் கூட அறியமுடியவில்லை. அவர்கள் இயற்றிய அடிகளில் இருந்தே ஒன்றை உருவி , அவர்களுக்கு நாம்தான் பெயரையே சூட்டி வேண்டிய நிலை. “ அணிலாடு முன்றிலார்”, “ கங்குல் வெள்ளத்தார்”, “செம்புலப் பெயனீரார் “ என்பவை போல. கபிலரின் தெளிவான வரலாறும் காணக் கிடைப்பதில்லை. இன்று சொல்லப்படும் வரலாறு என்பது, கபிலர் இயற்றிய பாடல்களின் வழியே நமது தமிழறிஞர்கள் உருவாக்கி அளித்திருக்கிற வரலாறுதான். 1921 ஆண்டு ந.மு.வேங்கடசாமி நாட்டார்” கபிலர்” என்கிற பெயரில் ஒரு நூலை வெளியிடுகிறார். இதுவே கபிலரைப் பற்றிய முதல் நூல். நாம் இன்று காணும் கபிலர் ந.மு கண்டு சொன்ன கபிலரே. அவரைத் தொடர்ந்து வே.வேங்கராசுலு ரெட்டியார், புலவர் கா.கோவிந்தன் , ச.மெய்யப்பன் போன்றோர் கபிலர் குறித்த தனி நூல்களை எழுதியுள்ளனர். இவற்றுள் ந.மு.வே.நூலும், புலவர் கா.கோவிந்தன் நூலும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ்ச்செம்மல் ம.ரா.போ.குருசாமி கபிலரின் சங்கக் கவிதைகள் அனைத்தையும் ஒருங்கே திரட்டி அளித்திருக்கிற “ கபிலம்” என்கிற நூல் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நூலை “ NCBH” வெளியிட்டுள்ளது.

கபிலர் குன்று, திருக்கோவிலூர்

கபிலர் அந்தணர் மரபினர் என்பதை அவர் சொற்களின் வழியாகவே அறியமுடிகிறது. பிற புலவர்கள் தம் பாட்டில் வைத்துப் பாடும் அளவு புகழுடன் திகழ்ந்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. நக்கீரனார் , பெருங்குன்றூர்க்கிழார், பொருந்தில் இளங்கீரனார், மாறோக்கத்து நப்பசலையார் ஆகிய கவிகள் அவரை போற்றிப் பாடியுள்ளனர். சங்கப் பலகை வளர்ந்து கபிலரை பொய்யாப் புலவன் என்று ஏற்றுக் கொண்டுள்ளது. கடைச்சங்க காலத்துப் புலவர்களுள் நக்கீரர், பரணர், கபிலர் மூவரும் முக்கியமான புலவர்களாக எண்ணப்படுகிறார்கள். “ கபில பரணர்” என்றழைக்கும் அளவு இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது.

கபிலர் பிறந்த ஊராக திருவாதவூர் சொல்லப்பட்டாலும், பாரியின் பறம்பு மலையில் பல காலம் வாழ்ந்துள்ளார். கபிலர் , பாரி என்கிற இரண்டு பெயர்களும், எப்போதும் ஒருங்கே நினைவு கூரப்படும் அளவு பிணைந்தவை. பாரியைப் போற்றி பல பாடல்கள் பாடியவர் அவனையன்றி பேகன், மலையமான் திருமுடிக்காரி, வல்வில் ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் போன்று வேறு சிலரையும் பாடியுள்ளார். பிரகத்தன் என்கிற ஆரிய அரசனுக்கு தமிழின் பெருமையை உணர்த்த வேண்டி “ குறிஞ்சிப் பாட்டை” பாடினார். கபிலர் பிறந்த திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது.

