
முதற்குறிப்பு : கட்டுரையாளர் உளவியல் வல்லுனர் அல்லது போதை மீட்சி நிபுணர் அல்ல.இது மருத்துவ கட்டுரையும் அல்ல.மாறாக போதை அடிமைத்தனம் மற்றும் போதை அடிமைகள் குறித்த நவீன அறிவியல் பார்வையை அறிமுகம் செய்யும் கட்டுரை மட்டுமே.மேலும் அதிக புரிதலுக்கு வாசகர்கள்,இந்த கட்டுரையில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் புத்தகங்களை வாசிக்க அல்லது சரியான தொழில்முறை வல்லுநர்களை அணுக பரிந்துரைக்கிறார் கட்டுரையாளர்.
“ஒரு கதையைச் சொன்னால், நான் அதிலிருந்து அறிக்கைகளை உருவாக்குவேன். ஏனென்றால் உண்மை என்பது கற்பனையின் சங்கதி என்று எனக்கு சிறுவயதில் எனது உலகத்தில் சொல்லித் தரப்பட்டது. கதை சொல்லும் முறையில், ஒரு உறுதியான உண்மையை காணாமல் ஆக்கலாம் அல்லது ஆணித்தரமாக பதியலாம்” என்று தொடங்குகிறது அர்சலா லா குவினின் தி லெஃப்ட் ஹேண்ட் ஆஃப் டார்க்னஸ் எனும் அறிவியல் புனைவு.
நவீன மனிதர்களிடையே போதை அடிமைத்தனம் பற்றிய புரிதலும் அர்சலாவின் வரிகளுடன் முழுமையாக பொருந்திப்போகிறது. மனிதர்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுக்க விழுமியங்களை கொண்டே அளவிடப்படும் நவீன சமூகங்களில், ஒழுக்கங்களே தண்டனை சட்டங்களாக இயங்கும் நமது அமைப்பு முறையில் போதை அடிமைகளை ஒழுக்க சட்டகத்தின் வாயிலாக அளவிடுவது இயல்பானதாக இருக்கிறது. அப்படி உருவாகும் போதை அடிமைகள் பற்றிய அளவீடு பொது சமூகத்தில் அனைவராலும் இலகுவாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்கிறது என்பதும் ஆச்சரியமானது அல்ல. காரணம் ஒரு சமூக சிக்கலுக்கு தனி மனிதர்களை காரணமாக்குவது எளிமையான தீர்வு. ஒட்டுமொத்த சமூகமும் கூட்டு குற்றவுணர்வுக்கு ஆளாகும் தேவை இருக்காது. அதன் மூலம் பெரும்பான்மையான மனிதர்கள், அற அளவீடுகள் சொல்லும் புனிதர்களாக அல்லது ஒழுக்கமானவர்களாக இருக்க முடியும்.
சமூகத்தின் இந்த அணுகுமுறையில் போதைக்கு அடிமையான மனிதர்களின் உண்மைகள் பேசப்படாமலே நிராகரிக்கப்படுகிறது. இன்று வரை போதை பழக்கம் பற்றிய நேர்மையான உரையாடல்கள் பெரும்பான்மையான அறிவியல் மற்றும் பொது தளங்களில் நிகழவில்லை என்பதே மறுக்கமுடியாத அடிப்படை உண்மை.
நவீன மனித சமூகத்தில், போதை அடிமைகள் பற்றிய பொதுவான புரிதலை இப்படி சொல்லலாம்: “போதை அடிமைகள் ஒழுக்கம் கெட்டவர்கள், அற்பவமானவர்கள், மனித நிலைக்கு ஒரு படி கீழானவர்கள். அவர்களை மனிதர்களாக நடத்த தேவை எதுவும் இல்லை. சுயகட்டுப்பாடற்று ஒழுக்ககேட்டினால் போதைக்கு அடிமையானவர்கள் மீது எந்த கருணையும் காட்ட தேவையில்லை”
போதை அடிமைத்தனம், சமூக ஒழுக்ககேடோ அல்லது பரம்பரை நோயோ அல்ல. மாறாக ஒருவரில் அஞர் அல்லது மனவலி உருவாக்கும் வெற்றிடத்தை தற்காலிகமாக நிரப்புவதற்கான ஒரு எதிர் செயல்பாடு மட்டுமே என்கிறார் மருத்துவரும் அஞர் வல்லுநருமான கபோர் மேட். போதை அடிமைகளுக்கு தனது வாழ்நாள் முழுவதும் மருத்துவம் செய்து கழித்த கபோர், போதை அடிமைத்தனம் பற்றியும், அதன் ஆற்றுப்படுத்துதல் முறைகள் பற்றியும் எழுதிய இன் தி ரெலம் ஆப் ஹங்கிரி கோஸ்ட் மிகவும் முக்கியமான ஆய்வு நூல். போதை அடிமைகளின் உலகை பொது சமூகம் புரிந்துக்கொள்வதற்கான அடிப்படை புத்தகம் என்று உறுதியாக சொல்ல முடியும்.
தமிழ்நாடு போன்ற போதை வெறுப்பு சமூகங்களில், போதை அடிமைகள் மீதான பார்வை மனிதத் தன்மையற்றது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தீயவர் என்பதே அவர்களை பற்றிய மதிப்பீடு. அந்த அச்சம் உருவாக்கும் கொடூரமான வெறுப்பின் மூலமே ஒரு போதை அடிமையாளர் – வீட்டில், தெருவில், பொது இடங்களில் என்று அனைத்து அனைத்து இடங்களிலும் அணுகப்படுகிறார். போதையின் மயக்கத்தில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் ஒருவரை தாண்டி செல்வதே நம் அறமாக இருக்கிறது – அதுவே அவர் இளைக்கும் சமூக அநீதிக்கு எதிராக நாம் கொடுக்கும் தண்டனை என்று கூட்டு சமூக மனம் நம்புகிறது.
போதை அடிமைகளுக்கென்று நாம் செய்யும் ஆகப்பெரிய மனிதாபிமான செயல், அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைப்பது மட்டுமே. மறுவாழ்வு மையங்கள் என்ற பெயரில் செயல்படும் பெரும்பான்மையான இடங்கள், வன்முறையால் நிரம்பிய சிறைக்கூடங்கள் என்பதை தாண்டி வேறு எதுவுமில்லை. ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகளுடன் சேர்த்து இயங்கும் ஒரு சில மையங்களை தவிர்த்து, நம் சமூகத்தில் இயங்கும் பெரும்பான்மையான மறுவாழ்வு மையங்கள் போதை அடிமைத்தனத்தை ஒழுக்க அளவீடுகள் வழியாகவே அனுகுக்குன்றன.
நவீன மனித சமூகத்தில், ஒழுக்ககேடான மனிதரை நல்வழிப்படுத்த இருக்கும் ஒரே வழி ‘வன்முறை’. வன்முறையை மூலதனமாக கொண்டே போதை மறுவாழ்வு மையங்களும் இயங்குகின்றன. இம்மையங்கள் எந்த ஒரு போதை அடிமைக்கும் மறுவாழ்வை வழங்குவதில்லை மாறாக உடல் வன்முறைகளை ஆயுதமாக கொண்டு, அது உருவாக்கும் அச்சத்தின் வழியாக சில காலம் ஒருவரின் போதை பழக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான போதை அடிமைகள் இந்த மையங்களை விட்டு வெளியே வந்த சில மாதங்களில் மீண்டும் போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
போதை மறுவாழ்வு என்பது மூன்ற அல்லது ஆறு மாதம் மருந்து மாத்திரைகளையும், வன்முறையையும் மூலமாக கொண்டு நிகழ்ந்துவிடும் மாயாஜாலம் அல்ல, அது மேடுபள்ளங்கள் நிரம்பிய கடினமான நீண்ட நெடிய பாதை. அந்த பாதையை கண்டடைய முதலில் ஒருவரின் போதை பழக்கத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். நவீன உளவியல் மருத்துவம் உட்பட உலகிலிருக்கும் பெரும்பான்மையான மருத்துவ வழிமுறைகளில், ஒருவர் ஏன் போதை அடிமையானார் எனும் கேள்விக்கு இடமில்லை என்பதே நிதர்சனம். எந்த ஒரு மறுவாழ்வு வல்லுனரும், பெரும்பான்மை மருத்துவர்களும் எவரிடமும் நீ ஏன் போதை பொருட்களை உட்கொள்ள ஆரம்பிதாய் எனும் அடிப்படை கேள்வியை கேட்பதில்லை. மாறாக போதை பற்றி நம் அனைவரிடமும் ஏற்கனவே ஒரு முன்முடிவு இருக்கிறது அது ஒழுக்கம் சார்ந்தது.
தமிழ் சமூகத்தில், போதை அடிமைகளுக்கு எதிரான மதிப்பீடு என்பது குடி அடிமைத்தனத்துக்கு எதிரான பரப்புரையாக சினிமாக்களில் உருவான குடிகாரர்கள் வெறுப்பின் வாயிலாக உருவாக்கப்பட்டு சமூக எண்ணமாக உருமாறி இருக்கிறது. யார் குடிகாரர்கள் எனும் கேள்விக்கு பதிலாக தமிழ் சினிமா: குடிகாரர்கள் என்பவர்கள் கையவர்கள், தீயவர்கள், தோல்வியடைந்தவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று பதில் சொல்லுகிறது.
எம்ஜியார் சிவாஜி காலத்தில் உருவான மது வெறுப்பு சினிமாக்கள், பின்பு அடுத்த தலைமுறை நாயகர்களாலும் முன்னிறுத்தப்பட்டது. எம்ஜியாருக்கு அடுத்து வந்த சினிமா நாயகர்களும் குடிப்பதை ஒரு வீழ்ச்சியின் அல்லது தோல்வியின் வடிவமாக முன்னிறுத்தினர். ரஜினியும், கமலும் அவர்களின் படங்களில் குடித்தாலும், குடியை ஒரு எதார்த்தமான நிகழ்வாக திரையில் காட்டாமல், வீழ்ந்த நிலையில் ஒருவர் கண்டெடுக்கும் தீமை என்றே முன்னிறுத்தினர். அல்லது ஆண்மையுடன் தொடர்புகொண்ட மிகையுணர்ச்சி நிகழ்வாக முன்னிறுத்தப்பட்டது. முரணாக, இதே நாயகர்கள் பலர் புகைப் பழக்கத்தை ஒரு style statement ஆக முன்வைத்தனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டவேண்டி இருக்கிறது.
இன்றுவரை காதல் தோல்வியடைந்த தமிழ் சினிமா நாயகர்கள் முதலில் செல்லும் இடம் டாஸ்மாக் பார்களாகவே இருக்கின்றன. டாஸ்மாக் பார் காட்சியுடன் சேர்ந்து குடி பற்றிய ஒரு உயர்வுநவிற்சி பாடலோ அல்லது குடித்துவிட்டு பெண்களை தூற்றும் பாடலோ ஒலிக்கும். குடித்தல் என்பது இயல்பான ஒரு காட்சியாக தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லை.
போதை அடிமைத்தனம் குடித்து இரண்டு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே குறைந்தபட்ச அறத்துடன் அணுகின. ஒன்று மது பற்றிய மிக முக்கிய அரசியல் சினிமாவான மதுபானக்கடை, மற்றும் சமீபத்தில் வெளியான பாட்டில் ராதா. குடி அடிமை ஒருவர் பற்றி தார்மிக மானுட அறத்துடன் அணுகினாலும், சமூகம் சொல்லும் ஒழுக்க விழுமியங்களின் சிக்கலில் சிக்கி, பொது சமூகம் விரும்பும் ஒழுக்க நெறியான ஒரு முடிவையே பாட்டில் ராதாவும் முன்வைத்தது.
தமிழ் சினிமா உருவாக்கிய இந்த தீவிர மது வெறுப்பு பார்வை பொது சமூகத்தில் மது அடிமைத்தனத்துக்கு எதிரான சிந்தனையாக மாறாமல் மது அடிமைகள் மீதான வெறுப்பாகவே வெளிப்படுகிறது.
ஓட்டு அரசியல், டாஸ்மாக் கடைகளை மூடினால் போதை அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்ற போலியான மற்றும் எளிமையான நம்பிக்கையை நம்மிடத்தில் உருவாக்கி வைத்திருக்கிறது.
மதுகடைகளுக்கு எதிரான வாக்குறுதிகளை மூலமாக கொண்டே அனேக தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் களம் காண்கின்றன. போதை பொருட்களின் இருப்பை, விற்பனையை கட்டுப்படுத்துவது என்பது போதை அடிமைத்தனத்தை ஆற்றுப்படுத்துதலின் ஒரு சதவிதம் மட்டுமே என்கிறார் கபோர் மேட். அரசியல் கட்சிகளின் மதுக்கடை ஒழிப்பு தேர்தல் அறிக்கைகளில் கூட மது அடிமைகளின் மீட்சிக்கு என்னென்ன
வழிகளை உருவாக்க வேண்டும் என்ற எந்த உரையாடல்களும் இருப்பதில்லை.
நம் அனைவரின் ஒன்றுபட்ட நம்பிக்கை டாஸ்மாக்கை ஒட்டு மொத்தமாக மூடினால் அனைத்தும் சரியாகிவிடும் என்பது. மதுவிலக்கு காலத்திலும் இன்று போலவே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தன, எடுத்துக்காட்டாக சென்னையில் 1967ல் வார்னிஷ் அருந்தி 49 பேர் இறந்தார்கள். அமெரிக்கா உட்பட உலகெங்கும் நடந்த, நடக்கும் போதை பொருட்களுக்கு எதிரான அனைத்து போர்களும் தோல்வியடைந்த போர்களே. மதுகடைகள் மற்றும் மது விற்பனையின் எண்ணிக்கையை குறைப்பது என்பது, மதுவக்கு எதிரான ‘போரின்’ ஒரு பகுதியே அது நிரந்திர தீர்வல்ல.
பிஜேபி போன்ற தேசிய கட்சிகளும் கூட இதே பரப்புரையை மூலமாக கொண்டு தமிழ்நாட்டில் இயங்குகின்றன. பிஜேபியை குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம் என்னவெனில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்றிய சமூக நீதி அமைச்சகத்தின் தரவுகளின்படி மது பயன்பாடு அதிகமாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலில் இருக்கும் பத்து மாநிலங்களில் எட்டு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்கிறது என்பதே. இந்த வரிசையில் தமிழ்நாடு பத்தொன்பதாவது இடத்தில இருக்கிறது.
ஒன்றிய அரசியன் இந்த அறிக்கையின் படி தமிழகத்தில் 14.2% பேர் மது அருந்துகிறார்கள், அவர்களில் குறைந்தது 5% பேர் மது அடிமைகளாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு மீட்சிக்கான உதவி தேவைப்படுகிறது. இந்த அறிக்கையில் இருக்கும் ஆச்சரியமான தரவு என்னவெனில் முற்றிலும் மது தடை செய்யப்பட்ட மாநிலமான குஜராத்தில் 3.9 சதவீத மக்களும், மது பெரும்பான்மையாக கிடைக்கும் மேகாலயாவில் 3.4 சதவீத மக்களும் மது அருந்துகிறார்கள் என்பது – மேகாலயாவில் தனியார் மதுக்கடைகள் பெரும்பான்மையான ஊர்களில் இருக்கின்றன, தலைநகர் ஷில்லாங்கில் தெருவுக்கு இரண்டு கடைகளை பார்க்க முடியும். ஒப்பீட்டளவில் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள் பயன்பாடு, மது தடை செய்யப்பட்ட குஜராத்தை காட்டிலும் தமிழநாட்டில் குறைவாக இருக்கின்றது. 2022ஆம் ஆண்டில், கள்ளச்சாராயம் அருந்தி 42 பேர் குஜராத்தல் இறந்து இருக்கிறார்கள்.
இந்த தரவுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரு உண்மையை நமக்கு சொல்கினறன. மதுக்கடைகளை மூடுவதால் மதுவை ஒழிக்க முடியாது அல்லது போதை அடிமைத்தனத்தை அழித்துவிட முடியாது. ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ அணைத்து மதுக்கடைகளையும் மூடினால் தீவிரமான போதை வஸ்துக்களின் கள்ளச் சந்தைகள் மட்டுமே பெருகும், போதை அடிமைத்தனம் எனும் பெருந்தொற்று அழியாது.
போதை அடிமைகளின் மீட்சிக்கு சமூகமாக நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லது என்ன செய்ய முடியும்? இந்த கேள்விக்கு பதில் இரண்டு மூன்று இடங்களில் இருக்கிறது.
- போதை பற்றிய வரலாற்று அடிப்படையிலான புரிதலில்
- எவையெல்லாம் போதை அடிமைத்தனம் எனும் கேள்விக்கான விடை
- அனைத்திலும் மிக முக்கியமாக, ஒருவர் ஏன் போதை அடிமையாகிறார் எனும் கேள்விக்கான பதில்
போதை பொருட்கள் நவீன கண்டுபிடிப்புகள் அல்ல. கள், புகையிலை, அராக், கஞ்சா, அபின், கொக்கைன் (கோகோ) உட்பட போதை பொருட்கள் என்று நாம் பட்டியலிடும் பெரும்பான்மையானவையை பல ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக புகையிலையை மனிதர்கள் குறைந்தபட்சம் 12,000 வருடங்களாக பயன்படுத்துவதாக மானுடவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. 12,000 வருடங்களாக அமெரிக்க பூர்வகுடிகள் புகையிலையை மருத்துவம் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பல அமரிக்க பூர்வகுடி சமூகங்களில் புகையிலை புனிதமான ஒரு பயிராகவும் கருதப்பட்டது. இன்றும் பல பூர்வகுடி சமூகங்களில் நிகழும் பைப் செரிமோனி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சடங்கின் முக்கிய அம்சமாக புகையிலை இருக்கிறது.
ஆனால், போதை அடிமைத்தனம் நவீன சமூகத்தின் பெருந்தொற்று என்கிறது அறிவியல். எப்படி இத்தனை போதை பொருட்கள் தீவிரமான அரசியல்/ஒழுக்க சட்டங்கள் இல்லாத வேட்டை சமூகங்களில் இருந்தும் அங்கு போதை அடிமைத்தனம் பெருந்தொற்றாக மாறவில்லை எனும் முக்கிய கேள்வியை எழுப்பவேண்டி இருக்கிறது.
போதை அடிமைத்தனம் நவீன சமூகத்தின் பெருந்தொற்று என்றால், ஏன் அந்த பெருந்தொற்று உருவானது எனும் கேள்வியை கேட்கவேண்டி இருக்கிறது.
மற்றும் போதை எனும் சொல்லாடலின் சமூக மதிப்பீடு என்ன? என்றும் அறியவேண்டி இருக்கிறது. இவற்றின் விடைகளில் ஒருவர் ஏன் போதை அடிமையாகிறார் எனும் கேள்விக்கான விடையும் இருக்கிறது.
போதை அடிமைத்தனம் எனும் சொல்லுக்கு பொருள் தரக்கூடிய ஆங்கில சொல்லான addiction, சில காலம் முன்பு வரை ஆக்கப்பூர்வமான சொல்லாகவே பொது பயன்பாட்டில் இருந்தது. அது நோயியல் சொல்லாக மாறியது இருபதாம் நூற்றாண்டில் தான்.
அடுத்ததாக எவையெல்லாம் போதை அடிமைத்தனம் எனும் கேள்விக்கான விடையை தேட வேண்டி இருக்கிறது.
போதை எனும் வார்த்தை இரண்டு எதிர் நிலைகளில் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. நவீன சமூகம் ஏற்றுக்கொண்ட போதை மற்றும் நிராகரிக்கும் போதை. வேலை, பனம், வெற்றி, கொள்கை, அதிகாரம், புகழ் போன்றவற்றின் மீது கொண்டிருக்கும் போதை அனைத்தும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளதக்கவை. ஏன் அரசியல் தலைவர்கள் பதவி மீது வெறியுடன் இருக்கிறார்கள் என்றோ அல்லது பெருமுதலாளிகள் ஏன் இவ்வுளவு செல்வதை சலிக்காமல் சேர்க்கிறார்கள் என்றோ பெரும்பான்மை சமூகம் கேட்பதில்லை.
வெற்றி, பதவி, புகழ் போன்றவை, சமூகம் கொண்டாடும் நாயகர்களின் அடையாளம். இவையே உற்பத்தியை மூலமாக கொண்டு இயங்கும் சமூகத்தை உந்தும் அடிப்படை மந்திரம். வெற்றி, பதவி, புகழ் போன்ற போதைகள், பல்வேறு மன மற்றும் உடலியல் சிக்கல்களை தோற்றுவித்தாலும் கூட உற்பத்தியின் வெற்றிக்கு தேவையான அவை நல்ல போதைகள். ஒருவர் மாரடைப்பால் இறந்து போனாலும் கூட, நல்ல வேலையிலிருந்து வெற்றி பெற்றவராக இறந்து போனால் அது நல்ல மரணமே – அந்த வேலை தான் மாரடைப்புக்கு காரணம் என்றாலும் கூட. நல்ல மனிதர், குடும்பத்துக்கென்று கடுமையாக உழைத்து இறந்துவிட்டார் என்று பெருமைபாடுவோம்.
வேலை அடிமைத்தனத்தில் சிக்காத, அது உருவாக்கும் உடல் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு ஆளாகாத நவீன மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனும் கேள்விக்கு பதில் இல்லை.
காப்பி ஒரு போதை பொருள். ஆனால் காப்பி, முதலாளித்துவ உற்பத்திக்கும் சமூக ஒழுங்குக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக காப்பியும் தேனீரும் உழைப்பால் உண்டாகும் சோம்பலை முறிக்கவும், மனிதர்களை மேலுமதிகமாக உழைக்கவும் உந்தும் பானங்களாக பார்க்கப்படுகின்றன. காப்பியையும் தேனீரையும் அருந்திவிட்டு உறங்காமல் இரவெல்லாம் கோடானகோடி மக்கள் வேலை செய்கிறோம். எனவே காப்பி எனும் போதை உணவுக்குழாய் சார்ந்த உடலியல் சிக்கல்களையும், பதட்டம், எரிச்சல் போன்ற மன உணர்வுகளை ஏற்படுத்தினாலும் அது தீமையானது அல்ல. காரணம் காப்பி உற்பத்தியையும் லாபத்தையும் பெருக்க உதவுகிறது. எனவே காப்பி கடைகளுக்கு எதிராக எந்த போர்களும், காப்பி அழித்தொழிப்பு இயக்கங்களும் இயங்குவதில்லை. மாறாக ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காபி என்று பெருநிறுவன கடைகளை தெருவெங்கும் திறந்துவைக்க முடிகிறது.
சமூக அமைப்புக்கு, ஒழுக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கப்படுவதாக புரிந்த கொள்ளப்படும் கொக்கைன், மது போன்ற போதைகள் குற்றமானவை. இதில் மதுவின் இடம் மட்டும் கொஞ்சம் சிக்கலானது. மது அதிகம் லாபம் தரக்கூடிய பண்டம். ஒழுக்கமற்றது என்று மதங்கள் கூறினாலும் மது அருந்துதல் குற்றமாக பெரும்பான்மையான தேசங்களின் சட்டப் புத்தகங்களில் இடப்பெறவில்லை. மாறாக கொண்டாட்டத்தின் பானமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது. பல்வேறு தேசங்களில் அரசுகளே மது விற்பனையை முன்னின்று நடத்துகின்றன. மது அடிமைத்தனம் மீது வெறுப்பு இருந்தாலும், கொண்டாட்டத்துக்கு மது அருந்துதல் தவறில்லை என்று நினைக்கிறது நவீன சமூகம்.
அபின், கஞ்சா போன்ற போதைகளால் உற்பத்தி சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. இந்த போதை அடிமைகள் நிரந்தரமாக உற்பத்திக்கும் லாபத்துக்கும் எந்த ஒரு பங்களிப்பையும் தரப்போவது இல்லை. மாறாக அவர்கள், உற்பத்தி உருவாக்கும் சமூக லாபத்தை, உழைக்காமல் உண்டு-மருத்துவ சேவைகளை வீண் செய்து- பொது சொத்துக்கு சேதாரம் ஏற்படுத்தி- லாபத்தை விரையம் செய்பவர்கள். எனவே இவை அனைத்தும் சமூகத்துக்கு தீங்கான போதைகள்.
ஷாப்பிங் போதை, சூதாட்டம், உணவு போதை, நீலப்பட போதை, சமூக ஊடக போதை என்று போதை அடிமைத்தனத்தின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. ஆனால் இவற்றில் பெரும்பான்மையன போதைகள் குறித்து மனிதர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இவை மனிதர்களுக்கு பல்வேறு உளவியல் சிக்கல்களை அல்லது நோய்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்தாலும் அவற்றால் எந்த சமூக தீங்குமில்லை.
சமூகத்தின் இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான போதைகள் உற்பத்திக்கும் லாபத்துக்கும் பெரும்பங்களிப்பு செய்கின்றன என்பது முதல் காரணம். மற்றும் போதை அடிமைத்தனங்களின் சமூக அளவீடுகள் அனைத்துமே நவீன மத நிறுவனங்கள் வகுத்த ஒழுக்க வரையறைகளை கொண்டே உருவானவை. அதனால் தான் மதுவை சூதாட்டத்தை குற்றமாக பார்க்கிறது சமூகம் ஆனால் ஷாப்பிங் போதையோ அல்லது சமூக ஊடக போதையோ ஒழுக்ககேடோ, அறமீறலோ அல்ல.
எந்த ஒரு பெற்றோரும் அழும் குழந்தையை அமைதிப்படுத்த வாயில் புகையிலையை அல்லது மது புட்டியை திணிப்பதில்லை. ஆனால் அழும் குழந்தையை அமைதிப்படுத்த அல்லது தனியாக இருக்கும் குழந்தை சலிப்படையாமல் இருக்க அலைபேசியில் யூடியூபை ஒளிக்கவிட்டு கைகளில் திணிக்கிறோம். இதுபற்றி பெரும்பான்மையான பெற்றோர் குற்றவுணர்வு கொள்வதில்லை. இதில் அபத்தம் என்னவெனில் நிறைய பெற்றோர்கள் அலைப்பேசி, அடிமைத்தனத்தை உருவாக்கும் என்று தெரிந்தே குழந்தைகளின் கைகளில் அவற்றை திணிக்கிறார்கள். இந்த முரணின் உள்ளார்ந்த காரணம் எந்த அற நிறுவனங்களும் தங்கள் புனித நூல்களில் அலைபேசி போதையை பாவமென்று எழுதவில்லை என்பது தான்.
இன்றைய இளைய தலைமுறை மிக குறைவாக மது அருந்துவதாக ஆய்வுகள் தெவிக்கின்றன. காரணம் அவர்களின் போதை மதுவில் இல்லை மாறாக அவர்களுக்கான டோபமைன் வெகுமதியை லைக் ஷேர் கமெண்ட் கொடுக்கிறன. எனவே அவர்களுக்கு மது தேவையில்லாமல் இருக்கிறது. சராசரியாக இன்றைய இளைய தலைமுறை ஆறிலிருந்து ஒன்பது மணிநேரம் அலைபேசியை பயன்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த அடிமைத்தனம் குறித்து அறம் போதிக்கும் எந்தவொரு சமூக நிறுவனத்துக்கும் கவலையில்லை. முரண் நகை என்னவெனில் அறம் போதிக்கும் அணைத்து நிறுவனங்களும் இணையத்தையும், சமூக ஊடகங்களையும் மூலமாக கொண்டே தங்கள் அறங்களை போதிக்கிறார்கள்.
இணையம் மனிதர்களின் மூளையையும் சிந்திக்கும் திறனையும் பெரிதும் பாதிப்பதாக பல அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. மனிதர்களை தங்குதடையின்றி இணைப்பதாய் சொல்லி உருவான இணையம் நம் அனைவரையும் தனித்து கிடத்தியிருக்கிறது. நவீன் உளவியல் சிக்கல்களில் முதன்மையானதாக தனிமை இருக்கிறது. நீங்கள் சந்திக்கும் ஆறு பேரில் ஒருவர் குறிப்பாக இளைய தலைமுறை தனித்து இருப்பதாய் உணர்கிறார்கள்.
உணவு போதையை இதனினும் மோசமாக அணுகுகிறது சமூகம். உணவு போதை அடிமை ஒருவரை பெருந்தீனிக்காரர் என்ற பரிகாசமோ அல்லது கள்ளம் கபடமற்று சோறு தின்பவர் என்று பரிந்தோ பேசுகிறோம். Foodie எனும் வார்த்தையை இணையத்தில் கவர்ச்சியான ஒன்றாக அடையாளப் படுத்தப்படுகிறது. கட்டுப்பாடு இல்லாமல் உணவு உட்கொள்வது உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அவை குறித்து சமூகத்திற்கு எந்த கவலையும் இல்லை. காரணம் அது சமூக ஒழுங்குக்கு எந்த குந்தகமும் ஏற்படுத்துவதில்லை.
ஷாப்பிங் போதையை மூலதனமாக கொண்டே இன்றைய முதலாளித்துவம் இயங்குகிறது. மனித உளவியலை சுரண்டியே லாபம் ஈட்டுகிறது. எடுத்துக்காட்டாக வருடத்துக்கு ஒருமுறை ஆப்பிள் நிறுவனம் தனது புதிய அலைபேசியை வெளியிடுகிறது. எந்த அடிப்படை தேவையும் இல்லை என்றாலும், நாம் நமது அலைபேசியை மாற்றுகிறோம். இதை நாம் செய்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. ஒரு பொருள் மீது செயற்கையையாக உருவாக்கப்பட்டும் சமூக மற்றும் சந்தை மதிப்பு உருவாக்கும் கவர்ச்சியை அடைவதில் கிடைக்கப்பெறும் டோபமைன் வெகுமதியே நம்மை ஆப்பிள் அலைப்பேசி போன்று பல பொருட்களை வாங்க வைக்கிறது. தரம், பயன்பாடு, அந்தஸ்து என்று பல காரணங்களை நாமாக உருவாக்கி கொண்டாலும் மனித உடல் சொல்லும் உள்ளார்ந்த காரணம் டோபமைன் வெகுமதி என்ற ஒன்று மட்டுமே.
ஆனால் சமூகமாக நாம் கவலை கொள்வது எல்லாம் நம் அற நிறுவனங்கள் ஒழுக்கக் கேடுகளாக நம்பும் ஒரு சில போதை பழக்கங்கள் குறித்து மட்டுமே. ஏனெனில் நமது மத கோட்பாடுகளின் படி சமூக ஊடக போதையோ, ஷாப்பிங் போதையோ குற்றமானது அல்ல.
இறுதி கேள்வி, ஒருவர் ஏன் போதை அடிமையாகிறார் ? இந்தியாவில் 27.3 சதவீத மக்கள் மது அருந்தும்போது ஏன் 5 சதவீதம் மட்டும் குடி அடிமைகளாக, மீட்சிக்கான உதவி தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள்?
எந்த ஒரு போதை அடிமையும் தான் போதைக்கு அடிமையாக வேண்டும் என்று அந்த கொடூரமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதில்லை மாறாக வாழ்க்கையில் குறிப்பாக குழந்தை பருவத்தில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வலியை மறைப்பதற்கான மருந்தாகவே போதை மருந்துகளை உட்கொள்கின்றனர்” என்று சொல்கிறார் கபோர் மேட்.
போதை அடிமைத்தனம் பற்றி சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை உண்மை, கபோர் சொல்வதை போல் போதை அடிமைத்தனம் ஒரு நோயோ அல்லது சுய ஒழுக்கக்கேடோ அல்ல; மாறாக ஒருவரின் வாழ்க்கை. வாழ்க்கையில் குறிப்பாக குழந்தை பருவத்தில் நிகழ்ந்த கொடூரமான உடல் அல்லது மன வன்முறைகள், நிராகரிப்புகள், ஆதரவின்மை ஏற்படுத்திய தீராத காயத்தின் வலியிலிருந்து இருந்து தப்பிக்க அல்லது அந்த வேதனையை மறக்க முயசிக்கும் ஒரு சிறிய மாற்று வழியே போதை மருந்துகள்.
வன்முறைகள் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். போர், அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பாலியல் வன்புணர்வுகள், போதைக்கு அடிமையான பெற்றோர், உடல் அல்லது மன வன்முறையை ஏவும் பெற்றோர் என்று வன்முறையின் முடிவற்ற பட்டியலை எழுத முடியும்.
சகிக்கவே முடியாத இருப்பை மறந்து, வாழவேண்டிய ஒரே காரணத்துக்காக ஒரு பொருளை சார்ந்து வாழ முயற்சிக்கும் பரிணாம உள்ளுணர்வு தான் போதை அடிமைத்தனம். எப்படி ஒருவர் சுமையான பணியிடத்தை விட்டு தப்பித்து வெளியேறி புதிய வேலைக்கு செல்ல முயற்சி செய்வாரோ, அதே போன்ற ஒன்று தான் இதுவும்.
தொடக்கத்தில் வலிகளை மறந்து உயிர்வாழ உதவி செய்வதை போல் தோற்றமளிக்கும் போதைகள், பின்பு ஒருவரின் இருப்பை பாழாக்குகின்றன. போதை அடிமை ஒருவரின் உடல் குறிப்பாக நரம்பு மண்டலம் முழுவதும் பழகிக்கொள்ளும் போதைக்கு – இணையம் நீலப்படம் போன்ற போதை பழக்கங்கள் அல்லது மது, கொக்கைன் போன்ற போதை பொருட்கள் – ஏற்ப தன்னை தவமைத்துக்கு கொள்ளும் என்கின்றன போதை அடிமைத்தனம் பற்றிய ஆய்வுகள். பிறகு போதை இல்லாமல் உயிர் வாழ்வதே இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது.
ஏன் தொடக்கத்தில் வலிகளை மறந்து உயிர்வாழ உதவி செய்வதை போல் போதை அடிமைத்தனம் தோற்றமளிக்கின்றன என்றால்? அவை உடலில் டோபமைன் மற்றும் எண்டோர்பின் ஊக்கிகளை சுரக்க உதவி செய்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் நம்மில் மகிழ்ச்சியை உண்டு செய்யும் ஊக்கிகள் அல்லது அறிவியல் சொல்வதை போல் நமது உடலுக்கான வெகுமதி ஊக்கிகள். அவை தரும் ஆனந்த மயக்கம் நிஜ வாழ்வின் காயங்களை சிறிதுநேரம் மறக்க உதவுகின்றன. அதன் காரணமாக போதை பழக்கத்திலோ அல்லது போதை பொருளிலோ உழல ஆரம்பிக்கும் ஒருவர், பின்பு உடலின் கட்டாயத்தின் காரணமாக அதற்கு அடிமையாகிறார்.
எனவே நாம் போதை அடிமைதனம் பற்றியும், அவற்றுக்கு தீர்வு குறித்தும் விவாதிக்கும் போது நாம் தொடங்க வேண்டிய இடம் போதை பொருள் உற்பத்தியாகும் இடமோ அல்லது போதை அடிமைகளின் தற்கால வாழ்வோ அல்லது சமூகம் வகுத்துள்ள எது போதை என்ற ஒழுக்க விழுமியங்களையோ அல்ல. மாறாக நாம் தேட வேண்டியது ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களை, வன்முறைகளை, மறக்கவே முடியாத காயங்களை அவை உண்டு செய்த அஞர் மற்றும் மனவலிகளை தான். ஒரு சிக்கலின் தோற்றத்தை அடையாமல் அதற்கான தீர்வை கண்டடைய முடியாது.
பிறந்த நாள் முதல் இயற்கையான மனித தேவைகளை, இயல்புகளை நிராகரித்து, வலுக்கட்டாயமாக ஒரு குழந்தை மீது திணிக்கப்படும் சமூக எதிர்பார்புகள், நிர்பந்தங்கள், நிராகரிப்புகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுத்தும் வடுக்கள் அஞராக (trauma) அக்குழந்தையின் உடல், அகம் மற்றும் அதியகதில் (super ego, id ) பதிந்து விடுகிறது. அது உருவாக்கும் அழுத்தம் மற்றும் வன்முறை ஒருவரின் வாழ்க்கை முழுவதும் உடல் மற்றும் மன சிக்கல்களை ஏற்படுத்துகிறது, அதுவே அஞர் எனப்படும் மனக்காயம் என்று குறிப்பிடுகின்றன நவீன ஆய்வுகள்.
போதை அடிமைகளின் அனேகம் பேரின் வாழ்வை திரும்பி பார்த்தால், குறிப்பாக குழந்தை பருவம், வன்முறையால் நிராகரிப்பால் தனிமையால் நிரம்பியிருக்கும். இந்த வன்முறைகளை நிராகரிப்புகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று சமூக சார்ந்தவை மற்றொன்று குடும்ப/தனிநபர் சார்ந்தவை. குடும்ப/தனிநபர் வன்முறைகள் மற்றும் நிராகரிப்புகளுக்கும் மூல காரணம் சமூகம் தான் என்றாலும். இந்த பிரிவினை அஞரை புரிந்துகொள்ள தேவையாக இருக்கிறது. வறுமையும், நிராகரிப்பும், அடக்குமுறைகளும் போதை பொருள் பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது என்கிறது, 2022ல் வெளியான ஐநா சபையின் அறிக்கை. அடுத்ததாக குடும்பத்தில் நிகழும் வன்முறை மற்றும் நிராகரிப்புகளும் போதை பொருள் பயன்பாட்டின் முக்கிய காரணமாக இருக்கிறன.
இதையே பிரபல மனநல ஆலோசகரும் எழுத்தாளருமான ரெஸ்மா மெனகெம்,
ஆற்றுப்படுத்தாத அஞர், குறிப்பாக நிறவெறி மற்றும் பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் அஞர் உண்டாக்கும் வேதனையை சமாளிக்கும் ஒரு வழிமுறை தான் போதை பழக்கம் என்கிறார்.
போதை அடிமைகளின் மீட்சிக்கு வழி என்ன எனும் கேள்விக்கு, நாம் மீண்டும் கபோர் மாட்டிடமே செல்ல வேண்டி இருக்கிறது. இன் தி ரெலம் ஆப் ஹங்கிரி கோஸ்ட் நூலில் அவர் சொல்லும் முதல் வழி தீங்கை குறைத்தல். தீங்கை குறைத்தல் என்பது மது குடுவை ஒழித்து வைப்பது அல்ல, அப்படி செய்தால் மது அடிமை வேறு ஒரு வழியை தேடுவார். மாறாக படிப்படியாக போதை அடிமைத்தனத்தை குறைப்பது அல்லது ஆற்றுப்படுத்துவது. பெரும்பாலான நேரங்களில் தீங்கை குறைப்பதற்கான வழிமுறைகளான நெறிப்படுத்தப்ட்ட போதையை உட்கொள்ளுதல் போன்றவை தவறான புரிதலுடன் பார்க்கப்படுகின்றன அல்லது புரிந்துக் கொள்ளப்படுகின்றன ஆனால் போதை அடிமை ஒருவரை மீட்பதற்கான முதல் வழி தீங்கை குறைப்பதுவே என்று தரவுகளுடன் முன்வைக்கிறார் கபோர்.
மிக முக்கியமாக ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த துயரங்களை குறித்து திறந்த மனத்துடன் முன்முடிவுகளின்றி உரையாடுவது அனைத்திலும் முதன்மையானது. இது ஒரு நாள் அல்லது ஒரு மாத வேலை அல்ல, மாறாக ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் ஒரு நீண்ட பயணம். இந்த பயணத்தில் அடிப்படை பங்கு முன் முடிவுகளின்றி ஒருவர் பேசுவதை கேட்பதில் இருக்கிறது. சார்ந்த அந்த நபரை தவிர வேறு யாராலும் அவர் வாழ்வின் நிகழ்வுகளை முழுமையாக சொல்லிவிட முடியாது. முக்கியமாக ஒருவர் சொல்லும் வாழ்க்கை கதையை ஒழுக்க சட்டகங்கள் வழியாக பார்க்க கூடாது. ஒழுக்க சட்டகங்கள் யாருக்கும் எந்த மீட்சியையும் கொடுக்காது.
மேலும், compassionate inquiry போன்ற ஆற்றுப்படுத்தல் முறைகளும், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகள் பரிந்துரைக்கும் வழிமுறைகள் போதை அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கான முக்கிய வழிகளாக அஞர் வல்லுனர்கள் முன் வைக்கிறார்கள்.
மீட்சிக்கான வழிமுறைகளை பேசுவதற்கு முன்பு சமூகமாக நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயம் போதை அடிமைகளும் மனிதர்களே. இங்கு நற்போதை அடிமைகள் வாழ எந்தளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு மனித மாண்புடன் வாழும் உரிமை, எல்லா போதை அடிமைகளுக்கும் இருக்கிறது. போதை அடிமைத்தனம் எப்படி ஒரு சமூக சிக்கலோ, எப்படி ஒரு ஒட்டு மொத்த சமூகத்துக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறதோ, அதே அளவு பொறுப்பும் கடமையும் போதை அடிமைத்தனத்தின் மீட்சியிலும் சமூகத்துக்கு இருக்கிறது. வெறும் மதுக்கடைகளை முடிவதிலும், மது குப்பிகளை ஒழித்து வைப்பதிலும், பெருகி ஊதப்படும் போதை பொருட்களுக்கு எதிரான போர்களிலும் மீட்சியோ, ஆற்றுப்படுத்தலோ இல்லை மாறாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது.
மண்டலம் எனப்படும், பௌத்த வாழ்க்கை சக்கரம் ஆறு உலகங்களை கொண்டது. ஒவ்வொரு உலகமும் மனித இருப்பின் ஒவ்வொரு தன்மையை பிரதிபலிக்கும். பேய்களின் உலகில் வாழும் போது மனிதர்கள் உயிர்வாழும் வேட்கையின் அடிப்படை தேவைகளை மட்டும் நோக்கியே உழலுவோம்…இந்த உலகில் வாழ்பவர்களை குறுகிய கழுத்துடையவர்களாக, கை கால்கள் வளைந்தவர்களாக, வறண்ட வயிற்றை கொண்டவர்களாக காட்சி படுத்தியிருப்பார்கள். அப்படியான ஒரு களம் தான் போதை அடிமைகளின் உலகமும் – இன் தி ரெலம் ஆப் ஹங்கிரி கோஸ்ட், கபோர் மாட்.
நூல் பட்டியல்:
- Resmaa Menakem, My Grandmother’s Hands: Racialized Trauma and the Pathway to Mending Our Hearts and Bodies, 2017
- Gabor Maté, In the Realm of Hungry Ghosts, Close Encounters with Addiction,
- Alcoholics Anonymous, Twelve Steps and Twelve Traditions
- Magnitude of Substance Use in India, 2019, Ministry of Social Justice and Empowerment, Government of India: https://socialjustice.gov.in/writereaddata/UploadFile/Survey%20Report.pdf
- உடல்நலம் மீது வெறிகொண்ட இந்த நூற்றாண்டில், எதுவுமே நலமாக இல்லை: அஞர்(trauma) குறித்து, இளவேனில், 2025: https://akazhonline.com/?p=9909

இளவேனில்
இளவேனில் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். கடந்த எட்டு ஆண்டுகளாக புதினங்கள், கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘உரையாடல்கள்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