பாரியின் பறம்பு மலை மூவேந்தர்களால் முற்றுகையிடப்படுகிறது. ஆனால் அவர்களால் பாரியை போரில் வெல்ல முடிவதில்லை. கடைசியில் சூழ்ச்சி செய்து பாரியைக் கொன்றனர் என்கிறார் ந.மு.வே. ஆனால் அது என்ன சூழ்ச்சி என்று அவர் சொல்லவில்லை. “ அந்தோ! அவனை வஞ்சத்தாற் கோறல் கருதினர். அதற்கொரு சூழ்ச்சியும் புரிந்தனர். நஞ்சனையார் புரிந்த வஞ்சனை இன்னதென யாராலியம்பலாகும்? “ என்கிறார். கா.கோவிந்தன் தன் நூலில் கபிலரின் பாடல் வழியாகவே ஒரு கதையை உருவாக்குகிறார்.

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரைஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.”

நீங்கள் போரில் அவனை வெல்லவே முடியாது. ஆனால் யாழ் மீட்டியபடி நீங்கள் பாணராகவும், உம் பெண்கள் விறலியராகவும் அவனைப் பாடிச்சென்று பரிசிலாகக் கேட்டால் அவன் தன் நாட்டையே கூடத் தருவான் என்கிறது இவ்வரி. இப்பாட்டிலிருந்தே ஒரு தந்திரம் புனைந்து ,மூவேந்தர்களும் பாணர் வேடமிட்டுச் சென்று பாரியை கொன்றொழித்தனர் என்கிறார் அவர்.

பாரி இறந்து பட அவரது மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் பலவாறு முயன்று, மலையமான் திருமுடிக்காரியின் மகன்கள் இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டு, தன் நண்பரான பாரியை அடைய வேண்டி, திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் வடக்கிருந்து உயிர் நீத்தார் கபிலர் என்று சொல்கிறது ஒரு கதை. . இன்னொரு கதை தம் முயற்சியில் போராடித் தோற்றவர், அப்பெண்களை அந்தணர் வசம் அடைக்கலமாக அளித்துவிட்டு உயிர் துறந்தார் என்கிறது. அந்த இடம் இப்போது ‘கபிலர் குன்று’ என்றே அழைக்கப்படுகிறது. ‘சரஸ்வதியின் உடல், எழுத்துக்களையே உறுப்புகளாகக் கொண்டது. அதில் ஒரு எழுத்தே கபிலர்.கோபம் கொண்ட வேளை ஒன்றில் நான்முகன் சரஸ்வதியை சபிக்கவே, அவர் உடலின் உறுப்பான கபிலரும் மண்ணில் மானிடராகப் பிறந்தார்” இது வேறொரு கதை.

கபிலர் குறித்த பெரும்பாலான செய்திகளும் “ தமிழ்விக்கி’யில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. மெச்ச வேண்டிய பணி இது. “கபிலர் தமிழ்மரபின் பெருங்கவிகளில் ஒருவர்” என்கிறது தமிழ்விக்கி.

ஒளவையார் கவித்துவத்திரட்டைப் போன்றே இந்தத் தொடரையும் நவீன இலக்கியத்தில் இயங்கும் பழந்தமிழ் இலக்கிய வாசகர்களைக் கருதியே எழுதுகிறேன். கபிலர் கவிதைகளினூடே தமிழ் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றை ஆய்வது என் நோக்கமல்ல. அதற்கு வேறு அறிஞர்கள் உளர். அவரது கவிதை வனப்பில் திளைக்க வேண்டும் என்பது மட்டுமே அவா. மலைவளம் பேசும்,மழை வளம் பேசும் கபிலரின் சொற்களும், மலை வளத்தனவே, மாரி வளத்தனவே

ந.மு.வேங்கடசாமி நாட்டார் தன் ‘ கபிலர்’ நூலின் முன்னுரையில் சொல்கிறார்…” ஒன்றுக்கும் பற்றாத என்னை இம்முயற்சியுட் புகுத்தி இயக்குவித்தருளும் இறைவன் திருவருளில் யாதினை அறிந்து யாங்ஙனம் வழுத்துகேன்!”

ஒன்றுக்கும் பற்றாத என்னை, தமிழ் வழி நடத்தட்டும்!

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

Leave a Reply to சுஜய் ரகு Cancel reply

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss